இந்த
ஆண்டுக்கான சாகித்திய அக்காதெமி விருதுகள் அறிவிக்கப்பட்டதும் மலையாள
ஊடகங்களிலிருந்து சில நண்பர்கள் தொலைபேசி
வாயிலாக அழைத்தார்கள். தமிழில் விருது பெற்றிருப்பவரான ஆ. மாதவனின் தொடர்பு எண்,
முகவரி, சில பின்னணித் தகவல்கள் ஆகியவற்றைத் தெரிந்து
கொள்ளவே அந்த அழைப்புகள். அவர்கள்
கேட்ட தகவல்களை அளித்தேன். எல்லாரிடமிருந்தும் வேறுபாடில்லாமல் ஒரே கேள்வி
எழுந்தது. '' இந்த எழுத்தாளருக்கு எண்பத்திரண்டு
வயது என்கிறீர்கள். நீண்ட காலமாக எழுதிக் கொண்டிருப்பவர் என்கிறீர்கள்.
இதுவரை அவருக்கு ஏன் சாகித்திய அக்காதெமி விருது அளிக்கப்படவில்லை?''. பதிலாக '' அதுதான் இப்போது கொடுத்து
விட்டார்களே?'' என்று மழுப்பத்தான் முடிந்தது. அது சமாளிப்பல்ல; ஒரு சீரிய இலக்கிய வாசகன் தனக்குத்தானே சொல்லிக் கொண்ட
ஆறுதல்.
ஆ. மாதவன் 1950 களிலிருந்து எழுதி வருபவர். தொண்ணூறுகளின் நடுப்படுதிவரை அவருடைய படைப்புகள்
வெளிவந்திருக்கின்றன. அரை நூற்றாண்டுக் காலமாக இலக்கிய உலகில் செயல்பட்டு
வந்தாலும் அவர் பரவலாக அறியப்பட்டவரல்லர். பெரும் அங்கீகாரங்கள் எதுவும் அவருக்கு
அளிக்கப்பட்டதில்லை.மூத்த எழுத்தாளர் என்ற முறையில் விஷ்ணுபுரம்
வாசகர் வட்டம் 2010 ஆம் ஆண்டு அளித்த விருதுதான் அவருக்கு வழங்கப் பட்ட குறிப்பிடும்படியான
அங்கீகாரம்.
ஐம்பதாண்டுக் காலப் படைப்புச் செயலின் விளைச்சலாக மூன்று நாவல்கள், ஆறு சிறுகதைத்
தொகுப்புகள் அவரிடமிருந்து நவீன இலக்கியத்துக்குக் கிடைத்திருக்கின்றன.
பள்ளிப்பருவம் முதலே எழுத்தில் ஈடுபாடு
கொண்டு எழுத்தாளர் ஆக விரும்பிய ஆ. மாதவனுக்கு வாழ்க்கை அதற்கான வாய்ப்புகளைக்
கஞ்சத்தனமாகவே அனுமதித்திருக்கிறது. ஒருவேளை அவர் முழு நேரமும் இலக்கியப் படைப்பாளியாக
இருந்திருந்தால் அவரது படைப்புகளின் எண்ணிக்கை இன்னும் அதிக மாக இருந்திருக்கலாம்.
இன்னும் அதிகமாக அறியப்பட்டிருக்கலாம். இன்னும் அதிகமான் விருதுகளும்
அங்கீகாரங்களும் பெற்றிருக்கலாம். ஆனால் மாதவனின் நிறைமனம் அவற்றைப் பொருட்டாக
நினைக்கவில்லை. தமிழ் இலக்கியத்தில் தனக்கென்று ஓர் இடம் இருக்கிறது என்ற வரலாற்று
உண்மையையே அவர் பெரிதாக எண்ணினார். அது முற்றிலும் உண்மை. தாமதமாகவேனும் ஒரு தேசிய
அங்கீகாரம் அவரைத் தேடி வந்திருப்பது அதை உறுதிப்படுத்துகிறது.
திருவனந்தபுரத்தில் குடியேறிய நெல்லைத் தமிழ்க் குடும்பத்தின் சந்ததி
ஆ.மாதவன். பள்ளிக் கல்வியில் அவருக்குப் பயிற்று மொழியாக அமைந்தது மலையாளம். தனது
ஆர்வத்தின் வாயிலாகவே தமிழைக் கற்றுக் கொண்டவர். பத்திரிகைகள், நாளிதழ்கள் மூலமாகவே தனது
தமிழறிவை வளர்த்துக் கொண்டார். அன்றைய கால
அளவில் மிகப் பரவலாகப் புழங்கிய திராவிட இயக்க இதழ்களே தன்னை வாசிக்கவும் எழுதவும்
தூண்டின என்று அவரே குறிப்பிட்டிருக்கிறார். சிறுகதை எழுத்தாளராக அறிமுகமானவர். ஆரம்ப காலக் கதைகள் பலவும் திராவிட இயக்க
இதழ்களிலேயே வெளிவந்திருக்கின்றன. அந்தக் கதைகள் அவருக்கு அந்த வட்டத்தில் நட்சத்திர மதிப்பையும்
அளித்திருக்கின்றன. அண்ணா, கலைஞர் ஆகியவர்களின் வரிசையில் அவரையும் முக்கியமான
எழுத்தாளராக ஆக்கின.
ஆரம்ப காலக் கதைகளில் திராவிட இயக்க எழுத்துகளின் சாயல் தென்பட்டாலும்
மாதவனின் கதைகள் மாறுபட்டவையாகவே இருந்தன. அறுபதுகளில் இடதுசாரி இயக்க இதழ்களில் அவருடைய படைப்புகள் இடம்
பெற்றன. அங்கும் அவரது கதைகள் இடதுசாரி எதார்த்தவாதக் கதைகளிலிருந்து
விலகியவையாகவே இருந்தன. திராவிட இயக்கச் சார்பு அவருடைய மொழியையும் இடதுசாரி
அரவணைப்பு அவருடைய சமூகப் பார்வைக்கும் அடிப்படையாக அமைந்தன என்று சொல்லலாம். அதன் மீதே அவருடைய படைப்புலகம் உருவானது.
தமிழும் மலையாளமும் புழங்கும் திருவனந்தபுர வாழ்க்கை அவரது படைப்புலகுக்குப் பண்ப ¡ட்டுச் செறிவைக்
கூட்டியது. இரு மொழிகளின், இரு மரபுகளின் கலப்பில் உருவான வாழ்க்கையையே தனது படைப்பின்
மையமும் பொருளுமாக ஏற்றுக் கெ ¡ண்டார். வட்டார வழக்கை ஒரு இலக்கிய உத்தியாக அல்லாமல் தான்
வாழும் வாழ்க்கைச் சூழல் மீதான நம்பிக்கையாகவே மேற்கொண்டார். அவரது மூன்று
நாவல்களில் எந்த நாவலும் , அவர் எழுதிய எழுபதுக்கும் அதிகமான சிறுகதைகளில் எதுவும்
அவரது வாழ்க்கைச் சூழலைத் தாண்டி எழுதப்பட்டதல்ல. ஆ.மாதவனின் படைப்புகளில்
குறிப்பிடத் தகுந்த அம்சம் இது. குறிப்பிட்ட வட்டார வாழ்க்கையை முன்வைக்கும்
படைப்புகள் அதைக் கடந்து உலகளாவிய மனித வாழ்க்கையின் கதையாக மாறும்
விந்தை அவரது எழுத்துகளில் உயிர்ப்புடன் செயல்படுகிறது. இதுவே ஒரு படைப்புக்
கலைஞராக அவர் மதிக்கப்படுவதற்கான ஆதாரம்.
ஆ. மாதவன் நாவலாசிரியராகவும் சிறுகதையாளராகவும் இயங்கியவர் . எனினும் அவரை
முதன்மையாகச் சிறுகதையாளர் என்றே
குறிப்பிட வேண்டும். அவரது சிறுகதைகள் எதார்த்தவாதப் பிரிவைச் சார்ந்தவை. அன்றாட
வாழ்வில் நமது பார்வைக்குத் தட்டுப்படும் மனிதர்களும் நிகழ்ச்சிகளுமே அவரது
புனைவுலகிலும் இடம் பெறுகின்றன. அவை
நமக்குச் சாதாரண மனித நடவடிக்கைகளாக மட்டுமே பார்வையில் பட்டுக் கலைந்து போகின்றன.
நமது பார்வைக்கு அகப்படாத அந்த உலகின் இயக்கத்தை மையமாகக் கொண்டது மாதவனின்
கலைப்பார்வை. அந்த செயல்களில் காணப்படும் நன்மையும் தீமையும் அந்த மனிதர்களின்
இயல்பு என்று எந்த மிகையும் சார்பும் இல்லாமல் சித்தரிக்கப்படுகின்றன. குற்றமும்
காமமும் பழி வாங்கலும் இயல்பான மனித குணங்களாகவே முன்வைக்கப் படுகின்றன. அவை பற்றி
நாம் கொண்டிருக்கும் கருத்துகளை அவர்கள் மீது சுமத்திப் பார்க்க அனுமதிக்காத
வகையிலேயே அந்தச் சித்தரிப்புகள் அமைகின்றன.
'தூக்கம் வரவில்லை' என்ற கதையை உதாரணமாகச் சொல்லலாம்.
மாடசாமியின் அம்மாவுக்கு எண்பதுக்கும் மேல் வயது. சாலைக் கடைத் தெருவில் சிறு
வியாபாரம் செய்கிற அவனுக்கு தினமும் அவளுக்குப் பொதி சோறு வாங்கிக் கொடுக்க
வேண்டிய கட்டாயம். வறுமை பிடுங்கித் தின்கிறபோது அதுவே பெரும் தொல்லையாக மாறுகிறது.
தொல்லை பொறுக்க முடியாத ஒரு கட்டத்தில் சோற்றில் மூட்டைப் பூச்சி மருந்தைப்
பிசைந்து கொடுத்து விடுகிறான். அதை அவன் கொடூரச் செயலாக எண்ணுவதில்லை. அத்தனை
காலமும் கிழவியின் தேவையைப் பூர்த்தி செய்தவன். இனி முடியாது என்ற நிலையில் அவன்
மனம் செய்கிற 'நற்செயல்' அந்தக் கொலை. இக்கட்டில் சிக்கிக் கொண்ட இரண்டு ஜீவன்களுக்கு விடுதலை
கொடுக்கும் இயல்பான செய்கை. தனது செயல் குற்றம் என்று மாடசாமி வருந்துகிறானா
இல்லையா என்று தெரிந்து கொள்ள வாசகனால் முடிவதில்லை. அது குற்றம் என்றால் அதுவும்
மனித இயல்பு என்ற பாங்கில்தான் கதை முடிகிறது. அது வாசகனை மனிதன் நன்மை தீமை
இரண்டால் மட்டுமே தீர்மானிக்கப்படுபவன் அல்ல என்ற பேருண்மைக்கு அழைத்துச்
செல்கிறது. அவனை கதையிலிருந்து விலக்கி யோசிக்க நிர்ப்பந்திக்கிறது. இந்த நுட்பமே
ஆ.மாதவனின் கலையைத் தவிர்க்கக் கூடாத ஒன்றாக மாற்றுகிறது.
வணிகக் களத்தின் நிகழ்வுகள்தாம் மாதவனின் புனைவுலகுக்கு மூலமாக இருப்பவை. அந்தக்
களவே அவரது தனி வாழ்க்கையையும் அடையாளப் படுத்துகிறது. திருவனந்தபுரம் நகரத்தின்
மிகப் பெரும் சந்தையான சாலைக் கம்போளத்தில் கடை வைத்து வணிகத்தில்
ஈடுபட்டிருந்தவர் . அந்த வணிக உலகில் கண்டவையும் கேட்டவையும் அவருக்குள்ளிருந்த
எழுத்தாளனுக்கு இயல்பாகக் கிடைத்த மூலப் பொருட்கள். சாலைப் பின்னணியில் அவர்
உருவாக்கிய கதைகளே அவரை தேர்ந்த சிறுகதையாளராக நிலைநிறுத்தியவை. அவரது தனித்துவத்தைக் கவனப் படுத்தியது 1974 இல் வெளிவந்த 'கடைத்தெரு கதைகள்'.
அதற்கு முன்பே அவரது
குறிப்பிடத் தகுந்த சிறுகதைகள் இரு தொகுப்புகளாக வெளியாகி இருந்தபோதும் கடைத் தெரு
கதைகளின் வெளியீட்டுக்குப் பின்னர்தான் அவர் சீரிய வாசிப்புக்கு இலக்கானார்.
புனலும் மணலும், கிருஷ்ணப் பருந்து, தூவானம் ஆகியவை ஆ.மாதவன் எழுதிய
நாவல்கள். சிறுகதைகளுடன் ஒப்பிடும்போது அவரது நாவல்கள் சற்று சோபை குறைந்தவைதாம். ஆனால் அவை எடுத்துக்
கொண்ட மையப் பொருள் காரணமாக நவீன இலக்கியத்தில் தவிர்க்கவியலாத இடத்தைப்
பெற்றிருப்பவை. குறிப்பாக முதல் இரண்டு நாவல்கள். புனலும் மணலும் நாவல்
திருவனந்தபுரம் நகரத்துக்குள் ஓடும் கரமனையாற்றின் கரையில் வாழும் மனிதர்களை ப்
பற்றியது. உருவ அழகில்லாத பங்கியின் மேல் அவளுடைய அம்மாவின் துணைவரான அங்குசாமி
மூப்பன் காட்டும் உதாசீனமும் வன்மமும் அவை ஏற்படுத்தும் சிக்கலுமே நாவலின் மையம்.
அதனூடே இயற்கையை மனிதன் தனது பேராசைக்கு இரையாக்கிக் கொள்ளும் மூர்க்கத்தன்மை
பற்றிய துணைப் பிரதியும் இயங்குகிறது. மணல் கொள்ளை, அதன் விளைவுகள் பற்றி நாவல் போகிற
போக்கில் பேசுகிறது. சூழலியல் பாதுகாப்பு வலுவான பிரச்சனையாகப் பேசப்படும் இன்றைய
காலகட்டத்தில் நாவல் பேச்சு மிக முக்கியத்துவம் பெறுகிறது. சூழலியல் என்ற
வார்த்தையே அறிமுகமாகியிராத ஒரு காலத்தில் ஒரு எழுத்தாளன் இன்றைய சமகாலப்
பிரச்சனையை முன்னரே நாவலில் கையாண்டிருப்பது வியப்பளிக்கிறது. ஆண் பெண் உறவின்
தீராச் சிக்கலையும் விளங்காப் புதிரையும் காமத்தின் பின்புலத்தில் விவாதிக்கும்
நாவல் 'கிருஷ்ணப் பருந்து'. வடிவ ஒழுங்கும் நுண்மையான சித்தரிப்பும் கொண்டது. தமிழின்
சிறந்த நாவல்களில் ஒன்றாக அதைத் தயக்கமின்றிக் குறிப்பிடலாம். இந்த இரண்டு
நாவல்களில் கைவந்த கலைப் பெறுமதி' தூவானம்' நாவலில் இல்லாமற் போனது வியப்பளிக்கிறது.
அநேகமாக ஆ.மாதவனின் படைப்புலகின் களம் திருவனந்தபுரம் நகரத்தின் சாலைக் கம்போளமும்
அதன் சுற்றுப் புறங்களுந்தான். கதை
மாந்தர்கள் பெரும்பாலும் அந்தப் பிரதேசங்களில் புழங்கும் எளிய மனிதர்கள்தாம். இந்த
இடத்தையும் மனிதர்களையும் மாதவனையும் இன்னொரு திருவனந்தபுரத்து எழுத்தாளரான
நீல.பத்மநாபனையும்போல மலையாள எழுத்தாளர்கள் கூட
உயிர்ப்புடன் சித்தரித்ததில்லை என்பது வியப்பளிக்கிறது. அதே சமயம் கலையின்
விந்தை பற்றிய பெருமிதத்தையும் தருகிறது. இரு பண்பாடுகளின் சாரம் இந்த
எழுத்துகளில் ஊறியிருப்பதுதான் காரணம் என்பதும் தெளிவாகிறது. இந்த இயல்பின் விளைவை
இன்னொரு முறையிலும் பார்க்க முடிகிறது. மலையாள எழுத்தாளரும் சிந்தனையாளருமான
பி.கே.பாலகிருஷ்ணனின் நாவல் 'இனி ஞான் உறங்ஙட்டெ'. மகாபாரதப் பாத்திரமான கர்ணனை
மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல். அதை ஆ.மாதவன் தமிழாக்கம் செய்திருக்கிறார். பொருத்தமான மொழியாக்கம் அது. நவீன இலக்கியவாதியான ஆ.மாதவனால் அலங்காரமான சம்ஸ்கிருதம்
கலந்த மலையாள நாவலை எப்படி மொழிபெயர்க்க முடிந்தது? இந்தக் கேள்விக்கான பதில்
மாதவனின் ஆரம்ப கால திராவிட இயக்கச் சார்பு எழுத்துகளுக்குக் கடன்பட்டிருக்கிறது
என்று தோன்றுகிறது.
சாகித்திய அக்காதெமி விருது ஆ.மாதவன் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்த போது அளிக்கப்படாமல் காலந்தாழ்த்தி
வழங்கப்பட்டிருப்பது இலக்கிய வாசகர்களுக்குக் குறைதான். எனினும் அவரது
வாழ்நாளிலேயே இந்தத் தேசியப் பெருமை அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறையை
நிவர்த்தி செய்திறது. இந்த விருது இரண்டு விளைவுகளுக்குக் காரணமாக அமைய வேண்டும்
என்ற விருப்பத்தை இங்கே சொல்லலாம். ஒன்று:
நவீனத் தமிழின் தனித்துவமான படைப்பாளி ஒருவர் மேலும் அதிகமான வாசகர்களின்
பார்வைக்குக் கொண்டு செல்லப்பட இந்த விருது உதவும். இரண்டு: இந்த ஊக்க விருதின்
மூலம் தனது மனத்தில் நீண்ட காலமாக எழுதத் திட்டமிருக்கும் பெரும் நாவலை பூர்த்தி
செய்யும் உத்வேகம் ஆ. மாதவனுக்குத் தோன்றலாம். இரண்டும் தமிழுக்கு வளம்
சேர்ப்பவையே.
@
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக