கோடைமேகம்போலப்
போகிறபோக்கில் பொழிந்து நகர்கிறாய்.
தகித்துக்கிடந்த விரகநிலம்
உன் அரைகுறைத்தூறலால்
முன்னைவிடக் கொதிக்கிறது.
ஈரஸ்பரிசத்தால் நீ கோதிய
கூந்தல்கொடி கலைந்து
சிக்கு விழுகிறது.
வானவில் நிறங்களுடன்
விழிகளில் சொட்டிய துளிநீர்
பார்வையில் படர்ந்து வெண்ணிருளாகிறது
தாகத்துடன் பிரியும்
மண்ணிதழ்களில் பதிந்த நீர்மை
நொடியில் வறண்டு வெடிப்புகள் மிஞ்சுகின்றன
இலைமூடிய கற்பழங்கள்
நீ குளிர்ந்து வருடியதில் குழைந்து நிமிர்ந்து
நீ பெயர்ந்ததும் இறுகுகின்றன
ஆழங்களில் கிடக்கும் வேட்கையின் அடுக்குகளில்
பரவிக்கசியும் தண்மைக்காகத் திறந்த
நாபிச்சுழல் அடைபடுகிறது
உயிர்முடிச்சில் ஊறித்தழைக்க
சிலிர்த்து அசைந்த கானகம்
உன் அவசர விலகலால் மூடிக்கொள்கிறது
அதன் ஊற்றுகள்
அடைத்துக் கொள்கின்றன
சமவெளியாகக் கிடந்த நான்
எரிமலையாகக் குலுங்குகிறேன்
பழகப்பழகப் பெண்
உடல்மட்டும் ஆவாளா?
முட்டாளே, நான்
மழையில் திளைக்கும் பெருநிலமில்லையா?
இந்த கவிதையில் திளைக்காத மனமுண்டோ...
பதிலளிநீக்கு