பக்கங்கள்

ஞாயிறு, 7 ஜனவரி, 2018

ஜெயகாந்தன் கதைகள்



ஜெயகாந்தன்எனக்குப் பெயராகவோ ஆளுமையாகவோ மட்டுமல்லாமல்  நினைவேக்கத்தைக் கிளர்த்தும் ஞாபகப் பசுமையாகவே இருக்கிறார். வாசகனாக எனக்கு அறிமுகமான  சமகால இலக்கியம் அவரது எழுத்துகள்தாம் என்பதும் நான் சந்தித்த முதல் எழுத்தாளர் அவரே என்பதும் அதற்குக் காரணங்கள். வெகுசன எழுத்திலிருந்து விலகி  இலக்கிய வாசிப்புக்கு வந்து சேர முகாந்திரமாக இருந்தவரும் அவர்தாம். நான் மட்டுமல்லஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபது எழுபதுகளிலும் எண்பதுகளின் பாதிவரையும் வாசிப்பில் ஈடுபட்டிருந்த பெரும்பான்மையினர் ஜெயகாந்தன் வழியாகவே இலக்கியத்தைக் கண்டடைந்தார்கள்.


வெறும் கேளிக்கை எழுத்துக்களிலிருந்து மாறுபட்ட ஆக்கங்களை விரும்பியவர்கள், இலட்சியவாத ஜிகினாக் கனவுகளுக்கு எதிராக எதார்த்தத்தைச் சித்தரிக்கும் கதைகளை நாடியவர்கள், இலக்கியத்தில் முற்போக்குப் பார்வையைக் கண்டவர்கள்கலாச்சாரத் தளைகளிலிருந்து விடுபடப் போராடிய கலகக்காரர்கள் போன்ற எல்லாத் தரப்பினருக்கும் உவப்பான எழுத்தாளராக ஜெயகாந்தன் இருந்தார். ஆரம்ப காலத்தில் சிற்றிதழ்களில் எழுதியவர்.  பின்னர், அன்றைய வாசிப்புக்கு எளிதாகவும் பரவலாகவும் கிடைப்பதாக இருந்த  வணிக இதழ்களிலேயே  அதிகமும் எழுதினார். எனினும் அவரது எழுத்துக்கள் முன் குறிப்பிட்ட அனைத்துப் பிரிவினரையும் ஈர்த்தன. உடன்பாடாகவும் எதிர்மறையாகவும் அவை பொருட்படுத்தப்பட்டன. விமர்சிக்கப்பட்டன. வியந்து பாராட்டப் பட்டன. பின் தொடரப்பட்டன. இந்தக் குவிமையம்தான் ஜெயகாந்தன்  தமிழ் இலக்கியத்தில் வகிக்கும் இடம் என்று மதிப்பிட விரும்புகிறேன்.  ஜெயகாந்தன் எழுத்துக்கள் மூலம் அறிமுகமான  இலக்கிய உணர்வுதான் அந்த எழுத்துக்களின் முன்னோடி எழுத்துக்களுக்கும் அவற்றுக்குப் பின் வந்த எழுத்துக்களுக்கும் என்னைக் கொண்டு சென்றது. அந்தக் காலப்பகுதியில் தீவிர  இலக்கியத்தின்மீது நாட்டம் கொண்டிருந்த  இளம் வாசகர்களுக்கு எது இலக்கியம், எது இலக்கியமல்ல என்று வகைப்படுத்திக் கொள்ள அந்த எழுத்துக்கள் உதவின. இதைப்  பொது விதியாகக் கொள்ள  இயலாது. எனினும் வழிகாட்டல் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.  இன்று சீரிய இலக்கியத்தில் நாட்டம் கொள்ளும் இளம் வாசகர் ஜெயகாந்தனை வாசிக்காமலும் அறியாமலும் நவீன இலக்கியத்தை விளங்கிக் கொள்ள முடியும். என்னைப் பொறுத்த மட்டில், ஜெயகாந்தனை வாசிக்கும் வாய்ப்பு தகையாமல் இருந்தால் இன்று  இலக்கிய முன்னோர்கள் என்று நான் போற்றும் பலரைத் தாமதமாக அறிந்திருக்கவோ அல்லது வாசிக்காமல் விட்டிருக்கவோகூடும் என்பது உறுதி. இந்தத் திசை திருப்பத்துக்காக அவருக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். அந்தரங்கமான கடன்தீர்ப்பாகவே  இந்நூலுக்கான  கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்த  பணியைக் கருதுகிறேன். 


காலச்சுவடு பதிப்பகம்  தமிழ் கிளாசிக் சிறுகதைகள் வரிசையில் வெளியிடும்  ஜெயகாந்தன் சிறுகதைகள் தொகுப்பு
’ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது’ நூலுக்கு எழுதிய முன்னுரையின் பகுதி. 

முகப்புப் படம் : செழியன் 
அட்டை வடிவமைப்பு : கலா முருகன்



சனி, 6 ஜனவரி, 2018

ஜஹனாரா



ந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும்  தீராத ஆர்வத்தைத் தூண்டக் கூடிய அத்தியாயம் வரலாற்றில் இருக்குமானால் அது இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சிக் காலத்தை சேர்ந்தது என்ற கருத்து நிலவுகிறது. அந்தக் கருத்தை நாவலை எழுதும் வேளையில் சரியென்று உணர்ந்தேன். கருத்தை உணரும் வாய்ப்பை அளித்தது ஜஹனாரா என்ற பெயர். அந்தப் பெயரின் அறிமுகமும் அதையொட்டிய தேடலும் எதிர்பாராமல் நேர்ந்தவை.

1993  இறுதியிலும் 94  தொடக்கத்திலுமாகச் சில நாட்கள் தில்லியில் தங்கியிருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சாகித்திய அக்காதெமி நடத்திய மொழிபெயர்ப்புப் பட்டறையில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன். பணி முடிந்த மாலை நேரங்களில் நகரத்தின் முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்ப்பது வழக்கமானது. சில நாட்கள் தனியாகவும். சில நாட்கள் இந்தி தெரிந்த இலக்கிய நண்பர்களுடனும். ஒருநாள் மாலை வங்க மொழிக் கவிஞரும் நண்பருமான அஞ்சென் சென்னுடன் தில்லி - மதுரா நெடுஞ் சாலையிலுள்ள நிஜாமுத்தீன் தர்கா வளாகத்தைப் பார்க்கச்  சென்றிருந்தேன். கல்லறைகளின் பெரும் பரப்பான அந்த இடத்தைச் சுற்றி வந்தோம். முகலாய மன்னர்களும் கவிஞர்களும் சூஃபி ஞானிகளுமான பலரின் சமாதிகளைப் பார்த்தேன். சில சமாதிகளின் அருகில் கூட்டம் இருந்தது. அஞ்சலிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்தன. பிரார்த்தனை செய்பவர் களும்  சுவரில் முகம்புதைத்து கண்ணீர் மல்க ஆத்மாக்களிடம் முறையிடு பவர்களும் இருந்தார்கள். ஆட்கள் சீந்தாத இரண்டு சமாதிகள் கவனத்தில் பதிந்தன. கவிஞரான அமீர்குஸ்ரூவின் கபரும் ஜஹனாரா பேகத்தின் கபரும். கவிஞர் என்று தெரிந்து வைத்திருந்ததனாலும் அவர் எழுதிய கஜல்கள் சிலவற்றை உயிர் உருகக் கேட்டிருந்ததனாலும்  குஸ்ரூவின் அடக்க இடம் முக்கியமானதாகத் தோன்றியது. அதற்குச் சிறிது தொலைவில் சலவைக் கல் ஸ்தூபியும் திறந்த சமாதியுமாக இருந்த இடம் அதன் தோற்றத்தின் காரணமாக ஆர்வத்தைத் தூண்டியது. பொதுவாக இஸ்லாமியர்களின் சமாதிகள் மூடிவைக்கப்பட்டவை. நான் பார்த்த சமாதி திறந்து வைத்த பேழைபோலத் தென்பட்டது. அந்த வித்தியாசம் விவரத்தை அறியத் தூண்டியது.  தலைப்பகுதியிலிருந்த ஸ்தூபியில் எழுதப்பட்டிருந்த  வாசகங்கள் புதிராக வசீகரித்தன.  அஞ்சென் சென்னின் உதவியுடன் விசாரித்தபோதுதான் அது ஜஹனாராவின் சமாதி என்று அறிந்து கொள்ள முடிந்தது. அவளைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டேன். முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த ஒருத்தி அந்த வெள்ளிக் கிழமை மாலை என் மனதுக்குள் புகுந்தாள். நீங்காத நிழலாக நினைவில் உறைந்தாள்.

தொடர்ந்து வாசிப்பவன் நான். வாசிப்பில் ஒவ்வொரு பருவத்திலும் ஏதோ ஒரு வகை முதன்மையானதாக இருக்கும். அவ்வாறான வாசிப்பில் சூஃபி இலக்கியமும் இசையும் ஒரு தருணத்தில் முக்கியத்துவம் பெற்றன. அப்போது  ஜஹனாராவை மீண்டும் நினைவு கூர்ந்தேன். முன்பு அவளைப் பற்றிய விவரங்களைச் சொன்ன நிஜாமுத்தீன் தர்கா அறக் கட்டளையைச் சேர்ந்த இமாம்  சூஃபி மரபைப் பின்பற்றியவர்கள் என்று குறிப்பிட்ட பெயர்களில் ஜஹனாராவும் இருந்தது நினைவுக்கு வந்தது. வானத்தைப் பார்க்கும் விதமாகத் தனது சமாதி திறந்திருக்க வேண்டும். அதற்கு ஆடம்பரம் கூடாது. அதன் மேற்பரப்பில் புற்கள் படர்ந்திருப்பதே போதுமானது என்ற அவள் விருப்பமே சலவைக்கல் ஸ்தூபியில் பொறிக்கப்பட்டிருக்கிறது.  அது ஒரு சூஃபி மனப்பாங்கு  என்றெல்லாம் அவர் விளக்கினார். 

இந்தியாவில் பிரதானமான சூஃபி மரபை வலுப்படுத்திய  காஜா மொய்னுத்தீன் சிஷ்டியின் மாணவி என்று  ஸ்தூபி வாசகத்தில் ஜஹனாரா தன்னை அடையாளம் காட்டுகிறாள். அரச போகங்களிலிருந்தும் அதிகார யுத்தங்களிலிருந்தும் விடுபட்டு அந்த மார்க்கத்தில்  சேர விரும்பினாள். ஆனால்  சிஷ்டிமரபு  அன்று பெண்களுக்கு விலக்குக் கற்பித்திருந்தது.  எனவே ஜஹனாராவின் விருப்பம்  நிறைவேறவில்லை. இந்தத் தகவல்களையும் இமாம் தெரிவித்தார். அவை மீண்டும் நினைவுக்கு வந்தபோது ஜஹனாரா எனக்குள் உயிர்த்தெழுந்தாள். அவளைப் பற்றி ஒரு கவிதை எழுதுவது மட்டுமே அப்போது என் ஆசை. அதற்காக முற்பட்டபோது புரிந்தது:  ஜஹனாரா ஒற்றைக் கவிதைக்குள் அடங்குபவள் அல்ல. 



                             வெளிவர இருக்கும் நாவல் ‘பெருவலி’ க்கு எழுதிய பின்னுரையின் சில பகுதிகள் இவை.

ஓவியம் : ரோஹிணி மணி 


புதன், 3 ஜனவரி, 2018

பேக்கல் கோட்டை




கோட்டை
வரலாற்றிலிருந்து விண்டு எடுத்து
அந்தரத்தில் ஊன்றிய ஞாபகம்
அங்கே
காலம் மூன்றல்ல; நான்கு
கடக்க முடியாமல் உறைந்தது
நான்காம் காலம்.

கோட்டை வாசலைக் கடந்து
நீங்கள் நுழைவது
இன்றிலிருந்து நேற்றைக்கு அல்ல;
நாளையை மறந்து வைத்த
நேற்றைய நேற்றைக்கு.

புலனாகாக் கடிகைக்குள்
காலம் சொட்டி விழுவது
டிக் டிக் என்றல்ல;
திக் திக் என்றோ
தொம் தொம் என்றோ தான்.

இரண்டு ஒலிச் சொட்டுகளுக்கு இடையில்
தேருளைப் புரவிகளின் கனைப்போ
வாரணத் தொகுதியின் பிளிறலோ
சவுக்குப் பிய்த்த சதையின் அலறலோ
கபந்த நர்த்தன ஜதியோ
அரியணை கவிழும் பேரொலியோ
முறிக்கப்பட்ட காதலின் கேவலோ
எதிரொலிப்பதை நீங்கள் கேட்கக் கூடும்.

கோட்டைக்குள் புகுந்ததும்
உங்களுக்கு நீங்களே அன்னியராகிறீர்கள்
அதற்கு முன்பிருந்த உங்களை
பிறவிப் பிழையாக நீங்களே உணர்கிறீர்கள்
உங்கள் உதிரத்தில்
கோட்டை அதிபதியின் அணு உண்டா என்று
சுயபரிசோதனை செய்கிறீர்கள்

சக சுற்றுலாப் பயணிகளை
அத்துமீறி வந்தவர்களாகக் கண்காணிக்கிறீர்கள்
அவர்கள் கேள்விகளுக்கு
ஆணவக் குரலில் பதில் சொல்கிறீர்கள்
கோட்டையின் இண்டு இடுக்குகளில் உலாவி
பூர்வ ஜென்மப் பூரிப்புடன் பெருமூச்சு விடுகிறீர்கள்

'யாரங்கே?' என்று கைகொட்டியழைத்து
சேவகன் சிவிகை தேர் வரக் காத்திருக்கிறீர்கள்
உங்கள் ஆணைக்குப் பணிந்து
ஆகாயத்திலிருந்து இறங்கி வருகிறது இருளின் திரை
கடிகைக்குள் தொம் தொம் என்று சொட்டி விடுகிறது காலம்

கோட்டை வாசலைத் தாண்டி வெளியேறும்போது

போன நீங்கள்தானா திரும்பும் நீங்கள்?