தாகம் அமைப்பு அண்மையில் வெளியாகியிருக்கும் ஆறு கவிதை நூல்களுக்காக நடத்தும் விமர்சன உரையாடல் நிகழ்ச்சி. இதில் பங்கேற்கக் கிடைத்த வாய்ப்புக்கு முதலில் நன்றி. தமிழில் இன்று கவிதை நூல்கள் அதிகம் வெளியாகின்றன.அதிக எண்ணிக்கையில் கவிஞர்கள் அறிமுக மாகிறார்கள். ஆனால் கவிஞர்களும் கவிதைகளும் பெருகியிருக்கிற அளவுக்குக் கவிதை பற்றிய விவாதங்களோ உரையாடல்களோ நடைபெறுவதில்லை. பத்திரிகைகளிலும் இதே நெருக்கடியைப் பார்க்கலாம். ஒரு கவிதைத் தொகுதிக்குப் பொருட்படுத்தத் தகுந்த மதிப்புரையோ ஒரு கவிஞரின் படைப்புப் பற்றிய விரிவான திறனாய்வோ வெளியாகும் வாய்ப்புக் குறைவு. கவிதையி பொறியில் சிக்கிக் கொண்டிருக்கும் இக்கட்டான தருணத்தில் இந்த உரையாடல் நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருகிறேன். இதில் என்னைப் பங்கேற்கத் தூண்டிய நண்பர்கள் 'காலச்சுவடு' கண்ணன், கவிஞர்கள் சக்திஜோதி, செந்தி மூவருக்கும் நன்றி.
இங்கே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் ஆறு கவிதை நூல்களில் சக்திஜோதியின் 'எனக்கான ஆகாயம்' தொகுப்பைப் பற்றிப் பேசுவதற்கு முன்பாகச் சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விருப்புகிறேன். இது சக்திஜோதியின் மூன்றாவது தொகுப்பு.இதற்கு முன்பு அவருடைய முதல் தொகுப்பான 'நிலம்புகும் சொற்க'ளை வாசித்திருக்கிறேன். பொருட்படுத்தப்பட வேண்டியகவிஞர் என்ற எண்ணத்தை அந்தத் தொகுப்பு எனக்குத் தந்தது.இந்த நிகழ்ச்சியையொட்டி சக்திஜோதியின் எல்லாத் தொகுப்புகளையும் வாசிக்கும் வாயப்புக் கிடைத்தது. நான் பேசவேண்டியது அவருடைய மூன்றாவது தொகுப்பை முன்வைத்துத்தான். இருந்தாலும் அவருடைய இதுவரையான எல்லாக் கவிதைகளையும் ஒருசேர வாசித்தபோது கிடைத்த சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். அதற்கு இதை விடப் பொருத்தமான சந்தர்ப்பம் வாய்ப்பது அரிது.
சக்திஜோதியின் மூன்று தொகுப்புகளிலும் இடம் பெறும் கவிதைகள் பெரும்பான்மையும் ஒரே இயல்பைக் கொண்டிருப்பவை. முதல் தொகுப்பான 'நிலம்புகும் சொற்களில்' இடம் பெறும் 'காதல் வழி' என்ற கவிதையையும் மூன்றாம் தொகுப்பான 'எனக்கான ஆகாயத்'தில் இடம் பெறும் 'தருணம்' என்ற கவிதையையும் எளிதாக ஒப்பிட முடியும்.
ஆற்றின் கரைகளுக்குஇடையில் இருக்கின்றேன்
வெள்ளம் என்மீதுபுரண்டோடுகின்றது
தொண்டை வறண்டுதாகத்தில் தவிக்கின்றேன்
கால்கள்நீரில் மிதக்கின்றன
ஆற்றின் போக்கைஎதிர்க்கஇயலாமல்மீனாய் மாறுகின்றேன்.
தப்பிக்க இயலாது இனிநானும்
என்னிடமிருந்து நீரும்.
இதன் இன்னொரு சாயலை 'தருணம்' என்ற இந்தக் கவிதையில் பார்க்கலாம்.
கிளர்ந்தெழும் நினைவுகளின்சுழலில் சுழல்கிறது மனம்
நதியில் நீந்தும் மீன்களைப்போல
நினைவுகளில் பயணிக்கிறதுஒரு சொல்
அருகாமை நறுமணம் உணவுப் பொருட்கள் உடைகளின் வண்ணங்கள் என
ஏதாவது ஒன்றிலிருந்து
ஊற்றுப்போல நினைவுகள் உருக்கொள்கிறது.
குளத்துத் தாமரைக் கொடிகளில் சிக்கி
மிதப்பதுபோலவும்
சுழித்து ஓடும் நீரில்வந்தடையும்
சிறுதுரும்பெனவும்
நினைவுகளில் தடுமாறி நிற்கிறது சில தருணங்கள்
தாமரை இலைகளில் உருளும் நீர்த்துளிகளென
அத்தருணங்கள் மாறிமாறி வெவ்வேறு காலவெளிகளில்
ஓடுகிறது முழுதாய் விடுபடத் துடிக்கிறது
உன் நினைவு
தாமரை இலைமேல்படர்கிறது
ஒரு பூவைப் பறித்துக் கொண்டு திரும்புகிறேன்
கூடவே
நதிக்கரையில் காத்திருந்த தருணத்தையும்.
ஒரே மனதின் இரு வேறு நிலைகளைச் சொல்பவை இரு கவிதைகளும். ' காதல்வழி' என்ற முதல் கவிதையில் நினைவுகளின் வசப்படும் நிலை. 'தருணம்' கவிதையில் நினைவுகளைத் தன் வசப்படுத்திக் கொள்ளும் நிலை. தனிக் கவிதைகளில் அல்லாமல் மூன்று தொகுப்புகளிலும் ஒரு தொடர்ச்சியைக் கொண்டிருக்கிறார் சக்திஜோதி. இது அவருடைய கவிதை இயல்பாகத் தோன்றுகிறது. இந்த இயல்பில் ஒரு தீர்மானமும் முறைமையும் தென்படுகின்றன. இந்த முறைமை சார்ந்தே அவருடைய கவிதைத் தொகுப்புகள் உருவாக்கப் படுவதாகவும் தோன்றுகிறது.
இந்த முறைப்படுத்தலின் இன்னொரு அம்சம் தொகுப்புகளுக்கு எழுதப் பட்டிருக்கும் முன்னுரைகள். தமிழில் முன்னோடிகளான மூன்று எழுத்தாளர்களின் முன்னுரைகள் மூன்று தொகுப்புகளிலும் இடம் பெற்றிருக்கின்றன. பிரபஞ்சன், நாஞ்சில்நாடன், கல்யாண்ஜி. இப்படி அமைந்திருப்பது தற்செயலாகவும் இருக்கலாம். கல்யாண்ஜியின் முதன்மையான வெளிப்பாட்டு ஊடகங்களில் கவிதையும் ஒன்று. மற்ற இருவரும் கவிதையிலும் கைவரிசை காட்டியிருப்பவர்கள். இப்படியான பொருத்தமும் தற்செயலானதாக இருக்கலாம். இந்த மூன்று தொகுப்புகளின் தலைப்புகளிலும் ஒரு தேர்வும் தீர்மானமும் தெரிகின்றன. நிலம் புகும் சொற்கள், கடலோடு இசைத்தல், எனக்கான ஆகாயம். ஐம்பூதங்களில் மூன்றைத் தொகுப்புகளில் பிரதிநிதித்துவ ப்படுத்துவது தற்செயலானதல்ல என்பது என் ஊகம். இந்தத் தலைப்புகளையொட்டி யோசிக்கும் போது முன்னுரையாளர்களின் வரிசை கொஞ்சம் மாறியிருக்கலாம் என்று நினைக்கிறேன். கடலுக்குப் பிரபஞ்சனையும் நிலத்துக்கு நாஞ்சில் நாடனையும் ஆகாயத்துக்கு கல்யாண்ஜியையும் முன்னுரையாளர்களாக ஆக்கியிருக்கலாம். கூடுதல் பொருத்தமாக இருந்திருக்கும். அதனாலென்ன? இன்னும் இரண்டு பூதங்களுக்கான தொகுப்புகள் மிச்சமிருக்கின்றன. யார் யார் காற்றையும் தீயையும் பிரதிநிதித்துவப் படுத்துவார்கள் என்ற வாசகக் குறுகுறுப்புடன் காத்திருக்கிறேன். இல்லை இவை யெல்லாம் தற்செயலாக ஏற்பட்டவை என்று சக்திஜோதி சொல்வாரானால் அடுத்த தொகுப்பின்போது என்னுடைய அவதானிப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும்படி அவரைக் கேட்டுக்கொள்கிறேன்.
மூன்று தொகுப்புகளையும் ஒருமித்து வாசித்தபோது கவனித்த இன்னொரு அம்சம் என்னை மிகவும் வியப்படையச் செய்தது. மூன்று தொகுப்புகளும் ஒருவருக்கே சமர்ப்பிக்கப் பட்டிருக்கின்றன. இது தற்செயலானதல்ல; தீர்மானமானது. இந்தத் தீர்மானத்தின் வெவ்வேறு சாயல்களில்தான் சக்திஜோதியின் கவிதைகள் உருவாகின்றன. சமர்ப்பணத்தில் தென்படும் அளப்பரிய காதலைத்தான் இந்தக் கவிதைகள் பேசுகின்றன. இந்தத் தொகுப்பின் தன்னுரையில் அவரே அதை ஒப்புக்கொண்டுமிருக்கிறார். 'காதலும் பிரிவும் அதுசார்ந்த காட்சிகளும் நிரந்தரமாக எனது கவிதைகளின் அடையாளமாகி விட்டன. சமூகத்தில் மாற்றத்தை உண்டாக்குவதில் காதல் பெரும் பங்கு வகிக்கிறது' என்று குறிப்பிடுகிறார்.
ஓர் நபரின் மீதான காதல் மட்டுமல்ல; பிற உறவுகளின் மீதான காதல்,இயற்கை மீதான காதல் என்று இந்தக் கவிதைகள் வெவ்வேறு உருக் கொள்கின்றன. என்னைப் போன்ற ஒரு சந்தேகப் பேர்வழிக்கு இந்த உலகத்தில் அத்தனை காதல் சாத்தியமா? என்ற கேள்வி எழுவது சகஜம். ஆனால் காதலாகிக் கசியும் இந்த மனநிலையையே கவிதையின் இயல்பாக மாற்றிக் கொண்டி ருக்கிறார் சக்திஜோதி. தமிழில் எழுதும் பிற பெண் கவிஞர்களிடமிருந்து அவரை தனித்துக் காட்டும் அம்சம் இது.
தமிழில் வாசக கவனத்தைப் பெற எளிய வழி காதலை முன்வைத்து - உருக்கமான சரியாகச் சொல்வதென்றால் அசட்டுத்தனமான கவிதைகளைத் தயாரிப்பதுதான். இது ஆண் வழி.பெண்ணை வியந்து பரவசப்பட்டு அவளைக் கொண்டாடும் கவிதைகள். அல்லது காதலியின் வஞ்கத்தைச் சொல்லிப் புலம்பும் கவிதைகள். இவை ஆண்களின் பங்களிப்பு. மாறாக 'என்னைப் புரிந்து கொள்ளேன்' என்று இறைஞ்சும் அல்லது 'என் காதலுக்கு நீ தகுதியானவனல்லன்' என்று குற்றம் சாட்டும் பெண் வழிக் கவிதைகள். எடுத்துக் காட்டுகள் தராமலே உங்களுக்கு விளங்கும் என்று எண்ணுகிறேன். இந்தத் தேய்வழக்கிலிருந்து தப்பியவை சக்திஜோதியின் கவிதைகள். இவை காதலைப் பற்றிய கவிதைகளல்ல . காதலிலிருந்து உருவான கவிதைகள். காதலைப் பெண்ணும் ஆணும் பார்க்கும் பார்வையிலேயே வேறுபாடு இருக்கிறது. பெண்ணுக்கு அது வாழ்க்கை. ஆணுக்கு வாழ்வின் ஒரு பகுதி. அதனாலேயே சக்திஜோதியின் கவிதைகள் பெரிதும் காதலைச் சார்ந்து இருக்கின்றன என்று கருதுகிறேன்.
சக்திஜோதியின் கவிதைத் தொகுப்புகளுக்கு முன்னுரை எழுதிய மூன்று பேரும் அவரது கவிதைகளில் சங்க இலக்கியச் சுவடுகள் தென்படுவதாகத் தவறாமல் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதைக் கவிஞரும் ஏற்பளிப்புச் செய்திருக்கிறார். வெள்ளிவீதியாரின் சந்ததி என்று உரிமை பாராட்டிக் கொள்கிறார். இந்த உரிமை பாராட்டலை வேறு ஒரு கோணத்திலும் பார்க்கலாம். சங்கக் கவிதைகளில் இடம் பெறும் மாந்தர்களில் தீவினையாளர்களே இல்லை. தலைவனோ தலைவியோ தோழியோ தோழனோ தாயோ செவிலியோ யாரும் காதலுக்குத் தடை விதிப்பவர் களல்லர். சமூகப் பழக்கங்களும் இருத்தலின் தேவைகளும்தான் தடையாக அமைபவை. சக்தி ஜோதியின் கவிதைகளிலும் காதலுக்கு எந்தத் தடையும் இல்லை. பிரிவுகள்தாம் துக்கத்தையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றன. காதலில் நேரும் பிரிவு, தனிமை, விரகம் இவைதாம் இந்தத் தொகுதிக் கவிதைகளின் பாடு பொருட்களாக அமைகின்றன. பெரும்பாலும் பெண் நிலையிலி ருந்தே இந்தக் கவிதைகள் சொல்லப்படுகின்றன. விதிவிலக்கான ஒரு கவிதை 'தீபங்களின் நடுவே'. பெண் மீதான ஆணின் தவிப்பைச் சொல்கிறது. சமயங்களில் பெண்ணுக்கே தன்னுடைய நிலை மீது சந்தேகம் வந்து விடுகிறது. 'இதற்குமுன்' கவிதை அதை வெளிக்காட்டுகிறது. (பக் 51) இன்னொரு கோணத்திலும் சக்திஜோதியின் கவிதைகள் சங்கக் கவிதைகளின் சாயலைக் கொண்டிருக்கின்றன. சங்கக் கவிதைகளில் வெளியில் உள்ள இயற்கைச் சித்தரிப்பு அகத்தையே வெளிப்படுத்துகிறது. நதி.நிலவு, வானம், பறவை, வனம்,சாலைகள்,மழை, மலை, காற்று என்று எல்லாப் புறப் பொருட்களும் இந்தக் கவிதைகளில் அகத்தின் மாற்றுப் பொருட்களாகின்றன . 'அரும்புகள் மலரும் பருவம்' பக் 54 . பொழுதுகளும் காதலுக்கானவையாக மாற்ற மடைகின்றன.
'எனது இரவும் பகலும் / ஒரே நிறத்திலானதாய் மாறிவிட்டது' என்றும்
'அவன் / என்னிலிருந்து நீங்கிச் செல்லும்/ ஒவ்வொரு விடியலும்/ துயரம் மிக்கதாகவே புலர்கிறது' என்றும்
காதலனை முன்வைத்தே பொழுதுகளும் அமைகின்றன. காதலனுடனான இருப்பு. அதில் நேரும் பிரிவு, அது தரும் வேதனை இவையே இந்தத் தொகுப்புக் கவிதைகளின் மையம். பிரிவால் கொள்ளும் ஊடல் கூட காதலுக்கு ஊறு விளைவிக்கும் என்ற பெருந்தன்மையான நிலைப் பாட்டை இந்தக் கவிதை களினிடையில் காண முடிந்தது. சங்க காலக் கவிஞர்களிடமிருந்து சக்திஜோதி முன்னோக்கிச் செல்லும் தருணம் இது.
பெண்ணுரிமைப் பரப்புநர்கள் போற்றவும் தூற்றவுமான இரண்டு கவிதைகள் தொகுப்பில் அடுத்தடுத்து உள்ளன. பெண்ணின் இயல்புகளைப் பறித்துக் கொண்டவர்களுக்கிடையிலிருந்து அவள் மீண்டு எழும் செயலைச் சொல்கிறது இந்தக் கவிதை. பக் - 33.அதே கவிதையின் மறுபக்கம் ஆணின் நேசத்தில் பெண் தன்னை முற்றிலும் இழப்பதை 'பரிமாணம்' பக் - 34 பேசுகிறது. இந்தக் கவிதைகளுடன் ஒப்பிடும்போது எதிர்மறையாகத் தோன்றும் கவிதைகளையும் சக்திஜோதி எழுதியிருக்கிறார். குறுகிய பரப்புக்குள் வாழ விதிக்கப்பட்ட பெண்ணின் குமுறலைச் சொல்லும் கவிதை 'சமையலறை உலகிலிருந்து' வெளிப்படுகிறது. பக் - 30. இந்தக் கவிதையும் யாரையும் குற்றம் சாட்டவில்லை. தனது இருப்பை எந்த விமர்சனமும் புகாருமில்லாமல் ஏற்றுக் கொள்ளும் பெண்நிலையை முன்வைக்கிறது. இவ்வளவு அமைதியானதா காதலின் உலகம்? 'ஆம், என்பது சக்திஜோதியின் ஒப்புதலாக இருக்கிறது. அதை நிறுவுவதற்கான விரிவான சான்றுகள் அவருடைய கவிதைகள். நிகழ் உண்மைகளின் நகலெடுப்பல்ல படைப்பு. அதுவாய்த்த உண்மைகளைச் சார்ந்து உருவாகும் மாற்று உலகம். இந்த நோக்கில் சக்திஜோதியின் கவிதைகள் ஓர் மரபின், அதுவும் மேன்மையானது என்று கொண்டாடப்பட்ட ஓர் மரபின் அடிப்படைக் கூறுகளிலிருந்து சமகால உணர்வுடன் ஒரு மாற்று உலகை உருவாக்குகிறார். கவிதை எப்போதும் சமகாலத்தின் துடிப்புகளைக் கொண்டிருப்பது. நிகழ்காலத்திலிருந்தே கடந்த காலத்தைப் பரிசீலனை செய்கிறது.சக்திஜோதியின் கவிதைகள் கடந்த காலத்திலிருந்து நிகழ் காலத்தைப் பார்க்க முற்படுகின்றனவா என்ற சந்தேகத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.
நினைவுகளை மீட்கும் முயற்சிகள் இந்தக் கவிதைகள். கடந்து போன வாழ்வின் கணங்களை மீட்கும் ஆசை இந்தக் கவிதைகளில் தென்படுகிறது. ’முடிந்த கதைகள்’, ’தோழி ஒருத்தியின் குரல்’, ‘வேங்கை இருந்த நிலம்’ ஆகியவை இந்த ஆசையின் உதாரணங்கள். முதலிரண்டு கவிதைகளும் தனி மனித உணர்வோட்டமாக நின்று விட மூன்றாவது கவிதை இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவில் நேரும் நவீன அத்துமீறலைச் சொல்கிறது.
சக்திஜோதியின் கவிதைகளை வாசித்துப் பெற்ற நெகிழ்வான மனநிலையில் நண்பர் ஒருவர் நினைவுக்கு வந்தார். மலையாளக் கவிஞரான ஜெயதேவன். ஆரம்பப் பள்ளி ஆசிரியர். ஆரம்ப வகுப்புகள்தாம் வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டு அதன்படியே சிறு குழந்தைகளுக்குக் கற்பித்துக் கொண்டிருப்பவர். மிகவும் மென்மையானவர். பள்ளிப் பிள்ளை களிடம் மாளாத அன்பு கொண்டவர். அந்த அன்பு அவர் பேச்சிலும் செய்கைகளிலும் தெரியும். ஓர் ஆள் இப்படி அன்பின் அவதாரமாக இருக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலான ஆசிரியப் பணியில் ஒரு முறை கூடப்பிள்ளைகளை அடித்ததில்லை. அடிப்பது என்ன? குரலை உயர்த்தி மிரட்டியது கூட இல்லை. நான் பணியாற்றிய பதிப்பகத்தின்வாயிலாக அவருடைய இரு கவிதைத் தொகுப்புகளை வெளியிட் டேன்.அந்த வெளியீட்டு விழாவில் பேசிய அனைவரும் ஜெயதேவனின் கவிதைகளைப் பற்றிப் பேசியதற்கு இணையாக அவரது நல்லியல்புகளைப் பற்றியும் பேசினார்கள். மலையாளத்தின் முக்கிய எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயர் உள்ளிட்ட எல்லாப் பேச்சாளர்களும் கவிதையும் கவிஞரும் ஒன்று என்ற தோரணையில்தான் பேசினார்கள். அன்று அந்தப் பேச்சுகளும் ஜெய தேவனின் செய்கைகளும் கொஞ்சம் செயற்கை யானவயோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. புத்தக வெளியீட்டுக்குப் பின்னர் கவிஞருடன் உருவான நெருக்கம் அந்த சந்தேகத்தைப் போக்கியது. அவர் மட்டுமல்ல அவருடைய மனைவியும் ஏழு வயது மகளும் கூட அன்பின் தூதுவர்களாகவே இருந்தார்கள். நேசத்தின் சிறகுகளை தங்கள் உடுப்புகளுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு நடமாடு கிறார்கள் என்று கூடத் தோன்றியது. ஆனால் அது அவர்களின் இயல்பு. அவர் கவிதைகளும் அந்த இயல்பிலிருந்தே பிறந்தவை. ஜெயதேவனிடம் பின்னர் கேட்டுமிருக்கிறேன்:‘ பூமியில் இவ்வளவு அன்பு சாத்தியமா? அதை மட்டுமே எழுதிக் கொண்டி ருக்கவும் வேண்டுமா?’ . அவருடைய இயல்பைப் பற்றிச் சொல்லி யிருப்பதனால் அவருடைய பதில் என்னவாக இருந்திருக்கும் என்பதையும் நீங்கள் ஊகிக்க முடியும்.
காதல் மேலான மானுட உணர்வு. அது நெருக்கமும் பிரிவும் பிரிவின் வேதனையும் மட்டும் தானா? அதில் ஒளிந்து கிடக்கும்தவிர்க்க முடியாத வஞ்சனையும் துரோகமும் வன்மமும் காதலின் பகுதிகள் அல்லவா? காலமும் இடமும் காதலால்தான் வரையறுக்கப்படுகிறதா? என்பன போன்ற கேள்விகளை சக்திஜோதியிடமும் கேட்கலாம். அதற்கான பதில்கள்தான் தனது கவிதைகள் என்று அவர் சொல்லக் கூடும். காதல் என்ற உணர்வுக்காகத் தனி நூலே தொகுக்கப்பட்டிருக்கும் மொழியில் அவர் அப்படிச் சொல்வது இயல்பானதாகவும் இருக்கக் கூடும்.
@
மதுரை தாகம் இலக்கிய அமைப்பு 13 மார்ச் 2011 அன்று நடத்தியஆறு கவிதை நூல்கள் - விமர்சன உரையாடல் நிகழ்ச்சியில் ஆற்றிய உரை.