காபோ, காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், எப்போதும் செய்திகளில் இருந்துகொண்டிருந்தார்; இறந்தபின்னும் இருந்து கொண்டேயிருக்கிறார். இருந்தபோதைவிடவும் இறந்தபின்னர் மிக அதிகமாகச் செய்திகளில் விவாதிக்கப்படுகிறார். ஆளுமையாக அவரது இயல்புகள் பேசப்படுகின்றன. படைப்பாளியாக அவரது எழுத்துகள் வெவ்வேறு கோணங்களில் விவாதிக்கப்படுகின்றன. அவர் பெயரில் இருக்கும் இணையதளத்தில் காபோ தொடர்பாக ஏதாவது புதுத்தகவல் வாரத்துக்கு ஒருமுறையாவது பதிவேற்றம் செய்யப்படுகிறது. அவரது படைப்புகள் பற்றிய சொல்லப்படாத செய்திகள், அவரது செயல்களைப் பற்றிய விவரங்கள் என்று கண்டுபிடிப்பின் சுவாரசியத்துடன் ஏதாவது ஒன்று பகிர்ந்துகொள்ளப்படுகிறது. லத்தீன் அமெரிக்க இதழ்களிலும் அவற்றின் இணையப் பதிப்புகளிலும் காபோ முன்னர் சொன்ன கருத்துகள் இன்று புதிய வெளிச்சத்துடன் புரிந்துகொள்ளப்படுகின்றன. வாழ்ந்த காலத்தில் வெளியானதைவிட அதிக எண்ணிக்கையில் அவரது நூல்கள் பதிப்பிக்கப்படுகின்றன. சென்ற ஆண்டு ஏப்ரல் 17 அன்று காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் மறைந்தார். அந்த ஆண்டுக் கோடைக்காலத்தில் பிரித்தானிய எழுத்தாளரும் மார்க்கேஸின் தீவிர வாசகரும் அபிமானியுமான நிக்கோலஸ் ஷேக்ஸ்பியருக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. எழுதியவர் லண்டனில் வசிக்கும் ஒரு பெண். மார்க்கேஸின் ‘காலராக் காலத்தில் காதல்’ (Love in the time of Cholera ) நாவலின் பிரித்தானியப் பதிப்புக்குத் தான் எழுதியிருக்கும் முன்னுரையை முகாந்திரமாக வைத்தே அந்தப் பெண் தனக்குக் கடிதம் எழுதியதாகக் குறிப்பிடுகிறார் நிக்கோலஸ். “நீங்கள் முன்னுரை எழுதியிருக்கும் அந்த கொலம்பிய எழுத்தாளருடன் எனக்குச் சின்னத் தொடர்பு இருக்கிறது. என்னை வைத்துத்தான் அவர் ஒரு கதையை எழுதியிருக்கிறார். 1990 இல் பாரிஸிலுள்ள ‘சார்ள்ஸ் தி கால்’ விமான நிலையத்தில் அவரைச் சந்தித்தேன்” என்பது கடித வாசகம். அந்தக் கதை மார்க்கேஸின் ‘விந்தையான புனிதப் பயணிகள்’ ( The strange pilgrims ) தொகுப்பில் இடம் பெற்றிருப்பது. ‘உறங்கும் அழகியும் விமானமும்’ என்ற கதை. நமது சுயத்தின் அறியப்படாத இன்னொரு சுயத்தை மையக் கருவாகவைத்து எழுதப்பட்ட கதைகள்கொண்ட ஒரு தொகுப்பை மார்க்கேஸ் பதினெட்டு ஆண்டுகளாகத் திட்டமிட்டு வந்தார். கதைக்கான குறிப்புகளை ஒரு குறிப்பேட்டில் கிறுக்கி வைத்திருந்தார். அதில் ஒரு கதைக்கான வரி முதல் பார்வையிலேயே தோன்றும் காதலைப் பற்றியது. உறங்கும் அழகியும் விமானமும் கதையும் கண்டதும் காதல் கொள்வது பற்றியதுதான். இந்த உண்மை விவரங்கள்தாம் ‘உறங்கும் அழகியும் விமானமும்’ கதையின் கூறுகள். இந்த விவரங்களையெல்லாம் நேர்ச்சந்திப்பில் நிக்கோலஸ் ஷேக்ஸ்பியரிடம் எடுத்துச் சொல்கிறார் சில்வானா. இப்போது அவர் லண்டன்வாசி. ஐம்பதுவயதுப் பாட்டி. மார்க்கேசின் மரணச் செய்தி அறிந்தபின்னர் அவரது ‘விந்தையான புனிதப் பயணிகள்’ தொகுப்பை வாசித்ததாகவும் அதில் மூன்றாவதாக இடம் பெற்றிருக்கும் உறங்கும் அழகி கதையின் சம்பவங்கள் காப்ரியேல் கார்சியா மார்க்கேசை விமான நிலையத்தில் முதலில் சந்தித்தபோது தான் சொன்னவை என்பதும் சில்வானாவின் தரப்பு. சில விஷயங்கள் எழுத்தாளரின் கைச்சரக்கு என்றும் திருத்தம் சொல்லுகிறார். தான் அன்று விமானத்தில் பயணம் செய்யவில்லை. பாரிசில் தான் மகிழ்ச்சியாக இருக்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்ட கணவர் பீட் தனக்கு ஆறுதல் சொல்வதற்காக பிரேசிலிலிருக்கும் சில்வானாவின் பெற்றோருக்கு விமான டிக்கெட் அனுப்பி பாரீசுக்கு வரவழைத்ததாகவும் அவர்களை வரவேற்கப் போனபோதுதான் மார்க்கேஸைச் சந்தித்ததாகவும் சொல்லுகிறார். இன்னொரு முக்கியமான திருத்தத்தையும் சில்வானா குறிப்பிடுகிறார். “நான் இதுவரை பார்த்தவர்களிலேயே மிக அழகான பெண் இவள்தான் என்று கதையில் மார்க்கேஸ் குறிப்பிடுகிறாரே அது எழுத்தாளரின் பொய்”. கதையில் அப்பட்டமான உண்மைக்கு இடமில்லை. நிஜமான பொய்க்குத்தானே படைப்பில் வேலை. காபோவே சொல்லுகிறாரே ‘ஒரு கதைக்கு தொடக்கம் இல்லை; முடிவும் இல்லை. ஒன்று அது செயலாற்றுகிறது. அல்லது சும்மா இருக்கிறது’ என்று.
நன்றி: Newsweek, July 24 2014
| |
http://www.kalachuvadu.com/issue-184/page62.asp |
பக்கங்கள்
▼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக