ரிதுபர்ண கோஷை முதலில் சந்திததது 2005 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் சர்வதேசத் திரைப்பட விழாவில். அவருடைய அந்தர்மஹால் என்ற படம் அந்த விழாவில் திரையிடப்பட்டது. அதற்காக வந்திருந்தவரிடம் நான் பணியாற்றிய தொலைக் காட்சி சார்பாகச் சந்தித்தேன். தொழில் நிமித்தமான தாக அல்லாமல் அந்தச் சந்திப்பு ஒரு நட்பின் தொடக்கமாக இருந்தது என்பதை ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரே என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. 2010 ஆம் ஆண்டு அதே திரைப்பட விழாவுக்கு அபோமன், நௌகாதோபி ஆகிய புதிய படங்களுடன் வந்திருந்தார். அப்போது நான் தொலைக் காட்சிப் பணியிலிருந்து விலகி விட்டிருந்தேன். அவரைச் சந்தித்த
முன்னாள் சக ஊழியரிடம் என்னைக் குறிப்பிட்டுச் சொல்லி விசாரித்திருக்கிறார். அதைத் தெரிந்து கொண்டு அவரை இரண்டாம் முறையாகச் சந்தித்தேன். அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் அமர்ந்து பேசினோம். முதல் அறிமுகத்துக்குப் பின்னர் அவருடன் எந்த விதமான தொடர்பும் எனக்கில்லை. இருந்தும் அவர் என்னை நினைவில் வைத்திருந்தது ஆச்சரியத்தை யும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. அந்த உணர்வுகளே அவரது எல்லாப் படங்களையும் பார்க்கும் உந்துதலை ஏற்படுத்தியது. அவரது திரைப் படங்களைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அதன் முன்னோட்டமாக இந்தக் குறிப்பு. ரிதுபர்ண கோஷின் முதல் ஆண்டு நினைவையொட்டி ஒரு நாளிதழில் வெளியிடும் நோக்கில் எழுதப் பட்டது இந்தக் குறிப்பு. தவிர்க்க முடியாத காரணத்தால் இதழில் வெளிவரவில்லை. அதை இங்கே பதிவேற்றுகிறேன் - நண்பர் ரிதுபர்ணோவுக்கு அஞ்சலியாக.
சென்ற ஆண்டு இதே மே மாதம் 30ஆம் நாள் வங்காளத் திரைப்பட இயக்குநர் ரிதுபர்ண கோஷ்
மறைந்தார். இறுதி விடை பெற்றுச் சென்றபோது
இந்த உலகுக்கு விட்டுச் சென்றது கலைநயம் மிகுந்த பங்களிப்புகளை. தானே
திரைக்கதை எழுதி இயக்கிய 21 படங்கள், நடித்த 5 படங்கள், திரைக்கதை மட்டும் எழுதிய ஒரு படம் - எனக் குறிப்பிடத் தக்க படைப்புகளை விட்டுச்
சென்றிருக்கிறார்.
வங்காளத் திரையுலகில் சத்யஜித் ராய்க்குப் பின் வந்த கலைச் சினிமாவின் பிரதிநிதிகளில் ரிதுபர்ண
கோஷும் ஒருவர். தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் கலைப்பட இயக்குநராகப் பரிசுகளும்
விருதுகளும் பெற்றவர். எனினும் அதற்குரிய அங்கீகாரம் அவருக்குக் குறைந்த அளவிலேயே
அளிக்கப்பட்டது. அதிகம் பேசப்படாத ஆளுமை யாகவே இருந்தார். இந்தியக் கலைச் சினிமா
இயக்குநர்கள் பற்றி மிக விரிவான ஆய்வு நூலான
'தி
எசென்ஷியல் மிஸ்டரி' யை எழுதிய ஜான் டபிள்யூ ஹூட் அந்த நூலில் சத்யஜித் ராய்க்குப் பின் வந்த
இயக்குநர் களைப் பற்றிச் சொல்லும் பகுதியில் கூட ரிதுபர்ண கோஷைக் குறிப்பிடவில்லை.
இவ்வளவுக்கும் அந்த நூல் வெளிவந்த தருணத்தில் ரிதுபர்ண கோஷ் தனது முக்கியமான எட்டு
படங்களை இயக்கிப் புகழ் பெற்றிருந்தார். அதை விடவும் முக்கியம் சத்யஜித் ராயின்
மறைவுக்குப் பின்னரும் மிருணாள் சென்னின் ஓய்வுக்குப் பின்பும் சுணங்கிப்
போயிருந்த கலைச் சினிமா வகைக்குத் தனது படங்களால் புத்துயிர் அளித்தவர் அவர்தான்.
ஆனால் தனது கலைக்கு அங்கீகாரம் பெறுவதை அவ்வளவு முக்கியமானதாக அவர் கருதவில்லை. ''என் வேலை நல்ல படங்களை
உருவாக்குவது. அது மட்டுமே என் அக்கறை'' என்று குறிப்பிட்டார்.
சத்யஜித் ராயின் படங்களுக்குப்
பின்னர் கலைப் பட ரசிகர்களைத் தாண்டி பொது ரசிகர்களிடமும் பெரும் வரவேற்புப்
பெற்றவை ரிதுபர்ண கோஷின் படங்களே. அவரது படங்களைச் சத்யஜித் ராயின் அழகியலின்
தொடர்ச்சி யாகவே காணலாம். தனது கலை வாழ்க்கையையும் சத்யஜித் ராயின் மானசீக
வாரிசாகவே அமைத்துக் கொண்டவர் ரிதுபர்ண கோஷ். ராயைப் போலவே கோஷும் விளம்பர
நிறுவனமொன்றில் ஓவியராக வாழ்க்கை யைத் தொடங்கியவர். இருபத்தியோராவது வயதில் தனது
முதல் படமான 'ஹிரேர் அங்கதி' ( வைர மோதிரம் 1992
) யை இயக்கினார்.
பிரபல வங்காளி எழுத்தாளர் சீர்ஷேந்து முகோபாத்தியாயாவின் நாவலை அடிப்படையாகக்
கொண்ட படம். குரு சத்யஜித் ராயை
மானசீகமாகப் பின் தொடரும் செயலின் முதல் கட்டம் இது. ராயின் முதல் படமான பதேர்
பாஞ்சாலியும் நாவலின் திரையாக்கம் தான்.
இருவரையும் ஒப்பிட்டுப் பேச உதவும் இன்னொரு அம்சம் ரவீந்திர நாத தாகூர்
மீது இருவரும் கொண்டிருந்த பற்று. இருவரும் தாகூரின் தலா மூன்று கதைகளுக்குத் திரை
வடிவம் கொடுத்திருக்கிறார்கள்.இருவரும் தாகூரின் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்ட
ஆவணப்படங்களை இயக்கியிருக்கிறார்கள். படத்தின் கதை யமைப்பு, பாத்திரச் சித்தரிப்பு, காமிராக் கோணங்கள். இசை
ஆகிய அம்சங்களில் ராயின் வலுவான செல்வாக்கை ரிதுபர்ண கோஷ் படங்களில் பார்க்க
முடியும். ஒப்பீட்டு நோக்கில் ராய் விட்ட இடத்திலிருந்து கோஷ் தனது கலைப் பட முயற்சிகளைத் தொடர்ந்தார் என்றோ ராயின் மேதைமையை நெருங்க
முயன்றார் என்றோ நவீனப் படுத்தினார் என்றோ சொல்லலாம். ஆனால் அதையும் கடந்த
தனித்துவம் அவரது படைப்புகளில்
நிலவியது.
ரிதுபர்ண கோஷின் முதல் படம் குழந்தைகளுக்கான படமாக எடுக்கப் பட்டது. '' ஆனால் இந்தியக்
குழந்தைகளுக்கு அந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவேயில்லை'' என்று அவரே ஒப்புக்
கொள்ளவும் செய்தார். ரிதுபர்ண கோஷின் இரண்டாவது படம் 'உனிசே ஏப்ரல் '( ஏப்ரல் 19) . 1994 இல் வெளிவந்த இந்தப்
படம் அந்த ஆண்டுக்கான தேசிய அளவில் சிறந்த படத்துக்கான தங்கத் தாமரை விருதையும்
சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றது. கலைப்பட உலகில் ரிதுபர்ண கோஷின் வருகையை
உறுதி செய்தது.அன்று முதல் அவரது இறப்புக்குப் பின்னர் சென்ற ஆண்டு வெளியான 'சித்ராங்கதா' வரையிலான படங்கள் அவரது
இடத்தை நிர்ணயித்தன.
மனித உறவுச் சிக்கல்களே ரிதுபர்ண கோஷின் படங்களின் ஆதார இழை 'உனிசே ஏப்ரல்' நாட்டியமணியாகப் புகழ் பெற்ற தாய் சரோஜினிக்கும் மகள்
அதிதிக்கும் இடையிலான உறவை ஆராய்கிறது.
தனது கலை ஈடுபாடு காரணமாகத் தாய் தன்னைப் புறக்கணித்ததாக மகள் நினைக்கிறாள்.
சரோஜினிக்குக் கிடைக்கும் புகழ் கணவன் மனீஷை தொந்தரவுக்குள் ளாக்குகிறது. அதன்
காரணமாக நேரும் முரண்பாட்டில் இருவரும் விலகுகிறார்கள். மனீஷ் மகள் அதியைத் தனது
பராமரிப்பில் வளர்க்கிறான். அந்த வளர்ப்பு அவளைத் தாயிடம் இருந்து இன்னும்
அந்நியமாக்குகிறது. சரோஜினிக்கு நாட்டிய சாதனைக்கான விருது வழங்கப்படுகிறது அந்த
நாள் கணவன் மனீஷின் நினைவு நாள். அதைப் பற்றிய ஞாபகமே இல்லாதவள் என்று தாயைக்
குற்றம் சாட்டும் மகளுக்கு சரோஜினி தனது துயரங்களைச் சொல்லுகிறாள். தாயும் மகளும்
பரஸ்பரம் புரிந்து கொள்ளும் இடத்தில் படம் முடிகிறது. இருவரும் ஒரு விஷயத்தைப்
புரிந்து கொள்கிறார்கள். அது பெண்கள் என்பதனாலேயே ஆண்களால் வஞ்சிக்கப் படுகிறோம்
என்பது.
உனிசே ஏப்ரல் படத்தில் தொடங்கும் பெண்புலச் சார்புநிலைதான் ரிதுபர்ண கோஷின்
படைப்புகளின் மொத்தச் சூழல். அவர் இயக்கிய பெரும்பான்மை யான படங்களும் பெண்ணின் நிலையை மையமாகக்
கொண்டவை. பெண்ணின் தரப்பிலிருந்தே அல்லது பெண்ணின் சார்பாகவே வாழ்க்கையின்
சிக்கல்களைப் பார்ப்பவை. ஆங்கிலத்தில் அவர் இயக்கிய ' தி லாஸ்ட் லியர் ' ( 2007), கடைசிப் படமான 'சத்யான்வேஷி' இரண்டும் மட்டுமே இந்தச்
சார்பிலிருந்து கொஞ்சம் விலகியவை. எனினும் இரண்டிலும் மையப் பிரச்சனை பெண்ணை முன்னிருத்தியது தான். ஷேக்ஸ்பியர் நாடகங்களில் நிபுணரான ஹரிஷ்
மிஸ்ரா தனது கலை வாழ்க்கையின் உச்சநிலையில் ஏன் நடிப்பைத் துறந்தார் என்பதைச்
சொல்கிறது லாஸ்ட் லியர். ஒரு மர்மக் கொலையின் பின்னணிகளைத் துப்பறிகிறது
சத்யான்வேஷி. இரண்டிலும் மையக் காரணம் பெண்கள்.
நடுத்தர வயதைக் கடந்த மணமாகாத பெண் ஒரு திரைப்பட இயக்குநரால் எவ்வளவு
நாசூக்காக ஏமாற்றப் படுகிறாள் என்பதை பர்வாலி (
வீட்டு உரிமையாளி - 1999 ) என்ற படமும் பெரு நகரத்தில் வன்முறைக்கு ஆளாக்கப் பட்டப்
பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய கணவனும் அவன் குடும்பமும் அவளையே அந்த
அசம்பாவிதத்துக்குக் காரணமாகக் குற்றம் சாட்டுவதைப் பற்றிய கோபத்தை 'தஹன்' என்ற படமும் திருமண முதல்
நாளிலேயே கணவனை இழந்த நுண்ணறிவும் சுதந்திர வேட்கையும் கொண்ட பெண்ணின் நிலையை 'சோக்கர் பாலி' ( கண்ணில் விழுந்த துகள் - 2003 ) என்ற படமும் இணக்கமான குடும்ப வாழ்க்கை நடத்தி வரும்
தம்பதியரின் வாழ்வில் நிகழும் விபத்து, கணவனின் மறைக்கப்பட்ட காதலை மனைவிக்கு வெளிப்படுவதன்
மூலம் ஏற்படும் உறவுச் சிக்கல்களை 'தோஸார் ' ( தோழமை 2006 ) என்ற படமும்
சித்தரிக்கின்றன.
இந்திய சினிமாவில் பெண்களைச் சார்ந்து உருவாக்கப்பட்ட படங்களில் மிக அதிக
எண்ணிக்கையில் இருப்பவை ரிதுபர்ணகோஷின் படங்களாக இருக்கலாம். மிகைப்படுத்தலோ உரிமை முழக்கமோ செய்யாமல் பெண்நிலை சார்ந்தே அவை
உருவாகியிருக்கின்றன. அவரது மிகச் சிறந்த படங்களில் ஒன்றான 'அபோமன் ' ஓர் உதாரணம். கலைப்பட இயக்குநரான
அநிகேதுக்குத் தனது படத்தில் நடிக்க வந்த தன் மகனின் வயதையொத்த பெண்ணிடம் ஏற்படும்
ஈர்ப்பையும் அதன் மூலம் மனைவியுடன் நேரும் முரணையும் இந்தப் படம் சொல்லுகிறது.
அநிகேத்தின் வாழ்க்கைச் சம்பவங்களாகத் திரையில் காட்டப்படுபவை உண்மையில் சத்யஜித்
ராயின் நிஜ வாழ்க்கையுடன் ஒப்பிடக் கூடியவை. சத்யஜித் ராய்க்கும் அவரது 'சாருலதா' படத்தின் நாயகியான மாதவி முகர்ஜிக்கும் இடையிலிருந்த மென்
காதலையே ரிதுபர்ண கோஷ் திரைக் கதையில் கையாண்டிருந்தார். இது ராயை அவமதிக்கும்
செயல் என்று வங்காளிகள் மத்தியில் முணுமுணுப்பு எழுந்தது. ஆனால் படம் யாரையும்
குற்றம் சாட்டாமல் மனித மனத்தின் விசித்திரங்களையும் தடுமாற்றங்களையுமே பேசுகிறது. குறிப்பாக, பெண்களின் சார்பாக.
பெண்ணின் உலகைச் சித்தரித்த பல இயக்குநர்கள் சினிமாவில் இருக்கிறார்கள். பெண்
இயக்குநர்கள் பலரும் அதை எந்த ஆண் இயக்குநரை விடவும் மிக இயல்பாகவும் உண்மையாகவும்
செய்திருக் கிறார்கள். ஆனால் அத்தகைய சித்தரிப்புகாக, உடல்,உயிர் இரண்டையும் அர்ப்பணித்தவர்
ரிதுபர்ண கோஷ். இயற்கையாகவே பெண்ணியல்புகள் கொண்டவராகக் கருதப்பட்டவர் அவர். தானே
ஒரு பெண்ணாக வாழ்வதில் விருப்பம் கொண்டிருந்தார். 'மனித இனத்தில் உயர்வானது பெண்
இனம்தான்' என்று
நேர்காணலில் அதை அழுத்தமாகவும்
கூறியிருந்தார். இந்த விருப்ப உணர்வைத் தொடர்ந்து பேணினார். ஒரு கட்டத்தில்
பெண்மையின் சாயலில் வெளிப்படவும் செய்தார். பெண்கள் அணிவதுபோன்ற ஆடையில் பொது
அரங்குகளில் பங்கேற்றார். நண்பரும் இயக்குநருமான கௌசிக் கங்கூலியின் ' அவுர் ஏக்தி பிரேமேர்
கப்போ' ( இன்னொரு
காதல் கதை - 2011 ) படத்தில் தன்பால் விழையும் பாத்திரத்தில் – ஹோமோ செக்ஷுவல்- துணிந்து
நடித்தார். பண்பாட்டுக் காவலர்களின் கண்டனங்களைப் பொருட்படுத்தாமல் தனது
விருப்பங்களைத் தோற்றத்திலும் தனது படங்களிலும்
வெளிப் படுத்தினார். மாற்றுப் பாலினத்தவரின் உலகை அதன் சிக்கல்களுடனும்
நுட்பங்களுடனும் கவனித்தார். அதன் உச்ச கட்டம் அவரது கடைசிப் படமான ‘சித்ராங்கதா' . தாகூரின் பிரபலமான நாடகத்தின் திரையாக்கம் இந்தப்
படம். அதில் அவர் ஏற்று நடித்தது ஆணுடலில்
பெண் உணர்வு கொண்ட ருத்ரா என்ற பாத்திரத்தை. ஒரு திருநங்கையின் உடலியல், பாலியல், உளவியல் சமூகவியல் நெருக்கடிகளை
மிக எதார்த்தமாக நடித்துக் கலையாக்கினார். அதற்காக அவர் தனது மொத்த வாழ்க்கையையே
பலியிட்டார்.
’சித்ராங்கதா’ படத்தின் இறுதிக் கட்ட வேலைகள்
நடந்து கொண்டிருந்த போது கடந்த மே 20 ஆம் தேதி ரிதுபர்ண கோஷ் காலமானார். திடீர் மாரடைப்பே
மரணத்துக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.
ரிதுபர்ண கோஷ் பல நோய்களால் தாக்குண்டவராகவே இருந்தார். நீரிழிவு, கணையக் கோளாறு, இதய நோய் எல்லாம் அவரைத்
துன்புறுத்தி வந்தன. அதற்கான மருத்துவ சிகிச்சைகளையும் மேற்கொண்டிருந்தார். கூடவே
தன்னைப் பெண்பாலாக மாற்றிக் கொள்வதற்கான ஹார்மோன் சிகிச்சை களுக்கும்
உட்பட்டிருந்தார். ஒரு படத்தில் பெண் பாத்திரம் ஏற்பதற்காக மார்பக
வளர்ச்சிக்கான அறுவையையும் செய்திருந்தார். ஐம்பதைத் தொடும் வயதில் அவரை மரணம்
விரைந்து வந்து தீண்டியதற்கு அந்தச் சிகிச்சையும் ஒரு காரணம். 'எனது கலைக்காக எந்தத் தியாகத்தையும் செய்ய நான் தயார்'
என்று ஒரு
நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். அதை சாகசமாக நிரூபித்தும் காட்டினார்.