கவிதை தொகுப்புகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் என்று பல்வேறு தளங்களில் இடையறாது
பங்களித்து கொண்டு வருபவர், தற்போது காலச்சுவட்டு இதழின்
பொறுப்பாசிரியராக பணியாற்றி வரும் கவிஞர். சுகுமாரனின் தொகுப்பில் ‘தி.ஜானகிராமனின் சிறுகதைகள்’ இவ்வருட புத்தக கண்காட்சிக்கு, காலச்சுவட்டின் புதிய வெளியீடாக வருகிறது.
கவிதை மொழியில் அவர் மேற்கொண்ட, பாசாங்கில்லாத, வடிவமைப்பு முயற்சிகள், சொற்தேர்வுகள் மற்றும் அதன் உள்ளடக்கம் பல
இளம் கவிஞர்களுக்கு வழிகாட்டுதலாக அமைந்திருக்கிறது. வைக்கம் பஷீர், பால் ஸக்கரியா போன்றோரின் படைப்புகளை
மலையாளத்திலிருந்து தமிழுக்கு கொண்டு வந்தவர். பதாகை சிற்றிதழுக்காக அவருடனான மின்
அஞ்சல் உரையாடல்.
பதாகை – இந்தத் தொகுப்பில் ஈடுபட்டபோது ஏற்பட்ட
உங்கள் அனுபவங்கள் பற்றிச் சொல்லமுடியுமா? காலவரிசையில் நோக்கும்போது தி.ஜா-வின்
ஆரம்பகால படைப்புகளுக்கும் இறுதிகால படைப்புகளுக்கும் ஏதேனும் மாற்றம் தெரிந்ததா? ஒட்டு மொத்தமாக அவருடைய படைப்பில்
ஊறியிருக்கும் மைய அக்கறை என்று எதைச் சொல்வீர்கள்?
சுகுமாரன் – இலக்கிய வாசகர்கள் எல்லாரிடமும் தங்களுக்கு
மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் என்று ஒரு பட்டியல் இருக்கும். என்னிடமும்
இருக்கிறது. அந்தப் பட்டியலின் முதல் சில பெயர்களில் ஒன்று தி. ஜானகிராமனுடையது.
எனக்குப் பிடித்திருக்கிறது என்று நான் சொல்வது ரசனை அடிப்படையில் மட்டுமல்ல; அந்த எழுத்தாளர்கள் தமது படைப்பு மூலம்
கற்பித்த விஷயங்களையும் சார்ந்துதான். பெண்கள் மீதான மரியாதையைப் பேணக் கற்றுக்
கொடுத்ததில் தி. ஜாவின் படைப்புகளுக்கும் பங்கு உண்டு. கணிசமான பங்கு. அதற்கான
கைம்மாறாகவே இந்தத் தொகுப்புப் பணியில் ஈடுபட்டேன். அவருடைய படைப்புகள் மீது
எனக்கிருக்கும் மதிப்பைக் காட்டவே இதைச் செய்திருப்பதாக நம்புகிறேன். தொகுப்புப்
பணியில் எனக்குக் கிடைத்த முதலாவதும் முதன்மையானதுமான அனுபவம் இதுதான்.
இந்தத் தொகுப்பைக் காலவரிசைப்படித்
தொகுக்கவில்லை. வெளிவந்திருக்கும் தொகுதிகளின் வரிசைப்படிதான் அமைத்திருக்கிறேன்.
காரணங்களை ‘தி. ஜானகிராமன் சிறுகதைகள் – முழுத் தொகுப்பு‘க்கு எழுதியிருக்கும் பதிப்புரையில்
விரிவாகவே முன்வைத்திருக்கிறேன். ஜானகிராமன் கதைகளில் பெருமளவுக்கு தூலமான
மாற்றங்கள் இல்லை. முதல் கதையான ‘மன்னித்து விடு‘ வில் ஆரம்ப கட்ட எழுத்தின் குறைகள் உள்ளன.
ஆனால் கதைப்போக்கு, பாத்திரங்களின் உரையாடல், கதையின் வடிவம் ஆகியவற்றில் பிற்காலக்
கதைகளின் முன் மாதிரியாகவே அமைந்துள்ளது. ஒரு செவ்வியல் பூரிதநிலை கொண்டவை அவரது
கதைகள். அவை காலத்தின் போக்குக்கு ஏற்ப மாற்றம் அடையவில்லை கால, இட மாறுதல்கள் உள்ளடக்கத்தில் நுட்பமான
மாற்றங்களை நிகழ்த்தியிருந்தாலும் அவரது கதைக் கலையின் செவ்வியல் நிலைக்கு
வெளிப்படையான மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை. மொழிவழக்கில் மட்டுமே மெல்லிய
மாறுதல்கள் தெரிகின்றன. எனவே, காலவரிசைப்படி கதைகளைத் தொகுப்பதைவிடவும்
வெளிவந்திருக்கும் தொகுப்புகளில் இருப்பதுபோலவே வரிசைப்படுத்துவது என்ற
தீர்மானத்தை மேற்கொண்டேன்.
தி. ஜானகிராமனின் கதைகளின் மைய அக்கறை ‘மனித சேஷ்டைகள்’தாம். மனிதர்களைக் கொண்டாடி அலுப்பதில்லை
அவருக்கு. அன்பு, பாசம், காதல், பரிவு என்று வெவ்வேறு வார்த்தைகளில்
சொல்லப்படும் உணர்வு நிலைகளின் மையமான மானுடக் கருணையே அவரது படைப்பின் மையம்
என்று சொல்லத் தோன்றுகிறது. மனிதர்கள் இந்த உணர்வுகளைக் கொண்டவர்களாகவே இருக்க
முடியாமற் போவது அவர்களது சூழ்நிலையின் காரணமாகவே என்று அழுத்தமாகச் சொல்கிறார்.
அந்தச் சிக்கலையே அவர் பேசுபொருளாகக் கருதுகிறார். மானுடத் தத்தளிப்பின் பருவ
மாற்றங்கள்தாம் அவரது படைப்புகளின் மையம்.
பதாகை – இந்தக் கதைகள் வேறு வேறு பதிப்பங்கள் மூலம்
பல பதிப்புக்களில் வந்திருக்கும். அப்போது பாட பேதங்கள் நேர்ந்திருக்கலாம், அல்லது முந்தைய பதிப்புக்களில்
இருந்திருக்கக்கூடிய பிழைகள் களையப்பட்டிருக்கலாம். சில பதிப்புக்கள் இப்போது
புழக்கத்திலேயே இல்லாமல் இருக்கலாம், காலச்சுவடில்கூட சில தி.ஜா சிறுகதை
தொகுப்புகளின் முதல் பதிப்பு வாசகரிடம் இருந்தால் அனுப்பி வைக்குமாறு அறிவிப்பு
வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஒரு கதையின் செம்பதிப்பு இதுதான்
என்று முடிவுசெய்யும்போது சந்தித்த சவால்கள் ஏதேனும் உண்டா, இதுதான் சரியான பதிப்பு என்று இறுதி முடிவு
எப்படி எடுக்கப்படுகிறது? (கு.ப.ரா சிறுகதைகளை பதிப்பிக்கும்போது ‘அதப்பாதாளம்’ என்ற வார்த்தை தன்னை எப்படி அலைகழித்தது
என்று பெருமாள் முருகன் கூறுகிறார், அப்படி ஏதேனும் நீங்களும் எதிர்கொள்ள வேண்டி
இருந்ததா?)
சுகுமாரன் - தி. ஜானகிராமன் கதைகள் வெவ்வேறு பதிப்பகங்கள் வாயிலாக
வந்திருக்கின்றன. அவை இப்போதும் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன. அவற்றில் பாட
வேறுபாடுகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கும் இருந்தது. பெரும்பாலான தொகுப்புகள்
அவர் வாழ்ந்த காலத்திலேயே வெளிவந்தவை. அவரது மறைவுக்குப் பிறகு ‘எருமைப் பொங்கல்‘ என்ற ஒரே ஒரு தொகுப்பு வெளிவந்தது. அதுவும் ‘அடி ‘என்ற பெயரில் குறுநாவலும் சிறுகதைகளும்
சேர்ந்த தொகுப்பாக முதலில் வெளியிடப்பட்டு, பிறகு சிறு கதைகள் மட்டும் கொண்ட ‘எருமைப் பொங்கல்‘ என்ற தனித்தொகுப்பாக வெளியானது.
அவர் வாழ்ந்த காலத்திலேயே பெரும்பான்மைத்
தொகுப்புகளும் வெளிவந்தன என்பதை வைத்து அவற்றின் கதைத் தேர்வும் வரிசை அமைப்பும்
அவரே தீர்மானித்தது என்ற முடிவுக்கு வந்தேன். அவரை அறிந்த இலக்கியவாதிகள் அதை
உறுதிப்படுத்தவும் செய்திருந்தார்கள். தி. ஜானகிராமனின் நண்பர்களும் சக எழுத்தாளர்களுமாக
இருந்த கரிச்சான் குஞ்சு, ஸ்வாமிநாத ஆத்ரேயன் ஆகியோரைச் சந்தித்துப்
பேசும் வாய்ப்பு எனக்கு இருந்தது. அவர்களுடனான உரையாடலில் கிடைத்த தகவல் இந்தத்
தீர்மானத்தை எட்ட உதவியது. ‘ ஜானகிராமன் ஒரே இருப்பில் எழுதி முடிப்பார்.
கதையின் பூரண வடிவம் அவர் மனதுக்குள்ளே இருக்கும். அதைப் பார்த்துக் காகிதத்தில்
காப்பி பண்ணுவதுபோல எழுதி முடித்து விடுவார். அப்படியே பத்திரிகைகளுக்கு
அனுப்பியும் விடுவார். புத்தகமாக வரும்போதும் பெரிதாக ஒன்றும் மாற்றமிருக்காது’ என்ற தகவல் நினைவுக்கு வந்து உதவியது.
இருந்தாலும் என் சந்தேகங்களைத் தீர்த்துக்
கொள்ள, முதல் பதிப்பை ஆதாரமாகக் கொள்வது என்று
முடிவு செய்தேன். அதையொட்டியே காலச் சுவடிலும் ஃபேஸ்புக்கிலும் அறிவிப்புகள்
வெளியிடப்பட்டன. கிடைத்த முதல் பதிப்புகள் என் தீர்மானத்துக்கு எதிராக
இருக்கவில்லை என்பது பெரும் ஆறுதலைக் கொடுத்தது. சில கதைகளை அவை வெளிவந்த இதழ்களை
வைத்து ஒப்பிட்டுப் பார்த்தேன். பத்தி பிரிப்பு, அச்சுப் பிழை தவிர வேறு மாற்றங்கள் அநேகமாக இல்லை. கதைகளில்
நீக்கல்களோ சேர்க்கையோ இல்லை. விதி விலக்காக ஒரு கதையில் மட்டுமே மாற்றம்
செய்யப்பட்டிருக்கிறது. ‘தேனீ‘ இதழில் வெளிவந்த ‘ரத்தப் பூ‘ என்ற கதை ‘சிவப்பு ரிக்ஷா‘ தொகுப்பில் சேர்க்கப்பட்டபோது ‘சண்பகப்பூ‘ என்று தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.
தி.ஜானகிராமன் மறைந்து ஒரு நூற்றாண்டொன்றும்
ஆகிவிடவில்லை. 33 வருடங்கள் என்பது வரலாற்றில் நெடுங்காலமும்
அல்ல. ஆனால் இந்தக் காலப் பகுதியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளரின் படைப்புகளைத்
தொகுப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அரும்பாடு பட்டே முதல் பதிப்புகளைக்
கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. வெளியான இதழ்கள் கிடைத்தற்கரியனவாக இருந்தன.
இவைதாம் சிரமம் தருவதாக இருந்தன. அதைக் கணிசமான அளவுக்குக் குறைத்துக் கொள்ளப்
பலரும் உதவியிருக்கிறார்கள். பல நூலகங்கள் துணை செய்தன.
இந்தக் கேள்வியின் ஒரு பகுதிக்குத் தன்னிலை
விளக்கமாகச் சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். ‘தி.ஜானகிராமன் சிறுகதைகள் – முழுத் தொகுப்பை‘ செம்பதிப்பு என்று குறிப்பிட எனக்குத்
தயக்கம் இருக்கிறது. இது முழுமையை நோக்கிய முதல் முயற்சி மட்டுமே. இதில் பூர்த்தி
செய்யப்பட வேண்டிய இடங்கள் இன்னும் இருக்கின்றன. அதைச் செய்து விட முடியும் என்ற
நம்பிக்கையை இந்தப் பணி எனக்குக் கொடுத்திருக்கிறது. நான் ஆய்வாளன் அல்லன்.
ஆய்வுக்கான முறையான கருவிகள் என்னிடம் இல்லை. ஆய்வுக்கான ‘கல்விப்புலப் பொறுமை’யும் – அகடெமிக் பேஷன்ஸ் – சுத்தமாக எனக்கில்லை. பகுத்து ஆராயும்
நுண்மாண் நுழைபுலமும் கிடையாது. இந்தத் தொகுப்பில் என் கருவிகள் எனது வாசிப்பும்
ரசனையும் உள்ளுணர்வு சார்ந்த முடிவுகளும் மட்டுமே. அதனாலேயே இந்தப் பதிப்பை நான் ‘ஆர்வப் பதிப்பு’ என்றே குறிப்பிடுகிறேன். இந்தப் பதிப்பை
இன்னும் செம்மைப்படுத்த வேண்டும் என்ற ஆர்வமும் படுத்துவேன் என்ற நம்பிக்கையும்
இருக்கிறது. அதை இந்தத் தொகுப்புப் பணி அளித்திருக்கிறது.