பக்கங்கள்
▼
திங்கள், 8 நவம்பர், 2010
கமலா சுரய்யா
பூந்தூறலாக மழை. இடையிடையே குளிர் வெயில். மரங்களில் தேங்கியிருந்த நீர்த் துளிகள் இலையசைவில் உதிர்ந்து மேலே சொரிந்தன. மசூதிக் கோபுரங்க ளிருந்து பறந்து வந்த புறாக்கள் மரக் கிளைகளில் உட்கார்ந்து 'க்ரும் க்ரும்' என்று கேட்டன.கபருஸ்தானின் மண் பாதங்களில் நிரடியது. வெள்ளை பூசிய பழைய சமாதிகள். பச்சைக் கோடி போர்த்திய புதிய மண்மேடுகள். இவற்றுக்கிடையில் அவர் உறங்கும் இடம் எது? புறாக்கள் க்ஹூம் க்ஹூம்' என்று முனகிக்
கொண்டு பறந்து போயின.
வெள்ளிக் கிழமை தொழுகை முடித்து எல்லாரும் போயிருந்தார்கள்.பாளையம் பள்ளிவாசல் அமைதியாக இருந்தது. அதன் பின்னால் உள்ள இடுகாட்டில் தயக்கத்துடன் தேடிக் கொண்டிருந்தேன்.
'என்ன தேடுகிறீர்கள்?' என்று கேட்டார் மொல்லா.
'ஒரு சமாதியை. மாதவிக்குட்டியை அடக்கம் செய்த சமாதியை'
'அதை இங்கே தேடினால் எப்படி? ஏதாவது மயானத்தில் போய்ப் பாருங்கள்'
சொற்பிழையை உணர்ந்ததும் நாக்கைக் கடித்துக் கொண்டேன்.
'இல்லை, சுரய்யா, கமலா சுரய்யாவின் சமாதி?'
'அதோ அந்த மதிலுக்குப் பக்கத்தில்.ஒரு நீர்மாதளச் செடி தெரிகிறதா, அதுதான்'
அது செடிதான். மரமாக இன்னும் காலம் பிடிக்கும். மாதவிக் குட்டியின் இல்லை கமலாதாசின் இல்லை கமலா சுரய்யாவின் கதைகளில்தான் நீர்மாதளம் சீக்கிரம் வளரும். சீக்கிரம் பூக்கும்.அவர் எழுதிய ஒரு நாவலின் தலைப்பு 'நீர்மாதளம் பூத்த காலம்' என்பது நினைவுக்கு வந்தது.
கமலா சுரய்யாவின் சமாதிமேல் காய்ந்த இலைகள் கிடந்தன.மழைத் துளிகள் வலுத்து விழுந்தபோது அவை ஒலியெழுப்பின.துளிகள் விழவிழ இலையோசை கூடியது.யாரோ பேசுகிற ஒலிபோலக் கேட்டது.கமலாவின் குரலா? இல்லை.அது முதுமைப் பருவத்திலும் இளமையின் குரலாக இருந்தது. ஆங்கிலத்தில் பேசும்போது மல்பெரி இலையில் விழும் நீரின் குரல்.மலையாளத்தில் தென்னங் கீற்றில் சிதறும் ஜல சப்தம். பரபரப்பான வாகனப் போக்குவரத்து நிரம்பிய சாலைகளைக் கடந்து ஓர் ஆடும் அதன் குட்டிகளும் கபருஸ்தானுக்குள்
நுழைந்தன. எங்கேயிருந்து வந்திருக்கும் அவை? யோசித்துக் கொண்டிருந்த போது மொல்லா கேட்டார்: 'சார், போறீங்க இல்லையா?'
'ஆமாம். அனுமதி கொடுத்ததற்கு நன்றி' சொல்லி விட்டு இரண்டு ஐந்து ரூபாய் பொன் நாணயங்களை அவர் கையில் வைத்தேன். 'இது என்னத்துக்கு சாரே, சரி இருக்கட்டும்,உங்க மன சமாதானத்துகாக வாங்கிக்கிறேன்.சாரைப்போலத்தான் நிறையப் பேர் இந்த ஸ்திரீயோட கபரைப் பார்க்க அடிக்கடி வர்றாங்க. விதேசிகள் கூட வந்து பார்த்து விட்டுப்போகிறார்கள். ரொம்பப் பெரிய மனுஷிதான்போல' என்று நகர்ந்த மொல்லா ஆடுகளை விரட்டினார். 'இத்தனை நெருக்கடியான இடத்தில் இது மட்டும் எங்கிருந்தோ மக்களையும் கூட்டிகிட்டு வந்துடுது' என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
மழை கொஞ்சம் பலமாகப் பெய்ய ஆரம்பித்தது. 'சார், கொஞ்சம் நின்று விட்டுப் போகலாமே?' என்று சொன்னபடியே மொல்லா இடைவழியில் நுழைந்து பள்ளிவாசல் வராந்தாவில் ஏறினார். 'மழை அவ்வளவொன்றும் பெரிதாக இல்லை, நான் வருகிறேன்' என்றபடித் திரும்ப ஒருமுறை அந்த மரணப் பூங்காவை ஏறிட்டேன். வெள்ளாடு குட்டிகள் பின் தொடர நீர்மாதளத்தின் நிழலில் அண்டுவது கண்ணில் பட்டது.
@
கட்டிப் போடப்பட்ட வெள்ளாடு
@
அறியாமையின் தூணில்
கட்டிபோடப் பட்ட ஜந்து நான்
ஒருமுறை தூணைச் சுற்றி
மீண்டும் திரும்பிப்போய்
இன்னொரு முறை சுற்ற மட்டுமே முடியும்
வெடித்துச் சிதறும் வெடிகுண்டுகள்
என்னை வழிமறித்து நிறுத்துகின்றன.
எனக்கு இந்தக் காலத்தின் உளவியல்
அப்படியொன்றும் பிடிபடுவதில்லை
அதற்கு முலையூட்டும்
தத்துவ சிந்தனை என்று அவர்கள் அழைக்கும்
தாயையும் எனக்குப் புரியவில்லை
எனக்கு அறிமுகங்கூட இல்லாத
ஒருவரைக் காயப்படுத்த
என்னால் முடியாது
இன்று நிலவும் வெறுப்பை
என்னால் பங்கிட முடியாது
நான் எவருடையதோ ஒரு வளர்ப்பு மிருகம்.
காலத்தில் நெருங்கி வந்து
மெல்லமெல்ல நொறுக்குவதற்காகக்
கைவிடப்பட்ட
பழைய விளையாட்டுப் பண்டம்
பசி முற்றி
பிளாட்டோவின் 'குடியர'சையும்
காளிதாசனின் 'சாகுந்தல'த்தையும்
சொந்த நம்பிக்கைகளைப் பற்றிய
குர்ஜியேவின் அலசலையும்
அப்புறம்
நிச்சயமாக
வால்ட் விட்மனின்' புல்லின் இதழ்க"ளையும்
மெய்ந்து தீர்த்த
வெள்ளாடு நான்.
வெள்ளோட்டம் பார்க்க வரும்
கசாப்புக்காரர்களுக்குப் போதுமான
கொழுத்த இறைச்சி எனக்கில்லை
நோய்க்கே நோய்வந்தது போன்றவள் நான்
என்னை இரவு உணவாக்கிக் கொள்ள
யாருக்கும் விருப்பமிராது
வெறுப்புக்கும் ஆயுதச் சந்தைகளுக்கும்
தான் தோன்றிக் கொலைகளுக்குமான
இந்த நூற்றாண்டில்
இது ஒரு வரமேதான்.
( கமலாதாசின் கடைசிக் காலக் கவிதைகளில் ஒன்று)
ஞாயிறு, 18 ஜூலை, 2010
ஹபீஸ் கவிதைகள்
உங்களது கண்ணுக்கும்
இந்தப் பக்கத்துக்கும்
இடையில்
நான் நின்றுகொண்டிருக்கிறேன்.
உங்களது காதுக்கும் ஒலிக்கும்
இடையில்
ஒருநாளைக்கு ஆயிரம்முறை
உங்கள் ஆன்மா நடந்துபோகும்
பொற்கூடாரத்தை வேய்ந்திருக்கிறான் நண்பன்.
ஒவ்வொருமுறை நீங்கள்
காபாவைக் கடந்துபோகும்போதும்
உங்கள் உடலிலிருந்து ஒரு பொன் நூலை
நழுவ விடுகிறான் சூரியன்.
ஒவ்வொருமுறை நீங்கள்
எந்தப் பொளுளைக் கடக்கும்போதும்
அதற்குள்ளேயிருந்து வணங்குகிறேன் நான்.
அவனுடைய அண்மைபற்றி
இன்னும் உங்களுக்குச் சந்தேகமிருந்தால்
எப்போதாவது கடவுளுடன் விவாதித்துப் பாருங்கள்.
உங்களது கண்ணுக்கும்
இந்தப் பக்கத்துக்கும்
இடையில்
ஹபீஸ் நின்றுகொண்டிருக்கிறான்.
என்னுள் மோதி நுழையுங்கள்.
@
2
இத்தனை காலங்களுக்குப் பிறகும் கூட
சூரியன் பூமியிடம் சொல்வதில்லை;
'நீ எனக்குக் கடமைப்பட்டிருக்கிறாய்'
அதுபோன்ற அன்பால்
என்ன நேர்கிறதென்று பாருங்கள்.
அது முழு ஆகாயத்தையும் சுடரச்செய்கிறது.
@
3
அழகான ஒற்றை பறவைபோல அல்ல
அவருடைய பாதம்
எனக்கு அருகில் பூமியைத் தொட்டதும்
கடவுளால் உலுக்கப்பட்டு
ஒரு கிளையையே முறித்துக்கொண்டு
என் மனதின் பரந்த குன்றுகளுக்கு மேலாக
பெரும் வெண்ணிறக் கூட்டங்களாக
எழுகின்றன இந்தக் கவிதைகள்.
@
4
இறந்த காலத்தை மன்னிக்க முடிகிறபோது
இசைக்கருவி இசைக்கத் தொடங்குகிறது
எதிர்காலத்தைப் பற்றி வருந்துவதை
இசைக்கருவி நிறுத்தும்போது
நீ
போதையேறிய சிரிப்புத் தொல்லையாக மாறுகிறாய்.
பிறகு கடவுள்
குனிந்து தன்னுடைய சிகைக்குள்
உன்னைக் கோதிவிடுகிறார்.
இசைக்கருவி
மற்றவர்களால் ஏற்பட்ட காயங்களை
மன்னிக்கிறபோது
இதயம்
பாடத் தொடங்குகிறது.
@
5
நான் மழையாகப் பொழிகிறேன்
ஏனெனில்
உங்கள் புல்வெளிகள்
கடவுளுக்காகக் காத்திருக்கின்றன.
நான் வெளிச்சத்தைச் சொற்களில் நெய்கிறேன்
உங்கள் மனம் அவற்றை ஏற்கும்போது
ஒரு மெழுகுவர்த்தி இருளுக்குச் செய்வதுபோல
நமக்கும் நிகழும்
எனவே
உங்கள் கண்கள் தமது துக்கத்தை மறுதலிக்கும்
பிரகாசமாய் மாறும்.
பிறந்த நாள் பரிசுபோல
என் சிரிப்பைப் பொதிந்து
உங்கள் படுக்கையருகில் போட்டிருக்கிறேன்
ஆகாயத்தின் ஒவ்வொரு விளக்குக் கம்பத்துக்கும் அருகில்
என் இதயத்தின் ஞானத்தை நட்டுவைத்திருக்கிறேன்.
தனவான் அடிக்கடி கிறுக்கனாகிறான்
தெய்வீகப் பித்தேறிய ஆன்மா
முடிவில்லாக் கருணையாக உருமாறுகிறது
நன்றித் தொகையின் பொன் மூட்டைகளைக் கட்டி
நிலவுகளின் காலடியில்
கோள்களின் காலடியில்
பரவச வெளிகளின் காலடியில்
பாடும் பறவைகளின் காலடியில்
தொங்கவிடுகிறேன்
நான் பேசுகிறேன்
ஏனெனில்
உங்கள் உடலின் ஒவ்வொரு அணுவும்
கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறது.
@
6
நான்
கடவுளிடமிருந்து ஏராளமாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன்
எனவே
ஒரு கிறித்துவன் என்றோ
ஒரு இந்து என்றோ
ஒரு முஸ்லிம் என்றோ
ஒரு பௌத்தன் என்றோ
ஒரு யூதன் என்றோ
என்னை இனிமேலும் நான்
அழைத்துக்கொள்ள மாட்டேன்
உண்மை
என்னிடம் ஏராளமானவற்றைப் பகிர்ந்துகொண்டிருக்கிறது
எனவே
ஓர் ஆண் என்றோ
ஒரு பெண் என்றோ
ஒரு தேவதை என்றோ அல்லது
தூய ஆன்மா என்றோ
என்னை இனிமேலும் நான்
அழைத்துக்கொள்ள மாட்டேன்
அன்பு
முழுமையாக ஹபீஸுடன் நட்பு கொண்டாயிற்று
என் மனம் இதுவரை அறிந்த
எல்லா எண்ணத்தையும்
எல்லா பிம்பத்தையும் சாம்பலாக்கிவிட்டது.
என்னை விடுதலை செய்து விட்டது.
@
7
இன்னும் கூடப் பாதுகாப்பில்லாமல் உணரும்
பொருத்தமற்ற புதுமணத் தம்பதியர்
இருவரில் ஒருவர்போல
கடவுளைத் தேடியபடியே சொல்லிக்கொண்டிருக்கிறேன்
'என்னை முத்தமிடேன்'.
@
புதன், 30 ஜூன், 2010
கழுமரத்துக்குச் செல்பவனின் தனிமொழி
கழுமரத்தை நோக்கிச் செல்லும்
என்னைப் பாருங்கள்
பத்து நிமிடங்களில்
கனவுகள் காலியான என் சிரம்
ஆசையொழிந்த உடலிலிருந்து துண்டிக்கப்படும்
நான் கொலைசெய்தவனின் உதிரம்
எனது அன்புக்காக அலறுவதைக் கேட்டேன்
அவனுடைய குடும்பத்தினரிடமும் கூட்டாளிகளிடமும்
நான் மன்னிப்புக் கோர வேண்டியிருந்தது
அந்த முற்றத்து மாமரத்தைக் கட்டியணைத்து
நான் அழ வேண்டியிருந்தது
மண்ணில் புரண்டு சகல உயிர்களுக்கும் உடைமையான
பூமியிடம் மன்னிப்பை யாசிக்க வேண்டியிருந்தது
பாதி கடித்து வைத்த பழத்துக்கும்
பாதி பாடிய பாட்டுக்கும்
பாதி கட்டிய வீட்டுக்கும்
பாதி வாசித்த புத்தகத்துக்கும்
பாதி சிநேகித்த சிநேகத்துக்கும்
பாதி வாழ்ந்த வாழ்க்கைக்கும்
நான் திரும்ப வேண்டியிருந்தது
நதியைக் கடந்துபோய்ப் பூரம் கொண்டாட வேண்டியிருந்தது
குன்றைக் கடந்துபோய்ப் பெருநாளையும்.
'நான் வந்துவிட்டேன்' என்று நண்பர்களிடம் சொல்ல
நெரிசலான பேருந்திலேறி
பட்டணத்துக்குப் போகவேண்டியிருந்தது
மகள் தன்னிச்சையான பெண்ணாகவும்
மகன் அழத் தெரிந்த ஆணாகவும்
ஆகியிருப்பதைப் பார்க்க வேண்டியிருந்தது
குளிரிலும் கண்ணீரிலும்
துணைக்குத் துணையாக வேண்டியிருந்தது
இலைகளை விடவும் பூக்களுள்ள
வேனிற்கால வாகைமரம்போல
எனக்கு நினைவுகளை விடவும் கனவுகளிருந்தன
நேற்றை விடவும் வெளிச்சமுள்ள
ஒரு நாளை இருந்தது
கதை சொல்லி மரணத்தை ஒத்திப்போட
நான் ஒரு ‘ஷெஹர்ஜாத்’ அல்ல
கதைகளின் விருட்சம் இலைகளுதிர்ந்து கழுமரமாயிற்று
’கடைசி ஆசை ஏதேனும் உண்டா? ' என்று
அவர்கள் என்னிடம் கேட்டார்கள்
புல்வெளியில் உட்கார்ந்து காது நிமிர்த்தும்
ஒரு முயலாக வேண்டுமென்று
ஒளிந்திருந்து கீச்சிடும்
ஓர் அணிலாக வேண்டுமென்று
வானவில் பறவையும் தலைமுறைகளின் நதியும்
பூக்காலத்தின் காற்றுமாக
ஆகவேண்டுமென்று
நான் சொல்லவில்லை
அவர்கள் எனக்குக் கொடுத்த இனிப்பில்
மரணத்தின் துவர்ப்பிருந்தது
கழுமரத்திலிருந்து தப்பிப் பிழைக்கும்
பூனையின் கண்களுள்ள கடுந்துவர்ப்பு
சட்டமியற்றுபவர்களே சொல்லுங்கள்,
தீர்ப்பெழுதுபவர்களே சொல்லுங்கள்
இரங்கக் கூட முடியாத
இந்தத் தீர்ப்புக்காக
நீங்கள் இரங்குகிறீர்கள் இல்லையா?
கொலைக்குற்றத்தின் வெக்கையான தர்க்கத்திலிருந்து
தூக்குத் தண்டனையின் குளிர்ந்த தர்க்கத்துக்கு
எவ்வளவு தூரம்?
கேள்விகளை
பூமியின் பசுமையில் விட்டுவிட்டு
அபராதிகளும் நிரபராதிகளும்
ரத்த சாட்சிகளும் நடந்துபோன
குருதி படர்ந்த இதே வழியில்
நானும் போகிறேன்
நாளையேனும்
ஒருவரும் இந்த வழியில் வரவேண்டியிராத
நா ளை உருவாகட்டும்.
நான் போகிறேன்
@
சச்சிதானந்தன் (மலையாளம்)
@
ஒன்னராடன் (கைதிகளின் உரிமைக்கான இதழ்) மே - ஜூன் 2010 இல் வெளியான கவிதையின் தமிழாக்கம் ‘காலச்சுவடு’ ஜூன் 2010 இதழில்
இடம் பெற்றது. ஓவியம் - ரவி.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
பெருநாள் - கிறிஸ்துமஸ்
‘ஷெஹர்ஜாத்’ - ‘1001 அரேபிய இரவுக’ளின் கதைசொல்லி.
செவ்வாய், 29 ஜூன், 2010
மலையாளக் கவிதைகள் - எஸ். ஜோஸப்
அக்காவின் பைபிள்
அக்காவின் பைபிளில் இருப்பவை:
தையல் விட்ட ரேஷன் கார்டு
கடனுதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள்
கந்துவட்டிக்காரர்களின் அட்டை
திருவிழா, பண்டிகை நோட்டீசுகள்
அண்ணன் குழந்தையின் போட்டோ
குட்டித் தொப்பிக்கான தையல் குறிப்பெழுதிய காகிதம்
ஒரு நூறு ரூபாய் நோட்டு
எஸ்எஸ்எல்சி புத்தகம்.
அக்காவின் பைபிளில் இல்லாதவை:
முன்னுரை
பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு
நிலப்படங்கள்
சிவப்பு மேலட்டை.
மீன்காரன் / பக். 20/ 2003
****
காதலிக்கும்போது...
ஒருத்தியை மட்டுமாகக் காதலிக்கக் கூடாது
அவளுடைய மணம்,
நிறம், சிரிப்பையெல்லாம்
வெறுமே நினைத்துக்கொண்டு நடக்கக் கூடாது
எப்போதும்
அவளுடைய பவுடர்
சுவர்க்கண்ணாடியில் அசையும் மரக்கிளை
அவள் பத்திரப்படுத்திய பழைய பாட்டுகள்
கதைப் புத்தகங்கள்
அவுன்சு குப்பியில் நிரப்பிய மணல்
வெளியில் ரோஜா
பலரகமானவை.
ஜன்னலினூடே இருளும் அந்தியை
வெறுமே அவள் பார்த்தபடியிருப்பதையெல்லாம்
மனதில் நினைத்துக்கொண்டு நடக்கக் கூடாது
எப்போதும்
அவள் எப்போதும் இறந்துபோகலாம்
அவள் இல்லாத ஒரு பெரும் உலகம்
இங்கிருக்கும் எப்போதும் இதுபோலவே.
அவளில்லாமலும் வழிகள் நீளும்
திறந்திருக்கிறது ஒப்பனைப் பொருள்
சுவர்க்கண்ணாடியில் மரமசைகிறது
வழக்கம்போல இதோ
பறவைகள் வந்து
செடிகளுக்கு மேலே
சலசலத்து நிற்கின்றன
அப்படியே இருக்கையில் பொழுதும் இருளும்
ஒருத்தியை மட்டுமாகக் காதலிக்கக் கூடாது
அவளை நினைத்து அவன் தலை குனிந்து
நசிந்தவனைப் போல நடக்க நேரும்
இருட்டுக்குள் அவன் ஜன்னலாவானே
அவளை எப்போதும் கனவில் காண்பானே
கனவினூடவன்
அவளையும் தேடி
மரணத்தை நோக்கி
நடந்து போவானே.
மீன்காரன் / பக். 47 / 2003
**
படகைப் பற்றி ஒரு கவிதை
புத்தகத்தில் ஒரு கவிதை எழுதிவைத்தேன்
எடைக்கு விற்ற காகிதங்களில் அதுவும் இருந்தது.
கடைக்காரன் மிளகாயமோ வெங்காயமோ பொட்டலம் கட்டியிருப்பானோ?
குடிசையிலே குழந்தைக்கு அது கிடைத்திருக்குமோ?
அவனால் எழுத்துக் கூட்டிப் படிக்க முடிந்திருக்காதே?
அவன் தங்கைக்குப் படகு செய்து கொடுத்திருப்பானோ?
தோணியில் அவர்கள் எங்கே போக?
ஏனென்றால்
ஏராளமான கவிதைகள் அங்கும் இங்கும்
எழுதிப் போட்டிருக்கிறேன்
கடையிலிருந்து மிளகாயும் வெங்காயமும்
பொட்டலம் கட்டிய காகிதங்கள் வாசித்திருக்கிறேன்
எழுத்துக் கூட்டிப் படிப்பது சில வேளைகளில் கடினந்தான்
தங்கைகளுக்குப் படகு செய்து கொடுத்திருக்கிறேன்
தோணியில் அவர்கள் ஏறியதுமில்லை.
புத்தகத்தில் எழுதிவைத்த கவிதை
எதைப் பற்றியதாக இருந்தது?
எதைப் பற்றியதாக இருக்க வேண்டும்?
படகைப் பற்றி.
சரி, அது படகைப் பற்றியதுதான்.
மீன்காரன் / பக். 37 / 2003
**
மீன்காரன்
கொஞ்சமே நீரோட்டமுள்ள வாய்க்காலில்
மீன்காரன் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தான்.
தாழைகள் தென்படவில்லை
வாய்க்கால் நேராகப் போய் முட்டித் திரும்பும் இடம்
ஒரு ஒர்க்ஷாப்பாக இருந்தது.
அதன் கற்சுவரும் தெரியவில்லை.
வாய்க்காலுக்கு இணையாக
தெற்கும் வடக்குமாக
எம்.சி.ரோடு பாய்ந்து போனது.
நாங்கள், குழந்தைகள்தாம் பார்த்தோம்
அரையடிகூட உயரமில்லாத நீரில்
கவிழ்ந்து கிடக்கும் மீன்காரனின் உடல்
பாத்திரம், தராசும் படிக்கல்லும்.
இவனை வலிப்பு சுழற்றிப்போட்டிருக்கிறது
தலையில் தண்ணீர் விளையாடுகிறது
தண்ணீரில் தாழை மடல்
குத்திக் கிழித்து விளையாடுகிறது.
வாய்க்காலின் ஓய்ந்துபோன மூலையில்
நீர்ப்பூச்சி சுழல்கிறது.
இப்போது அதே இடத்தையடையும்போது
தெரிபவை:
ஒரு கோழிக்கடை
சிமெண்ட் பூசிய ஒர்க்ஷாப்
மண்கொட்டி உயர்த்திய வயல்
மீன்காரனைப் பார்க்கவே முடிவதில்லை.
மீன்காரன் / பக். 54 / 2003
**
இந்த வரிகளுக்கிடையில்
இந்த வரிகளுக்கிடையில்
சில சமயம் நானும் சிலசமயம் நீங்களும்
இல்லாமற் போகலாம்.
நமக்கிடையில் அறிமுகமில்லை.
பட்டணத்திலோ கடற்கரையிலோ பார்த்திருக்கலாம்
பாலத்தின் கைப்பிடிச் சுவரைப் பற்றிக்கொண்டு
கீழே ஒருவன் தூண்டில்போடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தது
நீங்களாக இருக்கலாம்
அல்லது
இறைச்சியோ மருந்தோ வாங்கப்
போகும்போது பார்த்திருக்கலாம்
நாமெல்லாம் எத்தனை சாதாரணர்கள், இல்லையா?
அசாதாரணமான காரியங்கள் செய்ய முயல்கிறோம்
நீங்கள் ஒரு வண்டி ஓட்டுகிறீர்கள்
அல்லது லோன் வாங்கி ஒரு கடை தொடங்குகிறீர்கள்
பரீட்சையில் தேறுகிறீர்கள் பாட்டுப் பாடுகிறீர்கள்
நான் கவிதைகள் எழுத முயல்கிறேன்
நமது செயல்கள் நம்மைத்தாண்டி நீண்டு நிற்கலாம்
எழுத்துக்களுக்கிடையில் நான் இல்லாமற் போகலாம்
வாசிப்புக்கிடையில் நீங்களும்.
ஐடென்டிட்டி கார்ட் / பக். 21 / 2005
**
ஐடென்டிட்டி கார்டு
படித்துக்கொண்டிருந்த காலத்தில்
ஒரு பெண் சிரித்துக்கொண்டு வந்தாள்
அவளுடைய சோற்றுக்கும் சூரைமீன் கறிக்கும் மேலாக
எங்களுடைய கைகள் குழைந்தன
நாங்கள் ஒரே பெஞ்சில்
இந்து கிறித்துவக் குடும்பமானோம்
நான் நெரூதாவின் கவிதைகள் வாசித்து நடந்தேன்
அதற்கிடையில் என் ஐடென்டிட்டி கார்டு காணாமற் போனது
நான் பார்த்தேன். கார்டைக் கொடுத்தவள் சொன்னாள்:
சிவப்புப் பேனாவால் குறித்திருக்கிறதே
ஸ்டைபெண்ட் வாங்கிய கணக்கு.
இந்தக் காலத்தில் ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் உட்கார்ந்து
தம்மை மறப்பதைப் பார்ப்பதேயில்லை
சற்றுக் கழிந்து அவர்கள் பிரிந்து போவார்கள்
இனி அவர்கள் சேர்ந்தாலும் வியப்பில்லை
அவர்களுடைய ஐடென்டிட்டி கார்டுகளில் செந்நிறக் குறிகள் இருக்காது.
ஐடென்டிட்டி கார்டு / பக். 28 / 2005
***
நிலவை நேசித்த பெண்
வீடுவாசல் பெருக்கி, செருப்பணிந்த
கோழிக்குத் தீனிவைத்து, சிரிக்கின்ற
பூனைக்குப் பால்வார்த்து, காலையுணவுண்டு
நேசம் பரிமாறி நிலவை நேசித்து
இரவுக்குப் பயந்து நீ உறங்குகிறாயோ?
சோஃபீ, பிஞ்சுமனமே, உனக்கானவை என்
கவிதைக் குருவிகள் எல்லாமும்.
நிலவை நேசித்த குழந்தாய், தனிமையால்
உருவாக்கப்பட்டாயோ நீ, பள்ளியின்
வாசலில் கூட்டாளிகள் ஓடியாட
பேசாமல் பார்த்து நிற்கிறாய் சோஃபியா, நீ,
பேசாதிருப்பதேன் பசித்ததோ?
கூட்டாளிகளில்லாத பெண்ணே, ஒருமுறை நீ
பாட்டுப் பாடக் கேட்டேன், உன் நீள்முடி
காற்றிலவிழ்த்து வட்டமிட்டு நீ
விழுந்து சிரிப்பதைப் பார்த்தேன், வழிகளில்
தனக்குத்தானே மெதுவாகப் பேசி
மெல்ல நடந்து நீ போவதைப் பார்த்தேன்.
வீட்டருகில் ஒருமுறை காணாமற்போக
வாய்க்கால் கரைவரை தேடித் திரும்பிய
நீ வளர்க்கும் நாய், குரைத்தபடி
கேட்டதென்ன? பதிலுக்கு என்ன சொன்னாய் நீ?
ஆந்தைகள் முனகும் இரவில்
பெட்டைப் பூனையும் நீயும் உறங்குகிறீர்கள்
பிரார்த்தனைபோல குறுக்கும் நெடுக்குமாய்.
குட்டிச் சிறுத்தைகள்போல வெய்யில்
துள்ளி விளையாடிக் களிக்கும் புலரியில்
வீட்டின் கதவை விரியத் திறந்து நீ
சிந்தும் புன்னகை வாழ்வின் நீர்.
தாயிழந்த குழந்தாய், உனக்கு நான்
என்ன கொடுக்க, பசிக்கும், நேசத்துக்கும்?
என் கை வெறுமை, இதயம் விஷமயம்
இல்லை, சேற்றில் மலர்கிறது பவளமல்லி.
என் கவிதை காட்டு நாவல் பழம்
என் கவிதை தாயின் உதடுகள்
என் கவிதையின் ஞானஸ்நானத்தால்
உன்னைச் சகோதரியாக்குகிறேன் நான்.
துக்கங்களையெல்லாம் கவிதைகளாக்க
துக்கமே, நீ என்னுடனே இருக்க வேண்டும்.
கறுத்த கல் / பக். 16 / 2000
கறுத்த கல்
கறுத்த கல்லின் மேலமர்ந்து
சிறுவயதில் விளையாடியதை நினைக்கிறேன்.
எனக்கு முன்பே பிறந்த கல்லிது
கறுத்தவன் என் கடுமையுள்ள கல்
வெய்யிலிலும் கொடும் மழையிலும்
ஒரு வருத்தமுமில்லாமல்
உணர்ச்சியில்லாமல் கிடந்திருந்த கல்
அதன் யானைமுதுகிலமர்ந்து
சடசடவென்று மண்ணப்பம் சுட்டு விளையாடியதை நினைக்கிறேன்.
அரண்ட காற்றின் சன்னலில்
அம்மா வருவதைப் பார்த்து
கறுத்த கல்லின் தாழ்வாரத்தில்
தனித்திருந்தேன்
மகர வயல்கள் கடந்து பணியிடங்களிலிருந்தோ
தலையில் ரேஷனும் பயிறுமாக
தூரத்து நாற்சந்தியிலிருந்தோ
அம்மா வருகிறாள்.
பசிக்கு மேலாகச் சாரல் மழை.
இருள் மூடிய விளைநிலங்கள்
இருட்டில் பாடும் மலைப் பறவை
இருட்டினூடே வரும் அண்டை வீட்டான்
ஓரினச் சேர்க்கையாளனுக்கு நிறமில்லை.
இவையெல்லாம் பால்யத்தின் குப்பைக்கூடை
இவையெல்லாம் மொத்தமாய் எறிந்து தொலைவில் போகிறேன்
எனினும்
ஆய்வகத்தைக் குடைந்து போயின பிரவாகங்கள்.
கறுத்த பாதைகள்
கறுத்த வேசிகள்
கறுத்த குழந்தைகள்
கறுத்த புத்தகத்தைத் திறக்கையில் காலாட்படைகள்
கறுப்புக்கு என் கறுப்புக்கு
நான் திரும்பி வருகிறேன்.
கருங்கல் உடைத்து எனக்கு
உணவு தந்த தகப்பனை
மரணத்திலிருந்து அழுகையால்
நாங்கள் மீட்ட அன்னையை
சிரட்டை எரித்து
உடைகளைத் தேய்த்துத் தந்த சகோதரிகளை
மறந்தாலும் உன்னை மறவேன் நான்.
போதாது எனக்கு, கருங்கல்லே,
உன் உள்ளம் குடைந்து போகணும் நான்
தூர வனங்களில்
இறந்த நண்பர்கள் கிடக்கும் கல்லறையின்
மூடி திறந்து பார்க்கணும் நான்
தெருவிலலையும் நாடோடிக்கு இசைந்தவன் ஆகணும்
அவளுடன் சேர்ந்து மழையில் நனையணும்
வானில் ஒரு புலியை
விழிகளால் தோண்டி வரையணும்.
கடும் குளிரில் கறுத்த வெறுமை
அதற்குள்ளிருக்கிறது கல்
கதவு மூடாத மௌனத்துக்குள்ளே
மறு வாக்கு இல்லாமல் உறங்குகிறதோ?
கருங்கல் முன்பு ஆழத்திலிருந்து எழுந்து வந்ததோ?
முடிவின்மைக்குள்ளே உருண்டு போகுமோ?
கறுத்த கல் / பக்.36 / 2000
@
எஸ். ஜோசப் என்ற செபாஸ்டியன் ஜோசப் 1965ஆம் ஆண்டு கோட்டயம் மாவட்டம் பட்டித்தானத்தில் பிறந்தார். பதினாறாவது வயது முதல் கவிதை எழுதி வருகிறார். இப்போது எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் மலையாள விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். கோட்டயத்தில் வசிக்கிறார்.
தொண்ணூறுகளில் வாசக கவனத்துக்கு வந்த புதிய தலைமுறையின் நம்பிக்கைக்குரிய கவிஞர்களில் ஜோசப்பும் ஒருவர். இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவை - கறுத்த கல் (2000), மீன்காரன் (2003), ஐடண்டிட்டி கார்டு (2005), உப்பன்டெ கூவல் வரைக்குன்னு (2009). இதில் ‘கறுத்த கல்’ தொகுதி கேரள சாகித்திய அக்காதெமியின் கனகஸ்ரீ விருதும் ‘உப்பன்டெ கூவல் வரைக்குன்னு’ தொகுதி திருவனந்தபுரம் புத்தக் கண்காட்சி விருதும் பெற்றவை. ‘புலரியியிலெ மூந்நு தெங்ஙுகள்’ என்ற நாவலும் எழுதியிருக்கிறார். இங்கே இடம் பெறும் கவிதைகள் ஜோசப்பின் மேற்குறிப்பிட்ட தொகுதிகளிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. 2008 மே மாதம் ஜெயமோகன் உதகை நாராயண குருகுலத்தில் நடத்திய தமிழ் மலையாளக் கவிஞர்கள் சந்திப்பில் விவாதிப்பதற்காக இவற்றுள் பெரும்பான்மையும் தமிழாக்கம் செய்யப்பட்டன.
நன்றி : காலச்சுவடு (மாத இதழ்) / எட்டுத்திக்கும் (இணைய தளம்)
சனி, 26 ஜூன், 2010
சொற்குற்றம்
யாரிடமும் எதுவும் பேசப் பயமாக இருக்கிறது
யாரிடமும் எதுவும் சொல்லப் பயமாக இருக்கிறது
சொன்னதைச்
சொல்லவேயில்லை என்கிறார்கள்
சொல்லாதைச்
சொன்னதாகச் சொல்கிறார்கள்
நினைத்ததைச்
சொன்னதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்
சொன்னதை
நினைத்துக் கொண்டிருந்ததாகக் குறைப்படுகிறார்கள்
ஒருவேளை
சொல்லவேண்டியதை நினைக்காமல்
நினைப்பதைச் சொல்லியிருப்பேனா?
ஒருவேளை
நினைப்பதைச் சொல்லாமல்
சொல்லவேண்டியதை நினைத்திருப்பேனா?
சொன்ன சொற்கள்
சொல்லாத சொற்கள்
சொல்ல நினைத்த சொற்கள்
சொல்ல மறந்த சொற்கள்
எல்லாச் சொற்களும் ஏய்க்கின்றன
எதுவும் சொல்லப் பயமாக இருக்கிறது
யானைப்பாகனின் பயத்தைப்போல
பாம்புப்பிடாரனின் பயத்தைப்போல
வெடிகுண்டு செய்பவனின் பயத்தைப்போல.
வெள்ளி, 25 ஜூன், 2010
ஆப்பிள்
'துக்கம்
பாதி உரித்த ஆப்பிள்
அது
ஓர் உருவகமோ
ஒரு கவிதையோ அல்ல
அங்கே
அது
இருந்து கொண்டிருக்கிறது'
என்றார் தனிக்காவா.
'இங்கே
இரண்டு ஆப்பிள்கள் இருக்கின்றன
ஒன்று குளிர்பதனப் பெட்டியில்
இரண்டாக நறுக்கப்பட்ட மற்றொன்று உணவு மேஜையில்.
குளிர்ந்த ஆப்பிள் பாதுகாப்பாக வியர்த்திருக்கிறது
நறுக்கிய ஆப்பிள் நிறம் பிறழ்ந்து கிடக்கிறது '
இதில்
எது துக்கம்? எது மகிழ்ச்சி?'
தனிக்காவாவைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன் நான்.
'அட, போங்கப்பா,
பசித்திருக்கிறேன் இப்போது
எதைத் தின்ன?
துக்கத்தையா? மகிழ்ச்சியையா?'
எங்களைக் கேட்கிறாய் நீ.
@
உடன்படுக்கை விதிகள்
இரட்டைக் கட்டிலில் கிடக்கும்
ஒற்றை நுரைமெத்தை நடுவில்
வரையப்பட்டிருக்கும் எல்லைக்கோடு
கண்ணுக்கு ஒருபோதும் புலப்படுவதில்லை
எனினும்
படுக்கையின் எல்லை விதிகள்
நாமறியாமல் நம்மால் கடைப்பிடிக்கப்படுகின்றன
உறக்கக் கடலின் இருளாழத்தில் துளாவிக்
கைகால்களோ உடலோ பெயர்ந்து
எல்லை தாண்டுகிறோம்.
உடனே
கடலோடியின் நீரியல் எச்சரிக்கையுடன்
அவரவர் எல்லைக்குப் புரண்டு துயில்கிறோம்
கடலோடிக்கு
நீர்வெளியின் எல்லைகள் தெரிவதுபோல
நமக்குப் படுக்கையின் எல்லைகள் புலப்படுகின்றன.
காமத்தின் வானில் வேட்கையுடன் பறந்து
உடல்களைப் பகிர்ந்து
எல்லையைத் தாண்டுகிறோம்
உடனே
விமானியின் சாதுரியத்துடன்
அவரவர் எல்லையைப் புறக்கணித்துக் கூடுகிறோம்
விமானிக்கு
ஆகாய சுதந்திரத்தில் எல்லைகள் இயல்பாவதுபோல
நமக்குப் படுக்கையின் எல்லைகள் மறக்கின்றன.
எனினும்
உடன்படுக்கை எல்லைகளில்
மீற முடியாத விதியொன்று -
ஈருடல் ஓருயிர் என்று பீற்றிக்கொண்டாலும்
ஒரே சிதையில் எரிக்கப்படவோ
ஒரே சவப்பெட்டியில் அடக்கப்படவோ முடியாது.
புதன், 23 ஜூன், 2010
அக்ஞேயா கவிதைகள்
இந்தப் பதிவிலுள்ள அக்ஞேயா கவிதைகளின் மொழியாக்கம் இருபது ஆண்டுகளுக்குப் பின்பான மறு வருகை அல்லது மீட்டெடுப்பு.
நண்பர் கோணங்கியின் 'கல்குதிரை' ஆறாம் இதழில் வெளியானவை இந்தக் கவிதைகள். இதழில் அக்ஞேயாவின் 'அர்த்தமும் அர்த்தமினமையும்' நாவலும் 'முகமூடிக் கோயில்' கட்டுரையும் வெளியாகியுள்ளன. இரண்டையும் தமிழாக்கம் செய்தவர்: சா.தேவதாஸ்.
உண்மையில், கோணங்கி இந்த இரண்டு மொழியாக்கங்களுடன்தான் இதழைக் கொண்டுவரும் எண்ணத்திலிருந்தார்.நண்பர் சி.மோகன் நடத்திவந்த மிதிலா அச்சகத்தில் வைத்து இதழ் அச்சுக்குப் போகவிருந்த வேளையில்,தயக்கத்துடன் கோணங்கியிடம் அக்ஞேயாவின் சில கவிதைகளை மொழிபெயர்த்து வைத்திருப்பதைச் சொன்னேன். 'ஏ, சரியான ஆளாருக்கியேப்பா, ஒடனே அதைக் குடு' என்றார். வீட்டிலிருக்கிறது, மறுநாள் எடுத்து வருகிறேன் என்றேன். கோணங்கி அதற்குள் படியிறங்கி அச்சக வாசலில் நின்று , 'வா வா, வீட்டுக்குப் போய் எடுத்து வரலாம்' என்று செருப்பை மாட்டிக் கொண்டு நகர ஆரம்பித்தார். ஆடி மாத வெயிலில் மயிலாப்பூரிலிருந்து மந்தைவெளிவரை வியர்வை வழிய நடந்து போய் வீட்டிலிருந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொடுத்தேன். மொழியாக்கம் எழுதிய பக்கங்களைக் கொத்தாகப் பிய்த்தெடுத்துக் கொண்டு கோணங்கி சொன்னார்: ' அக்ஞேயா சிறப்பிதழ்னு போட்ருவம்யா'.
எண்பத்தியெட்டு பக்கங்களுடன் வெளிவந்த கல்குதிரை இதழில் 'நம் காலத்தின் குரல்' என்ற மணிமேகலை (யார் அது?)யின் கட்டுரையைத் தவிர ஏனைய பக்கங்கள் அக்ஞேயாவுக்கு.
கவிதைகளின் மொழியாக்கத்தில் ஈடுபட்டதும் தற்செயலானது. மொழிபெயர்ப்புக்குச் சில வருடங்கள் முன்பு மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனைப் பார்க்க அவருடைய ஊரான இரிஞ்ஞாலக்குடா சென்றிருந்தேன். 'சமகால ஹிந்திக் கவிதைகள்' என்ற மலையாள மொழியாக்கத் தொகுப்பின் இறுதி வரைவில் மும்முரமாக இருந்தார் சச்சி மாஷ். அவர் வீட்டு வரவேற்பறை டீபாய்மேல் கவிழ்ந்து கிடந்த 'அக்ஞேயாவின் தேர்ந்தெடுத்த கவிதைகள்' இந்தித் தொகுப்பைப் புரட்டிப் புரட்டி வாசித்துக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்த மாஷ் 'ஹிந்தி படிக்கத் தெரியுமா?' என்று கேட்டார். 'ஓரளவுக்குப்
படிக்க முடியும்' என்றேன். அப்போது அவர் சொன்ன யோசனைதான் அக்ஞேயா மொழிபெயர்ப்புக்குத் தூண்டுதலாக இருந்தது. பிடித்த கவிதைகளைத் தமிழில் தோராயமாக மொழிபெயர்ப்பது. பின்னர் சச்சி மாஷ் அதன் சரியான அமைப்பையும் பொருளையும் சொல்லுவார். அதையொட்டித் திருத்தங்கள் செய்து செம்மைப்படுத்துவது என்பது யோசனை. இரண்டு மணி நேரத்தில் ஐந்து இந்திக் கவிதைகள் தமிழ் வடிவம் பூண்டன. ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் 'கல்குதிரை'யில் அச்சேறின.
@
அக்ஞேயா என்ற எஸ்.எச்.வாத்ஸ்யாயா என்ற சச்சிதானந்த ஹீரானந்த வாத்ஸ்யாயா 1911 இல் பிறந்தார். கவிஞர், நாவலாசிரியர், சிறுகதையாளர், விமர்சகர், விடுதலைப் போராட்ட வீரர், உலகம் சுற்றி.
நவீன இந்திக் கவிதையின் மூன்று தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்தவர். அவர் தொகுத்து வெளியிட்ட 'தார் சப்தக்' என்ற நூலே இந்திக் கவிதையின் திசை மாற்றத்துக்குத் தயாராக சிறகுக¨ளைக் கோதிக் கொடுத்தது. இந்தப் புதிய கவிதைகளின் கண்ணோட்டம், புதிய உருவகங்கள், படிமங்கள் ஆகியவை விமர்சக வட்டத்தில் பெரும் எதிர்ப்பைப் பெற்றன. கருத்தளவில் இவை மேற்கத்தியச் சாய்லைக் கொண்டவை; தனிநபர் வாதத் தன்மையுள்ளவை; புதியாதவை என்பவையே முக்கியக் குற்றச் சாட்டுகள். இத் தொகுதி மூலம் அக்ஞேயாவும் முக்திபோதும் புதிய இந்திக் கவிதையின் முன்னோடிகளாகத் தெரிய வந்தனர். 1951 இல் அக்ஞேயா தொகுத்த இரண்டாவது தொகுப்பும் வெளிவந்தது. இந்திக் கவிதை புதிய திசையில் சிறகுகளை வீசிப் பறக்கத் தொடங்கியது. தொடர்ந்து வந்த வருடங்களில் அக்ஞேயா மானுட இருப்பின் பிரச்சனைக்குரிய உள் உலகங்களில் சஞ்சரிக்கத் தொடங்கினார்.
1964 இல் சாகித்திய அக்காதெமிப் பரிசும் 78 இல் பாரதிய ஞானபீடப் பரிசும் அக்ஞேயாவுக்கு வழங்கப் பட்டன. இதய நோய் பாதிப்பால் 1987 இல் மறைந்தார்.
@
வீடுகள்
1
இரண்டு கதவுகளை ஒன்றிணைக்கும்
அறை என் வீடு
இரண்டு கதவுகளுக்கு இடையேயிருக்கும்
காலியிடம் என் வீடு
எப்படிப் பார்த்தாலும்
நீங்கள் வீட்டைக் கடந்து பார்க்கலாம்
மறு பக்கத்துக் காட்சியைப் பார்க்கலாம்
ஆனால் வீட்டைப் பார்க்க முடியாது
நான் தான் என் வீடு
என் வீட்டில் எவரும் வசிக்கவில்லை
என் வீட்டில் நான் வசிக்கிறேனா?
எப்படிப் பார்த்தாலும்...
2
உங்கள் வீடு
அங்கே சாலைமுடியுமிடத்தில்
ஆனால் நான் எப்போதும் போய்க்கொண்டேயிருக்க வேண்டும்
அப்படியானால் சாலை எங்கே முடிகிறது?
உங்கள் வீடு...
3
மற்றவர்களின் வீடுகள்
உள்நோக்கித் திறக்கின்றன
அவை வெளியிட முடியாத ரகசியங்களுக்குள் திறக்கின்றன
மற்றவர்களின் வீடுகள் நகரங்களில்
நகரங்கள் மற்றவர்களின் வீடுகளில்...
4
வீடுகள், நாம் செல்லும் வீடுகள் எங்கே?
வீடுகளைப் பற்றிய எல்லாப் பேச்சுக்களும்
வீடுகளைப் பொறுத்தவரை புதிர்கள்தாம்
பிறரிடம் நாம்
வீடுகளைப் பற்றிப் பேசுவதில்லை
பிறரிடம் நாம் பேசுவது
வீடுகளைப் பற்றியுமல்ல.
@
திசைகள்
என்றும் காலையில் கொஞ்ச நேரம்
நான் இறந்த காலத்தில் வாழ்கிறேன்
ஏனெனில்
என்றும் மாலையில் கொஞ்ச நேரம்
நான் எதிர் காலத்தில் சாகிறேன்.
@
தேநீரை உறிஞ்சிக்கொண்டே...
தேநீரை உறிஞ்சிக்கொண்டே
நான் அப்பாவைப் பற்றி யோசிக்கிறேன்
நீங்களும் தேநீரை உறிஞ்சிக்கொண்டே
உங்கள் அப்பாவைப் பற்றி யோசிப்பதுண்டா?
அப்பாவைப் பற்றிய இந்தச் சிந்தனை
நல்லதற்கல்ல
நாம் வேறு எவரோவாக ஆகியிருக்கலாம்
ஆனால் அத்தோடு
நமது அசல் குணம் வெளியே வந்து விடும்
நாம் வேறு எவரோவாகியிருக்கலாம்
வேறு எவரோவாக முடிந்திருந்தால்
நாம் அப்பாவை நெருங்கியிருப்போம்
ஏறத்தாழ அப்பாவைப் போலாகியிருப்போம்
இதைக் கண்டுபிடித்து விடுகிறோம்
யோசனையின் கோளாறு இதுதான்
அப்பாவைப் போலாக வேண்டுமென்றால்
அப்பாவிடமிருந்து எவ்வளவோ விலகிப் போகவேண்டும்
அப்பாவும் காலையில் தேநீர் அருந்துவார்
அப்போது
அவரும் அவருடைய அப்பாவைப் பற்றி யோசித்திருப்பாரா?
அது
அப்பாவுக்குப் பக்கத்திலிருந்தா அல்லது
அப்பாவிடமிருந்து விலகியா?
@
எல்லைப் புறத்தில் சோதனை
முகங்கள் திருத்தமானவை
எந்திரங்களைப்போல மென்மையானவை
அவை வெளிப்பூச்சில் மின்னுபவை
அவை மறைத்து வைப்பதற்காகவே பேசுபவை
கைகள் மட்டும் இப்போதும் இணக்கமற்றவை
அவற்றின் தழும்புகள் மௌனமாக
உண்மையைச் சொல்லிக்கொண்டேயிருக்கின்றன
சிலசமயம், சிலசமயம் மட்டுமே
கண்ணீர்த் துளிகளும்...
அவை மட்டுமே இப்போதும் பாடுகின்றன
@
ஹிரோஷிமா
இன்று ஒரு சூரியன் உதித்தெழுந்தது
இல்லை
தொடுவானத்துக்கு மேலாக மெல்லமெல்ல உதித்தெழவில்லை
நகரத்தின் மத்தியில்
ஒரு வெளிச்சவாணம் தெறித்துச் சிதறியதில்
இன்றைய சூரியன் உதித்தெழுந்தது
இல்லை
ஆகாயத்திலிருந்தல்ல
வெடித்துப் பிளந்த பூமியிலிருந்து
எல்லாத் திசைகளிலும்
பேதலிப்பின் நிழல்கள்
இழப்பின் நிழல்கள்
மனித நிழல்கள்
இல்லை
கிழக்கிலிருந்து எழுந்து வரவில்லை
மரணத்தின் அதிவேக சூரிய ரதத்திலிருந்து
கழன்று சுழன்று
ஒரு பெருஞ்சக்கரம் கீழே விழுந்தது
நகரத்தின் இதயத்தில் விழுந்து உடைந்தது
எங்கும் சிதறியது
ஒரே நொடியில்
ஒரு சூரியன் உதித்து மறைந்தது
குறுகிய உச்சிவேளிஅயின்
கண்பிடுங்கும் ஒளிப் பிரவாகம்.
பிறகு
நீண்டு வந்ததும் வெளிறி இறந்ததும்
மனித நிழல்களல்ல
மனிதர்கள்
ஒற்றை நொடியில் மூடுபனியாகி மறைந்தனர்
நிழல்கள் மட்டும் மிஞ்சின
பாறைகளில்
காலியான இந்தத் தெருக் கற்களில்
எரிந்து கருகிய நிழல்கள்
மனிதர்கள் உருவாகிய சூரியன்
மனிதர்களையே துகள்களாக்கியது
சூனியமாக்கியது
கறுத்த பாறைகளில் கையொப்பமிட்ட வெள்ளை நிழல்கள்
குற்றப் பத்திரிகை வாசிக்கின்றன -
மனிதர்களுக்கு எதிராக.
நன்றி: கல்குதிரை - ஜூன் ஜூலை ஆகஸ்ட் இதழ் (1990)
செவ்வாய், 4 மே, 2010
எப்போது?
நேசத்துடன்
என்னிடம் நீ பிரியத்தை சொன்னது எப்போது?
மொழியறியாத் தெருக்களில்
திசைதெரியாது அலைந்தேனே
அப்போதா?
பரிவுடன்
என்னை நீ தொட்டது எப்போது?
எரியும் வீட்டிலிருந்து
துள்ளித் தெறித்து வெளியேறினேனே
அப்போதா?
கரிசனத்துடன்
என் கைகளைப் பற்றியது எப்போது?
எவருக்கும் தர எதுவுமில்லாமல்
என் வலது கரத்தைத் துண்டித்தேனே
அப்போதா?
கனிவுடன்
என் முகத்தைப் பாத்தது எப்போது?
பயத்தின் இருளில் யாரும்
பார்த்துவிடக் கூடாமல் மறைந்திருந்தேனே
அப்போதா?
உன்னை விடப் பெருங்கருணையுடன்
நானிருந்த அமர நொடிகளில்
இல்லாமற் போனாயே
அது மறதியா, பதுங்கலா?
வெள்ளி, 30 ஏப்ரல், 2010
என்ன வேண்டும் உங்களுக்கு?
உங்கள்
அன்றாடக் கடன்களுக்குத் தேவையானவையெல்லாம்
இந்த மூலையில் இருக்கின்றன
கழிப்பிடம், நீர்க்குழாய்,சவர்க்காரம்,துவாலை,
வாசனைத் திரவியங்கள்,ஒப்பனைப் பொருட்கள்
முகம் மூடும் கவசங்கள்
நீங்கள்
பசியாறுவதற்கானவையெல்லாம்
இந்த உணவு மேஜையில் இருக்கின்றன
அவித்தவை, பொரித்தவை, வதக்கியவை,
காய்கள்,பழங்கள், உலர் கனிகள்,
பித்தம் கசியும் எட்டிக்காய்.
உங்கள்
தாகம் தணிப்பதற்கான பானங்களெல்லாம்
இந்தக் குவளைகளில் இருக்கின்றன
பால், குடிநீர், தேநீர், பழச்சாறு,
கண்ணாடிக் கோப்பையில் கலப்படமற்ற நஞ்சு.
நீங்கள்
இளைப்பாறவும் புத்துணர்வுபெறவுமானவையெல்லாம்
இந்த அறையில் இருக்கின்றன
படுக்கை, நாற்காலி, குடிநீர்ப் பானை,
சங்கீதம், புத்தகம்,
அவமதிப்பின் கனத்த சுவர்கள்.
தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கள்
என்னதான் உங்கள் தேவை?
கவிதையின் கை
1993 டிசம்பர் மாதத்தின் கடைசி நாட்கள் வாழ்நாள் முழுமைக்குமான சுகந்தத்தைத் கொண்டிருந்ததாக இப்போதும் ஞாபகத்தில் மணம் வீசுகிறது. இந்தியக் கவிதைச் சங்கமும் சாகித்திய அக்காதெமியும் ஒருவாரம் நீண்டு நின்ற கவிதை விழாவுக்கு அழைத்திருந்தன. சாகித்திய அக்காதெமி இந்திய மொழிக் கவிதைகளை ஹிந்தியில் மொழிபெயர்ப்புச் செய்து வெளியிடும் நோக்கில் ஒரு மொழிபெயர்ப்புப் பட்டறையையும் கவிதைச் சங்கம் கவிதா 93 என்ற பெயரில் கவிதைத் திருவிழாவையும் தில்லியில் நடத்தத் திட்டமிட்டிருந்தன. மொழிக்கு ஒருவராகப் பத்து இந்திய மொழிகளிலிருந்து தேர்ந்து அழைக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். பட்டறையில் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளைத் தொகுத்து சாகித்திய அக்காதெமி பின்னர் 'சப்தசேது' என்ற பெயரில் நூலாக வெளியிட்டது. இந்த நிகழ்வுகளெல்லாம் மகிழ்ச்சியளித்தவை.அந்த வாய்ப்பில் பிற இந்திய மொழிக் கவிஞர்களுடன் கலந்துரையாடவும் வாசித்துத் தெரிந்து கொண்டிருந்த கவிஞர்களுடன் நட்பை உருவாக்கிக் கொள்ளவும் முடிந்தது என்பதுதான் அதிக மகிழ்ச்சியளித்தது. அன்று தொடங்கிய நட்பு இன்றும் சிலருடன் அறுபடாமல் தொடர்கிறது. வங்கக் கவிஞரான அஞ்சென் சென், கன்னடக் கவிஞரான எச்.எஸ்.சிவபிரகாஷ், மராத்திக் கவிஞரான சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோருடனான தோழமை இன்றும் உற்சாக மளிப்பதாகவே நீடிக்கிறது.
கவிஞர்கள் விநோதப் பிறவிகளாக இருக்கிறார்கள் அல்லது குறைந்தபட்சம் அப்படித் தோற்றம ளிக்கவாவது ஆசைப்படுகிறார்கள் என்று பட்டது. அசாமியக் கவிஞரான ஹிரேன் பட்டாச் சார்யா அப்படி மனதில் பதிந்தார். மனைவியையும் அழைத்துக்கொண்டு கவிதை விழாவுக்கு வந்திருந்த ஹிரேன் தா வின் பேச்சில் வயோதிகக் குறும்பு துள்ளிக் கொண்டிருந்தது. அவருடனான ஒரு பகலுணவுக்குப் பிந்தைய உரையாடல் இப்போதும் நினைவிருக்கிறது.
'' நீ எந்த மொழியில் எழுதுகிறாய்?''
''தமிழில்''
''அதை எவனாவது படிக்கிறானா?''
''தெரியாது''
''உனக்கு எத்தனை வாசகர்கள் இருக்கிறார்கள் என்று தெரியாமல் யாருக்காக எழுதுகிறாய்?''
''வாசகர்கள் படிக்கவேண்டும் என்பதற்காக எழுதுகிறோம் என்பதுபோலவே வாசகனை முன்னிருத்தியும் நாம் எழுதுவதில்லைதானே? ஒரு வாசகனாவது படிப்பான் என்ற எண்ணத்தில்தானே எழுதுகிறோம். அப்படியான ஒரு வாசக கரிசனைதானே முக்கியம். அது ஒருவனாகவோ அல்லது ஒற்றை முகத்துக்குப் பின்னாலிருக்கிற ஒரு நூறுபேராகவோ இருப்பதைப் பற்றி கவிஞன் கவலைப்படுவது அவசியமா?''
''ஹூர்ரே பாப், உன் கவிதையை எடுத்து வா, வாசித்துப் பார்த்து விட்டு. உனக்கு எத்தனை வாசகர்கள் இருப்பார்கள் என்றுசொல்கிறேன்.அது முக்கியம். இருபத்தைந்து வயது வரைக்கும் நீ மற்றவர்களைப் படிக்கவேண்டும். அதற்குப் பிறகு மற்றவர்கள் உன்னைப் படிக்க வேண்டும். அப்போதுதான் நீ கவிஞன். என்ன வயதாகிறது உனக்கு?''
''முப்பத்தியாறு''
''சான்சே இல்லை.நீ சும்மா எழுதிக்கொண்டிருக்க வேண்டியதுதான். சரி. ஹிந்தியில் மொழிபெயர்த்திருப்பதைக் கொடு, வாசிப்போம்.''
கையிலிருந்த தாள்களைக் கொடுத்தேன்.ஹிரேன் பட்டாச்சாரியா அதைக் கவனமாக வாசித்தார். இடையிடையே 'வாரே, வாஹ்' என்று சிலாகிக்கவும் செய்தார். ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த பத்துக் கவிதைகளையும் வாசித்துத் தீர்த்தார். ''பையா, உனக்கு நிச்சயம் மூன்று வாசகர்கள் இருப்பார்கள். உறுதி. ஒன்று நீ, இரண்டாவது -உனக்குத் திருமணமாகி விட்டதா? அப்படியென்றால் உன் மனைவி, மூன்றாவது அசாமியக் கவிஞனான ஹிரேன் பட்டாச்சார்யா''
சற்றுக் கூச்சமாகவும் சற்றுப் பெருமிதமாகவும் சிரித்தேன். ஹிரேன் தாவின் மனைவி வந்து அழைத்ததில் உரையாடல் முடிந்தது.எழுந்து நின்றபோது ஹிரேன்தா இறுகக் கட்டியணைத்தார். டிசம்பர் குளிருக்கு அந்த அணைப்பு இதமாக இருந்ததும் கிழவரின் முகம் நெருக்கத்தில் வந்தபோது அதற்குள்ளிருந்து முந்திய நாள் அருந்திய மதுவின் நெடியும் சற்று முன் புகைத்த சாக்லெட் புகையிலையின் மணமும் என் மூக்கில் பரவியதும் நினைவிருக்கிறது.
கவிதையாக்கத்தில் ஒருவகையான பித்துநிலை உண்டு.அதே நிலையில் தங்களைத் தொடர்ந்து வைத்துக்கொண்டிருக்கும் விருப்பம் எல்லாருக்கும் உண்டு.ஆனால் சிலருக்கே அது கை கூடுகிறது.அப்படிப்பட்ட மனப்பாங்குள்ளவர் ஹிரேன் தா என்று நினைத்திருந்தேன். அன்று மாலை வந்து சேர்ந்த அருண்கொலாட்கரை அடுத்த நாள் பார்த்துப் பேசும்வரைக்கும் அந்த நினைப்பு இருந்தது. கவிஞன் என்ற முறையில் யாரைப் போலவும் ஆகி விடக் கூடாது என்ற மூர்க்கம் எனக்கு உண்டு. அப்படி ஆவது என்றால் கொலாட்கரைப்போல ஆகிவிட வேண்டும் என்று நப்பாசை அந்த நாளில் தோன்றியது. அவருடைய மரபணுவும் என்னுடையதும் வெவ்வேறானவை என்ற ஞானம் அந்த தில்லி நாட்கள் முடியும் முன்பே உருவானது.எனினும் அவ்வப்போது நான் வாசிக்கும் கவிஞர்களில் ஒருவராகியிருந்தார் அருண்கொலட்கர் .
@
கவிஞர்கள் தங்கியிருந்த இந்தியா இண்டர்நேஷனல் செண்டருக்கு மாலை நேரம் வந்து சேர்ந்தார் கொலாட்கர். அவருடைய வருகை ஏதோ திரை நட்சத்திரத்தின் பிரவேசம்போல விமரிசையாகக் கடைப்பிடிக்கப் பட்டது. பெரும்பாலும் வட இந்திய மொழி எழுத்தாளர்களும் தில்லிவாழ் ஆங்கிலக் கவிதை வாசகர்களும் அவரை மொய்த்துக் கொண்டிருந்தார்கள். அருண்கொலாட்கர் முகத்தில் இறுக்கமான எதிர்வினையே தென்பட்டது. இடையிடையே கட்டாயச் சிரிப்பு மட்டும் நெளிந்தது.
அசலான நாடோடித் தோற்றத்திலிருந்தார் கொலாட்கர். சராசரியை மிஞ்சியதாகத் தோன்றும் உயரம்.நரையும் கருமையும் கலந்த அடர்ந்த சிகை. புருவங்கள் இரண்டும் வெளுத்திருந்தன. அது அவருடைய பார்வையைக் கூர்மைப்படுத்துவதுபோல இருந்தது. கூட்டத்துக்குள்ளும் தனியனாக இருந்தார். அவருக்க்கு மிக நெருக்கமானவர்கள் தவிர வேறு யாருடனும் அரைச் சிரிப்புக்கு அதிகமாகவோ இரண்டு மூன்று வார்த்தைகளுக்கு மேலாகவோ எதிர்வினை காட்டவில்லை. ஆசாமி எல்லாரையும் விட முற்றிய கிறுக்கு என்ற அபிப்பிராயமே எனக்கு அப்போது ஏற்பட்டது. அன்று இரவு நண்பர் சந்திரகாந்த் பாட்டீல் மராத்திக் கவிதையில் கொலாட்கரின் இடம் பற்றி விளக்கினார்.
மூன்று தலைமுறைகளாக மராத்தியக் கவிதையுலகில் காத்திரமான பாதிப்பை ஏற்படுத்தி வருபவர் அருண் கொலாட்கர். எழுதியது குறைவு.எனினும் அதன் வீச்சு தீவிரமானது. ஒரு நவீன மனிதன் மராத்திக் கலாச்சாரத்துடன் எந்த விதமாகவெல்லாம் இடையீடு நிகழ்த்த முடியுமோ அந்த எல்லா விதத்திலும் செயல்பட்டவர்.மராத்திக் கவிதையின் பிரதான வடிவங்களை கலைத்துப் போட்டும் உருமாற்றியும் கவிதையில் சோதனை செய்தவர். இலக்கிய வழக்க்குக்குப் பதில் கச்சாவான மராத்தியில் கவிதையை எழுப்ப முடியும் என்று நிரூபித்தவர். அந்த வகையில் அவருக்கு வாசகர்கள் அதிகம். எந்த சித்தாந்தத்துக்குள்ளும் சிக்கிக் கொள்ளாதவர்.ஆனால் எல்லா சித்தாந்தங்களும் அவர் கவிதைக்குள் ஊடாடுகின்றன. நீண்ட காலமாக எழுதுபவர். எனினும் அவரது மொத்த கவிதைகளின் எண்ணிக்கை குறைவு.
ஆங்கிலத்திலும் எழுதுகிறார். ஆங்கிலத்தில் எழுதும் முக்கியமான இந்தியக் கவிஞர்களில் கொலாட்கரும் ஒருவர்.
கொலாட்கரைப் பற்றி அன்று இரவு இலக்கிய நண்பர்களுடன் உரையாடித் தொகுத்த விவரங்கள் இவை.கொலாட்கரின் கவிதைகளை விட அவரது வாழ்க்கை சுவாரசியமானதாகத் தோன்றியது. பிரசித்தி பெற்ற ஜே.ஜே.ஓவியக் கல்லூரியில் பயின்றவர். பின்னர் விளம்பர நிறுவனமொன்றில் டிசைனராகவும் கிராபிக் ஓவியராகவும் பணியாற்றினார். அந்தப் பணிகளையும் விருப்பமிருந்தால் மட்டுமே செய்திருக்கிறார். நான் சந்தித்த கால கட்டத்தில் அவருடைய மராத்திக் கவிதைகளின் தொகுப்பு மட்டுமே வெளியாகியிருந்தது. ஆங்கிலக் கவிதைகள் தொகுக்கப் பட்டிருக்கவில்லை. கவிதையைத் தன்னுடைய முதன்மையான ஊடகமாகக் கருதியிருந்த போதும் அவை பற்றி கொலாட்கர் பேசமாட்டார். பத்திரிகைகளுக்குப் பேட்டியளிக்க மாட்டார். அவரைத் தொடர்புகொள்ளத் தொலைபேசி கூடக் கிடையாது.ஆசாமி
ஒரு நாடோடி.தாந்தோன்றி. ஆங்கிலத்தில் கௌரமாகச் சொன்னால் மாவரிக்.
நண்பர்களின் வர்ணனைகள் ஏதோ சுவாரசிய்த்தைத் தந்தன.அன்று மாலை அவருடைய கவிதை வாசிப்பு இருந்தது. ஜெஜூரி என்ற வரிசையில் அவர் எழுதியிருந்த
கவிதைகளில் சிலவற்றை அவர் வாசித்தார். முதலில் மராத்தியில் தொடங்கிய அவரது வாசிப்பு ஆங்கிலக் கவிதைகளுக்கு மாறியது. கவிதைக்கு அவ்வளவு வாஹ்...
வாஹும் ...கைதட்டலும் கிடைக்கும் என்று கண்டது அன்றுதான்.அவர் வாசித்த மராத்திக் கவிதைகளை பார்வையாளர் கூட்டத்திலிருந்து பல குரல்கள் எதிரொலித்தன.
ஒரு அட்சரமும் புரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். ஆங்கிலத்துக்கு மாறியதும் காது இளகியது. ஜெஜூரி கவிதைகளிருந்து ஒரு கவிதையை வாசித்தார்.சிரமப்படுத்தாத ஆங்கிலம். எளிமையான காட்சிப்படுத்தல். அடக்கமான நையாண்டி. முடிவாக ஒரு கனத்த மௌனம். அந்தக் கவிதை இன்றும் நினைவிலிருப்பதன் காரணம் அந்த மௌனந்தான். சிதலமடைந்த ஜெஜூரி ஆலயத்தை மையமாகக் கொண்டு நிகழும் சம்பவங்கள்தாம் கவிதையாக ஜெஜூரியில் இடம் பெறுகின்றன. அங்கு வீற்றிருக்கும் தந்தோபா என்ற கடவுளும் கிண்டலடிக்கப்படுகிறார்.
அன்று கவிதை வாசிப்பு முடிந்து இரவுணவுக்குப் பின்னர் இலக்கியவாதிகள் குழுக்களாக அமர்ந்து இலக்கிய விவாதம் நடத்திக்கொண்டிருந்தார்கள். இந்தியா இண்டர்நேஷனல் செண்டர் வளாகத்தில் டிசம்பர்ப் பனி விழுந்து மெல்ல மெல்ல ஈரமாகிக் கொண்டிருந்த புல்வெளியில் உட்கார்ந்திருந்தேன். சற்றுத் தள்ளி அருண் கொலாட்கர். கையில் பிடித்திருந்த பளிங்குக் கிண்ணத்தில் பழுப்புத் திரவம் விளக்கொளிபட்டு மின்னிக் கொண்டிருந்தது. அவரை நெருங்கலாமா கூடாதா? என்று யோசித்து முடிப்பதற்குள் அவரே அருகில் வந்தார். 'உன்னுடைய கோப்பை எங்கே? என்றார். பழக்கமில்லை என்றேன். 'பிறகு என்ன கவிஞன்?' என்று சிரிக்காமல் சொல்லி உற்றுப் பார்த்தார். பேச்சை மாற்றுவதற்காக 'உங்கள் கவிதை எனக்குப் பிடித்திருந்தது' என்றேன். 'நன்றி. ஆனால் எந்தக் கவிதை?' ' கோவிலுக்கு அழைத்துப் போவதாக அடம் பிடிக்கும் கிழவியைப் பற்றிய கவிதை'.
சின்னச் சின்னக் கேள்விகளாக நான் என்னென்னவோ கேட்டுக்கொண்டிருந்தேன். அவரும் ஒற்றை அல்லது இரட்டை வார்த்தைகளில் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.
அந்த உரையாடலின் துணுக்குகள்தான் இப்போது ஞாபகத்தில் மிஞ்சியிருக்கின்றன. ' என்னுடைய தனித்தன்மை என்பது எல்லாவற்றுக்காகவும் திறந்த மனநிலையுடன்
இருப்பது. ஒரு கவிஞனுக்கு இது முக்கியம். இது ஒரு மனநிலையல்ல. இயல்பு. (not a mood an attidue). என் கவிதை ந்ன்றாக இருக்கிறது என்று நீ சொல்லுவது எனக்கும்
உவப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் கவிதையைப் பற்றிப் பேசுவதில் எனக்கு ஒரு பயம் இருக்கிறது. ஏனென்றால் கவிதையை வியாக்கியானம் செய்யும் அருஞ்சொற்கள்
என்னிடம் இல்லை' என்ற வாச்கங்கள் மட்டும் பதிந்திருக்கின்றன. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான நேர்காணல் தொகுப்பில் இதே கருத்தை கொலாட்கர்
சொல்லியிருந்தார்.
நாமும் கொலாட்கர்கர்போல தான் தோன்றித்தனமான கவிஞனாக ஆக முடியுமா? என்று அன்றிரவு முழுவதும் யோசித்துக்கொண்டிருந்தேன்.
@
நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் மாலை நேரம் . திருவனந்தபுரத்தில் நான் அப்போது வசித்து வந்த வீடு பத்மநாப சுவாமி ஆலயத்துக்கருகில் இருந்தது. கோவிலின் பின் வாசலையொட்டிய வழியில்தான் பெருமபாலும் என் பயணம். சமயங்களில் ஆல்யத்துக்கு முன்னாலிருக்கும் பத்மதீர்த்தக் குளத்தையொட்டிய வழியில் போக நேரும். அப்போதெல்லாம் ஒரு மூதாட்டி வழியை மறிப்பார். ஆலயத்துக்குள் அழைத்துச் செல்வதாக மற்ற சுற்றுலாப் பயணிகளிடம் இறைஞ்சுவதுபோலவே என்னிடமும் கெஞ்சுவார். மறுத்து நடக்கும் போதெல்லாம் கையைப் பற்றிக் கொள்வார். இப்படி ஓரிரு முறைகள் நடந்திருக்கின்றன. அந்த மூதாட்டி கையை பற்றும்போதெல்லாம் அந்தத் தொடுகை பழக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. இதற்கு முன்னரும் இதே போல ஆலய முற்றத்தில் யாரோ பற்றியிழுத்ததுபோல
உணர்ந்திருக்கிறேன்.
சில நாட்களுக்குப் பிறகு ஒரு காலை நேரத்தில் அந்த வழியாகக் கடந்து சென்றபோது குளக்கரை வேலிக்கருகில் ஒரு மூட்டை கிடந்தது. நடையை மட்டுப்படுத்திப் பார்த்தேன். மூட்டையல்ல. சடலம். 'ரெண்டு ச்க்கரம் கொடு' என்று இறைஞ்சி அலைந்து கொண்டிருந்த அந்த மூதாட்டியின் சடலம். அந்த நொடியில் யாரோ என் கையைப் பிடித்திழுப்பதுபோல உணர்ந்தேன். கூடவே அந்த மூதாட்டி தொட்டபோதெல்லாம் யாரோ தொட்டதாகத் தோன்றியதன் காரணமும் விளங்கியது. அது ஜெஜூரியில் வாசித்த கிழவியின் தொடுகை. கொலாட்கர் பார்த்த கிழவியை நான் பார்த்த்தில்லை. நான் பார்த்த கிழவியை அவரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.இருந்தும் கவிதையின் கை எல்லாரையும் தொடக்கூடியதுதானோ?
@
செவ்வாய், 2 மார்ச், 2010
தடாகத்தின் காலண்டர்.
நான் ஒரு புனிதமான காயத்தில் வசிக்கிறேன்
நான் கற்பனை மூதாதையர்களில் வசிக்கிறேன்
நான் ஒரு புலப்படாத ஆசியில் வசிக்கிறேன்
நான் ஒரு நீண்ட மௌனத்தில் வசிக்கிறேன்
நான் தீர்க்க முடியாத தாகத்தில் வசிக்கிறேன்
நான் ஓராயிர வருடப் பயணத்தில் வசிக்கிறேன்
நான் முந்நூறாண்டுப் போரில் வசிக்கிறேன்
மின் விளக்குக்கும் புல்புல் பறவைக்கும் இடையில்
கைவிடப்பட்ட இனத்தில் நான் வசிக்கிறேன்
நான் எவராலும் கையகப்படுத்தப்படாத வெளியில் வசிக்கிறேன்
ஒரு கருங்கல்லின் நாளத்தில் அல்ல;
ஆனால் எல்லா மசூதிகளையும் எரித்துச் சாம்பலாக்கும் முழுவேகத்தில்
ஓடும் எரிமலைக் குழம்பில் உயரும் அலைகளில்
நான் வசிக்கிறேன்
சொர்க்கத்தின் அபத்தமாகப் பழுதுபார்க்கப்பட்ட வடிவத்தின்
- நரகத்தைவிடப் படுமோசம் அது -
இந்த அவதாரத்தில் மிக நேர்த்தியாகப் பொருத்திக் கொள்கிறேன்
அவ்வப்போது நான்
என்னுடைய காயங்கள் ஒவ்வொன்றிலும் வசிக்கிறேன்
என்னுடைய இருப்பிடத்தை நான் மாற்றும் ஒவ்வொரு நிமிடமும்
ஏதோ அமைதி என்னை அச்சுறுத்துகிறது.
எனது நன்னீர் அகங்களை உறிஞ்சியெடுத்து
சிதறுண்ட உலகங்களின் புழுதியைத்தவிர
வேறு எதையும் மிச்சம் வைக்காத
அமில நெருப்புச் சுழலும் எரிமலையில்
எனது சொற்த் துண்டங்களுடனும் மர்ம உலோகங்களுடனும் வசிக்கிறேன்.
அப்படியாக
ஒரு விரிந்த சிந்தனையில் நான் வசிக்கிறேன்
எனினும் பெரும்பான்மையான தருணங்களில்
எனது கருத்துக்களில் சின்னதாகச் சுருங்கிப் போகிறேன்
அல்லது
தொடக்க வார்த்தைகள் மட்டும் துலங்க
மற்றவை மறக்கப்பட்ட
ஒரு மந்திர சூத்திரத்தில் வசிக்கிறேன்
நான் பனிக்குழைவில் வசிக்கிறேன்
நான் உருகும் பனியில் வசிக்கிறேன்
நான் பேரழிவின் முகத்தில் வசிக்கிறேன்
நான் பெரும்பான்மையான தருணங்களில்
பால்மடியின் தோல் விளிம்பில் வசிக்கிறேன்
நான் காக்டசீசின் ஒளிவட்டத்தில் வசிக்கிறேன்
பெரும்பாலும் யாரும் சீண்டாத ஆர்கோன் மரத்தின்
முலைக்காம்புகளை இழுக்கும் ஆடுகளின் மந்தையில்
நான் வசிக்கிறேன்.
உங்களிடம் உண்மையைச் சொல்கிறேன் -
நீண்ட காலமாக எனது முகவரி
உச்சியிலா அல்லது ஆழத்திலா
எனக்கே தெரியாது.
நான் ஆக்டோபஸ் துளையில் வசிக்கிறேன்
நான் ஆக்டோபஸ் துளையில் வசித்தபடி ஆக்டோபசுடன் போராடுகிறேன்.
சகோதரா,
ஒட்டுண்ணித் தாவரங்கள் போலவோ அல்லது
சுருண்டு திரளும் தாவரங்கள்போலவோ என்னைக் கிடத்தி விடு.
எந்த அலை புரட்டினாலும் எந்த வெயில் அறைந்தாலும்
எந்தக் காற்று மோதினாலும்
எனது வெறுமை வட்டத்துக்குள்ளிருக்கும் சிற்பத்துக்கு
எல்லாம் ஒன்றுதான்.
சூழலின் அழுத்தமோ அல்லது
வரலாற்றின் அழுத்தமோ எதுவாயினும்
அது என் சொற்களை மதிப்புள்ளதாக்குகிறது,
எனது நிலையை அளவிட முடியாததாக்குகிறது.
@
அய்மே செஸய்ர்
சொல்லுக்குள் பாயும் எரிமலைக் குழம்பு
அய்மே செஸய்ர் 2008 ஏப்ரல் மாதம் காலமானார். என்னைப் புதுப்பித்துக்கொள்ளும் நோக்கத்துடன் அவ்வப்போது நான் வாசிக்கும் கவிஞர்களில் ஒருவரல்ல செஸய்ர். எனினும் அவரது பெயரும் ஓரிரு கவிதை வரிகளும் நிரந்தர கவனத்தில் இருப்பவை. மறைவுக்கு சில மாதங்களுக்கு முன்னர்தாம் செஸய்ரின் பெயரைக் குறிப்பிட்டு இந்தியாவுக்கு வந்திருந்த அலெய்ன் மபான்கு என்ற பிரெஞ்சுக் கவிஞரிடம் விசாரித்திருந்தேன். அலெய்னுடனான சந்திப்புக்குபிரெஞ்சுக் கலாச்சாரமையமான அலியான்ஸ் பிரான்சேயின் திருவனந்தபுரம் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. அலெய்ன் பிரெஞ்சுக் காலனியாக இருந்த காங்கோவைச் சேர்ந்தவர். அவரது தாய்மொழிக்கு எழுத்து வடிவம் இல்லையென்பதால் பிரெஞ்சு மொழியில் எழுதுபவர்.
செஸய்ர் பற்றிக் குறிப்பிட்டபோது அலெய்ன் இரண்டு செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். அவை செஸய்ர் பற்றிய புதிய தலைமுறைக் கவிஞர்களின் பொதுக் கருத்தாக இருக்கக் கூடுமென்று தோன்றியது. செஸய்ரிடமிருந்து புதியகவிஞர்கள் விலகும் புள்ளியாகவும் தோன்றியது. அவர் சொன்னார். '' செஸய்ர் எங்களுடைய முன்னோடிகளில் ஒருவர். அவருக்கும் எனக்கும் இருக்கும் ஒற்றுமை இரண்டு பேரும் பிரெஞ்சு மொழியில் எழுதுகிறோம்.வேற்றுமை - அவர் தன்னை இன்னும் நீக்ரோவியக் கவிஞனாகக் கருதுகிறார். நான் என்னைப் பிரெஞ்சுக் கவிஞனாகவே நினைக்கிறேன். இதிலிருக்கும் அரசியல் இயல்பை நீங்கள் புரிந்து கொள்ள முடியுமென்று நம்புகிறேன். செஸய்ரின் தலைமுறை தங்களை தனிப்பட்ட தேசிய இனமாகக் கருதியது.நாங்கள் பிரெஞ்சு இலக்கிய மரபின் புதிய கிளையாகக் கருதுகிறோம்.அந்தத் தலைமு¨றையின் அடையாளம் நீக்ரோவியம். எங்கள் அடையாளம் பிரெஞ்சுப் பொதுமரபைச் சார்ந்தது. பொது மரபுக்குள் நீக்ரோவியமும் நிலைபெற்றிருக்கும் போக்கு எங்களுடையது''.
அலெய்ன் எளிமையாகச் சொன்னாலும் ஓர் பூர்வகுடி மரபு பொதுமரபாக ஏற்றுக் கொள்ளப் படக் கூடிய சூழல் உருவாவதற்கான போராட்டம் பற்றி ஓரளவு ஊகிக்க முடிந்தது. அதில் அய்மே செஸய்ரின் பங்கு கணிசம் என்பதையும் காண முடிந்தது.அதை உறுதிப் படுத்துகிற வகையில் பிரான்ஸ் ஃபானனின் மேற்கோள் ஒன்றையும் பொருத்தமாகக் குறிப்பிட்டார் அலெய்ன். ''செஸ்ய்ருக்கு முன்பு மேற்கிந்திய இலக்கியம் ஐரோப்பிய இலக்கியமாக இருந்தது''.
@
கரீபியத் தீவுக் கூட்டங்களில் ஒன்றான மார்ட்டினிக்கில் பிறந்தார் அய்மே செஸய்ர் (1913). தந்தை அரசு ஊழியர். தாய் தையல் தொழிலாளி. செஸய்ரின் இளமைப் பருவம் கொடும் தரித்திரத்தில் கழிந்தது.பதினெட்டாவது வயதில் கல்விக்கான உதவித் தொகை பெற்று பாரீசுக்கு வந்தார். செனகல் நாட்டிலிருந்து வந்த லியோபால்ட் செதோர் செங்கோர், பிரெஞ்சு கயானாவிலிருந்து வந்த லியான் தமாஸ் இருவரும் நண்பர்களானார்கள். மூன்று நண்பர்களும் இணைந்து ஓர் இலக்கியப் பத்திரிகையைத் தொடங்கினார்கள்.'கறுப்பு மாணவன்' என்று பெயர். அந்தப் பெயர் அவர்களின் சொந்த அடையாளமாகவும் எதிர்ப்பின்
சின்னமாகவும் இருந்தது. பத்திரிகையின் மூன்றாம் இதழில் அய்மே செஸய்ர் 'நீக்ரோவியம் என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார்.கறுப்பின மக்களின் இலக்கிய பண்பாட்டுப் பிரகடனமாக இருந்தது அது. பிரெஞ்சுக் காலனியாதிக்கத்துக்கும் அதன் பண்பாட்டுச் சுரண்டலுக்கும் எதிரான போக்காகவும் இருந்தது.அதன் வீச்சு பரவலாகி கருப்பினத்தவரான பல இலக்கியவாதிகளையும் ஒருங்கிணைத்தது. ஏற்கனவே கவிதைகள் எழுதிப் புகழ் பெற்றிருந்த செங்கோரின் படைப்புகள் புதிய கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளப்பட்டன. அமெரிக்க நீக்ரோக் கவிஞர்களான லாங்ஸ்டன் ஹியூஸ், ரிச்சார்ட் ரைட் ஆகியோரின் கவிதைகளும் நீக்ரோவியத்துக்கு வலுச் சேர்த்தன. ஃபிரான்ஸ் ஃபானனின் சிந்தனைகள் அதற்கு ஒரு கருத்தியல் தளத்தை உருவாக்கின.
செஸய்ரின் 'தாய்நாடு திரும்புதலின் குறிப்புகள்' என்ற நெடுங்கவிதை உலகக் கவிதைச் சூழலில் பெரிதும் விவாதிக்கப்பட்டது. தனது கரீபிய அனுபவங்களையேஅந்தக் கவிதையில் செஸய்ர் பேசியிருந்தார். ஒரு கறுப்புப் பெருமிதமும் சரியலிசக் கவிதை மொழியும் இழைந்து உருவானது அந்தப் படைப்பு. அன்று பிரான்சில் செல்வாக்குச் செலுத்திய சரியலிசப் போக்கை செஸய்ர் தன்னுடைய பிரத்தியேகக் கண்ணோட்டத்தில் பயன்படுத்தியிருந்தார். அதற்கு அவருக்குத் தூண்டுதலாக இருந்தவர் சர் ரியலிசத்தின் முன்னோடியாகக் கருதப்பட்ட அந்திரே பிரதான்.'இந்த காலகட்டத்தின் ஆகச் சிறந்த தன்னுணர்வுக் கவிதை'என்று பாராட்டவும் செய்தார்.
செசய்ரின் கவிதையில் இடம்பெறும் சர்ரியலிசக் கூறுகளைக் குறித்து பெரும் விவாதங்கள் நடந்திருக்கின்றன. நண்பரான செங்கோர் கடும் கண்டனங்களை எழுப்பினார். பூர்வகுடிகளின் வாழ்க்கை உணர்ச்சிகரமானது, அதை அலசல் முரையில் முன்வைப்பதை விட உணர்வு பூர்வமாக வெளிப்படுத்துவதுதான் பொருத்தம் என்பது செங்கோரின் வாதம். கறுப்பனின் பண்பாட்டுச் சாரத்தைக் கண்டு [பிடிக்க வெள்ளையனின் உத்திகளைப் பயன்படுத்துவது அபத்தம் என்றும் கூறப்பட்டது. சர் ரியலிசம் என்ற ஐரோப்பியக் கவிதை இயக்கத்தை ஒரு கருப்பர் திருடி அதற்கு எதிராகப் பயன்படுத்தினார்' என்று குறிப்பிட்டார் சார்த்தர் .ஆனால்
இந்த வாதங்களை முறியடித்து காத்திரமான ஓர் இலக்கிய பண்பாட்டுப் போக்காக நீக்ரோவியம் நிலைபெற்றது.
வெள்ளை நிறத்தவரின் இலக்கியப் பண்பாட்டுச் செயல்பாடுகளே சிலாகிக்கத்தகுந்தவை என்ற கருத்து நிலவிய சூழலில் ஆப்பிரிக்க கறுப்பினத்தின் பண்பாட்டுக் கூறுகளை முன்னிருத்தினார் செஸய்ர். ஆப்பிரிக்க இனம், அதன் கிளைக்கள் ஆகியவற்றின் படைப்பாற்றலை உலகின் முன் வைத்ததில் செஸய்ர் முதன்மையான பங்காற்றினார். ஆனால் அவரது கவிதைகள் சொந்த இனமான கரீபிய இனத்தின் அடையாளங்களையே பெரிதும் கொண்டிருந்தன. குறிப்பாக அவர் பிறந்து வளர்ந்த மார்டினிக் பிரதேசம் அவரது கவிதைகளின் தீராப் பொருளாக இருந்தது. ஓர் இனத்தின் அடிமைத் துயர், எதிர்ப்பு, போராட்டம், விடுதலைக் கனவு, உயிரினங்கள் என்று பலவும் அவரது கவிதை இயலை நிர்ணயித்தன.
@
கவிஞன் என்பதோடு அரசியல் செயல்பாட்டாளராகவும் இருந்தார் செஸய்ர். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்டு மார்டினிக் பிரதேசத்தின் பிரதிநிதியாக தேசிய அவையில் இடம் பெற்றார். இரண்டாம் உலகப் போரையொட்டிய காலத்தைச் சேர்ந்த எல்லா அறிவுஜீவிகளையும்போல அவரும் சோவியத் யூனியன் மீது காதல் கொண்டிருந்தார். மானுட முன்னேற்றத்தின் இலட்சிய பூமியாக அதைக் கண்டிருந்தார்.
1956 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் ஹங்கேரியை ஆக்கிரமித்தது. செஸய்ரின் கனவு சிதைந்தது. கட்சியிலிருந்து வெளியேறினார். எனினும் அவரது அரசியல் ஈடுபாடு குறையவில்லை. செயலாற்றலும் குன்றவில்லை. தன்னுடைய கட்சியை உருவாக்கினார், இடதுசாரிக் கண்ணோட்டமுள்ள செயல்பாட்டாளராகத் தொடர்ந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அய்மே செஸய்ர் ஐரோப்பிய ஊடகங்களில் அதிகம் குறிப்பிடப்பட்ட நபராக இருந்தார். பிரான்சின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப் படும் சாத்தியங் களுடனிருந்த நிக்கொலஸ் சர்கோசியை சந்திக்க மறுத்தார் என்ற முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக இருந்தது..காலனியாதிக்க நாட்களில் ஆப்பிரிக்க நாடுகளில் - குறிப்பாக வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பிரெஞ்சுக்காரர்கள் அந்த நாட்டு மக்களுக்கு 'நல்ல விதமாக' சேவை செய்தார்கள் என்று பாடப் புத்தகங்களில் திருத்தம் செய்யும்படிக் கேட்கும் ஆணைக்கு ஆதரவளித்திருந்தார் சர்கோசி. இந்தத் திருத்தல்வாதத்தை தீவிரமாக எதிர்த்த செஸய்ர்
சர்கோசியைச் சந்திக்க மறுத்தார். அப்போதைய பிரான்சு அதிபர் ழாக்கோ ஷிராக் அந்த ஆணையைத் திரும்பப் பெற்றார்.
கடந்த ஏப்ரல் பதினேழாம் தேதி இதய நோய் முற்றிய நிலையில் அய்மே செஸய்ர் காலமானார். அரசு மரியாதைகளுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.அப்போது கூடியிருந்தவர்களிடையே பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசியும் இருந்தார். ஆனால் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அவர் பேசவில்லை.செஸய்ரின் கீழ் நீண்ட காலம் துணை மேயராக இருந்த பியர் அலிகெர் உரையாற்றினார்.
@
அய்மே செஸ்ய்ரின் பெரும்பான்மையான கவிதைகளில் அவரது சொந்த மண்ணான மார்டினிக்கின் நிலக்காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 'சொர்க்கத்துக்கு இணையானது எங்களுடைய நிலம்' என்று அவர் குறிப்பிட்டுமிருக்கிறார். அதிலுள்ள பெலே எரிமலையைப் பல கவிதைகளிலும் விவரித்திருக்கிறார்.தானும் அந்த எரிமலையும் ஒன்று என்றும் ஒப்பிட்டிருக்கிறார்:
'சாதுவானது பெலெ. நானும் அப்படித்தான்.
அதற்குள் வெம்மையான எரிமலைக் குழம்பு
எனக்குள்ளே வார்த்தைகள்.'
@
துணை நூல்கள்:
1.The Vintage Book Of Contemporary Poetry - Ed. J D Mc Clatchy Vintage Books 1996
2. Aime Cesaire The Collected Poetry - University of California Press 1983
வார்த்தை இதழில் வெளியானது.
புதன், 24 பிப்ரவரி, 2010
திங்கள், 22 பிப்ரவரி, 2010
உ ன து பா த ங் க ள்
உன் முகத்தைப் பார்க்க முடியாதபோது
உன் பாதங்களைப் பார்க்கிறேன்.
வளைந்த எலும்பாலானவை உன் பாதங்கள்,
திடமான சின்னப் பாதங்கள்.
அவையே உன்னைத் தாங்குகின்றனவென்றும்
உனது இனிய பாரம்
அவற்றின் மேல்தான் உயர்கிறதென்றும்
எனக்குத் தெரியும்.
உன் இடை, உன் மார்பகங்கள்,
உன் முலைக்காம்புகளின் இரட்டைச் சிவப்பு,
சற்றுமுன் பறந்துபோன
உன் கண்களின் கூடுகள்,
உன் விரிந்த கனி வாய்,
உன் செந்நி¢ற முடிச்சுருள்.
ஆனால்,
நான் உன் பாதங்களைக் காதலிக்கிறேன்.
ஏனெனில்,
அவை பூமியிலும் காற்றிலும்
நீரிலும் நடந்தன-
என்னைக் கண்டடையும்வரை.
பாப்லோ நெரூதா
தற்காலக் கவிதை - சில கேள்விகள், சில சித்திரங்கள்
சமீபத்திய வருடங்களின் கவிதைப் பெருக்கத்தை யோசிக்கும்போதெல்லாம் திருச்சூர் பூரக் காட்சியும் மனதில் திரையீடாகும்.
இருபுறமும் யானைகள். அவற்றின் முதுகுகளில் முதுகு ஒன்றுக்கு இருவராக வண்ணக்
குடைகளும் வெண்சாமரங்களும் பிடித்த மனிதர்கள். யானைகளுக்குக் கட்டியிருக்கும் பொன்முலாம் பூசிய பட்டங்கள் வெயிலில் மின்னுகின்றன. அந்த மினுக்கத்தால் வெயில் இன்னும் அதிகமாகப் பிரகாசிக்கிறது. யானைகளின் நேருக்கு நேரான வரிசைக்கு பின்னால் பல வண்ண மக்கள் திரள். முன்னால் வெவ்வேறு வாத்தியக் கருவிகளுடன் ஏறத்தாழ இருநூறு கலைஞர்கள்.வெவ்வேறு வாத்தியங்களிலிருந்து அவர்கள் வாசித்து எழுப்பும் வெவ்வேறு தாள ஒலிகள் ஒரே உயிரின் லயமாகக் கேட்கின்றன. சீரான ஒத்திசைவில் கலைஞர்களின் உடல்கள் இயங்குகின்றன. மக்கள் திரளின் பல்லாயிரம் கைகள் தாளத்துக்கு ஏற்ப உயர்ந்தும் தாழ்ந்தும் அசைகின்றன. உலகின் மிகப் பெரிய தாளவாத்தியக் கச்சேரியான பூரம் பஞ்சவாத்தியத்தின் உச்ச கட்டம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. முத்தாய்ப்பான அந்த கட்டத்தில் எல்லா வாத்தியக் கருவிகளும் இயங்குகின்றன. ஒலியளவு செவியை அதிரச் செய்வதாகிறது.பிரதான மேளக்காரர்களில் ஒருவர் அத்தனைப் பரபரப்புக்கும் அத்தனை விமரிசைகளுக்கும் நடுவில் சக கலைஞரோடு உரையாடிக்கொண்டிருக்கிறார். அவரும் வாத்தியத்தைக் கொட்டியபடியே அதைக் கேட்டு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். இருவரும் முகம் மலரச் சிரித்துக் கொள்கிறார்கள். ஒரு பெரும் நிகழ்வுக்குள் நடந்த இந்தக் குறுஞ்செயல் கவனத்தில் சாசுவதமாகத் தங்கிவிட்டது.
தமிழ்க் கவிதை பற்றிய சிந்தனையின்போது தவிர்க்க இயலாமல் இந்தக் கேரளச் சித்திரம் வந்து படரும். இதற்கு தர்க்கரீதியான பொருத்தம் இருக்கிறதா என்று சந்தேகம் எழும். எனினும் ஏதோ ஓர் ஒற்றுமையை மனம் இனங் கண்டிருக்கிறது. இன்றைய கவிதைப் பெருக்கமும் அதன் செயல்களும் விவரித்த காட்சியுடன் ஒப்பிடக் கூடிய ஒன்றாகவும் தோன்றியிருக்கிறது. நூற்றுக் கணக்கான கவிஞர்கள் இருக்கிறார்கள். கவிஞர்கள் பரஸ்பரம் உரையாடிக் கொள்கிறார்கள். வெவ்வேறு கவிதைகளின் தனிக் குரல்கள் ஒன்று கலந்து ஒரே மொழியின் துடிப்பாகின்றன. இவை எல்லாம் ஒற்றுமைகள். வேற்றுமையும் இருக்கிறது. வாத்தியக் கலைஞர்களின் வாசிப்புக்கு எதிர்வினையாற்றும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். கவிதைக்கு வாசகர்கள் குறைவு. அல்லது இல்லவே இல்லை. கவிதை எழுதுபவர்கள், அதை வாசிப்பவர்கள் இருவரும் ஒரே பிரிவினராக இருக்கிறார்கள். புதிய நூற்றாண்டின் கவிதைகள் பற்றி யோசிக்கும்போது எழும் முதல் சித்திரம் இது.
@
நவீனத் தமிழ்க் கவிதை வெவ்வேறு கட்டங்களில் பெரும் அலை வீச்சாக எழுந்திருக்கிறது. 'எழுத்து' பத்திரிகையின் வாயிலாக உருவான அறிமுக அலை. எழுபதுகளில் திரண்டு எண்பதுகளில் வீச்சடைந்த அங்கீகாரம். இவற்றை விடத் தீவிரமாகவும் பரவலாகவும் கவிதை எழுந்தது தொண்ணூறுகளிலும் அதன் முத்தாய்ப்பாகப் புதிய நூற்றாண்டிலும்.
முந்தைய இரு காலப் பகுதிகளை ஒப்பிட்டும்போது மிக அளவில் கவிதைகளும் கவிஞர்களும் அறிமுகமாயிருப்பது கடந்த பத்தாண்டுகளுக்குள் என்று கருதுகிறேன். தொண்ணூறுகளுக்கு முன்புவரையிலான கவிதைகளை வகைப் படுத்துவது எளிதாக இருந்தது. அபத்தமான பிரிவினை என்றாலும் அகவயமானவை, புறவயமானவை என்று பெரும்போக்காகச் சொல்லிவிட முடிந்தது. இன்று அது எளிதல்ல. புதிய கவிதைகளை வகைப் படுத்துவ தென்பது தவளைகளை தராசிலிட்டு நிறுப்பதுபோல விநோதமாக முடியும்.
கவிதைப் பெருக்கத்துக்கான முகாந்திரங்களைச் சற்று யோசித்துப் பார்க்கலாம். இவை ஒரு கவிதைப் பயிற்சியாளனின் பார்வையில் தென்படுபவை. விமர்சன அடிப்படைகள் வலுவாகக் கொண்டிராதவை. கவிதைக்காரனாக என்னுடைய அக்கறைகள் கவிதையின் பிறப்பிலும் வளர்ச்சியிலும் செயலிலும் ஊன்றியவை. அதன் பிறப்புச் சான்றிதழில் அல்ல.அந்தக் கணிப்புகள் விமர்சகன் செய்ய வேண்டியவை. துரதிருஷ்வசமாக இன்றைய கவிதைகளை நுட்பமாக உணர்ந்து அவற்றின் செழுமையையும் ஊனத்தையும் வரையறுத்துச் சொல்லும் விமர்சகன் இல்லை. இது புதிய கவிதைகள் பற்றிய சிந்தனையில் உருவாகும் இரண்டாவது சித்திரம்.
@
முந்தைய கவிதைகள் நகர்ப்புறக் கல்வி பெற்றவர்களின் பங்களிப்பாக இருந்தது. அதற்குப் பின்னர் ஒரு புதிய தலைமுறை கல்வியில் தேர்ந்து இலக்கியத்தில் செயல்பட ஆரம்பித்தது. அந்த எண்ணிக்கை இரண்டாயிரங்களில் அதிகம். கவிதை எழுதுவதும் எழுதிய கவிதையை இதழ்களில் வெளியிடுவதும் நூலாக அச்சியற்றுவதும் எளிதான செயலல்ல. கணிப்பொறியின் பயன்பாடு பரவலாக ஆன பின்னர் இதழ் வெளியீடுகளும் நூல் தயாரிப்பும் இலகுவாயின. அண்ணா மறைவையொட்டி முதல் கவிதை எழுதிய கலாப்ரியாவுக்கு கவனத்துக்குரிய தொகுப்பு வர பாரதி நூற்றாண்டு வரை கால அவகாசம் வேண்டியிருந்தது. இன்னொறையும் கருத்தில் கொள்ளலாம். அதுவரை எழுதப்பட்ட கவிதைகள் தளர்ச்சியான செய்யுள் தன்மையையும் பொருள் இறுக்கத்தையும் கொண்டிருந்தன. புதுக்கவிதை என்ற வடிவமே மரபான வடிவத்துக்கு எதிரான கலகம் என்று எண்ணுகிறேன். அது உரைநடையில்தான் புதிய உணர்வின் வெளிப்பாடாக நிலைபெறுகிறது. செய்யுளை விட உரைநடை அதிக ஜனநாயகத்தன்மை கொண்டது என்பதும்
அதிக எண்ணிக்கையில் கவிஞர்கள் உருவாகக் காரணமாக இருக்கலாம்.
மேற்சொன்னவை கவிதைக்கான புறத் தூண்டுதல்கள் மட்டுமே. கவிதையை நிர்ணயிக்கும் அகத் தூண்டுதல் வேறு. நடுத்தர வர்க்கப் படிப்பாளிகளிடமிருந்து முந்தைய கவிதைகள் உருவாயின. அவை அல்லாத கவிதைகள் அரசியல் பிரச்சாரத்துக்காக எழுதப்பட்டன. புதிய நூற்றாண்டின் கவிதை வேறொரு தளத்திலிருந்து உயிர்த்தெழுந்தது. கல்வியறிவின் வெளிச்சத்துடனும் தமது இருப்பு நிலை பற்றிய விழிப்புணர்வுடனும் அறிமுகமான புதிய தலைமுறை கவிதைக்குள் பிரவேசித்தது. அதுவரை சொல்லப்படாத வாழ்வின் பாடுகளைச் சொல்ல முற்பட்டது. அதுவரை பேசப்பட்டிருந்த கவிதை மொழியைப் புனரமைத்தது. அதுவரை முன்வைக்கப்படாத நிலக் காட்சிகளைத் தீட்டியது. அதுவரை வெளியரங்கமாகாத மனக் கோலங்களை படர விட்டது. இரண்டாயிரங்களின் கவிதையியலை இந்தப் புதிய தலைமுறை நிர்ணயித்தது. தனக்கு முன்னிருந்த கவிதைகளைப் புதிய கோணத்தில் பார்க்கவும் தனக்கு முன்பு கவிதையில் ஈடுபட்டவர்கள் தம்மைப் புதுப்பித்துக் கொள்ளவும் வலியுறுத்தியது.
பல கிளைகள் கொண்டது இரண்டாயிரங்களில் கவிதைக்குள் நுழைந்த தலைமுறை.தலித்தியம். பெண்ணியம், சூழலியல், பின் நவீனத்துவம் என்று விவாத வசதிக்காக இவற்றை வகைப்படுத்தலாம். இவை முன்வைக்கும் கவிதையியலின் கூறுகள் தமிழ்க் கவிதைப் பரப்புக்குள் முன்னரே மங்கலாக இடம் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் தனது கவிதையியலுக்குள் பயிலாத ஒன்றை - அது வடிவமோ, கருத்தாக்கமோ எதுவானாலும் ஒரு மொழி ஏற்றுக் கொள்வது அரிதென்று தோன்றுகிறது. காரணம், மொழி கலாச்சாரத்தின் கொள்கலம். சானட் போன்ற ஆங்கிலக் கவிதை வடிவங்களையும் அந்நியப் பழக்க மரபுகளையும் தமிழ்க் கவிதை புறந்தள்ளக் காரணம் இதுதான். ஒரு நீக்ரோவின் உணர்வை நமது கவிதையியல் துலக்கமாக வெளிப்படுத்த இயலாது. ஆனால் பள்ளர்களின் வாழ்க்கையையும் நந்தனின் பதற்றத்தையும் உணரக் கூடிய சுரணையுள்ள மொழி அதை ஏற்று விரிவாக்கும். கடவுளின் விரிமார்பில் சேரத் தவிக்கும் தடமுலைகளைப் பேசக் குரல்கொடுக்கும் மொழி பெண்ணின் இருப்பை மதிக்கும். காமத்தையும் உடலெழுத்தையும் அங்கீகரிக்கும். இயற்கையை ஆராதிக்கும் கவிதையியல் சுற்றுச் சூழல் அக்கறைகளுக்கு வழி கோலும். கவிதையியலின் கலாச்சார இயல்பு இது என்று வரையறுக்கலாம். எனினும் கவிதை எப்போதும் மாமூல் கருத்தாடல்களுக்கு எதிரானது. அது அதிகம் வெளிப்பட்டது தற்காலத்தில் என்று பெருமிதப்படலாம். இந்த எதிர்க் குணமேகவிதையின் பெருக்கத்துக்குக் காரணியாக இருக்குமா? மூன்றாவது சித்திரத்தை மிளிரச் செய்யும் கேள்வி இது.
@
இந்தக் கிளைகள் ஒரு புறம். கூடவே எழுபது ஆண்டுக் காலமாக உருவாகி வளர்ந்த புதுக் கவிதையின் முதன்மைப் போக்கிலுள்ள கவிதைகளும் இரண்டாயிரங்களில் மாற்றமடைந்தன. நவீனத்துவம் என்ற அடையாளத்திலிருந்து விலக்கிப் பின் - நவீனத்துவம் என்ற அடையாளத்துடன் விவாதிக்கப்படுகின்றன.இந்த அடையாளம் மேம்போக்கானது என்று கருதுகிறேன். தவிர இன்றைய உலகமயமாக்கலின் செல்லக் கருத்தாகவும் இந்த அடையாளம் மாறிவிட்டது. தொலைபேசியைப் பயன்படுத்துவது நவீனத்துவம்.கைத்தொலை பேசி உபயோகிப்பது பின் நவீனத்துவம்.
உண்மையில் கவிதையின் நிரந்தரமான கோரிக்கை நவீனமாக - புதுமையாக - இருப்பது.எந்தக் கருத்தாக்கத்தையும் கேள்விக்குட்படுத்துவது, படிமம்போன்ற முந்தைய கவிதை அணிகளைத் துறப்பது, உரைநடைத்தன்மையிலேயே கவிதையை எழுதுவது, கடவுள் - சாத்தான் என்ற எதிரீடுகளில் இருவரையும் ஒன்றாக்குவது, மதிப்பீடுகளைக் கலைத்துப் போடுவது என்று பின் நவீனக் கவிதைக்குச் சொல்லப்படும் இலக்கணங்கள் எல்லாக் காலத்தையும் சேர்ந்த கவிதைக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது. நம் முன் இருக்கும் படைப்புகளைக் கணக்கில் கொள்ளாமல் உருவாக்கப்பட்ட கருத்தாடல் என்றும் படுகிறது. இதை ஒதுக்கிவைத்து விட்டு பின் நவீனத்துக்கு நம்மிடையே இருக்கும் படைப்புகளை முன்னிருத்தி மாற்றான வரையறைகளைக் கண்டடையலாம். இவை என் வாசிப்பிலிருந்து தொகுத்துக் கொண்ட வரையறைகள். இதன் மூலம் இன்றைய கவிதைகளை மேலும் விரிவான பின்புலத்தில் காண விரும்புகிறேன்.ஒவ்வொரு பதிற்றாண்டிலும் மொழி மாறுகிறது. இந்த மாற்றம் புனைகதைகளை அதிகம் பாதிப்பதில்லை. ஏனெனில் அதில் ஓர் அனுபவப் பதிவோ கதையாடலோநிகழ்கிறது. சரியாகச் சொன்னால் புனைகதை ஓர் அனுபவத்தை அதன் பின்னணித் தகவல்களுடன் வரலாறாக மாற்ற முனைகிறது. கவிதை ஓர் அனுபவத்தை காலத்தின் படிமமாக மாற்ற முற்படுகிறது. நிகழ்கால மொழியில் படிமமாக்கலை எந்தக் கவிதையியல் நிறைவேற்றுகிறதோ அதைப் பின் நவீனத்துவக் கவிதை என்று அழைக்க விரும்புகிறேன். இந்தப் படிமமாக்கலில் அதுவரை இருந்த தேய்வழக்குகள் உதறப்படுகின்றன. காட்சிகள் மாற்றமடைகின்றன. விலக்கப் பட்ட வாழ்க்கையின் பண்பாட்டுக் கூறுகள் கவிதையின் அலகுகளாகின்றன. பல தொனிகளில் வெளிப்படும் குரல்கள் கவிதை மொழியின் சாரமாகின்றன. குறிப்பாகக் கோட்பாடுகளின் உதாரணமாக அல்லாமல் மனித மனத்தின் - மனித இருப்பின் எல்லா கோணங்களையும் எந்தப் பார்வை சித்தரிக்க முனைகிறதோ அதைப் பின் நவீனத்துவக் கவிதை என்று சொல்ல விரும்புவேன். இதற்கான சான்றுகளை கவிதை மீது கவனமுள்ள வாசகரால் எளிதில் இனங்காண முடியும். இது தற்காலக் கவிதை எனக்குள் விரிக்கும் நான்காவது சித்திரம்.
@
ஈழக் கவிதைகளைக் குறிப்பிடாமல் தற்காலத் தமிழ்க் கவிதையின் சித்திரம் முழுமையடையாது. கடந்த மூன்று பதிற்றாண்டுகளாக ஈழத்துக் கவிதைகள் தமிழகக் கவிதைகளையும் தமிழகக் கவிதைகள் ஈழத்துக் கவிதைகளையும் பாதித்து வந்திருக்கின்றன. இரண்டு நிலைகளில் இந்தப் பாதிப்பு செயலாற் றியிருக்கிறது. ஒன்று: அரசியல் சார்ந்து. மற்றது: பெண்மொழி சார்ந்து.
ஈழத்துக் கவிதைகளின் செல்வாக்கில்லாமலிருக்குமானால் தற்காலக் கவிதையியலில் அரசியல் விவாதத்துக்கான தருணங்கள் இல்லாமலிருந்திருக்கும். நவீனத் தமிழ்க் கவிதை அரசியலை தீண்டத் தகாததாகவும் அரசியலை மையப்படுத்தி எழுதப்படும் கவிதைகளைப் பிரச்சாரக் கவிதைகள் என்றும் ஒதுக்கியே வைத்திருந்தன. அவசரநிலைக் காலம் பற்றி தமிழில் எழுதப்பட்ட சீரிய கவிதை ஒன்றே ஒன்று மட்டுந்தான் என்பது இந்த இலக்கிய விலக்கைப் புரியவைக்கும்.
போருக்குள் நிகழும் வாழ்வு பற்றிய ஈழத்துக் கவிதைகள்தாம் தமிழ்க் கவிதைக்குள் அரசியலுக்கான இடத்தை உறுதிப் படுத்தியது. பெண்நிலையில் வாழ்வை எதிர்கொள்ளும் பார்வைக்கும் ஈழத்துக் கவிதைகளிடம் கடன்பட்டிருக்கிறோம். 'சொல்லாத சேதிகள்' என்ற தொகுப்பு தமிழ்க் கவிதையியலில் உருவாக்கிய அதிர்வுகளின் பின் விளைவுகள் காத்திரமானவை.
இந்தப் பாதிப்புகளின் ஸ்தூல அடையாளங்களை தற்காலக் கவிதையில் எளிதில் காணலாம்.ஈழத் தமிழின் சொல் வழக்குகள் பலவும் எந்தத் தடையுமின்றி தமிழ்க் கவிதைகளில் பயன்படுத்தப்படுவதையும் மறு பக்கத்தில் தமிழ்க் கவிதைச் சொற்கள் ஈழக் கவிதையில் புகுந்திருப்பதையும் உணரலாம்.
@
கடந்த பதிற்றாண்டில் வெளியாகியிருப்பவற்றில் கவிதை நூல்களே கணிசமாக இருக்கும். இதழ்களில் வெளியாகும் கவிதைகளை விட மும்மடங்குக் கவிதைகள் இணையத்தில் வெளியாகின்றன. இந்தக் கவிதை வெளிப்பாட்டின் நோக்கங்களும் வெவ்வேறு. சிலருக்கு அது ஓர் அடையாள அட்டை. அதைப் புனைகதைக்கான ஒத்திகைச் சீட்டாகப் பயன்படுத்தலாம். திரைப் பிரவேசத்துக்கான கடவுச் சீட்டாகக் கொள்ளலாம். அரசியலில் எந்தப் பங்களிப்பும் செய்யாத ஒருவருக்கு கௌரவப் பதக்கமாகலாம். இலக்கியத்தில் அதிகாரம் செலுத்தக் கூடிய மாய நாற்காலியாகலாம். எதிர்பாலினரை வசீகரிக்கும் ஒப்பனையாகலாம். பாவம், தமிழ்க் கவிதை. இத்தனை நோக்கங்களுக்கும் அது ஈடு கொடுக்கிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளாக இப்படித்தான் ஈடுகொடுத்திருக்கிறது. சீட்டுக் கவியாக, ஆருடக் கருவியாக, பரிசல் இரக்கும் பாத்திரமாக, தற்பெருமையை அறைந்து சொல்லும் முரசாக, கடவுளின் பல்லக்காக என்று பலவிதமாக ஈடுகொடுத்த மரபில் அவற்றையெல்லாம் மீறி வாழ்வின் கணங்களை நிரந்தரப் படுத்தியும் மனதின் உள் ஆழங்களைத் திறந்து காட்டியும் மனித இருப்பின் சிக்கல்களை ஆராய்ந்தும் விரிந்த சுதந்திர வானத்துக்காக வேட்கைகொண்டும் கவிதை தொடர்ந்து உயிர்ப்புடன் இருந்து வருகிறது. தற்காலப் பெருக்கத்தில் அது எங்கே என்று கண்டடைவதுதான் இரண்டாயிரங்களின் வாசகனின் முன் நிற்கும் சவால்.
@
முதற் பத்தியில் இடம் பெற்ற பூரக் காட்சியில் வாத்தியக் கலைஞர்கள் இருவரும் பேசிக் கொள்வதுபோலத்தான் இரண்டு கவிஞர்கள் உரையாடிக் கொள்கிறார்களா? அல்லது கவிஞன் தன்னுடைய வாசகனிடம் உரை யாடுகிறானா? இந்தச் சித்திரம் இப்போது கேள்வியாகிறது.
நன்றி: ’காலச்சுவடு’ (இதழ் 121) ஜனவரி 2010.
சனி, 13 பிப்ரவரி, 2010
கவிதையில் மனித உறவுகள்
நண்பர்களே, 'இருபத்தியோராவது நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைச் செல்நெறிகள்’ என்ற பொதுத்தலைப்பு இந்தக் கருத்தரங்கத்துக்குக் கொடுக்கப் பட்டுள்ளது. எனக்கு அளிக்கப் பட்டிருக்கும் துணைத் தலைப்பு - கவிதையில் மனித உறவுகள். இந்தத் துணைத் தலைப்பை முன்மொழிந்தவர் ஒன்று வில்லங்கமானவராக இருக்க வேண்டும். அல்லது மிகவும் எச்சரிக்கையுணர்வு கொண்டவராக இருக்கவேண்டும். ஏனெனில் தலைப்பில் இரண்டுவித மன நிலைக்குமான கூறுகள் இருக்கின்றன.
கவிதை என்ற சொல் மூலம் குறிக்கப்படும் உணர்வுநிலை எவ்வளவு விரிவானதோ அதே அளவுக்கு மனித உறவுகள் என்ற சொற்சேர்க்கை வழியாகச் சுட்டப்படும் இயல்பும் விரிவானது. மனிதனுடன் தொடர்புடைய எதுவும் கவிதைக்கு விலக்கானதல்ல. அதேபோல, மனிதன்கொள்ளும் எந்த உறவும் கவிதைக்குப் புறம்பானதல்ல. கவிதை என்ற சொல்லுக்குள் ஒரு கடல் மறைந்திருக்கிறது.அதைப்போன்ற இன்னொரு கடல் மனித உறவுகள் என்ற சொற்சேர்க்கையில் ஒளிந்திருக்கிறது. இரண்டு கடல்களை ஒரு குப்பிக்குள் அடக்க வேண்டிய கட்டாயத்தைத் தலைப்பு கொண்டிருக்கிறது. இதை வில்லங்கம் என்று சொல்லாமலிருப்பது எப்படி?
கவிதைக்குப் பொருளாகும் மனித உறவுகளும் உறவுகளைப் பொருள்படுத்தும் கவிதை யாக்கமும் முற்றானவையல்ல.. மனித உறவை எந்த மிச்சமு மில்லாமல் கவிதை சித்தரித்து விட்டது என்று சொல்வதற்கோ மனிதன் கொள்ளும் எல்லா உறவுகளும் முழுமை யடைந்து விட்டன என்று அறிவிப்பதற்கோ ஒருபோதும் வாய்ப்பில்லை. அந்த வாய்ப்பு ஒருபோதும் வராது. எனினும், கவிதையும் உறவுகளும் அப்படியான நிறைவை நோக்கியே முன்னேறுகின்றன. இது ஓர் எச்சரிக்கை. எனக்கு அளிக்கப் பட்டிருக்கும் தலைப்பை இந்தக் கோணத்திலிருந்தே அணுகுகிறேன்.
சரியாகச் சொல்லப்போனால் இந்த இரண்டு எல்லைகளுக்குள் நிகழும் ஊஞ்சலாட்டம்தான் கவிதையாக்கம். வாழ்க்கையின் நிகழ்வுகளுக்கும் வாழ்க்கையை மதிப்பிடும் படைப்புச் செயல் பாட்டுக்கும் இடையில் நிகழும் ஊஞ்சலாட்டம். அது வேடிக்கையானது. அதேசமயம் எச்சரிக்கையானதும் கூட. இதையே ஒரு பகுப்பாக வைத்துக் கொண்டால் நவீனத் தமிழ்க் கவிதையையே வேடிக்கையானவை; எச்சரிக்கையானவை; இரண்டும் கலந்தவை என்று பிரித்து விடவும் முடியும்.
அண்மைக் காலமாக எழுதி வரும் கவிஞர்களில் சிலரை இந்தப் பகுப்புக்கு உட்படுத்திப் பார்க்கலாமென்று கருதுகிறேன். இசை, முகுந்த் நாகராஜன், சங்கர ராம சுப்ரமணியன் ஆகியோரின் கவிதைகளை வேடிக்கையானவை என்றும் குட்டி ரேவதி, சல்மா, சுகிர்தராணி போன்றோரின் கவிதைகளை எச்சரிக்கையானவை என்றும் யூமா வாசுகி, இளங்கோ கிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் முதலியோரின் கவிதைகளை வேடிக்கையும் எச்சரிக்கையும் கலந்தவை என்றும் சொல்ல விரும்புகிறேன். இதில் வேடிக்கை என்று நான் பயன்படுத்தும் சொல் மிக எச்சரிக்கையானது. எச்சரிக்கை என்று கையாளும் வார்த்தை வேடிக்கையானது.
கவிதை தொடர்பான விவாதங்களில் கவிதை என்றால் என்ன? என்ற புராதனமான கேள்வி எப்போதும் கேட்கப்படுவதுண்டு. அதற்கான நிலையான பதில் எதுவுமில்லை. அந்தந்தக் காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்பவோ கவிஞன் அல்லது திறனாய்வாளனின் மனப் பாங்குக்கு ஏற்பவோ இதற்கான பதில் முன்வைக்கப்படுவதும் உண்டு. இந்தத் தலைப்பை யொட்டி இன்னொரு தற் காலிகமான பதிலை முன்வைக்க விரும்புகிறேன். மனித உறவின் கலாச்சார முகங்களில் ஒன்று கவிதை.
முன்பே குறிப்பிட்டதுபோல மனித உறவுகள் என்ற சொற்சேர்க்கை விரிவானது. பறவை அதன் பறத்தலைப் பற்றிய எந்தத் தடயங்களையும் ஆகாயத்தில் விட்டு வைப்பதில்லை. மீன் அதன் நீந்தலின் சுவடுகளை நதியில் தேக்கி வைப்பதில்லை. ஆனால் மனித ஜீவனுக்கு அது போன்ற சுதந்திரம் இல்லை. அவன் இருந்த்தற்கும் வாழ்ந்ததற்குமான ஏராளமான அடையாளங்களை மண்ணில் பதித்துச் செல்ல வேண்டியிருக்கிறது. அவை தாம் உறவுகளை உருவாக்குகின்றன. இந்த உறவுகளின் ஆகத்தொகையே கலாச்சாரம் அல்லது பண்பாடு. மனிதன் தவிர்த்த பிற உயிரினங்களின் தேவை உயிரியல் சார்ந்தது. மனிதத் தேவைகளோ உயிரியலை மட்டும் சார்ந்தவையல்ல. அவன் உறவு கொள்ளும் எல்லாவற்றையும் சார்ந்தது. மனிதன் மனிதனோடு கொள்ளும் உறவு, மனிதன் இயற்கையோடு கொள்ளும் உறவு, மனிதன் காலத்தோடு கொள்ளும் உறவு, மனிதன் இடத்தோடு கொள்ளும் உறவு, மனிதன் கருத்துகளோடு கொள்ளும் உறவு, மனிதன் முந்தைய தலைமுறையோடு கொள்ளும் உறவு, மனிதன் கனவுகளோடு கொள்ளும் உறவு - என்று உறவின் நிலைகள் விரிவானவை. எண்ணற்ற கிளைகள் கொண்டவை. மனிதன் கொள்ளும் உறவுபோலவே அவன் கொள்ளும் உறவின்மையையும் உறவில் நேரும் முரண்களையும் பகைகளையும் கூட உறவின் கூறாகவே இலக்கியம் கருதுகிறது.
அப்படிக் கருதுவதனாலேயே இலக்கியம் உருவாகிறது. கவிதை உருவாகிறது. கலைகள் உருவாகின்றன. இது எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் பண்பாட்டுச் செயல்பாடு. ஆனால் இந்தச் செயல்பாடு காலத்தையொட்டியும் மனிதன் உருவாக்கும் சமூகச் சூழலையொட்டியும் மாற்றமடைகின்றன. அதற்கு இருபத்தியோராம் நூற்றாண்டு உட்பட எந்தக் காலமும் விலக்கல்ல. இன்றைய கவிதை உட்பட எந்தக் கவிதையும் விலக்கல்ல.
காலமும் சமூகமும் வாழ்நிலைகளும் தொடர்ந்து மாற்றம் பெற்று வருகின்றன. அதை யொட்டி இலக்கியமும் குறிப்பாகக் கவிதையும் மாற்றம் பெறுகின்றன. அதில் இடம் பெறும் உறவுகளும் மாற்றத்துக்குள்ளாகின்றன.
ஓர் எடுத்துக்காட்டாகக் காதல் பற்றிய கவிதையைப் பார்க்கலாம். காலங் காலமாகக் கவிதை கொண்டாடி வரும் ஓர் உறவு - காதல். சங்க காலம் முதல் இன்றுவரை கவிதையின் ஊற்றாக இருக்கும் இந்த உறவு ஒரே அர்த்தத்தில் பேசப் படுவதில்லை. 'காதல் வசப்பட்டவர்கள், குதிரைமீது ஏறிக்கொள்வதைப்போலப் பனை மடல் மீது ஏறிக்கொள்வார்கள். எருக்கம் பூவைச் சூடிக்கொள்வார்கள். பிறர் சிரித்தாலும் மதிக்க மாட்டார்கள்' என்று ஓர் ஆணின் காதல் மனதை 'குறுந்தொகை'ப் பாடல் சிலாகிக்கிறது. அது நாமறியாத ஒரு நூற்றாண்டின் போக்கு.'பங்கமொன்றில்லாமல் முகம் பார்த்திருந்தால் போதும்' என்று பாரதியின் ஆண் திருப்தியடைந்து விடுகிறான். இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் மனநிலை. இருபதாம் நூற்றாண்டு நகர்ப்புறக் காதலனின் மனநிலையை ஞானக்கூத்தன் கவிதையொன்று சொல்கிறது.
'கதைகேட்கப் போய்விடுவாள் அம்மா.மாடிக்
கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா.சன்னத்
தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத் தம்பி
தூங்கி விடும். சிறுபொழுது தாத்தாவுக்கு
விசிறியதும் அவரோடு வீடு தூங்கும்.
பூக்களெல்லாம் மலர்ந்தோய்ந்த இரவில் மெல்லக்
கட்டவிழும் கொல்லையிலே பவழமல்லி.
கதைமுடிந்து தாய்திரும்பும் வேளைமட்டும்
தெருப்படியில் முழுநிலவில் அந்த நேரத்
தனிமையிலே என்நினைப்புத் தோன்றுமோடி? '
இதற்கு முற்றிலும் வேறானது இன்றைய காதலனின் மனவோட்டம். தேவதேவன் கவிதை அதை இப்படிச் சொல்கிறது.
'கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்.
ஒரு காப்பி சாப்பிடலாம் வா'.
தேவதேவன் அறிமுகப்படுத்தும் காதலன் பயந்தாங்குளியாகவோ கூச்ச சுபாவியாகவோ இருக்கலாமோ என்னமோ?
ஆனால் பெண்கள் காதல் உறவில் வெளிப்படையானவர்களாக மாறி யிருக்கிறார்கள். சுகந்தி சுப்ரமணியனின் ஒரு கவிதையில் வீட்டை விட்டு வெளியே எங்கும் அழைத்துச் செல்லாத காதலன் அல்லது கணவன் மீதான புகார் ஒலிக்கிறது. அந்த மனநிலையை இன்றைய உறவு பற்றிய கருத்தாக்கங்கள் புரட்டிப் போட்டிருக்கின்றன.காதல் என்ற உணர்வே ஒப்புக்குச் சொல்லப்படுவது.அதன் உண்மையான பொருள் காமம் சார்ந்தது. காதல் பெண்ணை வழிபடுகிற ஆணாதிக்கத் தந்திரம். அவளது உடலிருப்பைக் கண்டு கொள்ளா மலிருக்கிற பாராமுகம். இதை மறுக்கிற குரலில் உறவின் புதிய பொருளை குட்டி ரேவதியின் கவிதை சொல்கிறது.
'வருடிப் பார்த்திருக்கிறாயா என் காமத்தை/
ஒரு புதிய காகிதத்தில் எழுத விரும்புவதைப்போலவோ
அல்லது ஒரு குழந்தையின் விரல்களைப் பற்றும் ஆர்வத்துடனோ? '
என்று கேட்கிறது. இந்த மனநிலையும் உறவுப் பரிமாணமும் இருபத்தியோராம் நூற்றாண்டின் கருத்தாக்கம் என்றே கருதுகிறேன்.
உறவுகளின் மீது ஒட்டப்பட்டிருந்த புனிதச் சீட்டுகளை புதிய கவிதைகள் சுரண்டி எறிந்திருக்கின்றன. தாய்மையைப் பற்றிய கருதுகோள்கள் கேள்விக்குள்ளாக்கப் பட்டிருக்கின்றன. தாய்மை என்பது இயற்கையான நல்லியல்பு,தாய் மீதான பாசம் பிள்ளைக் கடன் என்ற கருத்துக்களை இன்¨றைய கவிதைகள் நொறுங்கிவிழச் செய்திருக்கின்றன. என்.டி.ராஜ் குமாரின் இந்தக் கவிதையை அதற்கு எடுத்துக் காட்டாகச் சொல்ல விரும்புகிறேன்.'
பற்றி எரிகிற தீயை அணைக்கிற மனவியே,
சூசகமாய் ஒரு வார்த்தை சொல்/
சோற்றில் விஷம் வைத்து அம்மாவைக் கொன்று விடுகிறேன்'
என்று அதிர்ச்சியூட்டுகிறது கவிதை. இந்த அதிர்ச்சிக்குக்காரணம் உறவுகள் மீதான பூச்சுக்களைக் களைந்து விட்டு கவிதை எதார்த்தத்தை முன்வைக்க விரும்புவதுதான். இது தாயை மட்டுமல்லதாய்மையின் சந்தனக் காப்புச் சார்த்திய எல்லா விக்கிரகங்களின் மீதான கற்பனைகளையும் பெயர்ப்பதுதான்.
இதுவரை சொன்னவை வரையறுக்கப்பட்ட உறவுகளை முன்னிருத்திப் பேசப்பட்டவை. மனிதன் தானாகத் தேர்ந்தெடுத்துகொள்ளும் உறவுகளின் சுதந்திரத்தையும் சுதந்திரமின்மைகளையும் நவீனக் கவிதைகள் முன்வைக்கின்றன. தொண்ணூறுகளில் எழுதப்பட்ட சமயவேலின் 'சந்தி' என்ற கவிதை இது.
'நான் உன் கணவரோடு
நீ என் மனவியோடு
நம்மை எதிரெதிர் ஆசனங்களில் அமர்த்தி
வேடிக்கை பார்க்கும் மிக்சரும் காபியும்.
எல்லாம் பேசிக்கொண்டோம்
அந்த ஒரே விஷ்யம் மட்டும்
தொடப்பட முடியாமல்/
நம்மைச் சுற்றிப் புதைந்து எழுந்து
புதைந்து நழுவிக் கொண்டிருந்தது
நம் முழு இருப்பையும் அசைத்து விடும்
ஒரு கனத்த கேள்வியின் விசுவரூபத்தின் முன்
தடுமாறி நின்றோம்.
ஏற்கனவே அறிமுகமான ஓர் ஆணும் பெண்ணும் தங்கள் உறவின் இழப்பை மீட்டெடுக்க முடியாமல் போவதன் சூழலைச் சொல்கிறது கவிதை. ஒரு கையறு நிலை மௌனத்தில் முடிகிறது. இதே உறவின் சூழலை இதே உறவின் இயல்பை மனுஷ்யபுத்திரனின் அண்மைக்காலக் கவிதை வேறு மொழியில் சொல்கிறது.
'சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில்
எப்போதும் உருவாகி விடுகிறது ஒரு சதுரங்கக் கட்டம்
ஒரு கலைக்க முடியாத பாவ்னையின் நிழல்
ஒரு சர்க்கஸ் கோமாளியின் அபாயகரமான சாகசங்கள்
ஒரு அபத்த வெளியில் விரிக்கப்பட்ட வலை'.
என்று முன்னேறுகிற கவிதை ஓர் உறவின் மீதான பண்பாட்டு இடக்கரடக்கலைக் கேலி செய்கிறது. அந்தக் கேலி இந்த நூற்றாண்டின் துக்கம் கூட.
'நான் குழப்பமடைவதெல்லாம்
சிநேகிதியைப் பெயர் சொல்லாமல் அழைப்பது எப்படி என்று?
அல்லது பெயர்களை வெறும் பெயர்களாக
எப்படி உச்சரிப்பது என்று
ஒரு சிநேகிதியை சிஸ்டர் என்று அழைக்கும்
ஒரு ஆபாசக் கலாச்சாரத்திலிருந்து
எப்படித் தப்பிச் செல்வது என்று'.
இப்படியான ஒரு கவிதை சென்ற நூற்றாண்டில் எழுதப் பட்டிருக்க வாய்ப்பில்லை.
வாழ்வு. கலை பற்றிய கண்ணோட்டங்களும் மாறியிருக்கின்றன. வாழ்வுடனும் கலையுடனும் மனிதனுக்குள்ள உறவைப் பற்றிய கவிதை ந.பிச்சமூர்த்தியின் 'கொக்கு'.
'படிகக் குளத்தோரம் கொக்கு
செங்கால் நெடுக்கு
வெண்பட்டுடம்புக் குறுக்கு
முடியில் நீரை நோக்கும் மஞ்சள் கட்டாரி மூக்கு
வாழ்வு குளம் செயலும் கலை.
நாமும் கொக்கு
சிலவேளை மீனழகு
பலவேளை நிழலழகு
எதுவாயினென்ன?
தவறாது குளப்பரப்பில்
நம்மழகு தெரிவதே போதாதா?'
என்று சாத்வீகமான அணுகுமுறையைப் பரிந்துரைக்கிறார் பிச்சமூர்த்தி. அப்படியான உறவல்ல இன்றைய காலம் நமக்குக் கொடுத்திருப்பது. இதை இசையின் கவிதை அடையாளம் காட்டுகிறது.
'இச் சாக்கடை நீரில்
உறுமீன் ஏது?
கிடைக்கிற குஞ்சுகளைக் கொத்தித் தின்
என் கொக்கே.' என்ற வரிகள் சமகால உறவின் அறிவிப்பு.
சமூகத்துடன் மனிதன் கொள்ளும் உறவும் இன்று வேறு பொருள்களைக் கொண்டிருக்கிறது. தனி மனிதன், சமூக மனிதன் என்று இருமையாகத் தென்பட்ட உறவு இன்றைய கவிதையில் தனி மனிதனின் மூலம் வெளிப்படும் சமூகம் என்றாகி இருக்கிறது. இதை ஒட்டிய நெருக்கமும் விலகலும் கவிதைக்குப் பொருளாகின்றன. ஏற்பும் நிராகரிப்பும் கவிதைப் பொருளாகின்றன. த.அரவிந்தனின் 'கல்லாட்டம்' என்ற கவிதை மறைமுகமாக ஒரு சமூக உறவின் சித்திரத்தைத் தீட்டுகிறது.
'யாரும் விளையாடாத மைதானத்தில்
ஒரு கல் நடுவராக நிற்கிறது.
ஒரு கல் ஓடிவந்து சுழற்பந்து வீசுகிறது
ஒரு கல் ஏறிவந்து
மட்டையால் விளாசுகிறது.
மூன்று கற்கள் அண்ணாந்தபடியே
பறக்கும் பந்தைப் பிடிக்க ஓடுகின்றன
எதனிடமும் சிக்காமல் பந்து
எல்லைக் கோட்டைக் கடக்க
பல கற்கள் கைதட்டுகின்றன'.
இதில் அரசியலின் விளையாட்டும் விளையாட்டின் அரசியலும் சித்தரிக்கப்படுகின்றன. சமூக வாழ்வில் வெற்றிகள் பாராட்டப்படும் பொதுமனப்பான்மையைக் கவிதை கேலி செய்கிறது. அதன் மறுபக்கமாக தோற்கடிக்கப்படுபவர்களின் துயரத்தை நிழலுருவமாகக் காட்டவும் செய்கிறது.
வாழ்க்கையை இலக்கியம் எப்படி அளக்கிறது? டி.எஸ் இலியட் தன்னுடைய கவிதையொன்றில் இதற்கான பதிலைக் குறிப்பிட்டிருந்தார். 'இலக்கியம் வாழ்க்கையை தேக்கரண்டியால் அளக்கிறது'. கவிதையின் மனித உறவுகள் என்ற சமுத்திரத் தலைப்பை தேக்கரண்டியால்தான் என்னாலும் அளக்க முடிகிறது. மனித உறவுகள் என்று நாம் எதையெல்லாம் குறிப்பிடுகிறோமோ
அவையனைத்தையும் கவிதை பொருட்படுத்தி உள்வாங்கிக் கொள்கிறது. இந்த உள் வாங்கல் இருபத்தியோராம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதையில் மிக விரிவாகவே நிகழந்து வருகிறது. இதைப் பற்றிய ஓர் இருப்புக் கணக்குக்கு நான் தயாரில்லை.ஒன்று, நான் கவிதையாக்கத்தில் கவனம் செலுத்துபவன். கணக்கெடுப்பாளனாக மாறினால் கவிதையுடனான என் உறவு குலைந்து விடலாம். இரண்டாவது, ஒன்பது ஆண்டுகளுக்குள்ளாக ஒரு நூற்றாண்டின் போக்கைக் கணிப்பது கடினம். எனினும் கவிதை ஆர்வலானாக சிலவற்றை முன்வைக்க விரும்புகிறேன்.
இதுவரை கவிதைக்குள் அனுமதிக்கப்படாமலிருந்த பல உறவுகள் நவீனக் கவிதையில் மையப் பொருளாகி இருப்பதை இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் கவிதைப் போக்கில் நிகழ்ந்திருக்கும் முதன்மையான அம்சமாகக் குறிப்பிடலாம். சமூகத்தில் நடந்திருக்கும் மாற்றங்களின் விளைவாக மனிதன் ஒற்றை அடையாளம் கொண்டு சுருக்கப்படுகிறான்/சுருக்கப்படுகிறாள். இதற்கு எதிராக அவன் கொள்ளும் நிலைப்பாடுகள் புதிய உறவுத் தளங்களை உருவாக்குகின்றன. பெண்ணுக்கான இடம், இதுவரை ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு உரிய இடம், அரசியலுடன் உறவு கொள்வதற்கும் கொள்ளாமலிருப்பதற்குமான இடம், குடும்பத்தை உருவாக்குவதற்கும் உருவாக்காமலிருப்பதற்குமான இடம் என்று புதிய தளங்கள் உருவாகியிருப்பது நவீனக் கவிதையின் போக்கில் தென்படுகிறது. தனது தனித்துவ, சமூக அடையாளங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சி இன்று முன்னெடுக்கப்படுகிறது. அவை புதிய உறவுகளை ஏற்படுத்துகின்றன. சூழலுடனான உறவு, வரலாற்றுடனான உறவு, தொன்மங்களுடனான உறவு என்று அவை வளர்ச்சியடைகின்றன. இதை புதிய போக்கு எனலாம். இந்தப் பேச்சில் முன்பு ஓர் இடத்தில் குறிப்பிட்டது போல உறவின் கலாச்சார முகமே கவிதை. வேறு எந்த நூற்றாண்டிலும் கண்டிராத அக நிர்ப்பந்தங்களும் புறத் திணிப்புகளும் இருபத்தியோராம் நூற்றாண்டில் அதிகமாக இருக்கிறதோ என்னவோ? அப்படி இருப்பவற்றை எதிர்கொள்ள இன்றைய கவிதை மனித உறவுகளை மறு பார்வைக்கு ட் படுத்துகிறது. வாழ்க்கை புதிய உறவுகளை உருவாக்குகிறது. கவிதை அதை மதிப்பிடுகிறது. ஏனெனில் வாழ்வுக்கும் கவிதைக்குமான உறவு வெறும் இலக்கியம் சார்ந்தது மட்டுமல்ல; அது புதியதை விரும்புகிற மனிதனின் வேட்கை. இன்றைய கவிதையில் மனித உறவுகள் இடம் பெறுவது இந்த நோக்கில்தான் என்று கருதுகிறேன்.
சரி, எனக்கும் உங்களுக்கும் கவிதையின்பாலுள்ள உறவு என்ன? அதுவும் மனித உறவுதானே.
@
கோவை பாரதியார் பல்கலைக் கழகமும் சாகித்திய அக்காதெமியும் இணைந்து 9 பிப்ரவரி 2010அன்று கோவையில் நடத்திய கருத்தரங்கில் பேசியது.
கவிதை என்ற சொல் மூலம் குறிக்கப்படும் உணர்வுநிலை எவ்வளவு விரிவானதோ அதே அளவுக்கு மனித உறவுகள் என்ற சொற்சேர்க்கை வழியாகச் சுட்டப்படும் இயல்பும் விரிவானது. மனிதனுடன் தொடர்புடைய எதுவும் கவிதைக்கு விலக்கானதல்ல. அதேபோல, மனிதன்கொள்ளும் எந்த உறவும் கவிதைக்குப் புறம்பானதல்ல. கவிதை என்ற சொல்லுக்குள் ஒரு கடல் மறைந்திருக்கிறது.அதைப்போன்ற இன்னொரு கடல் மனித உறவுகள் என்ற சொற்சேர்க்கையில் ஒளிந்திருக்கிறது. இரண்டு கடல்களை ஒரு குப்பிக்குள் அடக்க வேண்டிய கட்டாயத்தைத் தலைப்பு கொண்டிருக்கிறது. இதை வில்லங்கம் என்று சொல்லாமலிருப்பது எப்படி?
கவிதைக்குப் பொருளாகும் மனித உறவுகளும் உறவுகளைப் பொருள்படுத்தும் கவிதை யாக்கமும் முற்றானவையல்ல.. மனித உறவை எந்த மிச்சமு மில்லாமல் கவிதை சித்தரித்து விட்டது என்று சொல்வதற்கோ மனிதன் கொள்ளும் எல்லா உறவுகளும் முழுமை யடைந்து விட்டன என்று அறிவிப்பதற்கோ ஒருபோதும் வாய்ப்பில்லை. அந்த வாய்ப்பு ஒருபோதும் வராது. எனினும், கவிதையும் உறவுகளும் அப்படியான நிறைவை நோக்கியே முன்னேறுகின்றன. இது ஓர் எச்சரிக்கை. எனக்கு அளிக்கப் பட்டிருக்கும் தலைப்பை இந்தக் கோணத்திலிருந்தே அணுகுகிறேன்.
சரியாகச் சொல்லப்போனால் இந்த இரண்டு எல்லைகளுக்குள் நிகழும் ஊஞ்சலாட்டம்தான் கவிதையாக்கம். வாழ்க்கையின் நிகழ்வுகளுக்கும் வாழ்க்கையை மதிப்பிடும் படைப்புச் செயல் பாட்டுக்கும் இடையில் நிகழும் ஊஞ்சலாட்டம். அது வேடிக்கையானது. அதேசமயம் எச்சரிக்கையானதும் கூட. இதையே ஒரு பகுப்பாக வைத்துக் கொண்டால் நவீனத் தமிழ்க் கவிதையையே வேடிக்கையானவை; எச்சரிக்கையானவை; இரண்டும் கலந்தவை என்று பிரித்து விடவும் முடியும்.
அண்மைக் காலமாக எழுதி வரும் கவிஞர்களில் சிலரை இந்தப் பகுப்புக்கு உட்படுத்திப் பார்க்கலாமென்று கருதுகிறேன். இசை, முகுந்த் நாகராஜன், சங்கர ராம சுப்ரமணியன் ஆகியோரின் கவிதைகளை வேடிக்கையானவை என்றும் குட்டி ரேவதி, சல்மா, சுகிர்தராணி போன்றோரின் கவிதைகளை எச்சரிக்கையானவை என்றும் யூமா வாசுகி, இளங்கோ கிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் முதலியோரின் கவிதைகளை வேடிக்கையும் எச்சரிக்கையும் கலந்தவை என்றும் சொல்ல விரும்புகிறேன். இதில் வேடிக்கை என்று நான் பயன்படுத்தும் சொல் மிக எச்சரிக்கையானது. எச்சரிக்கை என்று கையாளும் வார்த்தை வேடிக்கையானது.
கவிதை தொடர்பான விவாதங்களில் கவிதை என்றால் என்ன? என்ற புராதனமான கேள்வி எப்போதும் கேட்கப்படுவதுண்டு. அதற்கான நிலையான பதில் எதுவுமில்லை. அந்தந்தக் காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்பவோ கவிஞன் அல்லது திறனாய்வாளனின் மனப் பாங்குக்கு ஏற்பவோ இதற்கான பதில் முன்வைக்கப்படுவதும் உண்டு. இந்தத் தலைப்பை யொட்டி இன்னொரு தற் காலிகமான பதிலை முன்வைக்க விரும்புகிறேன். மனித உறவின் கலாச்சார முகங்களில் ஒன்று கவிதை.
முன்பே குறிப்பிட்டதுபோல மனித உறவுகள் என்ற சொற்சேர்க்கை விரிவானது. பறவை அதன் பறத்தலைப் பற்றிய எந்தத் தடயங்களையும் ஆகாயத்தில் விட்டு வைப்பதில்லை. மீன் அதன் நீந்தலின் சுவடுகளை நதியில் தேக்கி வைப்பதில்லை. ஆனால் மனித ஜீவனுக்கு அது போன்ற சுதந்திரம் இல்லை. அவன் இருந்த்தற்கும் வாழ்ந்ததற்குமான ஏராளமான அடையாளங்களை மண்ணில் பதித்துச் செல்ல வேண்டியிருக்கிறது. அவை தாம் உறவுகளை உருவாக்குகின்றன. இந்த உறவுகளின் ஆகத்தொகையே கலாச்சாரம் அல்லது பண்பாடு. மனிதன் தவிர்த்த பிற உயிரினங்களின் தேவை உயிரியல் சார்ந்தது. மனிதத் தேவைகளோ உயிரியலை மட்டும் சார்ந்தவையல்ல. அவன் உறவு கொள்ளும் எல்லாவற்றையும் சார்ந்தது. மனிதன் மனிதனோடு கொள்ளும் உறவு, மனிதன் இயற்கையோடு கொள்ளும் உறவு, மனிதன் காலத்தோடு கொள்ளும் உறவு, மனிதன் இடத்தோடு கொள்ளும் உறவு, மனிதன் கருத்துகளோடு கொள்ளும் உறவு, மனிதன் முந்தைய தலைமுறையோடு கொள்ளும் உறவு, மனிதன் கனவுகளோடு கொள்ளும் உறவு - என்று உறவின் நிலைகள் விரிவானவை. எண்ணற்ற கிளைகள் கொண்டவை. மனிதன் கொள்ளும் உறவுபோலவே அவன் கொள்ளும் உறவின்மையையும் உறவில் நேரும் முரண்களையும் பகைகளையும் கூட உறவின் கூறாகவே இலக்கியம் கருதுகிறது.
அப்படிக் கருதுவதனாலேயே இலக்கியம் உருவாகிறது. கவிதை உருவாகிறது. கலைகள் உருவாகின்றன. இது எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் பண்பாட்டுச் செயல்பாடு. ஆனால் இந்தச் செயல்பாடு காலத்தையொட்டியும் மனிதன் உருவாக்கும் சமூகச் சூழலையொட்டியும் மாற்றமடைகின்றன. அதற்கு இருபத்தியோராம் நூற்றாண்டு உட்பட எந்தக் காலமும் விலக்கல்ல. இன்றைய கவிதை உட்பட எந்தக் கவிதையும் விலக்கல்ல.
காலமும் சமூகமும் வாழ்நிலைகளும் தொடர்ந்து மாற்றம் பெற்று வருகின்றன. அதை யொட்டி இலக்கியமும் குறிப்பாகக் கவிதையும் மாற்றம் பெறுகின்றன. அதில் இடம் பெறும் உறவுகளும் மாற்றத்துக்குள்ளாகின்றன.
ஓர் எடுத்துக்காட்டாகக் காதல் பற்றிய கவிதையைப் பார்க்கலாம். காலங் காலமாகக் கவிதை கொண்டாடி வரும் ஓர் உறவு - காதல். சங்க காலம் முதல் இன்றுவரை கவிதையின் ஊற்றாக இருக்கும் இந்த உறவு ஒரே அர்த்தத்தில் பேசப் படுவதில்லை. 'காதல் வசப்பட்டவர்கள், குதிரைமீது ஏறிக்கொள்வதைப்போலப் பனை மடல் மீது ஏறிக்கொள்வார்கள். எருக்கம் பூவைச் சூடிக்கொள்வார்கள். பிறர் சிரித்தாலும் மதிக்க மாட்டார்கள்' என்று ஓர் ஆணின் காதல் மனதை 'குறுந்தொகை'ப் பாடல் சிலாகிக்கிறது. அது நாமறியாத ஒரு நூற்றாண்டின் போக்கு.'பங்கமொன்றில்லாமல் முகம் பார்த்திருந்தால் போதும்' என்று பாரதியின் ஆண் திருப்தியடைந்து விடுகிறான். இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் மனநிலை. இருபதாம் நூற்றாண்டு நகர்ப்புறக் காதலனின் மனநிலையை ஞானக்கூத்தன் கவிதையொன்று சொல்கிறது.
'கதைகேட்கப் போய்விடுவாள் அம்மா.மாடிக்
கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா.சன்னத்
தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத் தம்பி
தூங்கி விடும். சிறுபொழுது தாத்தாவுக்கு
விசிறியதும் அவரோடு வீடு தூங்கும்.
பூக்களெல்லாம் மலர்ந்தோய்ந்த இரவில் மெல்லக்
கட்டவிழும் கொல்லையிலே பவழமல்லி.
கதைமுடிந்து தாய்திரும்பும் வேளைமட்டும்
தெருப்படியில் முழுநிலவில் அந்த நேரத்
தனிமையிலே என்நினைப்புத் தோன்றுமோடி? '
இதற்கு முற்றிலும் வேறானது இன்றைய காதலனின் மனவோட்டம். தேவதேவன் கவிதை அதை இப்படிச் சொல்கிறது.
'கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்.
ஒரு காப்பி சாப்பிடலாம் வா'.
தேவதேவன் அறிமுகப்படுத்தும் காதலன் பயந்தாங்குளியாகவோ கூச்ச சுபாவியாகவோ இருக்கலாமோ என்னமோ?
ஆனால் பெண்கள் காதல் உறவில் வெளிப்படையானவர்களாக மாறி யிருக்கிறார்கள். சுகந்தி சுப்ரமணியனின் ஒரு கவிதையில் வீட்டை விட்டு வெளியே எங்கும் அழைத்துச் செல்லாத காதலன் அல்லது கணவன் மீதான புகார் ஒலிக்கிறது. அந்த மனநிலையை இன்றைய உறவு பற்றிய கருத்தாக்கங்கள் புரட்டிப் போட்டிருக்கின்றன.காதல் என்ற உணர்வே ஒப்புக்குச் சொல்லப்படுவது.அதன் உண்மையான பொருள் காமம் சார்ந்தது. காதல் பெண்ணை வழிபடுகிற ஆணாதிக்கத் தந்திரம். அவளது உடலிருப்பைக் கண்டு கொள்ளா மலிருக்கிற பாராமுகம். இதை மறுக்கிற குரலில் உறவின் புதிய பொருளை குட்டி ரேவதியின் கவிதை சொல்கிறது.
'வருடிப் பார்த்திருக்கிறாயா என் காமத்தை/
ஒரு புதிய காகிதத்தில் எழுத விரும்புவதைப்போலவோ
அல்லது ஒரு குழந்தையின் விரல்களைப் பற்றும் ஆர்வத்துடனோ? '
என்று கேட்கிறது. இந்த மனநிலையும் உறவுப் பரிமாணமும் இருபத்தியோராம் நூற்றாண்டின் கருத்தாக்கம் என்றே கருதுகிறேன்.
உறவுகளின் மீது ஒட்டப்பட்டிருந்த புனிதச் சீட்டுகளை புதிய கவிதைகள் சுரண்டி எறிந்திருக்கின்றன. தாய்மையைப் பற்றிய கருதுகோள்கள் கேள்விக்குள்ளாக்கப் பட்டிருக்கின்றன. தாய்மை என்பது இயற்கையான நல்லியல்பு,தாய் மீதான பாசம் பிள்ளைக் கடன் என்ற கருத்துக்களை இன்¨றைய கவிதைகள் நொறுங்கிவிழச் செய்திருக்கின்றன. என்.டி.ராஜ் குமாரின் இந்தக் கவிதையை அதற்கு எடுத்துக் காட்டாகச் சொல்ல விரும்புகிறேன்.'
பற்றி எரிகிற தீயை அணைக்கிற மனவியே,
சூசகமாய் ஒரு வார்த்தை சொல்/
சோற்றில் விஷம் வைத்து அம்மாவைக் கொன்று விடுகிறேன்'
என்று அதிர்ச்சியூட்டுகிறது கவிதை. இந்த அதிர்ச்சிக்குக்காரணம் உறவுகள் மீதான பூச்சுக்களைக் களைந்து விட்டு கவிதை எதார்த்தத்தை முன்வைக்க விரும்புவதுதான். இது தாயை மட்டுமல்லதாய்மையின் சந்தனக் காப்புச் சார்த்திய எல்லா விக்கிரகங்களின் மீதான கற்பனைகளையும் பெயர்ப்பதுதான்.
இதுவரை சொன்னவை வரையறுக்கப்பட்ட உறவுகளை முன்னிருத்திப் பேசப்பட்டவை. மனிதன் தானாகத் தேர்ந்தெடுத்துகொள்ளும் உறவுகளின் சுதந்திரத்தையும் சுதந்திரமின்மைகளையும் நவீனக் கவிதைகள் முன்வைக்கின்றன. தொண்ணூறுகளில் எழுதப்பட்ட சமயவேலின் 'சந்தி' என்ற கவிதை இது.
'நான் உன் கணவரோடு
நீ என் மனவியோடு
நம்மை எதிரெதிர் ஆசனங்களில் அமர்த்தி
வேடிக்கை பார்க்கும் மிக்சரும் காபியும்.
எல்லாம் பேசிக்கொண்டோம்
அந்த ஒரே விஷ்யம் மட்டும்
தொடப்பட முடியாமல்/
நம்மைச் சுற்றிப் புதைந்து எழுந்து
புதைந்து நழுவிக் கொண்டிருந்தது
நம் முழு இருப்பையும் அசைத்து விடும்
ஒரு கனத்த கேள்வியின் விசுவரூபத்தின் முன்
தடுமாறி நின்றோம்.
ஏற்கனவே அறிமுகமான ஓர் ஆணும் பெண்ணும் தங்கள் உறவின் இழப்பை மீட்டெடுக்க முடியாமல் போவதன் சூழலைச் சொல்கிறது கவிதை. ஒரு கையறு நிலை மௌனத்தில் முடிகிறது. இதே உறவின் சூழலை இதே உறவின் இயல்பை மனுஷ்யபுத்திரனின் அண்மைக்காலக் கவிதை வேறு மொழியில் சொல்கிறது.
'சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில்
எப்போதும் உருவாகி விடுகிறது ஒரு சதுரங்கக் கட்டம்
ஒரு கலைக்க முடியாத பாவ்னையின் நிழல்
ஒரு சர்க்கஸ் கோமாளியின் அபாயகரமான சாகசங்கள்
ஒரு அபத்த வெளியில் விரிக்கப்பட்ட வலை'.
என்று முன்னேறுகிற கவிதை ஓர் உறவின் மீதான பண்பாட்டு இடக்கரடக்கலைக் கேலி செய்கிறது. அந்தக் கேலி இந்த நூற்றாண்டின் துக்கம் கூட.
'நான் குழப்பமடைவதெல்லாம்
சிநேகிதியைப் பெயர் சொல்லாமல் அழைப்பது எப்படி என்று?
அல்லது பெயர்களை வெறும் பெயர்களாக
எப்படி உச்சரிப்பது என்று
ஒரு சிநேகிதியை சிஸ்டர் என்று அழைக்கும்
ஒரு ஆபாசக் கலாச்சாரத்திலிருந்து
எப்படித் தப்பிச் செல்வது என்று'.
இப்படியான ஒரு கவிதை சென்ற நூற்றாண்டில் எழுதப் பட்டிருக்க வாய்ப்பில்லை.
வாழ்வு. கலை பற்றிய கண்ணோட்டங்களும் மாறியிருக்கின்றன. வாழ்வுடனும் கலையுடனும் மனிதனுக்குள்ள உறவைப் பற்றிய கவிதை ந.பிச்சமூர்த்தியின் 'கொக்கு'.
'படிகக் குளத்தோரம் கொக்கு
செங்கால் நெடுக்கு
வெண்பட்டுடம்புக் குறுக்கு
முடியில் நீரை நோக்கும் மஞ்சள் கட்டாரி மூக்கு
வாழ்வு குளம் செயலும் கலை.
நாமும் கொக்கு
சிலவேளை மீனழகு
பலவேளை நிழலழகு
எதுவாயினென்ன?
தவறாது குளப்பரப்பில்
நம்மழகு தெரிவதே போதாதா?'
என்று சாத்வீகமான அணுகுமுறையைப் பரிந்துரைக்கிறார் பிச்சமூர்த்தி. அப்படியான உறவல்ல இன்றைய காலம் நமக்குக் கொடுத்திருப்பது. இதை இசையின் கவிதை அடையாளம் காட்டுகிறது.
'இச் சாக்கடை நீரில்
உறுமீன் ஏது?
கிடைக்கிற குஞ்சுகளைக் கொத்தித் தின்
என் கொக்கே.' என்ற வரிகள் சமகால உறவின் அறிவிப்பு.
சமூகத்துடன் மனிதன் கொள்ளும் உறவும் இன்று வேறு பொருள்களைக் கொண்டிருக்கிறது. தனி மனிதன், சமூக மனிதன் என்று இருமையாகத் தென்பட்ட உறவு இன்றைய கவிதையில் தனி மனிதனின் மூலம் வெளிப்படும் சமூகம் என்றாகி இருக்கிறது. இதை ஒட்டிய நெருக்கமும் விலகலும் கவிதைக்குப் பொருளாகின்றன. ஏற்பும் நிராகரிப்பும் கவிதைப் பொருளாகின்றன. த.அரவிந்தனின் 'கல்லாட்டம்' என்ற கவிதை மறைமுகமாக ஒரு சமூக உறவின் சித்திரத்தைத் தீட்டுகிறது.
'யாரும் விளையாடாத மைதானத்தில்
ஒரு கல் நடுவராக நிற்கிறது.
ஒரு கல் ஓடிவந்து சுழற்பந்து வீசுகிறது
ஒரு கல் ஏறிவந்து
மட்டையால் விளாசுகிறது.
மூன்று கற்கள் அண்ணாந்தபடியே
பறக்கும் பந்தைப் பிடிக்க ஓடுகின்றன
எதனிடமும் சிக்காமல் பந்து
எல்லைக் கோட்டைக் கடக்க
பல கற்கள் கைதட்டுகின்றன'.
இதில் அரசியலின் விளையாட்டும் விளையாட்டின் அரசியலும் சித்தரிக்கப்படுகின்றன. சமூக வாழ்வில் வெற்றிகள் பாராட்டப்படும் பொதுமனப்பான்மையைக் கவிதை கேலி செய்கிறது. அதன் மறுபக்கமாக தோற்கடிக்கப்படுபவர்களின் துயரத்தை நிழலுருவமாகக் காட்டவும் செய்கிறது.
வாழ்க்கையை இலக்கியம் எப்படி அளக்கிறது? டி.எஸ் இலியட் தன்னுடைய கவிதையொன்றில் இதற்கான பதிலைக் குறிப்பிட்டிருந்தார். 'இலக்கியம் வாழ்க்கையை தேக்கரண்டியால் அளக்கிறது'. கவிதையின் மனித உறவுகள் என்ற சமுத்திரத் தலைப்பை தேக்கரண்டியால்தான் என்னாலும் அளக்க முடிகிறது. மனித உறவுகள் என்று நாம் எதையெல்லாம் குறிப்பிடுகிறோமோ
அவையனைத்தையும் கவிதை பொருட்படுத்தி உள்வாங்கிக் கொள்கிறது. இந்த உள் வாங்கல் இருபத்தியோராம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதையில் மிக விரிவாகவே நிகழந்து வருகிறது. இதைப் பற்றிய ஓர் இருப்புக் கணக்குக்கு நான் தயாரில்லை.ஒன்று, நான் கவிதையாக்கத்தில் கவனம் செலுத்துபவன். கணக்கெடுப்பாளனாக மாறினால் கவிதையுடனான என் உறவு குலைந்து விடலாம். இரண்டாவது, ஒன்பது ஆண்டுகளுக்குள்ளாக ஒரு நூற்றாண்டின் போக்கைக் கணிப்பது கடினம். எனினும் கவிதை ஆர்வலானாக சிலவற்றை முன்வைக்க விரும்புகிறேன்.
இதுவரை கவிதைக்குள் அனுமதிக்கப்படாமலிருந்த பல உறவுகள் நவீனக் கவிதையில் மையப் பொருளாகி இருப்பதை இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் கவிதைப் போக்கில் நிகழ்ந்திருக்கும் முதன்மையான அம்சமாகக் குறிப்பிடலாம். சமூகத்தில் நடந்திருக்கும் மாற்றங்களின் விளைவாக மனிதன் ஒற்றை அடையாளம் கொண்டு சுருக்கப்படுகிறான்/சுருக்கப்படுகிறாள். இதற்கு எதிராக அவன் கொள்ளும் நிலைப்பாடுகள் புதிய உறவுத் தளங்களை உருவாக்குகின்றன. பெண்ணுக்கான இடம், இதுவரை ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு உரிய இடம், அரசியலுடன் உறவு கொள்வதற்கும் கொள்ளாமலிருப்பதற்குமான இடம், குடும்பத்தை உருவாக்குவதற்கும் உருவாக்காமலிருப்பதற்குமான இடம் என்று புதிய தளங்கள் உருவாகியிருப்பது நவீனக் கவிதையின் போக்கில் தென்படுகிறது. தனது தனித்துவ, சமூக அடையாளங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சி இன்று முன்னெடுக்கப்படுகிறது. அவை புதிய உறவுகளை ஏற்படுத்துகின்றன. சூழலுடனான உறவு, வரலாற்றுடனான உறவு, தொன்மங்களுடனான உறவு என்று அவை வளர்ச்சியடைகின்றன. இதை புதிய போக்கு எனலாம். இந்தப் பேச்சில் முன்பு ஓர் இடத்தில் குறிப்பிட்டது போல உறவின் கலாச்சார முகமே கவிதை. வேறு எந்த நூற்றாண்டிலும் கண்டிராத அக நிர்ப்பந்தங்களும் புறத் திணிப்புகளும் இருபத்தியோராம் நூற்றாண்டில் அதிகமாக இருக்கிறதோ என்னவோ? அப்படி இருப்பவற்றை எதிர்கொள்ள இன்றைய கவிதை மனித உறவுகளை மறு பார்வைக்கு ட் படுத்துகிறது. வாழ்க்கை புதிய உறவுகளை உருவாக்குகிறது. கவிதை அதை மதிப்பிடுகிறது. ஏனெனில் வாழ்வுக்கும் கவிதைக்குமான உறவு வெறும் இலக்கியம் சார்ந்தது மட்டுமல்ல; அது புதியதை விரும்புகிற மனிதனின் வேட்கை. இன்றைய கவிதையில் மனித உறவுகள் இடம் பெறுவது இந்த நோக்கில்தான் என்று கருதுகிறேன்.
சரி, எனக்கும் உங்களுக்கும் கவிதையின்பாலுள்ள உறவு என்ன? அதுவும் மனித உறவுதானே.
@
கோவை பாரதியார் பல்கலைக் கழகமும் சாகித்திய அக்காதெமியும் இணைந்து 9 பிப்ரவரி 2010அன்று கோவையில் நடத்திய கருத்தரங்கில் பேசியது.
செவ்வாய், 2 பிப்ரவரி, 2010
மரினா ஸ்வெதயேவா கவிதைகள்
1
நெற்றியில் முத்தமிடுவது...
நெற்றியில் முத்தமிடுவது வேதனையைத் துடைப்பதற்காக
நான் உன் நெற்றியில் முத்தமிடுகிறேன்
கண்களில் முத்தமிடுவது உறக்கமின்மையை நீக்குவதற்காக
நான் உன் கண்களில் முத்தமிடுகிறேன்
உதடுகளில் முத்தமிடுவது நீர் அருந்துவதற்காக
நான் உன் உதடுகளில் முத்தமிடுகிறேன்
நெற்றியில் முத்தமிடுவது ஞாபகத்தைத் துடைப்பதற்காக
நான் உன் நெற்றியில் முத்தமிடுகிறேன்.
2
இரண்டு சூரியன்கள் குளிரவைத்துக்கொண்டிருக்கின்றன...
இரண்டு சூரியன்கள் குளிரவைத்துக்கொண்டிருக்கின்றன,
கடவுளே, என்னைக் காப்பாற்றும்.
ஒன்று - சொர்க்கத்தில், மற்றது - இதயத்தில்.
இதற்கொரு காரணமுண்டா என்னிடம்?
இரண்டு சூரியன்களும் என்னை முழுப்பைத்தியமாக்கின.
அவற்றின் கதிர்களில் வேதனையில்லை - எல்லாம் போயின.
தகிக்கும் சூரியனே முதலில் உறைந்து போகும்.
3
ஒவ்வொரு கவிதையும் அன்பின் குழந்தை
ஒவ்வொரு கவிதையும் அன்பின் குழந்தை
கைவிடப்பட்ட வேசியின் பிழை
மேலே காற்று அலைய
சாலையோரத்தில் விடப்பட்ட சந்ததி
இதயத்தில் ஓர் ஆழக்கடலும் ஒரு பாலமும் உண்டு
இதயத்தில் வாழ்த்தும் துக்கமும் உண்டு
யார் அதன் தகப்பன்? நிலவுடைமையாளனா?
ஒருவேளை நிலவுடைமையாளனாகவோ அல்லது
திருடனாகவோ இருக்கலாம்.
4
உனது ஆன்மா...
உனது ஆன்மா சிறகுகளுடன் பிறந்திருக்குமானால்
குடிசைக்கோ அரச மாளிகைக்கோ என்ன பொருள்?
செங்கிஸ்கான் என்ன? கொள்ளைக்கூட்டம் என்ன?
மொத்த உலகத்தில் எனக்கு இரண்டு எதிரிகள் இருக்கிறார்கள்
அவர்கள் ஒரே படிமத்தில் இணைந்த இரட்டைப் பிறவிகள் -
பசியின் பசியும் பெருந்தீனியின் பெருந்தீனியும்.
@
வெண்ணிற வெப்பம்
@
வெண்ணிற வெப்பத்தில் ஓர் ஆன்மாவைப் பார்க்கவும்
பார்த்தபின் கதவருகே பணியவும் உனக்குத் துணிவுண்டா ?
நெருப்பின் பொதுநிறம் சிவப்பு ; ஆனால்
ஜுவாலையின் நிபந்தனைகளுக்கு உலோகத்தாது இணங்கும்போது
தைலம் பூசப்படாத நிறமற்ற சுடராக ஒளிரும்.
நேர்த்தியான உருமாற்றத்தின் அடையாளமான
கிராமத்துக் கொல்லனின் உலைக்கூடம் இரைச்சலிடும்.
பொறுமையற்ற தாதுக்களை
சம்மட்டியாலும் ஜுவாலையாலும் சுத்திகரிக்கும் -
நியமிக்கப்பட்ட ஒளி உருமாற்றத்தை நிராகரிக்கும் வரை.
- எமிலி டிக்கின்சன்.
@
பிறமொழிக் கவிதைகளை வாசிப்பதில் ஆர்வமுண்டு. அவற்றைப் பின் தொடர்ந்து செல்வதுமுண்டு. இந்தச் செயல்பாடு என்னுடைய எல்லைகளை விரிவு படுத்திக் கொள்வதற்காக. எனினும் ஆங்கிலம் வழியாகக் கிடைக்கும் பிற மொழிக் கவிதைகளை வாசிப்பதில் காட்டும் அக்கறையை அசலான ஆங்கிலக் கவிதைகளை வாசிப்பதில் காட்டியதில்லை. பெரும்பாலான ஆங்கிலக் கவிதைகள் பாடத் திட்டப் பொருட்களாக அறிமுகமானவை; அவற்றைப் பயிற்றுவித்தவர்கள் தேர்வில் மதிப்பெண் பெறும் உபாயங்களைச் சொல்லித்தந்தார்களே தவிர கவிதையின் ஜீவனை உணரும் வழியைக்
கற்றுத் தரவில்லை. ஆங்கிலக் கவிதை மீதான அக்கறையின்மைக்கு இவை காரணங்களாக இருக்கலாம். கவிதை எழுத்தில் ஈடுபாடு முற்றியபோதும் அறிந்துகொள்ளும் விருப்பத்தில் வாசித்த கவிதைகளும் சொற்பம். டி.எஸ். இலியட், எஸ்ரா பவுண்ட், ஸ்டீபன் ஸ்பெண்டர், சில்வியா பிளாத் இவர்களைத் தாண்டி எவரையும் வாசிக்க முடிந்ததில்லை. விதிவிலக்கு - எமிலி டிக்கின்சன்.
எமிலியின் கவிதைகளின் முழுத் தொகுப்பு நீண்ட காலம் கைவசமிருந்தது. ஆயிரத்திச் சொச்சம் பக்கங்கள் உள்ள புத்தகம். அதை இலக்கிய நண்பர் ஒருவர் 'நீயே வெச்சிக்கோ' என்று கொடுத்திருந்தார்.அமெரிக்க இதழான 'ஸ்பா'னுக்கு ஆண்டுச் சந்தா செலுத்துபவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நூல் அது.அதை அவர் கொடுத்த சூழ்நிலையும் வித்தியாசமானது. தற்கொலை செய்துகொள்வதற்காக சவரப் பிளேடால் கழுத்தை வெட்டிக்கொண்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் நண்பர். மருத்துவமனையில் அவரைப் பார்க்கப் போனபோது தலைமாட்டில் இருந்த அலமாரி மீது எமிலி டிக்கின்சனின் முழுக் கவிதைத் தொகுப்பு உட்கார்ந்திருந்தது. தற்கொலைக்கு முயற்சி செய்து தப்பித்தவர் மருத்துவமனைக்கு வரும்போது எதற்காகப் புத்தகத்தைக் கொண்டு வந்தார்? அதுவும் எமிலி டிக்கின்சனின் கவிதைத் தொகுப்பை? என்று அப்போது எழுந்த கேள்வி விடுபடாப் புதிராக இன்றும்மனதில் இருக்கிறது. மருத்துமனையிலிருந்து திரும்பி வந்த சில நாட்களுக்குப் பின்னர் நண்பர் எமிலியை என்னிடமிருந்து மீட்டுக்கொண்டு போனார். வருத்தமாக இருந்தது.குண்டு எமிலி போன துக்கத்தை மாற்றிக்கொள்ள பென்குவின் வெளியீடாக வந்த நடுத்தரப் பருமனுள்ள எமிலியைக் கண்டுபிடித்தேன். அவ்வப்போது வாசித்தேன்.
எமிலி டிக்கின்சனின் கவிதைகள் எளிதில் புரிபடாதவை. அவற்றில் பயிலும் மொழி எளிமையானது. எனினும் அது வெளிப்படுத்தும் அர்த்தம் பூடகமானது;கலாச்சார வேரோட்டமுள்ளது. விவிலியத்தின் எதிரொலிகள் கொண்டது. பழைய ஏற்பாட்டில் வரும் 'யோபுவின் புத்தகம்' எமிலியின் கவிதைகள் மீது செல்வாக்குச் செலுத்தியிருக்கலாம் என்று ஒவ்வொரு வாசிப்பிலும் தோன்றுவதுண்டு. அந்த அளவுக்கு அந்தரங்கமானவை எமிலியின் கவிதைகள். அவை பிடிகொடுக்காமல் விலகி நிற்பதன் காரணமும் இந்தத் தனித்துவம்தான்.
@
மலையாள எழுத்தாள நண்பர் உண்ணியின் அழைப்பு எமிலி டிக்கின்சனைப் பற்றி யோசிக்கத் தூண்டியது. அவர் அழைத்தது சமீபத்திய நியூயார்க்கர் இதழைப் பார்க்கச் சொல்லுவதற்காக. அதில் எங்கள் இருவருக்கும் பிடித்தமான சிலி எழுத்தாளர் ராபர்ட்டோ பொலானோவின் கதை இருக்கிறது. அந்த இதழை வாங்கச் சொல்லவே அவர் அழைத்திருந்தார். வாங்கினேன். பொலானோவைன் கதையைத் தாண்டி என்னை ஈர்த்தது இதழில் வெளியாகியிருக்கும் இன்னொரு கட்டுரை. அது எமிலி டிக்கின்சனைப் பற்றி ஜுடித் துர்மான் எழுதியது. எமிலிக்கும் அவரது நண்பரான தாமஸ் வெண்ட்வொர்த் ஹிக்கின்சனுக்கும் இடையில்
நிலவிய இலக்கிய உறவு பற்றியது ஜூடித்தின் கட்டுரை.
ஹிக்கின்சன் இலக்கிய ஆர்வலர். அடிமைமுறை எதிர்ப்பாளர். பெண்ணுரிமை கருத்துப் பரப்புநர். கூடவே பூக்களைப் பற்றையும் இயற்கையைப் பற்றியும் கட்டுரைகள் எழுதும் இயற்கை நேசர். அவர் எழுதிய 'இளம் படைப்பாளருக்கு ஒரு கடிதம்' என்ற கட்டுரையும் அதன் பின்விளைவுகளும்தான் எமிலி டிக்கின்சன் என்ற கவிஞரை உலகத்துக்கு அறிமுகப் படுத்துகிறது. இலக்கிய உலகுக்கு அறிமுகமாகும் இளம் எழுத்தாளர்களை முன்னிருத்தி அவர் எழுதிய கட்டுரையின் ஒற்றை வரி எமிலியைத் தூண்டி விட்டது. 'ஒரு சொல்லுக்குள் ஏராளமான வேட்கைகளின் ஆண்டுகள் இருக்கலாம்; ஒரு வாக்கியத்தில்
பாதி வாழ்க்கையே இருக்கலாம் ' என்ற கட்டுரை வரி அவரை உசுப்பியது. இதைத்தானே தன்னுடைய கவிதையும் செய்கிறது என்று எமிலிக்குத் தோன்றியது.தன்னுடைய நான்கு கவிதைகளின் படியையும் கூடவே ஒரு கடிதத்தையும் ஹிக்கின்சுக்கு அனுப்பினார்.
’ என்னுடைய கவிதை உயிருள்ளதா என்று சொல்ல முடியுமா?'என்ற வேண்டுகோள் கடிதத்தில் இருந்தது.' என்னை ஏமாற்றிவிட வேண்டாம்' என்ற வாசகத்துடன் கையொப்பமிடாமல் கடிதத்தை முடித்திருந்தார் எமிலி.
எமிலி டிக்கின்சன் சுமாரான வசதியும் செல்வாக்குமுள்ள குடும்பத்தில் பிறந்தவர். உயர் தரமான கல்வி பெற்றிருந்தார். சிறுவயது ஆர்வம் கவிதையெழுத்தை அவரது தீராத வேட்கையாக மாற்றியிருந்தது. ஆரம்பத்தில் எழுதிய கவிதைகளில் சில குடும்ப நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் பிரபலமான பத்திரிகையில் எமிலியின் பெயரில்லாமலேயே வெளியானது. அவருக்குத் தன்னுடைய கவிதைகளை சுய மதிப்பு ச்செய்ய முடியவைல்லை. எழுதிய கவிதைகளையெல்லாம் காகிதச் சுருள்களாகச் சுருட்டி மேஜை அலமாரியில் பதுக்கி வைத்திருந்தார். மிக நெருக்கமான நண்பர்களுக்கு மட்டுமே அவரது கவிதைகள் அறிமுக மாகியிருந்தன.
'தன்னை ஏமாற்றிவிட வேண்டாம்' என்று எமிலி கடித்தத்தில் குறிப்பிட்டதற்குக் காரணமிருந்தது.எமிலியின் கவிதைகள் அதீதப் படிமங்களால் நிறைக்கப்பட்டவை என்று அவருடைய நண்பரும் பெரும் அறிஞருமான செவால் கருத்துச்சொல்லி அவரை 'ஏமாற்றி'யிருந்தார். ஹிக்கின்சன் நல்லவேளை எமிலியை ஏமாற்றவில்லை. மாறாக ஆக்கபூர்வமான சில விமர்சனங்களை முன்வித்திருந்தார். அதை 'அறுவைச் சிகிச்சை' என்று ஏற்றுக்கொண்டார் எமிலி. அவர் தந்த உற்சாகமும் ஆலோசனைகளும் எமிலியின் கவிதையெழுத்தைத் தீவிரப்படுத்தின. இறப்புக்கு முன்வரை கிட்டத்தட்ட ஆயிரத்து எண்ணூறு கவிதைகளை எழுதியிருந்தார் எமிலி. ஹிக்கின்சன் என்ற நன்பர் இல்லாமலிருந்தால் ஒருவேளை எமிலியின் கவிதைகள் புதையுண்டு போயிருக்கலாம்.
இத்தனைக்கும் இரு நண்பர்களும் முகத்துக்கு முகம் சந்தித்துக்கொண்டது இரண்டே முறைதான். ஆனால் இருவருக்குமிடையில் வாழ்நாள் முழுவதும் கடிதத் தொடர்பு இருந்து வந்தது. எமிலி யின் மறைவுக்குப் பிறகு சகோதரி லாவினியா எல்லாக் கவிதைகளையும் தொகுத்து வெளியிட முனைந்தார். அலமாரிகளில் சுருட்டி வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான காகிதச் சுருள்களில் இருந்த கவிதைகளை வகைப்படுத்துவதும் அவற்றின் கரட்டு வடிவங்களை நீக்கி முழுமையான வடிவங்களைக் கண்டடைவதும் சிரமமாக இருந்தன. தொகுப்பாளரான மேபெல் லூமிஸ் டோடுக்கு உடன் நினைவு வந்த பெயர் ஹிக்கின்சன். தன்னுடைய தோழியின் கவிதைகளை வகைப்படுத்தும் பொறுப்பை ஹிக்கின்சன் ஏற்றுக் கொண்டார். அந்தக் கவிதையின் உள்ளோட்டங்களை அவரால் மட்டுமே பின்தொடர முடிந்தது என்பதற்குக் காரணம் இருவருக்குமிடையே நிலவிய நட்பு. அதைச் சார்ந்த கடிதப் போக்கு வரத்து.
மரணத்தையும் தனிமையையும் ஒரு பெண் உணரும் கோணத்தில் வெளிப்படுத்தியவை எமிலியின் கவிதைகள். சொந்த அனுபவங்களிலிருந்தே அவற்றை அவர் கவிதைக்கு இடம்பெயர்த்தார். ஆனால் விவிலியக் குறிப்பீடுகளும் நடையும் அவற்றை இன்னொரு தளத்துக்கு மாற்றின. அதே சமயம் அவருடைய தனி வாழ்வின் அடையாளங்களை இனங்காண முடியாத பூடகத்தன்மையையும் கொடுத்திருந்தன. அந்த மர்மம்தான் எமிலி டிக்கின்சன் கவிதையை இன்றுவரை நிலைநிறுத்துகிறது என்றும் கருதலாம்.
வெண்ட்வொர்த் ஹிக்கின்சன் - எமிலி டிக்கின்சன் நட்பைப் பற்றி விரிவாக நூலில் எழுதப்பட்டுள்ளது. பிரெண்டா வைன் ஆப்பிள் எழுதியுள்ள 'வைட் ஹீட்'என்ற புத்தகம் கவிஞர்களின் உளவியலையும் கவிதையின் மர்மங்களையும் பற்றிப் பேசுகிறது. சரியாகச் சொன்னால் 'நியூயார்க்கர்' இதழ்க் கட்டுரையின் நோக்கம் அந்தப் புத்தகம் தரும் வெளிச்சத்தில் எமிலி டிக்கின்சனின் கவிதைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்துவதுதான். தனிமையில் அடைக்கலம் தேடும் மனங்கள், இடையீட்டின் மூலம் நீதி தேடும் உத்வேகமும் எமிலியின் கவிதையில் இருப்பதாக ஜூடித் வரையறுக்கிறார். புதிய அமெரிக்க வாசகர்களிடம்
மீண்டும் இந்தக் குணங்கள் மீண்டெழுந்திருக்கின்றன. அதனால் எமிலி டிக்கின்சன் இன்றைய கவிஞராகிறார் என்று குறிப்பிடுகிறார்.
இதெல்லாம் இலக்கிய விவகாரம். மேற்சொன்ன கட்டுரையையும் புத்தகத்தையும் வாசித்துக் கொண்டிருந்தபோது ஒரு புதிர் மனதுக்குள் விழுந்தது. வாசிப்பு முடிந்ததும் புதிரின் மர்மம் இரண்டு மடிப்புகளாக அவிழ்ந்தது.
வெண்ட்வொர்த்தின் மனதிலலிருந்த துணைவிப் பிம்பம் எமிலி டிக்கின்சனுக்குப் பொருத்தமாக இருந்திருக்கிறது. ஹிக்கின்சனின் கருத்துப்படி ' பெண் ஒன்று அடிமை; அல்லது சமமானவள். இரண்டையும் தவிர இடைப்பட்ட இடமில்லை' .ஹிக்கின்சனின் மனைவியான மேரி சானிங் நோயாளி. எனவே அடிமை. எமிலியோ அறிவிலும் படைப்பூக்கத்திலும் இணையானவர். இது முதல் மடிப்பு. வெண்ட் வொர்த் ஹிக்கின்சனுக்கு ஒரு கனவு இருந்தது. ஒரு பெருங்கவிஞனாக வேண்டும். தான் பெரும் மதிப்பு வைத்திருக்கும் எமர்சனிடம் தன்னுடைய ஆரம்பகாலக் கவிதைகளைச் சமர்ப்பித்தார். அவை எமர்சனால் நிராகரிக்கப் பட்டன.இது இரண்டாவது மடிப்பு. அதன் பின்னர் ஹிக்கின்ஸ் கவிதை எழுதவில்லை. கட்டுரையாளரானார். ஒருவேளை அவர் கவிஞராக அங்கீகரிக்கப் பட்டிருந்தால்
எமிலி டிக்கின்சனைப் பொருட்படுத்தியிருக்க மாட்டார்.ஒருவேளை எமிலி டிக்கின்சன் என்ற கவிஞர் அறியப்படாமல் போயிருக்கலாம்.
@