பக்கங்கள்

புதன், 26 செப்டம்பர், 2018

(மக்தலேனா) மரியாளின் சுவிசேஷம்





என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவின் இடத்திற்கு ஏறிப் போகவில்லை.
                                                                              யோவான் 20:17.

ன் என்னை விலக்குகிறீர், ரபூனி?
ஏன் உம்மைத் தொடக் கூடாது என்கிறீர்?
உம் சீடர்களைப் பார்க்கிலும்
வார்த்தையைத் தொடரும் அர்த்தம்போல
உம்மைப் பின்தொடர்ந்தவள் நானல்லவா?

என் பிரியரே,
மரியாள் நான் ஒருத்திமட்டுமே அல்லள்.
உமது வெளிச்சத்தைப் பகிரங்கமாக்கிய நிழலான
ஒவ்வொரு பெண்ணும் மரியாள்தானே?
மகதலேன் எனது மட்டுமான ஊர் அல்ல
உமது பாத்த்தின் வியர்வையில் ஒட்டிய
ஒவ்வொரு ஊரும் மக்தலேன்தானே?

போதகரே,
உம் சீடரைப் பார்க்கிலும்
எங்களிடமே நீர் பிரியங் கொண்டீர்
உம் சீடரைப் பார்க்கிலும்
நாங்களே உம்மிடம் நேசம் கொண்டிருந்தோம்

எனினும்
என்னை ஏன் தள்ளிவைக்கிறீர், ரபூனி?
உம்மை ஏன் பற்றக் கூடாது என்கிறீர்?

திராட்சைரசம் மணக்கும்
உமது அதரங்களால்
நீர் முத்தமிட்டது என்னைத்தானே?
அப்போது
உம் சீடரின் கள்ள முத்தத்தில் நாறிய
புளித்த காடியை உணர்ந்தீரா?

சீமோன் மாளிகை விருந்தில்
உமது பாதங்களைக் கண்ணீரால் கழுவிக்
கூந்தலால் துடைத்து உதடுகளால் உலர்த்திப்
பரிமளத்தைலம் பூசினேனே,
அப்போது
உமது பாதங்களைத் துளைத்த ஆணியின்
காரிரும்பு மணத்தை முகர்ந்தீரா?

அன்பரே,
கற்களை ஓங்கிய கைகளின் மத்தியில்
நடுங்கி நின்றவள் நானே
பாவமற்ற கரம் எறியட்டும் என்று
என்னை மீட்டவர் நீர் - அப்போது
நிலத்தில் நீர் எழுதியது என் பெயரல்லவா?
அப்போது
இலக்கு நானல்ல; நீரே என்று
அறியாமலா இருந்தீர்?

உம் மீது விழுந்த கசையடியில்
துடிதுடித்தவளும்
உம் சிரசிலிருந்து பெருகிய
ரத்த வியர்வையை ஒற்றியவளும்
உமது கடைசிக் கண்ணீர்த் துளியைக்
கையிலேந்தியவழும் நானல்லவா?
அப்போது
உயிரின் ஆரம்பம் பெண்ணின் சரீரம் என்று
உச்சாடனம் செய்யவில்லையா நீர்?

பின்பு ஏன்
உயிர்த்தெழுந்ததும் மாறிப் போனீர்?

ரபூனி,
நான் பற்றிப் பிடித்துக் கொண்டால்
பிதாவிடம் ஏறமுடியாது எனில்
நான்  நாங்கள்   மரியாள்கள்
விலக்கப்பட்ட கனிகளா?

எனில் போதகரே,
மரியாள்கள் தொடாத நீர்
வயற்புலத்தின் விதையல்ல
பாறைமேல் சிதறிய தானியம்.

@



பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்தாலிய ஓவியர் டிஷியனின் ‘ என்னைத் தொடாதே ( Noli me tangere ) ஓவியத்தால் தூண்டப்பட்ட கவிதை.