வெறுப்பின் உச்சத்திலிருக்கிறேன்
நான்
வெறுப்பில் தகித்துக் கனன்றிருக்கிறது
இன்றைய நாள்
முன்னே வாராது ஒழியுங்கள்
வெறுப்பேற்றாமல் சும்மா விடுங்கள்
என்னை
யோசிக்கவே வெறுப்பைத் தரும்
ஓர் அபத்தக் கனவால்
கலைந்தே தொடங்கியது
வெறுக்கத்தக்க இந்த நாள்
கால அட்டவணையை முந்திக் கொண்டு விடிந்த
அவசரப் பொழுதும்
விட்டுவிட்டு ஒலித்த
பறவையின் சுருதிபிசகிய அன்றாடக் கூவலும்
குளியலறைக்குள் என்னை வேவுபார்த்து
சூள் கொட்டிய அசட்டுப் பல்லியும்
உணவு மேஜையில் அமரும் முன்பே
ஆறித் தொலைத்த பதார்த்தமும் பானமும்
கடன் நிலுவைக்குத் தாக்கீது செய்த
நச்சரிப்புத் தொலைபேசிக் குரலும்
இடையில் குறுக்கிட்டுக் கிடைத்த
பதிலால்
தொடர்பைத் துண்டித்தவளின் விஷக் கொஞ்சலும்
என்னைப் பிணையாக வைத்து வென்றவனின்
திக் விஜயக் குளம்பொலியும்...
எல்லாமும் எல்லாரும் வெறுப்பாகத்
தென்படும் இந்த வேளைகெட்ட
வேளையில்
அன்பின் உறையிலிருந்து உருவிய வாளுடன்
வெறுப்புக்குரியவர்களாக
எதற்காகக் கண்முன் வந்து நிற்கிறீர்கள்?
என் சிரசைக் கொய்தெடுத்துப் போகவா?
ஆஹா, எத்தனை
பேரதிர்ஷ்டம்.
ஆனால் இதுவல்ல அதற்கான நாள் - இன்று
வெறுப்பின் உச்சத்தில் காய்ந்து சிவந்திருக்கிறேன்
நல்லது,
அந்த வாளை விட்டுப்போங்கள்
வெறுப்பை வெறுத்திருக்கும்
நன்னாளின் சுபவேளையில் அழைத்து
கச்சிதக் குறைவின்றி
வெட்டிச்சமர்ப்பிக்கிறேன்
கடலுறங்கும் என் தலையை.
ஏப்ரல் 2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக