பக்கங்கள்

திங்கள், 6 அக்டோபர், 2014

மொழிபெயர்ப்பு: சாதனைகளும் சவால்களும்



அனைவருக்கும் வணக்கம்.

மொழிபெயர்ப்பு தொடர்பான இந்தக் கருத்தங்கில் தலைமையுரை நிகழ்த்தத் தகுதியானவன்தானா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. இலக்கிய ரீதியிலான அறிமுகப்படுத்துதல்களில் எனக்கு மிகுந்த சங்கோஜத்தை ஏற்படுத்துவது மொழிபெயர்ப்பாளர் என்று சொல்லப்படுவதுதான். அந்தத் தொழிற்பெயர் கொண்டிருக்கும் அர்த்தத்தில் நான் மொழிபெயர்ப்பாளனே அல்ல; தொழில்முறைறாக மொழிபெயர்ப்பில் ஈடுபடுபவனும் அல்ல.
இருந்தும் கணிசமான பக்கங்கள் மொழி பெயர்த்திருக்கிறேன். சரியாகச் சொன்னால் சொந்தப் படைப்பைவிட நான்கு மடங்கு அதிகப் பக்கங்கள். மலையாளத்திலிருந்தும் ஆங்கிலம் வழியாகவும். இந்த அளவு என்னையே மலைக்க வைக்கிறது. இவை எல்லாமும் வாசகன் என்ற நிலையில் மேற்கொணடவை. நான் விரும்பும் படைப்பை முழுமையாகப் புரிந்து கொள்ளச் செய்த உபாயம் இவை. ஒரு படைப்பை மிக நெருக்கமாகப் புரிந்துகொள்ள உசிதமான வழி அதை மொழிபெயர்ப்பதுதான் என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கையை ஒரு அந்தரங்க மகிழ்ச்சியாகவே வைத்திருந்தேன். மகாஸ்வேதா தேவியின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த காயத்ரி ஸ்வோபிக் தனது கட்டுரை ஒன்றில் இதே வாசகத்தைச் சொல்லியிருந்தார். அது அந்தரங்க மகிழ்ச்சியைப் பொது ஆனந்தமாக உணர வைத்தது.


மொழிபெயர்ப்பைப் பற்றிச் சொல்லப்பட்டவற்றில் என்னை மிக அதிகமாகக் கவர்ந்த வாசகம் ஒன்று இருக்கிறது. காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் மொழிபெயர்ப்பாளரான கிரகோரி ராபஸா சொன்னார். மனிதன் ஒரு மொழியைப் பேசவும் புரிந்துகொள்ளவும் ஆரம்பிக்கும் போதே மொழி பெயர்க்கவும் ஆரம்பிக்கிறான்’. இந்த அவதானிப்பில் மொழிபெயர்ப்பின் அடிப்படையே இருப்பதாகச் சொல்லலாம். நாம் ஒன்றை முதலில் உணர்வது ஒரு கருத்தாக - concept - ஆகவே அதைப் புரிந்து கொள்ளும்போதே அது மொழியாகச் சிந்தனையில் சேமிக்கப்பட்டு விடுகிறது. ஆக, நாம் மொழி என்று சொல்வது கருத்தும் மொழியும் இணைந்த ஒன்றையே. நவீன மொழி பெயர்ப்புக் கொள்கை சொல்வது- மொழிபெயர்ப்பின் போது இடம்பெயர்வது வார்த்தைகள் சார்ந்த மொழி மட்டுமல்ல; அந்த வார்த்தைகளின் கருத்தும்தான். ஒரு மொழியிலிருந்து ஒரு படைப்பை இன்னொரு மொழிக்குப் பெயர்க்கும் போது நிகழ்வது மொழி மாற்றம் மட்டுமல்ல; கருத்து மாற்றமும்கூட. உதாரணமாக, மலையாளத்திலிருந்து ஒரு படைப்பைத் தமிழுக்குக் கொண்டு வரும்போது நான் கொண்டு வருவது அந்த மொழியை மட்டுமல்ல; அந்த மலையாளத் தன்மையையும் சேர்த்துத்தான்.

அதனாலேயே எந்த மொழிபெயர்ப்பும் அது வந்து சேர்ந்த மொழியின் படைப்பாக ஆவதில்லை. ஆகவும் முடியாது என்று தோன்றுகிறது. அதனாலேயே ஒரு மொழிபெயர்ப்பு தமிழிலேயே எழுதப்பட்டதுபோல இருக்கிறது என்ற பாராட்டு வாசகத்தின் மீது நம்பிக்கை வைக்க முடிவதில்லை. இந்த அம்சம் பற்றி நண்பர்கள் பேசுவார்கள் எனறு நம்புகிறேன்.

தமிழிலக்கிய வரலாற்றில் மொழிபெயர்ப்புக்கு நீண்ட அத்தியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் சில நூற்றாண்டுகள் இருக்கலாம். குறிப்பாக, ஆங்கிலக் கல்வி பரவலான பிறகே மொழி பெயர்ப்பு கவனத்துக்குரிய துறையாக உருப்பெற்றிருக்கிறது. ஆனால் மொழிகளுக்கு இடையிலான கொள்வினை- கொடுப்பினைகள் தொடர்ந்து நிகழ்ந்திருக்கின்றன. பக்தி இலக்கியத்தில் பரவலாக அந்தச் சான்றுகளைப் பார்க்க முடியும். பக்தி இலக்கியம் உருவாக்கிய தன்னுணர்ச்சிப் பாடல்கள் - இந்திய மொழிகள் அனைத்திலும் ஏறத்தாழ ஒரே மாதிரியான அடிப்படை கொண்டவை. பக்தி இயக்கத்தின் ஆதார சுருதி ஒன்றுதான் என்பதால் அந்தப் பொதுமை உருவாகி இருக்கலாம். ஆனால் கவிதைப் பொருளிலும், கூறுமுறையிலும் தென்படும் கூறுகள் மொழிபெயர்ப்பின் சாத்தியங்களை எடுத்துக் காட்டுகின்றன.

நவீன காலகட்டம்தான் தமிழில் மொழிபெயர்ப்பை வளப்படுத்தியிருக்கிறது. அதற்கு முன்னும் மொழிபெயர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை இன்று நாம் கருதும் அர்த்தத்திலான மொழிபெயர்ப்புகள் அல்ல; தழுவல்கள்.

தமிழில் நவீனமான எல்லா முயற்சிகளும் பாரதியிடமிருந்தே தொடங்கு கின்றன என்ற பக்திபூர்வமான எண்ணம் எனக்கு இருக்கிறது. மொழி பெயர்ப்பைப் பொறுத்தும் அந்த எண்ணமே இருக்கிறது. ரவீந்திரநாத் தாகூரின் பஞ்ச வியாசங்களுக்கும் ரவீந்திரர் கதைகளுக்கும் பாரதி செய்த மொழி பெயர்ப்புகள்தான் நவீனத் தமிழில் முன்னோடி முயற்சிகள் என்று பார்க்க விரும்புகிறேன். மொழிபெயர்ப்பாளனின் சிக்கலை முதன்முதலில் முன் வைத்தும் பாரதிதான் என்றும் தோன்றுகிறது. சரியான மொழி பெயர்ப்புக்காக அவர் மேற்கொண்ட முயற்சியாகவே பக்கிம் சந்திர சாட்டர்ஜியின் ‘வந்தே மாதரகீதத்துக்கு பாரதி கொடுத்த இரண்டு தமிழாக்கங்களைப் பார்க்கலாம்.

நவீனத் தமிழின் முதன்மையான எல்லாப் படைப்பாளிகளும் மொழி பெயர்ப்பில் ஈடுபட்டவர்கள்தான். புதுமைப்பித்தன் முதல் அநேகமாக எல்லா எழுத்தாளர்களும் குறைந்தபட்சம் ஒரு மொழிபெயர்ப்பையாவது செய்திருக்கிறார்கள். அதன் மூலம் கிடைக்கக்கூடிய சொற்ப வருவாய்க்கா கவும் தங்களைக் கவர்ந்த படைப்புத் தமிழ்வாசகனுடன் பகிர்ந்து கொள்ளவும் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். புதுமைப்பித்தன் தமது சொந்தப் படைப்புகளின் மொத்தப் பக்கங்களுக்கு ஈடாகவோ, கூடவோ மொழிபெயர்ப்புப் பக்கங்களைக் கொடுத்திக்கிறார். அவருக்கு இணையாக மொழிபெயர்ப்பில் ஆர்வம் காட்டியவர் க.நா.சு. புதுமைப்பித்தன் மொழிபெயர்த்தவை பெரும்பாலும் சிறுகதைகள் என்பதால் அதன் பாதிப்பைத் துலக்கமாகச் சொல்ல முடிவதில்லை. ஆனால் க.நாசு.வின் பங்களிப்பு நாவல் மொழிபெயர்ப்புகள். அதன் வீச்சை நம்மால் இனம்காண முடிகிறது. அன்புவழிபோன்ற நாவலின் பாதிப்பு இல்லை என்றால் வண்ணநிலவனின் நுண்உணர்வு வேறாக இருந்திருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.

புதுமைப்பித்தன், க.நா.சு, வல்லிக்கண்ணன், தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி போன்ற எழுத்தாளர்கள் மொழிபெயர்ப்பில் ஆர்வம் காட்டியதன் காரணமாக எனக்குத் தோன்றுவது- தங்கள் உலகையும் வாசகனின் உலகையும் விரிவுபடுத்தத்தான்.

இதே காலகட்டத்தில் மொழிபெயர்ப்பாளர்களாக மட்டுமே இப்போது நாம் அறிந்திருக்கும் எழுத்தாளர்களும் இருந்திருக்கிறார்கள். சரத்சந்திரரை அறிமுகப்படுத்திய அ.கி. ஜயராமன், தாகூரை முன்வைத்த த.நா. குமார சாமி, த.நா. சேனாபதி, விபூதிபூஷன் வந்தோபாத்தியாயாவைக் கொண்டு வந்த ஆர். ஷண்முகசுந்தரம், காண்டேகரைத் தமிழ் இலட்சியவாத எழுத்தின் முன்னோடியாக முன்வைத்த கா.ஸ்ரீ.ஸ்ரீ இப்படி இன்னும் பலரைக் குறிப்பிடலாம். இதில் தம்மளவில் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர்களாக அறிப்பட்டவர்கள்கூட மொழிபெயர்ப்பாளர்களாக மட்டுமே பின்னர் பேசப்பட்டார்கள் என்பது சுவாரசியமான முரண். கன்யாகுமரிஎன்ற நேர்த்தியான கதைத் தொகுப்பின் ஆசிரியரான த.நா. குமாரசாமி இன்று கவனம் பெற்றிருப்பது மொழிபெயர்ப்பாளராக மட்டுமே. அவர் மொழி பெயர்த்த ரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகளுக்காகவே - 2 தொகுதிகள் - நினைவு கொள்ளப்படுகிறார்.

நமக்குக் கிடைத்த மொழிபெயர்ப்புகள் நவீன இலக்கியத்தைக் கணிசமாகப் பாதிக்கவும் செய்திருக்கின்றன. புதுமைப்பித்தனின் கதைகளில் காணப் படும் மாப்பஸானியக் கூறுகள், அழகிரிசாமியின் கதைகளில் தெரியும் அந்தோன் செக்காவ் பாணியிலான அமைதி- இவற்றை அதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும்.

50-60 கால கட்டங்களில் மிக அதிகமான மொழியக்கங்கள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. எழுத்தாளர்களின் தனிப்பட்ட ஆர்வத்தககு அப்பால் நிறுவனங்களின் ஆதரவில் மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன. இடதுசாரி நூல்களுக்காக அல்லது கம்யூனிசப் பரப்புரைக்காக மாஸ்கோ அயல் மொழிப் பதிப்பகம் வெளியிட்ட மொழியெபர்ப்புகள் எந்த அளவுக்கும் கம்யூனிசத்தைப் பரப்பின என்பது ஆராய்ச்சிக்கு உரியது. ஆனால் தாஸ்தாயேவ்ஸ்கியும் டால்ஸ்டாயும் ஆன்டன் செக்காவும் தமிழ் வாசகர்களிடையே பரவலாக அறிமுகமானார்கள் என்பது நிச்சயம்.

ரஷ்யர்கள் பொது உடைமைப் பரப்புரைக்காகச் செய்த அதே காரியத்தை அமெரிக்க நிறுவனமான பேர்ள் பப்ளிகேஷன் முதலாளித்துவத்தைப் பரப்புவதற்காகச் செய்தது. அமெரிக்க எழுத்தாளர்களான ஹெமிங்வேயும், காதரீன் ஆன் போர்ட்டரும் தமிழாக்கம் பெற்றார்கள். பேர்ள் பப்ளிகேஷன் வெளியீடாக வந்த மொழியாக்கங்களில் க.நா.சுப்ரமணியம் செய்த குருதிப் பூக்கள்என்ற காத்தரீன் ஆன் போர்ட்டரின் தொகுப்பு இன்று வாசிக்கும் போதும் நேர்த்தியானது என்றே தோன்றுகிறது.

க.நா.சு. மொழிபெயர்ப்புகளைப் பற்றிச் சில சுவாரசியமான அவதானிப்பு களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மொழிபெயர்ப்புக்காக அவர் தேர்ந்தெடுத்த நூல்களின் வரிசை வியப்பளிப்பது. ஆங்கிலக் கல்வி மூலம் பரவலாகத் தெரியவந்த பிரபல எழுத்தாளர்களை அவர் எடுத்துக் கொள்ள வில்லை. மாறாக அவர் தேர்ந்தெடுத்து ஸெல்மா லாகர்லாஃப், நட் ஹாம்சன் போன்ற அன்று அறியப்படாத எழுத்தாளர்களையே அவர் எடுத்துக் கொண்டார். இந்தத் தேர்வு ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு முக்கியமானது. ஜார்ஜ் ஆர்வெல்லின் விலக்குப் பண்ணை, 1984 ஆகிய நாவல்களையும் அவர் மொழி பெயர்த்திருக்கிறார். ஒரு மொழி பெயர்ப்பாளன் சறுக்கும் இடங்கள் அவற்றில் உள்ளன. 1984 நாவல் அடக்குமுறையைப் பற்றியது. சாதாரண மக்கள்கூட அதிகாரத்தின் இடைவிடாத கண்காணிப்பில் இருப்பதைப் பற்றியது. அந்த மொழி பெயர்ப்பில் அடிக்கடி இடம்பெறும் வாசகம். “Big brother is watching’ என்பது. இதை க.நா.சு. மொழிபெயர்த்திருந்தது. முத்தண்ணா பார்த்துக்கெண்டு இருக்கிறார்எனறு. முகமற்ற அதிகாரத்தின் அடையாளம் ஆன “Big brother தமிழில் முத்தண்ணாவாக வரும்போது ஒரு மேட்டுக்குடி- உயர்சாதி வழக்காக மாறிவிடுகிறது.

மொழிபெயர்ப்பின் நுட்பம் படைப்பை ஒரு மொழியிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றுவதல்ல; ஒரு பண்பாட்டுக் கூறையும் பெயர்ப்பது என்ற பாடத்தை இது உணர்த்துகிறது.

தேசிய அமைப்புகளான சாகித்ய அக்காதெமி, நேஷனல் புக் டிரஸ்ட் வாயிலாகப் பல இந்திய எழுத்தாளர்கள் தமிழுக்கு அறிமுகமானார்கள். குர் அதுல் அன் ஐதர், அதீன் பந்தோபாத்யாயா, பைரப்பா, வைக்கம் முகம்மது பஷீர் என்று பல பெயர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த எழுத்துக்கள் எந்த அளவுக்கு நமது இலக்கியப் பார்வையையும் செயல் பாட்டையும் பாதித்திருக்கின்றன என்பதை இன்னொரு தலைப்பாக எடுத்துப் பேச வேண்டியிருக்கும். கொஞ்சம் தீவிர வாசிப்புடைய எந்த வாசகனும் நீலகண்ட பறவையைத் தேடிநாவலைப் பற்றிச் சொல்லாமல் இருந்ததில்லை.

80-90களிலும் கணிசமான மொழிபெயர்ப்புகள் வெளிவந்திருக்கின்றன. இடதுசாரி இயக்கங்களின் தேவையை ஒட்டி மிக அதிகமான மொழி பெயர்ப்புகள் வந்த காலம் இது. அதே சமயம் புதிய த்துவக் கருத்துகளின் பின்புலம் சார்த படைப்புகளும் வெளிவ்நதன. குறிப்பாகச் சொல்ல வேண்டிய நூல். வெ. ஸ்ரீராமின் மொழிபெயர்ப்பில் - பிரெஞ்சிலிருந்து நேரடியான மொழிபெயர்ப்பில்  - வந்த ஆல்பெர் காம்யூவின் அந்நியன்நாவல். அது செலுத்திய பாதிப்பு வலுவானது. தமிழில் மகத்தான நாவல்களில் ஒன்றான ஜே.ஜே. சில குறிப்புகள்மிகக் குறைந்த அளவிலாவது அந்நியனின் பாதிப்புக் கொண்டதுதான். அதே ஸ்ரீராமின் மொழிபெயர்ப்பில் வந்த ழாக் ப்ரெவரின் சொற்கள்என்ற கவிதை நூல் மிக அழுத்தமான செல்வாக்கை ஏற்படுத்தியது. சங்கரராம சுப்ரமணியன், மனுஷ்யபுத்திரன் கவிதைகளில் இந்தப் பாதிப்பை உணர்ந்து விட முடியும்.

90களிலும் கணிசமான மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன. ஆனால் அந்தக் காலப்பகுதி படைப்புகளை விடக் கோட்பாடுகள் முதன்மை பெற்றிருந்த காலம். படைப்புகளை முன்னிறுத்திப் பேசுவதைவிடப் பெயர்களை உதிர்ப்பதில் சந்தோஷப்பட்ட காலம். பெரும்பாலான படைப்புகள் மொழி பெயர்ப்பாளன் தனது சாமர்த்தியத்தைக் காட்டிக் கொள்ளவும், உலக அளவில் பிரபலமான பெயர்களை எடுத்துப் போட்டுத் தோளை உணர்த்திக் கொள்ளவுமே மொழிபெயர்க்கப்பட்டன. காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸின் பெயர் ஒரு உதாரணம். வாசகனுக்கு மிகவும் இணக்கமான கதை சொல்லியான மார்க்கேஸ் மிகவும் மிரட்சியளிக்கக் கூடியவராகத் தமிழில் அவதாரம் எடுத்தார். இந்த மிரட்டல் மொழிபெயர்ப்புக்கான வாகர்களை இல்லாமல் ஆக்கின என்றே தோன்றுகிறது.

தகவல் தொடர்பில் ஏற்ற மாற்றங்கள், புதிய வாசகர்களின் வருகை, இவை போன்ற காரணங்கள் 2000க்குப் பின் மொழிபெயர்ப்பின் தேவையையும், சாத்தியங்களையும் விரிவாக்கியிருக்கின்றன. மொழிபெயர்ப்புகளின் பொற்காலம் என்று சொல்லப்பட்ட50-60களில் வெளிவந்ததைவிடப் பல மடங்குப் படைப்புகள் இந்த 14 ஆண்டுகளில் வெளிவந்திருக்கின்றன என்று எண்ணுகிறேன். உலக அளவில் பேசப்பட்ட முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகள் இன்று மொழிபெயர்க்கப்படுகின்றன. விரைவாகவும் தமிழாக்கம் பெறுகின்றன. 1946இல் பிரெஞ்சில் வெளிவந்த காம்யூவின் அந்நியன்’ 1981இல் அதாவது 35 வருடங்களுக்குப் பின்பே தமிழில் வெளிவந்தது. ஆனால் 2006 ஆண்டு நோபெல் பரிசு பெற்ற துருக்கி எழுத்தாளர் ஓரான் பாமுக்கின் புத்தகம் 2010இல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகிறது.

இலக்கியம் சார்ந்தவன் என்று என்னைக் கருதிக் கொள்வதால் இலக்கிய மொழிபெயர்ப்புகளைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறேன். பிற அறிவுத் துறைகளிலும் வணிகத் துறைகளிலும் மொழிபெயர்ப்புக்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அண்மைக் காலங்களில் கல்லூரியில் மொழிப் பாடங்களைக் கற்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை முன்பைவிட உயர்ந்திருக்கிறது என்பதை வைத்து இப்படிச் சொல்லப்படுகிறது.

இந்தப் பின்னணியில் மொழிபெயர்ப்புப் பற்றிய சில கருத்துகளைச் சொல்லலாம் என்று படுகிறது.

இன்றைய சூழ்நிலையில் மொழிபெயர்ப்பு ஏன் அவசியம்? இன்று உலகம் மிகவும் சுருங்கிவிட்டது. தனித்தனியானதாக இருக்கும்போதே ஒன்றுக் கொன்று இணைந்திருக்கிறது. அதே சயமம், நாடுகளும் மக்கள் திரள்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டும் நிற்கின்றன. மொழிபெயர்ப்பின் சாத்தியம் அவர்களை நெருக்கமாக்கலாம். நமக்குத் தெரியாத மொழியில் நாம் பார்க்க முடியாத இடங்களில் நாம் பழகியிராத பண்பாட்டில் நம்மை வைத்துப் பார்க்க மொழிபெயர்ப்பு உதவும்.

நமது வாழ்க்கையையே இன்னொரு கோணத்தில் பார்க்க உதவும். கடைசிப் பட்சமாக வாழ்க்கை என்பது என்ன? மனிதர்களைப் புரிந்து கொள்கிற, மனிதர் களுடன் உறவை மேம்படுத்திக் கொள்கிற ஒன்றுதானே. அதற்கான கருவியாக மொழிபெயர்ப்புகள் இருக்க முடியும்.

மொழிபெயர்ப்புச் செயல்பாட்டில் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் வாசகம். ஒரு மொழிப்பில் எது நழுவிப் போகிறதோ அதுதான் அசலான படைப்புஎன்பது. திரும்பத் திரும்பக் கேட்கப்படும் கேள்வி – ‘மொழிபெயர்ப்பாளன் யாருக்கு உண்மையாக இருக்க வேண்டும்?

ஒரு மொழிபெயர்ப்பில் நாம் பார்ப்பது மூலத்தின் அச்சு அசல் பிரதி அல்ல. அப்படி ஒன்று சாத்தியமே அல்ல. ஒரு மலையாள நாவலை மலையாளமாகவே நில்லைநிறுத்த முடியும் என்றால் தமிழில் அதற்கு எதற்கு மொழிபெயர்ப்பு? ஆக, மொழிபெயர்ப்பு மூலமல்ல; அசல் அல்ல. மூலத்தைச் சார்ந்த இன்னொரு பிரதி மட்டுமே. தனது கவிதைகளை ஸ்பானிஷிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த அலெஸ்டர் ரெய்டிடம் பாப்லோ நெரூதா சொன்ன வாசகம் நினைவுக்கு வருகிறது. எனது கவிதைகளை நீங்கள் உங்கள் மொழிக்கு மாற்ற வேண்டாம். அவற்றை உங்கள் மொழியில் மேம்படுத்துங்கள்.மொழிபெயர்ப்பின் அடிப்படையான நோக்கமாக இதைக் கருதுகிறேன்.

மொழிபெயர்ப்பாளன் மூன்று நிலைகளுக்கு உண்மையாக இருக்க நிர்ப்பந்திக்கப்படுகிறான்.
1. மூல மொழிக்கு.
2. மூல ஆசிரியன் ஆளுமைக்கு.
3. மொழிபெயர்க்கப்படும் மொழியின் வாசகனுக்கு.
இந்த மூன்று நிலைகளும் மொழிபெயர்க்கப்படும் பிரதியை, படைப்பைப் பொருத்தே மாறுகின்றன.
1.       சங்க இலக்கியப் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது மொழிபெயர்ப்பாளனின் விசுவாசம் அந்த மூலமொழிக்கு உரியது. ஏ.கே. ராமானுஜனின் மொழிபெயர்ப்பை உதாரணமாகச் சொல்லலாம்.
2.        வைக்கம் முகம்மது பஷீரின் படைப்புகளை மொழிபெயர்க்கும்போது அவருடைய ஆளுமைக்கும் உண்மையாக இருக்க நேர்கிறது.
3.       . ஆங்கிலம் வழியாக வந்த பிறமொழிப்படைப்புகளின் மொழியாக்கம் பெறும் மொழி – target language - வாசகனிடம் உண்மையாக இருக்கக் கோருகிறது.

எந்த மொழியெபர்ப்பும் இறுதியானதல்ல; முழுமையானதல்ல. ஒவ்வொரு மொழியிலும்  சமகாலத்தை ஒட்டிப் புதிய மொழிபெயர்ப்புகள் தேவைப் படுகின்றன. 56 களில் தமிழாக்கம் செய்யப்பட்ட தாகூரின் படைப்புகள் இன்றைய மொழியின் முன்னால் சோபை இழந்து போகின்றன. ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளில் ஒரே நூலுக்குப் புதிய மொழிபெயர்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

தாஸ்தயேவ்ஸ்கியின் ‘கரமாசாவ் சகோதரர்களுக்கு வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு மொழிபெயர்ப்புகள் வெளியாகியிருக்கின்றன. கான்ஸ்டன் கார்னெட்டின் பிரசித்தமான மொழிபெயர்ப்பு போதாமைகள் நிறைந்த்து என்று கருதப்பட்டபோது டேவிட் மக்டஃப், டேவிட் மகார்ஷெக் ஆகியவர்களின் மொழிபெயர்ப்புகள் வந்தன. இந்த மொழிபெயர்ப்புகள் புழக்கத்திலிருக்கும்போதே இவை அவ்வளவு நவீனமான மொழியாக்கங்கள் அல்ல என்ற அபிப்பிராயம் சொல்லப்பட்டது. ரிச்சார்ட் பெவீர், லாரிஸ்கா வோலோ கோன்ஸ்கி இருவரும் மேற்கொண்ட புதிய மொழிபெயர்ப்பு வெளியானது. டால்ஸ்டாயின் அன்னாகரீனினாவும் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. கான்ஸ்டன் கார்னெட்டின் மொழி பெயர்ப்பு அமெரிக்க வாசகர்களுக்கு உவப்பானதாக இல்லை என்று பேசப்பட்ட்து. ஜோயல் கார்மைக்கேல் அமெரிக்க ரசனைக்குத் தோதான மொழிபெயர்ப்பைச் செய்தார்.சற்று முன்பு குறிப்பிட்ட ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்நாவலுக்கும் ஆங்கிலத்தில் இரண்டு மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. 1946 இல் வெளிவந்த ஸ்டூவர்ட் கில்பெர்ட்டின் மொழி பெயர்ப்பும் 1982 இல் வெளிவந்த ஜோசப் லாரெடோவின் மொழிபெயர்ப்பும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு - 2012 இல் - இத்தாலிய எழுத்தாளர் அலெசாண்ட்ரோ பாரிக்கோவின் நாவல் ஒன்றை மொழிபெயர்த்தேன். ‘பட்டுஎன்ற நாவலை. இந்த நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1997 ஆம் ஆண்டு வெளியானது. கியூதோ வால்டுமானின் மொழியாக்கம் அது. வால்டுமான் இத்தாலி மொழியிலிருந்து முக்கியமான பல படைப்புகளை ஆங்கிலமாக்கம் செய்திருப்பவர். ஆனால் பட்டு நாவலுக்கு அவர் செய்த மொழியாக்கம் சிலாக்கியமானதல்ல என்று ஆசிரியர் கருத்துச் சொன்னதால் அதே ஆண்டு இன்னொரு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது. ஆன் கோல்ட்ஸ்டெய்ன் செய்த இரண்டாவது மொழிபெயர்ப்புதான் திரைப் படத்துக்கும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. மொழி பெயர்ப்புகளின் தேவை காலத்துக்கு ஏற்ப மாறுகிறது என்பதைச் சுட்டிக் காட்டவே இவற்றையெல்லாம் குறிப்பிட்டேன்.

தமிழில் அப்படியான பார்வை இதுவரை இல்லை. அண்மைக்காலத்தில் ஓரிரு படைப்புகளுக்குப் புதிய மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன. 1960களில் ச.து.சு. யோகியார் மொழிபெயர்த்த கிழவனும் கடலும்நாவலுக்கு 2000 ஆரம்பத்தில் எம்.எஸ். புதிய மொழிபெயர்ப்பைக் கொண்டு வந்தார். இரண்டையும் ஒப்பிட்டு வாசித்தபோது நமது மொழியின் நவீனத்துவம் புலப்பட்டது. இது ஒரு முக்கியமான அம்சம்.சமீபத்தில் தாஸ்தயேவ்ஸ்கியின் கரமஸாவ் சகோதரர்கள்இரண்டு தமிழாக்கங் களைப் பெற்றிருக்கிறது. ஆங்கிலம் வழியாக வந்த பிரதியை ஒட்டிய புவியரசுவின் மொழிபெயர்ப்பு ஒன்று. ரஷ்ய மூல மொழியிலிருந்து அரும்பு சுப்ரமணியன் செய்திருக்கும் தமிழாக்கம் மற்றது. இரண்டையும் வாசித்துப் பார்ப்பது தாஸ்தயேவ்ஸ்கியை நெருங்கும் வழியின் நீளத்தைக் குறைக்கும் என்று தோன்றுகிறது. இதில் இன்னொரு அம்சமும் தெளிவாகிறது. படைப்புதான் முழுமையானது; முற்றானது. மொழிபெயர்ப்பு தொடர்ச்சியான மாறற்றங்களைக் கோருவது என்ற உண்மை.

மொழிபெயர்ப்புப் பணியின் சோகம்- அது ஒரு நன்றியில்லாப் பணி என்பது தான். மொழிபெயர்ப்பு சிறப்பாக அமைந்தால் எல்லாப் பெருமைகளும் மூல ஆசிரியனுக்கு கோளாறான மொழியாக்கம் என்றால் எல்லா அவமதிப்புகளும் மொழிபெயர்ப்பாளனுக்கு இந்த அபாய விளையாட்டில் மொழிபெயர்ப்பாளன் மிக எச்சரிக்கை கொண்டவனாக இருக்க வேண்டியிருக்கிறது. ஒரு மூலப் பிரதி பொய்யாக’ - இந்த வார்த்தை விளதிமிர் நபக்கோவுடையது’ (கான்ஸ்டன் கார்னெட்டின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் false translation  என்கிறார்- இருந்தால் பழி மொ. பெயர்ப்பாளனுக்கு புறக்கணிப்பு மூல- ஆசிரியனுக்கு.

மொழிபெயர்ப்பாளன் யார் என்ற கேள்விக்கு வெவ்வேறான பதில்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒரு படைப்பின் பங்குதாரர் சக படைப்பாளி, மொழிகளின் இடைத்தரகன் என்று எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பாளரும் பதிப்பாளருமான மினி கிருஷ்ணன் சமீபத்தில் இந்தக் கேள்வியை எழுப்பி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். மார்க்கேஸின் படைப்பு சிலாகிக்கப்படும்போது மொழிபெயர்ப்பாளரான எடித் கிராஸ்மன் மறக்கப் பட்டுவிடுகிறார். ஆனால் கிராஸ்மன் இல்லாமல் மார்க்கேஸ் இல்லை. அப்படியானால் மொழிபெயர்ப்பாளன் யார்இரட்டையர் ஆடும் டென்னிஸ் பந்தயத்தில் ஒரு இரட்டையர் அணி வெற்றி பெறுகிறது. அந்த வெற்றி யாருக்கும் சொந்தமானது? இரண்டு பேருக்கும்தான். அதைப் போலத்தான் ஒரு மொழிபெயர்ப்பு இரண்டு பேரின் படைப்பாற்றலின் பகிர்வு. இருவரின் வெற்றி. ஒருவரின் வெற்றி வெளிப் படையாகத் தெரிகிறது. இன்னொருவரின் வெற்றி அந்தப் படைப்பின் வாயிலாகவே புரிந்து கொள்ளப் படுகிறது.

மொழிபெயர்ப்பு குறித்த  அரங்கை இந்தக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பைக் கொடுத்த இலக்கியச் சுற்றம் நண்பர்களுக்கும் காலச்சுவடு பதிப்பகத்துக்கும் மனமார்ந்த நன்றி.

(காலச்சுவடு பதிப்பகமும் ஈரோடு இலக்கியச் சுற்றம் அமைப்பும் இணைந்து ஈரோட்டில் 2014 செப்டம்பர் 13 அன்று நடத்திய மொழிபெயர்ப்பு நூல்கள் கருத்தரங்கில் ஆற்றிய உரை)