பக்கங்கள்

வியாழன், 30 ஏப்ரல், 2015

நாளையின் பாடல்கள்







பேற்று நோவடங்கி உடல்பரப்பிக்  கிடக்கிறது நிலம்
கரு ஈன்ற அசதிப் பெருமூச்சாய் விம்மி அலைகிறது காற்று
உயிர்ப் பிசுக்கின் ஒளிர்வுடன்  ததும்புகிறது கானல்
கதிரிலிருந்து உதிர்ந்து மண்ணுக்குள் உறங்கும்
ஆதரவற்ற வித்துக்கள் திசையதிர விசும்புகின்றன
அவற்றைச் சமாதானம் செய்கின்றன 

வரப்பின்மேல்  குந்தியமர்ந்திருக்கும் சில  பாடல்கள்.

புதன், 29 ஏப்ரல், 2015

தனுவச்சபுரம் - இரண்டாவது ( மாற்றப்பட்ட ) பதிப்பு


தனுவச்சபுரம் - இரண்டாவது ( மாற்றப்பட்ட ) பதிப்பு




1

ங்ஙம்புழையைத் தெரியுந்தானே உங்களுக்கு?
கிருஷ்ணப் பிள்ளையைத் தெரியாவிட்டாலும்
சங்ஙம்புழையைப் பற்றிக் கேட்டிருப்பீர்கள் இல்லையா?
கபட லோகத்தில் ஆத்மார்த்தமான
இதயம் சுமந்திருந்த தோத்தாங்குளிக் கவிஞன்.
ஒவ்வொரு இரவும் பூமொட்டின் நறுமணத்தில்
உறங்கி எழுந்த பாட்டுப் பிசாசு.
நண்பன் ராகவனின்
காவியக் காதலை நாடகமாக்கி
கோடானு கோடி விழிகளைப் பிழிந்தவன்.
தரித்திர ராகவனை ரமணனாக்கினான்.
செல்வக் காதலியைப் பெயரிலி ஆக்கினான்.
எல்லாக் காதலர்களும் ரமணன்கள்.
எல்லாக் காதலிகளும் சந்திரிகைகள்.

2

சங்ஙம்புழையைத் தெரியுந்தானே உங்களுக்கு?
சங்ஙம்புழையைத் தெரியாவிட்டாலும்
சந்திரிகையைப் பற்றிக் கேட்டிருப்பீர்கள் இல்லையா?
கானகச் சாயலில் காதல் இடையனுடன்
ஆடு மேய்க்க வீடு துறந்த சீமாட்டி
சந்திரிகையைத் தெரியாவிட்டாலும்
ராகவனைத் தெரியுந்தானே உங்களுக்கு?
காதலில் தோற்றுக் கயிற்றில் தொங்கியவன்
ராகவனாய் மரித்து ரமணனாய் வாழ்பவன்
தற்கொலையில் முடிந்த
எல்லாக் காதலர்களும்  ரமணன்கள்
தற்கொலைக்குத் தள்ளிய
எல்லாக் காதலிகளும் சந்திரிகைகள்.

3

சங்ஙம்புழையை, ராகவனை, சந்திரிகையை,
ரமணனை தெரியாவிட்டாலும்
தனுவச்சபுரத்தைத் தெரியுந்தானே உங்களுக்கு?
ரயில் நிற்கும்போதெல்லாம் யாரேனும்
தனுவைத்தபுரம் என்று திருத்தி உச்சரிக்கும் பெயரூர்
எல்லா ஊரும் இன்று தனுவச்சபுரந்தான் என்று
பசுவய்யா பண்டு சாட்சி பகர்ந்த இடம்

இன்றும் ரயில்  நின்றதும்
நானும் சரியாக உச்சரித்தேன் தனு வைத்த புரம்
நின்ற ரயில் நகராமல் நின்றிருக்க
பார்த்து வந்து யாரோ சொன்னார்கள்
'பாய்ந்து செத்திருக்கிறாள், பாவம் இடைச்சி'
ஆமோதித்துக் கலங்கியது இன்னொரு குரல்
'அயல்காரிதான் சந்திரிகா, அநியாயச் சாவு'

நடுங்கும் குரலில் அந்தரத்தில் கேட்டேன்
'சாவுக்குள் தள்ளியது ரமணனா?'

ஏன் அப்படிக் கேட்டேன் என்று
இப்போதும் விளங்கவில்லை
தனு வைத்த புரமும் சங்ஙம்புழையும் தெரியுமா உங்களுக்கு?
எல்லாக் காதலர்களும் ரமணன்களா?
எல்லாக் காதலிகளும் சந்திரிகைகளா?
@




திங்கள், 20 ஏப்ரல், 2015

கதையின் கதை

காபோ, காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், எப்போதும் செய்திகளில் இருந்துகொண்டிருந்தார்; இறந்தபின்னும் இருந்து கொண்டேயிருக்கிறார். இருந்தபோதைவிடவும் இறந்தபின்னர் மிக அதிகமாகச் செய்திகளில் விவாதிக்கப்படுகிறார். ஆளுமையாக அவரது இயல்புகள் பேசப்படுகின்றன. படைப்பாளியாக அவரது எழுத்துகள் வெவ்வேறு கோணங்களில் விவாதிக்கப்படுகின்றன. அவர் பெயரில் இருக்கும் இணையதளத்தில் காபோ தொடர்பாக ஏதாவது புதுத்தகவல் வாரத்துக்கு ஒருமுறையாவது பதிவேற்றம் செய்யப்படுகிறது. அவரது படைப்புகள் பற்றிய சொல்லப்படாத செய்திகள், அவரது செயல்களைப் பற்றிய விவரங்கள் என்று கண்டுபிடிப்பின் சுவாரசியத்துடன் ஏதாவது ஒன்று பகிர்ந்துகொள்ளப்படுகிறது. லத்தீன் அமெரிக்க இதழ்களிலும் அவற்றின் இணையப் பதிப்புகளிலும் காபோ முன்னர் சொன்ன கருத்துகள் இன்று புதிய வெளிச்சத்துடன் புரிந்துகொள்ளப்படுகின்றன. வாழ்ந்த காலத்தில் வெளியானதைவிட அதிக எண்ணிக்கையில் அவரது நூல்கள் பதிப்பிக்கப்படுகின்றன.
மார்க்கேஸின் மறைவுக்குப் பின்னர் பலர் ஒரு சுவாரசியமான ரகசியத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள். அவரது கதைகளில் இடம்பெறும் கதை மாந்தர்களின் நிழல் வடிவம் தாங்கள்தாம் என்று உரிமை பாராட்டத் தொடங்கினார்கள். புகழ்பெற்ற மனிதரின் கவனத்துக்குரியவர்களாகத் தாங்கள் இருந்தோம் என்ற தற்பெருமைக்காகச் சொல்லப்பட்டவையே பலதும் என்று மார்க்கேஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜெரால்ட் மார்ட்டின் அவற்றை ஒதுக்கிவிடுகிறார். ஏனெனில் காபோ அப்படிப்பட்ட சம்பவங்களைப் பகிரங்கப்படுத்த விரும்பாதவர். ‘ஒவ்வொருவருக்கும் மூன்று வாழ்க்கைகள் இருக்கின்றன. பொது வாழ்க்கை, தனி வாழ்க்கை, ரகசிய வாழ்க்கை’ என்று மார்ட்டினிடம் குறிப்பிட்டிருக்கிறார் காபோ. ‘அதை வெளிப்படுத்துவீர்களா?’ என்ற கேள்விக்கு காபோவின் பதில் ‘ஒருபோதும் இல்லை’. ஆனால் காபோவின் அந்த வாழ்க்கையை நாம் அவரது படைப்புகளிலிருந்து ஊகித்துவிட முடியும். படைப்புகளிலிருந்து கண்டுபிடிக்கமுடியாத ஒன்றை ஒரு நிழல் பாத்திரம் வெளிப்படுத்தியது.
சென்ற ஆண்டு ஏப்ரல் 17 அன்று காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் மறைந்தார். அந்த ஆண்டுக் கோடைக்காலத்தில் பிரித்தானிய எழுத்தாளரும் மார்க்கேஸின் தீவிர வாசகரும் அபிமானியுமான நிக்கோலஸ் ஷேக்ஸ்பியருக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. எழுதியவர் லண்டனில் வசிக்கும் ஒரு பெண். மார்க்கேஸின் ‘காலராக் காலத்தில் காதல்’ (Love in the time of Cholera ) நாவலின் பிரித்தானியப் பதிப்புக்குத் தான் எழுதியிருக்கும் முன்னுரையை முகாந்திரமாக வைத்தே அந்தப் பெண் தனக்குக் கடிதம் எழுதியதாகக் குறிப்பிடுகிறார் நிக்கோலஸ். “நீங்கள் முன்னுரை எழுதியிருக்கும் அந்த கொலம்பிய எழுத்தாளருடன் எனக்குச் சின்னத் தொடர்பு இருக்கிறது. என்னை வைத்துத்தான் அவர் ஒரு கதையை எழுதியிருக்கிறார். 1990 இல் பாரிஸிலுள்ள ‘சார்ள்ஸ் தி கால்’ விமான நிலையத்தில் அவரைச் சந்தித்தேன்” என்பது கடித வாசகம்.
அந்தக் கதை மார்க்கேஸின் ‘விந்தையான புனிதப் பயணிகள்’ ( The strange pilgrims ) தொகுப்பில் இடம் பெற்றிருப்பது. ‘உறங்கும் அழகியும் விமானமும்’ என்ற கதை. நமது சுயத்தின் அறியப்படாத இன்னொரு சுயத்தை மையக் கருவாகவைத்து எழுதப்பட்ட கதைகள்கொண்ட ஒரு தொகுப்பை மார்க்கேஸ் பதினெட்டு ஆண்டுகளாகத் திட்டமிட்டு வந்தார். கதைக்கான குறிப்புகளை ஒரு குறிப்பேட்டில் கிறுக்கி வைத்திருந்தார். அதில் ஒரு கதைக்கான வரி முதல் பார்வையிலேயே தோன்றும் காதலைப் பற்றியது. உறங்கும் அழகியும் விமானமும் கதையும் கண்டதும் காதல் கொள்வது பற்றியதுதான்.
1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ‘சார்ள்ஸ் தி கால்’ விமான நிலையத்தில் நியூயார்க் செல்லும் விமானத்துக்காகக் காத்திருக்கும்போது பிரேசிலைச் சேர்ந்த ஒரு பெண்ணைச் சந்திக்கிறார்.பெயர் சில்வானா தே ஃபாரியா. காலை ஒன்பதுமணிக்குப் புறப்படவேண்டிய விமானம் பருவநிலைக் கோளாறு காரணமாக மாலை நான்கு மணிக்குத்தான் கிளம்புகிறது. அதுவரை எல்லாரும் காத்திருக்கிறார்கள். பயணிகள் அறையில் மார்க்கேஸின் பக்கத்து இருக்கையில் வந்து உட்காருகிறார் சில்வானா. அவளுடன் உரையாடுகிறார் மார்க்கேஸ். அவள் எழுந்துபோகும் இடைவெளியில் இருக்கையையும் அவளது லக்கேஜுகளையும் பார்த்துக் கொள்கிறார். சில்வானா நம்பிக்கையுடன் தன்னைப்பற்றிய எல்லாவற்றையும் சொல்கிறாள். ஒரு நடிகையாக பாரிசில் வாழ்ந்த வாழ்க்கையை, பிரெஞ்சு இயக்குநரான கில்ஸ் பீட்டை முதலில் பார்த்தவுடன் காதல் கொண்டதை (நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்தோம் உடனேயே காதல் கொண்டோம் கண்டதும் காதல்) , ஒரு குழந்தைபெற்றதும் காதல் முறிந்துபோனதை, பின்னர் விலைமகளாகப் பிழைக்கநேர்ந்ததை, சில படங்களில் துண்டுவேடங்களில் நடித்ததை, மார்க்கேஸ் என்பவர் எழுதிய சிறுகதையை ஆதாரமாகவைத்து உருவாக்கப்பட்ட சினிமாவின் படப்பிடிப்பைப் பார்த்ததை, உடலின் சகல உபாதைகளுக்கும் நிவாரணிகளாகப் பல வண்ண மாத்திரைகளை வைத்திருப்பதை, வாழ்க்கையின் வேதனையை -எல்லாவற்றையும் மார்க்கேஸிடம் சொல்லுகிறார்: கேட்டுக் கொண்டிருப்பவர் ஓர் எழுத்தாளர் என்பதை அறியாமலே. ‘உனது வாயிலிருந்து வெளிப்படும் உண்மையுணர்வு என்னை ஆச்சரியப்படுத்துகிறது’ என்று மட்டுமே எதிர்வினையாற்றுகிறார் மார்க்கேஸ். அந்தப் பதிலில் விழித்துக்கொள்கிற சில்வானா ‘நீங்கள் யார்?’ என்று கேட்கிறாள். ‘நான் ஒரு பத்திரிகையாளன்’. எந்தப் பத்திரிகைக்கு? ‘நான் பத்திரிகைகளுக்கு எழுதுவதில்லை’ என்று மார்க்கேஸ் சொன்னதும், தான் பேசிக்கொண்டிருப்பது தனது அம்மா மும்முரமாக வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தில் இந்த நபரின் படத்தைப் பார்த்திருக்கிறோம் என்று அவளுக்குத் தெரிகிறது. தனது அடையாளத்தை லத்தீன் அமெரிக்கப் பெண் ஒருத்தியால் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும் என்ற தன்னுடைய நம்பிக்கை பலித்த சந்தோஷத்தில் மார்க்கேஸ் தனது முகவரியை எழுதி அவளிடம் கொடுக்கிறார். கடிதம் எழுது என்கிறார். ஆனால் சில்வானா தே ஃபாரியா ஒருபோதும் காபோவுக்குக் கடிதம் எழுதவில்லை.
இந்த உண்மை விவரங்கள்தாம் ‘உறங்கும் அழகியும் விமானமும்’ கதையின் கூறுகள். இந்த விவரங்களையெல்லாம் நேர்ச்சந்திப்பில் நிக்கோலஸ் ஷேக்ஸ்பியரிடம் எடுத்துச் சொல்கிறார் சில்வானா. இப்போது அவர் லண்டன்வாசி. ஐம்பதுவயதுப் பாட்டி. மார்க்கேசின் மரணச் செய்தி அறிந்தபின்னர் அவரது ‘விந்தையான புனிதப் பயணிகள்’ தொகுப்பை வாசித்ததாகவும் அதில் மூன்றாவதாக இடம் பெற்றிருக்கும் உறங்கும் அழகி கதையின் சம்பவங்கள் காப்ரியேல் கார்சியா மார்க்கேசை விமான நிலையத்தில் முதலில் சந்தித்தபோது தான் சொன்னவை என்பதும் சில்வானாவின் தரப்பு. சில விஷயங்கள் எழுத்தாளரின் கைச்சரக்கு என்றும் திருத்தம் சொல்லுகிறார். தான் அன்று விமானத்தில் பயணம் செய்யவில்லை. பாரிசில் தான் மகிழ்ச்சியாக இருக்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்ட கணவர் பீட் தனக்கு ஆறுதல் சொல்வதற்காக பிரேசிலிலிருக்கும் சில்வானாவின் பெற்றோருக்கு விமான டிக்கெட் அனுப்பி பாரீசுக்கு வரவழைத்ததாகவும் அவர்களை வரவேற்கப் போனபோதுதான் மார்க்கேஸைச் சந்தித்ததாகவும் சொல்லுகிறார். இன்னொரு முக்கியமான திருத்தத்தையும் சில்வானா குறிப்பிடுகிறார். “நான் இதுவரை பார்த்தவர்களிலேயே மிக அழகான பெண் இவள்தான் என்று கதையில் மார்க்கேஸ் குறிப்பிடுகிறாரே அது எழுத்தாளரின் பொய்”.
கதையில் அப்பட்டமான உண்மைக்கு இடமில்லை. நிஜமான பொய்க்குத்தானே படைப்பில் வேலை. காபோவே சொல்லுகிறாரே ‘ஒரு கதைக்கு தொடக்கம் இல்லை; முடிவும் இல்லை. ஒன்று அது செயலாற்றுகிறது. அல்லது சும்மா இருக்கிறது’ என்று.
நன்றி: Newsweek, July 24 2014
http://www.kalachuvadu.com/issue-184/page62.asp

ரவி வியாஸ்









நினைவூட்டலையே இலக்கியப் பணியாக மேற்கொண்டிருந்தவர் எழுத்தாளர், பத்தியாளர் ரவி வியாஸ். ஆனால் அவர் யாராலும் நினைக்கப்படாமல் மறைந்தார்.  அவரது மரணம் அவர் புழங்கிய கருத்துப்புலத்தில் கூட அறியப்படாமல் போனது. எழுபதுகளின் இறுதி முதல் இரண்டாயிரத்தின் முதல் பதிற்றாண்டு வரை இரண்டு ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து பத்திகள் எழுதி வந்தார். தி ஹிந்து நாளிதழின் இலக்கிய சஞ்சிகையிலும்  டெலிகிராப் இதழின் ஞாயிற்றுக் கிழமைப்  பதிப்பிலும் அவர் எழுதி வந்த பத்திகள் வாசகர் களிடையே மிகுந்த வரவேற்புப் பெற்றவை. ஓரளவுக்குப் பரவலான வாசக அறிமுகம் இருந்து அவரது மறைவு அதற்குரிய கவனத்துடன் அறியப்பட வில்லை. அவர் பங்களித்த இதழ்களிலேயே கூட சிறு செய்தியாகத்தான் வெளியிடப் பட்டிருந்திருக்கிறது. அவுட் லுக் வார இதழில்  ( 9 மார்ச் 2015 ) வெளியான குறிப்பிலிருந்துதான் அவரது மறைவு பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. தகவல் தொடர்பு யுகத்தின் அட்சய பாத்திரமான இணையத் தளத்திலும் ரவி வியாஸைப் பற்றிய தகவல்கள் குறைவு. டெலிகிராப் நாளிதழில் மட்டுமே விரிவான அஞ்சலிக் குறிப்பு வெளிவந்திருக்கிறது.  அதுவே கூட ரவி வியாஸின் நண்பரான ருத்ராங்க்ஷு முகர்ஜி எழுதியது. பல பதிற்றாண்டுக் காலம் ஊடகங்களில் செயல்பட்டவரும் அந்தச் செயல்பாடு களுக்காக வாசக கவனம் பெற்றவருமான  ரவி வியாஸ் விளம்பர வெளிச்சத்திலிருந்து ஒதுங்கி நின்றது வியப்பளிக்கிறது.

ரவி வியாஸ் பதிப்பாளரும் பத்தியாளருமான கதை சுவாரசியமானது. தில்லியில் உயர் கல்வி முடித்து விட்டுக் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வேலை எதுவும்  இல்லாமலிருந்த ரவி வியாஸ் வாசிப்பதையே முழு நேர வேலையாக வைத்துக் கொண்டார். தில்லி லோடி கார்டனில் மரத்தடியில் அமர்ந்து புத்தகங்களை வாசித்துத் தீர்ப்பதையே  அன்றாட நியமமாக்கி யிருந்தார். இளைஞன் ஒருவன் மரத்தடியில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பதை வழக்கமாக அந்த வழியில் நடைப் பயிற்சி மேற் கொண்டிருந்த எழுத்தாளரும் அன்று ஓரியண்ட் லாங்மன் பதிப்பகத்தின் இயக்குநருமாக இருந்த பிரபல எழுத்தாளர் கவனித்தார். எப்போதும்  இங்கே உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருப்பது ஏன்? என்ற கேள்விக்கு ரவி வியாஸ் சொன்ன பதில் அவருக்கு ஆச்சரியமளித்தது. வேறு வேலை எதுவும் இல்லை என்பதனால் வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்ற பதிலை எழுத்தாளர் ரசித்தார். வாசிப்பையே வேலையாக வைத்துக் கொண்டிருக்கும் ரவி வியாஸுக்குத் தனது நிறுவனத்தில் வேலை கொடுப்பதாகச் சொன்னார்.மறுநாள் ரவி வியாஸ் ஓரியண்ட் லாங்மெனில் வேலைக்குச் சேர்ந்தார். நிறுவனம் அவரை லண்டனிலுள்ள தலைமை யகத்துக்குப் பயிற்சிக்காக அனுப்பியது. பயிற்சி முடித்துத் திரும்பிய ரவி வியாஸ் ஓரியண்ட் லாங்மன் பதிப்பகத்தின் எடிட்டராகவும் பதிப்பாளரா கவும் செய்த பணிகள் இந்தியப் பதிப்புத் துறை வரலாற்றில் திருப்பு முனைகளாக அமைந்தன. நீண்ட காலம் ஓரியண்ட் லாங்மனில் பணியாற்றிய ரவி வியாஸ் பின்னர் மாக்மில்லன் நிறுவனத்தின் இயக்குநராகப் பொறுபேற்றார். இந்த இரு பதிப்பகப் பணிக்காலத்தில் அவர் அறிமுகப் படுத்திய மாற்றங்கள், முன் வைத்த  மதிப்பீடுகள் முக்கிய மானவை. கல்விப்புலம் சார்ந்து அவர் பதிப்பித்த புத்தகங்கள் புதுமை யையும் சமகாலத் தேவையையும் கணக்கில் கொண்டு உருவானவை.பிற துறை நூல்களில் புத்தகத்துக்கும் வாசகனுக்கும் நடுவே, அந்த இரண்டு முனைகளையும் இணைப்பவர் எடிட்டர் என்ற கண்ணுக்குத் தென்படாத ஆனால் தவிர்க்கமுடியாத ஆளுமை என்பதை நிறுவினார்.

ரவி வியாஸை புத்தகப்பதிப்புத் துறையில் வேலைக்குச் சேர்த்து விட்ட குஷ்வந்த சிங் தனது பத்தியொன்றில் ரவி வியாஸை தான் கொஞ்சம் பொறாமையுடன் பார்க்கும் எடிட்டர் என்று செல்லப் பெருமிதத்துடன் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.

எனது ஆங்கில வாசிப்பின் முறையியலுக்குக் கடன்பட்டிருப்பவர்களில் ரவி வியாஸும் ஒருவர் என்பதே இந்தக் குறிப்பை எழுதக் காரணம். பள்ளி இறுதி  வகுப்புகளிலும் கல்லூரிக் காலங்களிலும் ஆங்கில ஆசிரியர்கள் வலியுறுத்திச் சொன்ன செயல்,' உன்னுடைய ஆங்கிலம் செம்மையடைய வேண்டுமானால் நாள் தவறாமல் ஹிந்து பத்திரிகையைப் படி' என்பது. அந்த வலியுறுத்தலில் தொடர்ந்த பழக்கம் சலிப்பூட்டத் தொடங்கிய நாட்களில் அந்த இதழில் எழுதி வந்த பத்தியாளர்கள் இருவர் மனதுக்கு இதமளிப்பவர்களானார்கள்.சிந்தனையைப் பாதிப்பவர்களானார்கள்.ஒருவர் ஓவியம் நுண் கலைகள் பற்றி எழுதிய அஞ்சலி சர்க்கார். இரண்டாமவர் - ரவி வியாஸ்.

ரவி வியாஸின் 'கிளாசிக்ஸ் ரீவிசிட்டட்' என்ற பத்தி வாசகனாக எனக்கு அளித்த இலக்கிய அறிவும் படைப்பு அனுபவமும் ஆழமானவை. ஆங்கிலத்திலுள்ள  செவ்வியல் நூல்களையும்  ஆங்கிலம் வழியாக வந்த  பிற மொழி செவ்வியல் படைப்புகளையும் பற்றி அவர் எழுதிய அந்தப் பத்தி மறு வாசிப்பு என்ற வகையை  சேர்ந்தது. ஆனால் அது மறு அறிமுகம் என்பதைத் தாண்டிக் கறாரான பார்வையைக் கொண்டிருந்தது. உண்மையில் ரவி வியாஸ் மறு வாசிப்புக்காக எடுத்துக்  கொண்ட பல படைப்புகளை அந்தப் பத்தி வாசிப்பின் விளைவாகவே முதன்முறையாக வாசித்திருக் கிறேன். பதிப்பக எடிட்டராகப் பணியாற்றிய ரவி வியாஸின் நோக்கம் பத்தி எழுத்திலும் பிரதிபலித்தது என்று இப்போது தோன்றுகிறது. வாசகன் எதை வாசிக்க வேண்டும், எப்படி வாசிக்க வேண்டும் என்பதைத் தீர்மானி ப்பதில் ஒரு எடிட்டருக்கு முக்கியமான பங்கு இருப்பதாகக் கருதியிருந்தவர் அவர். அந்த அடிப்படைப் பார்வையை கிளாசிக் படைப்புகளின் வாசிப்பிலும் முன்னிருத்தினார். 'பைபிள் மறு வாசிப்புப் பற்றிய  பத்தியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். பைபிளை ஒரு மத நூலாகவோ அல்லது வெறும் கிளாசிக்காக வோ அவர் மறு வாசிப்புச் செய்யவில்லை. ஒரு புதிய படைப்பாகவும் புதிய அணுகுமுறையுடனுமே பார்க்கிறார். பைபிளின் மொத்தத்தையும் பத்து மையக் கருக் களாகப் பார்க்க்கிறார். முக்கியமான பத்து தீம்களின் தொகுப்பாகவே பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் வகுக்கிறார். இந்தப் பார்வை பைபிளை  வெறும் இறை நூல் என்பதிலிருந்து விடுவித்து அதை மேற்கத்திய பண்பாடு, உணர்வுகளின் வரலாறு, நீதி, மொழி, இலக்கியம் ஆகியவற்றை நிர்மாணம் செய்த படைப்பாக நிறுகிறது. ஒரு சிந்தனைப் பருவத்தின் தொகுப்பாக ( Climate of thought ) அதை முன் வைக்கிறது. இந்த நோக்கில் மறு வாசிப்பு என்பது ஒரு படைப் பை நவீனப் படுத்துதல் என்று மாற்றியவர் ரவி வியாஸ். இந்தச் செயல் இன்னொரு இலக்கிய மதிப்பீட்டையும் எடுத்துக் காட்டுகிறது. எந்தப் படைப்பும் அதன்  காலத்தை யும் இடத்தையும் கடந்தது என்ற மதிப்பீட்டை.

ரஷ்ய இலக்கியங்களில் எனக்கு விருப்பமானவர்கள் டால்ஸ்டாய், தாஸ்தயேவ்ஸ்கி, ஆன் டன் செக்காவ், இவான் துர்கனீவ் ஆகியவர்களே. இவர்களுடன் ஒப்பிடும்  போது மக்சீம் கார்க்கி கொஞ்சம் கனம் குறைந்த வராகவே எனக்குத் தோன்றியிருந்திருக்கிறார். அவரது மாபெரும் படைப்பாகச் சொல்லப்படும் 'தாய்' நாவலில்   கலையின் வெகுளித் தன்மையை விட பரப்புரையின் செயற்கைத்தன்மை அதிகம் என்று தோன்றியிருந்தது. ரவி வியாஸின் மறு வாசிப்புப் பத்திக் கட்டுரை அதை  மாற்றியது. குறிப்பாக கார்க்கியின் தன் வரலாற்று நூல்களான, எனது குழந்தைப் பருவம், எனது பயிற்சிக் காலம், எனது பல்கலைக் கழகங்கள் ஆகிய மூன்ரைப்  பற்றியும் எழுதப்பட்ட கட்டுரை கார்க்கியைப் புதிய வெளிச்சத்தில் காட்டியது.

புத்தகங்கள்புத்தகப் பதிப்புத்துறை பற்றித் தொடர்ந்து எழுதி வந்தவர் ரவி வியாஸ். தி ஹிந்து வில் ' கிளாசிக்ஸ் ரீவிசிட்டட்', டெலிகிராப் பில் 'புக் வைஸ்' ஆகிய பத்திகளைப் பல ஆண்டுகளாகத் தொடந்து எழுதினார். இரண்டும் வாசிப்பின் நேற்றையும் இன்றையும் மையமாகக் கொண்டவை. இந்தியப் பதிப்புத் துறையில் தான் விரும்பிய மாற்றங்களுடன் தான் நிராகரித்த சந்தர்ப்பவாதப் போக்குகளும் அரங்கேறியபோது ரவி வியாஸ் விலகிக் கொண்டார் என்று கூறப் படுகிறது. 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவரது பத்தி எழுத்து இந்த இதழ்களில் இடம் பெறவில்லை. பத்தியாளரும் மறதியின் இருளுக்குள் முக விவரமற்று மறைந்து போனார். மீண்டும் அவர் அரைகுறையாக நினைக்கப்பட்டது மரணத்தை ஒட்டித்தான். இந்த இடைப் பட்ட ஆண்டுகளில் அவர் வேறு என்ன செய்திருப்பார் என்று  தெரிய வில்லை. ஆனால் அதை ஊகிப்பதும் சிரமமல்ல. ஏதேனும் ஒரு மரத்தடியில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்திருப்பார்.
@

நன்றி: காலச்சுவடு இதழ் 184 - ஏப்ரல் 2015









புதன், 8 ஏப்ரல், 2015

ச ர் ப் ப ம்

            ச ர் ப் ப ம் 



துலாவர்ஷ  மழை விடாமல் கொட்டிக்கொண்டிருந்த நாட்களில் தாமதமாக  வெயில் படர ஆரம்பித்த  ஒரு வெள்ளிக் கிழமை நண்பகல் வேளையில், அது புதுக்காடு ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரிக்குள்  ஊர்ந்து நுழைந்தது. ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரியின் பின் புற வழியாக நுழைந்ததால் அதை யாரும் கவனிக்கவில்லை.


புதுக்காடு ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரி இருப்பது புதுக்காடு மார்க்கெட் சந்திப்புக்குப் பக்கத்தில். பழைய ஒரு நாலுகெட்டு வீடு. வீட்டுக்கு முன்னாலும் பின்னாலும் சௌகரியமான திறந்தவெளி. வீட்டைச் சுற்றியுள்ள மதில் அங்கங்கே இடிந்து குட்டிச் சுவராக மிஞ்சியிருந்தது. முன் வாசல் பழுது பார்த்து முடித்து பட்டுவாடா செய்யக் காத்திருக்கும் வாகனங்களுக்காக. பின் வாசல் புதிதாக சிசிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட வண்டிகளுக்காக. இரண்டு இடங்களிலும் வண்டிகள் மழையில் நனையாமல் இருப்பதற்காக நீல நிற டார்பாலின் பந்தல் இழுத்துக் கட்டியிருந்தது.பின்வாசல் படியருகில்தான் பையன்கள் வாகனங் களிலிருந்து கழற்றி எடுத்த துருவும் கசடும் ஏறிய திருகாணிகளையும்  மரைகளையும் மோட்டார் சைக்கிள் செயின்களையும் பேரிங்குகளையும் மண்ணெண்ணெய் ஊற்றிய இரும்புச் சட்டியில் ஊற வைப்பார்கள். படியில் உட்கார்ந்து அவற்றைச் சுத்தம் செய்வார்கள். படிக்குப் பக்கத்திலேயே சட்டியை வைத்திருப்பார்கள். மழைபெய்கிறபோது கூரை ஓட்டிலிருந்து சொட்டிச் சொட்டி சட்டியில் நீர் நிரம்பும். அதன் மேற் பரப்பில் வானவில் நிறத்தில் ஒரு படலம் மிதக்கும். ஆட்டோ மொபைல் ஆஸ்பத்திரியை காலையில் வழக்கமாகத் திறக்கும்  போக்கு என்ற பட்டப் பெயரில் அழைக்கப்படும் வினுவுக்கு  மழை இரவுக்கு அடுத்த நாள் அந்த எண்ணெய்ச் சரிகையை  ரசித்துப் பார்ப்பதுதான் முதல் வேலை. சிறு காற்று வீசியதும் சரிகை பளபளப்புடன் நலுங்கும்.சில நொடிகள் அதைப் பார்த்துக் கொண்டிருப்பதற்குள் முதலாளியின் குரல் கேட்பதும் அவசரமாக சட்டியை எடுத்து தண்ணீரைக் கொட்டுவதும் வழக்கமாக நடக்கும். மண்ணில் விழுந்த சரிகை கசங்கி உருக்குலைந்து அழிவதைப் பார்க்கும் போதெல்லாம் போக்குக்கு ஏனென்று தெரியாத சங்கடம் வரும்.   

வெள்ளிக் கிழமை மத்தியான்னம் அது ஊர்ந்து  மண்ணெண்ணெய்ச் சட்டியைச் சுற்றிக் கொண்டுதான் உள்ளே நுழைந்தது. ஊரும்போது அதன் சரீரம் உரசி சரியாக வைக்கப்படாத சட்டி கொஞ்சம் அலுங்கியது. நீர்மேல் மிதந்திருந்த வானவில் படலம் நொறுங்குவதற்குள் அதன் சரீரம் சட்டிப் பிரதேசத்தைக் கடந்திருந்தது. 'நல்ல காலம். அதுமட்டும் நொறுங்கி யிருந்தால் நான் அனுமதியில்லாமல் உள்ளே பிரவேசித்ததை யாராவாது கண்டு பிடித்திருப்பார்கள்' என்று டம்பமாக நினைத்துக் கொண்டது அது. அப்படி யோசித்தததற்கும் காரணம்  ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரியில் ஆங்காங்கே 'அந்நியர்க்குப் பிரவேசனமில்ல' என்ற மலையாள அறிவிப்பு தொங்க விடப்பட்டிருந்தது. ஆனால், மழை ஊறிய மண்ணில் ஊர்ந்து வந்ததால் பின் வாசல் நிலைப்படியையொட்டிய கருப்பு கிரானைட் தரையில் கொஞ்ச நேரத்துக்கு தனது நெளிவின் ஈரம் பதிந்திருந்தது அந்த அசடுக்கு ஞாபகமில்லா மலிருந்தது. உண்மையில் அது அதிருஷ்ட ஜென்மம்தான். அன்று காலையிலிருந்தே மழை பெய்து கொண்டிருந்ததால் உச்சி வேளைக்குப் பிறகுதான் போக்கு வேலைக்கு வந்தான். அவன் வருவதற்குள் வெயில் ஏறி விட்டதில் நீர்ச் சுவடு மறைந்து விட்டிருந்தது. அவன் மட்டும் அது நுழைவதற்கு முன்பே வந்திருந்தால் அத்துமீறலைக் கண்டு பிடித்திருக்கக்கூடும். ஏனெனில் போக்கு எப்போதும் நிலத்தைப் பார்த்தே நடப்பவன்.

இந்த ஊடுருவல் நடைபெறும்போது புதுக்காடு ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரி உரிமையாளன் ஜேக்கப் சக்கரியா என்ற கரியாச்சன் உள்ளேதான் இருந்தான். மழை சற்றே விட்டிருந்த  வியாழக் கிழமை முற்பகலில் ஜோலி தீர்த்து வெள்ளிக் கிழமை  டெலிவரி கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருந்த லாம்ப்ரெட்டா ஸ்கூட்டருக்கு ஸ்பார்க் பிளக் வாங்குவதற்காக தகரப் பறம்பு மார்க்கெட்டுக்குப் போயிருந்தான். வாடிக்கையாகப் போகும் எல்லாக் கடைகளிலும் விசாரித்தும் சாதனம் கிடைக்கவில்லை. 'எந்தரு கரியாச்சா, மார்த்தாண்ட வர்ம மகாராஜா காலத்தெ வண்டிக்கு இப்ப  ஸ்பேர் கிட்டானா?' என்ற கேலி வார்த்தைகள் மட்டும் கிடைத்தன.அதற்கிடையில் ஓய்ந்திருந்த மழை உஷாராகப் பொழிய ஆரம்பித்தது. இந்த மழையில் பஸ்ஸுக்குக் காத்திருந்து புதுக்காடு போய்ச் சேர்ந்தாற்போலத்தான் என்று அலுத்துக் கொண்டான். அலுப்பு வாயைக் கசப்பாக்கியது. கசப்பைத் துப்பும்போது 'தள்ளே, நசிச்ச  மழ' என்று சபித்தான். ஒரு வீச்சுக்குப் பிறகு மழை பொடித் தூறலாக விழத் தொடங்கியது. நின்றிருந்த கடையை விட்டு இறங்கி சாலையில் கால் வைத்ததும் 'சபிக்கவா செய்கிறாய் புல்லே' என்ற ஆக்ரோஷத்துடன் மழையின் சாட்டை கரியாச்சனின் முகத்தில் அடித்தது. 'எந்தொரு நசிச்ச திவசம்?' என்று காலத்திடம் புகார் சொல்லிக் கொண்டே கடிகாரத்தைப் பார்த்தான்.  பதினொரு மணி இருபது நிமிடம். தன்னை சபித்தவனுக்கு அந்தச் சாட்டையடியே போதுமான தண்டனை என்று தீர்மானம் செய்தது போல மழை சுத்தமாக நின்றிருந்தது. பழவங்காடி வழியாக நடந்து கிழக்கே கோட்டை வெளி வாசல்  தட்டுக் கடையில் கட்டன் குடித்தான். மறுபடியும் கடிகாரத்தைப் பார்த்தான்.  இருபத்தியேழு. நேராக அட்டக்குளங்கரை ஸ்ரீபாலா தியேட்டருக்குள் நுழைந்தான். டிக்கெட் எடுத்த பிறகு வெளியே வந்து சுவரொட்டியைப் பார்த்தான். 'கின்னாரத் தும்பிகள்' போஸ்டரில் ஒரு பையன்மேல் உடம்பைக் கிடத்தியிருந்த ஷகீலா கரியாச்சனைப் பார்த்துக் கண்களால் சிரித்தாள். 'ஒந்நு வேகம் வா, கரியாச்சா' என்றாள். 'தன்னே' என்று சொல்லும்போது தன்னையறியாமலே வேகமாக நடப்பதை  உணர்ந்தான்.

படம் ஓடிக் கொண்டிருந்தது. இருட்டில் துளாவி சீட்டில் உட்கார்ந்தபோது உடம்பில் அலாதியான வெதுவெதுப்புத் தோன்றியது. தணுப்பிலிருந்து உஷ்ணத்துக்குள் வந்ததாக இருக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போதே கரியாச்சனின் கண்கள் மூடிக் கொண்டன. காதருகில் விரகம் தகிக்கும் குரலைக் கேட்டதும் விழிப்புத் தட்டியது. சிவப்பு ரவிக்கையும் நீல லுங்கியும் உடுத்து கட்டிலில் படுத்திருக்கும்  ஷகீலா வெள்ளை பனியனும் சாய வேட்டியும் அணிந்து தரையில் பாய்விரித்துப் படுத்துக் கிடக்கும் சஞ்சுவின்மேல் தாபத்துடன் புரண்டு கொண்டிருக்கிறாள். 'சேச்சி, தப்பாக்கும்'  என்கிறான் சஞ்சு. 'ஆமா ,தப்புதான்,எடா மோனே, தப்பு செய்யாத்தவர் ஆராடா?' என்று ஷகீலா கரியாச்சனிடம் சொன்னாள். ஷகீலா சஞ்சுவிடம் செய்யும் அதே தப்பைத்தான் தன்னிடம்  பக்கத்து வீட்டு தீனாம்மச் சேச்சி செய்கிறாள் என்பது நினைவுக்கு வந்ததும் கரியாச்சனின் முதுகெலும்பு விறைத்தது.ஷகீலா சொல்வதுபோல தீனாம்மச் சேச்சி சொல்லியிருந்தால் அவள் தன்மீது கவிழ்கிற வேளைகளில் இன்னும் ஆசுவாசமாக இருக்கும். ஷகீலா அந்த வார்த்தைகளைச் சொல்லுகிறபோது சஞ்சுவின் கண்களும் தன்னைப் போலவே மூடியிருப்பதைக் கவனித்தான்.வாஸ்தவத்தில் சஞ்சு கண்களை மூடிக் கொண்டிருக்கிறானா என்று  தெரிந்து கொள்ள  மேட்னிக் காட்சி யையும் ஷகீலா ' மோனே, தெற்று செய்யாத்தவர் ஆராடா?'  என்று கேள்வியாக இல்லாமல் சம்மதம்போலக் கொஞ்சுவதைக் கேட்க ஈவினிங் ஷோவையும் பார்த்தான்.

படம் முடிந்து திரையரங்க வளாகத்திலேயே  படம் பார்க்க நிற்பதா இல்லை திரும்பிப் போவதா என்ற தீவிரமான சிந்தனையில் சட்டைப் பைக்குளிருந்த கைப்பேசியை ஆன் செய்து  ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரி எண்ணில் அழைத்தான் கரியாச்சன். தொடர்பு கொள்ள விரும்பும் வாடிக்கையாளர் தற்சமயம் பிசியாக இருப்பதால் சிறிது நேரத்துக்குப் பிறகு தொடர்பு கொள்ளவும் என்ற பெண்குரல் தீனாம்மாச் சேச்சியுடைய குரல்போலவும் ஷகீலாவின் குரல் போலவும் இருப்பதாகக் அவனுக்குத் தோன்றியது. அதே சமயத்தில் தான் இவ்வளவுநேரம் கைப்பேசியை அணைத்து வைத்திருந்ததும் ஞாபகம் வந்தது.' ஈ ஷகீலடெ மாயம்' என்று செல்லமாக வைதுகொண்டிருந்த போது கைப்பேசி 'தாமசமெந்தே வருவான் ப்ராணசகி என் டெ முன்னில்' என்று பாடி அழைத்தது.பொத்தானை அமுக்கிக் காதருகில் கருவியைக் கொண்டு போனான். போக்குதான் கூப்பிட்டான்.

'அண்ணனெ எத்தன நேரமா க் கூப்புடறேன். எங்கெ நிக்கறீங்க? அந்த  லாம்ப்ரெட்டா ஓணரு வந்து கலிப்பாக்கிட்டு போனாரு அண்ணன் இப்ப வரத்தில்லே?'' என்று கேட்டான்.

கரியாச்சன் அவனை அடங்கியிருக்கச் சொல்லிவிட்டு கைப் பேசியை சட்டைப்பைக்குள் போட்டான். திரையரங்க வாசலைத் தாண்டும்போது' கரியாச்சன் போவாணோ?'என்று தீனாம்மச் சேச்சியின் குரலில் போஸ்டரிலிருந்து ஷகீலா கேட்டாள். அவளைப் பார்த்துக் கண்ணடித்துக் கொண்டே 'போகாமல் முடியுமா?' என்று கிழக்கேகோட்டை பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்தான்.

பத்து மணிக்கு ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரியை அடைந்தபோது பூட்டியிருந்தது. போக்கு உத்தரவாதித்துவமுள்ள வேலைக்காரன். கரியாச்சன் வெளியே போகும் நாட்களில் செய்வதுபோல வாசல் கதவைப் பூட்டி சாவியை முன் அறை சன்னல் திட்டில் வைத்து கதவை ஒருக் களித்துச் சாத்தியிருந்தான். சாவியை எடுத்துத் திறந்து உள்ளே நுழைந்த போது அம்மச்சியின் புன்னகை மாதிரியான குண்டு பல்பின் வெளிச்சமும் அப்பச்சனின் வசவுபோன்ற இரும்பு வாசனையும் அவனைத் தயங்கச் செய்தன. ' தே, மனுஷ்யா, நீங்க பையன ஒண்ணும் சொல்லாதீங்க' என்று வெளிச்சம் வாசனையை வேண்டிக் கொண்டது. வாசனை காட்டமாக எதையோ சொல்ல வருவதற்குள்  மழைக் காற்று வாசலைத் தாண்டி வந்தது. இரும்பு வாசனை மட்டுப்பட்டது. குட்டையான டினோசார்களின் எலும்புக் கூடுகள்போல நிறுத்தி வைத்திருந்த புல்லட்டுக்கும் யமாஹாவுக்கும் இடையில் பாயை விரித்துப் படுத்துக் கொண்டான் கரியாச்சன். ஒரே நாளில் மூன்று காட்சிகள் பார்த்த களைப்பில் கண்கள் திரையிறங்கின.

சற்றுத் தள்ளி எண்ணெய்க் குளியல் முடித்துச் சுருட்டி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் செயின்களுக்கிடையிலிருந்து அது தலையை ஒரு நொடி தூக்கிப் பார்த்து' என்டெ பகவதி காத்து' என்று பெருமூச்சு விட்டது.

'எடா கொச்சனே, ஒரு பொன்னு மோனும் இந்த  தாக்ஷாயணி கையிலேருந்து தப்பிச்சதில்லஎன்ற சம்பாஷணம் சஞ்சுவிடம் ஷகீலா சொன்னதா இல்லை தீனாம்மச் சேச்சி தன்னிடம் சொன்னதா என்ற குழப்ப யோசனையில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது 'என்டம்மோ ' என்ற அலறல் கேட்டது. தன் மேலிருந்து யாரை உதறித் தள்ளினோம், தாக்ஷாயணி பாத்திரமான ஷகீலாவையா இல்லை தீனாம்மச் சேச்சியையா  என்ற சந்தேகத்துடன் கரியாச்சன் கண்களைத் திறந்ததும் மத்தியான வெயில் இமைகளுக்குள் இருட்டை நிறைத்தது. தள்ளாட்டத் துடன் நின்று லுங்கியைச் சரி செய்யக் கைகளை நீட்டியதில் குட்டை டினோசர்கள் இரண்டும் உலோகக் கூச்சலுடன் சரிந்தன. அந்தச் சந்தடியில் செயின்களுக் கிடையில் பதுங்கியிருந்த அது 'தேவீ, ஈ கழுகன் மாருடெ கண்ணில் பெடாதெ என்னெ  ரட்சிக்கணே' என்று முணுமுணுத்துக் கொண்டு சரசரத்து ஓடியது.

''தே அண்ணா, அது எழஞ்சு போகணு?'' என்று கத்தினான் போக்கு. நிதானத்துக்கு வந்த கரியாச்சன் கால்களை எட்டி வைத்துத் துள்ளினான்.

''எந்தொரு நீளமாண்ணா, தா அங்கெ , பெட்ரோல் கன்னாசின்ட அப்புறத்து''  கழற்றி அடுக்கி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் சக்கரங்களின் மேலே பாதுகாப்பாக நின்று கொண்டு கூவினான் போக்கு.

போக்கின் முகத்தையும் நிற்பையும் கூவலையும் உள் வாங்கிக் கொண்ட நொடியில் கரியாச்சனின் முகம் வியர்த்தது. பயத்தில் போக்கைப் பார்த்துக் கத்தினான். ''நின்னு செலய்க்காதெ ஆரெயெங்கிலும் விளிச்சோண்டு வாடா'' 4

வழக்கமாகவே தரையைத் துப்பறியும் போக்கின் கண்கள் பயத்தில் இன்னும் விரிந்தன. காலடியில் கிடக்கும் புழுவைக் கொத்தக் குனியும் கொக்குபோல உடலை வளைத்து சக்கர அடுக்கின் கீழே கவனமாகப் பார்த்தான். எதுவும் இல்லை என்று கண்கள் இயல்பான அளவுக்குச் சுருங்கியதும் தரையில் குதித்தான். அப்புறமும் முன்னங்காலில் நின்று அகலமாக எட்டுவைத்து வாசல் கதவருகில் போய் கால்களை ஊன்றினான்.

''அண்ணா அவன் இங்கேதான் உண்டு. நான் ஆரெயாவது கூட்டிட்டு வறேன் ''  என்று ஓடினான்.

நின்ற இடத்திலிருந்தே கரியாச்சன் சுற்றிலும் பார்த்தான். செயின்கள்.  கழற்றிப் போட்ட கேபிள்கள், பெட்ரோல் டியூபுகள் எல்லாம் நெளிந்து ஊர்வதுபோலத் தெரிந்தன. போக்கு இருந்தபோது இருந்த பயத்தை விட இப்போது பயம் அதிகமானதுபோலிருந்தது. 'கர்த்தாவே, இதென்னா  தொந்தரவா? ' என்று சங்கடப்பட்டான். கண்களை மூடிமூடித் திறந்து பார்த்தும் அது தென்படவில்லை. போக்கு சொன்னது உண்மைதானா என்று கூட சந்தேகப்பட்டான். சந்தேகம் என்று வந்த பின்பு ஆதாரங்களை வைத்து நிவர்த்தி செய்யாமல் முன் நோக்கிச் செல்வது சரியல்ல. சொற்ப நேரத்துக்கு அதைப் பற்றி யோசிக்காமல் இருப்போம் என்று யோசனை யின் ஹாண்டில் பாரை வேறு திசையில் திருப்பினான். ஆனால் அவனை ஏமாற்றி யூ டர்ன் அடித்து தொடங்கிய இடத்துக்கே வந்தது யோசனை. யோசனையை விட ஞாபகங்களை விசுவசிக்கலாம் என்று நேற்றுப் பார்த்த காட்சிகளை இமைக்குள் ஓடவிட்டான். 'எடா, மோனே ஈ தாக்ஷாயணியுடே கையில் நின்னும் நீ ரக்ஷப்பெடில்லா' என்ற வசியக் குரல் கால் பெரு விரலிலிருந்து ஊர்ந்து மேலே ஏறி வந்தது, முகத்தை நெருங்கி உதடு களைக் கொத்தியது. கண்களை விழித்துப் பார்த்த இடத்தில் எண்ணெய்க் கறைபடிந்து கருமையேறிக் கிடந்த பனியன் வேஸ்டு அசைந்தது.

''அய்யோ'' என்று பெருங்குரலில் கத்திக் கொண்டு உயிரையும் லுங்கி முனையையும் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு தாவி வாசலில் வந்து தடுமாறி நின்றான் கரியாச்சன். ஓடும்போது அவனுடைய கால்களில் பட்டுத் தெறித்த பத்தாம் நம்பர் ஸ்பேனர் பனியன் வேஸ்டுக்குப் பக்கமாக சத்தமில்லாமல் விழுந்தது. அந்த அதிர்வில் அது உஷாராகி 'இவன்மாரு ஜீவிக்கான சம்மதிக் கத்தில்ல' என்று புலம்பிக் கொண்டு உயிரை இழுத்துக் கொண்டு வேகமாக ஊர்ந்து மறைந்தது.

அவனுடைய கூச்சலைக் கேட்டு பக்கத்து மாவேலி ஸ்டோரிலிருந்து சிவன் குட்டியும் பார்பர் ஷாப்பிலிருந்து ஹரியும் தள்ளுவண்டியில் துணி தேய்த்துக் கொண்டிருந்த முத்துவும் ஓடி வந்தார்கள்.  வழிப்போக்கர்களும் வந்தார்கள்.

'' எந்தரு கரியாச்சா, எந்தரு சம்பவம்?'' என்று சிவன் குட்டி கேட்டான். 'அது உள்ளே இருக்கிறது' என்று சொல்வதாக நினைத்துக் கொண்டு 'ஃபூஃபூஃபூ' என்றான் கரியாச்சன்.

'அதே, ஒர்க் ஷோப்புக்குள்ளெ அவன் நுழைஞ்சிட்டான்'' என்று என்று சொல்லிக் கொண்டே முதலாளியின் அருகில் வந்து நின்றான் போக்கு. கூடவே நான்கைந்து ஆட்கள். கரியாச்சனின் பார்வையில் அவர்கள் எல்லாருக்கும் ஒரே முகச்சாயல்தான் தென்பட்டது. பயம் எல்லாரையும் சமமானவர்களாக்கி விடுகிறது என்று தோன்றியது. '' ஆரா கண்டது?'' என்ற சத்தம் காதில் விழுந்தபோதுதான் வீட்டு உடைமையாளர் பாகுலேயன் பிள்ளையும் வந்திருக்கிறார் என்பதைக் கரியாச்சன் புரிந்து கொண்டான்.

''ஞான் கண்டு. அண்ணன் கண்டில்ல. தோ இத்ரயும் வலுப்பமுண்டு'' என்று இரண்டு கைகளையும் தோளேடு நீட்டிக் காட்டினான் போக்கு.

''ஏதாவது சாரையாயிருக்கும்  '' என்றான் ஹரி.

''இல்லெ , அவனே தான், சர்ப்பம்'' என்றான் போக்கு.

அந்த வார்த்தை நெளிந்து காதில் விழுந்ததும் பாகுலேயன் பிள்ளை முகத்தில் விசனமும் சந்தோஷமும் ஒன்றின் மேல் ஒன்றாகப் படர்ந்தன. தறவாட்டில் நேற்றிலிருந்து சம்பவித்துக் கொண்டிருந்த அனர்த்தங்களுக்கு என்ன காரணம் என்று அவருக்குப் பிடிபட்டது. பறம்பில் நிற்கும் மாவிலிருந்து ஒரு பெரிய கொம்பு முறிந்து விழுந்திருந்தது.பென்ஷன் வாங்குவதற்காக இன்று காலை டிரெஷரிக்கு ஸ்கூட்டரில்போனபோது வண்டி பள்ளத்தில் சரிந்து அவருக்குச் சிராய்ப்புகள் ஏற்பட்டிருந்தன. எல்லாவற்றுக்கும் காரணம் அவருடய தறவாட்டின் ஐஸ்வரியம் காணாமற் போனதுதான். அவருடைய தறவாட்டுக்குப் பக்கத்தில் அவர்களுடைய குடும்பக் காவு இருக்கிறது. ஒரு காலத்தில் பிரசித்தமாக இருந்த காவு. நூற்றாண்டுகளுக்கு முந்தைய பிரதிஷ்டை. அதிகாரத்தி லிருந்த காலத்தில் பொன்னு தம்புரான் ஸ்ரீ சித்திரைத் திருநாள் பாலராம வர்மா ராஜா கூட வந்திருக்கிறார் என்று மூத்த காரணவம்மார் சொன்னது பிள்ளையின் ஞாபகத்தில் புரண்டது.

நேற்று சந்தியா நேரத்தில் காவில் விளக்கு வைக்கப்போன பிள்ளையின் மனைவிதான் காவில் அது இல்லாமல்போனதைச் சொன்னாள். எல்லா நாளும் விளக்கு வைக்கும்போது வந்து பார்த்துவிட்டுப் போகும் அவன் அன்று ஸ்ரீகுமாரியம்மாள் ஏழெட்டு நிமிஷங்கள் காத்திருந்தும் வரவில்லை. வெப்ராளத்துடன் அவள் சொன்னபோது காரியமாகத் தோன்றவில்லை. மழையில் எங்காவது பாதுகாப்பாக இருக்கும் என்று பதில் சொன்னார். இப்போது இவர்கள் சொல்வதைப் பார்த்தால் அதுதான் இழைந்து வந்து ஏறியிருக்க வேண்டும்.

''டா, நீ செரிக்கும் கண்டோடா?'' என்று போக்கைப் பார்த்துக் கேட்டார். போக்கு மறுபடியும் இரண்டு கைகளையும் விரித்துக் காட்டி'' இத்ரேம் நீளோண்டார்ந்நு'' என்றான். யாரும் நம்பவில்லைபோலத் தெரிந்ததும் '' சத்யம். பத்தடீங்கிலும் உண்டாவுண்ணா, அதெ நேராப் பிடிச்சு வாளியெ மாட்டினா  நம்ம கெணற்றிலேர்ந்து தண்ணி எறைக்கலாம்’’என்றான்.

'' போடா செறுக்கா, புளுவடிக்கல்லே. பத்தடி நீளத்திலு சர்ப்பொந்நும் ஈ ப்ரதேசத்துல இல்ல ''  என்று அவிந்து போன பீடியையும் எச்சிலையும் ஒரே துப்பலில் மண்ணுக்கு அனுப்பினான் சிவன் குட்டி.

''அவன் சொல்றது செரி.  அது நம்ம  காவில இருக்கிறதா இருக்கத்தான்  சாத்யம். நேத்து மொதல்  அவனெக் காணல''என்றார் பிள்ளை .

'பொடியன் சொல்வதுபோல பத்துப் பன்னிரெண்டடி நீளமிருக்கும். பிராயமும் ரொம்ப. நூறு வயசாவது இருக்கும். அவனோட வயசில் இன்னும் ரெண்டு மூணு பேர் காவில் இருக்கிறார்கள். இவன் தான் எல்லாருக்கும் காரணவர். இப்பத்தானே இங்கெயெல்லாம் பிளாட்டும் கடையும் குடியுமெல்லாம் வந்தது. அதற்கு முன்பு வயலும் சதுப்புமாகக் கிடந்த இடம். இவன்கள் சுதந்திரமாக இழைந்து நடந்து கொண்டிருந் தார்கள். இந்தக் கட்டடத்தை கரியாச்சனோட அப்பன் வாடகைக்கு எடுக்கிறவரைக்கும் இங்கே வந்து விளையாடிக் கொண்டு இருப்பார்கள். அவன் தான் எங்களோட கண்கண்ட தெய்வம். எங்கள் தறவாட்டோட ஐஸ்வரியம். நீங்க சந்தடி பண்ணாமல் யாரையாவது விட்டு அதை வெளியே கொண்டு வந்து காவில் சேர்க்கப் பாருங்கள். கரியாச்சா, வேண்டியதைச் செய்'

பிள்ளை சொன்னதைக் கேட்டதும் கரியாச்சனுக்கு ஆத்திரம் வந்தது. அதுவாக வந்தது. நானா வரச் சொன்னேன். வாடகைக் கட்டடந்தான். ஆனால் சும்மா குடியிருக்கவில்லையே. ஒண்ணாந்தேதி பிறந்து கண் விழிப்பதற்குள்ளேயே ஆக்ராந்தம் பிடித்து வாடகைக்கு ஓடிவருகிற இந்த எரப்பாளி நாயர்  அவனுடைய அடியந்திரத்துக்கும் தன்னிடமே பைசா கேட்பானாக இருக்கும் என்று கரியாச்சனின் நரம்பு துடித்தது. ஆனால் உதடுகள் '' அதுகென்னா, பிள்ளச் சேட்டா, தோ இப்ப ஏற்பாடு பண்ணிடறேன்'' என்று பவ்யமாக நெளிந்தன.  

தாழம் பூவின் மகரந்தம் காற்றில் மிதந்து செல்வதுபோல பிள்ளையின் வார்த்தைகள் வாசலிலிருந்து  நாலுகெட்டின் உள்ளே போயின. சொற்களின் சுகந்தத்தை முகர்ந்த கிறக்கத்தில் உடைசல் ரிம்களுகிடையில் பதுங்கியிருந்த அது வாசலை நோக்கி ஊர்ந்தது. 'நானில்லா விட்டால் பிள்ளையின் குடும்ப மானம் என்னாகும்? அவருக்குத்தான் என்மேல் எவ்வளவு வாத்சல்யம். சும்மா அல்ல. என்னுடைய பிராயமும் சீலமும் வேறு யாருக்கு இருக்கிறது?' என்று நினைத்தபோது அதன் தலைப் பகுதி எவ்வி விரியத் தொடங்கியது. சரீரம் பறப்பதுபோல தானாக முன்னோக்கி நீண்டது.

வாசற்படிக்குக் கொஞ்சம் தள்ளி உள்ளே அது படமெடுத்து நிற்பது தெரிந்தவுடன் போக்கு கத்தினான். 'தே, அவன் புறத்து வருன்னு'

''பாம்பு ஒண்ணும் நூறு வருசமெல்லாம் உசிரோடெ இருக்காதாம்னு தினத்தந்தில போட்டிருந்தான்'' என்று சொல்லிக் கொண்டிருந்த முத்துவும் அதைக் கேட்டுக் கொண்டிருந்த சிவன் குட்டியும் போக்கின் கத்தலில் வெருண்டு கொஞ்சம் பின் வாங்கினார்கள். முற்றத்தில் நின்றிருந்த எல்லாரும் தான் உட்பட பின்னோக்கிச் சாடியதை உணர்ந்ததும்  கரியாச்சன்  வெட்கப்பட்டான். பாகுலேயன் பிள்ளை எல்லாரையும் விடப் பின் தள்ளி நிற்பதைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது. 
'தன்னுடைய ஐஸ்வர்யத்தைப் பார்த்தே மனுஷர் பயப்படுகிறார்' . காலில்லாத ஒரு இழை ஜந்து எத்தனை ஜோடிக் கால்களை நடுங்க வைக்கிறது. பைசாசம். அடித்துக் கொன்றால் என்ன? என்று கரியாச்சன் யோசித்தபோது பிள்ளையின் எச்சரிக்கை கேட்டது.''அவனேக் கொல்லருது. சர்ப்பதோஷம் பிடிக்கும்'' .

கிறிஸ்தியானிகளுக்கு சர்ப்பதோஷமும் இல்லை. ஒரு உலக்கையும் இல்லை. சரியாகச் சொன்னால் எல்லா மனுஷர்களும் சர்ப்பதோஷத்தின் சந்ததிகள் தான் என்று முன்பு ஒருமுறை இதே முற்றத்தில் ஒன்றைக் கொன்று சுட்டுக் கரித்துக் கொண்டு அப்பச்சன் சொன்னதை கரியாச்சன் ஞாபகப்படுத்திக் கொண்டான்.

பிள்ளை ஆட்சேபம் சொன்ன நிலவரத்தில் கையில் தடியும் கொம்புமாக ஆயத்தமான சிவன் குட்டியும் ஹரியும் மற்றவர்களும் கரியாச்சனின் முகத்தையே பார்த்தார்கள். கரியாச்சன் யோசித்தான். அவர்கள் பார்ப்பதையும் அவன் யோசிப்பதையும்  வீட்டுக்குள்ளிருந்து பார்த்துக் கொண்டிருந்த அதுவும் யோசித்தது. 'கர்த்தாவே என்னே ரக்ஷிக்கேணமே' என்று மன்றாடியதில் விரிந்த தலை உள் வாங்கிக் கொண்டது. ஆலிலைபோல இருந்த தலை கயிறுபோலச் சுருங்கிக் கொண்டிருக் கையில் தானும்  மனிதர்களைப் போல இடத்துக்குத் தகுந்த மாதிரி சுபாவத்தை மாற்றிக் கொள்வதை உணர்ந்தது. குற்ற உணர்ச்சியுடன் 'என்டெ பகவதி பொறுக்கேணமே' என்று பாவ மன்னிப்பை இரட்டை நாக்குகள் நீட்டி அந்தரத்தில் எழுதியது. அப்படியே முற்றத்தில் நிற்பவர்களை நோட்டமிட்டது.

பிள்ளையையும் கரியாச்சனையும் தவிர எல்லார் கைகளிலும் கட்டைகள் இருந்தன. கரியாச்சனின் முகத்தையே பார்த்தபடி அவர்கள் வலது கையிலி ருக்கும் கட்டையை உயர்த்தி இடது உள்ளங்கையில் தட்டிக் கொண்டிருந்தார்கள்.

'ஆளுக்கு ஒரு அடி என்று வைத்தால் பாதி பேரின் முறை வருவதற்குள் தன்னுடைய ஜீவன் போய் விடும்' என்று நினைத்ததும் அதன் வால் தன்னிச்சையாகத் துடித்தது. வந்த வழியே திரும்பி விட சரீரத்தை உள்ளே சுருக்கி பின் நோக்கி இழைய ஆயத்தமானது. இடியோசையுடன் அது வந்த வழி இருட்டானது. ஆத்திரத்திலும் பயத்திலும் தலை மறுபடியும் வீங்கியது.

''அண்ணா, பின்பக்கக் கதவை  அடச்சுட்டேன். அங்கேர்ந்த துவாரத்தையும் அடச்சாச்சு. அவன் இனி இந்த  வழியாத்தான் வரணும்''  என்று கரியாச்சனிடம் சொன்னான் போக்கு. கரியாச்சனுக்குக் குழப்பமாக இருந்தது. ''வரட்டேண்ணா, ஒற்றயடிக்கு அவனெ செரியாக்காம்'' என்று துள்ளிக் கொண்டிருந்த போக்கைப் பிடித்து நிறுத்திய பாகுலேயன்பிள்ளை கரியாச்சனிடம் திரும்பி ''அதே, கரியாச்சா, அவனெக் கொன்னா பிரச்சனை வேற மாதிரியாகும், சொல்லிட்டேன்' என்றார்.

கரியாச்சன் எரிச்சலுடன் '' எந்நா பின்னே பிள்ளச் சேட்டன் தன்னே ஒரு வழி பற'' என்றான். பிள்ளைக்கும் சட்டென்று வழி புலப்படவில்லை. கண்ணாடியைக் கழற்றி வேட்டி நுனியால் ஒரு முறை துடைத்தார். ஆவி படிய அதன்மேல் ஊதி மறுபடியும் துடைத்தார். வேட்டியைத் தளரவிட்டு கண்ணாடியை மாட்டிக் கொண்ட பிறகும் வழி தென்படவில்லை.' இந்தப் படுபாவிகள் அதை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டார்கள். தறவாட்டின் மகத்துவம் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? அவன் தறவாட்டின் சம்பத்து. அவனை ஜீவனோடே திரும்ப எடுக்க பகவதி வழி காட்ட மாட்டாயா? ' இதை மனதுக்குள் சொல்லிக் கொண்டிருந்தபோது அவருடைய பார்வை நீர்கோர்த்து மங்கியது.

''அண்ணா நம்மளு ஆ பாம்பு முஸ்தாபயெ விளிச்சாலோ?'' என்றான் போக்கு. அதுவரைக்கும் மேகங்களுக்கிடையில் மறைந்திருந்த மாலைச் சூரியன் பிரகாசமாக நகர்ந்தது. வெகு நேரமாக அங்கேயே நிற்பது எல்லாருக்கும் உறைத்தது.

போக்கு சொன்னது சரியான யோசனை. ''ஆனாலும் ஒரு அந்நிய மதக்காரன் காவிலிருக்கும் சர்ப்பத்தைத் தீண்டறது அவ்வளவு செரியா இல்ல, ஆசாரக் கேடு'' என்று முனகினார் பிள்ளை.

''ஒரு கேடும் இல்ல பிள்ளேச்சா, அப்படித் தோணினா பூனையையோ நாயையோ கூப்பிடற மாதிரி ச்சோ ச்சோன்னு கூப்பிடுங்க. அது வாலாட்டிகிட்டு பின்னாலே இழஞ்சு வரும்'' சிவன் குட்டி சொன்னதைக் கேட்டு எல்லாருக்கும் சிரிப்பு வந்தது. கரியாச்சனும் ஹரியும் சிரிப்பை அடக்கிக் கொண்டார்கள். முத்து சிரிக்கலாமா கூடாதா என்று ஆலோசனை செய்து கொண்டிருந்தான்.

''என்னாண்ணா, நாம் போய் முஸ்தபாவை கூட்டிட்டு வரணுமா வேண்டாமா?'' என்று கேட்டான் போக்கு. அவன் அப்படிக் கேட்பதில் என்னவோ ரகசியம் இருப்பதாகப் பட்டது கரியாச்சனுக்கு.''செரி, போ, ஆனா ஆளை எங்கெ தேடுவே?''

''இந்த சமயத்திலெ  புள்ளிக்காரன் எங்கேருப்பார்னு எனக்குத் தெரியும்'' என்றபடி நீலப் பந்தலை  நோக்கி நடந்தான்.

கால் சட்டைப் பையிலிருந்து புல்லட்டின் சாவியை எடுத்து துவாரத்தில் பொருத்தினான். வண்டிச் சாவியை அவன் முன்பே எடுத்து வைத்திருக்க வேண்டும். அதுதான் பொடியன் அவ்வளவு உற்சாகம் காட்டினான் என்று ஊகித்த கரியாச்சன் தரையைப் பார்த்தான். காலையிலிருந்து எந்த வண்டியும் டெலிவரி கொடுத்திருக்காத நிலத்தில் புல்லட்டின் டயர்கள் இரண்டு மூன்று வட்டங்க¨ளைப் பதித்திருந்தன. 'நான் உறங்கிக் கிடந்த போது இந்தக் குட்டிப் பிசாசு புல்லட்டை எடுத்து ஓட்டியிருக்கிறான்'.  யோசித்தபோது கரியாச்சனுக்கு வேறு பயம் வந்தது. போக்குக்கு பதினாறு வயது. லைசென்ஸ் கிடையாது.

சில மணி நேரங்களாகப் பெய்ய மறந்திருந்த வானம் ஞாபகம் வந்தது போல சடசடவெனத் துளிகளை உதிர்த்து ஓய்ந்தது. துளி விழுந்ததும் நகரத் தொடங்கியவர்கள் மறுபடியும் கூட்டமானார்கள். முன்பிருந்ததை விட ஆட்கள் கூடியிருந்தார்கள். அதில் செந்தூரப் பொட்டு வைத்த ஒருவன் பாகுலேயன் பிள்ளையைத் தனியாக அழைத்து நிறுத்திப் பேசிக் கொண்டிருப் பதைக் கரியாச்சன் கவனித்தான். பிள்ளை உற்சவத்துக்குக் கொண்டு வந்த யானைபோல தலையை இடமும் வலமுமாக ஆட்டிக் கொண்டிருந்தார்.

''கரியாச்சா, வனத்துறைக்குச் சொன்னா அவங்க வந்து வேண்டியதை செய்வாங்க இல்ல?'' சிவன் குட்டி கேட்டான்.

அதுவும் சரியானதாகப் பட்டது.'செரியா' என்றான். ''அப்படின்னா உன் மொபைலைக் கொடு'' என்றான் சிவன் குட்டி.

''அந்தக் குந்தராண்டம் உள்ளே கெடக்கு''

சிவன் குட்டி என்னமோ முணுமுணுத்துக் கொண்டே கூட்டத்தை விலக்கி நடந்தான்.கரியாச்சனுக்கு தான் இன்னும் பல் துலக்கவோ ஒன்றுக்கு இருக்கவோ மலங்கழிக்கவோ முகத்தைக் கழுவக் கூடவோ செய்ய வில்லை என்பது திடீரென்று நினைவுக்கு வந்தது.'நாறிப் போனேன்அருவருப்பால் சின்னதாக முகத்தைச் சுளித்துக் கொண்டான்.  கூட்டத்தில் யாரும் தன்னைக் கவனிக்க வில்லை என்று தீர்மானம் செய்து கொண்டு தன்னையே ஒருமுறை முகர்ந்தான். அவ்வளவு மோசமில்லை. உடம்புக் குள்ளிருந்து  வறுத்த செறு பயறு வாடை அடித்தது. தீனாம்மச் சேச்சியின் உடம்பில் கமழ்கிற அதே மணம். அப்படியானால் ஷகீலாவின் சரீரத்திலும் இதே மணம்தான் இருக்குமா?

புல்லட்டின் குதுகுதுப்பொலியில் கூட்டம் வரிசை குலைந்தது. ''அண்ணா, தோ ஆளு'' என்று வண்டியை நிறுத்தினான் போக்கு. கையில் ஒரு கவட்டைக் கொம்பும் நைந்த கோணிப் பையுமாக பின் சீட்டிலிருந்து முஸ்தபா தடுமாறி இறங்கினார். 'கெளவன் கஞ்சா இழுக்காத நேரம் ஒன்று உண்டா? 'என்று கரியாச்சன் முனகினான். பிள்ளையும் என்னவோ முணுமுணுத்தார். 'என்னா பிள்ளேச்சா?' என்று கேட்டான்.

''கரியாச்சா , இந்த அந்நிய மதக்காரனைப் பிடிக்க விடுறதை விட வனம் வகுப்பு உத்தியோகஸ்தர்கள் பிடிக்கறதுதானெ செரியாயிருக்கும். இவன் தீண்டின பிறகு அவனை காவிலே திரும்ப ஏறவிடறது அவ்வளவு அழகாருக்காது.வனம் வகுப்புன்னா சர்க்காரு வகை. அதுக்கு மதமில்லயே. மதமில்லாததும் எங்க மதத்தில சேர்த்திதானே!''

அவர் சொல்லி முடிப்பதற்கு முன் முஸ்தபா வாசல் தாண்டி உள்ளே நுழைந்திருந்தார். மேற்கொண்டு ஒன்றும் செய்வதற்கில்லை. கரியாச்சன் ஆசுவாசமாக உணர்ந்தான். பக்கத்தில் வந்து நின்ற போக்கின் காதை நிமிண்டி, 'கள்ளக் கழுவேறி' என்றான். அவன் செல்லமாகத் திட்டுவதை ரசித்தான் போக்கு.

ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரிக்குள் பெரும் கலவரம் நடப்பதுபோல சத்தம் கேட்டது. கொஞ்ச நேரம் நிசப்தம். கொஞ்ச நேரம் சந்தடி. உள்ளே என்னவெல்லாமோ சரிந்து விழும் உலோக இரைச்சல். ''ஆனை நுழஞ்ச கம்போளம் மாதிரி பாம்பு  நுழஞ்ச பட்டறைன்னு நாம புதுசா பழஞ் சொல்லு உண்டாக்கலாம் கரியாச்சா'' என்று சிரித்தான் சிவன் குட்டி. கரியாச்சனுக்கு எல்லாம் சேர்ந்து மூளை குழம்பிவிடும்போல இருந்தது. '' எருதுக்குப் புண்ணுன்னா காக்காய்க்குக் கொண்டாட்டம்னும் பழமொழி இருக்கு'' என்றான்.

சிவன் குட்டிக்கு முகம் இருண்டது.'' அதை விடு கரியாச்சா. ஒரு தமாசு சொன்னேன்'' என்றான்.

''உன்னோட தமாசும் நீயும். மனுஷனுக்கு இங்கெ நவ துவாரமும் பத்தி யெரியறப்ப அவனோட தமாசு''

''ஆங். அதான் பாம்பு முஸ்தபா வந்தாச்சே, அவனைப் பிடிச்சிடுவான். எனக்குத் தெரிய இது முஸ்தபா பிடிக்கிற ஐநூறாவது பாம்பா இருக்கும். ஒரு நுள்ளு கஞ்சா கெடச்சா எந்த மலைப்பாம்பையும் கெளவன் பிடிச்சு கோமணம் கட்டிக்குவான்''

''அதில்ல பிரச்சன, அந்நிய மதக்காரன் புடிச்ச பாம்பெ காவிலே ஏத்த மாட்டாங்களாம், பிள்ளச்சேட்டன்  சொன்னரு. அதான் ஆலோசிக்கறேன். அத வீட்டுக்குக் கொண்டு போயி இவங்கள மாதிரிக் கும்புட முடியுமா, இல்ல வளத்த முடியுமா?''

''நான் வனம் வகுப்புல கூப்பிட்டுச் சொல்லியிருக்கேன். வந்ததும் அவனோட காரியத்தை அவங்க பாத்துக்குவாங்க''

கூட்டம் ஒரு முறை சலசலத்தது. எல்லார் பார்வையும் வாசல் கதவருகே குவிந்தது. கரியாச்சனும் பிள்ளையும் ஆட்களை விலக்கி முன்னால் போனார்கள்.

முஸ்தபாவின் வலது கையில் அது மூன்றடி நீளத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. துண்டுக் கயிறுபோல. கிழவர் கையை உயர்த்தி ஆட்டிக் காட்டும்போது அதன் வால் ஸ்பிரிங்க்போல மேல்நோக்கிச் சுருண்டது. கிழவர் வலது உள்ளங்கைக்குள் அதன் தலை வெளியேதெரிய விட்டு கழுத்துப் பகுதியில் கட்டை விரலால் இறுக்கிப் பிடித்திருந்தார் 'நெரித்தே கொன்று விடுவான்' என்று அது பயந்தது. பயத்தில் கண்கள் உருண்டன, பிளவுபட்ட நாக்கு காற்றை உறிஞ்சியது. இடையிடையே முஸ்தபா அதை கூட்டத்தை மேல் வீசுவதாக வேடிக்கை காட்டினார். ஆட்கள் சிதறி ஓடி மீண்டும் திரண்டார்கள்.' இவன்களுக்கு நான் சாகிறதைப் பார்க்கத்தான் என்ன ஆவேசம்?' என்று அது பிள்ளையை ஏக்கத்துடன் பார்த்தது. 'நான் உங்களோட ஐஸ்வரியமில்லையா? என்னைக் காப்பாற்ற மாட்டீர்களா?' என்ற இறைஞ்சல் அதன் கண்களில் தெரிந்தது. கிழவரின் பிடிக்குள் ஒரு  விறைத்த பிரம்பு மாதிரி இருந்தது.

''கண்டீங்களா, மூசா நபி கையில பிடிச்சிருந்த வடிபோல இருக்கிறான். படைச்சோன்  நிலத்துல போடச் சொன்னதும் வடி இழஞ்சுதாம். வேதத்துல சொல்லீருக்கு. நெலத்துல போடவா?'' என்று கையை இறக்கினார். வாலின் நுனி தரையைத் தொட்டதும் அது நெளிந்தது.

''தே, மூப்பே, அதெ அந்த சாக்கு பையில போட்டு பிள்ள சாரோட காவில விடணும்'' கரியாச்சனைப் பார்த்துக் கண்ணடித்தான் சிவன் குட்டி.

''இல்ல, அது செரி வராது'' பதைப்புடன் மறுத்தார் பிள்ளை.

''பின்னெ என்ன செய்ய? உங்க காவிலருந்து வந்ததுன்னு நீங்கதானெ சொன்னீங்க?'' என்றான் சிவன் குட்டி.

''ஆமா, ஆனா இப்ப அங்க வேண்டா. கரியாச்சனோட எடத்துலதான அவன் இருந்தான். அதனாலே கரியாச்சனே தீர்மானிக்கட்டும்''

''அண்ணா, அவனெ சாக்கில் கெட்டி  பழைய வேஸ்டெல்லாம் போட்டு எரிச்சுடலாம்'' என்று பற்கள் நற நறக்கச் சொன்னான் போக்கு.

''ஆமா, அவஞ் சொல்லுகதான் செரி. பாம்பெப் பாத்துட்டு உசிரோட விட்டா அது பழி வாங்காம உடாதுன்னு சொல்லுவாங்க'' என்றான் முத்து.

''ஹே, அது மகா பாவம்'' என்றார் பிள்ளை. முஸ்தபாவின் கையிலிருக்கிற அதைப் பார்க்கக் கூடாது என்று நினைத்தும் அதைப் பார்த்தபடியே சொன்னார். முஸ்தபா, இடது கையில் பிடித்திருந்த கோணிப்பையை உதறி விரித்து இவ்வளவு நேரமும் கொதித்துக் கொண்டிருந்த கரியாச்சனின் மண்டை வெடித்தது. சொற்கள் ஆவி பறக்க வழிந்தன.

''அதே, பிள்ளே, விவரமில்லாமெப் பேசாதீங்க. இது என்னோட எடமாம். மாசம் பொறக்கிறதுக்கு முன்னெ வாடகைக் காசை வாங்கி நொட்டுறப்போ இது என்னோட எடம்னு சொல்லுவீங்களா, இல்லயே? இப்ப மாத்திரம் இது எப்படி என்னோட எடமாச்சு? நானா அந்த சாதனத்தே வா, வான்னு அழச்சேன். அதா வந்துச்சு. நீங்க சொன்ன மாதிரியே வெச்சுகிட்டா என்னோட எடத்துலெ வந்தத நான் கொன்னா என்னா எரிச்சா என்னஇந்தப் பறம்புலெ ரண்டு தேங்காயோ நாலு மாங்காயோ தரையிலெ விழற சத்தம் கேட்டதும் சாடி வர்ற நீங்க இந்த ஜீவன மட்டும் ஏன் எனக்கு விட்டுக் கொடுக்கணும்? உங்களதுலேதான் எல்லா தோஷத்துக்கும் பரிகாரமிருக்கே. இத அங்கெ கொண்டு விட்டுட்டு பரிகாரம் செய்யறது?''

பாகுலேயன் பிள்ளைமேல் கரியாச்சனின் அம்புகள் குறிபார்த்துத் தைத்தன. அவர் பேசாமல் நின்றார்.கரியாச்சனுக்கு உள்ளுக்குள் சந்தோஷம் நுரைத்துப் பொங்கிக் கொண்டிருந்தது.'கர்த்தாவே, இந்த ஆளிடம் நாலு வார்த்தை சொல்லி பதிலடி கொடுக்க வேண்டும் என்று எத்தனை நாளாகக் காத்திருந்தேன். இன்று அதை பூர்த்தி பண்ணிய உனக்கு ஸ்தோத்திரம்'

பிள்ளையிடம் தனியாகப் பேசிக் கொண்டிருந்த செந்தூரப் பொட்டுக்காரன் கரியாச்சன் பக்கத்தில் வந்து நின்றான்.அவனுடைய தோளில் தட்டி '' மாப்ளே, பேசறத கவனமாப் பேசணும். இல்லேன்னா விதம் மாறும்'' என்றான்.

கரியாச்சன் அவன் கையைத் தட்டி விட்டான்'' போடா மயிரே, நீ ஆருடா என்னெ கவனமாப் பேசச் சொல்றது? மனுஷன் வெளிக்கிருக்காம தின்னாம இந்தப் பிசாசால பயந்து கெடந்து வட்டம் திரியறப்ப அவனோட தாக்கீது. போ போயி உன்னொட ஜோலியப் பாரு'' என்று கத்தினான்.

''தே, மாப்ளே, பின்னெயும் சொல்றேன். கவனமாப் பேசு. உனக்கும் அந்த தாடிக்காரனுக்கும் வேணுமானா அது காரியமா இல்லாமயிருக்கலாம். உங்க வேதத்துல அது பிசாசும் சைத்தனுமா இருக்கலாம். எங்களுக்கு அப்படியில்ல. அது தெய்வமாக்கும்''

சாக்கு மூட்டையுடன் கரியாச்சனை நோக்கி வந்த முஸ்தபாவுடன் கூட்டமும் நகர்ந்து வந்தது. பொட்டுக்காரனுக்கும் கரியாச்சனுக்கும் நடுவில் நின்ற பிள்ளை முன்னால் மூட்டையை நீட்டி '' இவனைப் பாக்க வேண்டாமா?'' என்று கேட்டார்.

மூத்திரம் முட்டி வலியில் கனத்திருந்த அடி வயிற்றிலிருந்து எழுந்த ஆத்திரத்துடன் கரியாச்சன் வலது காலால் அதை எற்றி உதைத்தான். சாக்கு மூட்டை எல்லாத் தலைகளுக்கும் மேலாக அந்தரத்தில் எவ்வி உயர்ந்ததும் மூட்டையின் வாய் காற்றில் விரிந்து குப்புற விழ ஆரம்பித்ததும் உள்ளே இருந்த அது  வளைந்து நெளிந்து அபாரமான வேகத்தில் கீழே உதிரத் தொடங்கியதும் ஒரே சமயத்தில் நடந்தன. அதே நொடியில் கூட்டம் சிதறியோடியதும் வனத்துறையின் ஜீப் முற்றத்தில் நின்றதும் ஏதோ ஒரு கை முஸ்தபாவின் மண்டையில் ஓங்கியடித்ததும் பாகுலேயன் பிள்ளையின் மூக்குக் கண்ணாடி தரையில் இறங்கி சேற்றுக்குள் புதைந்ததும் பயத்திலும் ஆத்திரத்திலும் கரியாச்சன் காலோடு ஒன்றுக்குப் போனதும் சிவன் குட்டியும் ஹரியும் ஓங்கி வீசிய முஷ்டிகள் யார் முகத்திலோ பலமாகப்பட்டு வலியுடன் திரும்பியதும் போக்கு கூட்டத்தைப் பிளந்து புதுக்காடு ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரிக்குள்  ஓடி வேலை நேரத்தில் கழற்றி ஸ்பானர் ஸ்டாண்டில் தொங்க விடும் புதுக்காடு ஃபுட்பால் கிளப் ஜெர்சியை எடுத்தது அணிந்து கொண்டதும் இஸ்திரி வண்டியை நோக்கி முத்து  பறந்ததும் மழையின் புதுத் துளிகள் ஒன்றோடு ஒன்று மோதி சத்த மெழுப்பியதும் நடந்தது.

சனிக்கிழமை பத்திரிகையில்  சம்பவத்தைப் பற்றி ஸ்வந்தம் லேககன்  (நமது நிருபர்) செய்தி வெளியிட்டிருந்தார்.

புதுக்காடு பகுதியில் இரண்டு மதப் பிரிவினருக்கிடையில்  வெள்ளிக் கிழமை ஏற்பட்ட மோதலில் அம்பலத்தற கரிம்புவிள வாழக்கல் புத்தன் வீட்டில் ஹமீம் முஸ்தபா (62) பலத்த காயங்களுடன் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். சம்பவத்தில் லேசாகக் காயமடைந்த  ஜேக்கப் சக்கரியா (28), பாகுலேயன் பிள்ளை (65) உட்பட ஏழு பேர் முதற் கட்ட சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப் பட்டனர். புதுக்காடு சிற்ற விளாகத்து வீட்டுக்குரிமையான குடும்ப க்ஷேத்திரத்தையொட்டிய பகவதி காவில் சர்ப்பதோஷப் பரிகாரச் சடங்கில் பிற மதத்தினர் தலையிட்டதனால் மோதல் ஏற்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புள்ள நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். வனத் துறைப் பணியாளர்கள் சம்பவத்துக்குக் காரணமான மூன்றடி நீளமுள்ள சர்ப்பத்தைத் தேடி வருகிறார்கள்.

அன்று இரவு தீனாம்மச் சேச்சி வீட்டில் படுத்திருந்த கரியாச்சன் இருட்டை வகிர்ந்து கொண்டு தன் மேல் ஊர்ந்த வறுத்த செறு பயறு வாசனையிடம் 'சேச்சி, இது தெற்றாணு' என்றான். பாகுலேயன் பிள்ளை  பகவதிக் காவிலிருந்து மூடிய ஜன்னல்களைத் தாண்டி வந்த 'உஸ்' என்ற முனகலிடம் 'என்டெ ஐஸ்வர்யமே, பொறுக்குகஎன்று மன்றாடினார். புதுக்காடு ஃபுட்பால் கிளப் அலுவலகத்தின் பெஞ்சில் கிடந்த போக்கு அன்றைய ஆட்டத்தில் அடித்த பந்து ஆகாயத்தில் உயர்ந்து கோல் போஸ்டுக்குள் விழும்போது பாம்பாக மாறுவதாகக் கனாக் கண்டு அலறி எழுந்தான்.மருத்துவமனைப் படுக்கையில் ஒருக்களித்துக் கிடந்த பாம்பு முஸ்தபா கட்டிலுக்கு அடியில் போட்டிருந்த தன்னுடைய கவட்டைக் கம்பு எப்போது நெளியும் என்று காத்திருந்தார்.

வனத்துறை ஜீப்பின் தார்பாலின் மேற்கூரைமேல் விழுந்து பக்கவாட்டு ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து பகல் முழுவதும் நகராமலிருந்த ஜீப்பின் பின் சீட்டுக்கு அடியில் தூங்கிக் கொண்டிருந்த அது, சனிக்கிழமை இரவு வனக் காவலர்களை ஏற்றிக் கொண்டு நெடுமங்காட்டுக்குப் போகும் வழியில் புதுக்காடு மார்க்கெட் சந்திப்பில் தட்டு கடையில் சாயா குடிப்பதற்காக நின்றபோது திடுக்கிட்டு விழித்து அவசரமாக இறங்கியது. கவனக் குறைவாக ஜீப்பிலிருந்து சாடியதால் வால் பகுதியில் சுரீர் என்ற வலியை உணர்ந்தது. மழை ஈரத்தில் ஊறியிருந்த தார்ச் சாலையில் மார்பை ஊன்றி நிமிர்ந்தபோது எதிரில் மங்கலான வெளிச்சத்தில் புதுக்காடு ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரி என்ற போர்டு தென்பட்டது.

@























திங்கள், 6 ஏப்ரல், 2015

கமலின் மலையாளப் படங்கள்

திரு. யுவ கிருஷ்ணா, தனது ஃபேஸ்புக் நிலைத்தகவலில் கமல்ஹாசன் பற்றி நான் எழுதிய கட்டுரையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். கமல் ஹாசனின் 60 ஆம் பிறந்த நாளையொட்டி குமுதம் வெளியிட்ட மலருக்காக நண்பர் மணா கேட்டுக் கொண்டதால் எழுதிய கட்டுரை இது. கட்டுரை கமல்ஹாசனுக்குப் பிடிக்கவில்லை. அதனால் நண்பர் மணாவிடம்  'இனிமே உங்க சங்காத்தமே வேணாம்' என்று காய்விட்டு விட்டதாக மணா தெரிவித்தார்.

யுவ கிருஷ்ணாவின் தகவலைப் பார்த்து விட்டு அது என்ன கட்டுரை என்று விசாரித்த சில நண்பர்களுக்காக இந்தப் பதிவேற்றம்.





மிழ்ச் சினிமாவின் இளைய தலைமுறை நடிகர்கள் பலரின் படங்களும் தமிழகத்தில் வெளியாகும் அதே நாளில் கேரளத்திலும் வெளியாகிறது. இதனால் மலையாளப் படங்களுக்குக் கிடைக்க வேண்டிய வரவேற்பு கிடைப்பதில்லை என்று மாலிவுட் பிரமுகர்கள் புகைந்ததும் உண்டு. மலையாள நட்சத்திரங்களுக்கு இணையாகத் தமிழ் நடிகர்களும்  போற்றப் படுகிறார்கள். கேரளத்தில் ஜவுளிக்கடை திறப்புக்கும் கேரள வியாபார நிறுவனங்களுக்கும் தமிழ் நடிகர்கள் விளம்பரப் புரட்சி செய்கிறார்கள். ஏறத்தாழ எல்லா நடிகர்களுக்குமே கேரளத்தில் ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. தங்கள் ரசிகர்கள் பாண்டிக்காரர்களின் அனுதாபிகளாவதைப் பார்த்து மலையாள நாயகர்கள் கைகளைப் பிசைந்து கொள்வதும் வாடிக்கை.

எல்லாமிருந்தாலும் சகல மலையாள ரசிகர்களும் ஒரு தமிழ் நடிகர் மலையாளப் படத்தில் நடிப்பதைப் பார்க்கக் காத்திருக்கிறார்கள். அந்த நடிகர் - கமல்ஹாசன்.

ஊடக நேர்காணல்களில் ''நீங்கள் மறுபடியும் எப்போது மலையாளப் படத்தில் நடிப்பீர்கள் ?'' என்ற கேள்வி கமல்ஹாசனிடம் கேட்கப்படுவது வாடிக்கை. அவருக்குப் பின்னால் சிவாஜி, பிரபு,  பிரகாஷ் ராஜ், பார்த்திபன், பசுபதி, தலைவாசல் விஜய், சரத்குமார் போன்ற பல தமிழ்த் திரைமுகங்கள் மலையாள சினிமாக்களில் தோன்றியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள்  யாரிடமும் இந்தக் கேள்வி கேட்கப் பட்டதில்லை; படுவதில்லை. இந்தக் கேள்விக்கு ஒரே நாயகன் கமல்ஹாசன் மட்டுமே. அவர் நம்முடெ ஸ்வந்தம் ஆளாணு என்ற உரிமை பாராட்டுதலே காரணம். அவரும்''நான் இங்கே இருந்து போனவன். அதானால் நிச்சயம் வருவேன்'' என்று பதில் சொல்லி ஆசை காட்டிக் கொண்டிருக்கிறார்.
கமல்ஹாசன் தன்னையறியாமல் மலையாளத் திரையுலகத்துக்குச் செய்த முதன்மையான பங்களிப்பு ஒன்று இருக்கிறது.கேரளத்தின் முந்தைய தலைமுறை நடிகர்களான சத்யனுக்கும் பிரேம் நசீருக்கும் ரசிகர்கள் இருந்தார்கள். ஆனால் பெரிதாக ரசிகர் மன்றங்கள் இருந்ததில்லை. புதிய தலைமுறை நடிகர்களின் வருகைக்குப் பின்புதான் ரசிகர் மன்றங்கள் முளைத்தன. ஆரம்பத்தில் மோதிக் கொண்டிருந்த மம்மூக்கா ரசிகர்களும் லாலேட்டன் ரசிகர்களும் கமல்ஹாசன் ரசிகர்களைப் பார்த்துத்தான் மனந்திருந்தினார்கள் என்று சொல்லலாம். வெறும் ரசிகர் மன்றங்களாக இருந்தவை இன்று நற்பணி மன்றங்களாக உருமாறியிருக்கின்றன.

கமல்ஹாசனை 'சொந்த ஆளா'க மலையாளிகள் நினைக்கிறார்கள். வேறு எந்தப் பிற மொழி நடிகரும் அவர் அளவுக்கு மலையாளப் படங்களில் நடிக்கவில்லை. கிட்டத்தட்ட நாற்பது படங்கள். குழந்தை நட்சத்திரமாகக் 'களத்தூர் கண்ணம்மா'வில் அறிமுகமானது 1959 இல். அடுத்த மூன்று வருடங்களுக்குள் 'கண்ணும் கரளும்' மலையாளப் படத்தில் அறிமுகமானார். இது வெறும் அறிமுகமாக இருக்கவில்லை. மலையாள சினிமாவின் மகா நடிகர் என்று இன்றும் பாராட்டப்படும் சத்யன் கதாநாயகனாக நடித்த படம். அன்றைய மறுமலர்ச்சி நாடக ஆசிரியரான கே.டி.முகம்மதின் திரைக்கதை வசனம். எம்.பி.சீனிவாசனின் இசை. வயலார் ராமவர்மாவின் பாட்டுகள். எல்லாவற்றுக்கும் மேலாக மலையாளிகளின் சினிமா ரசனையைப் பேணிய கே.எஸ். சேதுமாதவனின் இயக்கம். இந்த வலுவான பின்னணியை அன்றைய ஒன்பது வயதுச் சிறுவன் கமல்ஹாசன் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவரது சினிமா வாழ்க்கையை அது மறைமுகமாகப் பாதித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கமல்ஹாசன் முதலில் கதாநாயகன் ஆனதும் மலையாளத் திரையில்தான். 1975 இல் வெளிவந்த 'கன்யாகுமாரி' படத்தில். அதற்கு முன்பும் அதற்குப் பின்பு 'பட்டாம் பூச்சி'வரையிலான தமிழ்ப் படங்களில் அவர் சிறு வேடங்களில்தான் நடித்திருக்கிறார். கதாநாயகனின் நண்பனாக. துணைக் கதாநாயகனாக. அல்லது தனி நடிப்புக்கு எந்த முக்கியத்துவும் இல்லாத பாத்திரங்களில்தான் அவர் தோன்றியிருக்கிறார். அவரைக் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய அதே சேதுமாதவனே அவரைக் கதாநாயகன் ஆக்கினார்.

மலையாளத்தின் பெரும் எழுத்தாளரான எம்.டி. வாசுதேவன் நாயரின் திரைக் கதை. புனே பிலிம் இன்ஸ்டிட்டியூட்டில் நடிப்புப் பயின்ற ரீடா பாதுரி நாயகி. எம்.பி. சீனிவாசன் இசை. மறுபடியும் ஒரு லெஜன்டரியான கூட்டணியின் பின்புலத்தில் அரங்கேறினார். இந்த வாய்ப்பு அவருக்கு சினிமாவின் துடிப்பைக் கற்றுக் கொடுத்திருக்கும் என்று நம்பலாம். அதற்கான வயதும் இளமை வேட்கையும் அவரிடம் இருந்தன.

ஒருவிதத்தில் கமல்ஹாசனை மலையாளப் படங்கள் வரவேற்றதும் அந்த இளமைக்காகத்தான். அவர் அறிமுகமாகி நடித்துக் கொண்டிருந்த அந்தக் கட்டத்தில் அவர் அளவுக்கு இளமையான மலையாள நடிகர்கள் இருக்க வில்லை. மலையாளத்தின் முன்னணி நாயகர்களான சத்யன், பிரேம் நசீர், மது எல்லாரும் நடுத்தர வயதை எட்டியிருந்தார்கள். மேக் அப் கலைஞரின்  உபயத்தில் இளைஞர்களாகத் துள்ளிக் கொண்டிருந்தார்கள். இளம் நாயகர் களாக அறிமுகமான எம்.ஜி.சோமன். சுகுமாரன் ( பிருத்விராஜின் அப்பா ), ஜெயன் ஆகியவர்கள் அறிமுகமானபோதே முதிர் இளைஞர்கள்.  மம்மூட்டியும் மோகன்லாலும் வரும்வரை மாலிவுட்டில்  நிலவிய இளமைப் பஞ்சத்தைப் போக்கியவர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த இரண்டாவது மலையாளப் படம் விஷ்ணு விஜயம். என். சங்கரன் நாயர் இயக்கத்தில் வெளிவந்த படத்தின் நாயகி ஷீலா. கமலை விடப் பதினோரு வயது மூத்தவர். படத்தின் கதையும் ஒரு பெண் தன்னை விட வயது குறைந்த இளைஞனைக் காதலிப்பது பற்றியதுதான் என்பதால் ஜோடிப் பொருத்தம் கச்சிதமாக இருந்தது. கிட்டத்தட்ட முப்பது வயதை எட்டியிருந்த ஷீலா மிக இளமையாகத் தென்பட உதவியது கமல்ஹாசன் என்பது வேடிக்கை; ஆனால் உண்மை.

பொதுவாக முன்னணிக் கதாநாயகர்கள் திரையில் தங்களை வாலிபர்களாகக் காட்டிக் கொள்ள இளம் நடிகைகளையே தேர்ந்தெடுப்பது இந்திய சினிமாவில் வழக்கம். அதை மாற்றிய பெருமை நம்மவருக்கு உண்டு. ஜெயசுதாவும் ஸ்ரீதேவியும் வரும் வரை  கதாநாயகிச்  சேச்சிகளை யௌவனமானவர் களாகத் தோன்றச் செய்தவர் கமல்ஹாசன். அவருடன் நடித்த நாயகிகளின் வரிசையைப் பார்த்தால் இது விளங்கும். விஷ்ணு விஜயத்தில் ஷீலா, அப்பூப்பன் படத்தில் ஜெயபாரதி, பொன்னியில் லட்சுமி. மலையாளத்தில் அவருடைய இளமைக்கு ஈடு கொடுத்த படம் என். சங்கரன் நாயர் இயக்கிய 'மதனோத்ஸவம்'. எரிச் சீகாலின் ' லவ் ஸ்டோரி' என்ற பிரபலமான கதை கிட்டத்தட்ட எல்லா இந்திய மொழிகளிலும் நகலெடுக்கப்பட்டது. அதன் மலையாள வடிவமான மதனோத்ஸவத்தை வெற்றி பெறச் செய்தது கமல் - ஜரினா ஜோடியின் இளமை.

கிட்டத்தட்ட இந்தக் காலக் கட்டத்தில் மலையாள சினிமா மாற ஆரம்பித்திருந்தது. கதாநாயக பிம்பமும் மாறத் தொடங்கியது. 1971 இல் சத்யன் நடித்த அனுபவங்கள் பாளிச்சகள் என்ற படத்தில் தலைகாட்டிய மம்மூட்டி ( அந்தப் படத்தில் அவருக்கு டைட்டில் கிரெடிட் இல்லை)  1979 இல் வெளியான 'தேவலோகம்' படத்தின் மூலம் கவனத்துகுரிய நடிகரானார். இந்த அறிமுகங்களில்  ஒரு சுவாரசியம் இருக்கிறது. கமல்ஹாசனை அறிமுகப்படுத்திய சேதுமாதவன் தான் மம்மூட்டியை அரங்கேற்றுகிறார். கமல்ஹாசனுக்கு நாயக அந்தஸ்தைக் கொடுத்த திரைக்கதையை எழுதிய எம்.டி.வாசுதேவன் நாயர்தான் மம்மூட்டிக்கும் திரைக்கதை எழுதி இயக்குகிறார். 78 இல் அறிமுகமானாலும் 80 இல் வெளிவந்த 'மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள்' மூலம் வில்லனாகக் கவனம் பெற்ற மோகன்லால் விரைவில் மலையாள இளமையின் அடையாளாமாக மாறினார். இந்த இரு சுதேச இளைஞர்களின் வருகை விருந்தாளி கமலின் இளமைக்கு முடிவு கட்டியது. அதற்குள் கமல்ஹாசன் தமிழ்த் திரையின் முக்கிய ஆளுமையாக மாறிவிட்டிருந்தார்.

1980 - 90 வரை கமல்ஹாசன் நடித்த மலையாளப் படங்களின் எண்ணிக்கை 6. இவற்றில் 1989இல் டி.கே.ராஜீவ்குமார் இயக்கத்தில் வெளிவந்த 'சாணக்கியன்'  படம் மட்டுமே அவரை மலையாள ரசிகர்களின் நினைவில் நிறுத்துகிறது. மற்ற ஐந்து படங்களும் ரசிகர்களின் மொழியில் 'பொட்டப் படங்கள்'தான். மம்மூட்டியும் மோகன்லாலும் உருவாக்கிய புதிய சினிமாப் பார்வைக் கலாச்சாரத்தில் கமல்ஹாசனின் நடிப்பு அவ்வளவு முக்கியத்துவமில்லாமல் போனது. அதற்கு மாறிய சூழல் ஒரு காரணம். கமல்ஹாசனும் ஒரு காரணம். சேதுமாதவன், எம்.டி. வாசுதேவன் நாயர், ஐ.வி சசி போன்றவர்களின் படங்களில் நடிக்க முடிந்த கமலுக்கு அன்றைய சீரிய இயக்குநர்களான பரதன், பி. பத்மராஜன், கே.ஜி.ஜார்ஜ் போன்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கமலின் நடிப்பில் ஆரம்பத்தில் இருந்த கலைத்தன்மையுள்ள இன்னொசென்ஸ் பின்னர் காணாமற்  போனது ஒரு காரணம்.  அவர் ஏற்கும் எல்லா வேடங்களிலும் கதாபாத்திரத்தின் மன நிலையை முந்திக் கொண்டு 'கமல்ஹாசன் இந்தப் பாத்திரத்தைச் செய்கிறார்' என்ற துருத்தல் வெளிப்பட்டு விடுவது இன்னொரு காரணம். அதை விட அவர் இதற்குள் துருவ நட்சத்திரமாக எட்டாத் தொலைவுக்குச் சென்றிருந்தார். அவரை வைத்துப் படமெடுப்பது கச்சிதமான பட்ஜெட்டில் சினிமா தயாரிக்கும் மலையாளிகளால் முடியாத காரியம்.

மலையாள சினிமா ஒரு மாற்றத்துக்கு உள்ளான  கால கட்டத்தில் அதில் நடித்தவர் கமல்ஹாசன். கேளிக்கைப் படங்களிலும் பாராட்டத் தகுந்த கலை அம்சங்கள் இருந்த படங்கள் உருவான காலம். கன்யாகுமாரியில் கேளிக்கை நடிப்புக்கும் கலைத்தன்மைக்கும் இடமிருந்தது. ஐ.வி சசி இயக்கிய 'ஈட்டா' படத்திலும் அந்தத் தன்மை இருந்தது. கமல்ஹாசன் முதன் முதலில் மேக் அப் சோதனை செய்து பார்த்த படம் ஏ.வின்சென்ட் இயக்கிய 'வயநாடன் தம்பான்'. நூறு வயதுக் கிழவனின் ஒப்பனையில் கமல் நடித்திருந்தார். அந்தப் படமும் கேளிக்கை நடிப்பின் சாதகங்களைக் கொண்டிருந்தது. அவரது நாயக நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'சாணக்கியன்' கமலின் கேளிக்கை நடிப்பின் உச்சம். கலைத்தன்மையுள்ள படங்களில் காட்டும் நடிப்புக்கும் வெறும் பொழுது போக்குப் படங்களின் நடிப்புக்கும் இருக்கும் வித்தியாசத்தை மலையாளத் திரையுலகுக்கு மறைமுகமாகக் கற்பித்தவர் கமல்ஹாசன். மலையாளிகள் ஒப்புக் கொண்டாலும் மறுத்தாலும் இது நிஜம். சத்யனும் பிரேம் நசீரும் மதுவும் எம்.ஜி.சோமனும் எந்தப் படத்தில் நடித்தாலும் அவர்களது  நடிப்புக்குத் தனித்தன்மை இருப்பதில்லை. கேளிக்கைப் பட நடிப்பும் சீரியஸ் பட நடிப்பும் அதிகம் வித்தியாசமில்லாமலிருந்தன. மலையாளத்தின் எவர் கிரீன் ஹீரோவான பிரேம் நசீரின் நடிப்பு பொழுது போக்குப் படமான 'சி.ஐ.சி நசீரிலும் சீரியஸ் படமான ' இருட்டின்டெ ஆத்மா'விலும் கிட்டத்தட்ட ஒன்றுதான். முன்னத்தில் கொஞ்சம் ஓவர். பின்னதில் அடக்கிய வாசிப்பு. இந்த இருவகை நடிப்புக்கும் வேறுபாடு இருப்பதைக் கோடிட்டுக் காட்டியவர் கமல்ஹாசன். இதைத் தெரிந்தோ தெரியாமலோ இன்றைய மலையாளநடிகர்கள் பின்பற்றுகிறார்கள். மம்மூட்டி , மோகன்லால் முதல் பிருத்விராஜ், ஃபஹத் பாசில், துல்கர் சல்மான் வரையான மலையாள நடிகர்கள்.

தான் கற்றுக் கொடுத்த பாடத்தை வாத்தியாரே மறந்ததுபோல இந்த வகைப்பாட்டை மறந்திருப்பவர் கமல்ஹாசன். கேளிக்கைப் படங்களில் கதாநாயகன் முக்கியம். அவனுடைய இமேஜ் முக்கியம். அதை வைத்தே படம் உருவாக்கப்படுகிறது. மாற்றுப் படங்களில் பாத்திரமே பிரதானம். அங்கே நடிகனின் பிம்பத்துக்கு எந்தத் தேவையுமில்லை. ஆனால் கமல்ஹாசன் ஏற்கும்  வேடங்களில் அந்தப் பாத்திர தர்மத்தை மீறிக் கமலும் எட்டிப் பார்க்கிறார். சமீபத்திய உதாரணம் ' உன்னைப் போல் ஒருவன்'. பெயர் சொல்லப் படாத சாதாரண மனிதன் பாத்திரம் கமலஹாசனுக்கு. ஆனால் திரையில் நாம் பார்ப்பது சகலகலா வல்லவரான கமலஹாசனை. அந்த சாதாரணனை மீறித் தெரியும் உலக நாயகன் பிம்பத்தை. அப்படியல்லாத ஒரு பாத்திரத்தைச் செய்ய முடியும்போது கமல்ஹாசனை மறுபடியும் மலையாளத் திரையில் பார்க்க முடியும். அதற்கான வாய்ப்ப்பு அவர் காலடியில் இருக்கிறது இப்போது. த்ருஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக். மலையாளப் படத்தில் ஒரு ப்ரேமில் கூட மோகன்லாலைப் பார்க்க முடிவதில்லை. நாம் பார்த்தது நாலாம்  கிளாஸ்காரன், கேபிள் டிவி ஆப்பரேட்டர் ஜோர்ஜ் குட்டியைத்தான். 'பாபநாசம்' படத்தில் நாம் பார்க்கப் போவது யாரை? கமல்ஹாசனின் சுயம்புலிங்கத்தையா? சுயம்புலிங்கத்தின் கமல்ஹாசனையா?
 இந்தக் கேள்விக்குக் கிடைக்கப் போகும் பதில்தான் கமல்ஹாசன் மலையாள சினிமாவிலிருந்து பெற்றது என்ன, அதற்குக் கொடுத்தது என்ன என்பதைத் தெளிவுபடுத்தும்.
@
நன்றி: குமுதம் - கமல் 60 சிறப்பு மலர் 2014.