பக்கங்கள்

ராமநாதனின் சஹானா






















ளி
இடறிஇடறி உரையாடும் அடர்வனம்
ஓசையற்ற ஒலியுடன் ஒசியும் பெருமரங்கள்
வானிலிருந்து
தடையற்று ஒழுகும் அமுத தாரை
அதல பாதாளத்தில் விழும் தாளக்கட்டுடன்
என்னைநோக்கி வருகிறது
ஒரு மாறுகண் யானை

அதன் செருமலில் எவரும் அறியாச் சுருதிகள்
அதன் பிளிறலில் யாரும் கேளாத சங்கதிகள்
அதன் மூச்சிரைப்பில் எவரும் நிரவாத ஸ்வரங்கள்
அதன் அசைவில் மந்தர சலனம்
அதன் நிமிர்வில் மத்திய சஞ்சாரம்
அதன் நடையில் ஆரம்பமும் முடிவுமில்லா ஆலாபனை

அது
என்னைநோக்கி வருகிறது
ஆயிரம் படைகளைப் புறமுதுகிடச் செய்த அன்பைப்போல
ஆயிரம் கடல்களைப் பருகிய அமைதிபோல
ஆயிரம் மலைகளை உலுக்கிய தவம்போல
அஞ்சி நின்ற என்னைத் துதிக்கையால் வளைத்து
அந்தரத்தில் உயர்த்தி முதுகின்மேல் அமர்த்துகிறது
ஆகாயத்தில் துழாவி
அளவில்லா மலர்கொய்து கைகளில் வைக்கிறது.

அடர்வனத்தின் எட்டுத் திசைகளிலும்
எதிரொளிக்கிறது அம்மலரின் தெவிட்டாத தேன்
எதிரொலிக்கிறது அம்மலரின் அகலாத நறுமணம்.

10.07.2020

தற்கொலைக் குறிப்பு









      












       தற்கொலைக்கு
      எத்தனை காரணங்கள் உண்டோ
      அத்தனை வழிகளும் உண்டு.

      ஒரு காரணத்துக்கு
      நூறுநூறு வழிகள் இருப்பதைப்போலவே
      ஒரு வழிக்கும்
      நூறுநூறு காரணங்கள் இருக்கின்றன

      தற்கொலை
      விருப்பத்தின் விளைவு அல்ல
      விளைவின் விருப்பம்

      எவரும் தற்கொலை செய்துகொள்வது
      விருப்பத்தால் அல்ல
      விரும்ப முடியாத விளைவால்.

      தற்கொலையின் வழி
      நாம் நினைப்பதுபோல நேரானதல்ல
      மத்தி மீன்முள்ளைப்போல ஊடுகிளைகள் கொண்டது
      தற்கொலையின் நிச்சய முனையை அடைவதற்குள்
      ஏதேனும் கிளைவழியே
      வெளியேற உந்தித்தள்ளும் கருணைகொண்டது
      நாம் ஒவ்வொருவரும்  ஒவ்வொரு கிளைவழியாகப்
      பயணத்தைப் பாதியில் கைவிட்டுத் திரும்பியவர்கள்தாம்
      கிளையைக் கவனியாதவர்களே உயிரைத் தொலைக்கிறார்கள்.

      நேற்று உயிரைத் தொலைத்தவர்
      இறுதிக் கடிதத்தில் இப்படி எழுதியிருந்தார்:
      ‘சாவைப் பகடிசெய்யும் வாழ்வின் சாகசமே தற்கொலை’.


அந்த நாட்களில் ஒன்று


  
   







   







   நான் மிக மிக மகிழ்ந்த நாட்களில்
       அதுவும் ஒன்று

கானகத்தின் அமர வாழ்வுக்குச்
சாவா நெல்லி பறிக்க மலையேறிய யானை
சறுக்கி விழுந்து காலைச் சிராய்த்துக்கொண்டது
பொந்திடை அணில் பதறி வந்து
பச்சிலைகளைக் கொறித்துப்போட்டது
நான் அதை விழுதாக அரைத்தேன்
அணில் காயத்துக்குப் பற்றுப்போட்டது



அப்போது
வானம் ஆதுரமாகப் புன்னகை செய்தது
நூற்றாண்டுக் கடம்பமரம் மலர்மாரி பெய்தது

   மிக மிக மிக மகிழ்ச்சியாக
   நானிருந்த நாட்களில் ஒன்று அது.

கனம்


























ரு கல் கிடக்கிறது

காட்சிக்கு எளியது
கைப்பிடிக்குள் அடங்குவது
கடினம் தோன்றாதது

கையில் எடுக்கிறேன்
பார்வை அளந்ததுபோலவே
கனம் அவ்வளவு இல்லாதது

காட்சி அலமாரியில் வைத்தால்
அழகுக்கு அர்த்தம் கூட்டும் 
மேஜைப்பளுவாக வைத்தால்
தாள் பதற்றம் தணிக்கும்

கல்லை எடுத்ததற்குக்
காரணங்கள் கிடைத்ததும்
வீட்டுக்குக் கொண்டுபோகத் தீர்மானிக்கிறேன்

வலக்கையால் நினைவையும்
இடக்கையால் கனவையும்
இறுகப் பிடித்திருக்கிறேன்
கையறு நிலை

பிறகு
இருகையும் தளர்த்தி
இருகையால் எடுத்து
சும்மாதானே இருக்கிறது என்று
தலைமேல் சுமந்து
பிடிவிட்டவற்றை மீண்டும் பற்றி
நடக்கத் தொடங்குகிறேன்

பதில் கிடைக்காமல் விடப்பட்ட கேள்விபோல்
நீளும் நெடுவழியில் காண்கிறேன்
என்னைப் போலவே கல்சுமந்து நகரும் கூட்டம்
ஒவ்வொரு தலைக்கல்லுக்கும்
ஒவ்வொரு பருமன்

ஒருதலைமேல் சல்லி
ஒருதலைமேல் துண்டு
ஒருதலைமேல் பாறை
ஒருதலைமேல் குன்று

எல்லா வலக்கையிலும் நினைவு
எல்லா இடக்கையிலும் கனவு

என் தலைமறந்து
ஏளனமாய் யோசிக்கிறேன்
‘கல் சுமக்கும் சிரத்தினர்
நாசி அரித்தால் என்ன செய்வர்?’

அக்கணமே ஞாபகம் வருகிறது

என் தலைக்கல்
இட்ட அடி ஒவ்வொன்றுக்கும்
ஒவ்வொரு அடியாக வளர்ந்து பருப்பதும்
வீட்டை அடையும் முன்பே
மலையாக மாறிவிடும் என்பதும்.

ஓவியம்: ஜியோவன்னி பாட்டிஸ்டா லங்கேட்டி ( 1635 - 1676 )


நாம் இல்லாமற் போனால்...




























நாம் இல்லாமற் போனால்
நம் வீடு என்ன ஆகும்
நாம் இல்லாமற் போனால்
நம் தெரு என்ன ஆகும்
நாம் இல்லாமற் போனால்
நம் ஊர் என்ன ஆகும்
நாம் இல்லாமற் போனால்
நம் நாடு என்ன ஆகும்
நாம் இல்லாமற் போனால்
நம் உலகம் என்ன ஆகும்
நாம் இல்லாமற் போனால்
நமது பிரபஞ்சம் என்ன ஆகும்
நாம் இல்லாமற் போனால்
நாம் என்ன ஆவோம்?


சிற்பம்: சாரதா பிரதிக்ஷா


புதன், 22 ஜூலை, 2020

ஞானியுடன் நடந்த தூரம்





















ருடம் பற்றிய ஞாபகக் குழப்பம். தேதியையும் மாதத்தையும் பற்றிய கலங்கல். இரண்டையும் கடந்து கோவை ஞானி என்ற கி. பழனிச்சாமியை முதலாவதாகச் சந்தித்த ஞாயிற்றுக்கிழமை நினைவின் ஆழத்தில் இன்னும் மின்னுகிறது. கல்லூரி நண்பரும் அன்றைய இலக்கியத் தோழருமான விஸ்வநாதன் (பாதசாரி) காலை யிலிலேயே வீட்டுக்கு வந்து சாயங்காலம் ஞானி நடத்தும் இலக்கியக் கூட்டத்துக்குப் போகலாமென்று சொல்லிவிட்டுப் போயிருந்தார். போக வேண்டுமா வேண்டாமா என்று தடுமாறுகிற விதத்தில் அந்த மாலை நேரத்தை வேறு காரணத்துக்காக ஒதுக்கியிருந்தேன்.


 நாங்கள் வசித்த கோவை ராமநாதபுரம் பகுதியில் பங்கஜா ஆலை இருக்கிறது. நீண்ட காலம் மூடிக்கிடந்த ஆலை அப்போதுதான் மீண்டும் திறக்கப்பட்டு இயங்க ஆரம்பித் திருந்தது.அந்த ஆலைத் தொழிலாளர்களின் குடியிருப்பும் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில்தான். நிர்வாகக் குளறுபடிகளால்குடியிருப்புக் கான அடிப்படை வசதிகள் இல்லாமலிருந்தன. குடிநீருக்காக அந்த வீட்டுப்பெண்கள் எங்கள் தெருவில் குழாயுள்ள வீடுகளைத் தான் நம்பியிருந்தார்கள். எங்கள் வீடும் அதில் ஒன்று. மாலையில் தண்ணீர் விநியோகிக்கப்படும்போது வீட்டுப் பொடக்காலியில் பித்தளை, தகரம், எவர்சில்வர் குடங்களும் வெவ்வேறு பருவத்தைச் சேர்ந்த பெண்களுமாகக் குழுமியிருப்பார்கள். அவர்களில் என்னோடு அன்பாகப் பேசும் ரேணுகா அக்காவும் ஒருத்தி. அவர்கள் வீட்டுக்கு எல்லா சனி,ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரும் உறவுக் காரப் பெண் காஞ்சனா தண்ணீர் பிடிக்க ரேணுகாக்காவுடன் வருவாள். ஜெய சுதா என்ற நடிகையின் சாயல் அவளுக்கு இருந்தது. மீசை அரும்பத் தொடங்கிய பள்ளி நாட்களிலிருந்து பார்த்து வந்த அந்தப் பெண் மீதான ஈர்ப்பைச் சொல்லக் காத்திருந்தேன். அப்போது அதற்கான தகுதி எனக்கு வந்துவிட்டிருந்தது. புகுமுக வகுப்பை முடித்திருந்தேன். கல்லூரியில் மாணவர்களுக்காக மாணவர்களால் நடத்தப்பட்ட மாணவர் பத்திரிகையில் கதையும் கவிதைகளும் எழுதியிருந்தேன். உள்ளூர் நாளிதழில் கதை வெளியாகி அதற்கு சன்மானம் வாங்கியிருந்தேன். தாமரையில் இரண்டு கதைகள் வெளியாகி தலையில் முளைக்கத் தொடங்கி யிருந்த இலக்கியக் கொம்பை அவ்வப்போது வருடிக் கொண்டிருந்தேன். வேறு கல்லூரியில் சேருகிற ஆசையில் ஒரு வருடத்தை அர்ப்பணம் செய்து வீட்டில் உட்கார்ந்து இலக்கியம் படித்துக்கொண்டும் படைத்துக்கொண்டுமிருந்தேன்.ஜெயகாந்தன் புத்தகங்களைத் தேடி வாங்கிச் சேமித்திருந்தேன். ஜெயகாந்தன் வாசகரான காஞ்சனாவின் நைனாவுக்குச் சில புத்தகங்களை
இரவல் கொடுத்திருந்தேன். அடுத்த ஜெயகாந்தன் புத்தகத்தைக்
காஞ்சனாவிடம் கொடுக்கும்போது அதன் பக்கங்களுக்குள் என் காதலைச் சொல்லும் கவிதையை எழுதிச் செருகிவைக்க யோசித்திருந்தேன். ஜெயகாந்தனைப் போலவே வாசகர் நைனாவும் புதுக்கவிதையை ஏற்றுக்கொள்ளாதவர் என்பதால் காதல் கவிதையை அறுசீர் விருத்தத்தில் யாப்பதா அல்லது எண்சீர் விருத்தத்தில் யாப்பதா என்ற குழம்பிக்கொண்டிருந்தேன். காதலுக்கு எண்சீர் விருத்தம் தோதானதல்ல என்று இலக்கண அறிவு உறுத்தியது. நவீன உணர்வுள்ளவன் மரபு வடிவத்தை நாடுவது பொருத்தமற்றது என்று புத்திலக்கிய மனம் வலியுறுத்தியது. கடைசியில் காதல் புதுக்கவிதையாக மலர்ந்து கோகிலா என்ன செய்துவிட்டாள்? தொகுப்பில் ஒடுங்கி மணத்தைக் கசிய விட்டுக் கொண்டிருந்தது. அந்த ஞாயிற்றுக்கிழமை மாலையைத்தான் புத்தகத்தை ஒப்படைக்கத் தேர்ந்தெடுத் திருந்தேன். ஆனால் விஸ்வநாதன் வந்து அழைத்தபோது இது எதுவும் நினைவுக்கு வரவேயில்லை. காஞ்சனா தண்ணீர் பிடிக்க வருவதற்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறியிருந்தேன்.



வடகோவையில் ஒரு தனிப் பயிற்சிக் கல்லூரியில்தான் கூட்டம்.
இருபதுக்கும் குறைவான எண்ணிக் கையில் ஆட்கள் இருந்தார்கள். ஒரு புத்தக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஜன சுந்தரம் என்பவர் பேசிக்கொண்டிருந்தார். அது ஒரு மலையாளப் புத்தகம். பேராசிரியர் குப்தன் நாயர் எழுதிய இசங்ஙள்க்கு அப்புறம் (இசங்களுக்கு அப்பால்) என்ற கட்டுரைத் தொகுதி. அதிலிருந்த கட்டுரைகளைப் பற்றிய விமர்சனமும் தொடர்ந்து விவாதமுமாகக் கூட்டம் அமைந்திருந்தது. இடையில் ஞானியின் கட்டுரை ஒன்றும் குறிப்பிடப்பட்டது. இ.எம்.எஸ் சின் இலக்கிய விமர்சனக் கோட்பாடு களை விமர்சித்து ஞானி எழுதிய கட்டுரையை அலசிக் காயப் போட்டார்கள். ஞானி பதிலுரை வழங்கினார். நிதானமான குரலில் தன் தரப்புகளை முன்வைத்தார். படைப்பு என்பது ஓர் உற்பத்திப் பொருளல்ல; அது ஒரு மானுடச் செயல்பாடு. அதை ஆணியையும்
திருகையும் போன்ற சரக்காகப் பார்ப்பதே மார்க்சியக்
கண்ணோட்டத்துக்குப் பொருந்தாதது. மார்க்சியம் கேவலம் சோற்றுப் பாட்டுக்கான பிரச்சாரமல்ல; அது ஆகப் பெரிய தத்துவம். 


இந்த வாசகங்களாக அல்ல; ஆனால் இந்த வாசகத்தின் பொருளில் தான் அவருடைய பேச்சு இருந்தது. அதில் இடம்பெற்று இன்றும் நினைவில்தங்கியிருக்கும் மேற்கோள் ‘பட்டுப்பூச்சி என்ன காரணத்துக்காகப் பட்டிழையை உருவாக்குகிறதோ அதே காரணத்துக்காகத்தான் மில்டன் பாரடைஸ் லாஸ்ட்டை எழுதினார்’. படைப்பாற்றல் பற்றிய மார்க்ஸின் கூற்றை முதன்முதலாகக் கேட்டது ஞானி வாயிலாகத்தான். அவர் பேச்சிலும் எழுத்திலும் அடிக்கடிப் பயன்படுத்தும் ஒரு வார்த்தையும் அதன்பிரயோகமும் அன்று மனதில் பதிந்தன. ‘கேவலம்’ என்ற சொல்லை
அவரளவுக்கு யாராவது புழங்கியிருப்பார்களா என்று இப்போதும்
தோன்றுகிறது. நமக்கு அறிமுகமாகியுள்ள எதிர்மறைப் பொருளிலல்ல; வெறும் என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் அதைப் பயன்படுத்தினார். ‘மனிதர்கள் கேவலம் புழுக்களா?’ என்ற கேள்வியில் வரும் தொனியிலான பிரயோகம்.



கூட்டம் முடிந்து விவாதச் சலசலப்புக் கலையாமலேயே போய்
எல்லாருடனும் தேநீர் அருந்தியதும் பின்னர் ஞானியுடன் அவர் பேசு
வதைக் கேட்டுக்கொண்டே நடந்து இரண்டோ மூன்றோ கிலோ மீட்டர்தொலைவிலுள்ள காட்டூர் காளீசுவரர் நகரிலிருந்த அவர் வீட்டை அடைந்ததும் இலக்கியப் பயணத்தின் ஆரம்பம். அவர் வீடு வரைக்கும் உடன் வந்த விஸ்வநாதன் எங்கள் வீட்டின் முன்னால் நிறுத்தியிருந்த சைக்கிளை எடுக்க வேண்டும் என்னும் எச்சரிக்கை யுணர்வுடன் பஸ் ஏறினார். ‘இது தான் வீடு, எப்போது வேண்டு மானாலும் வரலாம்’ என்று விடை கொடுத்தார் ஞானி. அதன் பிறகு அந்த வீட்டுக்கு எத்தனை முறை போயிருப்பேன் என்பது எண்ணிக் கையில் அடங்காத கணக்கு. வீட்டை அடைய மிச்சமிருந்த தூரத்தை அந்த இரவில் இலக்கியக் கிறக்கத்துடன் நடந்து வந்து சேர்ந்தேன். புத்தகத்துக்குள் வைத்திருந்த கவிதையை ஒரு நொடி ஆதுரத்துடன் படித்துவிட்டுக் கசக்கிப் போட்டேன். அந்தப் பதின் வயதில் இலக்கியம் அவ்வளவு சிக்கலில்லாத ஈர்ப்பாகத் தோன்றியது.  அதை மறைமுகமாகப் பேணியதில் ஞானிக்குப் பங்குண்டு என்று  எண்ணுகிறேன். அதன் பிறகு இணக்கமாகவும் அவ்வப்போது
பிணக்குடனும் அந்த உறவு நீடித்தது, நிரந்தரமாகக் கோயம் புத்தூரை விட்டு வெளியேறும் காலம் வரைக்கும். ஞானியுடன் நான் நடந்த தூரம் ஏறத்தாழப் பத்தாண்டுகள். அந்தக் காலப் பகுதியில் கிடைத்த நட்புகள், மேற்கொண்ட வாசிப்புகள், வாய்த்த அனுபவங்கள், அடைந்த பாதிப்புகள்தாம் இன்றைய நான் என்று நம்புகிறேன். இப்படிச் சொல்லக்கூடிய சிலராவது தமிழிலக்கியச் சூழலில் இருப்பார்கள் என்பது அனுமானம். அவர்கள் எல்லாரும் ஞானிக்குக் கடமைப்பட்டவர்கள்.

o



சென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் கோவையில் இயங்கிய இலக்கியச் செயல்பாட்டு மையங்களில் ஒன்றாக இருந்தது ஞானியின் நண்பர் வட்டம். வேறு சிறுசிறு அமைப்புகள் இருந்த போதும் இலக்கியத்தைச் சீரிய பார்வையுடன் அணுகியது இந்த வட்டம்தான். அதன் இலக்கிய ஈர்ப்பு மையமாக ஞானி இருந்தார். இவரது வீடு இலக்கியவாதிகளின் முகாமாகவும் இலக்கிய ஆர்வலர்களின் பயிற்சிக் கூடமாகவும் இருந்தது.


தனி உரையாடல், இலக்கியக் கூட்டங்கள், பத்திரிகை முயற்சிகள் போன்ற செயல்கள் மூலம் கோவையில் இலக்கியச் சூழலுக்குரிய தட்பவெப்ப நிலையை உருவாக்கியிருந்தார். மாதத்தின் எல்லா இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளிலும் வடகோவையிலுள்ள தேசிய தனிப் பயிற்சிக் கல்வியகத்தில் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும். புத்தக அறிமுகங்கள், விமர்சனங்கள், கலந்துரை யாடல்கள், இரங்கல்கள் என்று கூட்டத்தின் போக்கு இருக்கும். இலக்கியத்தின் வாயிலாக நண்பர்களைப் பெற்றது இந்தக் கூட்டங்களில்தான். அன்று நிமல விஸ்வநாதன் என்று
அறியப் பட்டிருந்த பாதசாரி, அறிவன், அமரநாதன். யமுனா புத்திரன், சி.ஆர்.ரவீந்திரன், சூரியகாந்தன், திலீப்குமார், ஆறுமுகம், அக்கினிபுத்திரன், பா.செயப்பிரகாசம், குறிஞ்சி, இளமுருகு, ஜன சுந்தரம், கோவைவாணன் என்ற துரை, யுகசிற்பி என்ற சுரேந்திரன், டால்ஸ்டாய் மொழிபெயர்ப்பாளரான டி.சி. ராமசாமி, மார்க்சிய நூல்களின் மொழிபெயர்ப்பாளரான சிங்கராயர், அபூர்வமாக விஜயா பதிப்பகம் வேலாயுதம், சமயங்களில் ஈரோட்டிலிருந்து ஓடை பொ. துரையரசன், முத்துப்பொருநன் என்று இலக்கிய ஆர்வத்தின் பன்முகங்களைப் பார்த்ததும் பழகியதும் இந்தக் கூட்டங்களில்தாம்.


ஒரு கட்டத்தில் நானும் பேச்சாளானாக உருமாறியிருந்தேன். கணிசமான கூட்டங்களில் எழுதி வாசித்திருக்கிறேன். இரண்டு கூட்டங்கள் இப்போதும் நினைவில் இருக்கின்றன. ஒன்று - ஓ.வி. விஜயனின் தர்மபுராணம் நாவலை அறிமுகப்படுத்திப் பேசிய கூட்டம். அதைச் சீருடை அணியாத ஒரு போலீஸ்காரர் குறிப்பெடுத்தார். மறுநாள் விசாரணைக்கு அழைத்தார்கள். அது நெருக்கடிநிலைக் காலம். இன்னொன்று - தி.ஜானகிராமனின் மறைவையொட்டி நடந்த இரங்கல் கூட்டம். எழுதிவைத்த
பேச்சை அழுகையுடன் வாசித்தேன். இந்த மாதாந்திரக் கூட்டங்கள் அல்லாமல் எல்லா வருடமும் பள்ளி விடுமுறைக் காலத்தையொட்டி ஒரு சிறப்புக் கூட்டம் நடைபெறும். இந்தச் சிறப்புக் கூட்டங்களில் தான் சி.சு. செல்லப்பாவையும் சுந்தர ராமசாமியையும் அசோக மித்திரனையும் வண்ணநிலவனையும் முதன் முதலாகப் பார்த்தேன். மலையாளக் கவிஞர்களான அய்யப்ப பணிக்கர், கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் ஆகியவர்களின் வருகையை யொட்டியும் சிறப்புக்
கூட்டங்கள் கூடின.



இப்போது தகவல்களாகத் தென்படும் இந்த விவரங்கள் நிகழ்வு களாக நடந்தேறிய தருணங்கள் சொல்லி மாளாத உத்வேகத்தைக் கொடுத்தன. அதே உத்வேகத்தை ஞானியுடனான உரையாடல் களும் அவருடைய சொற்பொழிவுகளும் தந்திருக்கின்றன. சரியாகச் சொன்னால் ஞானி என்ற எழுத்தாளரைவிடவும் ஞானி என்ற பேச்சாளர் கூடுதல் இலக்கியத் தன்மை கொண்டவர். ஒரு படைப்பைப் பற்றிய அவருடைய சிந்தனைகள் பேச்சில் சோபித்த அளவுக்கு எழுத்தில் வரவே இல்லை. ஜே. கிருஷ்ணமூர்த்தியைப்
பற்றி அவர் பேசிக்கொண்டிருந்தவை சிந்தனைக்குள் பெரும் கதவுகளை விரியத் திறந்துவைத்தன. ஆனால் அதே பொருள் பற்றி அவர் எழுதிய மணல் மேட்டில் ஓர் அழகிய வீடு என்ற நூல் ஜே. கிருஷ்ணமூர்த்திக்கு வெகு அப்பால் இருந்தது. பிரமிள் பற்றிய கட்டுரையும் அதே தன்மையில்தான் அமைந்திருந்தது. பிரமிளின் எளிதில் வசப்படாத சிலகவிதைகளை நேர்ப்பேச்சில் ஞானி விளக்கியபோது அடைந்த அனுபவம் ஓர் அரும்பு கட்டவிழ்ந்து மலராக விரிவதை உணரும் பரவசத்தைத் தந்தது. ஆனால் அந்தக் கவிதைகளைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரை - ‘தர்மூ சிவராமு  கவிதைகளினோடே ஒரு நெடும் பயணம்’ - மணற் சரிவில்
காலிடறிய திகைப்பையே அளித்தது.



இலக்கிய வாழ்க்கையின் எல்லாக் கட்டங்களிலும் ஞானி தன் கைவசம் ஒரு சிறு பத்திரிகையை வைத்திருந்திருக்கிறார். காத்திரமான இலக்கிய நடவடிக்கைகளைச் சிற்றேடுகளின் மூலமே மேற்கொள்ள முடியும் என்ற சீரிய அறிவாளர்களின் அல்லது இலக்கியவாதிகளின் மரபணுக்குணம் அது. அறுபதுகளின் இறுதியில் அல்லது எழுபதுகளின் தொடக்கத்தில் ஆதி என்ற புலவர் இராசியண்ணன் துணையுடன் புதிய தலைமுறை என்ற இதழை நடத்தியிருக்கிறார். எஸ்.என். நாகராசனும் எஸ்.வி. ராஜதுரையும்
அதன் பங்கேற்பாளர்கள். இலக்கியம், மாற்றுச் சிந்தனை ஆகியவற்றுக்குக் களமாக இருந்த அந்த இதழ் மரபின் தொடர்ச்சி யாகவே ‘வானம்பாடி’ இயக்கத்தின் தோற்றத்தையும் அந்த விலையிலாகக் கவிமடலின் பரவலையும் கணிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். வானம்பாடி இயக்கத்தின் ஆரம்பகர்த்தர்கள் ஞானியும் முல்லை ஆதவனும்தான். ஆனால் இயக்கம் பிளந்த பின்னர் ஞானி மறக்கப்பட்டார். ‘வெளிச்சங்கள்’ என்ற பெயரில் வெளிவந்த வானம்பாடிக் கவிதைத் தொகுதி அதை ஆவணப் படுத்தியிருக்கிறது. வானம்பாடியின் இழப்பை ஈடுகட்ட வேள்வி
என்ற இதழையும் ஞானி நடத்தினார். வானம்பாடியின் சிறகடிப்பில்
வேள்வியின் கனல் அவிந்துவிட்டது. பின்னர் பரிமாணம். தனிச்
சுற்றிதழாக வெளியான அது சில இதழ்களோடு முடிவடைந்தது.


தொடர்ந்து வெளிவந்த நிகழ்தான் ஞானியால் நீண்ட காலம் நடத்தப்பட்ட பத்திரிகை. அதன் ஆரம்ப காலத் தலைப்பெழுத்தும் முதலிரண்டு இதழ்களின் ஆசிரியத்துவமும் என்னுடையது என்று யோசிக்கும்போது பெருமிதத்தைவிட ஞானியின் பெருந்தன்மை தான் முன்நிற்கிறது. மனுஷ்யபுத்திரன், ஜெயமோகன், சல்மா போன்றோரின் படைப்புகள் நிகழில் வெளியானது கூடுதல் இலக்கியக் கவனத்துக்குத் துணை புரிந்தது. ஞானியின் இந்த முயற்சிகளெல்லாம் ஓர் இலக்கியத் தோழமையின் வெளிப்பாடுகள். ஒரு சாதாரணப் பள்ளித் தமிழாசிரியரான அவரின் இந்தப்
பங்களிப்பு எந்தப் பல்கலைக்கழக இலக்கியத் துறையின்
சாதனையையும்விட அழுத்தமானது. விரிவானது.

o



மேற்கத்திய நாடுகளில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி - ஐம்பதுகளும் அறுபதுகளும் - கொந்தளிப்பும் எழுச்சியுமாக இருந்தது. அதுவரை பேணப்பட்ட கருத்தாக்கங்கள் மறு விசாரணைக்குள்ளாயின. அரசியல் கொதிப்புகளும் கலாச்சார மாற்றங்களும் வாழ்வியல் சிந்தனைகளை உலுக்கின. அந்த உலுக்கல்கள் இந்தியச் சூழலில் கொஞ்சம் தாமதமாக
எழுபதுகளில் அதிர்வுகளை ஏற்படுத்தின. குறிப்பாக மார்க்சிய
வளாகங்களில் பெரும் விவாதங்கள் எழுந்தன. அதன் தமிழ் விளைவுதான் ஞானியின் சிந்தனைகள். அவர் மார்க்சியத்தை வெறும் சமூக அறிவியலாகவோ அரசியல் திட்டமாகவோ பார்க்கவில்லை. அதை முழுமையான தத்துவக் கோட்பாடாக முன்வைத்தார். அதன் முதன்மையான சிக்கல் மார்க்சியத்தை எப்படிப் பார்ப்பது என்பதுதான்.

ஒரு சமூகத்தின் இருப்புக்கும் மேம்பாட்டுக்கும் பொருளாதாரமே
அடிப்படை. பொருளுற்பத்தி, விநியோகம், உற்பத்தி உறவுகள் இவையே ஒரு சமூகத்தை வடிவமைக்கின்றன. அதுவே அடித்தளம். அதன்மீதுதான் பிறமானுடச் செயல்கள் நிகழ்கின்றன. அது மேற்கட்டுமானம். சமூகத்தை முன்னிறுத்தும் ஒரு மார்க்சியர் கவனம் கொள்ள வேண்டியது அடித்தளம் பற்றி மட்டுமே. போராட்டத்தின் மூலம் அடித்தளம் மாற்றப்படுமானால் மேற் கட்டுமானம் தானாகவே மாறிவிடும். இந்த அர்த்தத்திலான
மார்க்சியக் கோட்பாடே முன்வைக்கப்பட்டிருந்தது. தமிழ் இலக்கியத் திறனாய்விலும் இந்தப் போக்கே கடைபிடிக்கப் பட்டிருந்தது. இதன் விளைவு மொழியின் முக்கியமான படைப்பாளுமைகள் விலக்கப்பட்டனர். அல்லது பிற்போக்காளர் களாக ஒதுக்கப்பட்டனர்.



மேற்கத்திய மார்க்சியக் கோட்பாடுகளின் அடியொற்றி இங்கும்
கையாளப்பட்ட விமர்சனப் போக்குக்கு எதிரான முனையில் இருந்தவர் ஞானி. மேற்கட்டு மானத்தில் உட்படுத்தப்பட்ட பண்பாடு, மதம் ஆகியவை அடித்தளத்தையும் பாதிக்கும் என்ற சிந்தனை ஐரோப்பிய மார்க்சியர்களில் சிலரிடமிருந்தது. இந்திய மார்க்சியர்களில் கே. தாமோதரன், தேவி பிரசாத் சட்டோ பாத்தியாயா, டி.பி. முகர்ஜி போன்றோர் இந்தச் சிந்தனையைக் கொண்டிருந்தவர்கள். ஞானியை அந்த வரிசையில் வந்தவர் என்று சொல்லலாம். பண்பாட்டுக் கூறுகள் சமூக வடிவத்தில் தொடர்ந்து
நிலைபெற்றிருக்கும் என்றும் கலாச்சாரம் நிரந்தரமானது என்றும் சொன்ன டி.பி. முகர்ஜியுடன் ஞானியை ஒப்பிடவே எனக்கு விருப்பம். டி.பி. முகர்ஜி இந்திய மரபு என்று வரையறுத்தவற்றைத் தமிழ் மரபு என்று ஞானி மறு ஆக்கம் செய்தார். இந்தக் கோணத்தில்தான் அந்நியமாதல் என்ற கருத்தாக்கத்தையும் முன்வைத்தார். மார்க்சின் கருத்துப்படி மனித உழைப்பு ஒரு படைப்புச் செயல். அது அவனை
மகிழ்ச்சியாகவைத்திருப்பது. ஆனால் அந்த உழைப்பு அவனுக்குப்
பயனையோ மகிழ்ச்சியையோ அளிக்காத நிலையை முதலாளியம்
உருவாக்குகிறது. உழைப்பை மட்டும் வழங்குகிற அவன் அதன்
பலனிலிருந்து விலக்கப்படுகிறான். அந்நியப்படுத்தப்படுகிறான். மார்க்சிய ஆய்வுகளிலிருந்து லூயி அல்தூசர் பகுத்தெடுத்த இந்தச் சிந்தனையை ஞானியும் அவரது சகாவான எஸ்.என். நாகராசனும் பரவலான சிந்தனைக்கு விட்டார்கள். அந்நியமாதலின் துக்கத் தையும் அதற்கு எதிரான தனிமனித சமூகக் குறுக்கீடுகளையும் ஆய்வதையே தனது இலக்கியக் கோட்பாடாக ஞானி வகுத்துக் கொண்டார்.



மேற்கத்தியச் சிந்தனையாளர்களில் யூகோஸ்லாவிய மார்க்சியரான மிலோவன் ஜிலாசும் இத்தாலிய மார்க்சியரான அந்தோனியோ கிராம்ஷியும் ஞானியின் முன்னோடிகளாக இருக்கலாம் என்று யூகிக்கிறேன். ஜிலாசின் வாழ்க்கையை பற்றி ஒரு மாலை நேரச் சந்திப்பில் ஞானி பேசிக் கொண்டிருந்தது ஒரு செவ்வியல் திரைப்படம்போல இப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் சோவியத் ஆதரவாளராகவும் ஸ்டாலினின் தோழராகவும் இருந்த ஜிலாஸ் யூகோஸ்லாவிய தேசியப் பிரச்சினையால் ஸ்டாலினுடன் முரண்பட்டார். யூகோஸ்லாவியா சோவியத் யூனியனின் காலனியாக இருந்தால்போதும் என்ற ஸ்டாலின் நிலைப்பாடுதான் ஜிலாசை எதிர்நிலைக்குத் தள்ளியது
என்று ஞானி குறிப்பிட்டதாக ஞாபகம்.


ஞானியை வழமையான மார்க்சிய விமர்சகராவும் இலக்கியத்
திறனாய்வாளராகவும் மட்டும் சுருக்கிவிட முடியாது. அவரது விமர்சனம் ஒரு பண்பாட்டு ஆய்வாளனுடையது. இலக்கியம் கலை
ஆகியவற்றுக்கான சமூகத் தேவை பற்றியும் மதத்தின் தேவை பற்றியும் அவர் முன்வைத்த சிந்தனைகள் தமிழில் மார்க்சிய அழகியலுக்கான வாசல்கள். ஆனால் அந்த வாசல்களை தேவைக்கும் அதிகமான தத்துவ முட்டுக்கட்டைகள் போட்டு அனுமதி மறுக்கப்பட்ட பிரதேசமாக மாற்றியவரும் அவர் தான் என்று தோன்றுகிறது. ஒரு கலைப்படைப்பு அளிக்கக்கூடிய அனுபவத்தையும் அதிலிருந்து பெறக்கூடிய நுண் விவரங் களையும் அதன் பயனாளன் பெற உதவுவதற்கு மாறாக மார்க்சிய
அடிப்படையில் உருவாக்கிய கருத்துநிலையை முன்வைத்து விடுகிறார் ஞானி.  உதாரணத்துக்கு ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலை அவர் மதிப்பிடுவது. ஹென்றி என்ற மையக் கதாபாத்திரத்தை வைத்துத்தான்,  அவரது விமர்சனக் கருவிகள் செதுக்கிச் செதுக்கி அந்தப் பாத்திரத்துக்கு ஒரு
ரிஷிக்கோலத்தைக் கொடுத்துவிடுகின்றன. அவர் எதிர்பார்க்கும் ஹென்றி அது. ஆனால் அதுவல்ல படைப்புக்குள் நாம் சந்திக்கும் ஹென்றி. ஞானியின் கருத்துக்கிதமான சில அம்சங்கள் உள்ளவன் என்பதனாலேயே ஹென்றி அப்படியாக்கப்படுகிறான். இதே துரதிர்ஷ்டம் ஜோசப் ஜேம்சுக்கும் (ஜே.ஜே: சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி), அழகிரிக்கும் (பிறக - பூமணி) நேர்ந்ததை ஒரு வாசகனாகத் துக்கத்துடன் உணர்ந்திருக்கிறேன். கலையும் படைப்பும் கோட்பாட்டை ஏய்த்துத் தப்பி நிற்கவே விரும்பும்
என்ற பாடத்தை ஞானியின் விமர்சனம் பலமுறையும் எச்சரிக்கையாக உணர்த்தியிருக்கிறது.

o

இங்கே விரிவாகக் குறிப்பிட்டுச் சொன்ன எந்த விமர்சனத்தையும் நான் ஞானியுடனான நாட்களில் முன்வைத்ததில்லை. அவர் கருத்துக்கு மாற்றான கருத்துகளை வாசிப் பின் மூலமும் சிந்தனையின் மூலமும் உருவாக்கி வைத்துக்கொள்வதைத் தவிர விவாதத்தில் ஈடுபட்டதில்லை. வெளிக் காட்டிக்கொள்ளாத ஆசிரியப் பற்று காரணமாக இருக்கலாமோ என்னவோ? தெரியவில்லை. எண்பதுகளின் பிற்பகுதியில் அவருடனான
தொடர்புகள் மெல்லக் கழன்றுபோயின. வாழிடம் மாறியதும் தொடர்புகள் கிட்டத்தட்ட அறுபட்டேபோயின. அதற்குள் சோவியத் யூனியன் உடைந்து போயிருந்தது. மார்க்சியம் காலாவதியாகி விட்டது என்ற முழக்கங்கள் எழத் தொடங்கியிருந்தன. தொண்ணூறுகளில் கோர்ப்பச்சேவ் பெரஸ்த்ரோய்க்கா, கிளாஸ்நாஸ்ட் என்று உச்சரிக்கத் தொடங்கிய போதே அதன் பின் விளைவுகள் இன்னதாக இருக்கும் என்று முன்கூட்டிச் சொன்னவர் ஞானி. அப்படி உருவான வெற்றிடத்தில் அவர் தமிழ்த் தேசியத்தை நிறுவிக் கொண்டார் என்று சொல்லலாம். அதற்காகவே ஒரு
சிற்றிதழையும் - தமிழ் நேயம் - தொடங்கினார். தொண்ணூறு களுக்குப் பிந்தைய அவருடைய சிந்தனைகளையும் எழுத்துக் களையும் என்னால் பின் தொடர முடியவில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அவருக்குப் பார்வையில்லை. அது
அவருடைய செயல்பாட்டுக்குத் தடையாகவும் இல்லை. முன்னைவிடஅதிகமாக வாசிக்கிறார். அதைவிட அதிகமாக எழுதுகிறார். இதுவரைக்கும் ஞானி பல லட்சம் பக்கங்களை வாசித்திருக்கிறார். சில ஆயிரம் பக்கங்களைக் கொடுத்திருக் கிறார். இவை தமிழ்ச் சூழலில் என்ன விளைவுகளை ஏற்படுத்தின என்று அறிய ஆர்வமாக இருக்கிறது.


பொய்யான மௌனமோ தந்திரமான புறக்கணிப்போதான் பதிலாக
இருக்குமென்றாலும் ஆசைப்படுவதில் தப்பில்லை. கல்லூரிப்
பருவத்துக்கு வந்த பின்னரும் பள்ளியில் தமிழ் கற்பித்த ஆசிரியருடன் எனக்கு உறவு இருந்தது. அவர் சொன்னார்: ‘பழனிச்சாமிதானே, அவர் தமிழ்ப் பகைவரான தமிழாசிரியர்’. மார்க்சிய ஆதரவாளரான கல்லூரி ஆசிரியர் சொன்னார்: ‘அவர் மார்க்சியத்துக்கு எதிரானவர்’. ஞானியின் இருப்பின் இருமுனைகள் எவையோ அவற்றையே அவர்கள் அசைத்தனர். அவர்கள் மட்டுமல்ல; பண்டிதத் தமிழ் அறிஞர்களும் வறட்டு மார்க்சியர்களும் இதே பொதுப் புகாரை அவர் மேல் சொல்லிக் கேட்டதுண்டு. அந்த அளவுக்கு நவீன மனப்பான்மையுடையவர் ஞானி. தமிழுக்குப் பதிலாக ஆங்கிலத்தில் எழுதியிருப் பாரானால் இன்னும் பெரிய ஆளுமையாகக் கொண்டாடப்பட்டிருப்பார் என்று தோன்றுவ துண்டு. பதின்பருவத்தில் இலக்கிய ஆர்வத்துடன் ததும்பிக் கொண்டிருந்த ஓர் இளைஞனுக்குக் கிடைத்த வழிகாட்டி என்பதே ஞானியின் மீதான என் மரியாதை. அந்த வயதில் அப்படி ஒருவர் வாய்த்தது எனது நல்லூழ். 2009 ஆம் ஆண்டுக்கான இயல் விருது அவருக்கு அளிக்கப்படுகிறது. 

அறியப்பட வேண்டிய முறையில் அறியப்படாமலும் அங்கீகரிக்கப் பட வேண்டிய வகையில் அங்கீகரிக்கப்படாமலும் போன இலக்கிய ஆளுமை கோவை ஞானி என்று எப்போதும் யோசிப்பதுண்டு. அந்தக் குறையை இந்த விருது போக்குகிறது. ஓர் இலக்கிய ஆளுமை கௌரவம் பெறும்போது அவருடைய வாசகனுக்கும் பெருமிதம் ஏற்படும். அதைவிடவும் அதிகமான பெருமிதம் அவரால் ஆற்றுப் படுத்தப்பட்ட இலக்கிய ஆர்வலனுக்கு இருக்கும். எனக்கிருப்பது கூடுதல் பெருமிதம். அந்த உணர்வில் ஞானிக்கு வாழ்த்துகள்.


கனடா தமிழ்த் தோட்டத்தின் வாழ் நாள் சாதனைக்கான இயல் விருது ஞானிக்கு 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதையொட்டி எழுதி, காலச்சுவடு இதழில் வெளிவந்த  கட்டுரை

சனி, 11 ஜூலை, 2020

நீள் கவிதை



                                                                                                 நசிகேதன்
                                                     
                                                                                        தொன்மத்தின் நவீனம்
                              




          பி.ரவிகுமார் மலையாளத்தில் அபூர்வமான கவிஞர். அரியவர் என்ற பொருளில்தான் அபூர்வம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். அபூர்வம் என்ற சொல்லுக்கு அரியது என்பதோடு வேறு பல அர்த்தங்களும் உள்ளன. முந்தையதன் தொடர்ச்சி இல்லாதது, புதுமையானது, தற்செயலாக நிகழ்வது, எப்போதாவது சம்பவிப்பது என்று பலவிதமான பொருள்கள் இருக்கின்றன. இந்த எல்லா அர்த்தங்களும் ரவிகுமாருக்குப் பொருந்தும்.


கவிஞர் என்ற அடைமொழியுடன் குறிப்பிட்ட போதும் ரவிகுமார் வழக்கமான கவிஞர் அல்லர்.அவருடைய கவிதை என்று எதுவும் இதழ்களில் வெளியாகிப் பார்த்ததில்லை. கவிதை எழுதுபவராக அல்ல; கவிதைப் பிரக்ஞையுடன் இருப்பவர் என்பதாலேயே அவரைக் கவிஞராகக் கருதுகிறேன். இசைதொடர்பாக அவர் எழுதியிருக்கும் கட்டுரைகள் சிலவற்றில் கவிதைக்குரிய  தருணங்களையும் கவிக் கூற்றுகளையும் வாசித்து வியந்திருக்கிறேன். இவை தவிரக் கவிதையாக அவர் எழுதியிருப்பவை இரண்டு உருப்படிகள் மட்டுமே. எம்.டி.ராமநாதன், நசிகேதன் ஆகிய இரண்டு நீள் கவிதைகள். அவரைக் கவிஞர் என்று காணவும் அபூர்வமானவர் என்று சிறப்பிக்கவும் இந்த இரண்டு கவிதைகளும் போதுமானவை. நீள்கவிதைகள் என்ற அளவிலேயே அவை வழக்கத்துக்கு மாறானவை; அபூர்வமானவை. அவற்றின் பேசுபொருள்களும் முன்னுதாரணமற்றவை. முதலாவது கவிதை, இசைப் பெருங்கலைஞரான எம்.டி.ராமநாதனின் வாழ்க்கையைச் சித்தரிப்பது. புராணப் பாத்திரமான நசிகேதனின் அறிவுத் தேடலை விவரிப்பது இரண்டாவது கவிதை. ஓர் இசைக் கலைஞரின் வாழ்க்கையைச் சொல்லும் கவிதை என்ற அளவிலும் தொன்மக் கதையொன்றை நவீன விழிகளால் பார்க்கும் கவிதை என்ற அளவிலும் இவை அபூர்வ நிகழ்வுகள். வெகுஜன இதழ் கலாகௌமுதி யில் தொடராக இந்தக் கவிதைகள் வெளி வந்தன என்பதும் அரியது.


கவிதைகளுக்கான மையப் பொருளைத் தேர்ந்தெடுப்பதில் கடைப்பிடிக்கும் அதே அக்கறையைக் கவிதையாக்கத்திலும் ரவிகுமார் பின்பற்றுகிறார். அவரிடம் கவிதைகள் சொற்களால் உருவாவதில்லை; மையப் பொருள் உயிர்ப்புப் பெறும் தருணமே கவிதையை நிர்ணயிக்கிறது. சொற்களால் சுட்டப்படும் சொற்களை மீறிய உணர்வே கவிதையாக உருக்கொள்கிறது. எளிய உரைநடையில் கவிதையின் சாத்தியங்களைக் கைவசப் படுத்துகிறார் ரவிகுமார். கவிச்சொற்கள் இல்லாமலே கவிதையை மேலெழச் செய்கிறார். இந்த இயல்பு காரணமாகவும் இவை அபூர்வங்களாகின்றன.


ரவிகுமாரின் முதலாவது நீள் கவிதை ‘எம்.டி.ராமநாதன்’ 2004 இல் நூலுருவம் பெற்றது. தொடர்ந்து அதன் ஹிந்தி மொழிபெயர்ப்பு வெளிவந்தது. எழுத்து காலக் கவிஞரும் மும்மொழி வல்லுநருமான மா.தக்ஷிணாமூர்த்தி ஆங்கிலத்திலும் தமிழிலும் மொழிபெயர்த்தார். ஆங்கில மொழிபெயர்ப்பை 2015 இல் ரைட்டர்ஸ் ஒர்க்ஷாப், கல்கத்தா வெளியிட்டது. இரண்டில் முன்னரே முடிந்திருந்தபோதும் தமிழ் மொழிபெயர்ப்பு உடனடியாக நூலாகும் வாய்ப்பு அமையவில்லை. அந்தத் தாமதத்துக்கு நானும் ஒரு காரணம். கவிதை நூல், அதுவும் மொழியாக்க நூல், அதிலும் மிகச் சின்ன அளவில் மட்டுமே ஆராதகர்களைக் கொண்டவரான எம்.டி.ராமநாதனைப் பற்றிய நூல் எந்த அளவுக்கு வாசகர்களிடையே வரவேற்கப்படும் என்ற சந்தேகமே தாமதத்துக்கு முதன்மையான காரணம். எனினும் காலச்சுவடு பதிப்பகம் சென்ற ஆண்டு அதை (2019) நூலாக வெளியிட்டது. நான் செய்ய விரும்பிக் கை நழுவவிட்ட மொழியாக்கம் அது. நூலுக்கான முன்னுரையில் இதைக் குறிப்பிட்டு மிருக்கிறேன்.

எம்.டி.ராமநாதன் தொடராக வெளிவந்து முற்றுப் பெற்ற சந்தர்ப்பத்தில் ரவிகுமாரிடம் விளையாட்டாக, ‘இதுமாதிரி இன்னொரு கவிதையை நீங்கள் எழுதினால் அதை நான்தான் தமிழில் மொழிபெயர்ப்பேன்’ என்று சொன்னேன். அப்படிச் சொன்னபோது விளையாட்டு வினையாகிவிடும் என்று எதிர்பார்க்கவில்லை. எம்.டி.ராமநாதன் கவிதைக்கு மலையாளத்தில் கிடைத்த பாராட்டும் ஹிந்தி, ஆங்கில மொழியாக்கங்களுக்கு முன்னின்ற எதிர்பார்ப்பும் ரவிகுமாரை உந்தியிருக்க வேண்டும். ஒருவேளை என்னுடைய விளையாட்டு வாக்குறுதியும் தூண்டுதலாக இருக்கலாம்.முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மனதுக்குள் தேக்கி வைத்திருந்த நசிகேதன் நீள் கவிதையை எழுதி முடித்து, 2008 இல் கலாகௌமுதி இதழிலேயே தொடராகவும் வெளியிட்டார். அடுத்த ஆண்டே நூலாகவும் வெளிவந்தது. நூலின் பிரதியை அன்பளிப்பாகக் கொடுத்து விட்டு என் வாக்குறுதியையும் நினைவு படுத்தினார்.


‘உடனே வேண்டாம். நிதானமாகவே செய்யுங்கள். ஆனால் கவிதையின் தமிழாக்கத்தை நீங்கள்தாம் செய்தாக வேண்டும்’ என்றார். என்னுடைய வார்த்தைகளுக்குள் நானே மாட்டிக் கொண்டேன். அந்த வாக்குறுதி வலையை அவ்வப்போது பார்ப்பதிலேயே வருடங்கள் கழிந்தன. அதற்குள் நசிகேதன் ஹிந்தி, சமஸ்கிருதம், போலிஷ் மொழிகளில் பெயர்க்கப் பட்டது. ‘ஹிந்தியில் வெளிவந்து விட்டது, போலிஷ் மொழிபெயர்ப்பு முடிந்து விட்டது. சமஸ்கிருத பரிபாஷ தயாராகி விட்டது’ என்று ரவிகுமார் சொல்லும்போதெல்லாம் ஆவேசத்துடன் சில பக்கங்களை மொழிபெயர்ப்பேன். பிறகு கிடப்பில் போடுவேன். இதற்கிடையில் நசிகேதன் தமிழாக்கத்தில் என்னுடைய போட்டியாளராக வரவிருந்த மா. தக்ஷிணாமூர்த்தி அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து முடித்தார். அதுவும் ரைட்டர்ஸ் ஒர்க் ஷாப் வெளியீடாக 2019இல் வெளிச்சம் கண்டது. ‘உதவாது இனி ஒரு தாமதம்’ என்ற மனநிலை உருவானது. தமிழாக்கத்தைத் தொடர ஆரம்பித்தேன்.


நினைத்ததுபோல அவ்வளவு விரைவாகவோ எளிதாகவோ தமிழாக்க முயற்சியில் முன்செல்ல முடியவில்லை. என்னுடைய அடிப்படையான இயல்புக்கும் கவிதைப் பொருளுக்குமான விலகலே முக்கிய காரணம். என்னுடைய சிந்தனைக்குள் கவிதையைப் பொருத்திக்கொள்ள எளிதாக முடியவில்லை. இதை என்னுடைய தனிப்பட்ட இடர்ப்பாடு என்பதை விட ஒரு தலைமுறையின் சிக்கலாகவே உணர்ந்தேன்.


இடமும் பின்புலமும் வேறாக இருந்தாலும் ரவிகுமாரும் நானும் ஏறக்குறைய ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள். ஏறத்தாழ ஒரே மாதிரியான அனுபவங்களைக் கொண்டவர்கள். 1970களின் கருத்துலக ஆவேசங்களில் கிளர்ச்சி பெற்றவர்கள். இடதுசாரிச் செயல்பாடுகளின் சக பயணிகள். ரவிகுமார் சிறிய அளவில் நக்சல்பாரி இயக்கத்துடன் இணைந்து நின்றவர். ஓரளவுக்கு இது எழுபதுகளில் இளைஞர்களின் பொது இயல்பாகவே இருந்தது. தொண்ணூறுகளில் இந்த ஈர்ப்பு மறைந்தது. அதுவரை நம்பிய கருத்துக்களும் செயல்பாடுகளும் ‘மாயை’ என்று விளங்கின. மனம் சோர்ந்த நம்பிக்கையாளர்கள் பலரும் வெவ்வேறு திசைகளிலும் தடங்களிலும் சென்றனர். முன்னாள் பாட்டாளித் தோழர் முதலாளியாகவும் ஏலச்சீட்டுக்காரனைக் கழுவேற்றியவர் கந்து வட்டிக்காரனாகவும் அப்பழுக்கில்லாத நாத்திகர் சாயிபாபா பக்தராகவும் வன்முறையே மாற்றத்துக்கான வழி என்று துப்பாக்கி தூக்கியவர் காந்தியவாதியாகவும் மாறினர். காலடி மண் பிளந்தபோது நம்பிக்கை இழந்தவர்களில் சிலர் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டார்கள். சிலர் சந்தேகப் பிராணிகளாகவே அலைந்தார்கள். முன்னதற்கு பி.ரவிகுமாரையும் பின்னதற்கு என்னையுமே உதாரணங்களாக எடுத்துக் கொள்கிறேன். மனிதர்களையும் உலகையும் கடந்த ஒன்றைப் பற்றிய பதில் அவருக்கு இருக்கிறது. மனிதர்களை மீறாத உலகைத் தாண்டாத ஒன்றைக் குறித்த கேள்வி மட்டுமே என்னிடம் எஞ்சியிருக்கிறது. இந்த இரு நிலைகளையும் விளங்கிக் கொள்வதில் சந்தேகம் ஏற்பட்டது.
















புல்லாங்குழல் கலைஞர் குடமாளூர் ஜனார்த்தனன், ரவிகுமார், சுகுமாரன்


         

          கடோபநிடதத்தில் இடம் பெற்றிருக்கும் கதை நசிகேதனுடையது. முனிவரான வாஜசிரவஸ் சகல சௌபாக்கியங்களையும் அளிக்கக் கூடியதாகச் சொல்லப் படும் விஸ்வஜித் யாகத்தை நடத்துகிறார். யாகத்தை முன்னிட்டு இரவலர்களுக்குக் கறவைப் பசுக்களுக்குப் பதிலாக மலட்டுப் பசுக்களைத் தானமாகக் கொடுக்கிறார். தந்தையின் அற்ப குணம் மகன் நசிகேதனுக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது. என்னை யாருக்குத் தானம் கொடுப்பீர்கள் என்று கேட்டு அடம்பிடிக்கிறான். அவனை எமனுக்குக் கொடுப்பதாகத் தந்தை சொல்ல எமனைச் சந்திக்கச் செல்கிறான் நசிகேதன். வாழ்வின் பொருள் என்ன என்று அவன் கேட்கும் கேள்விகளை மெச்சிய எமன் அவனை மீண்டும் மண்ணுலகத்துக்கு அனுப்பி வைக்கிறான்.


இந்தப் புராணக் கதைக்குக் காலங்காலமாக வெவ்வேறு வியாக்கியானங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆன்மீக அடிப்படையிலும் மதநம்பிக்கை சார்ந்தும் விளக்கங்கள் அளிக்கப் பட்டிருக்கின்றன. ஆன்மீகவாதிகள் அளிக்கும் விளக்கங்கள் மானுட இருப்பைக் கடந்த கற்பிதநிலைக்குச் செல்கின்றன. மதச்சார்பாளர்கள் சொல்லும் பொழிப்புரைகள் இறைமையைப் பற்றிய அச்சத்தையே முன்வைக்கின்றன. புழக்கத்திலுள்ள இலக்கணப் படியான ஆன்மீகவாதக் கருத்துக்களுடன் எனக்கு உறவு இல்லை. மானுட இருப்பை மீறாத இம்மைசார்ந்த நிலையாகவே ஆன்மீகம் இருக்கும் என்பது என் எண்ணம். சமூக இணக்கத்துகான அமைப்பாக மட்டுமே மதத்தைக் கருதுகிறேன் அதைத் தாண்டி மதம் மனிதனுக்குத் தவிர்க்கவியலாதது; முற்றானது என்ற பிடிவாதம் கொண்டவன் அல்லன். எனவே இந்தக் கவிதையின் புராணச் சட்டகத்துக்குள்ளே நுழையவும் அதன் பொருளைப் பகுத்து அறியவும்  இயலவில்லை. ஆசிரியர் இந்தக் கவிதைக்குள்ளும் வெளியிலுமாக எடுத்தாண்டிருக்கும் உப நிடத, புராண நூல்களை மறுவாசிப்புச் செய்தும் இயலாமை நீடித்தது. இந்தச் சிக்கல் மொழிபெயர்ப்புப் பணியை முடக்கியது. ஒரு கட்டத்தில் இது நம்மால் ஆகிற வேலையல்ல என்ற சோர்வும் சூழ்ந்தது.


தொற்றுநோய்க் கால வீட்டுமுடக்கம் படைப்புக்கான மனநிலையைத் தூண்டிவிட்டபோது மீண்டும் நசிகேதன் மொழிபெயர்ப்பைக் கையிலெடுத்தேன். அதற்குத் துணையாக வாசித்த நூல்களிலிருந்து இரு செப்பக் கருவிகள் கிடைத்தன. ‘கவிதை மிக நல்லதேனும் அக் கதைகள் பொய்’ என்ற பாரதி வரியும் ‘எல்லாவற்றையும் காணுகின்ற கண்ணைக் கண் காண்பதில்லை ‘என்ற நாராயண குருவின் ‘ஆத்ம விலாசம்’ வரியுமே அந்தக் கருவிகள். பொய்யான கதையின் ஆழத்திலிருக்கும் உண்மையையும் கண்ணைப் பார்க்கும் கண்ணையும் தேடியதில் கவிதை வெளிச்சம் கண்டது. மொழி பெயர்ப்பு எளிதாயிற்று. நசிகேதனை ஆன்மீகக் கவிதை, சமயத் தொன்மம் என்று கொள்வதைவிட சமகால மனித இருப்பின் அலைச்சல் என்று எடுத்துக் கொண்டபோது கவிதை நவீன இயல்புக்கு மாறியது. அதற்கு ஏற்ப மொழியும் திரண்டது.



இடையீடாக இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். கருத்துத் தெளிவுக் காகவே பாரதி பாடல்களையும் நாராயண குருவின் படைப்புகளையும் நாடினேன். தற்செயலாக நிகழ்ந்தது இது. எனினும் அந்தத் தருணத்தில்  இருவருக்கும் இடையிலிருந்த ஒற்றுமைகள் நினைவுக்கு வந்தன. இருவரும் ஆன்மீகவாதிகளாகக் கருதப்படுபவர்கள். அத்வைதச் சிந்தனையாளர்கள். புலனாகாத விண்ணில் அல்ல; கண்முன் காணும் உலகில்தான் மனிதனின் மேன்மைநிலை என்று கருதியவர்கள். மண்ணில் தெரியுது வானம் என்று கவனப்படுத்தியவர்கள். இந்த ஒற்றுமைகள் வியப்பை அளித்தன.



நசிகேதனில் ரவிகுமார் கையாளும் மொழி சம்ஸ்கிருத ஆதிக்கம் மிகுந்தது. வரியமைப்பும் அதையொட்டியது. மலையாளத்தில் அது ஏற்கத் தகுந்தது. ஆனால் இன்றைய தமிழுக்குப் பொருந்தவில்லை. சிருஷ்டி, அக்னி, ஜலம், பிரளயம், போதம், இந்திரியம் போன்ற சம்ஸ்கிருத வார்த்தைகளுக்குப் பதிலாகப் படைப்பு, நெருப்பு, நீர், பெருவெள்ளம், உணர்வு, புலன் என்ற தமிழ்ச் சொற்களே உவப்பானவையாக இருந்தன. தமிழ் வாக்கிய அமைப்பே  பெரிதும் கைகூடி வந்தது. தவிர்க்க இயலாத இடங்களில் மட்டுமே சம்ஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்தி யிருக்கிறேன்.



புராணகாலத்தைப் பின்புலமாகக் கொண்ட இந்தக் கதைக்கும் கவிதைக்கும் நிகழ்காலத்துடன் ஏதேனும் பொருத்தமுண்டா என்ற ஐயம் அவ்வப்போது எழுந்தது. கவிதைக்குள் வரும் நரகலோக வர்ணனைகளும் எமனிடம் நசிகேதன் நடத்தும் உரையாடலும்  ஐயத்தைப் போக்கின. ஏறத்தாழ அதே போன்ற நரகத்திலும் அதேபோன்ற காலத்திலும்தான் வாழ்கிறோம்.


இதுவரை தொடர்ந்து வந்த இருப்பு நிலைகுத்தி நின்ற கணத்தில் எல்லா மனிதர்களுக் குள்ளும்  இருப்பைப் பற்றிய சிந்தனை எழுந்திருக்கும்; மரணம் பற்றிய கேள்விகள் எழுந்திருக்கும்; வாழ்வின் பொருள் என்ன என்ற பதைப்பு எழுந்திருக்கும். இந்தச் சிந்தனையின், கேள்வியின், பதைப்பின் உருவகமாகவே ரவிகுமாரின் நசிகேதனைப் பார்க்கிறேன். (அவர் அப்படித்தான் சித்தரிக்க விரும்பினாரா என்பது எனது அவதானிப்பின் முகாந்திரம் அல்ல). இன்றையதைப்போல மானுட இருப்பு நெருக்கடியில் ஆழ்ந்த ஏதோ காலத்தில் மனிதர்கள் வெளிப்படுத்திய உணர்வின் படிமம் நசிகேதன். ஆன்மீகம், அந்தப் படிமத்தின்மீது புனுகையும் மதம், எண்ணெய்க் களிம்பையும் பூசிவிட்டிருக்கிறது. பூச்சுக்களைச் சுரண்டித் துப்புரவாக்கியதும் எப்போதும் கேள்வி எழுப்பி விடைகாணும் வேட்கைகொண்ட நிரந்த மனிதன் வெளிப்படுகிறான். அவன் கேள்விகேட்பது தன்னிடமே. பதில் காண்பதும் தன்னுள்ளேயே. கேள்வி தூண்டிவிடும் தேடலும் பதில் கண்டடையும் அமைதியும் மனிதனுக்கு மட்டுமேயான இயல்பு, அல்லவா?


2000ஆம் ஆண்டின் இறுதியில் பணிநிமித்தம் திருவனந்தபுரத்துக்குக் குடிபெயர்ந்தேன். அந்த நாட்களில் அறிமுகமான நண்பர்களில் பி.ரவிகுமாரும் ஒருவர். இரு பதிற்றாண்டுகளுக்குப் பின்னும் இருவருக்கும் இடையிலான நட்பு தொடர்கிறது. தேர்ந்த பத்திரிகையாளர், இசை விரும்பி, இலக்கிய ஆர்வலர், இசை விமர்சகர் என்று அவருக்குப் பல முகங்கள் உள்ளன. அந்த முகத்தோற்றங்கள் அனைத்தும் எனக்கும் விருப்பமானவை என்பது நட்புக்குக் காரணம். இசை தொடர்பாகவும் மலையாள இலக்கியம் தொடர்பாகவும் எனக்கு எழும் சந்தேகங்களுக்கு உடனடி விளக்கத் தீர்வும் அவரே. இசை குறித்த ரவிகுமாரின் பார்வையும் அவதானிப்புகளும் தனித்துவமானவை. அதை முன்னிருத்தியே கட்டாயப் படுத்திச் சில கட்டுரைகளை எழுதுவித்து அவற்றைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டுமிருக்கிறேன். நட்புப் பாராட்டலும் தனித்துவத்தைப் பொருட் படுத்தலுமே அவரது நசிகேதனை மொழி பெயர்க்க என்னைத் தூண்டின. புராண ஐதீக ஆன்மீக விவகாரங்களில் ஈடுபாடு இல்லாதவன் மொழிபெயர்ப்புச் சாகசத்துக்கு ஆயத்தமானதும் மேற்சொன்ன காரணங் களால்தான். அவை எனக்கு உடன்பாடான சில பயன்களைக் கொடுத்தன. புறமுதுகு காட்டி நின்ற சில தொல்பிரதிகளைத் துணிந்து வாசிக்கவும் ஆதாரமான சில சிந்தனைகளை மறு அலசலுக்கு எடுத்துக் கொள்ளவும் அந்தரங்கமான மொழிவளத்தைச் செழுமைப்படுத்திக் கொள்ளவும் இந்த மொழியாக்கம் உதவியது.

‘நசிகேதன்’ கவிதையின் தமிழாக்கத்தை நீங்கள்தான் செய்ய வேண்டும்’ என்ற நம்பிக்கை தொனிக்கும் வாசகத்தை நண்பர் சொல்லாமல் இருந்தால் இந்த மொழியாக்கம் நடந்திராது. அதற்காக பி.ரவிகுமாருக்கு நன்றி.











நசிகேதன்







நசிகேதனிடம் எமன் உரைத்தான்: 

இங்கு உள்ளது எதுவோ
அதுவே அங்கும் 
அங்கு உள்ளது எதுவோ 
அதுவே இங்கும்.


இங்கு 

பலவற்றையும் காண்பவன் 
மரணத்திலிருந்து மரணத்துக்குச் செல்கிறான்1


பிறவிகளின் தொட்டிலில் 

நசிகேதன் கண்விழிக்கிறான் 
ஒரு தாலாட்டில் கரையச் 
செவிகூர்ந்து கிடக்கிறான்


சுக்கில சுரோணித சங்கமமாகத்2

திரவ வடிவில் 
ஒன்றாம் மாதம் கடந்தது


இலவம் பஞ்சு முகையனைய 

பிண்டமாக 
இரண்டாம் மாதம் கடந்தது.


சிரசுக்கும் 

கை, கால்களுக்கும் 
ஐந்து முளைகள் கிளைத்தன


சிரசின் முனையில் 

கழுத்து 
காதுகள் 
கண்கள் 
மூக்கு 
வாய் அரும்பின


கைகளின் முனையில் 

தோள் 
புயம் 
மணிக்கட்டு
விரல்கள் உருப்பெற்றன 
கால்களின் முனையில் 
தொடைகள் 
குறி 
மூட்டுகள்
கணுக்கால்கள் 
விரல்கள்  
உருப்பெற்றன 
மூன்றாம் மாதம் கடந்தது.


அங்கங்கள் மேலும் துலங்க 

நான்காம் மாதம் கடந்தது.

இதயம் துடிக்க 

சிந்தை தெளிய 
தசை திரளக் 
குருதி வலுவூற 
ஐந்தாம் மாதம் கடந்தது.


சூக்கும நரம்புகள் 

எலும்புகள் 
நக சிகை ரோமங்கள் 
எல்லாம் உருப்பெற 


ஆறாம் மாதம் கடந்தது 

கால்கள் ஒடுங்கி 
கைகள் ஒடுங்கி 
கைகள்கொண்டு காதுகள் பொத்தி 
நரகக் குறுகலில் 
ஏழாம் மாதம் கடந்தது.


ஓசைகளின் வருகைக்கு 

அஞ்சி நடுங்கி 
எட்டாம் மாதம் கடந்தது.


எண்ணிலா மாந்தரின் 

எரியும் நினைவுகளில் 
ஏகாங்கியாய் எரிந்து 
எதையும் தாளாமல் 
சிரசின் மேல் கைகூப்பி 
ஒன்பதாம் மாதம் கடந்தது.


பூமியைத் தொட்ட நொடியில் 

எல்லாமும்  
மறதியில் ஆழ்ந்தன


பிறவிகளின் தொட்டிலில் 

நசிகேதன் கண்விழிக்கிறான் 
ஒரு தாலாட்டில் கரையச்  
செவிகூர்ந்து கிடக்கிறான்


இவ்விழியை இன்று 

திறப்பது எதற்கோ 
இம்முலை உறிஞ்சிப்  
பருகுவது எதற்கோ 
இம் முடியைக் கோதி 
மினுக்குவது எதற்கோ 
இவ்வழகு மாலையைச் 
சூடுவது எதற்கோ?


இம் மணித் தூளியில்  

ஆடுவது எதற்கோ 
இத் திலகம் நுதலில் 
சார்த்துவது எதற்கோ 
இப் பட்டை இடையில் 
உடுப்பது எதற்கோ 
இக் காற்சிலம்பை 
குலுக்குவது எதற்கோ
இச்சிரிப்பு இதழில் 
உறைவது எதற்கோ 
இப் பாட்டைக் கேட்டு நீ
உளைவது எதற்கோ?


படைப்புக்கு முன்னர் இங்கே எதுவும் இல்லை பசித்த மரணத்தால் எல்லாம் சூழப் பட்டிருந்தன3


மரண தரிசனத்தில் 

பிரக்ஞை மரத்து 
உதிரம் குளிர்ந்து உறைந்து 
அசைவற்றிருக்கும் 
எலியின் கண்களில் உயிரின் நடுக்கம் 
மறைவிடம் தேடித் தாவும் 
முயலின் பிராணப் பாய்ச்சல் 
அசையாத நீர்த் தொலைவுகளில் 
திசையின்றி நீந்தும் தலைப்பிரட்டைகள் 
பிறவிகளின் 
அழுக்குப் பொதிகள் சுமந்து 
அனாதியான காலத்தில் துணுக்குற்று


அந்தமில்லா இடத்தில் திகைப்புற்று 

வழி மறக்கும் கழுதைகள்.

வலியவை

வலுவில்லாதவற்றை உண்கின்றன 
உயிர் 
உயிரைத் தின்று வாழ்கிறது.4


எறும்பின் கண்களில் 

காலம் 
இருண்ட நினைவாய் உறைகிறது. 
கால்களில் 
இடம் 
வேதனையாக விம்முகிறது.


ஒரு பாதி நெல்மணியை

உயிரால் உந்தியும் 
விழுந்தும் புரண்டும் நடுங்கியும் வெருண்டும் 
எங்கோ மறைவதற்காக 
மீண்டும் 
துயரமாய் வந்து பிறப்பதற்காக.


மீண்டும்  

ஒரு பாதி நெல்மணியைத் தேட 
மீண்டும்  
சின்னஞ்சிறு மோகங்கள் ஊற்றெடுக்க…


காலம் 

நினைவாக உறைய 
இடம் 
வேதனையாக விம்ம . . .


சென்றடைவது எங்கு என்று அறியாமல் 

போகின்றன 
சென்றடைவது எக் காலம் என்று அறியாமல்  
போகின்றன 
சென்றடைவது எதற்கு என்று அறியாமல் 
போகின்றன 
சென்றடைவோமா என்று அறியாமல் 
போகின்றன.


எங்கோ மறைவதற்காக 

மீண்டும் 
துயரமாய் வந்து பிறப்பதற்காக.


கற்பனைகள் நீங்கிய போதத்தில், ஆடியில் தெரியும் பிம்பமாக எந்தப் பயனும் இல்லாமல் பிரதிபலிக்கிறது இந்தப் பிரபஞ்சம்.5

அப்போதும் பாட்டி 

இருட்டைப் பார்த்து அமர்ந்திருக்கிறாள்

மாட்டு வண்டிகள் 

மந்தகதியில் நகர்கின்றன 
மாடுகளின் கழுத்து மணியோசை 
விலகிவிலகிச் செல்கிறது


வழி 

ஆளற்றும் 
அரவமற்றும் நீள்கிறது


மலைமுகட்டில் எரிந்து நின்ற  

விளக்கும் 
அணைந்து போகிறது


அப்போதும் பாட்டி 

இருட்டைப் பார்த்து அமர்ந்திருக்கிறாள்

வியர்த்தமும் 

வேதனையும் 
கொடூரமுமான 
கர்ம பந்தங்களின் 
பகல்கள் 
இரவுகள் 
பருவங்கள் 
ஆண்டுகள் 
பிறப்புகள் 
பிறப்பின்மைகள் 


அப்போதும் பாட்டி 

இருட்டைப் பார்த்து அமர்ந்திருக்கிறாள்

உதிரம் சுண்டி

உலர்ந்து வறண்ட சக்தியின் 
இறுதித் துளியும் 
வடிந்து போன 
எலும்புகள் உந்திய 
விகாரமான நடுங்கும் கரங்களால் 
மலைகளை நகர்த்தும் அலுப்புடன் 
பாட்டி 
பொழுதைத் தள்ளி நகர்த்துகிறாள்.


காலம் 

எங்கும் செல்வதில்லை 
எங்கிருந்தும் வருவதுமில்லை 
காலம்  
அஸ்தமி்ப்பதில்லை 
உதிப்பதுமில்லை.6


வெளியில் 

பனிபொழிந்து கொண்டிருக்கிறது 
எண்ணெய் விளக்கில் எரிகிறது 
அசையாச் சுடர்.


அசையாச் சுடரின் 

நிழல் வட்டம் 
நிழல் வட்டத்தின்  
நிறையமைதியில் 
ஒரு கரப்பான் 
சமாதி பூண்டிருக்கிறது.


சராசரங்கள் எல்லாம் 

நித்திரையில் ஆழ்ந்திருக்கின்றன 
ஒருவன் மட்டும்  
விழித்திருக்கிறான்.


அவன் 

குப்பை கூளங்கள் சேர்த்துத் 
தீ மூட்டுகிறான்.


அவன்  

கனன்றெரியும் தீக் கொழுந்துகளைப்  
பார்த்துக் கொண்டிருக்கிறான்


ஓ, 

இதோ சிறு சாளரத்தினூடே வரும் 
கதிரொளிக் கதிரில் 
மிதந்து புரளும் தூசிபோல 
அண்டகோடிகள் அலைகின்றன7


நான் நிலைத்திருக்கிறேன் 

எண்ணற்ற பிரபஞ்சங்கள் தோன்றி 
எனக்குள் சுற்றிச் சுழல்கின்றன 
நான் நிலைத்திருக்கிறேன்.8


குருவே 

மன்னர் நகருள் பிரவேசிக்கிறார் 
குடிகள் மன்னரைக் காணக் கூடுகிறார்கள்9


நாம் 

வழியொதுங்கி நிற்போம்

நிதாகா, 

இதில் மன்னர் யார்? 
மக்கள் யார்? 
யானைமேல் வீற்றிருப்பவர் மன்னர் 
மற்றவர் மக்கள்


யானையையும் மன்னரையும் 

ஒன்றாகத்தானே 
நீ எனக்குக் காண்பிக்கிறாய் 
இரண்டுக்கும்  
அடையாளங்கள் சொல்வாயாக


இதில் எது யானை? 

எது மன்னர்?

கீழிருப்பது யானை 

யானைமேலிருப்பது மன்னர்

கீழ் என்பது எது? 

மேல் என்பது எது?

திடுமென நிதாகன்  

இருபுவின் சிரசில் 
ஏறியமர்ந்து உரைக்கிறான்:


இப்போது நான் 

மன்னரைப்போல மேலே 
நீங்கள் 
யானையைப்போலக் கீழே.


நிதாகா, 

நீ மன்னரைப்போல மேலும் 
நான் யானையைப்போல கீழும் எனில் 
இதையும் எனக்குச் சொல்வாயாக.


நீ யார்? 

நான் யார்? 

மகனே 

நீ உனது 
கர்மங்களை மறந்து விடுகிறாய்.

புற்கொடிகளையும் 

புழுக்களையும் 
பட்சிகளையும் 
புனல்களையும் 
அந்தியையும் 
விண்மீனையும் 
நிலவையும் பார்த்துத் 
தன்னை மறந்திருக்கிறாய் நீ.


மகனே 

எப்போதும் சிந்தனையில்  
எரிந்து கொண்டிருக்கிறாய் நீ.


தந்தையே,10

கர்மச் சுழற்சியின் 
எண்ணில்லா ஆதிப் பிணிகளில் 
அகப்பட்டு நொந்து  
இவ்வாறு 
விலங்குகள்போல 
வாழ்வைப் பாழாக்க 
என்னால் இயலாது. 
வெட்டுபவன் பின்னே 
ஆதரவற்று 
அநாதையாக 
மௌனமாக 
அதி தீனமாக 
நொண்டி நொண்டி நகரவே…


பசு 

மெல்லத் தலை திருப்பி 
இறுதியாக என்னைப் பார்த்தது.


அப்போது 

அந்தக் கண்களில் நிறைந்த 
பெரும் பீதியை 
முற்றிலும் மறைத்துச்  
சட்டென்று ஒளிர்ந்த 
அந்த மினுக்கம்.


கடவுளே, 

அது என்னை வேட்டையாடுகிறது.

என் புலன்களை 

என் இதயத்தை 
என் பிரக்ஞையை 
என் ஞானத்தை 
என் புண்ணியத்தை 
என் பூமியை 
என் ஆகாயத்தை 
என் இருப்பை


நொடிதோறும் அது 

எரித்துக் கொண்டிருக்கிறது.

நான் விடைபெறும் நேரமாயிற்று.

காகபுசுண்டா 

காகபுசுண்டா 
காகபுசுண்டா 
பறந்து வா.


உன் சிறகின் கருமையால் 

என் காட்சிகளை மூடு

உன் நீள்கரைச்சல் பேய்க்குரலால் 

என் சொற்களை ஒடுக்கு

உன் அலகின் வலிமையால் 

என் சித்தத்தைக் கொத்தி உடை

உன் கண்ணின் தீக் கனலால் 

என் மாயங்களை நீறாக்கு

உன் அழிவின்மையால்

என் வாழ்வைச் சட்டென்று அவிழ்.

இரண்டு எருமைகள் 

இருண்ட வழியில் 
உன்மத்தம் முற்றிப் பாய்கின்றன


எருமைகள் பூட்டிய வண்டியில் 

ஒருவன் மறைந்திருக்கிறான்.

இரண்டு தூதர்கள் 

இரண்டு கால்களையும் 
பிணித்துப் பின்னிக் கட்டுகிறார்கள்


குளிர்ந்த கைகளை 

இடைக்குப் பின்னால் 
இழுத்து இறுக்கிக் கட்டுகிறார்கள்.


கறுத்த துணியால் 

என் இரு கண்களையும் மூடுகிறார்கள்.

‘அன்பு மகனே, 

நீ எங்களைக் கைவிட்டுச் செல்கிறாயா? 
இனி யாரிருப்பார் எங்களுக்கு? 
நீயல்லவா எங்களுக்கு 
எல்லாமாக இருந்தாய்?’11


கர்மத்தின்  பொருட்டு 

தேவர்,மானிடர்,மிருகம், விருட்சம், கொடிகளின்  யோனிகளில் 
பிறவியெடுத்துச்  
சுற்றி அலையும் ஜீவன்   நான். 
கடந்து போயின எண்ணற்ற பிறவிகள் 
காத்திருக்கின்றன எண்ணற்ற பிறவிகள் 
இந்தப் பிறவிகள் ஒன்றில் 
உங்கள் மகனாகப் பிறந்தேன்.


ஒருவன் மற்றவனுக்குப்  

பொன்னையும் பிற திரவியங்களையும் விற்கிறான் 
இன்னொருவன்  
அவனிடமிருந்து வாங்குகிறான் 
இவ்வாறாக  
இந்தச் செல்வங்கள் 
பலரை அடைகின்றன; பிரிகின்றன.


இதுபோன்றே ஜீவனும் 

பெற்றோருள் புகுந்தது 
பிரிந்தும் போகிறது.


எனக்கு நேரமாயிற்று 

இதோ, நான் செல்கிறேன்.

காசி 

கங்கை 
அடங்காத அலைகள்


மணிகர்ணிகையில் 

பிணங்கள் எரிகின்றன 
பாதி வெந்த பிணங்கள் 
கங்கையில் மிதக்கின்றன


மணிகர்ணிகையில்  

சிதை நெருப்பு 
ஒருபோதும் அணைவதில்லை.


நரக தரிசனத்தின் 

கருணையில்லாக் காட்சிகள்.

அந்நியனின் தனத்தையும் சந்தானத்தையும்12

மனையாளையும் அபகரித்தவன் 
அதிபயங்கர எமதூதர்களால் 
காலபாசத்தால் பிணைக்கப்பட்டு 
தாமிஸ்ரம் என்ற நரகத்தில் தள்ளப்படுகிறான். 
அவனுக்கு உணவோ நீரோ கொடுப்பதில்லை 
பலவித சித்திரவதைகளைச் செய்கிறார்கள் 
அச்சுறுத்துகிறார்கள் 
அவன் உணர்விழக்கிறான்.


உடைமையாளனை வஞ்சித்து அவன் மனைவியையும் 

செல்வத்தையும்  துய்த்தவன்  
எமதூதர்களால் அந்ததாமிஸ்ரம் என்ற நரகத்தில் தள்ளப்படுகிறான். 
கொடும் வேதனையால் உணர்விழந்து 
கண் கெட்டு 
வேரோடு  பெயர்ந்த  விருட்சம்போல 
அவன் கிடக்கிறான்.


உடம்பைத் தனதென்றும் 

மனைவி, மக்கள், செல்வம் தன்னுடையதென்றும் 
அகந்தை கொண்டு 
அவர்களைப் பேண 
உயிர்களை வதைத்துக் குடும்பம் நடத்தியவன் 
எல்லாவற்றையும் பூமியில் விட்டு 
சுயபாவ கர்மத்தால் 
இங்கே 
ரௌரவம் என்ற நரகத்தில் வந்து வீழ்கிறான். 
இவன் பூவுலகில் வதைத்த உயிர்கள் 
பாம்புகளைவிடக் கொடிய  
ருருக்கள் என்ற பிராணிகளாகி 
இவனை இங்கே வதைக்கின்றன.



உயிர்க்கொலை செய்து உடல்வளர்த்தவன் 

மகா ரௌரவம் என்ற நரகத்தில் வீழ்கிறான் 
கிரவ்யாதங்கள் என்ற ருருக்கள் 
இவனது மாமிசத்தைப் புசித்து 
இவனைத் துன்புறுத்துகின்றன. 
விலங்குகளையும் பறவைகளையும் 
உயிருடன் வேகவைத்துத் தின்ற கொடும்பாவியை 
எமதூதர்கள் 
கும்பீபாகம் என்ற நரகத்தில் 
கொதிக்கும் எண்ணெயிலிட்டு வறுக்கிறார்கள்.



பெற்றோரையும் ஞானியரையும் துன்புறுத்தியவனை 

காலசூத்திரம் என்ற நரகத்தில் 
அளவிலாத் தூரம் விரிந்ததும் 
கீழே அக்கினியும் 
மேலே தகிக்கும் சூரியனும்  
ஓயாது பொசுக்கும்  
செப்புத் தகடு பாவிய  
சமநிலத்துக்குக் கொண்டுவருகிறார்கள். 
கொடும் வெம்மையில்  
அகமும் புறமும் ஒருபோலத் தகிக்க 
அவன்  
நாற்புறமும் ஓடுகிறான்.



நிரபராதிகளைத் தண்டித்த  

கொடிய பாவியான அரசனை  
சூகரமுகம் என்ற நரகத்தில் தள்ளுகிறார்கள். 
அங்கே  
உடல்வலுத்தவர்கள் 
இந்த அரசனின் அவயவங்களைக்  
கரும்பை ஒடிப்பதுபோல ஒடிக்கிறார்கள் 
அவன் ஓலமிட்டலறி மயங்கி விழுகிறான்.



இறை ஆணைக்குப் பணிந்து 

இரைதேடும் எறும்பு, பறவைகள் போன்ற  உயிர்களை  
சித்திரவதை செய்தவன் 
அந்தகூபம் என்ற நரகத்தில் தள்ளப்படுகிறான்.



மற்றெவர்க்கும் பங்கிடாமல் 

ஒற்றையாய் உணவுகொண்டவன் 
கிருமிபோஜனம் என்ற நரகத்தில் தள்ளப்படுகிறான். 
நூறாயிரம் யோஜனையுள்ள 
அந்தக் கிருமி குண்டத்தில் 
அவன் கிருமியாகிறான் 
கிருமிகளையே தின்கிறான்.



அந்நியனின் சொத்தைக் களவாடியவனை 

வழிப்பறி செய்தவனை  
எமதூதர்கள் சந்தம்சம் என்ற நரகத்தில் தள்ளுகிறார்கள் 
கனல்துண்டுபோலப் பழுத்த 
இரும்புத் தண்டுகளால் 
அவன் உடலைப் பொசுக்குகிறார்கள்.



பேதாபேதமில்லாமல்  

எல்லாப் பெண்களுக்குள்ளும் நுழைந்தவன் 
வஜ்ரகண்டக சால்மலி என்ற நரகத்தில் தள்ளப்படுகிறான் 
அவன் வஜ்ஜிரம்போன்று கூர்முட்கள் நிறைந்த  
சால்மலி மரத்தில்  
நிரந்தரமாக ஏற்றி இறக்கப்படுகிறான்.



அறம் பிறழ்ந்த அரசனும் 

அரச மாந்தரும் 
வைதரணி என்ற நரகத்தில் வீழ்கிறார்கள். 
இங்கே வைதரணி என்ற நதி ஓடுகிறது. 
மலம், சிறுநீர், சலம், குருதி, 
தலைமயிர், நகங்கள், எலும்புகள், 
தோல், மாமிசம், நிணம் நிறைந்தது வைதரணி. 
இதில் விழுந்த 
அரசனையும் அரசமாந்தரையும் 
நீர்வாழ் உயிர்கள் முற்றுகையிட்டு விழுங்குகின்றன. 
அப்போது அவர்கள்  
தமது பாவச் செயல்களை நினைக்கிறார்கள்.



நாணமற்று விலங்குகள்போலக் 

காமத்தில் புரண்டவர்களை 
பூயோதம் என்ற நரகத்தில் இடுகிறார்கள். 
சலம், மலம், சிறுநீர், கோழை  நிறைந்த 
அந்தக் கடலில் விழுந்தவர்கள் 
அந்தப் பொருள்களையே புசிக்கிறார்கள்.



வேட்டையை விரும்பி 

விலங்குகளைத் துன்புறுத்தியவர்கள் 
பிராணரோதம் என்ற நரகத்தில் தள்ளப்படுகிறார்கள். 
எமதூதர்கள் அம்பெய்து 
அவர்களைக் காயப்படுத்துகிறார்கள்.



வேள்விகளில் மிருகங்களை வதைத்தவர்கள் 

விசஸனம் என்ற நரகத்தில் தள்ளப்படுகிறார்கள். 
எமதூதர்கள் அவர்களது உறுப்புகளைத் 
துண்டுதுண்டாக வெட்டுகிறார்கள். 



வீடுகளைக், கிராமங்களை, மக்கள் கூட்டத்தைத் 

தீவைத்தும் 
விஷமூட்டியும் அழித்த 
கள்வர்களையும் அரசர்களையும் படைவீரர்களையும் 
சாரமேயாதனம் என்ற நரகத்தில் தள்ளுகிறார்கள். 
வஜ்ஜிரக் கோரைப் பற்களுடன்  
நாய்கள் உருவிலிருக்கும் எமதூதர்கள் 
கடுங்கோபத்துடன் இவர்களைக்  
கடித்துக் குதறுகிறார்கள்.



சாட்சிமொழியிலும் கொடுக்கல் வாங்கலிலும் 

பொய்யுரைத்தவனை 
எமதூதர்கள் 
அவீசி என்ற நரகத்தில் தள்ளிவிடுகிறார்கள். 
நூறு யோஜனை உயர மலைச் சிகரத்திலிருந்து 
தலைகீழாகத் தள்ளிவிடுகிறார்கள். 
அவனது அங்கங்கள் எள்மணிபோல நொறுங்குகின்றன 
எனினும் அவன் இறப்பதில்லை. 
மீண்டும் அவனைத் 
தலைகீழாகத் தள்ளிவிடுகிறார்கள்.



மனிதர்களைப் பலியிட்டு 

அவர்கள் மாமிசத்தைப் புசித்தவர்கள் 
ரக்ஷோகணபோஜனம் என்ற நரகத்தில் தள்ளப்படுகிறார்கள். 
அவர்களை
ராட்சதகணங்கள்  
ஆயுதத்தால் பிளப்பதுபோலப் பிளந்து 
ரத்தம் குடித்து உன்மத்தம் பூண்டு 
பாட்டுப்பாடிக் களிக்கிறார்கள்.



ஒருபோதும் 

ஓரிடத்தும் 
ஒன்றுக்கும் துன்பமிழைக்காத 
உணவு கிடைக்குமென்று நம்பி 
நெருங்கும் களங்கமற்ற உயிர்களை 
தந்திரத்தால் கவர்ந்து சூலங்களில் கோர்த்து 
விளையாட்டுப் பொருட்களாக்கிக் 
கொல்லாமல் கொல்பவர்கள்  
சூலப்ரோதம் என்ற நரகத்தில் தள்ளப்படுகிறார்கள். 
சூலங்களில் கோர்த்துத் தண்டிக்கப்படுகிறார்கள். 
பசி தாகத்தால் துவண்ட அவர்களைக் 
கழுகுகள் கொத்திக் கிழிக்கின்றன 
அப்போது அவர்கள் 
தாம் செய்த பாவங்களை நினைவுகூர்கிறார்கள்.



காலம் முழுவதும் பிராணிகளை வெருட்டிய 

கொடூர மனிதர்கள் 
தந்தசூகம் என்ற நரகத்தில் தள்ளப்படுகிறார்கள். 
வளை எலிகளை விழுங்குவதுபோலக்  
கொடும் பாம்புகள் அவர்களை விழுங்குகின்றன.



பிராணிகளை 

மூச்சுவிட முடியாத 
இடுங்கிய பொந்துகளிலோ  
குகைகளிலோ 
தானியக் குதிர்களிலோ  
அடைத்துத் துன்புறுத்தியவனை 
அவட நிரோதம் என்ற நரகத்தில் தள்ளுகிறார்கள் 
அங்கே  
இடுங்கிய பொந்துகளிலும் 
குகைகளிலும் அவனைப் புகச்செய்து 
விஷப்புகை எழுப்பும் அக்கினியால்  
தண்டிக்கிறார்கள்.



வீடேறி வந்த விருந்தினரை 

எரிப்பதுபோல 
வெறுப்புடனும் வன்மத்துடனும் பார்த்தவனைப்  
பரியாவர்த்தனம் என்ற நரகத்தில் தள்ளுகிறார்கள்.அவனுடைய பாவ விழிகளைக் 
கழுகுகளும் காக்கைகளும் 
வஜ்ஜிரபலமுள்ள அலகுகளால் 
வன்மையாகக் கொத்திப் பிடுங்குகின்றன.



தனவான் என்று  அகந்தைகொண்டும் 

ஒவ்வொரு நொடியும் செல்வத்தைக் குவித்தும் 
எல்லாரையும் ஐயுற்றும் 
இரப்பவர்களுக்கு எதுவும் கொடுக்காமலும் 
தன்னுடைய செல்வம் பாழாகுமோ என்று 
ஓயாமல் பதறிக் கொண்டும் 
பூதம்போலப் புதையலைக்  
காத்துக்கொண்டுமிருப்பவன் 
சூசிமுகம் என்ற நரகத்தில் தள்ளப்படுகிறான். 
யமதூதர்கள் தையற்காரர்களைப்போல 
அவனுடைய அங்கங்கள் அனைத்திலும்  
இண்டு இடுக்கில்லாமல் ஊசியால் குத்தி 
நூலால் வரிந்து கட்டுகிறார்கள்.



நரக நினைவுகளின் 

கருணையில்லா இரவுகளில் 
பசியும்  
தாகமும்  
உறக்கமும் மறந்து 
நசிகேதன் 
எமனுக்காகக் காத்திருந்தான்.


‘உலகில் அசைவதும் அசையாததும் எல்லாம் 

துயரத்தில் தவிப்பது ஏன்?’13

‘மனிதனுக்கு இச்சையில்லாத போதும் 

அவனை வலியக் கொண்டு புகுத்துவதுபோல் தூண்டிப் 
பாவம் செய்விப்பது யாது?’14


‘பிறப்பு, வளர்சிதைவு, பிணித்துயர்கள், மரணம் 

இவற்றினூடே கடந்து செல்லும் 
இந்த வாழ்வின் பொருள் என்ன?’ 


நசிகேதா, 

நீ கேட்பது 

இருப்பின்  ரகசியத்தை.

எமன் 

நசிகேதனை வாரியணைத்தான்.























சிசுவை முத்தமிடுவதுபோல 

எமன் 
நசிகேதனின் சிரத்தில் முத்தமிட்டான். 
நசிகேதன் ததும்புகிறான் 
அழுகிறான் 
கருணையின்  
பெருவெள்ளமாகிறான்  
நிலம் 
நீர்  
நெருப்பு 
வளி 
வான்  
அனைத்தும் அதில் மூழ்குகின்றன.



அந்திக் கதிர்களில் 

மின்னும்  
புராதனப் பாறைகள்



பாறைகளுக்கு இடையில் 

காற்றிலாடும்  
தளிர் இலைகள் 
தளிர்களின் செந்நரம்புகள்.


பெருங்கடலின் 

அபாரமான ஜலராசிக்குள்  
சூரியன் மறைந்தது.


பெருமலைத் தொடரில் 

முழு நிலவு உதித்தது 
பெருங் கானகம் ஒளிர்ந்தது.



காசி 

கங்கை அமைதியாக 
தன்னியல்பாய் ஓடுகிறது


கங்கையில் 

நிலவொளி படர்கிறது

மணிகர்ணிகையில் 

பிணங்கள் எரிகின்றன

சிதை நெருப்பு  

பேருருவாய் 
வெளிச்சம்  பொழிகிறது.15


சிவபூத கணங்கள் 

டமருகம் முழக்கி 
ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்றன.


இறுதியாய் எரிந்த 

சிதைச் சாம்பல் 
மகா காலனுக்கு  
அபிஷேகமாகிறது


மகா பிரவாகினியான 

கங்கையினூடே 
எரியும் மண் அகல்கள் 
காலத்தின் மறுகரைக்கு 
மிதந்து மறைகின்றன…



பிருகதீசுவரத்தின் மீதே 

ஆகாயம் கனிவுடன் சுரந்தது. 
மழையின் முதல் துளி 
நசிகேதனின்  
நெற்றியில் விழுந்தது.


அதி விளம்ப காலத்தில் 

பெய்கிறது மழை. 
அதி அதி விளம்ப காலத்திலிருந்து 
அதி விளம்ப காலத்துக்கு 
அதிவிளம்ப காலத்திலிருந்து 
மத்தியம காலத்துக்கு . . .
பார்த்து நிற்கும்போதே 
கனக்கிறது மழை.


ஆயிரங்கால் மண்டபம் நனைகிறது 

காவல்தேவியர் நனைகிறார்கள் 
நந்திகேச்வரச் சிலைகள் நனைகின்றன 
மகா கோபுரங்கள் நனைகின்றன 
கோபுர வாசலில் 
யானைகள் நனைகின்றன.


பசுக்கள் மழையில் குளித்து 

தலைதாழ்த்தி 
இன்பக் கிறக்கத்தில்  
அசையாது நிற்கின்றன.


கழுதைகள் 

அகண்ட நீர்த் தாரையில்  
தன்னினைவு இழக்கின்றன.

கருங்கற்களின் ஊடே மழைபெய்து இறங்குகிறது. 

கருங்கல்லைத் துளைத்து இறங்க்குகிறது.

இடைவிடாமல் 

ஏக தாளத்தில் பெய்யும் மழையில் 
பிருகதீசுவரம் 
தியானத்தில் ஆழ்கிறது . . .


கடலில் மழைபெய்கிறது 

கடல் மழையில் மூழ்குகிறது 
வனங்களில் மழைபெய்கிறது 
வனங்கள் மழையில் மூழ்குகின்றன.


முடிவில்லாது பெய்கிறது  

மழை.

இப்போது

மழையின் 
ஆதியந்தமில்லாத 
அகச் சுருதி மட்டும். 
இடமும் 
காலமும் 
இல்லாது போகின்றன.


நசிகேதன் 

போதத்தின் கனவுகளிலிருந்து
விழி்க்கிறான்.16


பந்தத்தையும் 

மோட்சத்தையும் துறந்து
இன்பத்தையும் துன்பத்தையும் துறந்து 
உண்டு இல்லை என்ற சிந்தனையையும் துறந்து
எல்லாம் ஒன்றே என்ற திடமாகி 
அசையாப் பெருங்கடலாக
நசிகேதன் விழிக்கிறான்.17


கண்ணில் தெரியும் இவை எல்லாமும் 

விளக்க முடியாதவையாகின்றன18
இது
மைவித்தைக்காரனின் மசியில் தெரியும் 
தேவதைபோல் இருக்கிறது.  
இதன் பிம்பம் இறைவனிடமிருக்கிறது
இது நிழல்மட்டுமாகிறது
இப்போது
கண்ணில் தெரியும் இதுவும் 
கடவுளும் நானுமாக இருக்கும்  
இவை எல்லாமும் 
கடவுளுக்குள் அடங்கும்போது
கடவுளே ஆகின்றன.
இது 
கடவுளின் விரிநிறைவைக் குலைப்பதில்லை
நிழலுக்கு
எதன் விரிவையும் மாற்ற இயலாது.
அதுமட்டுமன்று
எந்த விரிவும் நிழலை இழப்பதுமில்லை.
ஓ,
இதோ
இவையெல்லாம் மனோவேகமுள்ள
ஒரு கடிகையைப்போல
ஆதியந்தமில்லாமல் சுழல்கின்றன.


அற்புதம் 

நான் என் கண்களைப் பார்க்கிறேன் 
என்னைக் கடவுள் பார்க்கிறார் 
நான் என் குரலைக் கேட்கிறேன் 
கடவுள் என்னைக் கேட்கிறார்.
நான் என் தோலைத் தொடுகிறேன் 
கடவுள் என்னைத் தொடுகிறார் 
நான் என் நாவால்  சுவைக்கிறேன் 
கடவுள் என்னைச் சுவைக்கிறார் 
நான் என் மூக்கால் முகர்கிறேன் 
கடவுள் என்னை முகர்கிறார்


நான் வாக்கைத் தள்ளிவிடுகிறேன் 

வாக்கு என்னைத் தள்ளிவிடுவதில்லை 
கடவுள் தள்ளிவிடுகிறார். 
நான் கையை இயங்கச் செய்கிறேன் 
கை என்னை இயக்குவதில்லை
கடவுள் இயங்கச் செய்கிறார் 
நான் காலை நடத்துகிறேன் 
கால் என்னை நடத்துவிப்பதில்லை; 
கடவுள் என்னை நடக்கச் செய்கிறார்.
நான் குதத்தை கழிக்கச் செய்கிறேன் 
என் குதம் என்னைக் கழிப்பதில்லை
கடவுள் கழிக்கச் செய்விக்கிறார் 
நான் கடவுளைக் கழிப்பதில்லை
நான் உபஸ்தத்தை மகிழ்விக்கிறேன் 
உபஸ்தம் என்னை மகிழ்விப்பதில்லை
கடவுள் மகிழ்விக்கிறார் 
நான் கடவுளை மகிழ்விப்பதில்லை.


ஓ, 

இதோ கடவுளின் புருஷ இலட்சணம் காட்சியளிக்கிறது
கடவுள் 
கண்ணில்லாமல் காணும் 
செவியில்லாமல் கேட்கும்  
தோலில்லாமல் உணரும் 
நாசியில்லாமல் முகரும் 
நாவில்லாமல் சுவைக்கும்  
சித் புருஷனாகிறார்.
நான் 
கடவுளின் மறு வடிவமாகிறேன் 
என் உடல் ஜடமாகிறது
கனன்றிருக்கும் இரும்புக்கோளம் ஒளிமயமாவதுபோல
நான் கண் திறந்து பார்க்கும்போது
என் உடல் ஒளிமயமாகிறது.


ஓ, 

என் கடவுள் 
ஒளிமயமான புனித சமுத்திரமாகிறார் 
இவை யாவும் 
அலையற்ற அந்தக் கடலில் 
அலையாகின்றன


ஓ,

இவை யாவும் ஓடை மீறிப் பொங்கும் 
வெள்ளமாகின்றன
கடவுள் ஓடையாகிறார்


ஓ,

நான் இதுவரை வெளிமுகத்தனாக இருந்தேன் 
இனி 
உள்முகத்தனாக மாறுகிறேன் 
ஆ,
எவ்வளவோ திவ்வியம் இங்கே
நான் இதுவரை நின்றிருந்தது
ஒரு திவ்வியக் கண்ணாடியில்.

இதுவே என் கடவுள் 

இதை நான் இதற்கு முன்பு கண்டதில்லை
இப்போது
எனக்கு இங்கே மறைவும் இல்லை
நானும் கடவுளும் ஒன்றாகியிருக்கிறோம் 
இனி
எனக்குச் செயல் கடினமில்லை
ஓ,
இதோ நான் கடவுளுடன் ஒன்றாகிறேன்.





         *****************************************************************************************************************************



குறிப்புகள்
1 . யதேவஹ ததமுத்ர
      யதமுத்ர ததன்விஹ
      ம்ருத்யோ: ஸ ம்ருத்யுமாப்னோதி
      ய இஹ நாவேன பச்யதி  - கடோபநிஷத் 4: 10
2.   பாகவதம் -  திரிதீய ஸ்கந்தம் , சாரங்கதேவரின் சங்கீத ரத்னாகரம், கர்போபநிஷத்
3.   ப்ருஹதாரண்யக உப நிஷத் – பிராமணம் 2: 1
4.   பாகவதம் – முதலாம் ஸ்கந்தம் அத்தியாயம் 13, சுலோகம் 46
5.   யோகவாசிஷ்டம் – ஸ்திதிபிரகரணம், பார்கவோபாக்கியானம் 63
6.   யோகவாசிஷ்டம் – சர்க்கம் 23, கலாபவாதம் 32
7.   ஸ்ரீ நாராயண குருவின் ஆத்ம விலாசம்
8.   ரிபு கீதை
9.   விஷ்ணுபுராணம்
10. யோகவாசிஷ்டம் – உபசமபிரகரணம்
11.  பாகவதம் – சஷ்டஸ்கந்தம்
12. பாகவதம் – பஞ்சமஸ்கந்தம்
13. லோகம் சோகஹதம் ஸ சமஸ்தம் – பஜகோவிந்தம், ஆதி சங்கரர்
14.  பகவத் கீதை ( பாரதியார் உரை ) 3: 36
15.  முண்டகோபநிஷத் 1: 2
16.  யோகவாசிஷ்டம்
17.  யோகவாசிஷ்டம்
18. ஸ்ரீ நாராயணகுருவின் ஆத்ம விலாசம்.

ஓவியங்கள்: கானாயி குஞ்ஞிராமன், தாணு குமாரதாஸ்

                                            @