பதேர் பாஞ்சாலி - முன்னுரை
'பதேர் பாஞ்சாலி' என்ற வங்காளத் தலைப்பு தனிப்பட்ட முறையில் பல நினைவுகளையும் கலவையான
உணர்வுகளையும் தரும் ஒன்றாகவே நீண்ட காலமாக இருந்து வருகிறது, இந்தத் தலைப்பில் உள்ள
இரண்டு கலை வடிவங்களும்
எப்போதும் பேரனுபவம் அளிப்பவையாகவே மனதில் நிலை பெற்றிருப்பவை. தமிழில்
மொழிபெயர்க்கப்பட்ட பிற இந்திய மொழி நாவல்களில்
திரும்பத் திரும்ப வாசித்தவற்றுள் ஒன்று - விபூதிபூஷண் வந்தோபாத்யாயாவின் 'பதேர் பாஞ்சாலி'. மீண்டும் மீண்டும்
பார்த்துச் சிலிர்க்கும் திரைப்படங்களில் ஒன்று - சத்யஜித் ராயின் 'பதேர் பாஞ்சாலி'. மறுவாசிப்பிலும் மீள்பார்வையிலும் இந்தக் கலைவடிவங்கள்
முன்னர் அளித்திராத புதிய அனுபவங்களைத்
தந்துகொண்டே இருக்கின்றன.
விபூதிபூஷணின் நாவலும் ராயின் திரைப்படமும் இன்று செவ்வியல் படைப்புகளாக
ஏற்றுக் கொள்ளப்பட்டவை. நாவலின் செவ்வியல் குணங்கள் தாம் அதை மகத்தான திரைப்படமாக
ஆக்கின. அதை முழுமையாக இனங்கண்டவர் சத்யஜித் ராய் என்பது அவரது மேதைமைக்குச்
சான்று. ஒரு செவ்வியல் படைப்பு இன்னொரு வடிவத்திலும் செவ்வியல் நிலையை அடைந்திருக்கும்
சாதனைக்குச் சான்றாக 'பதேர் பாஞ்சாலி' இருந்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால் நாவலுக்குக் கிடைத்திருந்த இலக்கிய
முக்கியத்துவத்தைத் திரைப்படம் மேலும் கூட்டியது. வங்க மொழியிலும்
மொழிபெயர்ப்புகள் மூலம் பிற மொழிகளிலும் இன்றும் வாசிக்கப்படும் நாவலாகத்
தொடர்வதற்கு ராயின் திரைப்படமும் பிரதான காரணம். 'பதேர் பாஞ்சாலி' என்ற தலைப்புக் குறிப்பிடப்படும்
எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்த ஒப்பீடு தவிர்க்க இயலாதது.
எனினும் விபூதிபூஷணின் நாவல் இந்திய மொழிகளில் எழுதப்பட்ட மகத்தான நாவல்களில்
ஒன்று என்பதை இன்றளவும் அதற்குக் கிடைத்து வரும் வாசக ஏற்பு
உறுதிப்படுத்துகிறது.ஏறத்தாழப் பத்துக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளிலும்
பத்துக்கும் குறைவான அயல்மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஐக்கிய
நாடுகள் அமைப்பின் கலாச்சாரப் பிரிவான யுனெஸ்கோ தனது பிரதிநித்துவப் படைப்புகள்
வரிசையில் ஆங்கிலத்தில் வெளியிட முன்வந்த இந்திய மொழி ஆக்கங்களில் 'பதேர் பாஞ்சாலி'யும் ஒன்று. ஆங்கிலத்தில் மட்டுமே
இரண்டு மொழிபெயர்ப்புகள் வெளியாகி உள்ளன. டி.டபிள்யூ. கிளார்க், தாராபதா முகர்ஜி இணைந்து
செய்த மொழி பெயர்ப்பும் கே.ராயும் மார்க்கரெட்
சாட்டர்ஜியும் மேற்கொண்ட மொழியாக்கமும். இது 'பதேர் பாஞ்சாலி' திரைப்படத்துக்குக்
கிடைத்த உலகளாவிய அறிமுகத்தின் மூலம் நாவலுக்குக் கிடைத்த புகழ் என்பது உண்மையானாலும் வங்க மொழியில் நாவலுக்கு
ஏற்கனவே பெரும் வரவேற்பும் அங்கீகாரமும் கிடைத்திருந்தன. 1928 - 29 ஆம் ஆண்டுகளில்
தொடர்கதையாக வெளியான நாவல் வங்காள இலக்கிய வாசகர்களிடம் மட்டுமல்ல வெகுஜன
வாசகர்களிடமும் செல்வாக்குப் பெற்றது. தனது இந்த முதல் நாவல் வாயிலாகவே
விபூதிபூஷண் வந்தோபாத்தியாயாவும் முன்னணி எழுத்தாளராகக் கவனம் பெற்றார்.
விபூதிபூஷண் வந்தோபாத்யாயா 1894 இல் பிறந்தவர்.
தந்தை மகானந்த வந்தோபாத்யாயா பிரசித்தி பெற்ற வடமொழிப் பண்டிதர்.
அவரிடமிருந்தே விபூதிபூஷண் வடமொழி பயின்றார்.
பள்ளியிலும் கல்லூரியிலுமாக ஆங்கிலக்
கல்வியும் பெற்றார். மேற்பட்டப் படிப்புக்குத் தேர்வு பெற்றிருந்தும் வீட்டில் நிலவிய வறுமை காரணமாகக் கைவிட
நேர்ந்தது. பள்ளி ஆசிரியராகவும் பசு பாதுகாப்பு சபையின் செயலாளராகவும்
பணியாற்றினார். அன்றைய வங்காள பிராமணக்
குடும்பங்களைச் சேர்ந்த எல்லா படித்த இளைஞர்களையும் போலவே அவருக்கும் எழுத்தாளன்
ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. ரவீந்திர நாத் தாகூர், பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா,
சரத்சந்திர
சட்டோபாத்யா ஆகிய இலக்கியவாதி களுக்குக் கிடைத்திருந்த சமூகப் பெருமையைப் பெற
வேண்டும் என்று விபூதிபூஷண் விரும்பியது இயல்பு. இந்த விருப்பத்தின் வெளிப்பாடாகவே
ஆரம்பக் காலச் சிறுகதை களை எழுதினார். ஆனால் எதிர்பார்த்த பெயரோ வருமானமோ கதைகள் மூலம் கிடைக்கவில்லை. வாசக கவனம்
சிறுகதைகளிலிருந்து நாவல்களுக்கு இடம் பெயர்ந்திருந்தது. சரத் சந்திரரின் நாவல்கள்
எல்லா வங்காளிகளையும் மோகத்தில் ஆழ்த்தி யிருந்தன. அவற்றிலிருந்த அதீதமான
கற்பனைவாதப் போக்கு வாசகர்களுக்கு ருசிகரமானதாக இருந்தது. ஏறத்தாழ வங்காளத்தின் மேல்தட்டு பிராமணர், நிலவுடைமையாளர்களான
ஜமீன்தார்கள் ஆகியோரின் வாழ்க்கையையே அவை கதைப்பொருளாகக் கொண்டிருந்தன, அன்றைய படித்த
வர்க்கத்துக்கு அவை மிகவும் உவப்பானவையாகவும் இருந்தன.
சிறுகதைகளிலிருந்து நாவலெழுத்துக்குச் செல்ல விபூதிபூஷணுக்குத் தூண்டுதலாக
இருந்தவை சரத்சந்திரரின் நாவல்கள்தாம். இருப்பினும் அந்தப் பொதுப் போக்கிலிருந்து
விலகிய ஒன்றையே தமது வழியாகத் தேர்ந்து எடுத்தார். கற்பனைவாதத்துக்குப் பதிலாக
இயல்புவாதச் சித்தரிப்பையே கையாண்டார். அதில் மெல்லிய இலட்சியவாதமும் இருந்தது.
சுவாரசியமானவையாக இருந்தபோதும் ஒரே மாதிரியான கதைகளையே சரத்சந்திரர் எழுதுகிறார்
என்று செல்லமாக அலுத்துக் கொண்டிருந்த வாசகர்களுக்கு 'பதேர் பாஞ்சாலி' வேறுபட்ட அனுபவமாக
அமைந்தது. அவர்கள் கண்முன் இருந்தும்
காணத் தவறிய உலகத்தை விபூதிபூஷண்
திறந்து வைத்தார். வாசக ஈடுபாடு மிக விரைவில் அவரை நட்சத்திர எழுத்தாளராக
மாற்றியது. அப்புவும் துர்க்காவும் அத்தைப் பாட்டி இந்திரும் சாமான்ய வங்க மொழி
வாசகர்களின் அன்புக்கு உரியவர்கள் ஆனார்கள்.ஓராண்டுக்குமேல் தொடராக வெளியிடப்பட்ட 'பதேர் பாஞ்சாலி' ஆண்டின் இறுதியிலேயே புத்தகமாக
வெளியிடப்பட்டது. முழுநேர எழுத்தாளராக வாழவேண்டும் என்று விபூதிபூஷண் நீண்ட
காலமாகக் கண்டுகொண்டிருந்த கனவும் மெய்ப்பட்டது. 'பதேர் பாஞ்சாலி' நாவலி லேயே அவரது உட்கிடக்
கையின் அடையாளத்தைக் காணலாம். நாவலின்
பிற்பகுதியில் அப்பு பத்திரிகையில் தனது படைப்பு வெளியாகி யிருப்பதையும்
அச்செழுத்தில் தன் பெயர் இருப்பதையும் லீலாவுக்குக் காண்பிக்கும் காட்சி விபூதிபூஷண் வந்தோபாத்யாயாவின் சுய அறிமுகம்தான்.
பதேர் பாஞ்சாலியில் நாடகீயமான கதை
இல்லை. எதிர்பாராத திருப்பங்களோ அசட்டு உருக்கம் ததும்பும் சம்பவங்களோ இல்லை.
வங்காள கிராமம் ஒன்றின் பின்னணியில் வாழும் எளிய குடும்பத்தின் அன்றாட
நடவடிக்கைகளும் அவற்றுக்குள் இருக்கும் நுண் தருணங் களுமே கதையாக விரிவு
பெறுகின்றன.நாவலின் முதற் பத்தியிலேயே கதையின் போக்கு முன்னறிவிக்கப் பட்டுவிடுகிறது.
'நிச்சிந்தபூர் கிராமத்திலே
வடகோடியில்ஹரிஹர ராயினுடைய சின்னஞ் சிறு வீடு இருந்தது. ஹரிஹர ராய் சாதாரணமான ஒரு
குடும்பஸ்தன். தாத்தா காலத்திய நிலம் கொஞ்சம் இருந்தது. அதிலிருந்து சிறிது
வருமானமும் வந்தது. அதோடு இவரும் நாலைந்து வீட்டுக்குப் புரோகிதம் செய்து வந்தார்.
அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு எப்படியோ குடும்பம் என்கிற வண்டி
தள்ளாடித் தத்தளித்துக் கொண்டிருந்தது'.
இந்தத் தத்தளிப்புத்தான் நாவலில் விரிவாகப் பேசப்படுகிறது. குடும்பத் தலைவனான
ஹரிஹர ராய் வீட்டில் இருப்பதைக் காட்டிலும் பிழைப்பு நிமித்தம் அதிக காலம்
வெளியிலேயே இருக்கிறான். புரோகிதம்
பார்த்தும் செல்வந்தர்களுக்குக் கணக்கெழுதியும் ஆன்மீகப் பிரசங்கங்கள் நடத்தியும் வருவாய்
ஈட்டுகிறான். அவனில்லாத குடும்பத்தை மனைவி சர்வஜயாதான் தள்ளாடி நகர்த்திச்
செல்கிறாள். ஹரிஹர ராயின் தூரத்துச் சொந்தம் என்று சொல்லிக் கொள்ளும் இந்திர் என்ற
விதவைக் கிழவி குடும்பத்தின் விருந்தாளி உறுப்பினர். சர்வஜயாவுக்கு அவளைப்
பிடிக்க வில்லை என்றாலும் சிறுமி துர்க்காவுக்குக் கிழவி மீது அபாரமான பாசம்.
இந்தக் குடும்பத்தின் வாரிசாகப் பிறக்கும் அப்புதான் நாவலின் நாயகன். துர்க்கா
அப்பு ஆகிய இரு குழந்தைகளின் பார்வையில்தான் நாவல் முன்னேறுகிறது. களங்கமில்லாத
அவர்களின் உலகத்தை ஊடாடும் ஒன்றாகவே
முதிர்ந்தவர்களின் உலகம் சித்தரிக்கப்படுகிறது. அந்த உலகமும் மனிதர்களுமே நாவலின்
இயல்பான பாத்திரங்களாகின்றனர்.
மூல மொழியில் நாவல் இரண்டு பாகங்களாகப் பகுக்கப்பட்டிருக்கிறது.
மொழிபெயர்ப்புகளில் இது
பொருட்படுத்தப்படவில்லை. முன் சொன்ன இரண்டு உலகங்களைச் சார்ந்தே
விபூதிபூஷண் இந்தப் பிரிவினையை மேற்கொண்டிருக்கிறார். இரண்டு பாகங்களும் அளவில்
சமமற்றவை. அறிமுகப் பகுதி முதல் கிழவி இந்திரின் மரணம் வரையான ஆறு அத்தியாயங்கள்
கொண்டது முதற் பாகம். அதன் தலைப்பும் 'அத்தைக் கிழவி' என்றே குறிப்பிடப்படுகிறது.
பெரியவர்களின் உலகத்தைச் சார்ந்த கதையே அந்தப் பகுதியில் சொல்லப்படுகிறது. ஹரிஹர
ராயின் குடும்ப மகிமை , இந்திர் கிழவியின் கடந்த காலம் , நிச்சிந்தபூரின் பழைய நாட்கள்
அதில் இடம் பெறுகின்றன. இந்திரின் மரணத்துடன் அந்தப் பகுதி முடிகிறது. ஒருவகையில்
பெரியவர்களின் உலகத்திலிருந்து கதை குழந்தைகளின் உலகுக்குத் திரும்பும் புள்ளி
அது. 'இந்திரின்
மரணத்துடன் நிச்சிந்தபூர் கிராமத்தில் ஒரு யுகம் கழிந்தது ' என்கிறது நாவல். இரண்டாம்
பகுதியின் தலைப்பு எஞ்சிய கதையின் இயல்பைச் சுட்டுகிறது. 'குழந்தைகள் தங்கள் சொந்தப் பொம்மை களை உருவாக்குகிறார்கள்'.
தலைப்புக்கு ஏற்பவே குழந்தைகளின் உலகையே - இடையில் ஒரு அத்தியாயம் நீங்கலாக -
நாவல் விரித்துக் காட்டுகிறது. துர்க்காவோ அப்புவோ இடம்பெறாத அத்தியாயங்கள்
இரண்டாம் பகுதியில் இல்லை. வீடு தங்காமல் ஊர் சுற்றும் துர்க்கா, அவளுடைய குறும்புகள்,
திருட்டுகள்,
அதற்காக அம்மாவிடம்
வாங்கும் அடிகள், அப்புவின் இளம் பருவம், அக்காவுடன்
ஒட்டிக் கொண்டு திரியும் அவனுடைய நாட்கள், இருவரும் பார்க்கும் காட்சிகள், திருவிழாக்கள், தெரு வேடிக்கைகள்,
வீட்டை ஒட்டிய
காட்டுக்குள் அவர்கள் தனித்து நடத்தும் சாகசங்கள், துர்க்காவின் மரணத்துக்குப் பிறகு
தனித்து விடப்படும் அப்புவின் நிலை, அம்மாவுக்கும் அவனுக்கும் ஏற்படும் நெருக்கம்,
பிழைப்புத் தேடி
அப்பாவுடனும் அம்மாவுடனும் காசிக்குச் செல்லும் காலம், ஹரிஹர ராயின் மரணத்துக்குப் பின்பு மீண்டும்
நிச்சிந்தபூருக்கே திரும்ப மேற்கொள்ளும் ஆயத்தம் என்று நிறைவடைகிறது அந்தப் பகுதி.
'ஆண்டவா,
எங்களை மறுபடியும்
நிச்சிந்தபூருக்கு அனுப்பி வை. இல்லாவிட்டால் எங்களால் வாழ முடியாது கடவுளே'
என்ற அப்புவின்
பிரார்த்தனையுடன் நாவல் முடிகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு வங்காள கிராமத்தின் எளிய மக்களின் வாழ்க்கையை
அதன் இயல்பு மாறாமல் முன்வைக்கிறது என்பதே 'பதேர் பாஞ்சாலி' நாவலுக்கு அளிக்கப்படும்
பெருமை. அதை எந்த மிகையோ ஆடம்பரமோ இல்லாமல் உருவாக்கியதே விபூதிபூஷண் வந்தோபாத்தி யாயாவின்
கலைத் திறன். வறுமையில் தத்தளிக்கும் ஒரு குடும்பம் அதிலிருந்து விடுபட்டு மேலான
வாழ்க்கை வாழ விரும்புகிறது. அது நடவாமல் போகிற துயரத்தையே அவர் தீட்டிக் காட்டுகிறார்.
அதில் எந்த விதமான செயற்கைப்பூச்சும் இல்லை.வறுமையைப் பாசங்கில்லாமலேயே
விபூதிபூஷண் முன்வைக்கிறார். 'சர்வஜயா பூக்குடலையிலிருந்து மசால் பொருட்களை எடுத்தாள்.
பூக்குடலை பூவைப் பார்த்தே காலங்கள் ஆயிற்று' என்று ஒற்றை வரியிலேயே மொத்த
தரித்திரத்தையும் வெளிப்படுத்துகிறார். உள்ளடங்கிய மொழியிலேயே படைப்பு
உருவாக்கப் பட்டிருப்பது இலக்கிய அமைதியை
மட்டுமல்ல.காலத்தின் நிதானத்தையும் சுட்டுகிறது.
நாவலின் கதையோட்டத்தை மூன்று மரணங்கள் நிர்ணயிக்கின்றன. ஒவ்வொரு மரணத்துக்குப்
பிறகும் குடும்பம் என்னவாகிறது என்பதே கதையின் போக்காக அமைகிறது.
கிழவி இந்திரின் மரணத்துக்குப் பிறகே சர்வஜயா தொல்லையில்லாத நாட்களை
உணர்கிறாள். அவளைப் பொறுத்தவரை கிழவி ஒரு சுமை. வறுமையில் தள்ளாடும் தன்னால்
அவளைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாது என்பதாலேயே கிழவியை வெறுக்கிறாள். கணவனின்
மரணத்துக்குப் பிறகு காசியில் ஒரு வீட்டில் சமையற்காரியாக வாழ நேரும் போது
ஏற்படும் கழிவிரக்கத்தால் வதைபடும்போதுதான் கிழ நாத்தனாரின் நினைவு வருகிறது. அவளை
வீட்டை விட்டுத் துரத்தியதும் அவள் வழியில் விழுந்து பரிதாபகரமாகச் செத்ததும்
உறுத்துகின்றன. சிறு வயதுக் குற்றத் துக்காகக் கண்ணீர் விடுகிறாள். அதன் பிறகே மீண்டும் சொந்த
ஊருக்குத் திரும்ப முடிவெடுக்கிறாள்.
இரண்டாவதாக நிகழும் மரணம் துர்க்காவுடையது.திருமணக் கனவுகளுடன் இருந்த சிறுமி
விஷக் காய்ச்சலில் இறக்கிறாள், கணவன் இல்லாத சந்தர்ப்பத்தில் நிகழும் அந்த மரணம் சர்வஜயாவை
கையறுநிலைக்குக் கொண்டு செல்கிறது. அப்புவை துணையற்றவனாக்குகிறது. தேச சஞ்சாரம்
முடிந்து வரும் ஹரிஹர ராயைக் குற்ற உணர்வுகொள்ளச் செய்கிறது. தரித்திரத்தையும்
துயரத்தையும் மட்டுமே அளிக்கும் நிச்சிந்தபூரை விட்டு வெளியேறச் செய்கிறது.
ஹரிஹர ராயின் இறப்பு காசியில் நிகழ்கிறது. அதுவரை கொஞ்சம் ஆசுவாசமாக மூச்சு
விடத் தொடங்கிய அம்மாவும் பிள்ளையும் திணறு கிறார்கள். தரித்திரம் பிடுங்கித்
தின்னும் வாழ்க்கை வாழ்ந்தபோதும் தான் எஜமானியாக இருந்தவள் என்ற தன்மானத்துடன்
வாழ்ந்த சர்வஜயா காசியில் ஒரு பெருந்தனக் குடும்பத்தின் சமையல்காரியாகப் பிழைக்க
நேர்கிறது. ஆனால் மகன் அப்பு அந்த வீட்டில் அவமானப்பட்ட பின்பு, அவனால் சிமெண்ட்
கட்டடங்களுக்கு இடையில் வாழ முடியாது என்று தெரிந்த பின்பு மீண்டும் சொந்த
மண்ணுக்கே திரும்பத் தீர்மானிக்கிறாள்.
மனிதர்களின் வேர்ப்பற்றைச் சொல்லும் நாவல் என்று 'பதேர் பாஞ்சாலி' யைக் குறிப்பிடலாம். அது
அந்தக் காலத்தின் குணத்தைச் சேர்ந்தது என்றும் வகைப் படுத்திவிடவும் முடியும்.
இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வந்து விட்டோம் என்று குறுகுறுக்கும் இன்றைய
மனநிலையில் நாவலை அதன் பழைமையை மீறி சமகாலத்தன்மை கொண்டதாகவும் காண முடியும்.
இன்னும் அழுத்தமாகச் சொன்னால் சூழலியல் படைப்புகளுக்கு முன்னோடி என்று
வகைப்படுத்துவதும் பொருந்தும்.
சமீபத்திய மறு வாசிப்பில் பதேர் பாஞ்சாலியை இன்னொரு கோணத்திலும் பார்க்க
முடியும் என்று பட்டது. கனவுகள் வீழ்ச்சியடையும் காலத்தின் கதையாக. நாவலின்
முதன்மைப் பாத்திரங்கள் அனைவரும் தங்களது எதார்த்த நிலையை மீறிய கனவுகளைக்
காண்பவர்களாக இருக்கிறார்கள். தனது பாண்டியத்தினால் பெரும் வருவாய் ஈட்டி விட
முடியும் என்று ஹரிஹர ராய் நம்புகிறான். சர்வஜயாவின் திருமணம் அவள் பூப்பெய்தும்
முன்பே நடந்து விடுகிறது. பெண்ணாக மலர்ந்த் பிறகு குடும்ப வாழ்க்கை பற்றி
இடைவிடாமல் கனவு காண்கிறாள். தங்கச் சேணம் பூட்டிய குதிரையில் தூதர்கள் வந்து
தன்னுடைய கணவனைத் தலைமைப் புரோகிதராக
நியமிக்கும் கடிதத்தை அளிப்பதாகக் கனவு காண்கிறாள். பாழடைந்த வீட்டை அரபி இரவுகள்
கதையில் வரும் தேவதைகள் செப்பனிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறாள். துர்க்கா
பாட்டும் நடனமுமாகத் தனது திருமணம் நடை பெறும் என்று மோகிக்கிறாள். அவர்கள்
அனைவரின் கனவுகளும் பொய்த்துப் போகின்றன. சிறுவன் அப்பு தனது வயது காரணமாகத் தன்னை
மீறிய கனவுகள் எதையும் காண்பது இல்லை. தன்னைச் சுற்றியுள்ள எதார்த்தத்தை மட்டுமே
பார்ப்பவனாக இருக்கிறான். மற்றவர்களின் கனவுகளை வேடிக்கை பார்ப்பவனாக இருக்கிறான்.
துர்க்கா களவாடிக் கொண்டு வந்து மறைத்து வைத்த தங்கச் சிமிழை அவளுடைய
மரணத்துக்குப் பிறகு கண்டெடுக்கும் அப்பு அதை யாரிடமும் சொல்லாமல், யாருக்கு தெரியாமல் வீசி
எறிகிறான். கனவுகளைச் சீராட்டுபவனாக அல்லாமல் எதார்த்ததுடன் கைகுலுக்குபவனாக
இருக்கிறான். இந்தக் கோணத்தில் அணுகும்போது விபூதிபூஷணின் நாவலை மேலும் நெருக்கமான
படைப்பாக உணர்கிறேன்.
பதேர் பாஞ்சாலி' 1930 ஆம் ஆண்டு வாக்கில்
நூலாக வெளியானது. அதற்குச் சில ஆண்டுகளுக்குள் இந்தி மொழிபெயப்பும்
வெளி வந்திருக்கிறது. ஆனால் அதிகம் கவனம் பெறவில்லை. நாவலை அடிப்படையாக வைத்து
சத்யஜித் ராய் உருவாக்கிய திரைப்படம் 1955 இல் வெளியானது. சிறந்த திரைப்படத்துக்கான இந்தியக்
குடியரசுத் தலைவரின் விருதைப் பெற்றது. அது இந்திய அளவில் நாவலின் மீது கவனம்
ஈர்க்கப்படக் காரணம். 'திரையில் உருவாக்கப்பட்ட மகத்தான மனித ஆவணம்' என்று கான் திரைப்பட விழாவில்
விருதும் பெற்றது. அது உலகளவில் நாவலைக் கொண்டு சென்றது. தொடர்ந்து இந்திய மொழிகள்
பலவற்றிலும் மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன. தமிழில் மொழிபெயர்க்கப் படவும் ஒருவேளை
இந்த கவனக் குவிப்பு காரணமாக இருந்திருக்கலாம்.
1964 ஆம் ஆண்டு 'பதேர் பாஞ்சாலி'யின் தமிழாக்கம் வெளிவந்திருக்கிறது. ஆர்.ஷண்முகசுந்தரம் மொழியாக்கம்
செய்திருந்தார். முன்னரே சரத் சந்திரரின் நாவல்கள் சிலவற்றைத் தமிழாக்கம் செய்தவர்
அவர். அதன் தொடர்ச்சியாக விபூதிபூஷணின் நாவலையும் செய்திருக்கிறார் என்று
ஊகிக்கிறேன்.
ஆர்.ஷண்முகசுந்தரத்தின் தமிழாக்கத்தில் வெளியான 'பதேர் பாஞ்சாலி' நாவல் பிரதியைக் கையில்
வைத்திருந்த நொடியில் நான் அடைந்த சிலிர்ப்பு இப்போதும் நினைவில் புரள்கிறது.
அன்று புளகாங்கிதம் அடைந்ததற்கு இரண்டு காரணங்கள். அதற்குச் சிறிது முன்புதான்
ஷண்முக சுந்தரத்தின் படைப்புகளை உள்ளூர் நூலகத்திலிருந்து எடுத்து
வாசித்திருந்தேன். நான் அன்றாடம் கேட்கும், பேசும் எங்களூர் மொழியில் அவை
இருந்தன. அவரும் எங்கள் வட்டாரத்து ஆள் என்ற நெருக்கம். முதல் காரணம். இரண்டாவது காரணமும் ஊர்ப் பாசம் சார்ந்ததுதான்.
நாவல் மல்லிகா வெளியீடாக வந்திருந்தது. விற்பனை உரிமை; மெர்க்குரி புக் கம்பெனி, கோவை என்று
போட்டிருந்தது. பள்ளி, கல்லூரிப் பருவங் களில் எழுதுபொருட்களும் நிலப் படங்களும் நோட்டுப்
புத்தகங்களும் வாங்கிக் கொண்டிருந்த நிறுவனம் இப்படி ஒரு புத்தகம்
வெளியிட்டிருக்கிறதே என்ற ஆச்சரியம் சிலிர்ப்பாக மாறியது. ஆர். ஷண்முகசுந்தரத்தை அவரது இறுதிக் காலத்தில்
சந்தித்த போது இதே சிலிர்ப்புடன் 'பதேர் பாஞ்சாலி' மொழிபெயர்ப்புப் பற்றிக் குறிப்பிட்டு மிருக்கிறேன்.
திரைப்படம் பார்க்கும் வேட்கை முற்றி நின்ற பருவத்தில் 'பதேர் பாஞ்சாலி'வெள்ளி விழாவையொட்டித்
தொலைக் காட்சியில் ஒளிபரப்பான சித்தானந்த தாஸ் குப்தாவின் நேர்காணலின் இடையே
காட்டப்பட்ட படத்தின் பகுதிகளைமுதன்முதலாகப் பார்க்க நேர்ந்தபோதும் பின்னர்
திரைப்பட ரசனைப் பயிற்சிப் பட்டறை ஒன்றில் பேராசிரியர் சதீஷ் பகதூரின் விரிவான முன்னுரைக்குப் பின் 'பதேர் பாஞ்சாலியை
முழுமையாகப் பார்த்தபோதும் ஷண்முகசுந்தரத்தின் தமிழாக்கமே மனதில் ஓடிக்
கொண்டிருந்தது. நிச்சிந்தபுரம் அந்நிய நிலமாகத் தோன்றாமலிருந்ததும் அப்புவும் துர்க்காவும்
ஹரிஹர் ராயும் சர்வஜயாவும் இந்திராவும் மிக நெருக்கமானவர்களாகத் தோன்றியதும் அந்த
மொழிபெயர்ப் பால்தான். மகத்தான
இயக்குநர்கள் என்று எனக்குள்ளே இருக்கும் வரிசையில் முதல்வராக சத்யஜித் ராய்
மட்டுமே இருக்கக் காரணங்களில் ஒன்றும் அதுவே.
பதேர் பாஞ்சாலி'யின் தமிழாக்கம் முதல் பதிப்பாக 1964 இல் வெளிவந்தது. சந்தியா பதிப்பகம் 2001 இல் ஒரு பதிப்பை
வெளியிட்டது. நாவலை ஆர். ஷண்முகசுந்தரம் இந்தி வழியாகவே தமிழில்
பெயர்த்திருக்கிறார் என்பதை இப்போது உறுதியாகச் சொல்ல முடியும். இந்திமொழியின்
வாக்கிய அமைப்புகளும் பத்தி பிரிப்புகளும் இடம்பெற்றிருக்கும் முறையை வைத்து இதைக்
காணலாம். எனினும் ஏமாற்றம் அளிக்காத மொழிபெயர்ப்பு. ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு
இன்று வாசிக்கும்போதும் இடைஞ்சல் தராத பிரதியாகவே அனுபவப்படுகிறது. நாவலின்
உள்ளோட்டத்தைத் துல்லியமாகக் கொண்டிருக்கிறது. விபூதிபூஷணைப் போலவே ஷண்முக
சுந்தரமும் கிராமங்களின் ஆன்மாவை
உணர்ந்தவர்; எளிமையான மொழியில் கதை சொன்னவர் என்பது இந்தத் துல்லியத்துக்கும்
நேர்த்திக்கும் ஆதாரமாக இருக்கக் கூடும். இந்த ஆதார இயல்புகளுக்குச் சேதாரமில்லாத
பதிப்பை நண்பர் பரிசல் செந்தில் நாதன் கொண்டு
வந்திருக்கிறார். விபூதிபூஷண் வந்தோபாத்யாயாவின் வாசகனாக, சத்யஜித் ராயின் ரசிகனாக, ஆர்.ஷண்முக சுந்தரத்தின்
ஊர்க்காரனாக அவருக்கு என் வணக்கங்களும் வாழ்த்துக்களும்.
திருவனந்தபுரம் சுகுமாரன்
29 டிசம்பர் 2016