பக்கங்கள்

செவ்வாய், 26 மே, 2015

அண்ணாச்சி விக்ரமாதித்யன்



விக்ரமாதித்யன் என் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர்.  என் நண்பர். என் அண்ணாச்சி.

இந்த வரிசையைக் கவனமாக யோசித்தே சொல்கிறேன். கவிஞர் என்ற நிலையில் தான் முதன் முதலாக விக்ரமாதித்யனைத் தெரிந்து வைத்தி ருந்தேன். அந்த அறிமுகத்தின் அடிப்படையில்தான் நண்பர் ஆனார். அதுதான் பின்னர் அவரை அண்ணாச்சி என்ற இடத்துக்குக் கொண்டு போய் வைத்தது. இந்த நட்புக்கு இப்போது முப்பத்திச் சொச்சம் வயதாகிறது என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வளவுக்கும் நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறவர் களோ அட்டவணை போட்டு அன்றாடம் பேசிக் கொள்கிறவர்களோ அல்ல. தற்செயலாக அமைகிற சந்திப்புகளில் நலம் விசாரித்துக் கொள்வதும் வாய்ப்பிருந்தால் பேசிக் கொள்வதுமாகவே இந்த நட்பைப் பராமரித் திருக்கிறோம். நான் பேசியதை விட அவர் பேசக் கேட்டதே அதிகம். அதுவும் இலக்கியம் பற்றி  மட்டுமே. அதன் மூலம் நுட்பமான பலன்களை நான் அடைந்திருக்கிறேன்.


கவிதைகள் எழுதி அவை வெளியாகியும் வந்த காலத்தில் விக்ரமாதித்யன் என்ற பெயரைத் தெரிந்து கொண்டேன். குறிப்பாக ஒரு கவிதை மூலம். இந்துமதி ஆசிரியராக இருந்து நடத்திய 'அஸ்வினி'  இதழில் அந்தப் பெயரை முதலில் பார்த்தேன்.  அந்தி வெளிச்சத்தில் எடுத்த புகைப் படத்துடன் கறுப்புப் பக்கத்தில் வெள்ளை எழுத்துகளில் அச்சிடப்பட்டிருந்த கவிதை. 'ஆகாசம் நீல நிறம்' . 'திசை முடிவுக்குத் தெரிவதெல்லாம் ஆகாசம் நீல நிறம்' என்று முடியும் அந்தக் கவிதை மனதில் பதிந்தது. சில மாதங்களுக்குப் பின்னர் 'கணையாழி' இதழில் ஒரு கவிதையை வாசித்தேன். 'எழுதாத கலைஞன்'. ஆனால், அதை எழுதியவரின் பெயர் பாணபட்டன் என்று இருந்தது. அந்தக் கவிதையின் விட்டேற்றித்தனமான தொனி, வரிகளின் அமைப்பு, அதிலிருந்த திறந்த தன்மை -இவையெல்லாம் அது விக்ரமாதித்யனின் கவிதையாக இருக்கலாம் என்று ஊகிக்கச்செய்தன. என் ஊகத்தை அன்றைய சக தோழரான விஸ்வநாதனிடம்,  இன்றைய பாதசாரியிடம் சொன்னேன். 'இது விக்ரமாதித்யனாத் தெரியலேப்பா' என்று விஸ்வநாதன் பதில் சொன்னார்.


இருந்தும் அந்த ஊகத்தை என்னால் கைவிட முடியவில்லை. அதன் பின்னர் விக்ரமாதித்யன் என்ற பெயரில் பல கவிதைகளை வாசித்த போதும் அந்த ஊகம் மனதுக்குள்ளேயே இருந்தது.


1982 இல் அன்னம் நவ கவிதை வரிசையில் விக்ரமாதித்யனின் முதல் தொகுப்பு 'ஆகாசம் நீல நிற நிறம்' வந்த பிறகே அந்த ஊகம் கலைந்தது. விக்ரமாதித்யனின் இன்னொரு அவதாரம்தான் பாணபட்டன் என்று தெரிந்து கொண்ட அந்த நொடியின் சந்தோஷம் இப்போதும் சிரிப்பைத் தருகிறது. அதன் பின்னர் 'பூர்ணன், விக்கி, பிரேம், அமர்' என்று அவ்வப்போது அவர் எடுத்த அவதார ரகசியங்களை மிக எளிதில் கண்டு பிடிக்க முடிந்தது.


விக்ரமாதித்யன் என்னுடைய சில முதல் முயற்சிகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறார். கோடைகாலக் குறிப்புகள் என்னுடையமுதல் தொகுப்பு. அன்றைய மரபுப்படிசொந்தக் காசில் வெளியிட்ட தொகுப்பு. கவிதைகளின் பிரதியையும் காசையும் கொடுத்ததைத் தவிர அந்தத் தொகுப்புக்கு என்னுடைய பங்களிப்பு வேறு எதுவுமில்லை. நண்பர் விமலாதித்த மாமல்லனின் உழைப்பில்தான் புத்தகம் வெளிவந்தது. புத்தகம் வெளிவந்த சில நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு வந்து மாமல்லனைச் சந்தித்தபோது புத்தகத் தயாரிப்புச் செலவுக் கணக்கு எழுதிய ஒரு தாளை நீட்டினார். காகித விலை, அச்சுக் கூலி, பைண்டிங்க் கட்டணம் , ஆட்டோ வாடகை, பார்சல் செலவு எல்லாம்  எழுதப்பட்டிருந்தது. கூடவே இதர செலவுகள் என்றும் எழுதப் பட்டிருந்தது. அதில் புரூப் ரீடிங் - நம்பிராஜன் - என்று ஒரு தொகையும் இருந்தது. மிகவும் சொற்பமான தொகை அது. சந்தேகத்துடன் மாமல்லனிடம் புரூப் ரீடிங்குக்கு இவ்வளவுதான் ஆகுமா? என்று கேட்டேன். 'ஒரு குவார்ட்டருக்கு  அதுக்கு மேலே ஆவாதுப்பா' என்று பதில் வந்தது.

அன்றைய இரவே முதல் முதலாக விக்ரமாதித்யனைச் சந்தித்தேன். அவர் வீட்டில். அன்று அவர் பெற்றோருடன் மாம்பலம் மேட்லி சாலையருகில் குடியிருந்தார் என்று நினைவு. மாமல்லனின் ஸ்போர்ட்ஸ் சைக்கிளில் அவர் வீட்டுக்குப் போனோம். விக்ரமாதித்யனை விட அடர்த்தியான மீசை வைத்திருந்த அவர் தந்தை வரவேற்று வீட்டுக்குள்ளே பார்த்து 'நம்பி' என்று  குரல் கொடுத்தார். உள்ளே இருந்து சட்டையை அணிந்தபடியே வெளியே வந்த மனிதர் 'அட, வாங்கய்யா' என்றார். 'வணக்கம்  அண்ணாச்சி' என்றேன். நம்பிராஜன் என்ற விக்ரமாதித்யன் என் அண்ணாச்சி ஆனார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் வழக்கமாக எல்லாரையும் சொல்லுவது போல 'சார்' என்று சொல்லாமல் ஏன் அண்ணாச்சி என்று சொன்னேன் என்று இன்றுவரை புரியவில்லை. கிட்டத்தட்ட அதே கால கட்டத்தில்தான் ராஜமார்த்தாண்டனும் அறிமுகமானார். ஆரம்ப நாட்களில் அவரை 'மார்த்தாண்டன்' என்றே அழைத்து வந்திருக்கிறேன். மிகவும் நெருக்கம் ஏற்பட்ட பிறகுதான் அண்ணாச்சி என்று சொல்ல முடிந்தது. ஆனால் நம்பியை முதல் சந்திப்பிலேயே அண்ணாச்சி என்று அழைத்தது அவருடைய தோற்றம் காரணமாக இருக்கலாம்.


அன்றைக்கிருந்த அடர்கருந்தாடி இன்று வெண் தாடியாக மாறியிருக்கிறது என்பதைத் தவிர அவர் தோற்றத்தில் மாற்றமில்லை. என்னுடைய முதல் தொகுப்பு வெளிவரப்  பங்காற்றினார் என்பது இன்றும் மகிழ்வளிக்கும் செய்தியாகவே இருக்கிறது.


சென்ற ஆண்டு கோடைகாலக் குறிப்புகளின் புதிய பதிப்பு வெளியானது. முதல் பதிப்பில் இடம்பெற்றதுபோலவே இந்தப் பதிப்பிலும் விக்ரமாதித்யன் பெயர் இருக்க வேண்டும் என்று விரும்பியது அந்த நட்பைப் பாராட்டிக் கொள்ளத்தான்.


கவிதையாக்கம் அல்லது விமர்சனம் என்று நான் எழுதத் தொடங்கியதும் விக்ரமாதித்யனை முன்வைத்துத்தான். 1988  இல் வெளிவந்த அவரது மூன்றாவது தொகுப்பான 'உள்வாங்கும் உலகம்' பற்றி எழுதிய கட்டுரை தான் நான் கவிதை இயல் சார்ந்து எழுதிய முதல் கட்டுரை. தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடந்த புத்தக வெளியீட்டில் அதை வாசித்தது தான் கவிதை விமர்சகனாக நான் பங்கேற்ற முதல்  நிகழ்ச்சி. அந்தக் கட்டுரையை அல்லது பேச்சை ' கவனமாப் படிச்சிட்டுத்தான் சொல்றீங்க' என்று அண்ணாச்சி  சொன்னதுதான் தொடர்ந்து எழுத ஊக்கமூட்டிய காரணங்களில் ஒன்று. அவரே எழுதிய பல கவிதையியல் கட்டுரைகளில் நான் பின்னர் எழுதிய வரிகளை மேற்கோளாகப்  பயன்படுத்தியிருக்கிறார். இவனும் ஏதோ சரியாகத்தான் சொல்கிறான் ' என்று மறைமுகமாக அவர் அளித்த அங்கீகாரம் அது என்றே எண்ணுகிறேன். அந்த அங்கீகாரத்தின் உச்சம் அவருடைய ஒரு தொகுப்புக்கு என்னை முன்னுரை எழுதச் செய்தது. விக்ரமாதித்யன் கவிதைகள் பற்றிய அடிப்படையான கருத்து களைத் தொகுத்துக் கொள்ள அந்த வாய்ப்பு உதவியது. அதில் சொல்லப் பட்ட கருத்துகளிலிருந்து மாறவோ பின் வாங்கவோ தேவையில்லாத தடத்தில்தான் விக்ரமாதித்யனின் கவிதைப் பயணம் இப்போதும் தொடர்கிறது என்று நினைக்கிறேன்; பதினேழு தொகுப்பு களைக் கடந்த பின்னும்.


விக்ரமாதித்யனின் கவிதைகளைப் பகுத்தும் வகைப்படுத்தியும் பேசுவதை விட நவீன கவிதையில் அவரது பங்களிப்பு என்ன என்பதைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன். அவரது பங்களிப்பை மூன்று நிலைகளில் பார்க்கலாம். கவிஞராக, கவிதையியலாளராக,கவிதைச் சூழலை நிர்ணயிப்பவராக.


விக்ரமாதித்யன் எழுத வந்த கால அளவில் நடைமுறையிலிருந்த கவிதை வேறு. எழுத்து மரபிலிருந்து தொடர்ந்து வந்த சில குணங்கள் கவிதையில் பின்பற்றப்பட்டு வந்தன.


கவிதை இறுக்கமானதாக இருக்க வேண்டும். சிக்கலானதாக இருக்க வேண்டும். கொஞ்சம் இருண்மையுடன் இருந்தால் சிலாக்கியம். கவிதையின் மையப் பொருள் வாசகனுக்கு எளிதில் பிடிபட்டு விடாததாக இருப்பது அவசியம். படிமச் செறிவு கொண்டதாக இருக்க வேண்டும். அன்று வெளியான பெரும்பான்மைக் கவிதைகள் அவ்வாறுதான் இருந்தன.அது தேவையாகவும் இருந்தது. வெறும் முழக்கங்களும் ஆர்ப்பாட்டக் கூச்சல்களும் நிரம்பிய மரபையே கவிதை என்று பாராட்டிக் கொண்டிருந்த பண்டித காலக் கவித்துவத்துக்கு  எதிராகவே மௌன வாசிப்புக்குரியதாகவும் கச்சிதமானதாகவும் கவிதை முன்வைக்கப்பட்டது. அது காலத்தின் வற்புறுத்தலாகவும் இருந்தது. அதே சமயம் வெறும் வார்த்தை ஜாலங்களும் கவிதைகளாக வெகுஜனப் பரப்பில் கொண்டாடப் பட்டன. இந்தத் திசை மாற்றப் புள்ளியில்தான் விக்ரமாதித்யனின் கவிதை அறிமுகமானது.


எளிமை. நேரடித்தன்மை.திறந்ததன்மை. படிமச் செறிவோ இருண்மையோ இல்லாமல் அனுபவத்தின் மையத்துக்கு நெருங்கும் கவிதையாக்க முறையையே விக்ரமாதித்யன்  முன்வைத்தார். அதுவரை புதுக்கவிதை என்று அறிமுகமானவை பெரும்பான்மையும் மேற்கத்தியக் கவிதை யியலின் பாதிப்பைக் கொண்டிருந்தன. அதற்கு மாறாக தமிழ்க் கவிதையின் தெளிவு நிலையை விக்ரமாதித்யன் முன்னிருத்தினார். மரபு ஒரு சுமையாகவும் தீண்டத் தகாததாகவும் கருதப்பட்ட சூழலில் மரபின் சாரமான கூறுகளை நவீன உணர்வுடன் கவிதையாக்கத்தில் கொண்டு வந்தார் அவர். சங்க இலக்கியக் கவிதைகளின் இம்மையியல்பையும் பக்தி இலக்கியத்தின் உணர்வுப் பெருக்கையும் கவிதைகளில் புகுத்தினார். அதை மரபின் மீதுள்ள முரட்டுப் பற்றாக அல்லாமல் அதன் மீதான நவீன அணுகுமுறையாகவே அவரால் சாத்தியப்படுத்த முடிந்தது. ஒரு கவிஞராக அவரை நான் மதிப்பிடும் இடம் இது.


மரபின் கூறுகளுடன் எழுதும்போதும் நிகழ் காலத்துடன் உறவு கொண்டவராகவே தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத் தகுந்தது. அவரது கவிதைகளில் இறந்த காலத்தின் பெருமை இல்லை. எதிர்காலம் பற்றிய பகல் கனவும் இல்லை. நிகழ்கால ஸ்திதியைப் பற்றியே அவரது கவிதைகள் பேசுகின்றன. அந்த வகையில் அவர் பாரதியின்  வழிமுறைக்காரர். பாரதியின் அநேகமாக, எல்லாக் கவிதைகளும் நிகழ் காலத்தின் குரலாகவே எழுதப்பட்டவை.

ஆனால் தனி வாழ்வில் அண்ணாச்சி எதிர்கொண்ட நிகழ்காலம் நம்பிக்கை தர லாயக்கில்லாதது. புலம்பவைப்பது. அதுவே அவரது கவிதைகளில் பெரும் பாலானவற்றுக்குக் கழிவிரக்கத் தொனியைக் கொடுத்தது என்று எண்ணுகிறேன். தனது துக்கத்தைப் பொதுவயப்படுத்திப் பேசும் கவிதைகளில் மிகப் பெரும் அனுபவத்தை அவரால்அளிக்க முடிகிறது. விக்ரமாதித்யனின் புகழ் பெற்ற கவிதை வரிகள் அந்த வகையிலானவை.

கரடி சைக்கிள் விடும்போது
நம்மால் வாழ்க்கையை
அர்த்தப்படுத்த முடியாதா'’ என்பதும்
நெஞ்சு படபடக்கிறது
யாராவது
அருவியை நீர் வீழ்ச்சி என்று
சொல்லி விட்டால்..'
என்பதும் எல்லாம் அந்த அனுபவத்தை அளிப்பவை.


சம காலத்தில் எந்த வரிகள் அதிகம் உச்சரிக்கப்படுகின்றனவோ அதை எழுதியவன் கவிஞனாக மதிக்கப்படுவான் என்று பாப்லோ நெரூடா தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். எல்லா இலக்கிய விதிகளும் தமிழில் விலக்காகவதுபோலவே இந்த வரிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இங்கே சினிமா வசனமும் பாடல் வரிகளும் காமெடித் துணுக்குகளும் தான் பொதுப் புத்தியில் மண்டிக் கிடக்கின்றன. எனினும் சிலரது சில வரிகள் வாழ்க்கையின் தருணங்களில் நினைவூட்டப் படுகின்றன. அண்மையில் இணையத்தில் பார்க்கக் கிடைத்த  ஒரு சச்சரவில் இடம் பெற்ற ஒரு வரி அந்தச் சண்டையையே நிறுத்தியது. 'நக்கவும்  துழாவவும் நாக்கை வைத்திருந்தால் போதும்' என்பது அந்த வரி. எழுதியவர் விக்ரமாதித்யன். இந்த இடத்தில் நான் அடிக்கடி நினைத்துக் கொள்ளும் விக்ரமாதித்ய வரியையும் சொல்லி விடுகிறேன்.

' சௌந்தர்யக் கூச்சம்
சாப்பாட்டுக்குத் தரித்திரம்'.

நவீன கவிதையில் அதிகம் நகலெடுக்கப்பட்ட கவிதை வடிவங்களில் விக்ரமாதித்யனுடையவையும் அதிகம் இருக்கும். மிக அண்மையில் வாசித்த ஒரு தொகுதியின் கவிதை இது.

'உன் மனது எத்தனை பெரிய மலர்
உன் மனது எத்தனை பெரிய அகல்
உன் மனது எத்தனை பெரிய கோட்டை
உன் மனது எத்தனை பெரிய வனம்
புதிரெல்லாம் சொல்கிறது
நீயிடும் மாக்கோலம்

இந்தக் கவிதை தனியாகப் பத்திரிகையில் வந்திருந்தால் விக்ரமாதித்யன் கவிதை என்றே நினைத்திருப்பேன். வந்திருப்பது மகுடேசுவரனின் சமீபத்திய தொகுப்பான ‘நிறைசூலியில் இதை ஆரோக்கியமான பாதிப்பாகவே நினைக்கிறேன். விக்ரமாதித்யனின் பாதிப்பை இதற்கு முன்பும் பலரது கவிதைகளில் பார்க்க முடிந்திருக்கிறது. சிலரை அவரே ஊக்குவித்துமிருக்கிறார். அவர்கள் காணாமற் போய் விட்டார்கள். வந்து நின்று கொண்டே இருக்கிறார் விக்ரமாதித்யன்.

இவையெல்லாம் கவிஞராக அவரிடம் நான் காணும் நிலை.

சம காலத்தில் கவிதைஇயல் பற்றி அதிகம் எழுதியவர் விக்ரமாதித்யன் மட்டுமே. அவரது கவிதை ரசனை, கவி மூலம், தற்காலச் சிறந்த கவிதைகள் ஆகிய நூல்கள் அதற்கு உதாரணங்கள். அவரது கவிதையியல் கோட்பாடுகளைச் சார்ந்ததல்ல. ரசனை சார்ந்தது. அனுபவத்தையும் உணர்வையும்  எந்தக் கவிதைகள் வெளிப்படுத்துகின்றனவோ அவற்றையே நல்ல கவிதைகள் என்று ஏற்கும் எளிய வரையறையைக் கொண்டது. அதனால்தான் அவரால் எல்லாக் கவிதைகளையும் சிலாகிக்க முடிகிறது. குறிப்பிடத் தகுந்த ஒரு கவிதை  எழுதிய கவிஞனைக் கூடப் பாராட்டிப் பேச முடிகிறது. கவிதை ரசனை, தற்கால சிறந்த கவிதைகள் இரண்டு நூல்களிலுமாக 54 பேரின் கவிதைகளைப் பற்றி எழுதியிருக் கிறார். இந்தப் பெருந் தன்மை அல்லது பெரும்போக்கு தமிழில் அரிது. இப்படி ஒரு பெருந்தன்மை யான மனம் எனக்கில்லை என்ற ஒப்புதலை விக்ரமாதித்யனுக்குப் பாராட்டாகவே தெரிவிக்கிறேன். இந்தப் பெருந் தன்மையே அவரை நவீனக் கவிதையின் சூழலை நிர்ணயிப்பவராகவும் ஆக்கியிருக்கிறது. முன் தலைமுறை. சமகாலத் தலைமுறை, புதிய தலைமுறை என்று எல்லாரிடமும் அவரால் இலக்கிய உரையாடலில் ஈடுபட முடிகிறது. குறிப்பாக, புதிய இளைஞர்களுடன். திருமேனி, லட்சுமி மணிவண்ணன், சங்கரராம சுப்ரமணியன்,கைலாஷ் சிவன், பாலை நிலைவன் என்று பலரையும் முன்னிலைப்படுத்தியவர் அவர்தான். அந்த வகையில் கவிதையில் புதிய சூழலுக்கான வாய்ப்பை உருவாக்கியவர்.


இங்கே ஒரு குறையையும்  சுட்டிக் காட்ட விரும்புகிறேன். 54  கவிஞர்களை முன்வைத்துப் பேசும் இரு நூல்களிலும் ஒரு பெண் கவிஞர் கூடக் குறிப்பிடப் படவில்லை. அவர் கவிதை வரியையே இங்கே சொல்ல விரும்புகிறேன்.

'பெண்ணாலே வாழ்கிறவன்
பெண்ணுக்கு எப்படி எதிரியாக?'

ண்ணாச்சியாக காட்டிய அன்புக்குக் கொஞ்சமும் குறையாதது அவர் கொடுத்த அவஸ்தைகள். படுத்திய பாடுகள். அதைப் பற்றி ஒருபோதும் பேசக்கூடாது என்பது என் எண்ணமாக இருந்தது.ஆனால் சேகர் சைக்கிள் ஷாப் என்ற தொகுதிக்கு எழுதிய கவிவாக்கில் அவரே ஒப்புதல்செய்திருக் கிறார். எனவே அதைச் சலுகையாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். 


நான் பணியாற்றிக் கொண்டிருந்த பத்திரிகை அலுவலகத்துக்கு தன்னை மறந்த நிலையில் வந்ததையும் நான்  கவனித்துக் கொண்டதையும் விவரிக்கிறார். அதெல்லாம் சரி. என் தரப்பில் நான் பட்ட துயரத்தை என்ன சொல்ல? அவர் வந்து என்னைப் படுத்திக் கொண்டிருந்தபோது வளாகத்தின் தலைவர் வந்து சேர்ந்தார். காரை விட்டு இறங்கும்போதே அண்ணாச்சியின் லீலையைக் கவனித்திருந்தார் என்று பிறகு அறைக்கு அழைத்தபோதுதான் தெரிந்தது. யார் அது? ஏன் இப்படி ஆட்டம் போடுகிறார்? ஏன் அவரை இங்கே அனுமதித்தாய்? என்று கேள்விகளால் துளைத்தார்.அவர் கேட்ட தோரணையில் இன்றோடு என் வேலை காலி என்றே நினைத்தேன் 'அவர் என் நண்பர். என்னைப் பார்க்க வந்திருக்கிறார்? தமிழில் முக்கியமான கவிஞர்' என்று பதில் சொன்னேன். தன்னை விட  முக்கியமான கவிஞரா என்று தலைவர் நிமிர்ந்து பார்த்தார். எங்கே , அவரு எழுதின கவிதை வரியைச் சொல்லு பார்ப்போம். நீ நண்பன் தானே , கவிதை வரியெல்லாம் தெரிஞ்சிருக்குமில்ல?' என்றார். ஒரு நிமிடம் தயங்கினேன். ஞாபகத்திலிருந்து சொன்னேன்.


பிரம்மாண்டமானவன் பிருகதீஸ்வரன்
பிரம்மாண்டமானவள் பெரியநாயகி
வழிமறித்துக் கலவரப்படுத்தும் பெரும் நந்தி
எங்கே போகும் எளிய உயிர்கள்

கேட்டதும் புன்னகைத்தார். 'நம்ம ஆளா?'  என்று கேட்டார். அவர் கேட்டது தஞ்சாவூரைச் சேர்ந்தவரா என்று? கவிஞர்கள் எல்லாம் ஒரே இனம்தானே என்று தப்பாகப் புரிந்து கொண்டு ‘ஆமாம்என்றேன். ‘தஞ்சாவூர்ல எங்கே? என்று அவர் மீண்டும் கேட்டபோதுதான் தவறு புரிந்த்து. இல்லை, திரு நெல்வேலிக்காரர்என்று சொன்னேன். நெல்லைக்காரருக்குத் தஞ்சை புரிஞ்சிருக்குஎன்றார். ‘நல்ல வேளை, கவிதை என் வேலையைக் காப்பாற்றியது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.


சேகர் சைக்கிள் ஷாப் என்ற விக்ரமாதித்யனின் தொகுப்புக்கு நான் முன்னுரை எழுதியிருப்பதை முன்பே சொன்னேன். அதில் அவருக்கு உடன்பாடு இருந்தாலும் சின்ன மனத்தாங்கள் இருந்தது. அதை  வெளிப் படையாகவே சொல்லவும் செய்தார். ‘கவிஞர்களை இன்னும் தாராளமாவே பாராட்டலாம்யா”. இன்று இத்தனைப் பிரபலங்களும் மூத்த கவிஞரும் வாசகர்களும் கூடியிருக்கும் அரங்கில் விக்ரமாதித்யனுக்கு சாரல் விருது வழங்கபட்டிருக்கிறது. அது மிகத் தாராளமான பாராட்டு என்று நினைக்கிறேன். அந்த தாராளப் பாராட்டில் என் பங்கையும் சேர்க்கிறேன். இவ்வளவு தாராளமாகப் பாராட்டும் வாய்ப்பை உருவாக்கிய ராபர்ட் -ஆரோக்கியம் அறக்கட்டளையின் நண்பர் ஜேடிக்கும் ஜெர்ரிக்கும் வாழ்த்துகள். உங்கள் அனைவருக்கும் நன்றி.


(25.01.2013 அன்று சென்னை புக் பாயிண்ட் அரங்கில் ராபர்ட் – ஆரோக்கியம் அறக் கட்டளை யின் சாரல் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்பட்ட விழாவில் ஆற்றிய உரை)






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக