பக்கங்கள்

புதன், 9 அக்டோபர், 2019

திருப்பி வந்த நாட்களும் ஒரு நேர்காணலும்




காலம் 1981 – 82. கவிஞர் பிரம்மராஜன் திருமணமாகி இடமாற்றம் பெற்று மனைவி மீனாவுடன் உதகமண்டலம் வந்து வசிக்கத் தொடங்கி இருன் தார். னார். நவீன இலக்கியத்தலமாக உதகை மாறிய காலம். அவருடன் நட்பு ஏற்பட்டது. அவர் வாயிலாக இலக்கிய நண்பர்கள் பலர் அறிமுகம் ஆனார்கள். பிரம்மராஜனின் பள்ளி, கல்லூரி சகாக்களான ஆர்.சிவகுமார், அகிலன் எத்திராஜ், அவரது மாணவர்களான எம்.வி.சத்யன், அ. தமிழ்ஒளி, த.பார்த்திபன் ஆகியோர் பட்டியலில் இருந்தவர்கள். அந்த அறிமுகத்துக்குப் பிறகு சிலர் நண்பர்களும் சிலர் நெருங்கிய நண்பர்களும் ஆனார்கள். சுற்றுலாப் பயணிகளாகவோ பிரம்மராஜனைச் சந்திக்க வந்த இலக்கிய வாதிகளாகவோ மலையேறிய சிலரும் பழக்கமானார்கள். வண்ணதாசன், சாரு நிவேதிதா, பழமலய், ஆகியோரை முதலில் சந்தித்தது அப்போது தான். முன்னரே அறிமுகமாகியிருந்த ஆத்மாநாம் அவ்வப்போது வந்து சென்றதில் நெருக்கமானார். 

இவர்கள் தவிர அந்த மலைநகரத்தில் இலக்கியம் பேசி அலைந்து கொண்டிருந்த சிலருடன் நட்புக்கொள்ளவும் வாய்த்தது. இந்துஸ்தான் போட்டோபிலிம் தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த கார்த்திகா ராஜ்குமார், தொலைபேசித்துறையில் பணியாற்றிய சுப்ரபாரதி மணியன், உதகை மார்க்கட்டில் மளிகைக்கடை வைத்திருந்த பு.வ. மணிக் கண்ணன், தேயிலை விற்பனை முகவாண்மை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த நிர்மால்யா மணி, மருந்தாளுநர் பட்டயத்துக்காகப் படித்துக் கொண்டிருந்த நந்தலாலா என்ற இளங்கோ அவரது மாமா ப்ரியதர்சன், தனியார் நிதிநிறுவனத்தில் வேலைபார்த்த ப்ரதிபா ஜெயச்சந்திரன் என்று இளமைக் கனவுகளும் துள்ளலும் துடிப்பும் நிறைந்த ஓர் இலக்கிய வட்டம் இயல்பாகவே உருவானது. ஓரிரு ஆண்டுகளில் மலையேறி வந்த ஜோசப் தயாளனும் விமலாதித்த மாமல்லனும் கொஞ்ச காலம் நீலகிரிவாசிகளாக இருந்தார்கள். எல்லாரும் இலக்கிய வேட்கையில் ஆளுக்கொரு காரியத்தைச் செய்து கொண்டிருந்தார்கள். காலம் முன்நகர ஆட்களும் நகர்ந்து மலையிறங்கி வேறு திசைகளுக்குப் போனார்கள். 

சிலருடன் தொடர்பு அறுபடாமல் தொடர்ந்தது. சிவகுமாரும், பார்த்திபனும், நிர்மால்யாவும் அன்றுமுதல் இன்றுவரை தொடர்பில் இருந்து கொண்டிருக்கிறார்கள். சுப்ரபாரதிமணியன், சாரு நிவேதிதா ஆகியவர்களை அவ்வப்போது சந்திக்கிறேன். பல வருடஇடைவெளிக்குப் பிறகு அகிலன் மீண்டும் கையெட்டும் நெருக்கத்துக்கு வந்தார். ஆத்மாநாமும் மணிக் கண்ணனும் அந்த எழுச்சியான நாட்களிலேயே கைவிட்டுப் போனார்கள். மற்றவர்கள், இன்று பார்த்தால் நினைவுகூர்ந்து புதிதாக அறிமுகப் படுத்திக்கொள்ள  வேண்டிய தொலைவில் இருக்கிறார்கள்.

அந்தப் பழைய உற்சவ காலத்தைச் சில நாட்களுக்கு முன்பு நினைவுகூரத் தொடங்கி இன்றும் திரும்ப மனதுள் ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியவர் ப்ரதிபா ஜெயச்சந்திரன். உதகையில் அறிமுகமான இலக்கிய நண்பர்களில் ஒருவர். மேற்சொன்னவர்களில் ஊரைவிட்டு முதலில் கிளம்பியவர் அவர்தான் என்று ஞாபகம்.தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்தவருக்கு நாட்டுடைமை வங்கியில் கிடைத்த பணி மலையை விட்டு இறங்கச் செய்தது. அபூர்வமாக சிற்றிதழ்களில் அவருடைய சில கவிதை களையும் கதைகளையும் பார்க்கவும் வாசிக்கவும் முடிந்தது. எனினும் அவரைத் தொடர்பு கொள்ள எண்ணியதில்லை. அவரும் ஒதுங்கிய நபராகவே இருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு நிர்மால்யா தொலைபேசியில் அழைத்து ப்ரதிபா ஜெயச்சந்திரன் பேச விரும்புவதாகச் சொன்னார். அறுந்தே போனது என்று நினைத்திருந்த இழை மீண்டும் வசப்பட்டது. பேசினார். பேசினேன். பேசினோம்.ஏறத்தாழ நாற்பது, சரியாகச் சொன்னால் முப்பத்தெட்டு, ஆண்டுகளுக்குப் பின்னர் நிகழ்ந்த உரையாடல்கள்.


இவற்றையெல்லாம் இங்கே பதிவுசெய்யக் காரணம் பின்வருமாறு: பாரதி புத்தகாலயம் வெளியிடும் புதிய புத்தகம் பேசுது மாத இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார் ப்ரதிபா. அவருடைய விருப்பமும் நிர்மால்யாவின் பரிந்துரையும் ஒரு நேர்காணலுக்கு வழியமைத்தன.  புத்தகம் பேசுது அக்டோபர் 2019 இதழில் நேர்காணல் வெளியாகியிருக்கிறது. அது வெளி வந்திருப்பதன் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது பழைய நண்பர் ஒருவர் திருப்பக் கிடைத்ததில் உருவாகும் இன்றைய  குதூகலம். சென்றுபோன தினங்களை மீண்டும் நினைவுகூரக் கிடைக்கும் தருணம் எப்போதும் வாய்ப்பதல்லவே. ப்ரதிபா ஜெயச்சந்திரன், நிர்மால்யா இருவருக்கும் நன்றி புதிய புத்தகம் பேசுது இதழுக்கு மிக்க நன்றி.