பக்கங்கள்

சனி, 19 அக்டோபர், 2013

ஒரு கவிதை



என்னிடம் சொல்லு, எப்போதாவது 
உன்னைப் நெருங்கப் பிடித்து உன் பாத வளைவில் 
நான் முத்தமிட்டிருந்தால்
பிறகு கொஞ்ச நேரம் 
என் முத்தம் நசுங்கி விடக் கூடாதென்ற அச்சத்தில்
நொண்டித்தானே நடந்திருப்பாய். 

நிகிதா ஸ்டானஸ்கியூ (1933 - 1983) ரொமானியா

மதத்தின் கூண்டுகள்




                                                                                எம்.டி.

            
மலையாள எழுத்தாளரான  எம்.டி. வாசுதேவன் நாயரின்  நாவல் 'அசுர வித்து' 1962 இல் வெளி வந்தது. சென்ற ஆண்டு நாவலின் பொன் விழா ஆண்டு. அதையொட்டி நாவலின் புதிய பதிப்பும் வெளியிடப் பட்டது. ஒரு புதிய நாவலுக்குக் கிடைக்கும் வாசக வரவேற்புடன் பொன்விழாப் பதிப்பும் விற்றுத் தீர்ந்தது. ஒரு நாவல் ஐம்பது ஆண்டுகளாக வாசக கவனத்தில் நீங்காமல் இருக்கிறது என்பதும் இன்றும் வாசிக்கப்படுகிறது என்பதும் எந்த இலக்கிய ஆர்வலனுக்கும் மகிழ்ச்சியளிக்கும். அதே சமயம், நாவல் கையாண்டிருக்கும் மையப் பிரச்சனை நிகழ்காலத்துக்கும் பொருந்துவதாக இருப்பது அவ்வளவு உற்சாகமூட்டக் கூடியதல்ல.'அசுர வித்து' நாவல் முன் வைக்கும் மானுடச் சிக்கல் இன்றும் தீராத ஒன்றாக இருப்பது துயரத்தையே தருகிறது.

'அசுர வித்து' நாவலின் மையப் பாத்திரம் கோவிந்தன் குட்டி. ஒரு நாயர் குடும்பத்தின் இரண்டாவது வாரிசு. அண்ணன் குமாரன் தன்னுடைய திருமணத்துக்குப் பிறகு மனைவி வீட்டோடு போய்ச் சேர்ந்ததோடு அல்லாமல் குடும்ப நிலத்தை அடகு வைத்துக் கடன்படச் செய்வதில்குடும்பம் வீழ்ச்சி யடையத் தொடங்குகிறது. விதவையான மூத்த சகோதரிதிருமணத்துக்குக் காத்திருக்கும் இன்னொரு சகோதரி, தங்களது அவல நிலையை ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கும் அம்மா - இவர்களுக்கிடையில் அன்றாட வாழ்க்கையை நகர்த்திச் செல்லத் திணறுகிறான் கோவிந்தன் குட்டி. அந்தத் திணறலுக்கு இடையில் அவனுக்கு வாய்க்கும் ஒரே ஆறுதல் அவனுடைய நண்பன் குஞ்ஞரைக்கார் மட்டுமே. முஸ்லிம்களைக் கண்டாலே வெறுப்பில் பிதுங்கும் சேகரன் நாயர் கோவிந்த  குட்டியின் இளைய சகோதரியை மணந்து கொள்கிறார். தன்னுடைய செல்வத்தையும் செல்வாக்கையும் பாதுகாக்க அவர் கடைப்பிடிக்கும் உபாயங்களில் ஒன்று சொந்த  சாதிக்காரர்களைத் தன்னுடன் அணிவகுத்து நிறுத்திக் கொள்வது. அதன் மூலம் கிராமத்தில் முளைவிடும் முஸ்லிம் செல்வாக்கைக் கிள்ளி எறிவது. கோவிந்தன் குட்டி இதை எதிர்க்கிறான். இந்த எதிர்ப்பு சேகரன் நாயரிடம்  அவன் மீதான பகையாக வடிவெடுக்கிறது. சேகரன் நாயர் வீட்டில் குற்றேவல்கள் செய்யும் மீனாட்சியை மணந்து கொள்கிறான் கோவிந்தன் குட்டி. மண நாள் இரவில் அவள் கர்ப்பிணியாக இருப்பது தெரியவருகிறது. சேகரன் நாயரின் மகனே அதற்குக் காரணம் என்று தெரிந்து கொள்ளும் கோவிந்தன் குட்டி அவனைத் தாக்குகிறான். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்லாம் மதத்தைத் தழுவுகிறான்.சேகரன் நாயர் பதிலுக்கு ஆட்களை வைத்து அவனைப் பழி வாங்குகிறார். ஒரு இந்து நாயரை அடிக்கத் தயங்கிய சேகரன் நாயருக்கு இப்போது முஸ்லிமை அடித்து  விரட்டுவது நியாயமானதாகப் படுகிறது. நண்பனாக குஞ்ஞரைக்காரும் ஒரு புதிய முஸல்மானைக் காப்பாற்றத் தயங்குகிறார்.உயிர் தப்ப ஓடும் கோவிந்தன் குட்டி கரை  புரண்டு ஓடும் ஆற்றில் குதிக்கிறான். பெரு வெள்ளத்தில் விழுந்தவன் இறந்து விட்டதாக ஊர் முடிவு கட்டுகிறது.

வேறொரு கிராமத்தில் கரை மீளும் கோவிந்தன் குட்டி அங்கே அகதியாக வாழ்கிறான். சொந்த துக்கங்கள் அவனைக் குடிகாரனாக்குகிறது. இரண்டு மதப் பிரிவுகளாலும்  கைவிடப்பட்ட அப்துல்லா என்ற கோவிந்தன் குட்டி மீண்டும் தனது சொந்த கிராமமான கிழக்கேமுறிக்கே திரும்புகிறான். பிளேக் பரவி கிராமம் முழுவதும் ஆட்கள் பலியாகிறார்கள். இறுதிச் சடங்கு செய்யக் கூட ஆளில்லாமல் குவிந்து கிடக்கும் சடலங்களை அப்புறப்படுத்த உதவுகிறான். பிணக் குவியலில் அவன் கண்டெடுக்கும் ஒரு சடலம் மனைவி மீனாட்சியுடையது. அருகில் அநாதையாக அழுது நிற்கும் குழந்தை. தான் கோவிந்தன் குட்டி நாயரா இல்லை அப்துல்லாவா என்று குழம்புகிறான் அவன்.தான் இந்துவா முஸ்லிமா என்று தடுமாறுகிறான். இரண்டும் இல்லாத இடத்துக்குப் போக அந்த ஊரை விட்டுப் புறப்படுகிறான். '' திரும்ப வருதற்கான யாத்திரை'' என்று  மனதுக்குள் சொல்லிக் கொள்கிறான்.

தாகூரின் காதலி





சென்ற ஆண்டு இதே அக்டோபர் மாதம் சுனில் கங்கோபாத்தியாய் மறைந்தார். 'நவீன வங்காள மொழியின் புதிய சுரணையுணர்வை முன் வைத்தவர் என்று பாராட்டப் பட்டவர் சுனில். அவரது வாழ்க்கையும் படைப்புகளுகளும் எப்போதும் சர்ச்சைகளின் மையப் புள்ளிகளாக இருந்தன. உயிருடன் இருந்தபோது உடன் தொடர்ந்த சர்ச்சைகள் அவரது இறப்பிலும் தொடர்ந்தன. தனது இறப்புக்குப் பின்னர் எந்தச் சடங்குகளும் கூடாது என்று முன்னர் அறிவித்திருந்தபடியே அவரது உடல் எரியூட்டப்பட்டது. வெளித் தோற்றத்தில் புதுமை விரும்பிகளும் அடிமனத்தில் மரபுக் காவலர்களாகவும் இருக்கும் பெரும்பான்மை வங்காளிகள் நடுவே அதுவும் சர்ச்சைக்கிடமானது. அவரது எழுதப்பட்ட நாவல்கள் தொடர்ந்து விவாதப் பொருளாக இருந்தன. 'பாதி வாழ்க்கை'( அர்த்தக் ஜீபன்) நாவலில் பெண் கடவுளான சரஸ்வதியைப் பற்றிப் பதின் பருவச் சிறுவன் காணும் கனவுகளைப் பற்றி எழுதியது விவாதப் புழுதியை எழுப்பியது. எழுதப் படாத நாவலும் சர்ச்சைக்குத்  தப்பவில்லை. பதினான்கு ஆண்டுகள் வனவாசம் நடத்திய ராமன் - சீதை வாழ்வில் என்ன நடந்தது என்பதைப் பற்றிப் புதிய நாவலில் எழுதவிருப்பதாக சுனில் கங்கோபாத்தியாய் சொன்னது பரபரப்பை மூட்டியது.


சுனில் கங்கோபாத்தியாவைக் கடுமையாக விமர்சிக்கக் காரணமாக இருந்த நாவல் ' ரானு ஓ பானு' . கடவுளரை விமர்சனம் செய்யும் நாவலைப் பொறுத்துக் கொள்ளத் தயாராக இருந்த வங்காளிகள் கடவுளை விட மிகுந்த பக்தியுடன் ஆராதனை செய்யும் தங்கள் மகா கவியைப் பற்றிய நாவலுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார்கள்.
'ரானு ஓ பானு' என்ற நாவலின் மையப் பாத்திரம் மகா கவி ரவீந்திர நாத தாகூர். தலைப்பே தாகூர் பக்தர்களுக்குக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தங்கள் மகா கவியை மையப் பாத்திரமாகக் கொண்ட நாவலின் தலைப்பு ' பானு ஓ ரானு' என்றுதான் இருக்க வேண்டும். சுனில் கங்கோபாத்தியாய் வேண்டுமென்றே ஒரு சாதாரணப் பெண்ணின் பெயரை முதலில் வைத்திருக்கிறார். இது குருதேவரை அவமதிப்பது என்று சீறினார்கள்.
ஆனால், ரானு என்பது ஒரு சாதாரணப் பெண்ணின் பெயர் அல்ல. 

தாகூருக்கிருந்த எண்ணிறந்த தோழிகளில் ஒருவரின் பெயர். பிற பெண்களின் அடையாளத்தையும் பூர்வ கதையையும் கவிஞரின் எழுத்துகளிலிருந்து ஊகிக்க முடியும். நிரூபிக்கவும் முடியும். ரானுவின் பெயரை ஊகிப்பது சிரமம். ரானு தனது பத்தாவது வயதில் அறுபது வயதான தாகூரை முதல் முதலாகச் சந்திக்கிறாள். கவிதை ஆர்வம் ததும்ப நடமாடும் அந்த வெகுளிச் சிறுமி  அவரைக் கவர்கிறாள். அந்தச் சந்திப்புக்குச் சிறிது காலம் முன்பு காலமான தனது மகள் மாதுரிலதாவின் பிரதிபலிப்பாகவே ரானுவைக் காண்கிறார். தொடர்ந்து தனது அன்புக் குரியவர்கள் மறைந்து போனதாலும்  விலகிப் போனதாலும் மனதுக்குள் காயங்களைத் தாங்கிக் கொண்டு தாகூர் வாழ்ந்த நாட்கள் அவை. பகிரங்கப் படுத்த முடியாத தனிமை உணர்வில் திணறிக் கொண்டிருந்த வரை அவளுடைய அண்மை அவரை ஆறுதல் படுத்துகிறது. அவளுடைய இலக்கிய ஆர்வம் வியப்படையச்  செய்கிறது. அவள் தன்மீது கொண்டி ருக்கும் மரியாதை பரவசமளிக்கிறது. பெரும் பான்மையான நாட்கள் சாந்தி நிகேதனில் தன்னுடன் வசிக்கும் ரானு சொந்த ஊரான பெனாரசுக்குத் திரும்பி எழுதும் கடிதங்கள் அவரை குதூகலப் படுத்து கின்றன. தான் இழந்த இளமையை அவள் மூலம் திரும்ப அடைகிறார். சிறுமியாக அவளிடம் தோன்றிய வாஞ்சை அவள் பருவமடைந்த பின்னர் ஏதோ ஒரு கணத்தில் காதலாக மாறுகிறது. ரானுவுக்கும் அப்படியே. உலகம் போற்றும் மகா கவிஞன் தனது புன்னகையில் மெல்லிய ஒளியில் பிறர் கண்ணுக்குத் தென்படாத சுடர் விடுவதைப் புரிந்து கொள்கிறாள். ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் 'கவிஞனுக்கும் தேவதை'க்கும் இடையிலான நெருக்கம் நீள்கிறது. மிகப் பெரும் செல்வந்தரும் தாகூரின் புரவலருமான சர். பிரேன் முகர்ஜியின் மனைவியாகிறாள் ரானு. இருவரிடையே நிலவிய நெருக்கம் மறைகிறது. அந்த மறைவுடன் நாவல் முற்றுப் பெறுகிறது.

தனது நாடகமொன்றில் மையப் பாத்திரத்துக்குத் தாகூர் சூட்டிய பெயர் 'பானு சிம்மன்'. அந்தப் பெயரின் சுருக்கமான 'பானு'தான் தலைப்பில் தாகூரின் பெயராகக் குறிப்பிடப் படுகிறது. ' ரானு, தயவு செய்து இனிமேல் என்னை பானு தாதா என்று அழைக்காதே. பானு சிம்மன் என்றென்றைக் குமாகத் தொலைந்து போனான். இனி ஒருபோதும் அவன் திரும்பி வர முடியாது'' என்பது இறுதி வாக்கியம்.

சுனில் கங்கோபாத்யாயா தாகூரின் அறியப்படாத காதலைக் கண்டெடுத் திருப்பது கற்பனையிலிருந்தல்ல; உண்மையிலிருந்து. சீமாட்டி ரானு முகர்ஜியின் சுய சரிதையிலிருந்துதான். கையெழுத்துப் பிரதியாகத் திருமதி. ரானு முகர்ஜி வைத்திருந்த தன் வரலாற்றிலிருந்துதான். அந்த வரலாற்றில் இரண்டு மனங்களின் காதல் மட்டுமல்ல; அவர்கள் வாழ்ந்த காலத்தின் நிகழ்விகளும் பதிவாகியிருக்கின்றன. சுனில் கங்கோபாத்தியாய் நாவலின் கதையோட்டத்துக்குக் கொடுத்திருக்கும் அதே முக்கியத்து வத்தை உண்மை நிகழ்வுகளை இணைப்பதில் அளித்திருக்கிறார். தாகூர் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்வது, காந்தியுடன் உரையாடு வது போன்ற சம்பவங்கள் நாவலை உண்மைசார்ந்த கற்பனையாக மாற்று கிறது. உணர்ச்சிகரமான வாசிப்புக்குரிய நாவலைப் படித்து முடித்து மூடும் போது உலகிலுள்ள எல்லா உயிர்களின் துடிப்பு களையும் தன் வாயிலாக வெளிப்படுத்திய பெருங் கவிஞர் மாற்ற முடியாத தனிமையில் அமர்ந்தி ருப்பதையும்  அவரைத் தழுவிக் கொள்ள வாசகனின் கை நீளுவதையும் பார்க்கலாம்.

'ரானு ஓ பானு' ( வங்க நாவல் ) 2004
சுனில் கங்கோபாத்யாயா
ஆங்கிலத்தில் : ஷீலா சென்குப்தா

வெளியீடு; ஸ்ருஷ்டி பப்ளிஷர்ஸ் அண்ட் டிஸ்டிரிபியூட்டர்ஸ், நியூ டெல்லி

நன்றி: தி இந்து ( 19 அக்டோபர் 2013 )