பக்கங்கள்

திங்கள், 6 ஏப்ரல், 2015

கமலின் மலையாளப் படங்கள்

திரு. யுவ கிருஷ்ணா, தனது ஃபேஸ்புக் நிலைத்தகவலில் கமல்ஹாசன் பற்றி நான் எழுதிய கட்டுரையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். கமல் ஹாசனின் 60 ஆம் பிறந்த நாளையொட்டி குமுதம் வெளியிட்ட மலருக்காக நண்பர் மணா கேட்டுக் கொண்டதால் எழுதிய கட்டுரை இது. கட்டுரை கமல்ஹாசனுக்குப் பிடிக்கவில்லை. அதனால் நண்பர் மணாவிடம்  'இனிமே உங்க சங்காத்தமே வேணாம்' என்று காய்விட்டு விட்டதாக மணா தெரிவித்தார்.

யுவ கிருஷ்ணாவின் தகவலைப் பார்த்து விட்டு அது என்ன கட்டுரை என்று விசாரித்த சில நண்பர்களுக்காக இந்தப் பதிவேற்றம்.





மிழ்ச் சினிமாவின் இளைய தலைமுறை நடிகர்கள் பலரின் படங்களும் தமிழகத்தில் வெளியாகும் அதே நாளில் கேரளத்திலும் வெளியாகிறது. இதனால் மலையாளப் படங்களுக்குக் கிடைக்க வேண்டிய வரவேற்பு கிடைப்பதில்லை என்று மாலிவுட் பிரமுகர்கள் புகைந்ததும் உண்டு. மலையாள நட்சத்திரங்களுக்கு இணையாகத் தமிழ் நடிகர்களும்  போற்றப் படுகிறார்கள். கேரளத்தில் ஜவுளிக்கடை திறப்புக்கும் கேரள வியாபார நிறுவனங்களுக்கும் தமிழ் நடிகர்கள் விளம்பரப் புரட்சி செய்கிறார்கள். ஏறத்தாழ எல்லா நடிகர்களுக்குமே கேரளத்தில் ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. தங்கள் ரசிகர்கள் பாண்டிக்காரர்களின் அனுதாபிகளாவதைப் பார்த்து மலையாள நாயகர்கள் கைகளைப் பிசைந்து கொள்வதும் வாடிக்கை.

எல்லாமிருந்தாலும் சகல மலையாள ரசிகர்களும் ஒரு தமிழ் நடிகர் மலையாளப் படத்தில் நடிப்பதைப் பார்க்கக் காத்திருக்கிறார்கள். அந்த நடிகர் - கமல்ஹாசன்.

ஊடக நேர்காணல்களில் ''நீங்கள் மறுபடியும் எப்போது மலையாளப் படத்தில் நடிப்பீர்கள் ?'' என்ற கேள்வி கமல்ஹாசனிடம் கேட்கப்படுவது வாடிக்கை. அவருக்குப் பின்னால் சிவாஜி, பிரபு,  பிரகாஷ் ராஜ், பார்த்திபன், பசுபதி, தலைவாசல் விஜய், சரத்குமார் போன்ற பல தமிழ்த் திரைமுகங்கள் மலையாள சினிமாக்களில் தோன்றியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள்  யாரிடமும் இந்தக் கேள்வி கேட்கப் பட்டதில்லை; படுவதில்லை. இந்தக் கேள்விக்கு ஒரே நாயகன் கமல்ஹாசன் மட்டுமே. அவர் நம்முடெ ஸ்வந்தம் ஆளாணு என்ற உரிமை பாராட்டுதலே காரணம். அவரும்''நான் இங்கே இருந்து போனவன். அதானால் நிச்சயம் வருவேன்'' என்று பதில் சொல்லி ஆசை காட்டிக் கொண்டிருக்கிறார்.
கமல்ஹாசன் தன்னையறியாமல் மலையாளத் திரையுலகத்துக்குச் செய்த முதன்மையான பங்களிப்பு ஒன்று இருக்கிறது.கேரளத்தின் முந்தைய தலைமுறை நடிகர்களான சத்யனுக்கும் பிரேம் நசீருக்கும் ரசிகர்கள் இருந்தார்கள். ஆனால் பெரிதாக ரசிகர் மன்றங்கள் இருந்ததில்லை. புதிய தலைமுறை நடிகர்களின் வருகைக்குப் பின்புதான் ரசிகர் மன்றங்கள் முளைத்தன. ஆரம்பத்தில் மோதிக் கொண்டிருந்த மம்மூக்கா ரசிகர்களும் லாலேட்டன் ரசிகர்களும் கமல்ஹாசன் ரசிகர்களைப் பார்த்துத்தான் மனந்திருந்தினார்கள் என்று சொல்லலாம். வெறும் ரசிகர் மன்றங்களாக இருந்தவை இன்று நற்பணி மன்றங்களாக உருமாறியிருக்கின்றன.

கமல்ஹாசனை 'சொந்த ஆளா'க மலையாளிகள் நினைக்கிறார்கள். வேறு எந்தப் பிற மொழி நடிகரும் அவர் அளவுக்கு மலையாளப் படங்களில் நடிக்கவில்லை. கிட்டத்தட்ட நாற்பது படங்கள். குழந்தை நட்சத்திரமாகக் 'களத்தூர் கண்ணம்மா'வில் அறிமுகமானது 1959 இல். அடுத்த மூன்று வருடங்களுக்குள் 'கண்ணும் கரளும்' மலையாளப் படத்தில் அறிமுகமானார். இது வெறும் அறிமுகமாக இருக்கவில்லை. மலையாள சினிமாவின் மகா நடிகர் என்று இன்றும் பாராட்டப்படும் சத்யன் கதாநாயகனாக நடித்த படம். அன்றைய மறுமலர்ச்சி நாடக ஆசிரியரான கே.டி.முகம்மதின் திரைக்கதை வசனம். எம்.பி.சீனிவாசனின் இசை. வயலார் ராமவர்மாவின் பாட்டுகள். எல்லாவற்றுக்கும் மேலாக மலையாளிகளின் சினிமா ரசனையைப் பேணிய கே.எஸ். சேதுமாதவனின் இயக்கம். இந்த வலுவான பின்னணியை அன்றைய ஒன்பது வயதுச் சிறுவன் கமல்ஹாசன் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவரது சினிமா வாழ்க்கையை அது மறைமுகமாகப் பாதித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கமல்ஹாசன் முதலில் கதாநாயகன் ஆனதும் மலையாளத் திரையில்தான். 1975 இல் வெளிவந்த 'கன்யாகுமாரி' படத்தில். அதற்கு முன்பும் அதற்குப் பின்பு 'பட்டாம் பூச்சி'வரையிலான தமிழ்ப் படங்களில் அவர் சிறு வேடங்களில்தான் நடித்திருக்கிறார். கதாநாயகனின் நண்பனாக. துணைக் கதாநாயகனாக. அல்லது தனி நடிப்புக்கு எந்த முக்கியத்துவும் இல்லாத பாத்திரங்களில்தான் அவர் தோன்றியிருக்கிறார். அவரைக் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய அதே சேதுமாதவனே அவரைக் கதாநாயகன் ஆக்கினார்.

மலையாளத்தின் பெரும் எழுத்தாளரான எம்.டி. வாசுதேவன் நாயரின் திரைக் கதை. புனே பிலிம் இன்ஸ்டிட்டியூட்டில் நடிப்புப் பயின்ற ரீடா பாதுரி நாயகி. எம்.பி. சீனிவாசன் இசை. மறுபடியும் ஒரு லெஜன்டரியான கூட்டணியின் பின்புலத்தில் அரங்கேறினார். இந்த வாய்ப்பு அவருக்கு சினிமாவின் துடிப்பைக் கற்றுக் கொடுத்திருக்கும் என்று நம்பலாம். அதற்கான வயதும் இளமை வேட்கையும் அவரிடம் இருந்தன.

ஒருவிதத்தில் கமல்ஹாசனை மலையாளப் படங்கள் வரவேற்றதும் அந்த இளமைக்காகத்தான். அவர் அறிமுகமாகி நடித்துக் கொண்டிருந்த அந்தக் கட்டத்தில் அவர் அளவுக்கு இளமையான மலையாள நடிகர்கள் இருக்க வில்லை. மலையாளத்தின் முன்னணி நாயகர்களான சத்யன், பிரேம் நசீர், மது எல்லாரும் நடுத்தர வயதை எட்டியிருந்தார்கள். மேக் அப் கலைஞரின்  உபயத்தில் இளைஞர்களாகத் துள்ளிக் கொண்டிருந்தார்கள். இளம் நாயகர் களாக அறிமுகமான எம்.ஜி.சோமன். சுகுமாரன் ( பிருத்விராஜின் அப்பா ), ஜெயன் ஆகியவர்கள் அறிமுகமானபோதே முதிர் இளைஞர்கள்.  மம்மூட்டியும் மோகன்லாலும் வரும்வரை மாலிவுட்டில்  நிலவிய இளமைப் பஞ்சத்தைப் போக்கியவர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த இரண்டாவது மலையாளப் படம் விஷ்ணு விஜயம். என். சங்கரன் நாயர் இயக்கத்தில் வெளிவந்த படத்தின் நாயகி ஷீலா. கமலை விடப் பதினோரு வயது மூத்தவர். படத்தின் கதையும் ஒரு பெண் தன்னை விட வயது குறைந்த இளைஞனைக் காதலிப்பது பற்றியதுதான் என்பதால் ஜோடிப் பொருத்தம் கச்சிதமாக இருந்தது. கிட்டத்தட்ட முப்பது வயதை எட்டியிருந்த ஷீலா மிக இளமையாகத் தென்பட உதவியது கமல்ஹாசன் என்பது வேடிக்கை; ஆனால் உண்மை.

பொதுவாக முன்னணிக் கதாநாயகர்கள் திரையில் தங்களை வாலிபர்களாகக் காட்டிக் கொள்ள இளம் நடிகைகளையே தேர்ந்தெடுப்பது இந்திய சினிமாவில் வழக்கம். அதை மாற்றிய பெருமை நம்மவருக்கு உண்டு. ஜெயசுதாவும் ஸ்ரீதேவியும் வரும் வரை  கதாநாயகிச்  சேச்சிகளை யௌவனமானவர் களாகத் தோன்றச் செய்தவர் கமல்ஹாசன். அவருடன் நடித்த நாயகிகளின் வரிசையைப் பார்த்தால் இது விளங்கும். விஷ்ணு விஜயத்தில் ஷீலா, அப்பூப்பன் படத்தில் ஜெயபாரதி, பொன்னியில் லட்சுமி. மலையாளத்தில் அவருடைய இளமைக்கு ஈடு கொடுத்த படம் என். சங்கரன் நாயர் இயக்கிய 'மதனோத்ஸவம்'. எரிச் சீகாலின் ' லவ் ஸ்டோரி' என்ற பிரபலமான கதை கிட்டத்தட்ட எல்லா இந்திய மொழிகளிலும் நகலெடுக்கப்பட்டது. அதன் மலையாள வடிவமான மதனோத்ஸவத்தை வெற்றி பெறச் செய்தது கமல் - ஜரினா ஜோடியின் இளமை.

கிட்டத்தட்ட இந்தக் காலக் கட்டத்தில் மலையாள சினிமா மாற ஆரம்பித்திருந்தது. கதாநாயக பிம்பமும் மாறத் தொடங்கியது. 1971 இல் சத்யன் நடித்த அனுபவங்கள் பாளிச்சகள் என்ற படத்தில் தலைகாட்டிய மம்மூட்டி ( அந்தப் படத்தில் அவருக்கு டைட்டில் கிரெடிட் இல்லை)  1979 இல் வெளியான 'தேவலோகம்' படத்தின் மூலம் கவனத்துகுரிய நடிகரானார். இந்த அறிமுகங்களில்  ஒரு சுவாரசியம் இருக்கிறது. கமல்ஹாசனை அறிமுகப்படுத்திய சேதுமாதவன் தான் மம்மூட்டியை அரங்கேற்றுகிறார். கமல்ஹாசனுக்கு நாயக அந்தஸ்தைக் கொடுத்த திரைக்கதையை எழுதிய எம்.டி.வாசுதேவன் நாயர்தான் மம்மூட்டிக்கும் திரைக்கதை எழுதி இயக்குகிறார். 78 இல் அறிமுகமானாலும் 80 இல் வெளிவந்த 'மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள்' மூலம் வில்லனாகக் கவனம் பெற்ற மோகன்லால் விரைவில் மலையாள இளமையின் அடையாளாமாக மாறினார். இந்த இரு சுதேச இளைஞர்களின் வருகை விருந்தாளி கமலின் இளமைக்கு முடிவு கட்டியது. அதற்குள் கமல்ஹாசன் தமிழ்த் திரையின் முக்கிய ஆளுமையாக மாறிவிட்டிருந்தார்.

1980 - 90 வரை கமல்ஹாசன் நடித்த மலையாளப் படங்களின் எண்ணிக்கை 6. இவற்றில் 1989இல் டி.கே.ராஜீவ்குமார் இயக்கத்தில் வெளிவந்த 'சாணக்கியன்'  படம் மட்டுமே அவரை மலையாள ரசிகர்களின் நினைவில் நிறுத்துகிறது. மற்ற ஐந்து படங்களும் ரசிகர்களின் மொழியில் 'பொட்டப் படங்கள்'தான். மம்மூட்டியும் மோகன்லாலும் உருவாக்கிய புதிய சினிமாப் பார்வைக் கலாச்சாரத்தில் கமல்ஹாசனின் நடிப்பு அவ்வளவு முக்கியத்துவமில்லாமல் போனது. அதற்கு மாறிய சூழல் ஒரு காரணம். கமல்ஹாசனும் ஒரு காரணம். சேதுமாதவன், எம்.டி. வாசுதேவன் நாயர், ஐ.வி சசி போன்றவர்களின் படங்களில் நடிக்க முடிந்த கமலுக்கு அன்றைய சீரிய இயக்குநர்களான பரதன், பி. பத்மராஜன், கே.ஜி.ஜார்ஜ் போன்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கமலின் நடிப்பில் ஆரம்பத்தில் இருந்த கலைத்தன்மையுள்ள இன்னொசென்ஸ் பின்னர் காணாமற்  போனது ஒரு காரணம்.  அவர் ஏற்கும் எல்லா வேடங்களிலும் கதாபாத்திரத்தின் மன நிலையை முந்திக் கொண்டு 'கமல்ஹாசன் இந்தப் பாத்திரத்தைச் செய்கிறார்' என்ற துருத்தல் வெளிப்பட்டு விடுவது இன்னொரு காரணம். அதை விட அவர் இதற்குள் துருவ நட்சத்திரமாக எட்டாத் தொலைவுக்குச் சென்றிருந்தார். அவரை வைத்துப் படமெடுப்பது கச்சிதமான பட்ஜெட்டில் சினிமா தயாரிக்கும் மலையாளிகளால் முடியாத காரியம்.

மலையாள சினிமா ஒரு மாற்றத்துக்கு உள்ளான  கால கட்டத்தில் அதில் நடித்தவர் கமல்ஹாசன். கேளிக்கைப் படங்களிலும் பாராட்டத் தகுந்த கலை அம்சங்கள் இருந்த படங்கள் உருவான காலம். கன்யாகுமாரியில் கேளிக்கை நடிப்புக்கும் கலைத்தன்மைக்கும் இடமிருந்தது. ஐ.வி சசி இயக்கிய 'ஈட்டா' படத்திலும் அந்தத் தன்மை இருந்தது. கமல்ஹாசன் முதன் முதலில் மேக் அப் சோதனை செய்து பார்த்த படம் ஏ.வின்சென்ட் இயக்கிய 'வயநாடன் தம்பான்'. நூறு வயதுக் கிழவனின் ஒப்பனையில் கமல் நடித்திருந்தார். அந்தப் படமும் கேளிக்கை நடிப்பின் சாதகங்களைக் கொண்டிருந்தது. அவரது நாயக நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'சாணக்கியன்' கமலின் கேளிக்கை நடிப்பின் உச்சம். கலைத்தன்மையுள்ள படங்களில் காட்டும் நடிப்புக்கும் வெறும் பொழுது போக்குப் படங்களின் நடிப்புக்கும் இருக்கும் வித்தியாசத்தை மலையாளத் திரையுலகுக்கு மறைமுகமாகக் கற்பித்தவர் கமல்ஹாசன். மலையாளிகள் ஒப்புக் கொண்டாலும் மறுத்தாலும் இது நிஜம். சத்யனும் பிரேம் நசீரும் மதுவும் எம்.ஜி.சோமனும் எந்தப் படத்தில் நடித்தாலும் அவர்களது  நடிப்புக்குத் தனித்தன்மை இருப்பதில்லை. கேளிக்கைப் பட நடிப்பும் சீரியஸ் பட நடிப்பும் அதிகம் வித்தியாசமில்லாமலிருந்தன. மலையாளத்தின் எவர் கிரீன் ஹீரோவான பிரேம் நசீரின் நடிப்பு பொழுது போக்குப் படமான 'சி.ஐ.சி நசீரிலும் சீரியஸ் படமான ' இருட்டின்டெ ஆத்மா'விலும் கிட்டத்தட்ட ஒன்றுதான். முன்னத்தில் கொஞ்சம் ஓவர். பின்னதில் அடக்கிய வாசிப்பு. இந்த இருவகை நடிப்புக்கும் வேறுபாடு இருப்பதைக் கோடிட்டுக் காட்டியவர் கமல்ஹாசன். இதைத் தெரிந்தோ தெரியாமலோ இன்றைய மலையாளநடிகர்கள் பின்பற்றுகிறார்கள். மம்மூட்டி , மோகன்லால் முதல் பிருத்விராஜ், ஃபஹத் பாசில், துல்கர் சல்மான் வரையான மலையாள நடிகர்கள்.

தான் கற்றுக் கொடுத்த பாடத்தை வாத்தியாரே மறந்ததுபோல இந்த வகைப்பாட்டை மறந்திருப்பவர் கமல்ஹாசன். கேளிக்கைப் படங்களில் கதாநாயகன் முக்கியம். அவனுடைய இமேஜ் முக்கியம். அதை வைத்தே படம் உருவாக்கப்படுகிறது. மாற்றுப் படங்களில் பாத்திரமே பிரதானம். அங்கே நடிகனின் பிம்பத்துக்கு எந்தத் தேவையுமில்லை. ஆனால் கமல்ஹாசன் ஏற்கும்  வேடங்களில் அந்தப் பாத்திர தர்மத்தை மீறிக் கமலும் எட்டிப் பார்க்கிறார். சமீபத்திய உதாரணம் ' உன்னைப் போல் ஒருவன்'. பெயர் சொல்லப் படாத சாதாரண மனிதன் பாத்திரம் கமலஹாசனுக்கு. ஆனால் திரையில் நாம் பார்ப்பது சகலகலா வல்லவரான கமலஹாசனை. அந்த சாதாரணனை மீறித் தெரியும் உலக நாயகன் பிம்பத்தை. அப்படியல்லாத ஒரு பாத்திரத்தைச் செய்ய முடியும்போது கமல்ஹாசனை மறுபடியும் மலையாளத் திரையில் பார்க்க முடியும். அதற்கான வாய்ப்ப்பு அவர் காலடியில் இருக்கிறது இப்போது. த்ருஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக். மலையாளப் படத்தில் ஒரு ப்ரேமில் கூட மோகன்லாலைப் பார்க்க முடிவதில்லை. நாம் பார்த்தது நாலாம்  கிளாஸ்காரன், கேபிள் டிவி ஆப்பரேட்டர் ஜோர்ஜ் குட்டியைத்தான். 'பாபநாசம்' படத்தில் நாம் பார்க்கப் போவது யாரை? கமல்ஹாசனின் சுயம்புலிங்கத்தையா? சுயம்புலிங்கத்தின் கமல்ஹாசனையா?
 இந்தக் கேள்விக்குக் கிடைக்கப் போகும் பதில்தான் கமல்ஹாசன் மலையாள சினிமாவிலிருந்து பெற்றது என்ன, அதற்குக் கொடுத்தது என்ன என்பதைத் தெளிவுபடுத்தும்.
@
நன்றி: குமுதம் - கமல் 60 சிறப்பு மலர் 2014.








1 கருத்து:

  1. ஓரிரண்டு வார்த்தைப் ப்ரயோகங்களைத் தவிர்த்திருந்தால் இந்தக் கட்டுரை எனக்குப் பிடித்தமானதாக இருந்திருக்கும். :)

    பதிலளிநீக்கு