பக்கங்கள்

வியாழன், 12 ஜனவரி, 2012

புத்தக விழாக் குறிப்புகள்


முப்பதைந்து ஆண்டுகளாக நடை பெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சுமார் இருபது முறையாவது சென்று வந்திருப்பேன். ஒரு வாசகனாகவும் இலக்கியவாதியாகவும். சிலமுறை கவிதை வாசித்திருக்கிறேன். ஆனால் இந்த ஆண்டுதான் ஒரு நட்சத்திரமாகி யிருக்கிறேன். நட்சத்திரமாக்கியவர் நண்பர் மனுஷ்யபுத்திரன். உயிர்மையின் இந்த ஆண்டு நட்சத்திரங்கள் என்று அவர் வைத்திருந்த பானரில் முதல் நட்சத்திரம். அடுத்த ஆண்டும் நட்சத்திர அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என்ற கவலை இப்போதே உலுக்கத் தொடங்கி விட்டது.

உண்மையில் எந்த ஆண்டையும் விட இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியை முன்னிருத்தி வேகமாகச் செயல்பட்டிருக்கிறேன். என்னுடைய நான்கு புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. 'நீருக்குக் கதவுகள் இல்லை' என்ற தலைப்பில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. 'வாழிய நிலனே' என்று உயிர்மை, உயிரோசை, வார்த்தை இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மலையாளத்திலிருந்து அவ்வப்போது மொழியாக்கம் செய்த கதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த 12 சிறுகதைகளின் தொகுப்பு. இவை மூன்றும் உயிர்மை வெளியீடுகள். ஏறத்தாழ அதே கால அளவில் ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கம் செய்தவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த 13 கதைகளின் தொகுப்பு 'லயோலா என்ற பெரும் பாம்பின் கதை' காலச்சுவடு பதிப்பகம் வாயிலாக வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டு கதைத் தொகுதிகளுக்கும் எழுதிய முன்னுரைகள் என் அளவில் மிக முக்கியமானவை; கதைகளைப் பற்றியல்ல கதைகளுக்கு வந்து சேர்ந்த வழியின் நினைவுகளையும் காலங்களையும் பற்றிப் பேசக் கிடைத்த வாய்ப்பு
என்பதால்.

இவை சொந்தக் கதையின் பக்கங்கள். இவற்றுக்கிணையான சிரத்தையுடனும் மரியாதையுடனும் ஈடுபட்ட பிற செயல்பாடுகள்தாம் என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்தவை.

காலச்சுவடு நவீன தமிழ் கிளாஸிக் வரிசையில் வெளியாகி இருக்கும் தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்' நாவலுக்கு முன்னுரை எழுதக் கிடைத்த வாய்ப்பு மனதுக்குள் கொண்டாட்டத்தைத் தந்தது. என் தனிப்பட்ட ரசனையில்தமிழின் மிகப் பெரும் எழுத்துக் கலைஞர்களில் ஒருவராக ஜானகிராமனை மதிக்கிறேன்.கலைத்தன்மை கூடா தஅவருடைய எழுத்துக்களிலும் கூட ஓர் உயிர்ப்பை, இன்றும் பழசாகாத மலர்ச்சியைக் காண முடியும். எனில் அவரது ஆகச் சிறந்த படைப்பான 'அம்மா வந்தா'ளில் நான் எவ்வளவு குதூகலத்தை அடைந்திருப்பேன் என்பதற்குச் சான்று இந்த முன்னுரை.

லாவண்யா சுந்தரராஜனின் ' இரவைப் பருகும் பறவை' (காலச்சுவடு பதிப்பகம்), சக்தி ஜோதியின் ' காற்றில் மிதக்கும்
நீலம்'
( உயிரெழுத்து பதிப்பகம்), திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமியின் ' காற்றால் நடந்தேன்' ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளுக்கும் த சண்டே இந்தியன் இதழின் ஆசிரியர், நண்பர் அசோகனின் 'போதியின் நிழல்' என்ற நூலுக்கும் முன்னுரை எழுதியிருக்கிறேன்.எல்லாம் விரும்பிச் செய்தவை. முன்னுரை எழுதுவதில் சில வசதிகள் இருக்கின்றன. ஒரு நூலை முதல் வாசகனாக வாசிக்கும் வாய்ப்பு. அப்படி ஒரு வாய்ப்பு இல்லை என்றால் அந்த நூலை பின்னர் என்றாவது வாசிக்க வேண்டிய தேவையும் எழாமற் போகலாம்.

நூல் வெளியீட்டு விழாக்கள் நான்கில் பேசியிருக்கிறேன். உயிர்மை சார்பில் கலாப்ரியாவின் புதிய கவிதைத் தொகுப்பு ' நான் நீ மீன்' நூல் வெளியீட்டில், காலச்சுவடு கொண்டுவந்திருக்கும் ஏழு கவிதை நூல்கள் வெளியீட்டில்
சிறப்புரையாகவும் மண்குதிரையின் தொகுப்பு ' புதிய அறையின் சித்திரம்' பற்றியும். ஈழத்து எழுத்தாளர் நௌஸாத்தின்
'வெள்ளி விரல்' சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டும்.

ஞாநியும் பாரதி புத்தகாலயம் நாகராஜனும் ஒருங்கிணைத்த வாசகர் எழுத்தாளர் சந்திப்பில் பேசியதுதான் உண்மையில் நட்சத்திர மதிப்பைக் கூட்டியது. 'முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறேன். கவிதைகள் தவிர கட்டுரைகளும் மொழிபெயர்ப்புகளும். இருந்தும் நான் பிரபலமானவனல்ல; மிகப் பிரபலமான வார இதழிலும் தொலைக் காட்சியிலும் பணி புரிந்திருக்கிறேன். அவை மூலம் என்னை முன்னிருத்திக் கொள்ள விரும்பியதில்லை. எழுத்தை முன் வைத்து மட்டுமே அறியப்பட விரும்பியிருக்கிறேன். இந்தப் புத்தகக் கண் காட்சியை ஒட்டி வெளியான நான்கு புத்தகங்களையும் சேர்த்து 25 நூல்கள் வெளியாகி யிருக்கின்றன. இதில் எதையாவது நீங்கள் படித்திருக்கலாம் என்ற அவ்வளவு வலுவில்லாத நம்பிக்கையுடன் பேசுகிறேன்' என்றுதான் பேச்சையே தொடங்கினேன். ஒரு மணி நேரப் பேச்சுக்குப் பிறகு வெளியே வந்தபோது ஓர் இளைஞர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். 'நான் சரவணன்.உங்கள் எழுத்துகளைப் படித்திருக்கிறேன் என்று சொல்வதற்காகவே வந்தேன்' என்றவர் எனக்கே நினைவில் இராத என்னுடைய கவிதை ஒன்றை உணர்ச்சிபூர்வமாகச் சொன்னார்.

'வாழையடி வாழையாக வரும் எவனோ ஒரு வாசகனுக்காகவே எழுதுகிறேன்' என்றார் புதுமைப்பித்தன்.உண்மைதான்போல.சரவணன் என்ற வாழையின் அடிவாழையாக இன்னொரு வாசகன் இருக்கக்கூடும். நட்சத்திரமாக இருப்பதல்ல; வானத்தில் இருப்பதே முக்கியம். இதற்கு மேலே என்ன வேண்டும்?

2 கருத்துகள்:

  1. /இன்னொரு வாசகன் இருக்கக்கூடும்/
    Me too.

    பதிலளிநீக்கு
  2. என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள்! உங்களின் எல்லா படைப்புகளையும் வாசிக்கவில்லையென்றாலும்கூட ஒரு சிலவற்றை வாசித்திருக்கிறேன் என்பதும் பலரால் நீங்கள் மிகவும் சிலாகிக்கப்பட்டதை கேட்டிருக்கிறேன் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். உங்களை வாசிக்கும் பல வாசகர்கள், படைப்பாளிகள் இருக்கின்றனர் என்பதையும் இங்கு சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    பதிலளிநீக்கு