பக்கங்கள்

திங்கள், 7 பிப்ரவரி, 2011

தீண்டப்படாத முத்தம்


சுகிர்தராணியின் கவிதைகள் பற்றி அவ்வப்போது எழுதியிருக்கிறேன். அவருடைய கவிதைகள் பற்றி இரண்டாவது முறையாக ஒரு பொது மேடையில் பேச நிற்கிறேன். இது ஒரே சமயம் மகிழ்ச்சியையும் ஏமாற்றத்தையும் தருகிறது.

கவிதை பற்றிப் பேசக் கிடைக்கும் எந்த வாய்ப்பும் மகிழ்ச்சியளிப்பது. அந்த வகையில் இதுவும் மகிழ்ச்சிகரமானது. ஆனால், கவிதை வாசிப்பவர்களை விடக் கவிதை எழுதுபவர்கள் அதிகமாக இருக்கும் ஒரு சூழலில் சக கவிஞரின் கவிதைகள் பற்றிப் பேச புதிதாக ஒருவர் முன்வராதது பற்றிய ஏமாற்றம். ஒரு கவிதை ஆர்வலனாகவே இந்த ஏமாற்றத்தை முன் வைக்கிறேன்.

இது சுகிர்தராணியின் நான்காவது தொகுப்பு. எட்டு ஆண்டுகளுக்குள் நான்கு தொகுப்பு என்பது அவருடைய இயக்கத்தைக் காட்டுகிறது. தொடர்ச்சியாகவும் அதிக எண்ணிக்கையிலும் எழுதுபவராக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. இந்தத் தொகுதியில் ஐம்பது கவிதைகள் இருக்கின்றன. எல்லாமும் முந்தைய தொகுப்பான 'அவளை மொழி பெயர்த்த'லுக்குப் பின்னர் எழுதப்பட்டவை. கடந்த நான்கு ஆண்டுகளில் எழுதப்பட்டவை.இந்த நான்கு தொகுப்புகளையும் ஒருசேர வைத்துப் பார்க்கும்போது தன்னுடைய கவிதைக்கான தரத்தை சுகிர்தராணி அடைந்திருக்கிறார் என்பது புலப்படுகிறது. அதற்குப் பொருந்தும் உதாரணமாக இருப்பது இந்தத் தொகுப்பு. தொடர்ச்சியையும் தரத்தையும் எட்டியிருக்கும் ஒரு கவிஞரை சலுகைகள் எதுவுமின்றி நவீன கவிதையின் பொதுப் போக்கின் பிரதிநிதியாகக் கருதுவதுதான் சரி என்று எண்ணுகிறேன். அந்த வகையில் சுகிர்தராணியின் கவிதைகளை எங்கே வைப்பது என்று பார்க்க விரும்புகிறேன்.

தமிழில் பெண்கள் எழுதும் கவிதைகள் பற்றி இரண்டு வகையான கருத்துகள் நிலவுகின்றன. ஒன்று - பெண்கள் எழுதுவதெல்லாம் சாரமில்லாதவை. இலக்கியப் பெறுமானம் கற்பிக்கத் தகுதியானவையல்ல. இது பெண் எழுத்தின் மீது தீண்டாமை கற்பிக்கும் சிலரின் வாதம். இதில் முக்கியமான கவிஞர்களும் இடம்பெறுகிறார்கள். சமீபத்தில் ஓர் இலக்கிய இதழில் பிரபல எழுத்தாளர் ஒருவர் எழுதியிருந்தார். அழகான பெண்கள் அழகைப்பற்றியும் அழகில்லாத பெண்கள் யோனியைப்பற்றியும் கவிதைகள் எழுதும் மரபு கடைப் பிடிக்கப்படுகிறது என்று இலக்கியக் கோட்பாடுகளைப் பகடி செய்து எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இரண்டாவது கருத்து - பெருந் தன்மையாளர்களுடையது. யாரெல்லாமோ கவிதைகள் எழுதுகிறார்கள். பெண்களும் எழுதிவிட்டுப் போகட்டுமே. இது மேம்போக்கானது. இவ்விரு கருத்துக்களும் இலக்கியத்தின் அடிப்படைகளுக்கு எதிரானது. ஒரு புதிய போக்கை ஏற்றுக் கொள்ள முடியாத மனப்பாங்கு இலக்கியத்தை அடுத்த கட்ட வளர்ச்சி நோக்கிச் செலுத்த இயலாது என்ற விதியை ஒப்புக் கொண்டால் இந்தக் கருத்துக்களின் வெறுமையை நாம் உணர முடியும். இந்த விதியைச் சார்ந்தே இலக்கியம் புதிய களங்களைக் கண்டிருக்கிறது. இந்த இடத்தில்தான் சுகிர்தராணியின் கவிதைகள் பொருத்தப்பாட்டைக் காண்கின்றன.

பெண் கவிதைகள் உடலைச் சார்ந்த ஆரவாரமாக எழுதப்படுபவை என்ற பொதுக் கருத்தும் புழக்கத்தில் இருக்கிறது. பெண்ணின் அங்கங்களைப் பற்றிய குறிப்புகள் அப்பட்டமாகக் கவிதைகளில் இடம் பெறுவது பலரையும் மிரட்சிஅடையச் செய்துமிருக்கிறது. சுகிர்தராணியின் இந்தத் தொகுப்பு அவர்களை இன்னும் மிரட்சியடையச் செய்யலாம். உடல் தொடர்பான வலிகளை, வாதைகளை,ஆனந்தத்தை வேறு எந்தச் சொற்களால் குறிப்பிட முடியும்? பெண் கவிதை மொழியே உடலும் உடலின் உபாதைகளும் வேட்கைகளும் சார்ந்தது என்று ஜூலியா கிறிஸ்தவா குறிப்பிடுகிறார்.இது ஒரே சமயத்தில் மறுப்பும் படைப்புமாகிறது.இதுவரை தன் உடல் மேல் பதிந்திருக்கும் ஆண்மையச் சித்தரிப்பை உதறும் மறுப்பு.தன் உடல் தன்னுடைய உரிமைப் பொருள் என்று உணரும் சுதந்திரம்.இந்த நோக்கில் வெறும் வஸ்துவாக சுட்டிய சொற்கள் பெண்ணால் உச்சரிக்கப்படும்போது உடலைக் கடந்த இயக்கமாகின்றன.

ஆண் மையக் கருத்தாக்கங்கள் ஆயத்தம் செய்து வைத்திருக்கும் பெண் என்ற படிமத்தை பெண்களே எழுதும் மொழி நிராகரிக்கிறது.சாதி,இன,பால் வேற்றுமைகள் கொண்ட கலாச்சாரம் முன்வைக்கும் நிபந்தனைகளையும் சலுகைகளையும் மறுக்கிறது.ஒரு சமயம் இது மொழியின் சிக்கல்.அதேசமயம் இது கலாச்சாரத்தின் சிக்கலும் கூட.இவற்றை எதிர்கொள்ள உருவாக்கப்படும் சுதந்திரம் கவிதையின் சுதந்திரமும் கலாச்சாரத்தின் சுதந்திரமும் ஆகிறது. விரிவான தளத்தில் யோசித்தால் இந்த சுதந்திரம் பெண்ணை பெண்ணுக் குள்ளேயே சிறைப்பட அனுமதிக்காது என்று கருதலாம். மேற் சொன்ன இயக்கத்தையும் சுதந்திரத்தையும் வெளிப்படுத்தும் கவிதைகள் சுகிர்தராணியுடையவை என்பதற்கு இந்தத் தொகுப்பு சாட்சியம்.

மையப் பொருளைச் சார்ந்து சுகிர்தராணியின் கவிதைகளை மூன்றாகப் பகுக்கலாம். ஒன்று: இந்தக் கவிதைகள் எல்லாவற்றிலும் ஒலிப்பவை ஒடுக்கப்பட்டவர்களின் குரல்கள். அவை சாதி சார்ந்த ஒடுக்குமுறையாகவோ இனம் சார்ந்த ஒடுக்குமுறையாகவோ பாலினம் சார்ந்த ஒடுக்கு முறையா கவோ இருக்கின்றன. அவை குமுறல், சீற்றம், பழி வாங்கும் ஆவேசம், தமது வரலாற்றின் வெற்றிகள் பற்றிய கர்வம், எல்லாம் வெளிப்படும் குரல்கள் அவை.

இரண்டாவது: பெண்ணின் காமமும் காதலும் சித்தரிக்கப்படும் கவிதைகள். சுகிர்தராணியின் கவிதைகளைப் பொருத்தவரை காமமும் காதலும் ஒன்று தான். அதன் ஆதாரம் உடலின் சமிக்ஞைகள்தாம். காமமோ காதலோ மனம் சார்ந்தது என்ற ரொமாண்டிக்கான கருத்தை இந்தக் கவிதைகள் உதாசீனப் படுத்துகின்றன; புறக்கணிக்கின்றன. ஒரு கவிதையின் மையப்பாத்திரம் தன்னைக் 'காமத்தின் புராதனக் கோவில்' என்றே சொல்லுகிறது. சுகிர்த ராணியின் இரண்டாவது தொகுப்பான 'இரவு மிருக'தில் ஒரு கவிதை இருக்கிறது. 'உலகத்து மொழிகளின்/ அத்தனை அகராதிகளிலும்/ தேடித் தேடி/ கடைசியில் தெரிந்துகொண்டேன்/உன் பெயரில் காதலுக்கு/ நிகரான இன்னொரு சொல்லை.' இந்த மென்மையான கற்பனைகளை புதிய தொகுப்பில் காண்பது அரிது. மூன்றாவது கூறு: இந்தக் கவிதைகளில் இடம் பெறும் இயற்கை. சமீப காலத்தில் அதிக அளவுக்கு மனிதவயப்படுத்தப்பட்ட இயற்கை அல்லது இயற்கையை ஒட்டிச் சித்தரிக்கப்பட்ட மானுடக் கூறுகள் கொண்ட கவிதைகள் இவை என்று சொல்லலாம். மனித சரீரம் இயற்கையின் பகுதியாகவோ இயற்கையின் அம்சங்கள் மனித உடலின் விரிவாகவோ சித்தரிக்கப் படுகின்றன. 'முதல் கூடலுக்கு முன் நிகழ்ந்தவை' (பக் 39 ) என்ற கவிதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த மூன்று பகுப்பையும் ஒன்றிணைப்பது

கவிதையாக்கத்தில் சுகிர்தராணி பின்பற்றும் அரசியல். ஒரு அர்த்தத்தில் இது ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல்.இன்னொரு அர்த்தத்தில் பெண்நிலை அரசியல். ஒடுக்கப்பட்ட ஆணும் பாலின வேற்றுமையால் கீழானவளாகச் சித்தரிக்கப்படும் பெண்ணும் ஒரே தளத்தில் இருப்பவர்கள். அவர்கள் ஒரே துயரத்தை ஒரே கோபத்தை ஒரே விதியைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அண்மைக் காலத்தின் மாபெரும் மானுட அவலங்களான கயர்லாஞ்சியிலும் முள்ளிவாய்க்காலிலும் கொல்லப்பட்டவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்தத் தொகுப்பு அந்தச் சம்பவங்கள் பற்றியும் பல கவிதைகளில் பேசுகிறது.

பொதுவாக சுகிர்தராணியின் கவிதைகளில் விவிலியக் குறிப்புகள் அங்கங்கே காணப்படும். இந்தத் தொகுப்பில் அவற்றின் செல்வாக்கு அதிகம். கூடுதலாக புத்தனைப் பற்றிய சிந்தனைகள் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. அதற்கான காரணம் வெளிப்படையானது. 'காட்டு வேர்' என்ற கவிதையை இங்கே சொல்லலாம். பக் - 38.

இந்தத் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கும்போது தென்பட்ட சில விஷயங்கள் சுவாரசியமானவை. தொகுப்பில் ஐம்பது கவிதைகள் இருக்கின்றன. அவற்றில் தலைப்புக் கவிதை உட்பட ஏழு கவிதைகள் முத்தம் பற்றியவை. தீண்டப்படாத முத்தம். முதல் முத்தம்,கடைசி முத்தம், சபிக்கப்பட்ட முத்தம்,விலக்கப்பட்ட முத்தம்,சாம்பல் பூக்காத முத்தங்கள், உறையிடாத முத்தம் என்று போகிறது இந்தப் பட்டியல். இவை தவிர 14 கவிதைகளுக்குள் முத்தம் இடம்பெறுவதையும் குறிப்பிட வேண்டும். இதில் எந்த முத்தமும் மகிழ்ச்சியின் அடையாளமல்ல; வலியைச் சொல்பவை. தனிஆள் என்ற வகையிலும் சமூகம் சார்ந்தும் அது பரவசத்தை அல்ல; ஓர் இனத்தின் வஞ்சினத்தைச் சொல்லுகிறது. உடல் ஓர் ஆயுதமாக மாறும் அரசியலைப் பேசுகின்றன சுகிர்தராணியின் கவிதைகள். அவருடைய கவிதை இடம் இது என்று தோன்றுகிறது. மிக அதிகமான விமர்சனங்களை வரவழைக்கும் இடம்.

(2 ஜனவரி 2011 அன்று சென்னையில் நடைபெற்ற காலச்சுவடு நூல் வெளியீட்டு விழாவில் சுகிர்தராணியின் ‘தீண்டப்படாத முத்தம்’ தொகுப்பை வெளியிட்டு நிகழ்த்திய உரை)

@

ச்