பக்கங்கள்

புதன், 30 ஜூன், 2010

கழுமரத்துக்குச் செல்பவனின் தனிமொழி

























ழுமரத்தை நோக்கிச் செல்லும்
என்னைப் பாருங்கள்
பத்து நிமிடங்களில்
கனவுகள் காலியான என் சிரம்
ஆசையொழிந்த உடலிலிருந்து துண்டிக்கப்படும்
நான் கொலைசெய்தவனின் உதிரம்
எனது அன்புக்காக அலறுவதைக் கேட்டேன்
அவனுடைய குடும்பத்தினரிடமும் கூட்டாளிகளிடமும்
நான் மன்னிப்புக் கோர வேண்டியிருந்தது
அந்த முற்றத்து மாமரத்தைக் கட்டியணைத்து
நான் அழ வேண்டியிருந்தது
மண்ணில் புரண்டு சகல உயிர்களுக்கும் உடைமையான
பூமியிடம் மன்னிப்பை யாசிக்க வேண்டியிருந்தது
பாதி கடித்து வைத்த பழத்துக்கும்
பாதி பாடிய பாட்டுக்கும்
பாதி கட்டிய வீட்டுக்கும்
பாதி வாசித்த புத்தகத்துக்கும்
பாதி சிநேகித்த சிநேகத்துக்கும்
பாதி வாழ்ந்த வாழ்க்கைக்கும்
நான் திரும்ப வேண்டியிருந்தது
நதியைக் கடந்துபோய்ப் பூரம் கொண்டாட வேண்டியிருந்தது
குன்றைக் கடந்துபோய்ப் பெருநாளையும்.
'நான் வந்துவிட்டேன்' என்று நண்பர்களிடம் சொல்ல
நெரிசலான பேருந்திலேறி
பட்டணத்துக்குப் போகவேண்டியிருந்தது
மகள் தன்னிச்சையான பெண்ணாகவும்
மகன் அழத் தெரிந்த ஆணாகவும்
ஆகியிருப்பதைப் பார்க்க வேண்டியிருந்தது
குளிரிலும் கண்ணீரிலும்
துணைக்குத் துணையாக வேண்டியிருந்தது
இலைகளை விடவும் பூக்களுள்ள
வேனிற்கால வாகைமரம்போல
எனக்கு நினைவுகளை விடவும் கனவுகளிருந்தன
நேற்றை விடவும் வெளிச்சமுள்ள
ஒரு நாளை இருந்தது
கதை சொல்லி மரணத்தை ஒத்திப்போட
நான் ஒரு ‘ஷெஹர்ஜாத்’ அல்ல
கதைகளின் விருட்சம் இலைகளுதிர்ந்து கழுமரமாயிற்று
’கடைசி ஆசை ஏதேனும் உண்டா? ' என்று
அவர்கள் என்னிடம் கேட்டார்கள்
புல்வெளியில் உட்கார்ந்து காது நிமிர்த்தும்
ஒரு முயலாக வேண்டுமென்று
ஒளிந்திருந்து கீச்சிடும்
ஓர் அணிலாக வேண்டுமென்று
வானவில் பறவையும் தலைமுறைகளின் நதியும்
பூக்காலத்தின் காற்றுமாக
ஆகவேண்டுமென்று
நான் சொல்லவில்லை
அவர்கள் எனக்குக் கொடுத்த இனிப்பில்
மரணத்தின் துவர்ப்பிருந்தது
கழுமரத்திலிருந்து தப்பிப் பிழைக்கும்
பூனையின் கண்களுள்ள கடுந்துவர்ப்பு
சட்டமியற்றுபவர்களே சொல்லுங்கள்,
தீர்ப்பெழுதுபவர்களே சொல்லுங்கள்
இரங்கக் கூட முடியாத
இந்தத் தீர்ப்புக்காக
நீங்கள் இரங்குகிறீர்கள் இல்லையா?
கொலைக்குற்றத்தின் வெக்கையான தர்க்கத்திலிருந்து
தூக்குத் தண்டனையின் குளிர்ந்த தர்க்கத்துக்கு
எவ்வளவு தூரம்?
கேள்விகளை
பூமியின் பசுமையில் விட்டுவிட்டு
அபராதிகளும் நிரபராதிகளும்
ரத்த சாட்சிகளும் நடந்துபோன
குருதி படர்ந்த இதே வழியில்
நானும் போகிறேன்
நாளையேனும்
ஒருவரும் இந்த வழியில் வரவேண்டியிராத
நா ளை உருவாகட்டும்.
நான் போகிறேன்
@
சச்சிதானந்தன் (மலையாளம்)

@
ஒன்னராடன் (கைதிகளின் உரிமைக்கான இதழ்) மே - ஜூன் 2010 இல் வெளியான கவிதையின் தமிழாக்கம் ‘காலச்சுவடு’ ஜூன் 2010 இதழில்
இடம் பெற்றது. ஓவியம் - ரவி.

--------------------------------------------------------------------------------------------------------------------------------
பெருநாள் - கிறிஸ்துமஸ்
‘ஷெஹர்ஜாத்’ - ‘1001 அரேபிய இரவுக’ளின் கதைசொல்லி.

3 கருத்துகள்:

  1. அன்பு மிக்க சுகுமாரன்,
    என்னை நினைவிருக்கிறதா?தெரியவில்லை.85 களில்தஞ்சாவூரில் ப்ரகாஷின் கடையில் நாம் செலவிட்ட நாட்கள் நினைவுக்கு வருகின்றன.கோடைக்காலக்குறிப்புகள் வந்திருந்த சமயம்.கையில் புகையும் சார்மினாரும் கவிதைகள்-சாப்பாடு-இசை குறித்தெல்லாம் பேசிய பேச்சுக்கள் இன்னும் மனத்தடியில் அசைகின்றன.ப்ரகாஷ் இறந்துபோனார் என்பதையே நான்கு வருஷங்கள் கழித்துதான் தெரிந்துகொண்டேன் எனும்போது மிகவும் எல்லாவற்றிலிருந்தும் விலகிப்போய்விட்டேன்.நீங்கள் குடும்பத்தினர் நலம்தானே!இப்போது புதுச்சேரி வாசம் 20 ஆண்டுகளாக.நேரம் கூடினால் என் தளத்துக்கும் வாருங்கள்.உங்கள் கவிதைகளும் என்னை அவ்வப்போது உசுப்பேற்றியவைதான்.முழுமையாக வசித்துவிட்டு மறுபடி வருகிறேன்.
    சுந்தர்ஜி.

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள சுந்தர்ஜி,

    ஆச்சரியமாக இருக்கிறது. ஏறத்தாழ ஒரு வெள்ளி விழாக் காலத்துக்குப் பிறகு நீங்கள் நினைவு கூர்ந்து
    எழுதியிருப்பது உற்சாகம் தருகிறது.அந்த நாள் துல்லியமாக இல்லையென்றாலும் தோராயமாக நினைவிலிருக்கிறது. மங்கலான வெளிச்சமுள்ள குகை மாதிரியான ஓர் அச்சகமும் தாடியை வருடிக்கொண்டு பேசிய ப்ரகாஷும் மீண்டும் சந்திக்க நேர்ந்தால் இனங்கண்டு கொள்ளக் கூடிய சில தோழமையான முகங்களும் பேச்சின் இடையில் எழுந்து போய் சார்ம்ஸ் சிகரெட்டுக்குப் பதிலாக
    சார்மினார் வாங்கி வந்த யாரோ ஒரு நண்பரும்
    எல்லாம் நீங்கள் முடுக்கி விட்டதும் மனதில் ஓடுகின்றன. அவ்வப்போது உங்கள் தளத்தைப் பார்த்திருக்கிறேன் - அதன் தலைப்பு காரணமாக.
    வருகைக்கும் நினைவூட்டலுக்கும் மிக்க நன்றி. தொடர்பில் இருங்கள்.

    சுகுமாரன்

    பதிலளிநீக்கு
  3. பாதி கடித்து வைத்த பழத்துக்கும்
    பாதி பாடிய பாட்டுக்கும்
    பாதி கட்டிய வீட்டுக்கும்
    பாதி வாசித்த புத்தகத்துக்கும்
    பாதி சிநேகித்த சிநேகத்துக்கும்
    பாதி வாழ்ந்த வாழ்க்கைக்கும்
    நான் திரும்ப வேண்டியிருந்தது

    பதிலளிநீக்கு