பக்கங்கள்

செவ்வாய், 19 மே, 2015

செவ்வாய்க்கு அடுத்த நாள் , ஆனால் புதன்கிழமை அல்ல.



செவ்வாய்க்கு  அடுத்த நாள் , ஆனால்
புதன்கிழமை அல்ல.




வீடு தவறியோ  விலாசம் விசாரித்தோ
உதவிகோரியோ  நன்கொடை திரட்டவோ 
எப்போதாவது  யாராவது வருவார்கள்
என்பதைத் தவிர்த்தால்
வாசலுடன் திரும்பும் அன்றாடர்களைத் தவிர
வருகையாளர் அதிகமில்லை  வீட்டுக்கு

அனுமதி கோராத அழைப்பாளர்கள் சிலரும் 
அபூர்வமாக நுழைவதுண்டு

விடிந்ததும் காற்றின் வெளிச்சம்
வீட்டைப் பிரியாத பூனையின் காதலன்
காதலனை வேவுபார்க்க வரும் இன்னொரு காதலி
முற்றத்து மரக்கிளை ஒடிந்தது எப்படி என்று
விசாரணை செய்ய வரும் நீல வால் குருவி
தொட்டிப் பூவைப் பறித்தது ஏன் என்று
பிராது சொல்லும் தேன் சிட்டு
மழைத்துளி விழுந்ததும் கத்தித் துள்ளும் தவளை
அறைகளுக்குள் பதுங்கியிருக்கும் அந்திப் பிரகாசத்தைக்
கைப்பிடித்து இழுத்துச் செல்லும் முன்னிரவு
இவையெல்லாம் தற்செயல் வருகைகள்

இன்று
வெய்யிலின் இளநீர் வாசனையோடு
கண்ணாடிப் பிரதிபலிப்பாய்க் கொதித்து மின்னும்
நட்டநடுப் பகலில்
மூடிய கதவைக் கடந்து
யாரோ நுழைந்ததை உணர்ந்து திகைத்தேன்
கூடத்தில் பார்த்தேன், அறைகளுக்குள் தேடினேன்
யாருமில்லை யாருமில்லை யாருமேயில்லை
எனினும் யாரோ வந்து
வீடு முழுவதும்
ஊன்றி நடந்து திரும்பிய  அடையாளமாய்
தாழிட்ட கதவுக்கு இப்பால்
வாசல் நிலையருகில் தரையில்
ஒரு ஜோடிக் காற்சுவடுகள்
ஆரஞ்சு ஒளியுடன்
விட்டுவிட்டு ஒளிர்வதைப் பார்த்தேன்

அப்போது  முதல்தான்
இதயத் துடிப்பின் நிமிடக் கணக்கில்
ஒரு துடிப்புக் குறைந்ததை உணர்ந்தேன்
அன்று
செவ்வாய்க்கு மறுநாள், ஆனால்
புதன்கிழமை அல்ல.




















1 கருத்து: