பக்கங்கள்
▼
செவ்வாய், 24 டிசம்பர், 2013
சென்ற காலத்தின் நிலப்படம்
சரணாலயத்துக்கு வரும் பறவை போல, இந்த மலைநகரத்துக்குத் திரும்பத் திரும்ப வருகிறேன்' என்று ஏக்க உணர்வுடன் எழுதவும் செய்திருக்கிறேன். அதன் பின்னர் வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்திருக்கிறேன். அந்தப் புதிய சித்திரங்களின் அடுக்கில் வெல்லிங்டன் நிலப்படம் மனதின் அடித்தட்டுக்குச் சென்று விட்டது. ஆனால், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறு நிகழ்ச்சி, வெல்லிங்டன் இன்னும் எனக்குள் வாழ்கிறது என்ற உண்மையை உணர்த்தியது.
தமிழ் - மலையாளக் கவிஞர்களின் சந்திப்பு நிகழ்ச்சியொன்றைப் பிரபல எழுத்தாளர்
ஜெயமோகன் உதகமண்டலத்திலுள்ள ஸ்ரீநாராயண குரு குலத்தில் 2008 மே மாதம் முதல் வாரம் நடத்தினார்.
அந்த மூன்று நாள் நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன். முதல் நாள் மாலை, ஊட்டியைச் சுற்றிப்
பார்க்க விரும்பிய மலையாளக் கவிஞர்களான கல்பற்றா நாராயணன்,
பி. ராமன்
இருவருக்கும் ஊரைச் சுற்றிக் காட்டும் வேலையை வலிய ஏற்றுக் கொண்டேன். ஊட்டியின்
பிரசித்தமான இடங்களை அவர்களுக்குக் காண்பித்து அவற்றை பற்றிய பின்னணி
விவரங்களை உற்சாகமாகத் தெரிவித்தேன். இந்த இடங்கள் இன்னும் என் மனதுக்குள்
இருக்கின்றன; இவை தொடர்பாக இத்தனைத் தகவல்கள் எனக்குள் மங்காமல் இருக்கின்றன என்பதை
அப்போதுதான் கண்டு பிடித்தேன். உதகமண்டலம் உருவான வரலாற்றையும் அந்த நகரத்தை உருவாக்கிய ஜான் சல்லிவனின் வாழ்க்கை
பற்றியும் கவிஞ நண்பர் களிடம் ஆர்வத்துடன் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர்களுக்கு
அது எந்த அளவுக்கு சுவாரசியமாக இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் நான்
உள்ளுக்குள் சிலிர்ப்புடன் சொன்னேன் என்பதும் அதைக் கொண்டாடிக் கொள்ளும் விதமாக உதகை கமர்சியல்
சாலையில் இருந்த பழங்காலத் தேநீர் விடுதியான ஈரானீஸ் ரெஸ்டாரெண்டில் ஒரே இருப்பில்
மூன்று குவளைத் தேநீரைப் பருகிய உற்சாகக் கொந்தளிப்பும் நினைவிலிருந்து
விலகவில்லை. அந்த அற்புதப் பொழுதின் ஏதோ நொடியில் பதினெட்டாம் நூற்றாண்டைச்
சேர்ந்த ஜான் சல்லிவன் எனது நிகழ்காலக்
கதாபாத்திரமாக மாறியிருக்க வேண்டும்.
நிகழ்ச்சி முடிந்து திருவனந்தபுரம் திரும்பியதும் நாவலின் முதல் அத்தியாயத்தை
எழுதினேன். எழுதத் தொடங்கியபோது இருந்த
திட்டத்தின்படி ஜான் சல்லிவன் ஒரு அத்தியாயத்தில் மட்டுமே வரக் கூடிய
பாத்திரம்.ஆனால் எண்ணப் போக்கில் அவர் வளர்ந்து
பல அத்தியாயங் களிலும் நடமாகக் கூடும் என்ற யூகம் வலுத்தபோது எழுத்து
வேலையைக் கைவிட்டேன். நான் எழுத விரும்புவது சல்லிவனைப் பற்றிய நாவலோ
உதகமண்டலத்தைப் பற்றிய ஆவணப்பதிவோ அல்ல. நான் செய்ய விரும்புவது ஒரு பகிர்வை.வெல்லிங்டன் வாழ்க்கை பற்றிய எனது உணர்வுகளை. எனவே நாவல் எழுதும் எண்ணத்தை
விட்டேன். நான்கு மாதங்கள் கடந்தன. இந்த
நான்கு மாதக் காலமும் நாவலைப்பற்றிய கனவும் வெல்லிங்டன்பற்றிய ஏக்க உணர்வும்
என்னைப் பின் தொடர்ந்தன. மீண்டும் தொடங்குவதற்கு முன்பு சில தீர்மானங்களைச் செய்து
கொண்டேன். எந்தத் திட்டமும் இல்லாமல் எழுதிச் செல்வது. நான்
கண்டதையும் கேட்டதையும் உணர்ந்தையும் உணராமல் விட்டதையும் இயல்பான போக்கில் பதிவு
செய்வது. நானாகக் கதையின் போக்கில் குறுக்கிடுவதில்லை. தானாக உருவாகும் கதையையே
முன்வைப்பது. இவை தீர்மானங்கள். இந்தத் தீர்மானங்கள் தந்த சுதந்திரத்தில் எழுத்து
தன்னிச்சை யாகவே வளர்ந்தது. சல்லிவனின் கண்டுபிடிப்பும் நீலகிரியில் படகர் குடியேற்றமும் வெல்லிங்டன் உருவான விதமும் பின்புலமாக இயல்பாகவே எழும்பின. குறுக்கீடு
கூடாது என்ற சுயக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தபோதும் எழுதத் தூண்டிய உள்
நோக்கத்தைத் தவிர்க்கவில்லை. அது, நான் வாழ்ந்த வாழ்க்கையை, நான் கண்ட மனிதர்களை
மீட்டெடுப்பது என்பதே.
இந்த ஆயுளில் அடைந்த அனுபவங்களில்
மிக அணுக்கமான வாழ்வும் கண்ட மிக மேலான மனிதர்களும் வெல்லிங்டனில் வாய்த்தவையே
என்று நம்பினேன். அந்த வாழ்வை மறுபடியும் வாழ்ந்து பார்க்கவும்
அந்த மனிதர் களுடன்
மீண்டும் உறவு கொள்ளவும் விரும்பினேன். காலம் பின்னகர்த்திய வாழ்வையும்
மனிதர்களையும் நடைமுறையில் திரும்பப் பெற இயலாது. ஆனால் எழுத்தின் மூலம் முடியும்.
அதற்காக எத்தனித்ததன் விளைவே இந்த நாவல். இதை நான் எழுதினேன் என்பது மிகை. என்னால்
எழுதப்பட்டது என்பதே பொருத்தமானது.
( சென்னை புக் பாயிண்ட் அரங்கில் 2014 ஜனவரி 4 ஆம் தேதி வெளியிடப்படவிருக்கும்
என்னுடைய நாவல் ‘வெல்லிங்ட’னுக்கு எழுதிய பின்னுரையின் பகுதி இது. நாவல் காலச்சுவடு பதிப்பக வெளியீடு)
நிழற்படம்: தத்தன் புனலூர்
சனி, 19 அக்டோபர், 2013
மதத்தின் கூண்டுகள்
எம்.டி.
மலையாள எழுத்தாளரான எம்.டி. வாசுதேவன்
நாயரின் நாவல் 'அசுர வித்து' 1962 இல் வெளி வந்தது. சென்ற
ஆண்டு நாவலின் பொன் விழா ஆண்டு. அதையொட்டி நாவலின் புதிய
பதிப்பும் வெளியிடப் பட்டது. ஒரு புதிய நாவலுக்குக் கிடைக்கும் வாசக வரவேற்புடன் பொன்விழாப்
பதிப்பும் விற்றுத் தீர்ந்தது. ஒரு நாவல் ஐம்பது ஆண்டுகளாக வாசக
கவனத்தில் நீங்காமல் இருக்கிறது என்பதும் இன்றும் வாசிக்கப்படுகிறது என்பதும் எந்த
இலக்கிய ஆர்வலனுக்கும் மகிழ்ச்சியளிக்கும். அதே சமயம், நாவல் கையாண்டிருக்கும் மையப்
பிரச்சனை நிகழ்காலத்துக்கும் பொருந்துவதாக இருப்பது அவ்வளவு உற்சாகமூட்டக்
கூடியதல்ல.'அசுர வித்து' நாவல் முன் வைக்கும் மானுடச் சிக்கல் இன்றும் தீராத
ஒன்றாக இருப்பது துயரத்தையே தருகிறது.
'அசுர வித்து' நாவலின் மையப் பாத்திரம் கோவிந்தன் குட்டி. ஒரு நாயர் குடும்பத்தின் இரண்டாவது
வாரிசு. அண்ணன் குமாரன் தன்னுடைய திருமணத்துக்குப் பிறகு மனைவி வீட்டோடு
போய்ச் சேர்ந்ததோடு அல்லாமல் குடும்ப நிலத்தை அடகு வைத்துக் கடன்படச்
செய்வதில்குடும்பம் வீழ்ச்சி யடையத் தொடங்குகிறது. விதவையான மூத்த சகோதரி, திருமணத்துக்குக் காத்திருக்கும் இன்னொரு சகோதரி, தங்களது அவல நிலையை
ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கும் அம்மா - இவர்களுக்கிடையில் அன்றாட வாழ்க்கையை நகர்த்திச்
செல்லத் திணறுகிறான் கோவிந்தன் குட்டி. அந்தத் திணறலுக்கு இடையில் அவனுக்கு
வாய்க்கும் ஒரே ஆறுதல் அவனுடைய நண்பன் குஞ்ஞரைக்கார் மட்டுமே. முஸ்லிம்களைக் கண்டாலே
வெறுப்பில் பிதுங்கும் சேகரன் நாயர் கோவிந்த
குட்டியின் இளைய சகோதரியை மணந்து கொள்கிறார். தன்னுடைய செல்வத்தையும்
செல்வாக்கையும் பாதுகாக்க அவர் கடைப்பிடிக்கும் உபாயங்களில் ஒன்று சொந்த சாதிக்காரர்களைத் தன்னுடன் அணிவகுத்து
நிறுத்திக் கொள்வது. அதன் மூலம் கிராமத்தில் முளைவிடும் முஸ்லிம் செல்வாக்கைக் கிள்ளி எறிவது. கோவிந்தன்
குட்டி இதை எதிர்க்கிறான். இந்த எதிர்ப்பு சேகரன் நாயரிடம் அவன் மீதான பகையாக வடிவெடுக்கிறது. சேகரன்
நாயர் வீட்டில் குற்றேவல்கள் செய்யும் மீனாட்சியை மணந்து கொள்கிறான் கோவிந்தன்
குட்டி. மண நாள் இரவில் அவள் கர்ப்பிணியாக இருப்பது தெரியவருகிறது. சேகரன் நாயரின் மகனே அதற்குக் காரணம் என்று தெரிந்து கொள்ளும்
கோவிந்தன் குட்டி அவனைத் தாக்குகிறான். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்லாம்
மதத்தைத் தழுவுகிறான்.சேகரன் நாயர் பதிலுக்கு ஆட்களை வைத்து அவனைப் பழி வாங்குகிறார்.
ஒரு இந்து நாயரை அடிக்கத் தயங்கிய சேகரன் நாயருக்கு இப்போது முஸ்லிமை அடித்து விரட்டுவது நியாயமானதாகப்
படுகிறது. நண்பனாக குஞ்ஞரைக்காரும் ஒரு புதிய முஸல்மானைக் காப்பாற்றத்
தயங்குகிறார்.உயிர் தப்ப ஓடும் கோவிந்தன் குட்டி கரை புரண்டு ஓடும் ஆற்றில் குதிக்கிறான். பெரு
வெள்ளத்தில் விழுந்தவன் இறந்து விட்டதாக ஊர் முடிவு கட்டுகிறது.
வேறொரு கிராமத்தில் கரை மீளும் கோவிந்தன் குட்டி அங்கே அகதியாக வாழ்கிறான்.
சொந்த துக்கங்கள் அவனைக் குடிகாரனாக்குகிறது. இரண்டு மதப் பிரிவுகளாலும் கைவிடப்பட்ட அப்துல்லா
என்ற கோவிந்தன் குட்டி மீண்டும் தனது சொந்த கிராமமான கிழக்கேமுறிக்கே
திரும்புகிறான். பிளேக் பரவி கிராமம் முழுவதும் ஆட்கள் பலியாகிறார்கள். இறுதிச் சடங்கு செய்யக் கூட ஆளில்லாமல்
குவிந்து கிடக்கும் சடலங்களை அப்புறப்படுத்த உதவுகிறான். பிணக் குவியலில் அவன்
கண்டெடுக்கும் ஒரு சடலம் மனைவி மீனாட்சியுடையது. அருகில் அநாதையாக அழுது நிற்கும்
குழந்தை. தான் கோவிந்தன் குட்டி நாயரா இல்லை அப்துல்லாவா என்று குழம்புகிறான்
அவன்.தான் இந்துவா முஸ்லிமா என்று தடுமாறுகிறான். இரண்டும் இல்லாத இடத்துக்குப்
போக அந்த ஊரை விட்டுப் புறப்படுகிறான். '' திரும்ப வருதற்கான யாத்திரை'' என்று மனதுக்குள் சொல்லிக் கொள்கிறான்.
தாகூரின் காதலி
சென்ற
ஆண்டு இதே அக்டோபர் மாதம் சுனில் கங்கோபாத்தியாய் மறைந்தார். 'நவீன வங்காள மொழியின்
புதிய சுரணையுணர்வை முன் வைத்தவர் என்று பாராட்டப் பட்டவர் சுனில். அவரது
வாழ்க்கையும் படைப்புகளுகளும் எப்போதும் சர்ச்சைகளின் மையப் புள்ளிகளாக
இருந்தன. உயிருடன் இருந்தபோது உடன் தொடர்ந்த சர்ச்சைகள் அவரது இறப்பிலும்
தொடர்ந்தன. தனது
இறப்புக்குப் பின்னர் எந்தச் சடங்குகளும் கூடாது என்று முன்னர் அறிவித்திருந்தபடியே அவரது உடல் எரியூட்டப்பட்டது.
வெளித் தோற்றத்தில் புதுமை விரும்பிகளும் அடிமனத்தில் மரபுக் காவலர்களாகவும்
இருக்கும் பெரும்பான்மை வங்காளிகள் நடுவே அதுவும் சர்ச்சைக்கிடமானது. அவரது
எழுதப்பட்ட நாவல்கள் தொடர்ந்து விவாதப் பொருளாக இருந்தன. 'பாதி வாழ்க்கை'( அர்த்தக் ஜீபன்) நாவலில்
பெண் கடவுளான சரஸ்வதியைப் பற்றிப் பதின் பருவச் சிறுவன் காணும் கனவுகளைப் பற்றி
எழுதியது விவாதப் புழுதியை எழுப்பியது. எழுதப் படாத நாவலும் சர்ச்சைக்குத் தப்பவில்லை. பதினான்கு ஆண்டுகள் வனவாசம் நடத்திய
ராமன் - சீதை வாழ்வில் என்ன நடந்தது என்பதைப் பற்றிப் புதிய நாவலில்
எழுதவிருப்பதாக சுனில் கங்கோபாத்தியாய் சொன்னது பரபரப்பை மூட்டியது.
சுனில் கங்கோபாத்தியாவைக் கடுமையாக விமர்சிக்கக் காரணமாக இருந்த நாவல் '
ரானு ஓ பானு'
. கடவுளரை
விமர்சனம் செய்யும் நாவலைப் பொறுத்துக் கொள்ளத் தயாராக இருந்த வங்காளிகள் கடவுளை
விட மிகுந்த பக்தியுடன் ஆராதனை செய்யும் தங்கள் மகா கவியைப் பற்றிய நாவலுக்குக்
கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார்கள்.
'ரானு ஓ பானு' என்ற நாவலின் மையப் பாத்திரம் மகா கவி ரவீந்திர நாத தாகூர். தலைப்பே தாகூர்
பக்தர்களுக்குக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தங்கள் மகா கவியை மையப் பாத்திரமாகக்
கொண்ட நாவலின் தலைப்பு ' பானு ஓ ரானு' என்றுதான் இருக்க வேண்டும். சுனில் கங்கோபாத்தியாய்
வேண்டுமென்றே ஒரு சாதாரணப் பெண்ணின் பெயரை முதலில் வைத்திருக்கிறார். இது
குருதேவரை அவமதிப்பது என்று சீறினார்கள்.
ஆனால், ரானு என்பது ஒரு சாதாரணப் பெண்ணின் பெயர் அல்ல.
தாகூருக்கிருந்த எண்ணிறந்த
தோழிகளில் ஒருவரின் பெயர். பிற பெண்களின் அடையாளத்தையும் பூர்வ கதையையும் கவிஞரின் எழுத்துகளிலிருந்து ஊகிக்க
முடியும். நிரூபிக்கவும் முடியும். ரானுவின் பெயரை ஊகிப்பது சிரமம். ரானு தனது
பத்தாவது வயதில் அறுபது வயதான தாகூரை
முதல் முதலாகச் சந்திக்கிறாள். கவிதை ஆர்வம் ததும்ப நடமாடும் அந்த வெகுளிச்
சிறுமி அவரைக் கவர்கிறாள். அந்தச்
சந்திப்புக்குச் சிறிது காலம் முன்பு காலமான தனது மகள் மாதுரிலதாவின் பிரதிபலிப்பாகவே ரானுவைக்
காண்கிறார். தொடர்ந்து தனது அன்புக் குரியவர்கள் மறைந்து போனதாலும் விலகிப் போனதாலும் மனதுக்குள் காயங்களைத்
தாங்கிக் கொண்டு தாகூர் வாழ்ந்த நாட்கள் அவை. பகிரங்கப் படுத்த முடியாத தனிமை
உணர்வில் திணறிக் கொண்டிருந்த வரை அவளுடைய அண்மை அவரை ஆறுதல் படுத்துகிறது. அவளுடைய
இலக்கிய ஆர்வம் வியப்படையச் செய்கிறது.
அவள் தன்மீது கொண்டி ருக்கும் மரியாதை பரவசமளிக்கிறது. பெரும் பான்மையான நாட்கள்
சாந்தி நிகேதனில் தன்னுடன் வசிக்கும் ரானு சொந்த ஊரான பெனாரசுக்குத் திரும்பி எழுதும் கடிதங்கள் அவரை குதூகலப்
படுத்து கின்றன. தான் இழந்த இளமையை அவள் மூலம் திரும்ப அடைகிறார். சிறுமியாக
அவளிடம் தோன்றிய வாஞ்சை அவள் பருவமடைந்த பின்னர் ஏதோ ஒரு கணத்தில் காதலாக
மாறுகிறது. ரானுவுக்கும் அப்படியே. உலகம் போற்றும் மகா கவிஞன் தனது புன்னகையில்
மெல்லிய ஒளியில் பிறர் கண்ணுக்குத் தென்படாத சுடர் விடுவதைப் புரிந்து கொள்கிறாள்.
ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் 'கவிஞனுக்கும் தேவதை'க்கும் இடையிலான நெருக்கம் நீள்கிறது. மிகப் பெரும்
செல்வந்தரும் தாகூரின் புரவலருமான சர். பிரேன் முகர்ஜியின் மனைவியாகிறாள் ரானு.
இருவரிடையே நிலவிய நெருக்கம் மறைகிறது. அந்த மறைவுடன் நாவல் முற்றுப் பெறுகிறது.
தனது நாடகமொன்றில் மையப் பாத்திரத்துக்குத் தாகூர் சூட்டிய பெயர் 'பானு சிம்மன்'. அந்தப் பெயரின் சுருக்கமான 'பானு'தான் தலைப்பில் தாகூரின்
பெயராகக் குறிப்பிடப் படுகிறது. ' ரானு, தயவு செய்து இனிமேல் என்னை பானு தாதா என்று அழைக்காதே. பானு
சிம்மன் என்றென்றைக் குமாகத் தொலைந்து போனான். இனி ஒருபோதும் அவன் திரும்பி வர
முடியாது'' என்பது இறுதி வாக்கியம்.
சுனில் கங்கோபாத்யாயா தாகூரின் அறியப்படாத காதலைக் கண்டெடுத் திருப்பது
கற்பனையிலிருந்தல்ல; உண்மையிலிருந்து. சீமாட்டி ரானு முகர்ஜியின் சுய சரிதையிலிருந்துதான். கையெழுத்துப் பிரதியாகத் திருமதி. ரானு முகர்ஜி
வைத்திருந்த தன் வரலாற்றிலிருந்துதான். அந்த வரலாற்றில் இரண்டு மனங்களின் காதல்
மட்டுமல்ல; அவர்கள் வாழ்ந்த காலத்தின்
நிகழ்விகளும் பதிவாகியிருக்கின்றன. சுனில் கங்கோபாத்தியாய் நாவலின்
கதையோட்டத்துக்குக் கொடுத்திருக்கும் அதே முக்கியத்து வத்தை உண்மை நிகழ்வுகளை இணைப்பதில் அளித்திருக்கிறார். தாகூர் காங்கிரஸ்
மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்வது, காந்தியுடன் உரையாடு வது போன்ற சம்பவங்கள் நாவலை உண்மைசார்ந்த கற்பனையாக மாற்று கிறது. உணர்ச்சிகரமான
வாசிப்புக்குரிய நாவலைப் படித்து முடித்து மூடும் போது உலகிலுள்ள எல்லா உயிர்களின்
துடிப்பு களையும் தன் வாயிலாக வெளிப்படுத்திய
பெருங் கவிஞர் மாற்ற முடியாத தனிமையில் அமர்ந்தி ருப்பதையும் அவரைத் தழுவிக் கொள்ள வாசகனின் கை நீளுவதையும் பார்க்கலாம்.
'ரானு ஓ பானு' ( வங்க நாவல் ) 2004
சுனில் கங்கோபாத்யாயா
ஆங்கிலத்தில் : ஷீலா சென்குப்தா
வெளியீடு; ஸ்ருஷ்டி பப்ளிஷர்ஸ்
அண்ட் டிஸ்டிரிபியூட்டர்ஸ்,
நியூ டெல்லி
நன்றி: தி இந்து ( 19 அக்டோபர் 2013 )
சனி, 28 செப்டம்பர், 2013
உறவின் நீளம் மூன்று கஜம்
தன்னுடைய சம வயதுப் பெண்கள் எல்லாரையும் போலவே ரானுவுக்கும் கனவு இருந்தது. கொஞ்சம் வசதியான வாழ்க்கை; தன்னைப் புரிந்து கொண்டாடுகிற கணவன். இவைதாம் அவளுடைய தேவைகள். ஆனால் நடைமுறையில் அது நிறைவேறவே இல்லை. பெற்றோரின் வற்புறுத்தலும் சமூகக் கட்டுப்பாடுகளும் தான் அவளுடைய வாழ்க்கையைத் தீர்மானித்தன. ஏக்கா (ஒற்றைக் குதிரை பூட்டிய வண்டி) ஓட்டியான திலோக்காவை மணந்து கொள்ள நேர்கிறது. குதிரைக்குக் கொள்ளுக்கும் குடும்பத்தினருக்குக்கு ரொட்டிக்கும் வருவாய் ஈட்டவே திணறுகிற குடும்பத்தில் புகுந்த பின்னர் பிறந்த வீட்டுத் தரித்திரம் இதை விடக் குறைவானது என்று படுகிறது. கணவனாக வந்த திலோக்காவோ குடிகாரன்; போதையேறினால் உதையப்பனாகிறவன். அவனாகச் சும்மா இருந்தாலும் அவனுடைய தாய் மருமகளைப் பற்றிப் புகார் சொல்லி அவனை உசுப்பி விடுகிறாள். திருமணமாகி போதைக்கும் சச்சரவுகளுக்கும் இடையில் இரண்டு குழந்தைகளைப் பெற்ற பின்னும் கொண்டு வராத சீதனத்தைப் பற்றிச் சொல்லிக் குத்திக் காட்டுகிறாள். தன்னுடைய எளிய கனவுகள் கூட நிறைவேறாத வாழ்க்கையை ரானு குல தெய்வமான வைஷ்ணோ தேவி யின் தீர்மானம் என்று ஏற்றுக் கொள்கிறாள். இந்த ஏற்றுக் கொள்ளும் உணர்வுதான் அவளைத் தொடர்ந்து வாழ வைக்கிறது. அவளும் எல்லாப் பெண்களையும் போல வம்பு பேசியும் திருவிழாக்களில் பங்கேற்றும் தனது சமரசத்தை நியாயப்படுத்திக் கொள்கிறாள்.
''நான் பிறந்து வளர்ந்த பஞ்சாபி கிராமப் புறங்களில் பார்த்த பெரும் பான்மை யான பெண்கள் அப்படித்தான் இருந்தார்கள். ஒருவேளை இன்னும் இருக்கிறார்கள். தங்களுடைய சங்கடங்களையே தங்களுக்குக் கிடைத்த வாழ்க்கையாகப் பார்க்கிறார். அவர்கள் எல்லாரின் ஒட்டு மொத்த வடிவம்தான் ரானு.'' என்று நாவலாசிரியர் ரஜீந்தர் சிங் பேடி (1915 – 1984)குறிப்பிடுகிறார். அவர் எழுதிய 'ஏக் சதர் மாலி சி' நாவலின் இழைதான் மேலே குறிப்பிடப் பட்டது.
ரஜீந்தர் சிங் பேடி உருது மொழியில் எழுதிய நவீன எழுத்தாளர்களில் முக்கியமானவர். அஞ்சல்துறை எழுத்தராகப் பணி புரிந்தவர் இலக்கிய ஆர்வத்தால் வேலையைத் துறந்து எழுத்தாளரானார். உருது மொழியில் சதாத் ஹசன் மண்டோவுக்கு நிகராகக் கதைகள் எழுதியவர். மண்டோவைப் போலவே திரையுலகிலும் நுழைந்து பொருட்படுத்தக் கூடிய படங்களில் பணியாற்றினார். 'ஏக் சதர் மாலி சி' நாவலுக்காக 1967 இல் சாகித்திய அக்காதெமிப் பரிசும் பெற்றார். பஞ்சாபிக் கிராம வாழ்க்கையின் நுட்பமான இழைகளைக் கோர்த்து அந்த மண்ணின் மனிதர்களைப் பற்றிய கதைகளை உருவாக்கியவர் பேடி. கீழ்த் தட்டு, நடுத்தர மக்களின் வாழ்க்கையை கரிசனத்துடன் பதிவு செய்தவர். முதன்மையாகப் பெண்களின் வாழ்வை.
இந்திய சமூக அமைப்பில் தேர்ந்து எடுக்கும் சுதந்திரம் இல்லா பிறவிகள் பெண்கள். குடும்பத்தின் வற்புறுத்தலுக்கும் சமூகத்தின் விதிகளுக்கும் அடிபணிவதாகவே அவர்கள் வாழ்க்கை அமைகிறது. அதை இயல்பான ஒன்றாக அவர்கள் நம்புகிறார்கள்; அல்லது நம்பவைக்கப்படுகிறார்கள். ரானுவும் அப்படித்தான் இருக்கிறாள். ஆனால் இக்கட்டான சூழ்நிலையை அவள் சமாளிக்கும் பக்குவம்தான் அவளைக் கதாநாயகியாக மாற்றுகிறது.
ஒருநாள், ஊர்ப் பிரமுகருக்காக ஒரு பெண்ணைத் தனது ஏக்காவில் அழைத்து வந்து சேர்க்கிறான் திலோக்கா. மறு நாள் வல்லுறவுக்கு ஆளாக்கப் பட்டு இறந்து கிடக்கிறாள். அவளுடைய சகோதரர்கள் அந்தப் பாதகத்துக்குக் காரணம் திலோக்கா என்று பழி சுமத்தி அவனைக் கொன்று விடுகிறார்கள். ஆதரவற்ற குடும்பம் மேலும் வறுமையில் ஆழ்கிறது. ஊர்ப் பஞ்சாயத்து - ஐந்து பேர் கொண்ட சபை ஒரு நிவாரணத்தை முன்வைத்து அதை ஏற்றுக் கொள்ளக் கட்டாயப் படுத்துகிறது. திலோக்காவின் தம்பி மங்களை, ரானு திருமணம் செய்து கொள்ள வேண்டும். ரானுவுக்கு அந்தத் தீர்மானம் அதிர்ச்சியை தருகிறது. மங்கள் அவளை விடப் பதினான்கு வயது இளையவன். கிட்டத்தட்ட மகனைப் போலவே அவளால் வளர்க்கப்பட்டவன். ஆனால் பஞ்சாயத்தின் தீர்ப்பு மாற்ற முடியாதது. எனவே 'மாலி சி சிதர்' என்ற சடங்குக்கு உடன்படுகிறாள். திருமணமல்லாத திருமணச் சடங்கு அது. மூன்று கஜம் நீளமுள்ள துணியை பெண்ணின் மேல் மைத்துனன் போர்த்தி விட்டால் அவள் அவனுக்கு மனைவியாகி விடுவாள். இந்தச் சடங்குக்குப் பிறகு மங்களுடனான தன் உறவை எப்படி ரானு கையாளுகிறாள் என்பது அவளை வழக்கமல்லாத பாத்திரமாக்கும் ஒரு செயல்.
ரானுவின் ஒரே எண்ணம் மகள் சன்னூவுக்கு பணக்காரனும் அழகனுமான மாப்பிள்ளையைப் பார்த்து மணமுடித்து வைக்க வேண்டும் என்பதே. அதுவும் கைகெட்டும் தூரத்தில் வருகிறது. திருவிழாவில் சன்னூவைப் பார்த்து வசமிழந்த ஒரு பணக்கார இளைஞன் சீதனமில்லாமல் அவளை மணந்து கொள்ள முன் வருகிறான். ஊர்த் திருவிழாவில் எட்ட நின்று அவனைப் பார்க்கும் ரானு மகள் வறுமையிலிருந்து தப்பித்தாள் என்று ஆறுதல் அடைகிறாள். ஆனால் பக்கத்தில் வந்த மாப்பிள்ளையைப் பார்த்ததும் நிலை குலைகிறாள். கணவன் திலோக்காவைக் கொன்றவன் அவன் என்று அடையாளம் கண்டு கொள்கிறாள். அவனை மகளின் கணவனாக ஏற்றுக் கொள்வதா, இல்லையா என்ற இக்கட்டான நிலைமையில் அகப்பட்டுக் கொள்கிறாள் ரானு. அதிலிருந்து மீண்டு எடுக்கும் முடிவே அவளைக் கதையிலிருந்து பிரித்து நிஜத்தின் வடிவமாக மாற்றுகிறது.
மிக எளிய கதை. ஆனால் பஞ்சாபி கிராம வாழ்வின் எல்லா நுட்பங்களையும் சேர்த்துக் கொண்டு அசாதாரமான ஒன்றாக இந்தக் கதையை மாற்றி யிருக்கிறார் ரஜீந்தர் சிங் பேடி.அண்ணிக்கும் மைத்துனனுக்குமான உறவின் கதையாகவோ கணவனைக் கொன்ற பணக்காரனை ஏழைப் பெண் பழி வாங்கும் கதையாகவோ எழுதப்பட்டிருந்தால் ஏற்பட்டிருக்கக் கூடிய விரசத்தையும் பிரச்சாரத்தையும் பேடியின் மானுடக் கரிசனம் தவிர்த்திருப்பதே இதை முக்கியமான நாவலாக ஆக்குகிறது.
இந்த நாவலை ஆதாரமாக வைத்துத் தானே இயக்குவதற்கான ஒரு திரைக் கதையையும் பேடி உருவாக்கியிருந்தார். ரானுவாக நடிக்க வைக்க விரும்பிய நடிகை கீதா பாலி மரணமடைந்து விடவே திரைப்பட முயற்சி கைவிடப் பட்டது. 1984 இல் பேடி மறைந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு சுக்வந்த் தாதா இயக்கத்தில் படமாக்கப்பட்டது. ஹேமமாலினி ரானுவாகவும் குல்பூஷண்கர்பாண்டா திலோக்காவாகவும் ரிஷி கபூர் மங்களாகவும் நடித்த படத்தைப் பார்க்க முடிந்தது. பிரபல பத்திரிகையாளர் குஷ்வந்த சிங்கின் நேர்த்தியான ஆங்கில மொழியாக்கத்தில் - ஐ டேக் திஸ் உமன் ' என்ற தலைப்பில் ,நாவலையும் படிக்க முடிந்தது. ஒப்பிட்டுச் சொன்னால், நாவல் பஞ்சாபி கிராம வாழ்க்கையை மனதுக்குள் கொண்டு வருகிறது. சினிமா அசட்டுக் கேளிக்கையாகவே தேங்கி நிற்கிறது.
ஐ டேக் திஸ் உமன் (நாவல்) 2007
உருது மூலம்: ரஜீந்தர் சிங் பேடி
ஆங்கிலத்தில் : குஷ்வந்த் சிங்
ஓரியண்ட் பேப்பர் பேக்ஸ், நியூ டெல்லி.
’தி இந்து’ நாளிதழில் வெளியான புத்தக அறிமுகக் குறிப்பின் சுருக்கப்படாத வடிவம்.
வெள்ளி, 20 செப்டம்பர், 2013
கவிதைக் கலை
அனஸ்டாஸிஸ் விஸ்டோனிடிஸ் ( கிரேக்கம்)
கவிதை,
தெருக்களில்
காற்றால் பெருக்கித் தள்ளப்படும் இலைகள் அல்ல
அது அசையாக் கடலோ
பாயும் படகோ அல்ல.
அது நீல வானமோ
தெளிந்த வெளியோ அல்ல.
கவிதை, பூமியின் இதயத்தில்
ஒரு ஊன்றிய கூர்முனை ஈட்டி
நகரங்களுக்குள் விசையுடன்
நேரடியாக இறங்கிய பளிச்சிடும் கத்தி.
கவிதை, ஒரு பதற்றம்,
பளபளப்பான உலோகத் துண்டு,
பனிக்கட்டி, உறைந்து கறுத்த காயம்.
கவிதை, பன்முக வைரம்போலக்
கடினமானது.
ஆசிய நதியில் விரைந்தோடும்
செதுக்கிய பளிங்குக் கல்போலத் திடமானது
கவிதை, கடந்து செல்லும்
பறவையின் குரல் அல்ல
அது தொடுவானையும் வரலாற்றையும்
துளைத்துப் போகும் துப்பாக்கி வெடி
கவிதை, தனது பாடம்செய்யப் பட்ட வலிக்குள்ளே
உதிர்ந்து விழும் மலர் அல்ல.
ANASTASSIS VISTONITIS
Anastassis Vistonitis was born in Komotini, Northern Greece, in 1952. He
studied Political Sciences and Economics in Athens. From 1983 to 1988 he lived
in the U.S.A. (New York and Chicago) and travelled extensively in Europe, North
America, Africa, Australia and Asia. From 1996 to 2001 he was a member of the board
of the E.W.C. (The Federation of European Writers) and
now he is its Vice-president. In addition
to poems, essays, book
reviews and articles contributed to many
leading quarterlies and
newspapers Anastassis Vistonitis has
published nine books of
poetry, two volumes of essays, three
travelogues, and a book of
short stories.
He was the General Editor of the
candidature file of Athens
for the Olympic Games of 2004. His
writings have been translated
into 14 languages and appeared in such
journals as Lettre
International, P.E.N. International,
Translation, Sodobnost, Helicon
and 2b (A Magazine of Ideas). He is a columnist of the leading
Greek newspaper To Vima and lives in Athens.
ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013
எத்தனை கவிதைகள் எத்தனை முகங்கள் - கலாப்ரியா
அன்பார்ந்த நண்பர்களே,
வணக்கம்.
சுகுமாரன் 38 ஆண்டுகளாக எழுதி வருகிறார். சற்றேறக் குறைய அதே ஆண்டுக்
காலமாக என் நண்பராயுமிருக்கிறார்.அவரது கோடை காலக் குறிப்புகள் நூல், அப்போதைய,
ட்ரடில் அச்சகத்தின் உச்ச பட்ச சாத்தியங்களுடன் அழகான அச்சு, ஓவியங்களுடன் ஒரு நிறைவான
பதிப்பாக வந்தது. 1979ல் தொடங்கிய என்
புத்தகச் சேகரிப்பின் 39-ஆவது புத்தகம் அது. (அப்படி எண்களெல்லாம் போட்டு
வைத்திருக்கும் காலம் அது.) அதற்கு முன்னரே அவரது கவிதைகளை கணையாழி, ழ, ஸ்வரம்,
மீட்சி என்று படித்திருக்கிறேன். அவற்றைத் தொகுப்பாகப் படிக்கும்போது அந்தக் கவிதைகள்
அவர் மீது ஏற்படுத்திய ஒரு சவாலான மதிப்பு இன்னும் குறையவே இல்லை. கிட்டத்தட்ட அதே
நேரத்தில் என்னுடைய கவிதைகள் குறித்து ‘பாலியல் மற்றும் வன்முறை’ (செக்ஸ் அண்ட் வயலன்ஸ்) சார்ந்து விமர்சனங்கள் வந்து
கொண்டிருந்தன. சுகுமாரனின் மொழியையும், அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் கவிஞர் பிரம்மராஜன்
வன்முறை சார்ந்த ஒரு மொழியாகக் குறிப்பிட்டிருந்தார்.அதனாலும் அவர் கவிதைகளின்
பால் ஒரு அதிக ஒட்டுதல் ஏற்பட்டது. அதற்கு
இன்னொரு காரணமும்உண்டு. சுதந்திரத்தை நோக்கி நகரும் கவிதைப் போக்கில் அவ்வப்போதையை
மொழியை மீறியும் மறுத்துமே புது மொழி அமைவது சரிதானா என்ற வாதப் பிரதிவாதத்தில்,
என்னுடன் சேர்ந்து நிற்க, அல்லது சேர்ந்து வாங்கிக் கட்டிக் கொள்ள, இன்னொருவர்
இருக்கிறார் என்று நினைத்ததும் ஒரு காரணம்..
ஆனால் சுகுமாரன் கவிதைகள்
மிகுந்த தர்க்க அடிப்படை கொண்டவை. அவர், தோன்றியவுடன் பதிவு செய்து உலவ விட்டு
விடுகிறவரில்லை.தர்க்கச் செறிவுடனும், இறுக்கமான வார்த்தைச் சேர்க்கையுடனும் கவிதை
தன் பூரிதமான உருவை எட்டும் வரை காத்திருப்பவர்.
அவரது சில கட்டுரைகளில் கவனித்தால் தெரியும்.
அவர் சொல்ல வருகிற ஒரு செய்தி தர்க்கத்திற்கு அப்பாற் பட்டதோ என்று தோன்றினால், ”சற்று குதர்க்கமாக யோசித்தால், அல்லது வகைப்படுத்தினால்” என்று குறிப்பிட்ட பின்தான் செய்தியைச் சொல்வார். தர்க்கத்திலும்
குதர்க்கத்திலும் அவ்வளவு கவனமானவர். அவரது ’இசை தரும் படிமங்கள்’என்ற கவிதையின் நான்கு கவிதைகளில், முதலாவதாக உள்ள ஒரு கவிதை மட்டுமே முதலில் கணையாழியில்,வெளிவந்தது. ஆனால் அந்தத்
தலைப்பின் கீழ் மீதமுள்ள மூன்றும் ’கோடை காலக்
குறிப்புக்கள்’
தொகுப்பில் சேர்ந்து வெளி வந்தன.
அவை எல்லாம் கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளியில் எழுதப் பட்டவை.( சில தொகுப்பில்
அவர் கவிதை எழுதப்பட்ட வருடம் மாதங்களைக் குறிப்பிடுவார்) இன்று அவற்றை வாசிக்கும்
ஒருவருக்கு அந்தக் கால இடைவெளி தெரியாது.அதன் தொனி ஒரே தளத்தில் அமைந்திருக்கும்.
காரணம், இசை. துயரமும் பச்சாதாபமும் புகையாய்ப் படிந்த தன் சுயத்திலிருந்து அவரை
மீட்டு வெளிக்காற்றின் மணங்களுக்கும் அற்புதங்களுக்கும் அவரை ஒப்புக் கொடுக்கும்
இசை. அந்தப் படிமங்களை அவர் மீட்டியிருந்த அல்லது இசைத்திருந்த விதம்தான் கால
வேறுபாடு எதுவும் தோன்றாமையின் காரணமாயிருக்கும். என்றைக்குமான ஸ்வர சுத்தமான மொழி
சுகுமாரனுடையது.
பிரம்மராஜன் குறிப்பிடுவது போல,
”பொதுப் பார்வையிலிருந்தும், தனி மனிதப்
பார்வையிலிருந்தும் கவிதைகளுக்குள் பெறப்படும் வாழ்வின் அம்சங்கள் சுகுமாரனின்
மனச் சூறாவளியில் இடம் மாறிப் போகின்றன; உருமாற்றம் அடைகின்றன. இந்த உருமாற்றம்
விளைவிக்கும் கவிதை வரிகள் வேறு எவரைப் போலவும் இவரை இல்லாதிருக்கச் செய்கின்றன.”
அவர் 1983 மார்ச்சில் எழுதிய ’பின் மனம்’ என்று ஒரு கவிதை.தனது முன் மனத்தையும் –பின் மனத்தையும் எதிர் எதிராக வைத்து ஒரு கவிதா
உரையாடலை நிகழ்த்தியிருப்பார். அந்தக் கவிதையை வாசிக்கலாம் என்று நினைக்கிறேன்.
பின் மனம்
சிலசமயம்
பெருங்காற்றுக்கும் பயப்படாமல் ஒரு இலையுதிர் கால மரம் போல
( கிளைகளில் சொற்களாய் தளிர்த்து மிரள்வேன் பின்பு)
சிலசமயம்
வரும் போகும் கால்களில் மிதிபட
டீக்கடைக்காரன் உலரப் போட்ட ஈரச்சாக்கு போல
(பரிவற்று வறண்டும் போவேன் பின்பு)
சிலசமயம்
பிரயாண நோக்கங்கள் துறந்த இலவஞ் சிறகு போல
( மூலைச் சிலந்தி வலையின் தனிமையில் தவிப்பேன் பின்பு)
சில சமயம்
சகல துக்கங்களையும் இறைக்கும்
சங்கீதம் போல
(தற்கொலையில் தோற்றவனின் மௌனமாவேன் பின்பு)
சில சமயம்
கண்ணாடியில் காத்திருக்கும் என் புன்னகை
(கால்களை விழுங்கிய விலங்கின் வாயிலிருந்து
கையுதறி அலறும் குழந்தை முகம் பின்பு
எனக்கு)
டீக்கடைக்காரன்,வீதியில் காயப் போடும் சாக்கு என் காலிலும்
மூளையிலும் பல சமயங்களில் ஈரத்தை அப்பியிருக்கிறது. பல வேளைகளில் சாக்கு எடுக்கப்படாமல் வீதியோடு
வீதியாக ஒட்டப்பட்டது போலக் கூடக் கிடக்கும். என் சிந்தனையிலும் அது ஒற்றைப் படிமமாய்
ஒட்டிக் காய்ந்து கிடந்ததும் உண்டு. ஆனால் சுகுமாரனிடம் அது இப்படியொரு அற்புதமான
கவிதையில் வித்தியாசமாக வெளிப்பட்டிருப்பதைத்தான் அவர் மீதான என் சவாலான மதிப்பு
என்கிறேன். ”சில தருணங்களை நிலை
நிறுத்தி காலத்தின் பகுதியாக்குவதும் அனுபவப் பொதுமையாக்குவதுமே கவிஞனின்
பணியாகிறது.”
என்று கவிதையில் பேருலகைத்
தரிசிக்கும் சுகுமாரனை நான் கொண்டாடுவது இதனால்த்தான்.இந்தத் தொகுப்ப்ல்
“அதற்குள்...” என்று ஒரு கவிதை.நான் அனுபவித்த தற்கொலை
முயற்சி அவருக்கு இருந்ததோ என்னவோ தெரியாது..ஆனால் அது பற்றி என்னால் யோசிக்கக்
கூட முடியாத வரிகளைக் கொண்டது இக்கவிதை. சாவா/ சாவுக்கு விரட்டும் கணங்களின்
வாழ்வா/காரணம் எது? தெரியவில்லை./ இருப்பினும்/இரண்டாவது தற்கொலை/ முதலாவதைப் போல
அரைகுறையாய் முடியாது/ அபத்தமாக இருக்காது/அது/ கனவின் பனியற்றதாக இருக்கும்/ அது/
நம்பிக்கையின் கானலற்றதாக இருக்கும்/அது/ மரணத்தின் நிச்சயமாக இருக்கும்.அது/
வெஞ்சினத்தின் கருணையாக இருக்கும்....இப்படி நீளும் இக்கவிதையில் ’வெஞ்சினத்தின் கருணை’ என்ற சொற்சேர்க்கை அபாரமானது, என் மதிப்பீடு சரியாமல்
பர்த்துக் கொள்பவை இப்படியான அற்புதங்கள்தான்.
இதிலிருந்து
முப்பதாண்டுகள் கடந்தும் அவர் எனக்குச் சவாலானவராகவே தெரிகிறார்.ஏனெனில் “அவரது கவிதைகளில்
புதிய அனுபவங்களுக்கான நிரந்தர வேட்கையுடன் இயங்கி வருபவர்,” அவர். இந்தத் தொகுப்பின் முன்னுரையில் அவர்
குறிப்பிட்டிருக்கிறார்.,”அனுபவங்களை முன் வைப்பதில் காட்டிய மெல்லிய தயக்கங்களை இந்தத்
தொகுப்பிலுள்ள கவிதைகள் கடந்திருக்கின்றன. என்னை நானே மீறிச் செல்லும் செயல் அது”. என்று. எனக்குத் தெரிந்து அவர் ஒவ்வொரு தொகுப்பிலும்
தன் முந்திய கவிதைகளை மீறியும் தாண்டியும்,மேலும் சிறப்பான கவிதைகளை நோக்கிய
பயணியாகச் செயல் படுவதாகவே தெரிகிறது. ஆனாலும் அவர் சொல்வதற்கேற்ப இந்தத்
தொகுப்பில் உள்ள ‘ஆணொரு பாகினி என்ற கவிதையை அவர் அவரை மீறிச் செயல்
பட்டிருப்பதற்கு உதரணமாகக் குறிப்பிடலாம்.
இன்னொன்று அவருடைய ’இடக்கரடக்கல்’ காரணமாகக் கூட அவர் இவ்வாறு சொல்லியிருக்கலாம்.
அவருடைய
இடக்கரடக்கல் பற்றி ஒன்றைக் குறிப்பிட வேண்டும். காலச் சுவடு இதழில் அவர்
புதுக்கவிதைகளின் எழுபதாவது ஆண்டையொட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். “அறுபதாயிரம்
காதல் கவிதைகளும் உதிரியான சில குறிப்புகளும்” என்று ஒரு கட்டுரை. இந்தக் கட்டுரையை வேடிக்கையான
பார்வையுடன் எழுத ஆரம்பித்து அது காரியார்த்தமான எல்லைகளுக்குள் சென்றிருப்பதாக
அவரே குறிப்பிட்டிருக்கிறார். இந்த நீண்ட கட்டுரையில் அவரது ‘காதல் கவிதைகள்’ பற்றி அவர் குறிப்பிடவில்லை. அதை அவர் செய்ய
முடியாது.வேறு யாராவது இதே கட்டுரையை எழுதியிருந்தால். முதலில் வரும் குற்றச்
சாட்டு ‘சுகுமாரனை’
விட்டு விட்டீர்கள் அல்லது
குறிப்பிடத்தகுந்த விடுபடல் சுகுமாரனின் கவிதைகள் என்று சொல்லியிருக்கலாம்.
Music is a moral law. It
gives soul to the universe, wings to the mind, flight to the imagination, and
charm and gaiety to life and to everything. ~Plato~ என்று ப்ளேட்டோ சொல்வதை காதலுக்கும்
பொருத்திப் பார்க்கலாம்.குறைந்த பட்சம் சுகுமரனின் காதல் கவிதைகளுக்கு கட்டாயம்
பொருத்திப் பார்க்கலாம்.ஏனெனில் இரண்டைப் பற்றியும் அவர் தோய்ந்து தோய்ந்து
கவிதைகள் எழுதியுள்ளார்.
நீருக்குக்
கதவுகள் இல்லை என்கிற இந்தத் தொகுப்பின் தலைப்பு தன்னுள் ஒரு வரியாய் வரும்
கவிதையைக் கவனிக்கலாம்.
நீராலானவள்
எந்தத் தடையும் இல்லாமல்
உள்ளே புக முடிகிறது
ஒரு மீனைத்
தண்ணீர் வரவேற்பது போல்
அனுமதிக்கிறாய்
எந்தத் தயக்கமும் கொள்ளாமல்
வெளியில் வர முடிகிறது
ஒரு நீர்த்தாவரத்திற்குத்
தண்ணீர் விடை கொடுப்பது போல
வழியனுப்புகிறாய்
மீண்டும் நுழைந்து
மீண்டும் வெளியேறித்
தெரிந்து கொண்டவை
இரண்டு உண்மைகள்
மீனுக்கும் தாவரத்துக்கும்
நீரின்றி வாழ்வில்லை
நீருக்கு கதவுகளும் இல்லை.
பெண்ணுறவை இயற்கை மீதான மோகமாகக் காட்டிய கவிஞர்கள் எனச் சிலரை சுகுமாரன்
குறிப்பிட்டு தன்னையும் அதில் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார். முதலில் சேர்க்கப்
படவேண்டியது அவர்தான்.
இத்தொகுப்பில் ’நந்தனும் மானஸியுமாக’ அவரது காதல் உலகே விரிந்திருக்கிறது என்று
கொள்ளலாம்.இத்தொகுப்பின் முதல்க் கவிதையான மழையில் திளைக்கும் பெரு நிலம் கவிதையை,
அதிவீரராம பாண்டியன் மொழியில் சொன்னால். “சாயுஜ்யம்”, (அல்லது இடக்கரடலுக்காக ஆங்கிலத்தில்சொன்னால் ’ஆர்காஸ்ம்’) பற்றிய
கொஞ்சம் வலி சேர்ந்த ஒரு காதல்க் கவிதையாகக் கொள்ளலாம். ‘உடன் படுக்கை விதிகள்’ கவிதையையும் சொல்லலாம். ஆனால் இதிலும், கவிதை முடியும்
போது ஒரு முரணைச் சுட்டி முடிக்கிறார். இது அவருக்கே கை வந்த கலை.
புது உலகின் தொன்மரபுகளை
உருவாக்கும் ஒரு கவிஞர் சுகுமாரன்.மூட்டைப் பூச்சியை தன்னுடன் எடுத்துச் செல்லும்
ஒரு கவிதையில் (இங்கு எளிமையான அனுபவம் அழகான கவிதையாகி இருக்கிறது. ஒருவேளை முன்
காலங்க்ளென்றால் சுகுமாரன் இந்த எளிய அனுபவத்தைக் கவிதையாக்காமல் விட்டிருப்பாரோ என்னவோ).இதில்
வருகிற மூட்டைப் பூச்சி வெளிப்படுத்தும் தற்காப்பு வாடை ஒரு புதிய தொன்மமாகத்
தோன்றுகிறது. (நரியும் தன்னைப் பிடிக்க வருபவர்களிடமிருந்து தப்பிக்க கெட்ட வாடையை
காற்றில் கரையவிட்ட படியே ஓடும் என்பார்கள்.என் பாஷையில் இதைச் சொல்லியிருப்பேன்
ஆனாலும் சுகுமாரன் கவிதைகள் படித்ததால், கவிதைகள் பற்றிப் படிப்பதால் கொஞ்சம்
அவையடக்கம் பேண வேண்டியிருக்கிறது.)
அது போலவே ‘சிந்துபாத்தின்
கடற்பயணம்’ கவிதை. இதில் வருகிற ‘கன்னித்தீவு’ ஒரு புதிய தொன்மரபு. இது சற்றே எளிமையான, குழந்தை உலகை
விவரிப்பது போல நகர்ந்தாலும். முடிவில் ஆறே ஆறு வார்த்தைகள், பெரியவர்கள் உலகினதாகத்
திருப்பிப் போட்டு விடுகிறது கவிதையை.(கவிதை பக் 19) இத்தாலிய நடிகை மோனிகா பெலூசியையும் மலேனா திரைப்படத்தையும் கூட ஒரு
வகையில் தொல்லியல்ச் சித்திரமாக ஆக்கி விடுகிறார். ‘PASSION OF CHRIST’ படத்தில் மகதல நாட்டு மேரியாக மோனிகாவை பார்க்கும்போது
இந்தக் கவிதை நினைவுக்கு வந்தது.இந்தக் கவிதையில் தொன்மமும் நவீனமும் மாறி மாறி
வந்து ஒரு அபூர்வ அனுபவமாக கவிதை முடியும். கவிதையாக்கத்தின் பூடக வசீகரங்களை
நன்கு அறிந்தவர் சுகுமாரன்.கலாச்சாரத்தின் பகுதியாக மொழியைக் கருதுபவர் அவர்.
கவிதை புதிய அனுபவங்களுக்கான
நிரந்தர வேட்கையுடன் இயங்குவது என்றும், என்னால் உணர முடியாத, அடைய முடியாத
அனுபவம் எனக்கு உணர்வாக மாறுகிற போது ஒரு பெரிய மானுடத் தொடர்ச்சியின் பகுதியாக
நானும் என்னுடைய படைப்பும் மாறுகிறோம் என்று தெளிவாகப் பிற படைப்புகள் குறித்துச்
சொல்கிற போதும் கவிதையின் பேருலகைத் தரிசிக்கிறவாராக அவரை நான் அடையாளம்
காணுகிறேன்.
அவருடைய சிலைகளின் காலம் தொகுப்பில் ஒரு கவிதை ’பாட்டி மணம்’ என்று அதில்
சில வரிகள்.
பாட்டியிடம்
சொற்களின் வானம் இருந்தது.
ஒரு சூரியனும் இருந்தது.
அவ்வப்போது சூரியன் விடிந்து
எனது சின்ன உலகில்
அநேக முகங்களை அடையாளம் காட்டியது
எத்தனை முகங்கள்...
எத்தனை நபர்கள்.....
இதே வியப்புடன் விடை பெறுகிறேன். சுகுமாரனது கவிப்பேருலகிலும் எத்தனை
கவிதைகள், எத்தனை முகங்கள்.நன்றி சுகுமாரன், நன்றி நண்பர்களே..
ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013
விசாரணை
மலையாள சமூக, பண்பாட்டு உலகங்களில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசப்பட்டு வரும் பெண்பாத்திரம் குறியேடத்து தாத்ரி. பாலியல் குற்றஞ் சாட்டப்பட்டு சமுதாயத்திலிருந்து விலக்கப்பட்ட தாத்ரி ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமாகப் புரிந்துகொள்ளப்பட்டவள்.
நூற்றாண்டின் ஆரம்பத்தில் நெறி தவறிய காமக் குற்றவாளி. பின்னர் ஆணாதிக்க வெறிக்கு இரையான அப்பாவி. இன்று பெண்ணுரிமையின் முதல் மலையாளிக் குரல்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் பிறந்து அடுத்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்து மறைந்த குறியேடத்து தாத்ரி கேரள சமூக வரலாற்றில் இன்றும் வாழ்கிறாள். ஆண் மேலாதிக்கம் அதன் எல்லா விதமான பிற்போக்குக் குணங்களுடனும் பரவியிருந்த சமுதாயத்தில் ஓர் அபலைப்பெண் தனது உடலையே ஆயுதமாக்கி நடத்திய கலகம், குற்றஞ் சாட்டியவர்களையே குற்றவாளிகளாக்கியது.அன்றைய சமூகக் கட்டுப் பாடுகளையும் அநீதியையும் சவாலுக்கு அழைத்த தாத்ரி விரட்டப் பட்டாள். வாழ்வின் இறுதிக் காலங்களில் அவளுக்கு என்ன நேர்ந்தது என்று புறவுலகுக்குத் தெரியவில்லை. ஆனால் தாத்ரியின் முடிவிலிருந்துதான் கேரள சமூக வாழ்க்கையின் மறுமலர்ச்சிக் காலத்தில் முக்கியமான அத்தியாயங்களில் ஒன்று ஆரம்பமானது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கேரளத்தில் நிலவிய மேற்சாதி ஒழுக்க விதிகள் பெண்ணை போகச்சரக்காக மட்டுமே கையாண்டன. பிற ஆணுடன் தொடர்புகொண்டிருந்த பிழைக்காக தாத்ரிக்குட்டி என்ற நம்பூதிப் பெண்மீது விசாரணை நடத்தி சமூக விலக்கு கற்பிக்கப் பட்டது. இந்த சம்பவம் நடந்தது 1905 இல். அந்த சமுதாய விசாரணையின் நோக்கத்தையும் நடை முறையையும் விளைவுக¨ளையும் அறிந்துகொள்ளும் முன்பு அந்தக்
காலத்தின் பண்பாட்டுச் சூழலையும் ஆண்-பெண் உறவுமுறையின் இயல்பையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இன்று ஒருங்கிணைந்த மாநிலமாகவுள்ள கேரளம் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் மூன்று முக்கிய நிலப்பகுதிகளாகப் பிரிந்திருந்தது. வடக்குப் பகுதி மலபார். மத்தியப் பகுதி கொச்சி சமஸ்தானத்துக்கு உட்பட்டது. தென்பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகை யிலிருந்தது. ஆனால், மூன்று பிரதேசங்களிலும் கலாச்சாரக் கட்டுமானம் மட்டும் பொதுவான
தன்மைகொண்டிருந்தது. சமுதாயத்தில் ஆணின் ஆதிக்கம் மேலோங்கி யிருந்தது.பெண்களும் கீழ்ச்சாதியினரும் வளர்ப்பு விலங்குகளாகவே பராமரிக்கப்பட்டனர். இந்தக் கொடுமைக்கு எதிரான முதல் போராட்டம் 1859 இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்தது. பிற்பட்ட வகுப்பினராக ஒதுக்கப்பட்ட சாணார் இனத்தவர் தங்களது பெண்கள் மார்பை சீலையால்
மறைத்துக்கொள்ள உரிமைகோரிப் போராடி வெற்றி பெற்றனர். பெண்ணின் மானம் என்பது அடிப்படையில் ஆணின் மரியாதையும் சமூகத்தின் கௌரவமும் மானிட மதிப்பீடுகளின் தேவையும் என்று உணரவைத்த போராட்டம் அது. இந்த விழிப்புணர்வின் கனலிலிருந்து படர்ந்த சுவாலைகள் தாம் நாராயண குருவும் அய்யங்காளியும். நாராயண குரு 1903இலும் அய்யங் காளி 1905இலும் சமுதாய மறுமலர்ச்சிக்கான அமைப்புகளைத் தோற்று வித்தனர்.
ஆனால் அதே காலப்பகுதியில்தான் கேரள சமூக அமைப்பின் மேல்தட்டி லிருந்த உயர் சாதியான நம்பூதிரி சமுதாயம் பெண்களை அடுப்படிக்குள் வேகவைத்துக்கொண்டிருந்தது. வெளி உலகில் பரவலாகியிருந்த மாற்றத்தின் அதிர்வுகள் நம்பூதிரி இல்லங்களில் நுழைய அனுமதிக்கப் படவில்லை. நிலவுடைமை பிடிநழுவாமலிருக்கவும் பிராமணீய அதிகாரம் பறிபோகாமலிருக்கவும் காபந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. கலாச்சார
ஆதிக்கத்தை வலுவாக்க விதிகள் இறுக்கப்பட்டன. அந்த இறுக்கத்தில் நம்பூதிரிப் பெண்கள் நெரிபட்டனர்.
நம்பூதிரி இல்லங்களில் மூசாம்பூரி என்று அழைக்கப்படும் மூத்த நம்பூதிரி மட்டுமே திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப் படுவார். அவருக்கு இளையவர்களான நம்பூதிரிகள் கோவில் ஊழியக்காரர்களான அம்பல வாசிகளின் வீட்டுப் பெண்களையோ நாயர் தறவாட்டுப் பெண்களையோ சம்பந்தம் செய்துகொள்ளலாம். சொத்துக்கள்மீதும் பெண்கள்மீதும் முழு
அதிகாரமுள்ள மூசாம்பூரி வயதைப் பொருட்படுத்தாமல் எட்டோ பத்தோ பெண்களை 'வேளி' (கல்யாணம்) நடத்திக் கொள்வார். விளைவு? குழிக்குப் போகிற பிராயமுள்ள நம்பூதிரிக்கு முந்தா நாள் பூப்படைந்த மணப்பெண். நம்பூதிரி இல்லங்கள் உதாசீனம் செய்யப்பட்ட பெண்களால் நிரம்பிய இருண்ட தொழுவங்களாக நின்றன.
திருமணம் என்ற பெயரால் இல்லத்தில் அடைக்கப்பட்டவர்களின் சக்களத்திப் போர்,நிறைவு செய்யப்படாத பாலியல் வேட்கை ஆகியவை பெண்களை முடக்கின.இளம் விதவைகளின் பெருமூச்சுகளால் இல்லத்தின் அகாயிகள் (உள் அறைகள்) தீச்சூளைகளாயின.மணமாகாத நம்பூதிரிப் பெண்கள் (நம்பூதிரிப் பெண்களுக்கு அந்தர்ஜனம் என்று பெயர்) கனவுகளையும்
ஆசைகளையும் விழுங்கி கன்னியராக முதிர்ந்தனர்.கூந்தல் நரைத்து, உடல் குன்றி சாவுக்காகக் காத்துக் கிடந்தனர். அப்படி இறந்துபோகும் முதிர் கன்னிகளால் குலத்துக்கு சாபம் வந்து விடாமலிருக்க அந்த பிணத்துடன் உடலுறவுகொள்ள வெளியிலிருந்து கீழ்ச்சாதிக்காரர்களான 'நீசர்கள்' அமர்த்தப்பட்டனர்.இந்த தோஷ பரிகாரம் 'நீச கர்மம்' என்று அழைக்கப்பட்டது.
பண்பாட்டு விதிகளில் ஆண்களுக்கு நிரந்தர சலுகையிருந்தது. ஒரு நம்பூதிரிப் பெண் அந்நிய ஆடவனுடன் தொடர்புகொண்டால் அவள் களங்கப்பட்டவள். அவள் மீது சமுதாய விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணைக்கு 'ஸ்மார்த்த விசாரம்' என்று பெயர். நம்பூதிரி கிராம சபைகளின் நடவடிக்கை களைச் செய்யும் ஸ்மார்த்தர்களும் மீமாம்சகர்களும் அடங்கிய குழு அந்தர் ஜனத்தின் ஒழுக்கக்கேட்டை விசாரிக்கும். அதற்குத் தோதாக குற்றம் சாட்டப்பட்ட பெண் தனியறையில் அடைக்கப்படுவாள்.உறவினர் எவரும் அவளை நெருங்கவோ உணவோ தண்ணீரோ கொடுக்கவோ அனுமதிக்கப் படமாட்டார்கள். இருண்ட அறையில் ஒண்டிக்கிடக்கும் 'குற்றவாளி'க்கு அவளுடைய தாசி(பணிப்பெண்) மட்டும் உதவலாம்.காமக்குற்றம் சாட்டப்பட்ட பெண் 'சாதனம்' என்று அழைக்கப்பட்டாள். சாதனம் தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளச் செய்ய பலவிதமான உபாயங்கள் பிரயோகிக்கப் பட்டன. பாயோடு சுருட்டிக்கட்டி மாளிகையின் மேலிருந்து அவளை எறிவது ஒருமுறை.அவளை அடைத்துவைத்திருக்கும் அறைக்குள் விஷ ஜந்துக்களை விடுவது இன்னொரு உபாயம்.இந்த தண்டனைகளிலிருந்து தப்பினால் அவள் நிரபராதி. ஆனால் அப்படி யாரும் தப்பியதில்லை.விஷப் பிராணிகளுக்கு ஒழுக்க விதிகள் பற்றிய ஞானமில்லாததே காரணம்.
அடைக்கப்பட்டிருக்கும் 'சாதன'த்தை ஸ்மார்த்தர்களின் பஞ்சாயத்து விசாரிக்கும்.உயிர் வற்றி உடல் ஒடுங்கிய சாதனம் பெரும்பாலும் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்.தன்னைப் போகித்தவன் யார் என்று சொல்லிவிடும். அத்துடன் சாதனம் இல்லத்திலிருந்தும் சமுதாயத்திலிருந்தும் விலக்கப் படும். இல்லத்திலிருந்து வெளியேற்றி கதவை அடைத்து பிண்டம் வைக்கப்படும்.
நீத்தாருக்கான சடங்கு அது.இனி அவள் உயிரற்றவள். இறந்தவள். இல்லத்தி லிருந்து எறியப் பட்ட சாதனத்தை பிரம்மனின் சந்ததிகளல்லாத எந்த நீசனும் பொறுக்கிக்கொள்ளலாம்.ஆனால் அதற்கு யாரும் முன்வந்ததில்லை.தொழில் அதிகாரத்தை வைத்திருக்கும் மேற்சாதியுடன் மோதிக்கொள்ளத் துணிந்த தில்லை.
சமுதாயத்திலிருந்து பிரஷ்டம் செய்யப்பட்ட பெண்கள் திசையறியாத ஏதோ நிலப்பரப்பில் மண்ணில் புதைந்து மக்கிப்போயிருக்கலாம். எரிந்து சாம்பலாகிக் கார்றில் கரைந்திருக்கலாம். அவர்களுக்கு வரலாறு இல்லாமற் போயிற்று.இந்த சமுதாய அநீதிகளைத் தனது உடலை ஆயுதமாகவும் அவர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளையே தந்திரோபாயமாகவும் மாற்றி
எதிர்கொண்டதன் மூலம் வரலாற்றுப் பாத்திரமானவள் குறியேடத்து தாத்ரிக் குட்டி.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் எண்பதுகளில் அரங்கோட்டுக் கரையில் கல்பகசேரி இல்லத்தில் அஷ்டமூர்த்தி நம்பூதிரியின் மகளாகப் பிறந்தவள் சாவித்திரி. பிடிவாதக்காரக் குழந்தையாக வளர்ந்தாள். பெண்கள் கல்வி கற்பது ஆசாரத்துக்கு ஒவ்வாததாகக் கருதப்பட்ட காலத்தில் அருகிலிருந்த குரு குலத்தில் படிக்க அந்தப் பிடிவாதம் துணைசெய்தது. தர்க்க புத்தியுடனும்
சுதந்திர வாஞ்சையுடனும் வளர்ந்த பெண் பூப்படைந்தபோது தீச்சுடரின் அழகுடன் ஒளிர்ந்தாள். உடல் மலர்வதற்கு முன்னும் உடல் மலர்ந்த பின்னும் அவளை மோகித்து கலந்தவர்கள் பலர் என்று செவிவழிக் கதைகள் சொல்கின்றன.
தாத்ரியை வேளி முடித்து அனுப்பியது குறியேடத்து இல்லத்துக்கு. அவ்வாறு வெறும் சாவித்திரிக் குட்டி குறியேடத்து தாத்ரியாகிறாள்.அவளை மணந்தவர் குறியேடத்து இல்லத்தை சேர்ந்த இரண்டாம் சந்ததியான ராமன் நம்பூதிரி. இந்த மணஉறவில் ஒரு சதி மறைந்திருந்தது.
நம்பூதிரிக் குடும்பங்களில் மூத்தவரான மூசாம்பூரிக்கு மட்டுமே திருமணம் செய்துகொள்ளும் உரிமை.இரண்டாமவரான அப்பன் நம்பூதிரி திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றால் வேத விதிப்படி ஒரே ஒரு வழியிருந்தது. மூசாம்பூதிரியால் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு வாரிசை உற்பத்தி செய்ய முடியாமலிருந்தாலோ தீராத நோயிருந்தாலோ அவரது அனுமதியுடன்
வைதிகமுறைப்படி பரிகாரங்கள் நடத்திய பின்பு இரண்டாமவர் மணமுடித்துக் கொள்ளலாம். குறியேடத்து நம்பியாத்தன் நம்பூதிரி தீராத நோயாளியாக இருந்தார்.அதனால் ராமன் நம்பூதிரிக்கு தாத்ரியை மணந்துகொள்ள முடிந்தது. ஆனால் முதலிரவில் அவளுடன் உறவுகொண்டவர் மூசாம்பூதிரி. தாத்ரியின் கனவுகள் பொசுங்கின. மனம் துவண்டது.உடல் களவாடப்பட்டது. அந்த கொடூர நொடியில் தாத்ரி வெஞ்சினப் பிறவியானாள்.தன்னை வஞ்சித் தவர்களைப் பழிவாங்க தனது உடலை ஆயுதமாக்கினாள். அவளது மாமிசப் பொறியில் பல ஆண்கள் சிக்கினர்.
தாத்ரியின் துர்நடத்தை ஊர்ப்பேச்சாக மாறியது.கொச்சி சமஸ்தானத்தின் ராஜா விசாரணைக்கு அனுமதியளித்தார். தாத்ரியை முன்னிருத்திய ஸ்மார்த்த விசாரம் நாற்பது நாட்கள் நீண்டது. தன்னைக் காமப்பிழைக்கு ஆளாக்கியவர்களைப் பற்றி முப்பத்தியொன்பது நாட்கள் எதுவும் பேசாம லிருந்தாள் தாத்ரி. அப்படிப் பேசாமலிருப்பது ஒருதலைப்பட்சமான தீர்ப்பில் முடியும். தான்மட்டுமே குற்றத்தின் பாரத்தைச் சுமக்கவேண்டியிருக்கும் என்ற உள்ளுணர்வில் நாற்பதாம் நாள் தன்னோடு கிடந்தவர்களை அடையாளம் காட்டினாள்.அவள் பகிரங்கப்படுத்திய வரிசையில் அறுபத்தி நான்கு புருஷர் களின் பெயர்கள் இருந்தன.அறுபத்தி ஐந்தாவது பெயரைச் சொல்வதற்கு முன்பு பணிப்பெண்ணிடம் ஒரு மோதிரத்தைக் கொடுத்து சபையில் காட்டச் சொன்னாள். 'இந்தப் பெயரையும் சொல்லவேண்டுமா?' என்று அவள் கேட்டதும் ஸ்மார்த்தனும் மீமாம்சகனும் மகாராஜாவும் அதிர்ந்து நடுங்கினர். அந்த நொடியில் ஸ்மார்த்த விசாரம் முடிந்தது. தாத்ரியுடன் உறவுகொண்ட அறுபத்தி நான்கு ஆண்களும் விலக்கு கற்பித்து நாடு கடத்தப்பட்டனர். தாத்ரிக் குட்டிக்குப் பிண்டம் வைக்கப்பட்டது. அவளுடைய முதுகுக்குப் பின்னால் மரண ஓலத்துடன் கதவு அறைந்து மூடப்பட்டது. அவள் இறந்து போனவர் களில் ஒருத்தியாகக் கருதப்பட்டாள்.
தாத்ரி வெளிப்படுத்திய அறுபத்தி நான்கு பெயர்களில் எல்லா வயதினரும் இருந்தனர். உறவினர்கள் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புள்ளவர்கள், அண்டை வீட்டவர்கள்,கல்வி கற்பித்த குரு,இல்லத்துக்கு வந்துபோன இசைவாணர்கள், கதகளிக் கலைஞர்கள் என்று எல்லா ஆண்களும் இருந்தனர். அதிர்ச்சியளிக்கும் விதத்தில் பெற்ற தகப்பனின்பெயரும் உடன்பிறந்த சகோதரனின் பெயரும் இருந்தன. தாத்ரி சொன்னவர்களில் பாதி அவளை வீழ்த்தியவர்கள். மறுபாதி அவளால் வீழ்த்தப்பட்டவர்கள். அவள் சொல்லாமல்விட்ட அறுபத்தி ஐந்தாவது பெயர் கொச்சி மகராஜாவின் பெயர் என்றும் ராஜாவுக்கு நெருக்கமுள்ள நபரின் பெயர் என்றும் நிரூபணம் செய்யப்படாத ஊகங்கள் நிலவின.இன்றும் அது விடுவிக்கப்படாத புதிர்.
குறியேடத்து தாத்ரி சம்பவத்துக்கு முன்பும் சில அந்தர்ஜனங்கள் பிரஷ்டம் செய்யப்பட்டிருக்கிறார்கள். வாயில்லாப் பிராணிகளாக தண்டனையை ஏற்றுக்கொண்டு மடிந்து காலத்தின் புழுதியாக அவர்கள் மறைந்தனர்.தாத்ரி குட்டி மட்டுமே எதிர்விசாரணைக்குத் தயாரானவள். தன்மீது சுமத்தப் பட்ட குற்றத்தின் ம்றுபக்கத்தை அம்பலப்படுத்தி தார்மீக உறுத்தலை உண்டாக்கியவள். ஆணாதிக்க மனோபாவத்தையும் பெண்ணுக்கு விரோதமான சாதியொழுக்க விதிகளையும் கேலிக்குள்ளாக்கியவள்.எந்த உடல் பாவக்கறை படிந்தது என்று உதாசீனமாகச் சொல்லப்பட்டதோ அதே உடலை ஆயுதமாக தாத்ரி மாற்றினாள். எந்த ஒழுக்க விதிகள் தன்னைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தனவோ அதேவிதிகளை தனது பிரதிவாத மாக்கினாள். 'குலப்பெண்ணுக்குத்தான் பிரஷ்டம். எப்போது ஒரு குலப் பெண்ணை நடத்தை கெட்டவள் என்று தீர்மானிக்கிறீர்களோ அப்போதே அவள் அந்தத் தகுதியிலிருந்து கீழே தள்ளப்பட்டு வேசியாகிறாள். வேசியின் தர்மத்தைக் கேள்வி கேட்கவோ அவளைத் தண்டிக்கவோ ஸ்மார்த்த சபைக்கு என்ன அதிகாரம்?' என்ற தாத்ரியின் கேள்வியில் அன்று மிரண்ட சமுதாயம் பின்னர் ஸ்மார்த்த விசாரம் நடத்தவில்லை.
நாடு கடத்தப்பட்ட அறுபத்து நான்கு ஆண்களில் ஒருவரைத் தவிர யாரும் பின்னர் சொந்த மண்ணுக்குத் திரும்பவில்லை. கதகளிக் கலைஞரான காவுங்ஙல் சங்கரப்பணிக்கர் மட்டும் சமுதாய விலக்கிலிருந்து விடுவிக்கப் பட்டார். தன்னை நாடுகடத்திய ராஜாவிடமிருந்து கலைக்காகப் பரிசு பெறுவதை சபதமாகக்கொண்டு தீவிர சாதகத்தில் ஈடுபட்டார். நாடுகடத்தப்
பட்டவருக்கு மேடைகள் மறுக்கப்பட்டன. ஒருவேளைச் சோறோ ஒரு மிடறு நீரோ தலைசாய்க்க ஒரு திண்ணையோ அகப்படாமல் அலைய நேர்ந்தது. எனினும் சங்கரப் பணிக்கர் தளரவில்லை. அறுவடை முடிந்த வயல் வெளிகளை அரங்காக்கி கதகளி நிகழ்ச்சிகளை நடத்தினார்.புரவலர்க ளல்லாத சாமானிய மக்கள் அவருக்கு ஆதரவளித்தனர்.அதுவரை கோவில்களின்
கூத்தம்பலங்களிலும் நம்பூதிரி இல்லங்களிலும் தனி ரசனைக்குரிய கலையாக இருந்த கதகளி அவரால் பொது ரசனைக்குரிய ஊடகமானது. அந்தக் கலைஞரின் மறு அரங்கேற்றத்துக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. கடைசியில் எந்த ராஜாதிகாரம் பிரஷ்டம் செய்ததோ அதே கொச்சி
மகாராஜாவிடமிருந்து தனது கலைக்குரிய அங்கீகாரமாக பரிசும் பெற்றார் சங்கரப் பணிக்கர்.
தாத்ரி சம்பவத்தால் சமுதாயத்திலிருந்து விலக்கப்பட்ட பலரும் அவளைச் சபித்திருக்கிறார்கள். சபிக்காத நபர் சங்கரப் பணிக்கர். இருவருக்குமிடையில் பாலியல் ஈர்ப்பை மீறிய உறவு உருவாகியிருந்தது. ஒரு கலைஞனுக்கும் ரசிகைக்குமான உறவு. சங்கரப் பணிக்கர் கதகளியில் ஏற்ற பாத்திரங்க ளெல்லாம் பகன்,கீசகன் என்று அசுர இயல்புள்ள பாத்திரங்கள். அவற்றைச்
சித்தரிப்பதில் முரட்டுத்தன்மையை மீறி சில அடவுகளில் பெண்மையின் சாயல் இருந்தது. அது தாத்ரியின் சிநேகம் அளித்த கொடை என்றும் கருதப் படுகிறது. மனித தேகமல்ல கலையின் பரவச நுட்பம்தான் தாத்ரியிடம் காதலையும் காமத்தையும் கிளரச் செய்திருக்கிறது.
ஸ்மார்த்த விசாரம் நடத்தி பிரஷ்டு கற்பிக்கப் பட்ட குறியேடத்து தாத்ரிக்கு என்ன ஆயிற்று என்பது வாய்மொழிக் கதைகளிலிருந்தே அறியப்படுகிறது. தாத்ரி விசாரணை பற்றிய தகவல்கள் வில்லியம் லோகன் எழுதிய 'மலபார் கையேட்'டில் (மலபார் மானுவல்) விரிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன. ஆனால் பின்கதைகள் அனைத்தும் மக்கள் பேச்சிலிருந்தே பெறப்படுகின்றன.
சம்பவத்தோடு தொடர்புடைய பலரது பின் தலைமுறையினர் இன்றும் வாழ்கிறார்கள் என்ற நிலையில் வாய்மொழித் தகவல்களை பொய்யென்று தள்ளுபடி செய்வதும் தவறாகிவிடும்.
சமுதாயத்தால் விலக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றும் பொறுப்பு மகாராஜாவைச் சேர்ந்தது.கூடாவொழுக்கத்துக்காக தண்டிக்கப்பட்டவளை ஊர் மத்தியில் பராமரிப்பது ராஜ நீதிக்கு இழுக்கு என்பதால் புறம்போக்குப் பகுதியில் அவளுக்கான வீடும் நிலமும் ஒதுக்கப்படும். வைதீக நியதி அது. அதுபோன்று தாத்ரிக்கும் பெரியாற்றின் கரையில் மயானத்தையொட்டி
இடம் ஒதுக்கப்பட்டது. அங்கே அவள் வாழ்ந்ததற்கான சான்றுகளில்லை. 1905 இல் இறந்து போகவில்லை என்பது மட்டும் நிச்சயம். முன் காலங்களில் பிரஷ்டம் செய்யப்பட்ட பிற பெண்களைப்போல தாத்ரியும் பாண்டிதேசத்துக்கு -தமிழ்நாட்டுக்கு- அடைக்கலம் தேடிப் போனாள் என்பது ஏற்றுக்கொள்ளப் பட்ட விவரம். தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆங்கிலோ- இந்தியர் ஒருவரை மணந்து மூன்று பிள்ளைகளுக்குத் தாயுமாகியிருக்கிறாள். இரண்டு பெண்களும் ஓர் ஆணும். மகள்களில் ஒருத்தி பாலக்காட்டிலும் மகன் சென்னையிலும் வாழ்ந்தார்கள். சென்னைவாசியான மகள் வயிற்றுப் பேத்தி நடிகையாக அறிமுகமாகி மலையாளத் திரையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக நட்சத்திரமாக ஜொலித்திருக்கிறாள்.
அறுபத்தைந்து பேருடன் உடலுறவு கொண்டும் கர்ப்பமடையாத தாத்ரி மூன்று குழந்தைகளுக்குத் தாயானது உயிரியல் விந்தையா? மனதின் தந்திரமா? என்பது இன்றும் தெளிவாகாத ரகசியம்.
ஸ்மார்த்த விசாரத்தின்பேரில் புறக்கணிக்கப்பட்ட ஆண்கள் குற்றவுணர்வால் சாதியும் பெயரும் மாறி வேறிடங்களுக்குப் போனார்கள். அவ்வாறு வெளியேறிய ஒருவரைப் பற்றி மலையாளச் சிந்தனையாளரும் இலக்கிய வாதியுமான எம்.கோவிந்தன் பின்வருமாறு எழுதினார்.
'மேனோன் சாதிப்பிரிவைச் சேர்ந்த அவர் திருச்சூர் நகரத்தில் முன்சீப்பாகவோ மாஜிஸ்திரேட்டாகவோ பணியாற்றி வந்தார்.திருமணமானவர். ஸ்மார்த்த விசாரத்தில் விலக்கப்பட்டவர்களின் பட்டியலில் அவர் பெயரும் இருந்தது. பதறிப்போன அவரது மனைவியும் குடும்பத்தினரும் மேனோனைக் கைவிட்டனர்.ஊரைவிட்டு வெளியேறினார் மேனோன். அப்போது இளைஞராக இருந்த அவர் பாலக்காடு ஜில்லாவில் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த எளிய குடும்பத்துப் பெண்மணி ஒருவரை மணந்துகொண்டு பிழைப்புத் தேடி இலங்கைக்குப் போனார்.தம்பதியருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். பெரும் சம்பாத்தியம் எதுவும் தேடாமல் இலங்கையிலேயே காலமானார் மேனோன். அவரது விதவை பாலக்காட்டுக்குத் திரும்ப மனமில்லாமல் தமிழ் நாட்டில் குடியேறினார். வீட்டு வேலை பார்த்தும் சின்னச்சின்ன வேலைகளில் ஈடுபட்டும் பிள்ளைகளை வளர்த்தார். பிற்காலத்தில் அந்த இரு பிள்ளைகளும் திரைப்பட நடிகர்களானார்கள். அவர்களில் ஒருவர் தமிழக மக்களின் அமோக ஆதரவுக்குப் பாத்திரமானார். காலப்போக்கில்அவர்களை ஆள்பவருமானார்.'
கேரளத்தின் மறுமலர்ச்சி சிந்தனையில் பெண் விடுதலை குறித்த விழிப்புணர்வைத் தூண்டி விட்டதில் குறியேடத்து தாத்ரியின் கலகத்துக்கும் பங்குண்டு. தாத்ரி கலகம் நடந்து முடிந்த இரண்டாண்டுகளுக்குப் பிறகு நம்பூதிரிகளை மனிதர்களாக மாற்றும் நோக்கத்துடன் 'யோக க்ஷேம சபை' தொடங்கப்பட்டது. நம்பூதிரிக் குடும்பத்தில் பிறந்தவராயினும் அதன் மனு நீதிக்கும் ஆதிக்க விதிகளுக்கும் கலாச்சார அடக்குமுறைக்கும் பிற்போக்கு மனோபாவத்துக்கும் எதிராக இளைஞர்கள் கிளர்ந்தெழுந்தனர். செயலாலும் பேச்சாலும் எழுத்தாலும் புதிய உணர்வு களைத் தோற்றுவித்தனர்.
பின் நாட்களில் அவர்களில் முன் வரிசையில் நின்றவர் வி.டி.பட்டதிரிப்பாடு. பெண் உரிமை பிரச்சனை ஆணின் பிரச்சனையும் சமூகத்தின் பிரச்சனையும் அதன் விரிவாக மானுடப் பிரச்சனையுமாகிறது என்று உணர்த்தினார் அவர். இல்லங்களின் சமையற்கூடங்களில் வெந்து உருகிக்கொண்டிருந்த பெண்களின் அவலத்தை மையமாக்கி அவர் எழுதிய 'அடுக்களையிலிருந்து அரங்கத்துக்கு' என்ற நாடகம் ஸ்மிருதிகளின் விலங்குகளிலும் மனு தர்மத்தின் தளைகளிலும் பூட்டப்பட்டிருந்த உயிரின் சுதந்திரத்தை உசுப்பியது. அந்த நாடகம் தான் ஈ.எம்.எஸ். உட்பட பல சமூக சீர்திருத்தவாதிகளை உருவாக்கியது.
குறியேடத்து தாத்ரிக்கு கலாச்சார நாயகியின் மதிப்பை ஏற்படுத்தியவரும் வி.டி.தான்.அதன் தொடர்ச்சியாகத்தான் ஒவ்வொரு கால கட்டத்திலும் தாத்ரியை மையப்படுத்தி படைப்புகள் உருவாயின. மலையாள இலக் கியத்தில் ஆழமான செல்வாக்குச் செலுத்திய கலாச்சாரப் பாத்திரமாக தாத்ரியைச் சொல்லலாம். தாத்ரியின் வரலாற்றை விரித்தும் அதன் அறியப் படாத பக்கங்களின் மர்மத்தைத் தேடியும் கவிதைகளும் கதைகளும் நாடகங்களும் திரைப்படங்களும் உருவாக்கப்பட்டன. 'அபராதியான அந்தர்ஜனம்' என்ற தலைப்பில் ஒடுவில் குஞ்ஞிக்கிருஷ்ண மேனோன் எழுதிய கவிதையே முதல் படைப்பு. மாடம்பு குஞ்ஞிக்குட்டனின் 'பிரஷ்டு',
லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் 'அக்னி சாட்சி' (சிற்பியின் மொழியாக்கத்தில் தமிழில் வெளி வந்துள்ளது), உண்ணி கிருஷ்ணன் பூதூரின் 'அம்ருதமதனம்', நந்தனின் 'குறியேடத்து தாத்ரி' இவையெல்லாம் தாத்ரியின் நாவல் முகங்கள். எம்.கோவிந்தன் எழுதிய 'ஒரு கூடியாட்டத்தின் கதை'- தாத்ரி குட்டிக்கும் கதகளி கலைஞர் சங்கரப் பணிக்கருக்குமிடையில் இழையோடிய காதலைச் சொல்லும் நீள்கவிதை.'யக்ஞம்' என்ற ஸ்ரீதேவியின் நாடகம் ஸ்மார்த்த விசாரத்தை சமகாலச் சூழலில் பொருத்தும் மறுவாசிப்பு.
ஒரு கூடியாட்டத்தின் கதையில் இடம் பெறும் ஆண்-பெண் உறவின் கனவையும் காதலையும் மையக் கருவாக வைத்து மூன்று திரைப்படங்கள் உருவாயின. எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதிய 'பரிணயம்' (இயக்கம்: ஹரிஹரன்), அரவிந்தன் இயக்கிய 'மாறாட்டம்', ஷாஜி என்.கருண் இயக்கிய 'வானப்ரஸ்தம்'.
இந்த ஆண்டுடன் தாத்ரி குட்டி மீதான விசாரணைக்கு நூறு வருடங்கள் நிறைவு பெறுகின்றன. வெறும் காமப் பிசாசு என்று சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் உதாசீனத்துக்குள்ளான ஒருபெண் நூற்றாண்டு கடந்தும் நினைக்கப்படுவதன் காரணம், தாத்ரியின் அரூபமான முன்னிலையில் எல்லா கலாச்சார மனங்களும் மறைமுக விசாரணைக்குள்ளாவதாக இருக்கலாம்.
ஆதார நூல்கள்:
1.வி.டி.யுடெ தெரஞ்ஞெடுத்த க்ருதிகள் (வி.டி.யின் தேர்ந்தெடுத்த படைப்புகள்)
2.ஒரு கூடியாட்டத்தின்டெ கத (ஒரு கூடியாட்டத்தின் கதை) - எம்.கோவிந்தன்
3.லோகண்டெ மலபார் மான்யுவல் (லோகனின் மலபார் மானுவல்)
4.தாத்ரிக்குட்டியுடெ ஸ்மார்த்த விசாரம் (தாத்ரி குட்டியின் ஸ்மார்த்த விசாரம்) ஆலங்கோடு லீலா கிருஷ்ணன்
5.அடுக்களையில் நின்னும் அரங்ஙத்தேக்கு (அடுப்படியிலிருந்து அரங்குக்கு) வி.டி.பட்டதிரிப்பாடு
6.கண்ணீரும் கினாவும்- வி.டி.யுடே ஆத்ம கத (கண்ணீரும் கனவும் - வி.டி.யின் தன் வரலாறு)
2005 ஆம் ஆண்டு எழுதப்பட்ட் கட்டுரை. முதலில் ‘உங்கள் நூலகம்’ இதழில் வெளிவந்தது. பின்னர் ‘வெளிச்சம் தனிமையானது’ கட்டுரை நூலில் (உயிர்மை பதிப்பகம், சென்னை ,2008) சேர்க்கப்பட்டது.
ஓவியம் நன்றி: நம்பூதிரி.