பக்கங்கள்
▼
புதன், 27 ஜனவரி, 2010
பிருந்தா கவிதைகள்
@
பிருந்தாவின் கவிதைகளை எங்கே வைப்பது? என்னவாக அடையாளம் காண்பது? இந்தக் கேள்விகள் எழக் காரணம் அவரது கவிதையெழுத்தில் காணப்படும் இடைவெளி. 'மழை பற்றிய பகிர்தல்கள்' என்ற பிருந்தாவின் முதல் தொகுப்பு பத்தாண்டுகளுக்கு முன்பு வெளியானது. அப்போது பெண்கள் அதிகமாக எழுதிக்கொண்டிருந்தாலும் சிலரது கவிதைகளே தொகுப்பு வடிவம் பெற்றிருந்தன. தொகுப்பாக வெளிவந்து இலக்கிய ஆர்வலரின் எதிர்பார்ப்புக்கு உரியவராகவுமிருந்தார் பிருந்தா. 'புதுக் கவிதைக்குரிய பாலாரிஷ்டங்கள் இல்லாத கவிதை பிருந்தாவுடையது' என்று ஞானக்கூத்தன் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார். முதல் தொகுப்பைத் தொடர்ந்துஅவ்வப்போது எழுதி வந்திருந்தாலும் அவருடைய பிந்தைய கவிதைகள் பத்தாண்டுகளுக்குப் பின்பே தொகுப்பாக வடிவம் பெறுகின்றன. இந்த இடைக் காலத்தில் கவிதை வெளியில் சொற்களின் கரைகளுக்கிடையில் பெரு வெள்ளம் ஓடியிருக்கிறது. புதிய அழகுகளும் வேறுபட்ட கூறுமுறைகளும் பொருள்வகைகளும் கவிதைக்கு நேர்ந்திருக்கின்றன.பெண் எழுத்து கவிதையின் முதன்மையான வகையாக மாறியிருக்கிறது. பிருந்தாவின் கவிதைகளை வாசிக்கும்போது கேள்விகளை எழுப்புவதும் இந்தக் கால மாற்றம்தான்.
நீண்டு கிடக்கிறது
ஒற்றையடிப்பாதை
வானத்திலிருந்து - என்று பிருந்தாவின் முதல் தொகுப்பில் சிறு கவிதை யொன்று இருக்கிறது. அந்த வானம் இந்த இரண்டாவது தொகுப்பில் வீடு முழுக்க நிறைந்திருக்கிறது. பிருந்தாவின் கவிதையெழுத்தில் நிகழ்ந்திருக்கும் மாற்றமாக இதைச் சொல்லலாம்.
இந்தக் கவிதைகளை பெண்ணெழுத்து என்றோ தான் ஒரு பெண் நிலைப் பரப்புரையாளரென்றோ பிருந்தா பிரகடனம் செய்துகொள்ளவில்லை.எனினும் இந்தத் தொகுப்பிலுள்ள பெரும்பான்மையான கவிதைகள் அவற்றின் கூறுமுறையிலும் பேசுபொருளிலும் பெண் அனுபவத்தையே மையமாகக் கொண்டவை.இயல்பாகவே அவற்றில் அந்த அடையாளங்கள் புலனாகின்றன. தொகுப்பிலுள்ள 'உயிர் விளையாட்டு' என்ற கவிதையை ஓர் ஆண் மனம் யோசிப்பது கடினம்.உறவு என்னும் கண்ணாமூச்சி விளையாட்டில் 'நீயும் நானுமே ஆட்டக்காரர்கள்/ எனக்கெவ்வளவு தொலைவோ/அவ்வளவு நெருக்கமும் நீ/ என் எல்லாமும் நீ/ எதுவுமில்லாததும் நீ' என்று இடம்பெறும் வார்த்தைகளின் நுண் அரசியல் அதை உறுதிப்படுத்தவும் செய்கிறது.
அண்மைக் காலக் கவிதைகளின் பெண் மொழி இரண்டு நிலைகளில் செயல்படுகிறது.பெண் தன்னை நிறுவிக் கொள்வதன் வேட்கை மன உணர்வுகளைச் சார்ந்து வெளிப்படும் கவிதைகள் ஒரு நிலையில். இதுவரை ஆணின் உடைமைப் பொருளாகக் கருதப்பட்ட தனது உடலை மீட்கும் ஆவேசத்துடன் வெளிப்படும் கவிதைகள் இன்னொரு நிலையில். இந்த இரண்டும் இணைந்த கவிதைகளையும் காண முடிகிறது.முதல் நிலையில் வெளிப்படுபவை பிருந்தாவின் கவிதைகள்.
ஒரு தனிமையான மனதின் வியப்புகளும் மகிழ்ச்சிகளும் சீற்றங்களும் புகார்களும்தான் பிருந்தாவின் படைப்பாக்கத்தின் அலகுகள். இயற்கை மீதான நேசம், காதலின் இனிய கசப்பு, குழந்தைகளுடனான பரிவு, நகரவாழ்க்கை தரும் மூச்சுத் திணறல், உறவுகளின் நெருக்கம், பிரிவு - ஆகிய உணர்வுகள் தனிமைப்பட்ட அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணின் அனுபவங்களாக வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த அனுபவங்களை பிருந்தா இரண்டு விதமாக எதிர்கொள்கிறார். சில அனுபவங்களைக் கழிவிரக்கத்துடனும் சிலவற்றை தனிமைத் துணிவுடனும். 'நீயும் உன் அழுகையும்' கவிதை கழிவிரக்கத்தின் அங்கதத் தொனியில் கூறும் பிருந்தா 'மழை எதையும் சொல்லவில்லை'என்று தொடங்கும் கவிதையில் 'என் மௌனத்தைக் காதலாக மொழிபெயர்' என்று அறைகூவல் விடுகிறார். பெண் உணர்வின் இந்த அபாயச் செய்கை வியப்பளிக்கிறது. அதே சமயம் அச்சுறுத்துகிறது.
பிருந்தாவின் இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளை வாசிக்கும் தருணத்தில் வசப்பட்டவை இந்த எண்ணங்கள்.இவற்றைக் கடந்து பிருந்தாவின் கவிதைகளுக்கான இடம் என்ன என்று யோசிக்கலாம். மென்மையும் நேரடியானதுமான மொழியில் இயங்குபவை இவர் கவிதைகள். ஓர் அனுபவத்தின் மனநிகழ்வுகளைமட்டுமே இவர் முன்வைக்கிறார். அவற்றை ஒரு கருத்தாக்கமாக்கி கோஷம்போட பிருந்தாவின் எழுத்தியல்பு அனுமதிப்பதில்லை. மென் உணர்வுகளால் பின்னப்பட்டதாகவே இவரது கவிதையுலகம் அமைந்திருக்கிறது. மேகமாகவும் இலையாகவும் பறவையாகவும் மழையாகவும் வண்ணத்துப் பூச்சியாகவும் மலராகவும் தன்னை உருவகித்துக்கொள்வது இந்த மென் உணர்வுகளால்தான். அவ்வளவு மென்மையல்ல வாழ்க்கையும் கவிதையும் என்று பகுத்துப் பார்க்கும்போது பிருந்தாவின் துயரம் பிடிபடுகிறது. இவ்வளவு மென்மையான கவிதைகளை இன்றைய பெண்ணெழுத்து கடந்து போய்க் கொண்டிருக்கிறது என்பதும்தென்படுகிறது.
பத்தாண்டு இடைவெளியைக் கடக்கும் கவிதையியல் முயற்சிகள் எதையும் பிருந்தா மேற்கொள்ளவில்லை என்பதை தொகுப்பிலுள்ள கவிதைகள் புலப்படுத்துகின்றன.கைவசமுள்ள மொழியால் தன் உலகை நிறுவிவிட முடியும் என்ற நம்பிக்கை சார்ந்ததாக இருக்கலாம் இது. ஓர் அனுபவத்தின் பன்முகத்தை முன்வைப்பதல்ல தன்னுடைய நோக்கம். அந்த அனுபவத்தை அதன் ஈரமும் கசிவுமாகச் சொன்னால்போதும் என்ற எண்ணம் பிருந்தாவின் கவிதைகளை வரையறுத்து விடுகிறது. ஒரு பெரிய கவிதைக்கான சாத்தியம் கொண்டது ஒரு தாயின் இறப்பைப் பற்றிய 'ஈடு' என்ற பிருந்தாவின் கவிதை. அனுபவத்தின் கிளைகளைப் பொருட்படுத்தாமல் அதன் வேரைப் பற்றி மட்டும்கவனம் கொள்கிறார். 'வயிற்றில்/ வாங்கிக் கொள்ளவியலுமா/ அம்மாவை - இறப்பை இறப்பால்/ ஈடுசெய்ய நிகழுமா- அன்பிற்கு ஈடாகாது /அன்பும்' என்று கச்சித வரிகளில் முடிந்து விடுகிறது. கவிதையாக்கத்தின் இந்த நிலையை பிருந்தாவின் எழுத்தியல்பாகவே கருதலாம். அவருடைய குறையும் வலுவும் இதுதான் என்றும் தோன்றுகிறது. இதைச் சொல்லக் காரணம் பகட்டில்லாமல் அனுபவங்களை கவிதையாக்கும் பிருந்தாவிடமிருந்து கூடுதல் விரிவும் ஆழமும் கொண்ட படைப்புகளை எதிர்பார்ப்பதுதான்.
ஓடிக்கொண்டேயிருக்கிற நதி
போய்க்கொண்டேயிருக்கிற மேகம்
தினம் பூக்கிற மரம்
பறந்து திரிகிற வண்ணத்துப் பூச்சி
குரலெழுப்பாமல் இசைக்கிற காற்று
வீடு முழுக்க வானம்
வானம் நிறைய பறவைகள்
அருகே மிக அருகே
தொட்டுக்கொள்ளும் தூரத்தில்
என்றில்லாவிடினும்
என் குரல் கேட்கிற தொலைவில் நீ
இதுபோதும்
இவைபோதும்
வாழும்படித்தான் இருக்கிறது வாழ்க்கை - இதுதான் பிருந்தாவின் மனமையம்.
வெளிப்படையாகத் தெரியும் இந்த ஆசுவாசத்தின் பின்னால் சமரசமற்று வாழமுடியாமற் போவதன் பரிதவிப்பும் புரிந்துணர்வு வாய்க்காத உறவுகள் தரும் வலியும் பெண்ணாக இருப்பைநிலைநாட்டுவதற்கான போராட்டத்தின் உதிரமும் கசிகின்றன. அந்தக் கசிவு வார்த்தைகளாகின்றன. காலங்காலமாகப் பெண் மனம் கொள்ளும் ஏக்கத்தின் இன்றைய சொற்களாக இருக்கலாம் பிருந்தாவிடம் வெளிப்படுபவை. பிருந்தாவே ஒரு கவிதையில் கேட்கிறார் 'வார்த்தைகளை விடவா/ மரணம் வலிக்கும்?' இந்த நிரந்தரக் கேள்விக்கான நிகழ்கால பதில்களின் ஒரு சார்பு இந்தக் கவிதைகள்.
@
சே.பிருந்தாவின் ’வீடு முழுக்க வானம்’ (வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்) தொகுப்புக்கு எழுதிய முன்னுரை.
இந்த முன்னுரயின் மூலம் பிருந்தாவின் தொகுப்பு ஒரு பெண்ணின் ஆழ்மன எண்ணங்களை வெளிப்படுத்துகிறது என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குகுறிப்பிட்ட “ வார்த்தைகளை விடவா மரணம் வலிக்கும் “
கனமானவை.
நன்றி.
கடந்தவாரம்தான் பிருந்தாவின் கவிதை தொகுப்பை வாசித்தேன். மிகச்சிறந்த கவிதை தொகுதி. நல்ல முன்னுரை :)
பதிலளிநீக்குமஞ்சூர் ராசா, நிலாரசிகன் இருவருக்கும் மனமார்ந்த
பதிலளிநீக்குந்ன்றி.