மலையாளத்தில்
ஒளிபரப்பாகும் இரண்டாவது தனியார்
தொலைக்காட்சியில் தலைமைச் செய்தி ஆசிரியராகச் சுமார் பத்தாண்டுகள் பணியாற்றினேன்.
தினம் இரண்டு நாளிதழ்களையாவது அக்குளில் இடுக்கிக் கொண்டு நடமாடும் மலையாளிகளின்
கவனத்தைத் தொலைக்காட்சிச் செய்திகள் பக்கம் திருப்பத் தலை கீழாக நின்று தண்ணீர்
குடிக்க வேண்டியிருந்தது. அன்றாடச் செய்திகளை ஒளிபரப்புவதால் மட்டும் அவர்களை
ஈர்க்க முடியாது என்று சீக்கிரமே புரிந்தது. எங்கள் தொலைக்காட்சி
வருவதற்கு முன்னால் , 1998 ஆம் ஆண்டுக்கு முன்னால்,கேரளத்தில் நடந்த சம்பவங்களின்
ஃபாலோ - அப் செய்திகளில் அக்கறை காட்டினால் பார்வையாளர்களைத் திருப்ப முடியும்
என்ற உத்தி தோன்றியது. பழைய செய்திகளைப் புதியகாட்சிகளுடன் ஒளிபரப்ப முடிவு
செய்தேன்.
காவல்துறையினரால் என்கௌண்டரில் கொல்லப்பட்ட வர்கீஸ் என்ற நக்சலைட் போராளி
தொடர்பான வழக்கு மீண்டும் வெளிச்சத்துக்கு வந்திருந்தது. அவர் மோதலில்
கொல்லப்படவில்லை கட்டிவைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற யூகத்தை எழுப்பினோம்.
பத்திரிகைகளும் அதே அலைவரிசையில் மறு விசாரணையைத் தொடங்கின. என்கௌண்டர் குழுவில்
இருந்த கான்ஸ்டபிள் ராமசந்திரன் நாயர் 'அது மோதல் மரணமல்ல; திட்டமிட்டு நடத்திய படுகொலை'
என்று வாக்குமூலம்
கொடுத்தார். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மனதைக் கிழித்துக் கொண்டிருந்த உண்மையை
பகிரங்கப் படுத்தினார். வர்கீஸ் வதம் மீண்டும் செய்தியானது. மீண்டும் விசாரணை
நடத்தப்பட்டது. ராமச்சந்திரன் நாயர் கைது செய்யப்பட்டு
விசாரணைக்குள்ளானார்.அதற்கிடையில் ராமச்சந்திரன் நாயர் காலமானார். அவரது உண்மை
வெளிப் படுத்தல் புத்தகமாகவும் வெளிவந்தது. ( அதன் தமிழாக்கம் 'நான் வாழ்ந்தேன்
என்பதற்கான சாட்சி' என்ற பெயரில்
மக்கள் கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தமிழாக்கம்; குளச்சல் மு யூசுப்).
புத்தகத்தை அடிப்படையாக வைத்து மலையாளத்தில் 'தலப்பாவு' என்ற திரைப்படமும் வெளிவந்தது.
வர்கீஸ் வழக்கு செய்தியாக ஒளிபரப்பானதில் கிடைத்த வரவேற்பால், மறதியில் புதைந்திருந்த
வேறு வழக்குகளையும் தோண்ட ஆரம்பித்தோம். எங்கள் தொலைக்காட்சி தொடங்குவதற்கு
ஓரிரு ஆண்டுகள் முன்பு பரபரப்பாகப் பேசப்பட்ட வழக்கு சூரிய நெல்லிப் பெண்ணை
மையமாகக் கொண்டது. இடுக்கி மாவட்டம் சூரியநெல்லியைச் சேர்ந்த
பள்ளி மாணவி
கடத்தப்பட்டாள். ஒரு மாத காலத்துக்கும் மேலாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும்
இழுத்துச்செல்லப்பட்ட அந்தச் சிறுமியை நாற்பத்திரண்டு பேர் கூட்டாக வன்புணர்ச்சி
செய்து சிதைத்தார்கள். காரியம் முடிந்ததும் பெண்ணை அவளுடைய தகப்பனார்
பணியாற்றிக் கொண்டிருந்த தபால் அலுவலகத்தின் வாசலில் அநாதையாக விட்டுப் போனார்கள்.
உடலும் மனமும் கிழிபட்ட நிலையில் அந்தச் சிறுமி வீட்டுக்குள் ஒடுங்கினாள். பின்னர்
உண்மை வெளிவர ஆரம்பித்தது. வழக்குத் தொடரப் பட்டது. கேரளத்தின் நீதித் துறை
வரலாற்றில் பாலியல் குற்றங்களை விசாரணை செய்வதற்கான முதல்
சிறப்பு நீதி மன்றம் அமைக்கப்பட்டது. அதன் விசாரணை உச்ச கட்டத்திலிருந்த 1999 ஆம் ஆண்டுதான் எங்கள்
தொலைக் காட்சி தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான முனைப்பில் இருந்தது. சூரியநெல்லி
வழக்கை ஃபாலோ செய்ய முடிவெடுத்தேன். அதற்கான தகவல்களையும் வழக்கு
விவரங்களை யும்
சேகரிக்கச் செய்தேன்.
அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளராக இருந்த மூத்த பத்திரிகையாளர் லீலா
மேனன் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து உண்மைகளை அறிந்து எழுதினார். அதைப்
பின் தொடர்ந்து அந்தப் பெண்ணைச் சந்தித்துப் பேச எங்கள் செய்தியாளரையும்
அனுப்பினேன். அவர் சேகரித்து வந்த தகவல்கள் நிலைகுலையச் செய்தன. அந்தச் செய்தியை
எப்படிக் கொடுப்பது என்ற தடுமாற்றம் வந்தது. செய்தியாளனுக்குக் கொண்டாட்டம்
தரக் கூடியது அந்த 'ஸ்டோரி'. பரபரப்பும் செக்ஸும் வன்முறையும் கலந்த அந்தச் செய்தி ஒளிபரப்பப்பட்டால்
தொலைக் காட்சியின்
'ரேட்டிங் பிச்சுக்கும்'என்று தெரிந்தது. ஆனால்
அதைச் செய்ய எனக்குள்ளிருந்த மனித உணர்வு அனுமதிக்கவில்லை. அந்த உணர்வைத்
தூண்டியதும் சூரிய நெல்லிப் பெண்தான்.
'சார், உங்கள்
செய்தியாளரிடம் எனக்கு என்ன நடந்தது என்பதைச் சொல்லி இருக்கிறேன். உண்மையைச்
சொல்லியிருக்கிறேன். எனக்கு நடந்தது இன்னொரு பெண்ணுக்கு நடந்து விடக் கூடாது
என்பதனால்தான் பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறேன். உங்களுக்குப் பெண்ணோ தங்கையோ
இருந்தால் எப்படி கையாளூவீர்களோ அப்படிச் செய்யுங்கள். வழக்கு நடந்து
கொண்டிருக்கிறது. நிஜமான குற்றவாளிகள் உலகத்துக்குத் தெரியவேண்டும். அதற்காகத்தான்
இந்த வழக்கில் பிடிவாதமாக இருக்கிறேன்' என்ற அவளுடைய தொலைபேசி உரையாடல்தான் தடுமாற்றத்தை
விட்டு முடிவெடுக்கத் தூண்டியது. செய்தியை அந்தப் பெண்ணுக்கு ஆதரவான
நிலையிலிருந்து மட்டுமே கொடுப்பது;
நடுநிலைமை,
ஊடக தர்மம் எதையும்
பார்க்காமல் அவளுடைய கோணத்தை மட்டுமே
முன்வைப்பது என்ற முடிவுக்கு வந்தேன். அதையே செயல்படுத்தினேன். அதற்காக வழக்கில் குற்றம்
சாட்டப்பட்டிருந்தவர்களில் ஒருவரான மிக முக்கிய அரசியல் பிரமுகரால் அச்சுறுத்தலும்
விடப்பட்டது. முதலில் தொடை நடுங்கியது வாஸ்தவம். யோசித்தபோது அந்த அச்சுறுத்தல்
குற்றமுள்ள நெஞ்சின் குறுகுறுப்பு என்று விளங்கியது. தொடை நடுக்கம் நின்று தோளை
உயர்த்திக் கொண்டேன் அந்த நொடியில்.
1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்.
இடுக்கி மாவட்டம் சூரிய நெல்லியைச் சேர்ந்த பதினாறு வயதுப் பள்ளிச் சிறுமி கடத்தப்
பட்டாள். கடத்தியது அவள் தினமும் பள்ளிக்கு சென்று வரும் பேருந்தில் நடத்துநராக
இருந்த இளைஞன்.
அவன் மீது அவளுக்குக் காதலும் நம்பிக்கையும் இருந்தது. அந்த நெருக்கத்தில்
அவனுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்திருந்தாள். அந்தப் படத்தை
வைத்து மிரட்டித்தான் அவளைக்
கடத்தியிருந்தான். பாதி வழியில் அவன் தலைமறைவானான். காப்பாற்றுவதாகச் சொன்ன ஒரு பெண் தர்மராஜன்
என்பனுக்கு அவளைக் கைமாறினாள். தர்ம ராஜனின் கையில் சந்தப்
பண்டமானாள். கேரளம் முழுவதும் கொண்டு செல்லப் பட்டு விலை பேசி உடல் விற்பனை
செய்யப்பட்டாள். பதினாறு வயதுப் பெண்ணை நாற்பத்திரண்டு ஆண்கள் ஒரு மாதத்துக்கும்
மேலாகக் குதறினார்கள். சக்கையாக்கப்பட்டு திரும்பக் கொண்டு வந்து வீசப்பட்ட
பெண்ணால் நடக்க முடியவில்லை. அவளுடைய உடலிலும் பிறப்புறுப்பிலும் காய்ங்கள்
இருந்தன. சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர் நாளிதழில் வெளிவந்த ஒரு
படத்தைப் பார்த்தாள். மத்திய அமைச்சர் பி.ஜே குரியனின் படம் அது. தன்னை
வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியவர்களில்
அவரும்ஒருவர் என்று வெளிப்படுத்தினாள். இடுக்கியிலுள்ள அரசு விருந்தினர்
மாளிகையில் தன்னை வல்லுறவுக்குட் படுத்தினார் என்று குறிப்பிட்டாள், காவல் நிலையத்தில் புகார்
கொடுக்கப்பட்டது. அந்த நிமிடம் முதல் அந்தக் குடும்பத்தின் கஷ்ட காலம் தொடங்கியது.
அவர்கள் அனுபவித்த அவமானமும் துயரமும் சொல்லில் அடங்காதவையாக இருந்தன.
அந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் இடது சாரிக் கூட்டணி சூரிய நெல்லிப்
பிரச்சனையை முன்வைத்துப் பிரச்சாரம் நடத்தியது. அதுவரை சூரிய நெல்லிப் பெண்ணுக்கு
ஆதரவாக இருந்த நாளிதழ்களில் சில - குறிப்பாக மலையாள மனோரமா - குரியனுக்கு ஆதரவாக
மாறின. சூரிய நெல்லிப் பெண்ணை 'ஒழுக்கங்கெட்ட பெண்' என்று சித்தரிக்கத் தொடங்கின.
தன்னுடைய காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப் போய் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கதைகளை
நெய்தன. காவல்துறையும் அவர்களது முறையீட்டுக் குக் காது கொடுப்பதற்குப் பதில்
அறிவுரை சொல்ல ஆரம்பித்தது. குடும்ப கௌரமும் பெண்ணின் எதிர் காலமும் காப்பாற்றப்பட
வேண்டுமென்றால் வழக்கை விட்டு விடச் சொன்னது. அவர்கள் அதை மறுத்தார்கள். எல்லாம்
இழந்த பிறகு போராட்ட உணர்வு மட்டுமே அவர்களிடம் மிஞ்சியிருந்தது. அதைக் கைவிட
அவர்கள் தயாராக இல்லை. விளைவு அவர்கள் ஒதுக்கப்பட்டார்கள். சொந்தக்காரர்கள்
விலகினார்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் முகம் திருப்பிக் கொண்டார்கள்.
சமூகத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டார்கள். இருந்தும் அவர்கள் வழக்கிலிருந்து பின்
வாங்கவில்லை.
1999 இல் விசாரணை நடந்தது. சதியாலோசனை, கடத்தல், கூட்டு வன்கலவி ஆகிய குற்றங்களின் பேரில் 41 பேர் குற்றப்
பத்திரிகையில் சேர்க்கப் பட்டார்கள். பி.ஜே. குரியன் மட்டும் சேர்க்கப்படவில்லை.
சம்பவம் நடந்த இடத்தில் அவர் இல்லை என்ற அலிபி மூலம் அவர் விடுவிக்கப்பட்டார்.
அடுத்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களில் 35 பேருக்கு நான்காண்டு முதல் ஆயுள்
காலம் முழுவதும் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. முக்கியக் குற்றவாளியான
தர்மராஜன் தலைமறைவானான். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கை மறு விசாரணை செய்த
கேரள உயர் நீதி மன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்தது. அதற்கிடையில்
கைது செய்யப்பட்ட தர்மராஜனுக்கு மட்டும் ஐந்தாண்டு சிறைத்தண்டனை
விதித்தது. அதுவும் வன்புணர்ச்சிக்காக அல்ல. சூரிய நெல்லிப் பெண்ணை 'பெண் வியாபாரத்தில்'
ஈடுபடுத்தியதற்காக.
விசித்திரமாக இருந்தது நீதிபதிகள் ஆர். பசந்தும் கபூரும் வழங்கிய தீர்ப்பு.
சம்பவத்தில் பெண் 'கற்பழிக்கப் பட்டாள்' என்பது சரியல்ல. ஏனெனில் அவளுக்குப் பதினாறு வயது
நிரம்பியிருந்தது. செக்ஸ் பற்றித் தெரிந்திருக்கும் பருவம் அது. எனவே அவள் 'கற்பழிக்கப்படவில்லை'
என்பது தீர்ப்பின்
சாராம்சம்.
தன்னைச் சின்னா பின்னப்படுத்தியவர்களில் தற்போதைய மாநிலங்கள் அவைத் துணைத்
தலைவர் பி.ஜே.குரியனும் இருந்தார் என்பதை ஆதாரத்துடன்
நிறுவி சூரிய நெல்லிப் பெண் பீருமேடு நடுவர் மன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடுத்தாள். இடுக்கி அரசு
விருந்தினர் மாளிகையில் குரியன் தன்னைச் சிதைத்தார் என்று தெர்வித்திருந்தாள்.
நடுவர்
மன்றம் குரியனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அவர் உயர் நீதி மன்றத்தில் மனுச்
செய்தார். முப்பத்தைந்து பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாத
காரணத்தால் விடுவிக்கப்பட்ட வழக்கில் குரியனை விசாரிக்கவோ தண்டிக்கவோ முடியாது
என்று உயர்நீதி மன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது. காங்கிரஸ்காரக் குரியனுக்காக வாதாடியவர் பி.ஜே.பி. காரரான
அருண் ஜேட்லி என்பதில் ஏதாவது மர்மம் உண்டா? அரசியலில் அதுவெல்லாம் சகஜம்தானா?
வன்
புணர்ச்சிக்கும் நீதிமன்றத் தீர்ப்புக்கும் இடையிலான காலங்களில் சூரிய நெல்லிப்
பெண்ணின் வாழ்க்கை கொடூரமானதாகவே இருந்திருக்கிறது. அந்தக் கொடூரத்தை அவளும்
அந்தக் குடும்பமும் இரண்டு வழிகளில் வென்றிருக்கிறார்கள். தீவிர விசுவாசிகளான
அவர்கள் கர்த்தரிடம் ஓயாமல் பிரார்த்தனைச் செய்திருக்கிறார்கள். தொடர்ந்து
நீதிக்காகப் போராடியிருக் கிறார்கள். முதலில் சூரிய நெல்லியிலேயே குடியிருந்தார்கள்.
அந்தப் பெண்ணின் தாய் அங்குள்ள எஸ்டேட் மருத்துவமனையில் நர்சாக
இருந்தார். அதனால் எஸ்டேட் குவார்ட்டர்சில் பாதுகாப்பாகக் குடியிருக்க முடிந்தது.
அவருடைய பணி ஓய்வுக்குப் பிறகு குடியிருந்த இடங்களில் அந்தப் பெண் விநோதப்
பொருளாகப் பார்க்கப் பட்டாள். 'இதுதான் சூரிய நெல்லி கேசில் மாட்டிய பெண்' என்று சுற்றுலாப் பயணிகள்
வந்து பார்த்துப் போகிற அவமானத்தைச் சகிக்க முடியாமல் ஜனநடமாட்டம் கு¨றைந்த இடங்களில்
வசித்தார்கள். ஆனால் அது எதுவும் சமாதானமான வாழ்க்கைக்கு அவர்களைக் கொண்டு
செல்லவில்லை.
சூரிய நெல்லிப் பிரச்சனையை அரசியலாக மாற்றித் தேர்தலில் வெற்றி பெற்ற இடது
முன்னணி பெண்ணுக்கு அரசுவேலை கொடுத்தது. அதுவும் அவர்கள் வாழ்க்கைக்கு உதவவில்லை. சென்ற
ஆண்டு அவள் மீது பொய்யான குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டுச் சிறை தண்டனை விதிக்கப்
பட்டது. திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட அந்த வழக்குக்குப் பின்னணிக் காரணம் வேறு. அந்த வேளையில்தான் அவள் தன்னுடைய
வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தில்
சமர்ப்பித் திருந்த மனு பட்டியலிடப்பட்டிருந்தது.அந்தச் சந்தர்ப்பத்தில் அவளை
மோசடிப் பேர்வழி என்று நிரூபிப்பது யாருக்கோ தேவையாக இருந்திருக்கிறது.
உயர்நீதி மன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து எட்டு ஆண்டுகளுக்குப்
பிறகு கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதி மன்றம்
சூரிய நெல்லி வழக்கை ஆராய்ந்து மீண்டும் விசாரணை நடத்த ஆணை பிறப்பித்திருக்கிறது.
உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்ப்பின் மேல் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறது.
முன்னாள் மத்திய அமைச்சரும் இந்நாள் மாநிலங்கள் அவைத் துணைத் தலைவருமான
பி.ஜே.குரியனை விசாரிக்கவும் உத்தரவிட்டிருக்கிறது. '' இந்த முறையாவது என் மகளுக்கு நீதி
கிடைக்கும் என்று நம்புகிறோம்'' என்று தன்னுடைய எழுபத்தைந்தாவது வயதில் காத்திருக்கிறார்
சூரியநெல்லிப் பென்ணின் தந்தை. பெண்ணுரிமை அமைப்புகள் குரியன் பதவி விலக வேண்டும்
என்று போராடிக் கொண்டிருக் கின்றன.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு முக்கியத்துவம் பெறக் காரணமும்
குரியனைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் மத்திய அரசுதான். தில்லி மருத்துவ
மாணவியின் கொடூரக் கொலைக்குப் பிறகு அமைக்கப்பட்ட
வர்மா கமிஷனின் பரிந்துரைகள்தாம் வழக்கை மறு விசாரணைக்குக் கொண்டு
வந்திருக்கிறது. காவல்துறையால் கண்டுபிடிக்கப்படாமலிருந்த அல்லது கண்டுகொள்ளப்படாமலிருந்த
தர்மராஜனை ஒரு தனியார் தொலைக்காட்சி தேடிப் பிடித்துப் பேட்டி கண்டது.''குரியனுக்கு சம்பவத்தில்
பங்கில்லை என்று யார் சொன்னது? நான் தானே அவரை இடுக்கி விருந்தினர் மாளிகைக்கு அழைத்துப் போனேன்'' என்று அவன் சொன்ன நிஜம்
நீதியமைப்பையே இப்போது குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்கிறது.
சூரிய நெல்லி வழக்கின் முன் பின்னான கதை இது. என்னை வியப்பும் வருத்தமும்
கொள்ளச் செய்தவை அதன் பின்னணியில் இருக்கும் சுரணையின்மைதான். வழக்கில்
சம்பந்தப்பட்டவர்களை நிரபராதிகள் என்று விடுதலை செய்த நீதிபதி பசந்தை தனியார்
தொலைக்காட்சி ஒன்று பேட்டி கண்டது. பேட்டியல்ல. காமிராவை ஒளித்து வைத்துச் செய்த 'கொடுக்கு நடவடிக்கை'.
'அந்தப் பெண்
ஒழுக்கங் கெட்டவள். குழந்தை விபச்சாரி' என்று நீதிபதி சொன்ன வார்த்தைகள்தாம் உறுத்துகின்றன.வியப்பளிக்கின்றன.
ஒரு நீதிபதிக்குப் பெண்களைப் பற்றிப் பாமரத்தனமான கருத்துத்தான் இருக்கிறது. உண்மையை
அல்ல; ஒழுக்கத்தைத்தான் சரியானது என்று நினைக்கிறார் என்பதன்
வெளிப்பாடு அவருடைய அபிப்பிராயம். இந்தக் கருத்தை வைத்துக் கொண்டிருக்கும்
நீதிபதியின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதையே சூரிய நெல்லி வழக்கில் உயர் நீதி
மன்றத் தீர்ப்பு காட்டுகிறது.
இரண்டாவது வருத்தம், எந்தத் தொலைக் காட்சி மூலம் அந்தப் பெண்ணுக்கு அனுதாபமான
நிலைப்பாட்டை முன்வைத்திருந்தேனோ அதே தொலைக் காட்சி பி.ஜே.குரியனை மகாத்மா
குரியனாக ஒப்பனை செய்து செய்தியை ஒளிபரப்புகிறது. அதைப் பார்க்கும்போதெல்லாம்
குற்ற உணர்வு தோன்றுகிறது. முதன் முதலாக இதே தொலைக் காட்சி சார்பாக சூரிய நெல்லிப்
பெண்ணிடம் நேர்காணல் நடத்திய செய்தியாளரிடம் - இன்று அவரும் இந்தத்
தொலைக்காட்சியில் இல்லை - இதைப் பகிர்ந்து கொண்டபோது ''சார், என்ன செய்யமுடியும்? இதெல்லாம் இப்படித்தான்''
என்றார்.
இப்படித்தானா?
@
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக