பழைய கோப்புகளில் மறைந்திருந்த சில சரக்குகள் அண்மையில் கைகளில் சிக்கின. அவற்றில் இரண்டு கட்டுரைகள் இவை. பஷீர் பற்றிய கட்டுரை அவரது மறைவையொட்டி எழுதப்பட்ட அஞ்சலிக் குறிப்பு. துணையாசிரியராகக் குங்குமம் வார இதழிலும் ஒரு அஞ்சலிக் குறிப்பை எழுதியிருந்தேன். இந்த இரண்டாவது அஞ்சலி மு.அப்பண்ணசாமி ஆசிரியராக இருந்த இணைய இதழான ‘ஆறாம் திணை’க்காக எழுதியது என்று ஞாபகம்.
திரைப்பட நூற்றாண்டை முன்னிருத்தி எழுதப்பட்டது ‘எலிப்பத்தாயம்’ சினிமாவைப் பற்றிய கட்டுரை.
இரண்டு கட்டுரைகளும் 1994 ஆம் ஆண்டில் எழுதப்பட்டவை. இருபது ஆண்டுகளுக்குப் பின்பு இப்போது வாசிக்கும்போது ‘மோசமில்லை’ என்று நம்பத் தோன்றுகிறது.
*
தன்னை எழுதிய பஷீர்
அந்த முஸ்லிம் இளைஞருக்கு பூமி முழுவதும் அலைந்து திரியும் வரம் வாய்த்திருந்தது.
சுதந்திரப் பேராட்டம் கனன்று எரிந்து கொண்டிருந்த காலம். முஸ்லிம் இளைஞரும் ஆவேசத்துடன் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். வெறும் அமைதிப் போராட்டம் மூலம் சுதந்திரம் வராது என்று நம்பினார். தீவிரவாத அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். தீவிரவாதியான பகத்சிங்கைப் போல மீசை வைத்துக் கொண்டார். அமைப்புக்காக ‘உஜ்ஜீவனம்’ என்ற அனல் பறக்கும் பத்திரிகையையும் நடத்தினார். அதில் எழுதிய கட்டுரைகளுக்காக அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் அவரைத் தேடியது. அவரது நிழலை உளவாளிகள் பின்பற்றினார்கள். அமைப்பின் மற்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். முஸ்லிம் இளைஞர் மட்டும் தப்பினார்.
ஒரு நள்ளிரவு. போலீஸ்காரர்களின் கண்களை ஏமாற்றிவிட்டு முஸ்லிம் இளைஞர் மறைந்தார்.ஏழு வருடங்கள் இந்தியா முழுவதும் சுற்றியலைந்தார். அந்த அலைச்சலில் வாழ்க்கைப் புத்தகத்தின் பல பக்கங்களைக் கற்றுக் கொண்டார் பலவித வேலைகளைச் செய்தார். பல இடங்களில் திரிந்தார். பல மொழிகளைக் கேட்டார்.
“தேவாலயங்கள், சிதிலமான நகரங்கள், மலைச் சிகரங்கள், குகைகள், நதிகள் என்று நினைவுகள் போகின்றன. பார்ப்பது, கேட்பது, சிந்திப்பது, புரிந்து கொள்வது. அநேக மனிதர்களைத் தெரிந்து கொண்டேன்” என்று அவர் பிற்காலத்தில் குறிப்பிட்டார்.
அந்த அனுபவங்கள்தான் முஸ்லிம் இளைஞரை எழுத்தாளராக்கின. அந்த இளைஞர்தாம் தனது எண்பத்தி ஆறாம் வயதில் அண்மையில் காலமான மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர்.
“நான் எழுத்தாளன் ஆனதற்குக் காரணம் என்னைப் போன்ற சோம்பேறிக்குப் பொருத்தமான தொழில் அதுவே என்பதால்தான்” என்று பஷீர் குறிப்பிட்டிருந்தார்.
தாமதமாக எழுதத் தொடங்கிய சோம்பேறி பஷீர் ‘காதல் கடிதம்’ (பிரேமலேகனம்) நாவல் மூலம் மலையாள வாசகர்களின் கவனத்தை ஈர்த்தார். இரண்டாவது நாவலான ‘இளம் பருவத்துத் தோழி’ (பால்யகால சகி) அவரை மலையாள இலக்கியத்தில் முத்திரைப் பெயராக மாற்றியது.
‘பால்யகால சகி’ அளவில் சிறிய நாவல். எண்பது பக்கம் கொண்ட இந்த நாவலின் புதுமையும், ஜீவனும் இன்னும் குறைந்து விடவில்லை என்பது காலத்தின் மகத்தான சலுகை.
மஜீத், சுஹ்ரா என்ற இரு சிறுவர்கள் நேசிக்கிறார்கள். வயது வளர நேசமும் வளர்கிறது. காதலாகிறது. ஆனால் சூழ்நிலையின் தந்திரம் அந்தக் காதலைத் தீய்த்து விடுகிறது.
“பால்யகால சகி” வாழ்க்கையிலிருந்து கிழித்தெடுத்த ஒரு பக்கம். அதன் விளிம்புகளில் இன்னும் இரத்தம் கசிகிறது’’ என்று மலையாள விமர்சகர் எம்.பி.பால் இந்த நாவலுக்கு முன்னுரை எழுதினார்.
காதல் துயரைப் பற்றிச் சொல்லும் இந்த நாவல் பஷீரின் சொந்த அனுபவம் என்றே சொல்லலாம். “அதன் கடைசிக் கட்டம் மட்டுமே கற்பனை. அந்தக் காதலன் இப்போதும் இருக்கிறான். என்ன தலையில் வழுக்கை விழுந்து விட்டது” என்று நகைச்சுவையாகவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார் பஷீர்.
1944 இல் தொடங்கிய பஷீரின் எழுத்து வாழ்க்கை ஏறத்தாழ எண்பதுகள் வரை நீடித்தது. சிறுகதை, நாவல்கள், அனுபவக் குறிப்புகள் என்று முப்பத்தி இரண்டு புத்தகங்கள் நவீன மலையாள இலக்கியத்துக்கு அவரது பங்கேற்பு.
மலையாள உரைநடை இலக்கியத்தில் வைக்கம் முகம்மது பஷீரை முக்கியமானவராகக் குறிப்பிட இரண்டு காரணங்கள்.
முதற்காரணம், அவர் தீட்டிய வித்தியாசமான பின்னணி.கேரள மக்கள் தொகையின் கணிசமான பகுதி முஸ்லிம் மக்களைக் கொண்டது. அந்த மக்களின் வாழ்க்கையை உலகுக்குக் காட்டிய முதல் இலக்கியச் சாளரத்தைத் திறந்து வைத்தவர் பஷீர்தான்.
இதே காரணத்துக்காகப் பிற்காலத்தில் பஷீர் ஒரு முஸ்லிம் மதவாதி என்றும் விமர்சனம் செய்யப்பட்டார். ஆனால் பஷீரின் இலக்கியக் கண்ணோட்டம் மதச்சார்பற்றது. உண்மையில் அவரது பார்வை ஒரு ரிஷியின் பரிவும் கருணையும் நிரம்பியது. இரண்டாவது காரணம் அவரது சித்தரிப்புத்திறன். வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிற அடித்தட்டு மக்கள்தாம் பஷீரின் படைப்புலகப் பிரஜைகள். அவர்கள் என்னவாக இருக்கிறார்களோ அப்படியே உயிரும் உணர்வுமாக இலக்கியத்தில் குடியமர்த்தியவர் அவர். அவரது நடை சாதாரணத்திலிருந்து உருவாக்கப்பட்ட அசாதாரணம். கொச்சையான பேச்சு வழக்கை அவர் இலக்கிய மொழியாக மாற்றினார்.
எந்த எழுத்திலும் அதை எழுதிய எழுத்தாளனின் அனுபவச் சாயல் இருக்கும். ஆனால் தன்னையே கதா பாத்திரமாகவும் தனது சொந்த வாழ்க்கையையே கதைக்களமாகவும் வைத்து பஷீர் உருவாக்கிய படைப்புகள் மலையாள இலக்கியத்துக்குப் புதுமை சேர்த்தவை.
‘பாத்தும்மாவின் ஆடு’ என்ற நாவல் பஷீரின் சொந்த அனுபவம் என்றால் ‘எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது’ என்ற நாவல் அவரது சமுதாய அனுபவம். முதல் நாவலில் அன்பின் பெயரால் நடைபெறும் சுரண்டலையும், இரண்டாவது நாவலில் நிகழ்காலத்தை மறந்த சமுதாய அறியாமையையும் சுட்டிக் காட்டுகிறார். ஆனால் இரண்டு நாவல்களும் நகைச்சுவை இழையில் பின்னப்பட்டவை.
பஷீரின் சிறுகதைகள் நுட்பமானவை. ‘பூவன் பழம்’ என்ற அவரது கதை மலையாளச் சிறுகதையின் இனிமைக்கும் மெருகுக்கும் காட்சியாக நிற்கிறது.
கர்ப்பிணியான ஜமீலாவுக்கு பூவன் வாழைப்பழத்தின் மீது ஆசை. கணவன் அப்துல் காதரிடம் கேட்கிறாள். அது பூவன் பழம் கிடைக்கும் பருவமல்ல. இருந்தாலும் அப்துல் காதர் பழத்துக்காக அலைந்தான். கடைசியில் சலித்துப் போய் ஆரஞ்சுப் பழம் ஒன்றுடன் திரும்பி வருகிறான். மனைவியும் ஏற்றுக்கொள்கிறாள். அவளுக்கும் அது பூவன் பழமல்ல என்று தெரியும். ஆனால் கணவனின் அன்பு புளிப்பான ஆரஞ்சைப் பூவன் பழம் என்று நம்பச் செய்கிறது.
மெல்லிய இழையில் மின்னும் பனித்துளி போல அமைந்த நுட்பமான கதை.
தமிழ்ச் சிறுகதையின் சாதனையாளரான புதுமைப் பித்தன் குறிப்பிட்டார். ‘எனது உலகத்தில் கல்லும் பேசும். மூட்டைப் பூச்சியும் கதை சொல்லும்.’
இந்த மேற்கோளை பஷீரின் கதைகளுக்கு இலக்கணமாகப் பொருத்தலாம். சிறு புழு முதல் யானைவரை சகல மிருகங்களும் அவர் கதையில் முக்கியக் கதாபாத்திரங்களாக இடம் பெற்றன. அவற்றை பஷீர் ஒரு குழந்தையின் வியப்புப் பதிந்த கண்ணோட்டத்துடன் வெளிப்படுத்தினார்.
அனுபவம் சார்ந்த ஒரு உலகம் பஷீரின் படைப்புலகம். அந்த உலகை விருப்பு வெறுப்பில்லாமல் அன்பின் கலவையால் உருவாக்கினார். எளிமையான வேலைப்பாடுகளையே செய்தார். மிகமிக எளிமையான கலைதான் மிகப் மிகப் புதுமையானது என்று தனது எழுத்துக்கள் மூலம் நிரூபித்தார்.
அவரைச் சந்தித்த போது கேட்டேன்’’ உங்கள் படைப்புகளின் செய்தி என்ன?’’
“நன்மைதான் என் எழுத்துக்களின் செய்தி. மனிதனுக்கு எழுத்தின் மூலம் ஏதாவது உபகாரம் ஏற்படவேண்டும் என்று எனக்கு நிர்பந்தம் உண்டு. அது நிறைவேறியிருக்கிறதா என்று வாசகர்கள் தான் சொல்ல வேண்டும்.”
கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி பஷீர் மறைந்தார். அன்று மலையாள வாசகர்கள் ஒவ்வொருவரும் தமக்கு மிக நெருங்கிய உறவினரை இழந்தது போல வருந்தினர். அதற்குக் காரணம் பஷீரின் எழுத்து உபகாரம்தான்.
*
நூறில் ஒன்று
உலக சினிமாவுக்கு இது நூற்றாண்டு.
தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்தபோது சினிமா வெறும் அறிவியல் சாதனை. லூமியர் சகோதரர்கள் கையில் அது பொழுதுபோக்காக மாறியது. காலப்போக்கில் பிற கலைகளை உள் வாங்கிக்கொண்டு இந்த நூற்றாண்டின் மகத்தான கலையாக உருமாறியது.
திரைபடத்தின் வரலாற்றையும் சாதனைகளையும் கொண்டாடுவதற்காக அமெரிக்காவிலுள்ள அட்லாண்டா நகரில் செப்டம்பரில் உலகப்படவிழா நடைபெறுகிறது. சினிமா வரலாற்றில் சாதனையாகக் கருதப்படும் நூறு படங்கள் விழாவில் திரையிடப்படும்.இந்த நூறு படங்களில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே படம் ‘எலிப்பத்தாயம்’. இயக்கியவர் அடூர் கோபாலகிருஷ்ணன்.
1981இல் வெளியான ‘எலிப்பத்தாயம்’ அடூரின் மூன்றாவது படம். அவரது முதல் வண்ணப்படம். வெளிவந்த ஆண்டின் சிறந்த படம். சிறந்த இயக்குநர் என்று தேசிய விருதுகளையும், கான், சிகாகோ, இலண்டன், சாந்த் திரைப்பட விழாக்களில் சர்வதேச விருதுகளையும் பெற்றுத் தந்த படம். சத்யஜித் ராய்க்குப் பிறகு இலண்டன் பிலிம் இன்ஸ்டிடியூட் அவார்டு வழங்கப்பெற்ற இயக்குநர் அடூர் கோபால கிருஷ்ணன். அதுவும் ‘எலிப்பத்தாயத்’துக்காக.
“எலிப்பத்தாயம் மாற்றத்தைப் பற்றிய படம். மாற்றம் என்பது வேதனை தருவது; ஆனால் தவிர்க்க இயலாதது என்பதைச் சுட்டிக்காட்டுகிற படம்” என்கிறார் அடூர் கோபாலகிருஷ்ணன்.உண்மையில் ‘எலிப்பத்தாயம்’ (எலிப்பொறி) மாற்றத்தின் வேகத்தில் தடுமாறிய ஒரு மனிதனின் கதை.
உண்ணியின் குடும்பம் அவனையும் மூன்று சகோதரிகளையும் கொண்டது. மூத்த சகோதரி திருமணம் முடிந்து கணவனுடன் வசிக்கிறாள். இரண்டு தங்கைகளில் மூத்தவளான ராஜம்மா (சாரதா)வும் இளையவளான ஸ்ரீதேவி (ஜலஜா)வும் அவனது கண்காணிப்பில் மூச்சுத் திணறுகிறார்கள். உண்ணி சுய முயற்சி இல்லாதவன். பழைய பெருமைகளைச் சீராட்டிக் கொண்டிருப்பதிலேயே அவனது நாட்கள் கழிகின்றன.
அண்ணனுக்குச் சேவை செய்தே ராஜம்மாவின் உடல் குலைகிறது. நோய்வாய்ப்பட்ட அவளுக்கு எந்த ஆதரவும் இல்லை. டுடோரியல் காலேஜில் படிக்கும் ஸ்ரீதேவிக்கு எலிப் பொறிக்குள் வாழ விருப்பமில்லை. வெளியே உலகம் பரந்து கிடக்கிறது. உண்ணிக்கு அந்த நாலு கட்டு வீடே உலகம்.
ஒரே காட்சியில் உண்ணியின் குணச்சித்திரத்தை முழுமையாகத் தீட்டுகிறார் அடூர்.
மழை பெய்து நீர் தேங்கிக்கிடக்கிறது. துவைத்து உடுத்திய உடைகளுடன் உண்ணி ஒரு கல்யாணத்துக்குப் போக வருகிறான். வழியில் மழைக் குட்டை தடுக்கிறது. அதைக் கடப்பது எப்படி? என்று தயங்கி நின்கிறான். செருப்பைக் கழற்றி கையில் எடுத்துக்கொண்டு ஒரு அடி வைக்கிறான். கால் நனைந்து, வேட்டி சேறாகிவிடும் என்று வந்த வழியே திரும்புகிறான். அவனுக்கு எதிர்த்திசையிலிருந்து வரும் சிறுவன் மழை நீரில் கால்களை வீசி நடக்கிறான்.
உண்ணியின் தலைமுறை முடிவெடுக்கத் தயங்குகிறது. சிறுவனின் தலைமுறையோ வேகமாகப் பிரச்சினையை எதிர்கொள்கிறது.இந்த ஒரு காட்சியிலேயே படத்தின் சாராம்சத்தைத் தேக்கிவிடுகிறார் இயக்குநர்.
உண்ணியின் நிழலிலிருந்து ராஜம்மாவை மரணம் பிரிக்கிறது. அதற்கு முன்பே ஸ்ரீதேவி எலிப்பொறியிலிருந்து தப்பி தனது வாழ்க்கையைத் தேடிப்போகிறாள், காதலனுடன். உண்ணி அந்த பழையகால வீட்டின் இருளில் தடுமாறுகிறான். பயமும் பதற்றமும் அவன் மீது கவிகின்றன. பொறியில் அகப்பட்ட எலிபோல பூட்டிய வீட்டுக்குள் நடுங்குகிறான். அண்டையில் வசிப்பவர்கள் கதவை உடைத்து உண்ணியை நெருங்குகிறார்கள். பயத்தில் விறைத்த எலிபோலக் கிடப்பவனை வாரி எடுத்து ஊர்வலமாகப் போகிறார்கள். குளத்தை நெருங்கிப் படியிறங்கி அவனைத் தண்ணீரில் வீசி எறிகிறார்கள். கலைகிறார்கள்.
குளத்திலிருந்து நடுங்கிக்கொண்டே எழுகிறான் உண்ணி. கைகளும் கால்களும் உதறிக்கொள்ள படியில் ஏறி நிற்கிறான். இப்போது அவன் முகம் கருணைக்காக ஏங்கும் எலிபோல இருக்கிறது. பொறியில் அகப்பட்ட எலி.
அறிமுகக் காட்சியில் பொறியில் சிக்கிய எலியை நீரில் முக்கிக் கொல்வதற் காக எடுத்து செல்கிறாள் ஸ்ரீதேவி. பின்னணியில் தம்பூராவின் முரட்டு சுருதி. ஒவ்வொரு முறை பொறியில் எலி அகப்படும்போதும் ஒலிக்கும் அதே இசை, கடைசியில் உண்ணி குளக்கரையில் நிற்கும் காட்சியிலும் ஒலிக்கிறது.
அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய படங்களில் சிறந்த படம் ‘எலிப்பத்தாயம்!’ தன்னைச் சுற்றியுள்ள சூழலில் நடக்கும் மாற்றங்களைக் காண மறுத்த ஒரு மத்திய வயதுக்காரனின் கதை என்று மேலோட்டமாகச் சொன்னாலும் ‘எலிப்பத்தாயம்’ வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்ட திரைப்படம்.
இந்தியத் திரைப்பட வரலாற்றில் ‘எலிப்பத்தாயத்’துக்கு முன்னுதாரணமோ, தொடர்ச்சியோ இல்லை என்பது உண்மை. இந்த உண்மைதான் அதை நூறில் ஒன்றாக ஆக்கியிருக்கிறது.