பக்கங்கள்

செவ்வாய், 14 நவம்பர், 2017

குஞ்ஞுண்ணியும் பாதசாரியும் நாற்பது வருடங்களும்

                                                 பாதசாரி
பாதசாரி என்ற விஸ்வநாதன் என் கல்லூரிப் பருவ நண்பர். சீனியரான அவரை நண்பராக்கியது இருவரையும் ஆட்டிவைத்த இலக்கியக் கிறுக்குத் தான். இலக்கியம் ஏற்படுத்தித் தந்த இரண்டாவது நட்பு அவருடையது. 

உள்ளூர் நாளிதழில் வெளியான சிறுகதை ஒன்றை வாசித்து விட்டு, எழுதியவனைப் பார்ப்பதற்காக வீடு தேடி வந்த என் முதல் இலக்கிய நண்பரான ராமு பின்னர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. கல்லூரியில் விஸ்வநாதனுடன் ஏற்பட்ட நட்பு பதிற்றாண்டுக் காலம் நீண்டது. இலக்கியம், சினிமா, கலை என்று ஆர்வத்தையும் அக்கறை யையும் அலைச்சலையும் காசில்லாத் திண்டாட்டத்தையும் பகிர்ந்து கொண்டு தொடர்ந்த நட்பு, பின்னர் என்றோ வழி பிரிந்தது.


என் தனி நூலகத்திலிருக்கும் புத்தகங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். தமிழ், மலையாளம், ஆங்கிலம் என்று மூன்று மொழிகளிலுமாகச் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களைப் பொருள்வாரியாக அமைக்க விரும்பினேன். மலையாளக் கவிதை நூல்களை அடுக்கிக் கொண்டிருந்தபோது குஞ்ஞுண்ணியின் கவிதைத் தொகுப்பு கை தவறி விழுந்தது. அதற்குள்ளிருந்து ஒரு நான்கு பக்கத் தாள் வெளியே வந்தது. கவித (கவிதை) என்ற பெயரில் வெளிவந்த தேர்ந்தெடுத்த கவிதைகள் கொண்ட தொகுப்புத்தான் குஞ்ஞுண்ணியின் முதலாவது தொகுப்பு என்று நினைக்கிறேன். புத்தகத்துக்கான முகப்பு ஓவியத்தையும் அவரே தீட்டியிருந்தார். புத்தகத்துக்குள்ளிருந்த தாளில் விஸ்வநாதனின் கையெழுத்தில் சில கவிதைகள் இருக்கின்றன. அவை குஞ்ஞுண்ணி கவிதைகளின் தமிழாக்கம். மொத்தம் ஒன்பது கவிதைகளை நண்பர் மொழிபெயர்த்திருக்கிறார். அவருக்கு மலையாளம் தெரியாது. ஆனால் நான் வாசித்துச் சொன்னதை வைத்து அவர் செய்தது அந்த மொழி பெயர்ப்பு.


                                 கவித -  குஞ்ஞுண்ணி

கேரள கவிதா கிரந்தவரி ( கேரளக் கவிதைநூல் வரிசை ) யில் வெளியான நூல்களில் ஒன்று குஞ்ஞுண்ணியின் தொகுப்பு. கவித - குஞ்ஞுண்ணி என்று மட்டுமே முகப்பு. இதே வரிசையில் இதே தலைப்பில் அன்று மலையாளத்தின்  முக்கியமான கவிஞர்கள் 12 பேரின் தொகுப்புகள் வெளியிடப்பட்டன.  இவையனைத்தும் 1977 - 78 ஆண்டுகளில் மாதம் ஒன்றாக வெளியானவை.  கடம்மனிட்ட ராமகிருஷ்ணன், எம்.கோவிந்தன், ஆற்றூர் ரவி வர்மா, சச்சிதானந்தன், காவாலம் நாராயணப்பணிக்கர், கே.ஜி. சங்கரப் பிள்ளை, ஜி.குமார பிள்ளை, கே. அய்யப்பப் பணிக்கர், எம். என் பாலூரு, என். என். கக்காடு, மாதவன் அய்யப்பத் ஆகியவர்கள் மற்ற கவிஞர்கள். இவர்களில் ஏழு பேர் இன்று இல்லை. இந்த வரிசையில் வெளிவந்த எல்லாத் தொகுப்புகளையும் வாங்கியதும் வாசித்ததும் இப்போது உற்சாகம் தரும் நினைவாகப் படர்கிறது. நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பு 'பழைய நண்ப'ரின் கைப் பிரதியைப் பார்க்கையில் அடிக் கரும்பின் இனிமை உள்ளே ஊறுகிறது. சில நினைவுகள் இனிமையானவைதான்.

பாதசாரி, விஸ்வநாதனாக இருந்த காலத்தில் தமிழாக்கம் செய்த குஞ்ஞுண்ணிக் கவிதைகள் இவை.




                             பாதசாரியின் கையெழுத்துப் படிகள்


1. 

எனக்குண்டு
ஒரு உலகம்
உனக்குண்டு
ஒரு உலகம்
நமக்கில்லை
ஒரு உலகம்.

2. 

நானொரு
கால் கவி
பெண்ணின்
இடுப்புப் பிரதேசம்
காண முடியாததால்...
கண்டிருந்தால்
நானொரு
அரைக் கவி ஆவேனோ
அன்றி
அரைக்கால் கவி ஆவேனோ?

3. 

பிரபஞ்சம்
ஒரு படி
இறைவனதில்
ஒண்ணேகால் படி
இதென்ன
விவசாயம்?
இதென்ன
வியாபாரம்?

4. 

ஆறாவது நாள்
கடவுள்
மண்ணால்
மனிதனைப் படைத்தான்
ஏழாவது நாள்
மனிதன்
கடவுளைத் திரும்பப்
படைத்தான்.

5. 

காந்திக்கு
காந்தியே சிஷ்யன்
காந்தி சிஷ்யனுக்கு
உலகத்தில் எல்லோருமே
சிஷ்யராகணும்
தன்னைத் தவிர
எல்லாரும்
காந்தியாகணும்

6. 

நமக்கேன்
இத்தனை முகம்,
படைத்தவன்
நான்முகனல்லவா?

7. 

பெண்ணாய்த்தான்
பிறக்கிறார்கள் பலர்
பின்னால் அதில்
அதிர்ஷ்டத்தால் சிலர்
ஆணாக ஆகிறார்கள்.

8. 

பிரம்மம் உண்மை
உலகம் மாயை
முலையும் ப்ராவும்போல.

9

பிறக்கும்போதே
என் மகன்
இங்க்லீஸ் பேசணும்
அதனால்தான்
என் மனைவிக்கு
பிரசவம் வைத்தேன்
இங்கிலாந்தில்.

                                     --- @@@ ---      



ஞாயிறு, 12 நவம்பர், 2017

விளம்பரம் - நேர்காணல்

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான இயல் விருதைப் பெற்றுக் கொள்ள, கடந்த ஜூன் மாதம் டொரண்டொ சென்றிருந்தேன். அதையொட்டிப் பத்து நாட்கள் அங்கே தங்கியிருந்தேன். அந்தக் கனேடிய தினங்கள் ஒன்றில் கனடாவிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் 'விளம்பரம்' இதழுக்காக  நண்பர்கள் ரதனும் ( ’எதிர் சினிமா’ நூலின் ஆசிரியர் ), விளம்பரத்தின் ஆசிரியரும் பதிப்பாளருமான  ராஜா மகேந்திரனும் ஒரு நேர்காணலைச் செய்தார்கள். அது விளம்பரம் இதழில் வெளியாகி உள்ளது. இதழைப் பார்க்க வாய்க்கவில்லை. நவம்பர் 2017  'அம்ருதா' இதழில் இந்த நேர்காணல் மறு வெளியீடு செய்யப் பட்டிருக்கிறது. இரு இதழ்களிலும் வெளியாகி இருக்கும் நேர்காணலின் முழு வடிவை இங்கே பகிர்கிறேன். ரதன், ராஜா மகேந்திரன் , தளவாய் சுந்தரம் ஆகியோருக்கு நன்றி.
















1.  உலக கவிதைகள் என்று வரும் பொழுது தமிழ்க் கவிதைகளின் தரம் எவ்வாறு உள்ளது?

உலகக் கவிதை என்று பொதுவான ஒன்று  இல்லை என்றும் அப்படி இருக்க வாய்ப் பில்லை என்றும் எண்ணுகிறேன். பொதுவான ஒரு தரப்படுத்தலுக்குள் கவிதை அடங்கி விடாது. உலகின் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டு, பெரும்பாலும் ஆங்கில மொழி பெயர்ப்புகள் வழியாக நமக்கு வாசிக்கக் கிடைக்கும் கவிதைகளையே நமது வசதிக்கு ஏற்ப உலகக் கவிதைகள் என்ற பொதுப் பெயரில்  அழைக்கிறோம். ஓர் ஆங்கிலக் கவிதையும் ஒரு பிரஞ்சுக் கவிதையும் ஒரு சீனக் கவிதையும் ஒரு ஸ்பானியக் கவிதையும் பொதுவான தரநிர்ணயத்துக்குள் கட்டுப்படாது என்று தோன்றுகிறது.அவை ஒவ்வொன்றும் தனித்தனி அனுபவத்திலிருந்தும் பண்பாட்டுப் பின்னணியிலிருந்தும் மொழிப் புலத்தி லிருந்தும் எழுதப்படுபவை. அவற்றை இணைக்கும் பொது அம்சம் அநேகமாக இல்லை. அவற்றுக்கு இடையில் ஒப்பீடே சாத்தியமில்லை. அப்படியிருக்க தரநிர்ணயம் எப்படி இருக்க முடியும்

இந்த சாத்தியமின்மையை மீறி கவிதை ஆர்வலர்களாகவும் வாசகர்களாகவும் விமர்சகர் களாகவும் அந்தக் கவிதைகளைப் புரிந்துகொள்ளவும் அவற்றுடன் உறவுகொள்ளவும்  சில பொது இயல்புகளை நாம்  கண்டடைகிறோம். அந்த இயல்புகளின் மூலம் அந்தக் கவிதையின் உள் உலகத்தை நெருங்கவும் விளங்கிக் கொள்ளவும் முயற்சி செய்கிறோம். ஒரு அனுபவம் எப்படித் தனித்துவமாகச் சொல்லப்படுகிறது; மொழி எவ்வளவு நுட்பமாகக் கையாளப் படுகிறது; உணர்ச்சிகள் எத்தனை செறிவாக முன் வைக்கப்படுகின்றன; பண் பாட்டு அடையாளம் என்னவாக இடம் பெறுகிறது ஆகியகேள்விகளுக்கெல்லா மாக நாம் கண்டடையும் பதிலே கவிதையைத் துலங்கச் செய்கிறது. அந்தப் பதிலின்  மூலமாகவே கவிதையைப் புரிந்து கொள்கிறோம். 'கவிதை உணர்வு' என்று இதைச் சொல்ல விரும்புகிறேன். சுடரைப் பார்க்கும்போது அதன் வெம்மையையும் உணர்கிறோம், இல்லையா?  நாமறியாத மொழிக் கவிதைகளை நாம் அனுபவமாக்கிக் கொள்வதும் இந்த அடிப்படையில்தான் என்று நினைக்கிறேன். இதையொட்டித்தான் தர வரிசையும் உருவாகிறது. எது நம்மை அனுபவத்துக்குள்ளாக்குகிறதோ அதையே நல்ல கவிதை என்று கூறுகிறோம். தரமானது என்று சொல்கிறோம். தரமானது என்று அறிந்தவற்றைக் கொண்டே உலக அளவிலானது என்ற பொதுத்தன்மையை அளிக்கிறோம்.

கொஞ்சம் அதிகமாகப் பேசிவிட்டேன் என்று தோன்றுகிறது. மேலே சொன்னவற்றின் பின்னணியில் தமிழ்க் கவிதையை வைத்துப் பார்க்கும்போது உயர்வான எண்ணமே எனக்கு ஏற்படுகிறது. ஓர் ஆண்டுக்கு முன்பு ஜெர்மானிய இந்தியமொழிக் கவிஞர்களின் மொழியாக்கப் பட்டறை ஒன்றில் கலந்து கொண்டேன். இந்தியமொழிக் கவிதைகளை ஜெர்மன்மொழிக்கும் ஜெர்மன்மொழிக் கவிதைகளை இந்திய மொழிகளுக்கும் பெயர்ப்பது பட்டறையின் நோக்கம். மொழியாக்கத்தில் ஈடுபட்டபோது தமிழ்க் கவிதைகளும் 'உலகத் தரமானவை' என்பதை உணர்ந்தேன். ஜெர்மன் மொழியில் இன்று எழுதும் கவிஞர்களில் முக்கியமான ஒருவராகச் சொல்லப்படும் உல்ஃப் ஸ்டொல்டர்ஃபோட் என்பவரிடம் சில தமிழ்க் கவிதைகளை வாசித்துக் காட்டினேன். சங்க இலக்கியம் முதல் ஈழத்துக் கவிதைகள் உட்பட இன்று  வரையிலான கவிதைகள். வாசித்து முடித்ததும் உல்ஃப் சொன்னார் , 'அட, மனுஷா, இதெல்லாம் உலகத் தரமான கவிதைகள்'. 
அந்த வியப்பை இங்கே வழிமொழிகிறேன்.

2. தமிழ்க் கவிதை உலகம் இன்று ஈழம், புலம் பெயர்வு, மலேசியா, சிங்கப்பூர் என விரிந்துபரந்துள்ள படைப்புக்களை உள்வாங்கியுள்ளதா? இவற்றின் வருகையால் தமிழ்க் கவிதையுலகில்ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?

இவ்வலவு பெரிய கேள்விக்கு என்னிடம் விரிவான பதில் இல்லை. மன்னிக்கவும். நான் தொடர்ந்து வாசித்தும் அவதானித்தும் வருபவை ஈழத்துக் கவிதைகளையும் புலம்பெயர் கவிதைக¨ளையுமே. சிங்கப்பூர், மலேசியா விலிருந்து எழுதப்படும் கவிதைகளை மிகக் குறைவாகவே அறிமுகம் கொண்டிருக்கிறேன். அவை குறித்து திட்பமான கருத்து எதுவும் என்னிடம் உருவாகவில்லை. வாசித்த சிலவும் மேம்போக்கானவை; நினைவேக்கத்தைப் பேணுபவை; நவீனமடையாத பழைய மொழியிலேயே எழுதப்படுபவை; ஜனரஞ்சகமான சாமர்த்தியங்களைப் பின் தொடர்பவை என்ற மனப்பதிவு களைத்தான் அளித்திருக்கின்றன. அவை பற்றி வலுவாகப் பேசுவதற்கான தரவுகள் என்னிடம் இல்லை.

மாறாக, ஈழத்துக் கவிதைகளையும் தொடர்ந்து புலம் பெயர் கவிதைகளையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். இவை தமிழ்க் கவிதையைப் பாதித்துள்ளன; மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துள்ளன என்று கருதுகிறேன். மூன்று விதங்களில் ஈழத்துக் கவிதைகளும் புலம்பெயர் கவிதைகளும் நவீனத் தமிழ்க் கவிதைக்குள் மாற்றங்களை ஏற்படுத்தி யிருப்பதாக நம்புகிறேன். ஒன்று: எண்பதுகளில் எழுதப்பட்ட தமிழ்க் கவிதைகளில் அரசியல் கவிதைகளுக்கு அளிக்கப்பட்ட இடம் குறைவு. அல்லது அநேகமான இல்லை. அரசியலைக் கவிப் பொருளாகக் கொள்வது தீண்டத் தகாத செயல்போலக் கருதப்பட்டது. ஈழத்துக் கவிதைகளின் வருகை அந்தக் கருத்தை நொறுக்கியது. இரண்டு: புலம் பெயர் கவிதைகள் தமிழ்க் கவிதையை இடத்தைக் கடந்த பெரிய வெளிக்குக் கொண்டு சென்றன. புதிய நிலக் காட்சிகளையும் புதிய உணர்வுகளையும் திறந்து வைத்தன. மூன்று: ஈழத்திலிருந்து வெளி வந்த 'சொல்லாத சேதிகள்' தொகுப்புத்தான் தமிழகத்தில் பெண்நிலை எழுத்துக்களைத் தூண்டி விட்ட காரணிகளில் ஒன்று.


3. அதேபோன்று பெண்ணியம், தலித்தியம், பின் நவீனத்துவம், நவ தாராளவாதம்,உலகமயமாதல் போன்ற விடயங்களை தமிழ் கவிதைகள் முறையாக வெளிப்படுத்தி உள்ளனவா?

வெளிப்படுத்தியுள்ளன; வெளிப்படுத்துகின்றன என்றே நம்புகிறேன். முறையாக வெளிப்படுத்தியுள்ளனவா என்ற உங்கள் சந்தேகத்துக்கு என்னிடம் போதுமான பதில் இல்லை. உங்கள் கேள்வியில் எடுத்துச் சொல்லப்படும் எல்லாமும் நவீன காலத்தின் விஷயங்கள்தானே? நிகழ்காலத்தின் சிக்கல்கள்தானே? அவற்றிலிருந்து சமகாலக் கவிதை எப்படி விலகி நிற்க முடியும்? அப்படி விலகி நின்றால் அவை நவீன கவிதை ஆகாதே. பொதுவாகவே கவிதை நிகழ்காலத்தைச் சார்ந்தது என்றும் நிகழ்காலத்தின் பிரச்சனை களைப் பேசுவது என்றும் நம்புகிறவன் நான். நிகழ்காலத்தைப் பேசும் வகையிலேயே அது காலத்தைக் கடந்தும் பேசுகிறது என்றும் நம்புகிறேன். இது விரிவாகப் பதிலளிக்கப்பட வேண்டிய கேள்வி. மிக அதிக எடுத்துக்காட்டுகளுடன் பேசவேண்டிய ஒன்று. இப்போதைக்கு என் பதில் வெளிப்படுத்தியிருக்கின்றன என்பதுதான்.

4. பெண் கவிஞர்கள் உடல் உறுப்புக்களை வெளிப்படையாக தங்களது கவிதைகளில்குறிப்பிடுவதாக வணிக சஞ்சிகைகளால் குரலெடுக்கப் படுகின்றன. இது பெண் கவிஞர்களின் உரிமை மீதான ஒடுக்குமுறையல்லவா?

ஆம். கவிதையில், இலக்கியத்தில் பேசத் தேவையில்லாததாக எதுவும் இல்லை. அது எப்படிப் பேசப்படுகிறது என்பதைப் பொருத்தே இலக்கிய மதிப்புப் பெறுகிறது. இலக்கிய மதிப்பை வணிக சஞ்சிகைகள் பொருட் படுத்துவதில்லை. நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லும் கவிதைகளில் வணிக சஞ்சிகைகள் பார்ப்பது வெளிப்படைத்தன்மை அளிக்கும் அதிர்ச்சி யின் விளைவையே. உடல் உறுப்புகள் குறிப்பிடப்படுவதன் இலக்கியத் தேவையையோ அதன் மூலம் வெளிப்படுத்தப்படும் உணர்வையோ அல்ல. வணிக இதழ்கள் இதை எடுத்துக்காட்டுவதன் மூலம் உருவாகும் சலசலப்பை நோக்கியே குரல் எழுப்புகின்றன. அதன் வாயிலாகப் பண்பாட்டுக் காவலர்களின் புனித அங்கியைப் போர்த்திக்கொள்கின்றன.

உண்மையில் பெண் கவிஞர்கள் உடலை எழுதுவதன் வழியே அதைக் கடக்கவே முயல்கிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன். பெண்ணின் உடல் ஒரு பண்டமாகவும் துய்ப்புக்கு உரியதாகவும் சித்தரிக்கப்பட்டு வந்த ஆண்மைய மனநிலைக்கு எதிரான செயல் இது. உடலை ஒரு உடைமைப் பொருளாகக் கருதுவதற்கு எதிரானது இந்தச் செயல். ஆணுக்கு பெண் உடல் மீது ஏற்படும் தீராத ஈர்ப்பைப் பெண் கவிஞர்கள் கேள்விக்குட் படுத்துகிறார்கள். அதனால் விளையும் ஆண்மனப் பதற்றம்தான் அந்தக் கவிதைகளை வன்மத்துடன் எதிர்கொள்கிறது; ஒடுக்கப்பார்க்கிறது.

5.  ராஜ மார்த்தாண்டன் தமிழ்க் கவிதையுலகிற்கு முக்கிய பங்களித்துள்ளார். இவரைப் பற்றியும்,இவரது முக்கிய பங்களிப்புக்கள் பற்றியும் கூறுங்கள்.

முன்னரே  நண்பர் ராஜமார்த்தாண்டனைப் பற்றி இரு கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன். இலக்கியத்தின் வழியாக எனக்குக் கிடைத்த மதிப்புக்குரிய நட்புகளில் ஒன்று அவருடையது. இலக்கிய உலகில்  இரண்டு பேரை  'அண்ணாச்சி' என்று நான் சொல்வது உண்டு. ஒருவர் ராஜமார்த்தாண்டன். மற்றவர் விக்ரமாதித்யன் .இருவருமே என்னுடைய ஆரம்ப கால எழுத்து முயற்சிகளுக்கு ஊக்கமளித்தவர்கள். அந்த ஊக்கத்திலிருந்துதான் நட்பும் தொடர்ந்தது.

சமகாலக் கவிதைகளை மிக விரிவாக வாசித்தவர் ராஜ மார்த்தாண்டன். குறிப்பாக புதுக் கவிதை அல்லது நவீன கவிதையை விமர்சனபூர்வமாகவும் வரலாற்றின் அடிப்படையிலும் பார்த்தவர். கவிதையில் அழகியல் மீது அக்கறை கொண்டிருந்தவர். இந்த அக்கறை யிலிருந்தே அவர் விமர்சகராக உருவானார். குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையில் கவிதைகள் எழுதி யிருக்கிறார். எனினும் விமர்சகராக அவரது பங்களிப்பே அதிகம். கவிதை விமர்சனத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக் கொண்டதனாலேயே சொந்தக் கவிதைகளில் முனைப்புக் காட்டவில்லை என்று நினைக்கிறேன். கவிதையின் அழகியல் சார்ந்து ரசனை நிலையில் கவிதைகளைப் பார்த்தவர்; அந்தப் பார்வையை ஒட்டிக் கருத்துக்களை முன் வைத்தவர் ராஜ மார்த்தாண்டன். ரசனை விமர்சனம் என்று அதைச் சொல்லலாம். இது நல்ல கவிதை; இது அல்லாதது என்று ரசனை விமர்சனத்தைக் குறுக்கி விட முடியாது. வாழ்க்கை பற்றிய மதிப்பீடுகளிருந்துதான் ரசனை உருவாகிறது என்ற பார்வையில்தான் அவர் கவிதைகளை இனங்கண்டார் என்பது என் முடிவு. அந்த வகையில் ந.பிச்சமூர்த்தி, புதுமைப் பித்தன் முதல் அவர் மறையும் வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட எல்லாருடைய கவிதைகளையும் பற்றிக் கருத்துச் சொல்லியிருக்கிறார். இப்போது கவிதை விமர்சனமே இல்லாத நிலையில் அவரில்லை என்பது ஒரு வெற்றிடத்தை உணர்த்துகிறது. இது அவருடைய விமர்சனப் பங்களிப்பு. இலக்கிய வரலாற்றாளராக அவரது பங்களிப்பு முக்கியமானது. தமிழ்ப் புதுக் கவிதையின் வரலாற்றைச் சரியான ஆதாரங்களுடனும் துல்லியமான பார்வையுடனும் எழுதியிருக் கிறார். தொடர்ந்து புதியவர்களின் கவிதைகளை அறிமுகப்படுத்துபவராக இருந்தார்.இன்று அறியப்படும் பல பெண் கவிஞர்கள், ஈழத்துக் கவிஞர்கள் ஆகியோரது ஆரம்ப கால எழுத்துகளை அச்சியற்றத் தூண்டுதலாக இருந்தவர் அவரே.

‘தமிழ்ப் புதுக் கவிதை வரலாறு என்ற நூலும் அவர் தொகுத்த 'கொங்குதேர் வாழ்க்கை' - இரண்டாம் தொகுதியும் அவரதுமுக்கியமான பங்களிப்புகள் என்று கருதுகிறேன். கொங்கு தேர் வாழ்க்கை தொகுப்பில்  பிச்சமூர்த்தி முதல் தென்றல்வரை - ஈழக் கவிஞர்களையும் சேர்த்து - 93 கவிஞர்களின் சுமார் 900 கவிதைகளைத் தொகுத்திருக்கிறார். இப்படி ஒரு நூலைத் தொகுக்கும் பணி எனக்குக் கொடுக்கப்பட்டால் கவிதைகளின் எண்ணிக்கை இவ்வளவு இருக்காது. இதை அவருடைய தாராள மனப்பான்மைக்குச் சான்றாகவே சொல்கிறேன்.  கவிதைக்கான  குறைந்த பட்ச இயல்புகொண்ட ஆக்கங் களைக் கூட விட்டு விடாமல் தொகுத்திருக்கிறார். தன் அளவில் இது கவிதையே அல்ல என்று நம்பியவற்றைக் கறாராகச் சேர்க்காமலும் இருந்திருக்கிறார். கவிதை ஆர்வலன், விமர்சகன், வரலாற்றாளன் ஆகிய மூவரும் ஒன்றிணைந்த தொகுப்பாளராக இருந்தார் என்பதற்கு இந்தத் தொகை நூல் சாட்சியம்.

6. புலம் பெயர் படைப்புக்களை நீண்ட காலமாக அவதானித்து வருகின்றீர்கள். கூறப்படவேண்டியவை என்ன? கூறப்பட்டவை என்ன? இலங்கை, மலேசிய, சிங்கப்பூர் தமிழ் இலக்கிய படைப்புக்கள் பற்றிய உங்கள் அவதானிப்புக்கள் என்ன?

நீங்கள் இரண்டு கேள்விகளாகக் கேட்டவற்றுக்கு ஒரே பதிலைச் சொல்ல முயற்சிக்கிறேன். புலம் பெயர் படைப்புகள் என்று வாசித்தவற்றில் அதிகமும் கவிதைகளாகவே இருக்கும். குறிப்பாக ஈழத்திலிருந்து அல்லது இலங்கை யிலிருந்து பெயர்ந்தவர்களின் படைப்பு களையே அதிகம் வாசித்திருக்கிறேன். ஒரு மண்ணில் ஊன்றப்பட்டு முளைத்து வளர்ந்த தாவரம் இன்னொரு மண்ணில் பிடுங்கி நடப்பட்டு வேரூன்ற முயற்சிக்கும் வேதனைகளும் வலிகளுமே அவற்றில் பெரும்பாலும் காணக் கிடைத்திருக் கிறது. சில ஆக்கங்கள் இரு கலாச்சாரங்களுக்கு இடையில் மனிதர்கள் கொள்ளும் சிக்கல்களையும் பதற்றங்களையும் விநோதங்களையும் சொல்கின்றன. இவையெல்லாம் பொதுவான அவதானிப்புகள். மனித இருப்பையும் வாழ்வை யும் ஆகி வந்த தளங்களில் அல்லாமல் மிகப் பரந்த தளங்களில் அறிமுகப் படுத்துபவை புலம்பெயர் படைப்புகள் என்று காண விரும்புகிறேன். மாறுபட்ட கலாச்சாரப் பின்னணியில் மனித வாழ்க்கை என்பதாகவே இவற்றைப் பார்க்கிறேன். ஒரு பிரெஞ்சுக்காரனுக்கு ஜெர்மன் வாழ்க்கை அவ்வளவு ஒன்றும் அந்நியமானதாக இருக்காது என்று ஊகிக்கிறேன். மாறாக ஓர் இந்தியனுக்கு அல்லது ஈழத்தைச் சேர்ந்தவனுக்கு மேலைத் திசை வாழ்க்கை அளிக்கும் அனுபவங்கள் முற்றிலும் அந்நியமானவை. அவற்றை அந்தக் கீழ்த்திசை மனம் என்னவாக உள்வாங்கிக் கொள்கிறது என்பதுதான் கூறப்பட வேண்டியது என்று தோன்றுகிறது. இந்த வகையில் உடனடியாக நினைவுக்கு வரும் ஆக்கங்கள் பொ.கருணாகரமூர்த்தியின் 'பெர்லின் இரவுகள்', செல்வத்தின் 'எழுதித் தீராத பக்கங்கள்' ஆகியவை. கதைகளாகவும் நாவல் களாகவும் வாசித்தவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு அட்டவணை தயாரிப்பது எனது நோக்கமில்லை. எனினும் பலரது கதைகள் நாவல்கள் என்னை ஈர்த்திருக்கின்றன. அண்மைக் காலத்தில் புலம் பெயர்ந்தவர்கள் எழுதிய நாவல்கள் தமிழ் நாவலின் திசையையே திருப்பி இருக்கின்றன. உதாரணத்துக்கு ஒரு பெயராக கனவுச் சிறை நாவலைச் சொல்வேன். அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி ஆகியோரின் படைப்புகளுக்குத் தீவிர வாசகன். அண்மை ஆண்டுகளில் கிழக்கிலங்கியிலிருந்து வரும் படைப்புகளையும் தொடர்ந்து அவதானித்து வருக்கிறேன். இலக்கியத்தில் புதிய நுண்ணுணர்வையும் இதுவரை காணக் கிடைக்காத களங்களையும் அவை முன்வைக்கின்றன. இதை விரிவாகப் பேச இந்த நேர்காணலில் வாய்ப்பில்லை.
இலங்கையிலிருந்தும் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்தும் எழுதப்பட்ட படைப்புகளே வாசிப்பில் அதிகம் இடம் பெற்றவை. அவற்றுடன் ஒப்பிட்டால் மலேசிய சிங்கப்பூர் படைப்புகள் பற்றிக் கருத்துச் சொல்லும் அளவுக்கு நான் வாசிக்க வில்லை. வாசிக்கக் கிடைத்த மிகச் சிலவும் மேம்போக்கானவை; புதுமையில்லாதவை; ஆழமற்றவை; இலக்கியக் குணங்கள் இல்லாதவை.

7. நீண்ட காலமாக திருவனந்தபுரத்தில் வசித்து வருகின்றீர்கள். மலையாளத்தின் கவனிக்கப்பட வேண்டிய படைப்புக்கள் எவை? ஏன்?

ஒருவர் ஒரு நகரத்தில் நீண்ட காலமாக வசித்து வருவதன் மூலமே இலக்கிய உணர்வு கொண்டு விட முடியுமா என்ன? தலைமுறைகளாகத் திருவனந்தபுரத்தில் வசிக்கும் பலருக்கும் இந்த மொழியின் படைப்புகள் பற்றித் தெரிந்திருக்கவில்லை என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். இலக்கியக் கூட்டங்களுக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும் வரும் விவரமான வர்கள் பலருக்கும் மலையாளத்தில் கவனத்துக்குரிய படைப்புகள் பற்றித் தெரிந்திருக்கவில்லை. இது இங்குள்ள மலையாளிகளுக்கும் தமிழர்களுக்கும் பொதுவானது. நீல பத்மநாபனையும் ஆ.மாதவனையும் தெரியாத திருவனந்தபுர மலையாளிகளையும் சுகதகுமாரியையும் சக்கரியாவையும் தெரியாத திருவனந்தபுரத் தமிழர்களையும் பார்த்து வருகிறேன். தீவிர இலக்கியம் வெகுஜன அக்கறையைத் தாண்டியது;  தனிப்பட்ட அக்கறை சார்ந்தது என்பதை இவை சுட்டிக் காட்டுகின்றன. எல்லா மொழி இலக்க்கியங் களுக்கும் இது பொருந்தும் தானே?

நான் திருவனந்தபுரத்தில் வசிக்க நேர்ந்தது அலுவல் நிமித்தமாக. எனினும் இந்த இடப் பெயர்ச்சிக்கு இலக்கியமும்  காரணம். மலையாள இலக்கியத்தை அந்த மொழி புழங்கும் சூழலில் அறிவது; ஒரு தமிழ் எழுத்தாளனாக அந்த இலக்கியத்துடன் உரையாடல் மேற் கொள்ள முடியுமா என்று பார்ப்பது என்ற காரண நோக்குடனேயே இங்கே வசித்து வருகிறேன். அதை ஓரளவுக்கு நடை முறைப் படுத்தவும் முடிந்திருக்கிறது என்பதை என்னுடைய மொழிபெயர்ப்பு முயற்சிகள், கட்டுரைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கவனிக்கப்பட வேண்டிய படைப்புகள் என்று ஒரு பெரிய பட்டியலையே கொடுக்க முடியும். பட்டியலில் இடம்பெறக் கூடிய படைப்புகளில் கணிசமானவற்றைப் பலரும் தமிழாக்கம் செய்துமிருக்கிறார்கள். தகழி சிவசங்கர பிள்ளை, வைக்கம் முகம்மது பஷீர், எம்.டி. வாசுதேவன் நாயர், சக்கரியா ஆகியோரது முக்கியமான எல்லாப் படைப்புகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. புதிய எழுத்தாளர்களின் படைப்புகளும் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் தமிழ் வாசகன் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய படைப்புகளும் அவனுக்குத் தேவையில்லாத படைப்புகளும் அடங்கும். அது மொழிபெயர்ப் பாளர்களின் ரசனையையும் தேர்வையும் பொறுத்த விஷயம். நான் குறிப்பிட விரும்புவது மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்புகளின் எண்ணிக்கை யுடன் ஒப்பிட்டால் தமிழிலிருந்து மலையாளத்துக்குச் சென்றவற்றின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதையே. மலையாளத்தின் முக்கியமான படைப்புகள் பலவும் தமிழ் வாசகனுக்கு ஓரளவாவது அறிமுகமாகி இருக்கின்றன. அந்த அளவுக்கான தமிழ் ஆக்கங்கள் மலையாளத்துக்குச் செல்லவில்லை.

கடந்த இருபது ஆண்டுகளில் மலையாளத்தில் வெளிவந்த முக்கியப் படைப்புகள் என்று நான் சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். என்.எஸ்.மாதவனின் 'லத்தன் பத்தேரியிலே லுத்தினியகள்' ( டச்சுக்காரர்களின் கேரளக் குடியேற்றம் பற்றிய புனைவு ),டி.பி.ராஜீவனின் 'பாலேரி மாணிக்கம் : ஒரு பாதிரா கொலபாதகத்திண்டெ கத ( அரை நூற்றாண்டுக்கு முன்பு கேரளத்தில் நடந்த ஒரு கொலைபாதகத்தைத் துப்புத் துலக்கும் நாவல். ஒரு பெண்ணுக்கு இழைக்கப்படும் சமூக அநீதியைப் பேசுவது) , கே.டி.என். கோட்டூர் - எழுத்தும் ஜீவிதமும் ( மலபார் பகுதியில் நிகழ்ந்த சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிச் சொல்லும் விதத்தில் இந்திய வரலாற்றை மறு வாசிப்புச் செய்கிறது ), கே.ஆர்.மீராவின் 'ஆராச்சார்
( கழுவேற்றுபவர்களின் குடும்பத்தின் கடைசி வாரிசான பெண்ணின் மூலம் பல காலங்களின் புதிரைச் சொல்வது ), ஈ.சந்தோஷ்குமாரின் ' அந்தகாரனழி' ( இந்தியாவில் நிறை வேறிய நெருக்கடிநிலையின் பின்னணியில் அந்தக் காலத்தின் துன்பியலைச் சொல்வது ), பென்யாமினின் 'ஆடு ஜீவிதம்' ( வளைகுடா நாடுகளின் வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்டது;  டி.டி.ராமகிருஷ்ணனின் ' சுகந்தி என்ற ஆண்டாள் தெய்வநாயகி ( ஈழப் பிரச்சனையை மையமாகக் கொண்டது ), சுபாஷ் சந்திரனின் ' மனிஷனு ஒரு ஆமுகம்' (நவீன மனிதனின் ஆன்மீக வேட்கையைப் பற்றியது ), இந்துமேனோனின் 'கப்பலினெ குறிச்சு ஒரு விசித்ர புஸ்தகம்' ( மலையாளிகளின் புலம் பெயர்தலைப் பற்றியது ) - ஆகிய நாவல்களை அண்மைக் காலத்தில் வெளிவந்த முக்கியமான படைப்புகளாகக் குறிப்பிட விரும்புகிறேன்.  உண்ணி ஆர், வி.ஹரீஷ், தாமஸ் ஜோசப் ஆகியோரின் சிறுகதைகளையும் கவனிக்க வேண்டியவையாக நினைக்கிறேன். இவை  தனிப்பட்ட வாசிப்பிலிருந்து நான் சொல்லுபவை. இன்னொருவருக்கு வேறு பெயர்கள் சொல்ல முடியலாம். மேற்சொன்ன படைப்புகளில் சில தமிழாக்கம் பெற்றிருக்கின்றன.

அண்மைக் காலத்தில் மலையாளத்தில் சில தன் வரலாறுகளும் வரலாறுகளும் வெளியாகி உள்ளன. இதுவரை சமூகத்தின் கண்களில் படாத பலரது வாழ்க்கை வாசிப்புப் பொருளாக ஆகியிருக்கிறது. அவை கவனத்துக் குரியவை என்பது என் எண்ணம். திருடன் மணியன் பிள்ளை, பாலியல் தொழிலாளியான நளினி ஜமீலா, நக்சலைட் போராளியான வர்கீசைச் சுட்டுக் கொன்ற போலிஸ்காரர் ராமசந்திரன் நாயர், ஆதிவாசியான சி.கே.ஜானு, கிறித்துவ மடத்தை விட்டு வெளியேறிய சிஸ்டர் ஜெஸ்மி, நீலப்படங்களில் டூப் ஆக நடித்த சுரய்யா பானு ஆகியோரது சுய சரிதைகளும் சரிதைகளும் நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. இவை குறிப்பிடத் தகுந்தவை.

குறிப்பிட்ட நூல்கள் எல்லாம் என் பார்வையை ஒட்டியும் வாசிப்புச் சார்ந்தும் முன் வைக்கப்படுபவை. இவை ஏன் குறிப்பிடப்பட வேண்டும் என்ற உங்கள் கேள்விக்கு மிக எளிய பதில்தான் இருக்கிறது. நாமறியாத வாழ்க்கையை அறிந்து கொள்வதன் மூலம் நமது வாழ்க்கையை அறிந்து கொள்ள. இலக்கியத்தின் நோக்கம் அதுதானே, இல்லையா?

8. மலையாள கவிதை உலகம் எவ்வாறு உள்ளது. தமிழ்க் கவிதையுலகுடன் ஒப்பிடும் பொழுதுஎன்ன மாற்றங்கள் அங்கு நிகழ்ந்துள்ளன?

மிக ஆரோக்கியமாகவே உள்ளது. புதிய தலைமுறையின் முயற்சிகள் உற்சாகமளிப்பவை யாகவும் அவர்களின் கவிதையில் தென்படும் சுதந்திரம் பொறாமை தருவதாகவும் இருக்கின்றன. தமிழ்க் கவிதையுடன் ஒப்பிட்டு மாற்றங்களைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. இரண்டும் வெவ்வெறு மொழிப் புலங்களையும் பண்பாட்டுப் பின்னணி யையும் கொண்டவை என்பதால் ஒப்பீடு அவ்வளவு எளிதானது இல்லை. மலையாளக் கவிதையில் இன்னும் ரொமாண்டிசிசத்தின் பாதிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. மரபான செய்யுள் வடிவங்கள் புதியவர்களாலும் கைவிடப் படவில்லை. அதே சமயம் மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. கவிதையை அதன் இசையுடன் பாடுவது - சொல்லுதல் என்று மலையாளத்தில் - வழக்கம். அதனால் கவிதைகள் கருப் பொருளுக்குப் பொருந்தாத விதத்தில் நீண்டவையாகவும் அரட்டைத்தன்மையாகவும் தென்பட்டிருந்தன. புதிய கவிதைகள் கச்சிதமானவையாகவும் அநாவசிய அலங்காரமில்லாதவையாகவும் மாறியிருக்கின்றன என்பது என் அவதானிப்பு. எல்லா மொழிகளிலும் கவிதையில் பெண்கள், ஒடுக்கப்பட்டவர்கள், தலித்துகள் குரல்களுக்கு முக்கியத்துவம் கிடைத்திருப்பதுபோல இங்கும் நிகழ்ந்திருக்கிறது. சரியாகச் சொன்னால் மலையாளக் கவிதை இப்போதுதான் நவீன மலையாளி வாழ்க்கையை அப்பட்டமாகச் சித்தரிக்கிறது.

9. திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவிற்கு பல தடவைகள்சென்றுள்ளீர்கள். இத் திரைப்பட விழாவில் உங்களை கவர்ந்த முக்கிய படங்கள் என்ன? இத்திரைப்படவிழா மலையாள திரைப்பட உலகிற்கு என்ன முக்கிய பங்களிப்பை செய்துள்ளது?சென்னை திரைப்பட விழாவில் திருவனந்தபுரத்துடன் ஒப்பிடும் பொழுது என்ன மாற்றங்கள்செய்யப்படவேண்டும்?

2000 ஆவது ஆண்டு திருவனந்தபுரத்தில் குடியேறினேன். அதற்கு அடுத்த ஆண்டு முதல் - இடையில் இரண்டு ஆண்டுகள் தவிர - எல்லா ஆண்டும் திரைப் பட விழாவில் பார்வை யாளனாகப் பங்கேர்றிருக்கிறேன். ஒருமுறை விழாவில் சராசரியாகப் பதினைந்து படங்களையாவது பார்த்து விடுகிறேன். அப்படி இதுவரை 200 லிருந்து முந்நூறு படங்கள் பார்த்திருக்கலாம். அவற்றிலிருந்து என்னைக் கவர்ந்தவை என்று தேர்ந்தெடுத்துச் சொல்லுவது இயலாத காரியம். அந்தந்த ஆண்டு மனநிலையைப் பொறுத்தே படங்களைத் தேர்வு செய்கிறேன். சில சமயம் கிளாஸிக்குகளாகவும் சில சமயம் ஒரே இயக்குநரின் படங்களாகவும் ஒரே நாட்டில் தயாரிக்கப்பட்ட படங்களாகவும் மீள் பார்வைப் படங்களாகவும் பட்டியல் அமையும். அது அந்த நாளைய மனப்போக்கை ஒட்டியது. பல அரிய படங்களைப் பார்த்திருக்கிறேன் என்று பொதுவாகச் சொல்லலாம். சில படைப்பாளிகள் மீது ஏற்கனவே இருந்த காதல் வலுப்படவும் சில புதிய காதல்கள் உருவாகவும் இந்த விழா எனக்கு உதவியிருக்கிறது. அப்பாஸ் கியரோஸ்தமி, தாமினே மிலானி, அஸ்கர் ஃபராதி,கிம் கி டுக், ஜோதரோவ்ஸ்கி போன்றவர்களின் படங்களை நான் காணக் கிடைத்தது இந்தத் திரைப்பட விழாத் தேடலில்தான். வங்காள இயக்குநர் ரிதுபர்ண கோஷ் நண்பரானதும் இந்த விழாவில் பார்த்த படங்களின் மூலமே. என்னைக் கவர்ந்தவை என்று இதுவரை விழாவில் பார்த்தவற்றி லிருந்து  குறைந்தது ஐம்பது படங்களையாவது சொல்ல முடியும். என்னை சலனமற்று அமரச் செய்த படங்கள் எவை என்று இந்தக் கேள்வியினூடே யோசிக்கும்போது உடனடியாக நினைவுக்கு வருபவை இவை. 'டு தி லெஃட் ஆஃப் மை ஃபாதர் '  ( பிரேசில்/ லூயிஸ் ஃபெர்னாண்டோ கார்வால்ஹோ ),
பொயட்ரி (  கொரியா/ லீ சாங்க் டாங் ), ஃபத்மா ( டூனிசியா / காலித் கோர்பால் ), செபரேஷன் ( ஈரான்/ அஸ்கர் ஃபராதி ). இவற்றின் ஒவ்வொரு ஃப்ரேமும் மனதில் ஓடுகின்றன. இவை மாதிரிகள் மட்டுமே.

திருவனந்தபுரம் சர்வதேசத் திரைப்பட விழா கேரள அரசால் நடத்தப்படுகிறது. இன்று அதற்கு உலகளாவிய மதிப்பு உள்ளது. அந்த மதிப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் சில மலையாளப் படங்க¨ளையாவது ஒவ்வொரு ஆண்டும் மலையாள இயக்குநர்கள் எடுக்கிறார்கள். இது விழாவின் தூண்டுதல் என்றுதான் நினைக்கிறேன். வெறும் வணிக சினிமாக்களுக்கு இடையிலும் பார்வையாளனை மதிக்கும் சில படங்கள் உருவாகவும் விழா உதவுகிறது. இதுவே முக்கியமான பங்களிப்பு. கூடவே திருவனந்தபுரம் திரைப்பட விழாவின் பார்வையாளர்களில் சரிபாதி இளைஞர்கள். அவர்கள் மூலம் புதிய ஒரு திரைப்படக் கலாச்சாரம் உருவாகியிருக்கிறது.

சென்னை திரைப்பட விழாவில் இதுவரை பங்கேற்றதில்லை.எனவே ஒப்பிட வழியில்லை. என்னுடைய அபிமான இயக்குநர்களில் ஒருவர் ஹெல்மா சாண்டர்ஸ் ஃப்ராம்ஸ். பல ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் நடை பெற்ற அவரது படங்களின் திரையிடலின் போது சொன்னார் : '' ஒரு சினிமாவைப் பார்ப்பது என்பது தாயின் கர்ப்ப இருளின் பாதுகாப்பில் கனவு காண்பதுபோல''. அதை நான் திருவனந்தபுரம் சர்வதேச திரைப்பட விழாவில் எப்போதும் உணர்வேன். அந்த உணர்வை எந்த மாற்றங்கள் தரக் கூடுமோ அவைதாம் சென்னை விழாவுக்கும். அது என்ன, அதை எப்படி என்பது அமைப்பாளர்களின் பணி. பார்வையாளனுடையது அல்ல.

10.  அடூர் கோபாலகிருஷ்ணனின் நூல் ஒன்றை தமிழில் மொழி பெயர்த்துள்ளீர்கள். அடூருக்கும்உங்களுக்குமான நட்பைப் பற்றிக் கூறுங்கள். அவரது படங்களில் தமிழ் உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவை காட்சிகள் நடைபெறுவதுதாக காட்டப்படும் இடங்களின் வட்டார மொழியைவெளிப்படுத்துகின்றதா?

அடூர் கோபாலகிருஷ்ணன் திரைக்கலை தொடர்பாக எழுதிய ' சினிமா அனுபவம்' நூலைத் தமிழாக்கம் செய்திருக்கிறேன். இந்தியக் 'கலை சினிமா'வில் மிக முக்கியமான ஆளுமை அவர். விரிவான வாசிப்பு உடையவர். கூடவே திரைக் கலையின் அழகியல் குறித்து மிகவும் அக்கறை கொண்டவர்; அந்த அழகியலைத் தனது பார்வை, செயல்பாட்டு அனுபவங் களுடன் வெளிப்படுத்துபவர் என்ற மதிப்பு அவர் மீது எனக்கு உண்டு. அந்த மதிப்பின் அடையாளமாகவே அவரது நூலை மொழிபெயர்த்தேன். அவ்வளவே. நீங்கள் குறிப்பிடுவது போல அவருடன் எனக்கு நெருக்கமான நட்பு எதுவுமில்லை.

அடூர்  எழுதி இயக்கிய இரண்டு படங்களில் தமிழ்ப் பின்புலமும் உரையாடலும் இடம் பெற்றிருக்கின்றன. 'நிழல் குத்து', 'நாலு பெண்ணுங்கள்' ஆகிய படங்களில். இவற்றில் தமிழ் உரையாடல் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம் எனக்கு ஒப்புதலாக இல்லை. 'நிழல் குத்து' படத்தின் கதை கன்யாகுமரி மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் நடைபெறுவதாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது. ஆனால் படத்தில் இடம் பெறும் மொழி அந்த வட்டாரத்துக்கு அந்நியமானது. நான்கு பெண்கள் படம் தகழி சிவசங்கர பிள்ளையின் நான்கு சிறுகதைகளின் தொகுப்பு. அதில் 'சின்னு அம்மா' என்ற மூன்றாவது கதையில் பாத்திர உரையாடலாகத் தமிழ் வருகிறது. கேரளத்தை விட்டுத் தமிழகத்துக்கு ஓடி வந்த பாத்திரம் மீண்டும் ஊருக்குத் திரும்புகிறான். அவன் அதிகம் பேசுவது தமிழ் என்று காட்டப்படுகிறது. அதுபோன்ற தமிழ் எங்கும் பேசப்படுவதாகத் தோன்றவில்லை. என் தமிழ்ச் செவிக்கு அந்த மொழி ஏற்புடையதாக இல்லை. தனது திரைப்படத்தில் சிறு விவரங்களையும் கூட மிகுந்த அக்கறையுடன் எடுத்தாளும் இயக்குநர் என்பதால் இதை ஒப்புக்கொள்ளச் சங்கடமாக இருந்தது. சக்கரியாவின்  பாஸ்கர பட்டேலரும் என்டெ ஜீவிதமும்' என்ற நீள்கதையை அடிப்படையாக வைத்து அடூர் இயக்கிய படம் 'விதேயன்'. அதில் கன்னடப் பின்னணி . படத்தில் கர்நாடகத்தின் வடக்குப் பகுதியில் புழங்கும் கன்னடம் மிகக் கச்சிதமாகவும் பொருத்தமாகவும் கையாளப்பட்டிருக்கிறது. அடூரிடமே இதைச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். கன்னடத்தில் எழுத ஆள் கிடைத்தார்கள். ஆனால் உங்கள் தமிழ் நாட்டில்தான் இதற்கு ஆளே கிடைக்கவில்லை. நான் அணுகிய எழுத்தாளர்கள் கை விரித்து விட்டார்கள் ; என்றார். அந்த பதில் எனக்கு திருப்தியளிப்பதாக இல்லை. பொதுவாகவே மலையாளிகள் மத்தியில் தமிழ் என்றால் சின்ன ஏளனம் நிலவுகிறது. இதுவும் அதன் பகுதி என்று எனக்குத் தோன்றுகிறது. ஒருவேளை தவறாகவும் இருக்கலாம். ஆனால் சத்யஜித் ராய்க்குப் பிறகு வந்த பெரும் ஆளுமைகளில் அடூர் கோபாலகிருஷ்ணனும் ஒருவர் என்ற என் மதிப்பீட்டில் எந்த மாற்றமும் இல்லை.

11.  தமிழில் இப்பொழுது பல மொழிபெயர்ப்பு முயற்சிகள் வெளிவருகின்றன. ஒரு மொழியின் வளத்துக்கும், வளர்ச்சிக்கும் மொழிபெயர்ப்பு படைப்புக்கள் எவ்வாறு பங்களிக்கின்றன? தமிழுக்குஇது வரை மொழிபெயர்க்கப்படாத படைப்புக்கள் என்ன? எந்த, எந்த மொழி இலக்கியங்கள்இதுவரை கவனிக்கப்படாது உள்ளன? உதாரணத்துக்கு பிலிப்பைன்ஸ் நாட்டு படைப்புக்கள் எதுவும்தமிழுக்கு மொழிபெயர்க்கப்படவில்லை.

இலக்கிய மொழிபெயர்ப்பு ஒரு தனித்துறையாக இன்று கருதப்படுகிறது. இதற்கெல்லாம் முன்பே தமிழில் தொடர்ந்து மொழிபெயர்ப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக் கின்றன. மொழிபெயப்பால்தான் மதங்களும் தத்துவங்களும் தமிழ் மண்ணில் வேரூன்றி இருக்கின்றன. தமிழில் முதன்முதலில் அச்சிடப்பட்டதே மொழிபெயர்ப்பு நூல்தானேநாம் இன்று காணும் சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் மொழிபெயர்ப்புகள்தான்  காரணமாக இருந்திருகின்றன. தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளிகள் அனைவரும் மொழிபெயர்ப்பிலும் ஈடுபாடு காட்டியவர்கள். பாரதியும் புதுமைப்பித்தனும் மிகச் சிறந்த உதாரணங்கள்.

நமது மொழி இன்று எங்கே இருக்கிறது, நமது இலக்கியம் என்னவாக இருக்கிறது என்று கணிக்கவும் அவற்றை மேம்படுத்தவும் மொழிபெயர்ப்புகள் காரணமாக இருந்திருகின்றன. இது விரிவாகப் பேச வேண்டிய பொருள்.

எல்லா மொழியிலிருந்தும் மொழிபெயர்ப்புகள் வந்து குவிவது இல்லை. இது தமிழுக்கு மட்டுமல்ல, எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். தமிழின் மிகச் சிறந்த படைப்புகள் என்று நாம் கருதும் எத்தனை படைப்புகள் குறைந்த பட்சம் ஆங்கிலத்திலாவது வெளியாகி இருக்கின்றன? நமது காலமும் பண்பாட்டுச் சூழலும் இலக்கியத் தேவைகளும்தான் மொழியாக்கத்துக்கான வாய்ப்பை உருவாக்குகின்றன. நவீன காலத்தில் புத்தகங்களுக்கான சந்தை அதைத் தீர்மானிக்கிறது. உதாரணமாக, மார்க்கேஸின் ஒரு படைப்பை மொழி யாக்கம் செய்யும் உரிமையைப் பெறப் பெரும் தொகை செலுத்தப்பட வேண்டும். ஆயிரக்க ணக்கான பிரதிகள் அச்சிடப்பட வேண்டும். இன்றைய நிலையில் தமிழில் அது சாத்திய மில்லை.  மார்க்கேஸின் 'தனிமையின் நூறு ஆண்டுகள்' நாவலையே எடுத்துக் கொள்வோமே. நான் அறிந்து இந்த நாவலின் மலையாள மொழிபெயர்ப்பு இன்றைய தேதிக்கு சுமார் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன. 1984 இல் முதல் பதிப்பு வெளிவந்தது. 4000 பிரதிகள் அச்சிடப்பட்டன. இந்த 33 ஆண்டுகளில் தொடர்ந்து பதிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பதிப்பும் குறைந்தது 2000 பிரதிகளும் அதிகமாக 5000 பிரதிகளுமாக அச்சிடப்படுகிறது. சராசரியாகக் கணக்குப் போட்டால் ஒரு ஆண்டுக்கு 3000 பிரதிகள் விற்பனையாகின்றன. தமிழில் இந்த நாவலின் மொழிபெயர்ப்பு வெளிவந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை 5000 பிரதிகள் விற்பனையாகி இருக்கலாம். மலையாளத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் 12000 பிரதிகள் விற்பனை ஆகி இருக்க வேண்டும். காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் அளவுக்குத் தமிழில் பாதிப்பு ஏற்படுத்திய சமகால எழுத்தாளர் இல்லை. அவரது நூலுக்கே இதுதான் நிலை. ஆனால் இவற்றையெல்லாம்  மீறி கணிசமான படைப்புகள் தமிழாக்கம் பெற்று வருகின்றன. அது இலக்கிய வாசகனுக்கு ஆறுதல் அளிக்கும் செயல்தானே?

12.   நீங்கள் முன்பு வணிக சஞ்சிகைகளில் வேலை செய்துள்ளீர்கள். இப்பொழுது ஒரு முக்கிய சீரியசஞ்சிகையின் ஆசிரியர். இவ்விரண்டுக்குமான வேறுபாடுகள் என்ன?

ஒரு பறவை, உயிர்க் காட்சி சாலையில் இரும்புக் கூண்டுக்குள் பறப்பதற்கும் வெட்ட வெளியில் பறப்பதற்கும் என்ன வேறுபாடு உண்டோ அந்த வேறுபாடு தான் இரண்டிலும் பணிபுரிவதிலும் இருப்பது.

வணிக சஞ்சிகையின் நோக்கம் வரையறுக்கப்பட்டது. அதன் வாசக ரசனை முன்னரே தீர்மானிக்கப்பட்டது. வாசகன் இதைத்தான் விரும்புகிறான் என்று அவன் சார்பாக சஞ்சிகையே முடிவு செய்து அதற்கேற்ப சங்கதிகளை உற்பத்தி செய்து அவனுக்கு அளிப்பது. அவனைச் சிந்திக்க விடாமல் அவனுக்காகச் சிந்திப்பது போன்ற பாவனையை உருவாக்குவது. இதற்கு எதிரான நிலைப்பாடுகள் கொண்டது தீவிர இதழ். வணிக சஞ்சிகை வாசகன் சார்பில் உரையாடுவது. தீவிர சஞ்சிகை வாசகனை உரையாட வைப்பது.
இதழ் உருவாக்கத்துக்கான தொழில்நுட்பப் பணிகள் இரண்டுக்கும் ஒன்றுதான். வணிக சஞ்சிகை அனுபவம்தான் சீரிய சஞ்சிகையை அதற்கான அழகியலுடனும் செம்மையுடனும் உருவாக்க உதவி வருகிறது.

13.  வணிக சஞ்சிகைகளில் நீங்கள் வேலை பார்த்த பொழுது ஒரு சீரிய இலக்கிய வாதியான உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட விடயங்கள் என்ன?

வணிக இதழில் பணியாற்றியபோது அதை ஊதியம் பெற்றுத் தரும் ஒரு வேலையாக மட்டுமே பார்த்தேன். பணிபுரிந்தேன். அதன் மூலம் பெற்ற நன்னம்பிக்கை மூலமாகச் சில காரியங்களைச் செய்ய அனுமதிக்கப்பட்டேன். இலக்கியத் தரமான கதைகளை வெளியிட, வாரம் ஒரு கவிதையை வெளியிடதொடர்ந்து நூல் மதிப்புரை பகுதியை இடம் பெறச் செய்ய, மாற்றுச் சிந்தனை கொண்டவர்களை அறிமுகப்படுத்த சுதந்திரம் கிடைத்தது. விற்பனைக்கு ஊறு நேராத வகையில் சிலவற்றைச் செய்தால் நமக்கு விருப்பமான சீரிய காரியங்களைச் செய்யவும் வாய்ப்பு ஏற்படும் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. நான் என்ன செய்தேன், அவை எந்த அளவுக்குப் பலனளித்தது என்பதெல்லாம் நான் சொல்ல வேண்டியவையா? அவை மற்றொருவரால் எடுத்துச் சொல்லப்பட வேண்டியவை அல்லவா?

14.    சன் குழுமத்தின் மலையாளத் தொலைக் காட்சியான சூர்யாவின் செய்திப் பிரிவு பிரதான ஆசிரியராக இருந்துள்ளீர்கள். தி.மு.க அரசியல் அங்கமான சன் குழும நிறுவனத்தில் உங்களால்சுதந்திரமாக இயங்க முடிந்ததா? சர்ச்சையை ஏற்படுத்திய விடயங்கள் என்ன ?

சூர்யா டி.வியின் ஆரம்பத்திலிருந்தே பணியாற்றியிருக்கிறேன். ஒரு வகையில் 'குங்குமம்' இதழில் பணியாற்றியதன் மூலம் கிடைத்த நம்பகத் தன்மையும் நற்பெயரும் இந்த வாய்ப்பை எனக்குப் பெற்றுத் தந்தன. அதன் காரணமாகவே ஓரளவு சுதந்திரத்துடன் இயங்க முடிந்தது. நிர்வாகிகளுக்கு மலையாளம் தெரியாது; கேரளப் பண்பாட்டுப் பின்புலம் தெரியாது; கேரள அரசியல் போக்குகள் தெரியாது. இந்த மூன்றும் என்னைச் சுதந்திரமாகச் செயல்பட விட்டன. திமுக வுக்கு கேரளத்தில் ஆட்சியைப் பிடிக்கும் திட்டம் எதுவுமில்லை என்பதனாலும் சுதந்திரமாக இயங்க விட்டார்கள் . பின்னர் அரசியல் மாற்றத்தால் , சுதந்திரம் பறிபோகும் கட்டம் வந்தது. நான் வெளியேறினேன்.

தொலைக்காட்சியைப் பொறுத்தவரை சர்ச்சைகள்தான் செய்தி மதிப்புக் கொண்டவை. பொது வெளியில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய செய்தி ஒரு போலி ஆவணம் பற்றியது. கேரளத்தில் அப்போது  காங்கிரஸ் முன்னணி ஆட்சி. அமைச்சர்களில் ஒருவருக்கு ஹவாலா ஊழலில் பங்கிருப்பதாகச் செய்தி கிடைத்தது. அதற்கு ஆதாரமாக ஓர் ஆவணமும் கிடைத்தது. செய்தியை ஒளிபரப்பினோம். அந்த ஆவணம் போலியாகத் தயாரிக்கப்பட்டது என்று அரசு குற்றம் சாட்டியது. செய்தியை ஒளி பரப்பியதற்காக தலைமை செய்தி ஆசிரியர் என்ற முறையில் நானும் செய்தியைத் திரட்டிய என் நிருபரும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ஒருவரும் வேறு சிலரும் வழக்கைச் சந்திக்க நேர்ந்தது. ஏழு ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு நடந்தது. கடசியில் மீண்டும் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் முன்னணி அரசே வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. அந்த ஆவணம் அவர்கள் கட்சிக்குள்ளேயே தயாரிக்கப்பட்டது. ஆனால் அதைத் தயாரித்தவர்கள் யார் என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் முற்பட வில்லை. வாழ்க்கையில் விளங்காத புதிர் ஒன்று இருக்கட்டுமே என்று சும்மா இருந்து விட்டேன்.

15.  பட்டு என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளீர்கள். இது படமாகவும் சில்க் என்ற அதே பெயரில்வெளிவந்துள்ளது. படைப்புக்கும், படத்துக்குமான வேறுபாடு என்ன?

முதலில் நான் வாசித்தது அலெசான்ட்ரோ பாரிக்கோவின் நாவலைத்தான். மொழிபெயர்ப்புச் செய்து முடித்துச் சில மாதங்களுக்குப் பிறகே திரைப் படத்தைப் பார்த்தேன். நான் வாசித்ததும் மொழிபெயர்த்ததும் கியூதோ வால்ட்மானின் ஆங்கில மொழியாக்கத்தைத்தான். அந்த மொழியாக்கம் மூல ஆசிரியரான பாரிக்கோவுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்பதால் இரண்டாவது மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது. ஆன் கோல்ட்ஸ்டெயின் அதைச் செய்திருந்தார். இந்த இரண்டாவது மொழிபெயர்ப்பை ஆதாரமாக வைத்தே திரைப்படம் உருவாக்கப்பட்டது. முதல் மொழிபெயர்ப்பிலிருந்த ஒரு ரகசியக்  கதையாடல் , பூடகம் இரண்டாவது மொழியாக்கத்தில் இல்லை என்று தோன்றியது. திரைப்படமாகப் பார்த்த போதும் இதே எண்ணம் ஏற்பட்டது. நாவலில் வாசகனின் கற்பனைக்கான இடமும் சொல்லாமல் விடப்பட்ட பகுதிகளும் இருந்தன. படத்தில் அவை இல்லை. நாவல் என்னைக் கவர்ந்த அளவு படம் கவரவில்லை.

16.  காப்ரியேல் கார்சியா மார்க்கேஸினை 'தனிமையின் நூறு ஆண்டுக'ளுக்கு அப்பால் தமிழ்வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதாயின், அவரது முக்கிய அம்சங்கள் என்ன?

நமது காலத்தின் மகத்தான கதை சொல்லிகளில் ஒருவர் என்பதும் எந்த மொழியில் பெயர்க்கப்பட்டாலும் அந்த மொழியின் பகுதியாக மாறிவிடும் கலை ஆளுமை அவருடையது என்பதும் காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸை அறிமுகம் செய்வதற்குப் போதுமானவை.  அவரது தோல்வியடைந்த படைப்பு - மார்க்கேஸ் வாசகனாக அப்படி ஒரு படைப்பு இல்லை என்பது என் தரப்பு - கூட வாசிப்பில் புதிய உலகங்களையும் உணர்வுகளையும் அளிப்பது. நமது சிறு நடவடிக்கையிலும் கூட வரலாற்றின் சாயலும் காலத்தின் துடிப்பும் மனதின் ஆட்டங்களும் இருக்கின்றன என்பதைக் கலைத்தன்மையுடன்  வெளிப்படுத்துபவை அவரது படைப்புகள். இடத்தையும் காலத்தையும் மீறிய ஒரு பிரபஞ்ச உணர்வு கொண்டவை . எழுத்து என்பது நினைவுகளின் கலை. மனம் தீய நினைவுகளை வெளியேற்றி விட்டு நல்ல நினைவுகளை உருப்பெருக்கிக் காட்டுகிறது.கலையின் உண்மை இதுதான். இது மார்க்கேஸின் பிரசித்தமான வாசகங்களில் ஒன்று. இதற்காகவே மார்க்கேஸை அறிமுகம் கொண்டிருக்க வேண்டும் - சூரிய வெளிச்சத்தை அறிமுகம் கொண்டிருப்பதுபோல.

17.  நீங்கள் எழுதிய  முக்கிய நாவல் வெலிங்டன். பல தடவைகள் வாசித்துள்ளேன். தமிழில்வெளிவந்த முக்கிய நாவல்களில் ஒன்று. வெலிங்டனை எழுத முற்பட்டு சில தடவைகள் எழுத முடியாமல் போய் இடைவெளிவிட்டு எழுதியதாக பின்னுரையில் குறிப்பிட்டுள்ளீர்கள். வெலிங்டன்உங்களில் ஏற்படுத்திய பாதிப்புக்கள் என்ன? அதில் வரும் முக்கிய பாத்திரங்களில் என்னைகவர்ந்தது பாபு என்ற பாத்திரம். பாபு பாத்திரம் பற்றிக் கூறுங்கள்.

தமிழில் வெளிவந்த முக்கிய நாவல்களில்  ஒன்று 'வெல்லிங்டன்' என்ற உங்கள் பாராட்டுக்கு நன்றி.  பின்னுரையில் சொல்லியிருப்பதுபோலவே நான் வாழ்ந்து கடந்த ஒரு காலத்தை மீண்டும் வாழந்து பார்க்க விரும்பினேன்.  நான் கடந்து வந்த மனிதர்கள் சிலரை மீண்டும் சந்திக்க விரும்பினேன். நான் கால் தோய நடந்த மண்ணை மறுபடியும் தொட்டு உணர விரும்பினேன். இந்த விருப்பங்களின் ஆகத் தொகைதான் நாவல். எனக்கு ஏற்பட்ட நேர்மறையானதும் எதிர்மறையானதுமான பாதிப்புகளிலிருந்துதானே நாவலையே உருவாக்கியிருக்கிறேன். நாவலாக்கத்துக்குப் பின்னான பாதிப்புகள் அதிகம் எனக்குள் அதிகம் இல்லை. மனிதர்களை அவர்களுடைய நிறை குறைகளுக்கு அப்பாற்பட்டுப் பார்க்க விரும்பினேன். அந்த விருப்பம் நிறைவேறியிருக்கிறது என்று அறிந்ததே அதிகப்படியான பாதிப்பு. ஏனெனில் நாவலில் பாத்திரங்களாக இடம் பெற்றிருக்கும் சிலர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். வெகுசிலர் அதை வாசித்தும் இருக்கிறார்கள். பாபுவின் இளம் வயதுக் கனவுப் பெண்ணான கௌரியின் அசல் வடிவம் இன்னும் வாழ்கிறார். நானே கொடுத்து அவர் நாவலை வாசித்தார். 'என்னையே கண்ணாடியில பார்த்த மாதிரி இருக்கு' என்று சொன்னார். அது பெரிய பாதிப்பு இல்லையா?

பாபு ஒரு பாத்திரம். அதில் நானும் இருக்கிறேன். இதற்கு மேல் சொல்லத் தெரியவில்லை.

18.  வெலிங்டனின் பின்னர் ஏன் நீங்கள் வேறு நாவல்கள் எழுதவில்லை?

எழுதிக் கொண்டிருக்கிறேன்.

19.  சச்சிதானந்தனின் மார்க்சிய அழகியலை தமிழில் மொழிபெயர்த்துள்ளீர்கள். ஏன் அந்த நூலைமொழிபெயர்க்க வேண்டி ஏற்பட்டது.? சச்சிதானந்தன் மலையாள இலக்கியத்துக்கு ஆற்றிய முக்கியவிடயங்கள் என்ன?

சச்சிதானந்தனின் 'மார்க்சிய அழகியல் - ஒரு முன்னுரை' 1985 இல் வெளிவந்தது. அன்று எனக்கு மார்க்சியம் சார்ந்த இலக்கிய விமர்சனத்தில் ஈடுபாடு இருந்தது. எனக்கு மட்டுமல்ல அந்தக் காலத்தில் சீரிய இலக்கியத்துக்கு வந்த பலருக்கும். ஆனால் நிறுவனச் சார்புள்ள தரப்பி லிருந்து வெளியான முற்போக்கு விமர்சனங்கள் பெரும்பான்மையும் சூத்திரங்களுக்கு உட்பட்டவையாக இருந்தன. ரஷ்ய, சீன இலக்கிய விமர்சனங்களின் தொடர்ச்சியாகவே இருந்தன. மனித சிந்தனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய சித்தாந்தம் மார்க்சியம் என்ற எண்ணத்தில் இவற்றைப் பார்த்தால் மேலோட்டமானவை யாகவும் கலையின் நுண் உலகங்களைப் புரிந்து கொள்ள இயலாதவையாகவும் இருந்தன. உலகம் முழுவதும் அறிவுலகில் இந்த முரண் உணரப்பட்டிருந்தது. மார்க்சியத்தை புதிய விளக்கங்களுடனும் புதிய காலத்துக்கு ஏற்றவாறும் பாவிக்கும் நவ மார்க்சிய அறிஞர்கள் இதை விவாதித்து வந்தனர். ஹெர்பர்ட் மார்க்யூஸ், ஜியார்ஜ் லூக்காஸ், அந்தோனியோ கிராம்சி, டெர்ரி ஈகில்டன், ஃப்ரெடரிக் ஜேம்சன் ஆகியவர்களின் மாற்றுக் கருத்துக்கள் தமிழிலக்கியச் சூழலில் விவாதிக்கப் பட்டன. கலை இலக்கியப் படைப்புகளை கட்சி சாராத இடதுசாரிக் கண்ணோட்டத்தில் அணுகும் விமர்சன முறைக்கு ஏற்றதாக இருக்கும் என்ற எண்ணத்தின் விளைவாகவே சச்சிதானந்தனின் நூல் தமிழாக்கம் செய்யப்பட்டது. இன்றும் அந்த நூலுக்குப் பொருத்தப்பாடு இருப்பதாகவே நினைக்கிறேன்.

நவீன மலையாள இலக்கியத்தில் தவிர்க்கவே முடியாத இடம் சச்சிதானந்தனுடையது. இன்று எழுபது வயதை எட்டியிருக்கும் அவர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிஞராகவும் விமர்சகராகவும் மொழிபெயர்ப் பாளராகவும் இயங்கி வருகிறார். அவரளவுக்கு இவ்வளவு நீண்ட காலம் அயராது செயல்பட்டவர்கள் இந்திய இலக்கியத் திலேயே மிகக் குறைவு என்று நினைக்கிறேன். கவிஞர் என்ற நிலையில் மலையாளத்தில் நவீனப் போக்கை அறிமுகப்படுத்தியவர்களில் அவரும் முக்கியமானவர்.தொடர்ந்தும் அதிக அளவிலும் எழுதி வருபவர். இந்தியக் கவிஞர்களில் ஆயிரக் கணக்கான கவிதைகள் எழுதிய கவிஞர் அவரே. ( இந்த சாதனையை தமிழ்க் கவிஞர் மனுஷ்யபுத்திரன் பின்னுக்குத் தள்ளி விட்டார் ). மலையாளத்தில்  'ஆதுனிகத' என்று அழைக்கப்படும் நவீனத்துவ காலப் பகுதிக்குச் சற்று முன்னர் கவிதையாக்கத்தில் ஈடுபடத் தொடங்கிய சச்சிதானந்தன் இன்றளவும் கவிதையில் நிகழ்ந்து வரும் மாற்றங்களைப் பின் தொடர்பவராகவும் சில சந்தர்ப்பங்களில் மாற்றங்களைத் தொடங்கிவைப்பவராகவும் இருக்கிறார்.

மலையாளக் கவிதை பற்றியும் இந்தியக் கவிதை பற்றியும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருபவர். விமர்சனத்தின் தொடர்ச்சியாகப் புதிய கவிஞர்களை அறிமுகப்படுத்துவதும் அவர்களது கவிதைகளை ஆங்கிலம் வழியாகப் பிற இந்திய மொழிகளுக்குக் கொண்டு செல்பவரும் அவரே. மூத்த மலையாளக் கவிஞரான அய்யப்ப பணிக்கர் முதல் இன்றைய இளங் கவிஞரான ராஜேஷ் என். ஆர்.,வரை பலரையும் சிறிதும் பெரிதுமான கட்டுரைகள், முன்னுரைகள் வாயிலாக இலக்கிய உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்தவர்; வருபவர்.

மலையாளியின் கவிதை ரசனையில் புதிய உணர்வுநிலையை உருவாக்கியதில் சச்சி தானந்தனுக்குக் கணிசமான பங்கு உண்டு. அவர் வழியாகவே உலகக் கவிஞர்கள் பலரும் இந்தியக் கவிஞர்கள் பலரும் கேரளத்துக்குள் வந்தார்கள். அவரது சொந்தக் கவிதைகளின் எண்ணிக்கையை விட அவரது மொழிபெயர்ப்புக் கவிதைகளின் எண்ணிக்கை இரு மடங்கு.

இன்று இருக்கும் இந்தியக் கவிஞர்களில் தாகூருக்கு அடுத்து அதிகம் பிற அந்நிய மொழிகளில் பெயர்க்கப்பட்டவை சச்சிதானந்தன் கவிதைகளாக இருக்கும் என்பது என் யூகம். சில ஆண்டுகளுக்கு முன்பு நோபெல் இலக்கியப்பரிசுக்கு அவர் பெயர் பரிந்துரைக்கப் பட்டது. அப்படிப் பரிந்துரைக்கப்படும் அளவிலான உலக அறிமுகம் பெற்றவர்.

20.  உங்களது கனடாப் பயணத்தின் போது, தமிழர்கள் அல்லாது கவர்ந்த விடயங்கள் என்ன?கவலை தரும் விடயங்கள் என்ன?

நான் இந்திய எல்லையை முதன்முதலாகத் தாண்டியது இந்தக் கனடாப் பயணத்துக்காகத் தான். எனவே நான் கண்டவை எல்லாம் புதுமையாகவே இருந்தன. பத்து நாட்கள் மட்டுமே கனடாவில் இருந்திருக்கிறேன். இந்தக் குறுகிய கால வாசத்தை வைத்து அதிகம் சொல்லி விட முடியாது. மிக நவீன நாடாக உருவாகி வரும்போதும் இயற்கையைப் பாதுகாக்கும் அக்கறை முதலில் கவர்ந்தது. கனடாவின் இன்றைய குடிமக்கள் யாரும் அந்த நாட்டின் பூர்வீகர் அல்லர். குடியேறியவர்கள்தாம். பல்வேறு திசைகளிலிருந்து வந்தவர்கள், தாங்கள் வந்தடைந்த நாட்டை நேசிக்கும் விதம் வியப்பளித்தது. ஒரு புதிய கனடிய தேசிய உணர்வை உருவாக்கியிருக்கிறார்கள்; அதைப் பேண விரும்புகிறார்கள் என்பது கவனத்தில் பதிந்தது. அவர்களது குடியுரிமை உணர்வும் சக மனிதனிடம் காட்டும் மரியாதையும் கவந்தன.

நாங்கள் தங்கியிருந்த விடுதி அறைக்கு வெளியே நெடுஞ்சாலைகள் பின்னிப் பிணைந்து போகின்றன. அறை சன்னல் வழியாகப் பார்த்ததும் தென்படும் சாலையில் சிக்னல் அருகே ஒரு மனிதரைத் தினமும் பார்க்க முடிந்தது. சிவப்பு விளக்கு விழுந்ததும் வாகனங்கள் நிற்கும் இடத்திலிருந்து தொடங்கி காத்திருக்கும் ஒவ்வொரு கார் அருகிலும் செல்வார். வாகனங்கள் மீண்டும் புறப்பட்டதும் மறுபடியும் சிக்னல் விளக்குக் கம்பத்தருகே வருவார். மீண்டும் அடுத்த கார் வரிசைக்காகக் காத்திருப்பார். ஒவ்வொரு காராகக் கடந்து செல்வார். கார்கள் நகர்ந்ததும் பழையபடி தொடக்கப் புள்ளிக்கே போவார். காலை ஏழு முதல் ஒன்பது வரை, பதினொன்றுமுதல் இரண்டுவரை, மாலை ஐந்து முதல் எட்டு அல்லது ஒன்பது வரை என்று அவருடைய அன்றாட அட்டவணை  இரண்டு நாட்களிலேயே எனக்கு மனப்பாடகி இருந்தது. தொடர்ந்து கவனித்ததில் அவர் யாசகம் பெறுகிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன். அதை நேரில் சென்று பார்த்தும் உறுதிப்படுத்திக் கொண்டேன்.  நான்காவதோ ஐந்தாவதோ நாள் பிற்பகலில் சாலையை ஒட்டிய பெட்ரோல் விற்பனை நிலையத்துக்குள் ளிருந்த சீன உணவகத்தில் அவரைப் பார்த்தேன். உணவு வாங்கிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் கௌரவமான யாசகச் சிரிப்பொன்றையும் உதிர்த்தார். அந்த சகஜ பாவத்தில் அவருடன் பேச்சுக் கொடுத்தேன். ஆம். யாசகம் அவரது தொழில். ஒரு நாளைக்கு ஐந்து முதல் எட்டு டாலர் வரை கிடைக்கும். மெக்சிகோவிலிருந்து வந்தவர். வயது அறுபத்தைந்து. ஆதரவுக்கு யாரும் கிடையாது. சற்றுத் தள்ளியிருக்கும் சர்ச்சில் இரவுப் படுக்கை. பேச்சில் கிடைத்த இந்த விவரங்களால் இரங்கி நானும் சிறு தொகையைக் கொடுத்தேன். வந்தனம் சொல்லி வாங்கிக் கொண்டவர் சொன்னார் : 'பொதுவாக நான் கறுப்பர்களிடமிருந்து யாசகம் பெறுவதில்லை. இந்த உணவுக்குச் செலவிட்டதைத் தவிர இன்று வேறு எதுவும் கிடைக்கவில்லை. எனவே உங்களுக்கு அந்த நல் வாய்ப்பு'. அவருடைய வாசகம் கவலை தந்தது. என்னை வெள்ளையர் பட்டியலில் சேர்த்தது வருத்தத்தைக் கொடுத்தது.

21. நான் மிக விரும்பும் கவிஞர்களுள் பாப்லோ நெருடாவும் முக்கியமானவர். சில நாட்டுத்தொழிலாளர்கள் சார்பாக பல கவிதைகளை எழுதியுள்ளார். இவர் இலங்கையில் சிலே தூதரகாலயத்தில் வேலை பார்த்த பொழுது, அவரிடம் வேலை பார்த்த பெண்ணை, அப்பெண்ணின் விருப்பதிற்கு மாறாக உறவு கொண்டுள்ளார். இது அவரது சுயசரிதையில் உள்ளது.இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

இந்த நேர்காணலுக்கான கேள்விகளில் நீங்கள் முதலாவதாக வைத்திருந்ததை  நான் கடைசிக் கேள்வியாக எடுத்துக் கொண்டிருக்கிறேன். மன்னிக்கவும்.

பாப்லோ நெரூதா நூற்றாண்டில் - 2004 இல் - அவரது படைப்புகள் மீண்டும் பெரும் கவனம் பெற்றன.அவரது வாழ்க்கை வரலாறும் பங்களிப்பும் மீண்டும் பேசு பொருளாயின.  அந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் குறிப்பிடும் சம்பவம் நினைவு கூரப்பட்டு விவாதத்துக்கு உள்ளானது. தமிழிலும் இது பற்றி எழுதப்பட்டது. து.ரவிகுமார் எழுதினார் என்று நினைவு. இன்னும் சிலரும் எழுதியிருக்கக் கூடும்.

இதை நெரூதாவின் வீழ்ச்சியாகப் பார்க்க எனக்கு விருப்பமில்லை. ஒரு மனிதனின் தந்திரம் என்று நீங்கள் சொன்னால் அதை மறுக்கவும் தயாரில்லை. எல்லா மனிதர்களைப் போலவும் ஒரு மனிதனாக அவரிடமும் அழுக்கும் கபடமும் இருந்தன என்பது வெளிப் படை. அவரை நானோ நீங்களோ விரும்பக் காரணம் அவரது தனி ஒழுக்கம் சார்ந்தல்ல; அவருடைய படைப்புகள் சார்ந்து தானேமகத்தான கவிஞர் என்பதனால் அவரது குற்றம் புனிதப்பட்டு விடுவதுமில்லை. ஒரு கவிஞனாகவும் மனிதராகவும் அவர் வெளிப்படும் இடங்களில் இதுவும் ஒன்று. கவிதையில் எல்லாவற்றுக்கும் இடமுண்டு என்று நம்பிய நெரூதா தன்னுடைய குற்றத்தையும் தவிர்க்கவில்லை. தனது கனவான் பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்வது என்றால் இந்தச் சம்பவத்தை எழுதாமலேயே இருந்திருக்கலாம். ஆனால் அவரது கவி மனம் அதை ஏற்கவில்லை என்பதையே பார்க்கிறேன். மேலும் இந்தச் சம்பவத்தை ஒரு வெற்றியாக அவர் வெளிப்படுத்தியிருந்தால் அதை அவரது ஆணாதிக்கத் திமிர் என்று சொல்லலாம். மாறாக குற்ற ஒப்புதலாகவே சொல்லுகிறார். அவரது வேட்கை அந்தப் பெண்ணிடம் செல்லுபடி ஆகாததையே சொல்லுகிறார். 'கலவி வேளையில் அவள் கண்களை விரியத் திறந்தே வைத்திருந்தாள்; எந்த எதிர்வினையும் இல்லாமல் இருந்தாள்' என்று எழுதியிருக்கிறார். ஒரு சிலையும் மனிதனும் கூடுவது போலிருந்தது' என்று எழுதியிருக்கிறார். ஒரு பெண் தன்னுடைய உடலைத் தாண்டி ஆணை தண்டிக்கும் செயலாகவே தோன்றுகிறது. அதை நெரூதாவும் ஒப்புதல் செய்கிறார். 'என்னை அவள் அவமதித்தது சரி' என்கிறார். ஒரு பெண்ணின் வஞ்சினமாகவும் அதில் ஆண் முறியடிக்கப் பட்டதாகவுமே நான் இதைப் பார்த்தேன். கோட்பாட்டுச் சரி, அரசியல் சரி என்று பார்த்துத் தீர்ப்பெழுத எனக்கு தர்க்க ஞானமில்லை.

@