விரும்பியதை அடைய
ஏழுகடல் கடக்க வேண்டும்
என்றார்கள்
காலடி மணலில் பிசுபிசுத்த
முதல் கடலைத் தாண்டினேன்
பாதத்தில் புரண்டு
கொண்டிருந்தது
இரண்டாம் கடல்
கணுக்காலைக் கரண்டிய
மூன்றாம் கடலை உதறித்
தள்ளியும்
முழங்காலில் மண்டியிட்டது
நான்காம் கடல்
இடுப்பைக் வருடிய ஐந்தாம்
கடலைப்
புறக்கணித்து நடந்தேன்
கழுத்தை நெரிக்க
அலைந்தது
ஆறாம் கடல்
தலையை ஆழ மூழ்கடித்து
உட்புகுந்து ஆர்ப்பரித்த
ஏழாம் கடலைக்
கொப்பளித்துத் துப்பியதும்
'வெற்றி உனதே, இனி
விரும்பியதை அடையலாம்' என்றார்கள்.
உப்பை ருசித்தபடிக்
கேட்டேன்
'ஏழினும் பெரிய கடல்
இல்லையா?'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக