பத்திரிகையாளனாகக் குப்பை கொட்டத்
தொடங்கிய பிறகு அரசியல் சமூக திரையுலகப் பிரபலங்கள் பலரையும் நேருக்கு
நேராகத் தரிசிக்கிற பாக்கியமும் சிலருடன் சில வார்த்தைகளும் பலருடன் பல
வாக்கியங் களும் பேசுகிற அதிருஷ்டமும் லபித்திருந்தது. இதற்கெல்லாம் மிக மிக முன்பே நான் பார்த்து
ஓரிரு சொற்கள் பேசிய முதலாவது சினிமாப்
பிரபலம் பி.பி. ஸ்ரீநிவாஸ்.
கர்நாடக மாநில அரசின் மின் சாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் - மைசூர்லாம்ப்ஸின் விற்பனைப் பிரதிநிதியாக அலைந்ததுதான் என்னுடைய இரண்டாவது வேலை. அதற்கு
எங்கள் ஊரில் விற்பனை யாளராக இருந்த வர்கள் புகழ் பெற்ற மல்லிசேரி பீடி உற்பத்தியாளர்கள்.
பீடிக் கம்பெனி தவிர அதே பெயரில் ஓர் இசைக் குழுவையும் நடத்தி வந்தார்கள். கம்பெனி
இருந்த பழைய பாணிக் கட்டடத்தின் பின்பக்கம் பெரிய கிடங்கு.பீடி இலைகளும்
புகையிலைத் தூளும் நிறைந்த மூட்டைகள்
அட்டி போட்டு வைக்கப் பட்டிருக்கும். அந்த இடத்தில்தான் பெரும்பாலும் இசைக்
குழுவின் ஒத்திகையும் நடக்கும். அந்த நாட்களில் வானொலியில் எந்தப்
பாட்டைக் கேட்டாலும் அந்தப் பாட்டுக்குப் பீடி வாசனை இருப்பதுபோலத் தோன்றி மூக்கை
உறிஞ்சிக் கொள்வேன். அங்கிருந்த நாட்களில் குடுவை விளக்குகளுக்கும் குழல் விளக்குகளுக்கும்
பட்டிகளுக்கும் உதிரிப் பொருட்களுக்கும் ஆர்டர் பிடிக்க அலைந்த நாட்களை விட இசைக்
குழுவின் ஒத்திகை கேட்க முளையடித்து உட்கார்ந்த நாட்கள் அதிகம்.
கம்பெனியின் உரிமையாளர்களில் ஒருவரான வல்சராஜ் அந்தப் பொறுப்பின்மையை
உற்சாகமாக அனுமதித்தார். ஒத்திகை நடக்கும்
நாட்களில்விநியோகஸ்தரின் பிரதிநிதிகள் மார்க்கெட்டுக்கு வரச் சொல்லி என்னைக்
கட்டாயப் படுத்தும்போது
என்னுடைய சுணங்கும் முகத்தைப் பார்த்து'' அவன் இல்லேன்னா நீங்க ஆர்டர் பிடிக்காதா?'' என்று மலையாளத் தமிழில்
அபயம் கொடுப்பார்.
ஒருமுறை காரமடை அரங்கநாதர் ஆலய ஆண்டுத் திருவிழாவுக்கு மல்லிசேரி
இசைக்குழுவின் கச்சேரி ஏற்பாடாகி இருந்தது. நட்சத்திர விருந்தினராக
அழைக்கப்பட்டவர் பி.பி.ஸ்ரீநிவாஸ். நிகழ்ச்சிக்கு ஒருநாள் முன்னதாகவே அவர்
கோவைக்கு வந்திருந்தார். ''நீ வேணும்னா அவருக்கு உதவியாக இருக்கிறாயா?'' என்று வல்சராஜ் கேட்ட
நொடியில் மனம் புல்லரித்தது. '' இருக்கிறேன். ஆனா கம்பெனி
சூபர்வைசர் யாராவது கேட்டால்...'' என்று இழுத்தேன். ''அவன் மார்கிட்ட நான் சொல்லுது''
என்றார்.
பி.பி.எஸ். தங்கியிருந்த அலங்கார் ஓட்டலுக்குப் போனேன். சொல்லப் பட்டிருந்த அறைக் கதவைத்
தட்டினேன். திறந்தது. வழுக்கைத் தலையும் உறக்கம் கலையாத
முகமுமாக கரை வேட்டி கட்டிய ஒருவர் எட்டிப் பார்த்து '' ஹூம்?'' என்றார்.குழப்பமாக இருந்தது. ''சாரி சார்'' என்று மன்னிப்புக்
கேட்டுக் கொண்டு வரவேற்பறைக்கு வந்தேன்.
அங்கிருந்த வரவேற்பாளரிடம் அறை எண்ணைச் சொல்லி அதில் இருப்பவர் ஸ்ரீநிவாஸ்தானா
என்று கேட்டேன். ஆமாம் என்பது பதில்.இருந்தும் எனக்கு நம்பிக்கை வரவில்லை.
பி.பி.ஸ்ரீநிவாஸ் உயரமாக இருப்பார். புஷ் குல்லா போட்டிருப்பார். தடித்த கண்ணாடி
அணிந்திருப்பார். நெற்றியில் சிந்தூரக் கோடு இழுத்து விட்டிருப்பார். ஆனால் நான்
பார்த்த உருவத்துக்கு இது எதுவுமில்லை. நம்பிக்கை
வராமல் குழம்பினேன். அங்கிருந்தே வல்சேட்டனுக்குப் போன் செய்து கேட்டேன். அவர்
சொன்னதும் அதே எண்ணைத்தான். மறுபடியும் அந்த அறை முன்னால் போய் நிற்கத் தயக்கமாக
இருந்தது. யோசிக்க நேரம் எடுத்துக் கொள்ளும் சாக்கில் உணவகத்துக்குள் போய்
காப்பிக்குச் சொல்லி விட்டு உட்கார்ந்தேன்.
ஏனோஅந்த அறையில் இருப்பவர் பி.பி,ஸ்ரீநிவாஸ்தான் என்பதை மனம் ஒத்துக் கொள்ள மறுத்துக்
கொண்டேயிருந்தது.மேஜைக்கு வந்த காப்பியைக் குடித்து முடித்தேன். எழுந்து வெளியே வந்து அறையை
நோக்கித் த்யக்கத்துடன் நடக்க ஆரம்பித்தேன். என்னைத் தாண்டி
முன்னால் போன ஓட்டல் சர்வரின் தோள் மீது இருந்த டிரே கண்ணில் பட்டது.சிற்றுண்டி
வகைகள் இருந்தன. சர்வரும் நானும் ஒரே வாசலில் நின்றோம். அவர் அழைத்ததும் கதவு
திறந்தது. பி.பி. ஸ்ரீநிவாஸ் தெரிந்தார். புஷ் குல்லா போட்டிருந்தார். நெற்றியில்
ஸ்ரீசூர்ணம் தர்த்திருந்தார்.கெட்டிக் கண்ணாடி போட்டிருந்தார். கட்டம்போட்ட
சட்டைப்பையில் நான்கைந்து கலர் பேனாக்களைச் சொருகியிருந்தார். மரக் கலர்
சால்வையை மடித்துத் தோளில் போட்டிருந்தார். தடிமனான கண்ணாடி அணிந்திருந்தார். ஆக
நான் முதலில் பார்த்ததும் அவரைத்தான். ஆனால் அது அபிஷேகச் சிலை. இப்போது
பார்ப்பதும் அவரைத்தான். ஆனால் இது அலங்கார ரூபம். இந்த உருவம்தான் எனக்குப் பழக்கமான பிபிஎஸ். என்னுடைய முட்டாள் தனத்தை நினைத்துச்
சிரித்துக் கொண்டே அறைக்குள் நுழைந்து அறிமுகப் படுத்திக் கொண்டேன்.
''கொஞ்சம் முன்னால் நீங்கதான வந்தீங்க?'' என்று கேட்டார். குரலில் அதே
பிபிஎஸ் ஒலித்தது. அவர் 'ஹூம்' என்று கேட்டதற்குப் பதிலாக ஒரு வாக்கியம் பேசியிருந்தால்
அசட்டுத்தனமாகப் பின் வாங்கியிருக்க மாட்டேன் என்று பட்டது.
'' ஆமாம் சார். ஆனா நீங்கதானான்னு டவுட்டா இருந்துது. அதான் போயிட்டேன்'' என்றேன். அதிகம் வாய்
திறக்காமல் ஒரு ஸ்வர மாத்திரை அளவுச் சிரிப்பைச் சிரித்தார். ''இப்ப டௌட்
கிளியராயிடுச்சா?'' என்றார். ''ஆயிடுச்சு சார், இப்பத்தான் படத்துல பாத்த
மாதியிருக்கீங்க. அதுவு மில்லாம இதைப் பார்த்ததும் எல்லா சந்தேகமும் போயிடுச்சு''
என்றேன், தடித்த கண்ணாடிக்கு அப்பா
அவர் கண்கள் சந்தேகமாகப் பார்த்தபோது சிற்றுண்டி மேஜையில் கண்ணாடிக் கிண்ணத்தில்
வைத்திருந்த பாசந்தியைச் சுட்டிக் காட்டினேன். அப்போது அவர் சிரித்த சிரிப்பு
முன்னை விட நாலைந்து ஸ்வர மாத்திரைகள் நீளமாக இருந்தன.
சிற்றுண்டியை அருந்திக் கொண்டே விசாரித்தார். நான் ஆர்க்கெஸ்டிரா வில் வேலை
செய்கிறேனா? பாடுவேனா? காரமடை இங்கிருந்து எத்தனை தூரம்? கார் அனுப்புவார்களா? ரிட்டர்ன் டிக்கெட் ஏற்பாடு
செய்து விட்டார்களா?
தெரிந்தவற்றுக்குப் பதில். தெரியாதவைக்குத் தலை குனிந்த மௌனமுமாக இருந்தேன்.
கை கழுவி விட்டு வந்து கட்டிலில் அமர்ந்தார். அவர் அதிகம் பேசுகிற ரகமில்லை.
நானும் சங்கோஜி. வெகு நேரம் அறைக்குள் மின் விசிறியின் ஓசை மட்டுமே கேட்டுக்
கொண்டிருந்தது. பிபிஎஸ் ஒரு கனத்த டயரில் எதையோ எழுதிக் கொண்டிருந்தார். தயக்கத்தை வலிய
உதறிவிட்டு நான் பேசத்த் ஹொடங்கினேன். அவரிடம் கேட்க நிறையவே இருந்தன. 'நிலவே என்னிடம்
நெருங்காதே' என்ற ராமு படப் பாடல் பாகேஸ்வரி ராகம்தானே? ' பார்த்தேன் சிரித்தேன் ' வீர அபிமன்யூ பாடல்
சஹானாவா? 'கடவுள்
அமைத்த மேடையில் 'தென்றலே நீ பேசு 'பாடியதற்குப் பிறகு இளையராஜாவின் இசையில் ஏன் பாடவில்லை? கேள்விகளுக்குப் பதில்
சொல்லி முடித்தார். அவர் முன்பு பார்த்த பார்வைக்கும் இப்போது பார்க்கும்
பார்வைக்கும் வித்தியாசமிருந்தது. '' பாட்டுக் கற்றுக் கொண்டீர்களா?'' என்று கேட்டார். ''
அப்படிச் சொல்ல
முடியாது. கொஞ்ச நாட்கள் கற்றுக் கொள்ளப் போனேன். வீட்டுச் சூழ்நிலை
காரணமாகத் தொடர முடியவில்லை'' என்றேன். ''ஆனா உங்க கூட பாட்டிருக்கு'' என்றார். ஏனோ எனக்குக் கண்கள்
கலங்கின.
மறுநாள் மாலை காரமடையில் கச்சேரி. நிகழ்ச்சி ஆரம்பித்து வெகு நேரமாகியும்
அவருக்குப் பாட்டு வரவில்லை.முதலில் பக்திப் பாடல்கள் .பிறகு அப்போதைய ஹிட் பாடல்கள்.
பழைய பாடல்களுக்கான வாய்ப்பில் தான் அவர் பாட வேண்டியிருக்கும் என்று
தோன்றியது. கூட்டம் ரசிக்கிற விதத்தைப் பார்த்தால் அவர் பாட்டு எடுபடாது என்றும்
தெரிந்தது. மேடையின் மூலையில் வல்சேட்டனுக்கும் பிபிஎஸ்ஸுக்கும் அருகில்
உட்கார்ந்திருந்தேன். வல்சேட்டனிடம் என் சந்தேகத்தைச் சொல்லவும் செய்தேன். பிபிஎஸ்
சோர்ந்து உட்கார்ந்திருந்தார் என்று தோன்றியது. கண் அசந்திருக்கிறார்
என்றும். 'அடுத்த
பாடல் 'சுமை
தாங்கி'படத்திலிருந்து
'மயக்கமா கலக்கமா?
பிரபல பாடகர் பி பி
ஸ்ரீநிவாஸ் பாடுவார்' என்ற அறிவிப்பு மெல்லிய கர கோஷங்களை மூடியது. அதுவரை பார்த்திராத பி பி எஸ் சை மைக்கின் முன்னால்
பார்த்தேன். பாடி முடித்ததும் கையொலிகள் முழங்கின. அவர் அதைப் பொருட்படுத்தாமல்
திரும்பி வந்து நாற்காலியில் உட்கார்ந்தார்.
சில பாடல்களுக்குப் பிறகு மீண்டும் அவருடைய முறை. 'படித்தால் மட்டும் போதுமா?'படத்திலிருந்து 'பொன் ஒன்று கண்டேன்...
பெண் அங்கு இல்லை' பாடலை சௌந்தரராஜனின் குரலில் பாடும் இளைஞருடன் சேர்ந்து பாட ஆரம்பித்தார்.
பல்லவி முடிந்து சரணம் வந்தது. முதல் சரணத்தின் வரிகளை டிஎம்ஸ் குரலோன்
பாடியதும் பிபிஎஸ் தொடர வேண்டும். பாட்டில் ’சென்றேன்’ என்ற டிஎம் எஸ் குரலுக்குப் பதிலாக ’ஊஹும்’ என்று ஸ்ரீநிவாஸ்
முனகியபோது என் மண்டைக்குள் மின்னல் அடித்தது. நேற்று அறைக் கதவைத் தட்டியதும் இதே
ஹூம்தானே பதிலாக வந்தது. ஏன் என்னால் அதை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை?
என்று யோசித்தேன்.
அண்மைக் காலமாக அவர் அதிகம் பாடவில்லை. ஆனால் அவர் பாடல் ஒலிபரப்பாகாத நாள்
இல்லையே? இருந்தும்
ஏன் எனக்குப் பிடிபட வில்லை? பழைய பாடல்களை மறந்து கொண்டிருக்கும் புதிய தலைமுறை யைச்
சேர்ந்தவனாகி விட்டேனா? நான் யோசித்துக் கொண்டே அவர் பாடுவதைக் கவனித்தேன். பாடலின் இரண்டாவது சரணத்தைப்
பாடிக் கொண்டிருந்தார்கள் . நானும் மனசுக்குள் பாடிக் கொண்டிருந்தேன். 'என் விழியில் நீ இருந்தாய் உன் வடிவில் நானிருந்தேன்'
என்பது வரி.
டிஎம்ஸ் குரலோன பாடிய அதே வரியையே - உன் விழியில் நானிருந்தேன் -என்று பிபிஎஸ்ஸும்
பாடினார். நான் உணர்ச்சிவசப்பட்டு 'அய்யோ தப்பு' என்றது பிபிஎஸ் சுக்குக்
கேட்டு விட்டது. கை நீட்டி ஆர்க்கெஸ்டிராவை நிறுத்தினார். சைகை காட்டி என்னை மைக்
அருகில் வரச் சொன்னார். போய் நின்றேன். முதுகில் தட்டி '' அந்த லைனைப் பாடிடுங்க'' என்றார்.
கொஞ்சம் தயங்கி நிறையப் பயந்து வாயைத் திறந்தேன். என் விழியில் நீ இருந்தாய்'
என்றார் டிஎம் எஸ்
எதிரொலி.’உன் வடிவில் நானிருந்தேன்'
என்று பிபிஎஸ் சாக
மாறினேன் நான். நீயின்றி நானில்லை; நானின்றி நீயில்லை என்ற வரிகளை மூன்று குரல்கள் பாடின. வாழ்நாளில்
நான் முதலும் கடைசியுமாக மேடையில் பாடியது அது மட்டுமே.
வார இதழில் பணியாற்றிய காலத்தில் ஒரு சினிமா சிறப்பிதழுக்காக பி பி
ஸ்ரீநிவாசைப் பேட்டி காணத் திட்டமிட்டேன்.அவரை நெருங்க மேற்சொன்ன நிகழ்ச்சிதான்
திறப்பாக அமைந்தது. சென்னை ராதாகிருஷ்ணன் சாலையி லிருந்த தனது இரண்டாவது வீடான
டிரைவ் இன் உட்லாண்ட்சில்தான் அவரைச் சந்தித்தேன். இப்போது முகத்தில் சுருக்கதின்
தோது கூடி யிருந்தது. சட்டைப்பையில் கலர் பேனாக்களின் எண்ணிக்கையும்
கூ டியிருந்தது.
பழைய சம்பவத்தைச் சொன்னபோது முதன்முறை சிரித்ததுபோல ஒரு மாத்திரைச் சிரிப்பு.
பேட்டியாக வேண்டாம்.பேசுவோம் அதிலிருந்து தேவையானதை எடுத்து வெளியிட்டுக்
கொள்ளலாம் என்று யோசனை சொன்னார். சரி என்று ஒப்புக் கொண்டேன். ஆனால் அந்தக் கட்டுரையை
எழுதவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று:பேச்சில் காரசாரமாக எதுவும் இல்லை.
எல்லாரைப் பற்றியும் மிகையாவே பாராட்டி யிருந்தார். அது அவருடைய சுபாவமாகவும்
இருக்கலாம். இரண்டாவது காரணம்: அவர் போட்ட நிபந்தனை. அவர் எழுதிய கவிதையை - எட்டு
மொழிகளில் சுமார் இரண்டு லட்சம் கவிதைகள் எழுதி இருக்கிறேன் என்றார் - இதழில்
வெளியிட வேண்டும். கவிதையைப் பற்றியும் பி.பி.ஸ்ரீநிவாசைப் பற்றியும் எனக்கு
உயர்வான கருத்துகள் இருந்தன. எனவே கவிதையை வெளியிடுவ தற்கில்லை என்றேன். 'அப்ப இதுவும் வேண்டாம்'.
சரி. என்று விடை பெற்றேன். அதன் பின்னர் அதே உட்லாண்ட்ஸ் டிரைவ் இன் - இல்
அவரைப் பலமுறை பார்த்திருக்கிறேன். முதலில் வணக்கம் தெரிவித்து
நகர்ந்திருக்கிறேன். பின்னர் அதுவுமில்லை. நாளடைவில் அவருக்கு என்னை மறந்தே
போயிற்று. கடைசியாக நான் அவரைப் பார்த்ததும் அதே டிரைவ் இன்னில்தான். 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்.
பழசைப் பற்றி எதுவும் சொல்லாமல்
முதுமையைச் சுமந்து குனிந்து தளர் நடையில் வந்தவரை நெருங்கி வணக்கம் போட்டேன்.
தலையசைத்து நடந்தார். அந்த நாளுக்கு இரண்டு மாதங்களுக்குப்பின் டிரைவ் இன்
இல்லை.ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அந்த இடத்தின் நித்திய விருந்தாளியான பி.பி
ஸ்ரீநிவாசும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக