இயக்குநர் அடூர்
கோபாலகிருஷ்ணனின் 'நிழல்குத்து' படத்தின் சிறப்புத் திரையிடல் திருவனந்தபுரம் கைரளி
அரங்கில் முடிந்திருந்தது. நுழை வாயிலில்
நின்றிருந்த அடூரை பார்வையாளர்கள் மொய்த்துப் பாராட்டிக் கொண்டிருந்தார்கள்.
கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதில் ஒரு கேள்வி: 'இந்தப்
படத்தில்தான் பாட்டே இல்லையே? இதற்கு ஏன் இளைய ராஜாவை இசையமைக்கச் செய்தீர்கள்? '.
நொடிப் பொழுது நிதானித்த
அடூர் சொன்னார். 'மூன்று காரணங்களுக்காக
இளையராஜாவை இசையமைக்கக் கேட்டுக்கொண்டேன். முதல் காரணம்: நீங்கள் சொல்வதுபோல இளைய ராஜா வெறும் பாட்டுப் போடுகிற இசையமைப்பாளரல்ல. இந்தப் படத்தின்
கதையோட்டம் தமிழ்நாட்டுப் பின்னணி
கொண்டது. அதற்குத் தமிழ்த் தனமான இசை தேவை.. அதைத் தரக் கூடிய ஒரே இசையமைப்பாளர்
அவர்தான் என்பது இரண்டாவது காரணம். இளையராஜா சினிமா இசையமைப்பாளர் மட்டுமல்ல. ஒரு
முழுமையான இசைஞர் என்பது மூன்றாவது காரணம்'.
அடூர் கோபாலகிருஷ்ணன்
குறிப்பிட்ட மூன்றாவது காரணத்தையே இளையராஜாவின் ஆதார இயல்பாகக் கருதுகிறேன்.
மிகையாக யாரையும் பாராட்டும் வழக்கம்
அடூருக்கு இல்லை என்பதால் இந்த அவதானிப்பை விரிவான பொருளில் எடுத்துக்கொள்கிறேன்.
நாற்பது ஆண்டுக் காலமாக ஒரு நாளில்
ஒருமுறையாவது இளையராஜாவின்
இசையைக் கேட்டாக வேண்டிய தமிழ்ப் பொதுமக்களில் ஒருவன்; தற்செயலாக வாய்த்த சந்தர்ப்பத்தில் அவர் இசையமைப்பதை நேரடியாக அனுபவித்து உணர்ந்தவன். இந்த
இரண்டு நிலைகளிலிருந்து இளையராஜாவை இந்தியத் திரை இசையின் மேதை என்று உறுதியாக நம்புகிறேன்.
அநேகமாக, தமிழ் உட்பட எல்லா இந்திய மொழித் திரைப்படங்களும்
நூற்றாண்டைக் கடந்தவையே.மௌனப்படங்களின் காலத்துக்குப் பிந்தைய எழுபது ஆண்டுப் படங்களும் இசையின் பின்பலத்துடன் உருவானவைதாம்.
பேசும்படங்களாக அறிமுகமான ஆரம்ப கால சினிமாக்கள் உண்மையில் பேசும்படங்கள் அல்ல; பாடும் படங்கள். இந்தியாவின் முதல் பேசும் படமாகக்
குறிப்பிடப்படும் 'ஆலம் ஆரா'வில் ஏழு பாடல்கள் இருந்தன. இசை அமைத்தவர்கள் ஃப்ரோஸ்ஷா
மிஸ்திரியும் பி. இரானியும். அடுத்து வந்த படங்களான 'ஷிரின் ஃபராத்'தில் பதினெட்டு பாடல்களும் 'இந்திர சபா'வில் அறுபத்தொன்பது பாடல்களும் இடம் பெற்றிருந்தன என்ற
தகவல் இதை உறுதிசெய்யும். தமிழ்ச்
சினிமாவும் இதற்கு விலக்கல்ல. முதலாவது பேசும் படம் 'காளிதா'ஸில் ஐம்பது பாடல்கள். கூடவே நடனக் காட்சிகள். இவற்றுக்கும் இசைப் பின்னணி தேவை.பாடல்களை
இயற்றி இசையமைத்தவர் பாஸ்கரதாஸ்.
ஆக, அனைத்து மொழிகளிலும் ஒலி புகுந்த
தருணத்திலேயே இசை அமைப்பாளர்களும்
அறிமுகமாகியிருக்கிறார்கள். இந்திய சினிமா என்று நமக்கு அறிமுகப்படுத்தப்படும் இந்தி சினிமாவின் முதல் இசை
அமைப்பாளர் ஃபெரோஸ்ஷா மிஸ்திரி. தமிழ்த் திரையிசைக்கு பாஸ்கர தாஸ்.
ஒரு நூற்றாண்டுக்
காலத்துக்குள் இந்தியப் பொது மக்களின் ஆகப் பெரும் கலையாக மாறிய சினிமாவின் இசையமைப்பாளர்களாக மேற்சொன்னவர் களைக் குறிப்பிடுவது வரலாற்றுப்பூர்வமானது. இன்று
இந்திய சினிமாவின் இசையமைப்பாளர்களாகச் சொல்லப்படும் எவரையும் இந்த முன்னோடி களின்
பின் தொடர்ச்சியாகவே காணமுடியும். 'பிகே' படத்தின் இசை அமைப்பாளரான
சந்தனு மொய்த்ரா வரையான எல்லா இந்தி இசையமைப் பாளர்களையும் ஃபெரோஸ்ஷா மிஸ்திரியின்
தொடர்ச்சி எனலாம். அதே அடிப்படையில் தமிழின் புதிய தலைமுறை இசை அமைப்பாளரான
சந்தோஷ் நாராயண் வரையிலான அனைவரையும் மதுர பாஸ்கரதாஸின் வாரிசுகளாகப் பார்க்கலாம்.
மிஸ்திரியின் வாரிசுகளாகவும் பாஸ்கர தாஸின் வாரிசுகளாகவும் ஆயிரக்கணக்கான இசையமைப்பாளர்கள்
இதுவரை உருவாகியிருக்கிறார்கள். இளையராஜாவும் அவர்களில் ஒருவர். அப்படிச் சொல்வது பொதுப்படை.
ஓர் இசைக் கலைஞராக அவரது திரையிசை உலக நுழைவு எல்லாரையும்போல நிகழ்ந்ததாக
இருக்கலாம். ஆனால் தனக்கான இடத்தை அவர் உருவாக்கிக் கொண்டது வேறுபட்டது; மேதைக்கு உரிய அடையாளங்கள் கொண்டது. இசை ரசிகனாக இந்திய
சினிமாவில் என்னைக் கவர்ந்த பல மகத்தானஇசையமைப் பாளர்களையும் மனதில் மதிப்புடன்
போற்றிக் கொண்டே 'இந்திய சினிமாவின் முதல்
இசை உருவாக்குநர்’ (composer) என்று இளையராஜாவைச் சொல்ல விரும்புகிறேன். அவரது இசைக்கான
ஊடகம் சினிமாவாக இல்லாமல் இருந்திருக்குமானால், கர்நாடக இசைக்கு அமைந்திருக்கும் ரசிகர்குழாமைப் போன்ற
ஒன்று தனி இசைக்கு அமைந்திருக்குமானால்இளையராஜா உலகின் மிகச் சிறந்த கம்போசர்களில்
ஒருவராகப் புகழ்பெற்றிருக்கக் கூடும்.
1975 இல் 'அன்னக்கிளி' படத்தின் மூலம்
அறிமுகமானார் இளையராஜா. அறிமுகப்படத்திலேயே அவரது இசை மேதைமை வெளிப்படுகிறது. இதைக்
குறிப்பிட இத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டி வந்ததை துரதிர்ஷ்டம் என்றுதான்
சொல்ல வேண்டும். ’அன்னக்கிளி’ படத்தின் பாடல்கள் அதுவரை நாம் கேட்டு வந்த சினிமாப்
பாடல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவையாக இருந்தன. வழக்கமான திரைப்பாடல்களின்
பல்லவி, ஒன்றுக்கு மேற்பட்ட
சரணங்கள் என்ற வடிவத்தில்அமைந்தாலும் அவற்றின் இசைக்கோர்வைகள் வழக்கத்தை
மீறியவையாகவே இருந்தன. அவற்றில் உபயோகித்த
இசைக் கருவிகளின் பயன்பாடுகள் மரபை மீறியவை. படத்தில் இடம்
பெறும் 'சுத்தச் சம்பா பச்ச
நெல்லு குத்தத்தான் வேணும்' பாடலில் இந்த
வித்தியாசத்தைப் பார்க்கலாம். பாடல் கிட்டாரின் மீட்டலும் ஒற்றைத் தாளச்
சொடுக்குமாகத் தொடங்குகிறது.. பல்லவி யிலிருந்து அசலான நாட்டார் பாடலாக மாறுகிறது.
புல்லாங்குழல், திமிரி நாயனம் ஆகிய கருவிகளின்
இசையுடன் தொடக்கத்திலிருந்தே சிதாரின் சிணுங்கலும் இடை கலந்து செல்கிறது. இவற்றுள்
எந்தக் கருவியின் இசையும் தனித்து ஒலிப்பதில்லை. ஒரு மொத்த இசை வடிவத்தை
உருவாக்கும் பகுதிகளாகவே ஒலிக்கின்றன. அவையே பாடல் சூழலுக்கான மனநிலையை (மூட் )
முன் வைத்து விடுகின்றன. அதில் சிதாரின் இசை இழைகள் அழுத்தத்தைச் சேர்க்கின்றன.
பாடலின் முதல் பகுதியில் கலகலப்பாக ஒலிக்கும் சிதார், இடையில் கொண்டாட்டமாகவும் பாடல் முடியும்போது துக்க
விசும்பலாகவும் தொனிக்கிறது. அதுவரையிலான தமிழ்த் திரைப்பாடல்களில் இல்லாத ஓர்
அம்சம் அதில் இருந்தது. அது ஒத்திசைவு (ஹார்மனி).
திரையிசைக்கு இளையராஜாவின் பங்களிப்பு இந்த ஒத்திசைவு என்று நம்புகிறேன்.
தமிழ்ச் சினிமாவின் இசை
நாடகமேடையிலிருந்தும் கர்நாடக இசை அரங்குகளிலிருந்தும் பெறப்பட்ட ஒன்று. இந்த
இரண்டின் கலவையாகவே திரை இசை உருவாகியிருந்தது. சில பாடல்களுக்கு மட்டுமே
இசையமைத்த பாபநாசம் சிவன் முதல் சி. ஆர். சுப்பராமன். எஸ் வி வெங்கட்ராமன்,
ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன்,எம்.எஸ். விஸ்வநாதன் வரையிலான இசையமைப்பாளர்களின் இசை இந்த
வகைமையில் சேர்பவையே. இந்த இசைக்கு இனிமை கூட்டுவதையே பரிசோதனை யாகவும்
முக்கியமானதாகவும் எண்ணினார்கள். மிக நல்ல மெலடிகளைக் கொடுப்பவர் யாரோ அவரே சிறந்த
இசையமைப் பாளர் என்று கருதப் பட்டார். இந்தி சினிமாவில் இதை மீறியவர்கள் என்று
சச்சின்தேவ் பர்மனையும் சலீல் சவுத்ரியையும் சொல்லலாம். தமிழில் அதற்காக ஓரளவு
முயன்றவர் எம்.பி. சீனிவாசன். எம்.பி. எஸ். மலையாளப் படங்களுக்கும்
கலைப்படங்களுக்குமாக தனது திறனை ஒடுக்கிக் கொண்டார். அந்த இடைவெளியில் நிகழ்ந்த
சாதனை இளையராஜா. திரை இசை அதனளவில் பிரத்தியேகமானது என்று நிறுவியவர் அவரே.
அதற்கான தனிக் குணங்களைச் சுட்டிக் காட்டியவரும் அவரே. சினிமாவுக்கான இசை ஒலிப்படிமங்களைச் சார்ந்தது மட்டுமே என்பதே முந்தைய இசையமைப்பாளர் களின் பார்வையாக
இருந்தது. 'பாசம்' படத்தில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைப்பில் வரும் 'பால் வண்ணம் பருவம் கண்டேன்' பாடல் முழுவதும் ஒலிப்படிமங்களால் ஆனது. பால் வண்ணம்,
வேல் வண்ணம், மால் வண்ணம் என்ற சொல் அடுக்குகளால் உருவாகும் படிமமே பாடலை
முழுமையாக்குகிறது. ஒருவகையில் அது அந்தக் கால சினிமாவின் தேவையும் கூட. கதையை
முன் நகர்த்தவும் கதையோட்டத்தில் விழும் தொய்வை இட்டு நிரப்பவும் பாடல்கள்
பயன்பட்ட காலம் அது. இந்த இசையமைப்பு முறையை மாற்றியவர் இளையராஜா. அவரது இசை, காட்சிப் படிமங்களை உருவாக்கின. வசனங்களால் நகர்ந்து கொண்டிருந்த சினிமாக்கள் பின்
வாங்கி காட்சிகளால் முன் நகரும் சினிமாக்கள் உருவாக ஆரம்பித்த கால
கட்டத்தில் இளைய ராஜாவின் இசை சினிமாவை முழுமையாக அதிகம் உதவியது. மகேந்திரன்,
பாலு மகேந்திரா, மணிரத்னம் போன்றவர்களின் படங்களின் இசை பிற இயக்குநர்களின்
படங்களின் இசையை விடச் சிறப்பாக அமைந்தது இந்தக் காரணத்தினால்தான். அவர்களது
படங்கள் காட்சிகளைச் சார்ந்து நகர்ந்தன. காட்சிபூர்வமான இசை அந்தத் திரைக்
காட்சிகளை மேலும் துலங்கச் செய்தன. இளையராஜாவின் மேதைமை வெளிப்படுவது அநேகமாக
இதுபோன்ற படங்களில்தான். சிறந்த படங்கள் என்று சொல்லப் படும் உதிரிப்
பூக்கள், மூன்றாம் பிறை, தளபதி படங்களை ஒலித்தடம் இல்லாமல் பார்த்தால் இசையின்
பங்களிப்பு எவ்வளவு இரண்டறக் கலந்தது என்பது புரியும். டாக்டர். எல். சுப்ரமணியம்
போன்ற பெரும் இசைக் கலைஞரால் இசைக் கோர்ப்பு செய்யப்பட்ட படம் 'ஹே ராம்'. அந்த இசைக்
கோர்ப்பை முழுவதுமாகத் தவிர்த்து விட்டு முழுவதும் எடுத்து முடிக்கப்பட்ட படத்தின்
எல்லாக் காட்சிகளுக்கும் புதிய இசையை உருவாக்கினார் இளையராஜா என்று
சொல்லப்படுகிறது. முற்றிலும் காட்சி ரூபமாகவே இசையைக் காணும் ஒருவரால் அது எளிதில்
செய்யக்கூடியது தான். அது ஒரு மேதைமை வெளிப்பாடு. இளையராஜா என்ற மேதையின்
வெளிப்பாடு.
ஆனால் இந்த மேதைமையை அவர்
கடினமாக உழைத்துத்தான் கைவசப் படுத்தியிருக்கிறார்.பண்ணைப்புரம் போன்ற ஒரு
கிராமத்தில் பிறந்தஎளிய மனிதன் 'நான் பாஃஹை என் வீட்டில் சந்தித்தேன்' ( I met Bach in my house ) என்று இசை உருப்படியை உருவாக்கும் நிலைக்கு உயர்ந்த உழைப்பு
அசாத்தியமானது.அதுவரையிலான எந்த இந்திய
இசையமைப்பாளரும் மேற்கத்திய செவ்வியல் இசையுடன் உரையாடலை நிகழத்தவில்லை.
மேற்கத்திய வெகுஜன இசையின் சாய்ல்களில் - ராக், ஜாஸ் போன்ற வகைகளின் சாயல்களில் பாடல்களை அமைத்திருக்கிறார்கள்.
ஆனால் இளையராஜாவைப் போல அந்த இசையின் உள்ளீடுகளில் அநாயாசமான பயணத்தை
மேற்கொண்டதில்லை. ஒரு அர்த்தத்தில் நாட்டுப்புறப் பாடல்களையும் நாடகப்
பாடல்கலையும் தன் காலத்துத் திரைப்பாடல் களையும் கேட்டு வளர்ந்த ஒருவர் இன்னும்
பரந்த உலகத்தை நோக்கிச் சென்றதும் மேதைமையின் இயல்புதான்.அந்தப் பரந்த இசை உலகிலிருந்து கற்றவையும் தனக்குள்ளே படிந்திருந்த இசையையும் தொகுத்ததுதான் அவரது
சாதனை. ஹார்மனி இசை துல்லியமான கணக்குகளைக் கொண்டது. இந்திய இசைப் பாணிகள்
அனுமதிக்கும் மனோதர்மத்தை விலக்குவது. மொசார்ட்டின் எந்த உருப்படியையும் அதன்
கச்சிதமான கணக்குகளை மீறி யாரும் இசைத்து விட முடியாது. அது பிழை. அதனாலேயே இந்திய
இசைமைப்பாளர்கள் அவற்றின் துணுக்குகளைக் கடனெடுத்துக் கொண்டு அமைதியாகி
விட்டார்கள். ஆனால் இந்தக் கணக்குகள் அவசியம். அதே சமயம் மனோதர்ம சங்கீதம்
அனுமதிக்கும் உணர்வும் தேவை. இந்த இரண்டையும் இணைத்ததுதான் இளைய ராஜாவின் பெரும் பங்களிப்பு.
இளையராஜாவின் 'ஹௌ டு நேம் இட் '- இசை ஆல்பத்தில் உள்ள 'ஸ்டடி ஃபார்
வயலின் 'என்ற உருப்படியை இந்த
இணைவின் முக்கிய உதாரணமாகச் சொல்லலாம். மேற்கத்தியக்
கச்சிதக் கணக்குகளுடன் தியாகராஜரின் 'துளசிதள முளசே சந்தோஷமுகா' என்ற மாயாமாளவ கௌளைக் கிருதி கரைகளுக்குள் புரளும் ஆறுபோல நகர்ந்து ஒலிக்கிறது. அதில் மேற்கத்திய இசையோ கர்நாடக இசையோ
இல்லை. மொத்தமான இசை, ஒலிகளாலான பெருக்கே
இருக்கிறது. கட்டுப்படுத்தப்பட்ட ஓசையே இசை என்ற அடிப்படைக் கருத்து இந்த
உருப்படியின் வடிவமைப்பில் இருக்கிறது.
புழக்கத்திலிருக்கும்
ஒன்றை மீறுவது மேதைமையின் குணங்களில் ஒன்றாகச் சொல்லப்படுவதுண்டு. எல்லாக்
கலைகளிலும் அப்படியான மேதைகளைப் பார்க்க முடியும். ஓவியத்தில் பிக்காசோ, கவிதையில் பாரதி. உரைநடையில் புதுமைப்பித்தன், கர்நாடக இசையில் மாலி என்று பலரை உதாரணம் சொல்ல முடியும். திரையிசையில் அது இளையராஜாவுக்கு மிகவும் பொருந்தும். இசையை
அவர் முழுமையான ஒன்றாகவே பார்க்கிறார். ஒலித்தாதுக்களாகப் பார்க்கிறார். அவற்றை
வைத்து வழக்கத்துக்கு மாறான ஒன்றை உருவாக்குகிறார். அதுவே அவரது இசை மீதான
விமர்சனங்களுக்குக் காரணம் என்று தோன்றுகிறது. பாரதி, ராகத்தைக் குறிப்பிட்டும்
ஸ்வரமும் தாளமும் பிரித்தும் இயற்றிய பாடல்களை வேறு ராகத்தில் பாடும் இசைக்
கலைஞர்கள் காம்போஜி ராக 'மரி மரி நின்னே'
கீர்த்தனையை இளையராஜா சாரமதி ராகத்தில்
அமைத்தபோது மூக்கை உறிஞ்சி வருந்தினார்கள்.அதற்குக் காரணம் மீறலை மேதைமையின் அடையாளம் என்று
ஏற்காததுதான்.
ஆரம்பம் முதல் தனது இசையை
மட்டுமே முன்வைத்து இயங்கி யிருப்பவர் இளையராஜா. அவர் அறிமுகமானது பிரம்மாண்டமான
பட்த்தில் அல்ல. தொடர்ந்து அவர் பணியாற்றியதும் சிறிய படங்களில் தான். தனது இசையைப்
பகிர்ந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்புகளாகவே அந்தப் படங்களைக் கருதியிருக்க
வேண்டும். தனது மேதைமை மூலம் தனக்கான இட்த்தை உருவாக்கிக் கொண்ட பின்பே பெரிய
ஆட்களும் பெரிய படங்களும் அவரைத் தேடி வந்தன.
திரையிசையில்
இளையராஜாவின் சாதனைப் பங்களிப்புகளாக எவற்றைச் சொல்லலாம்? இந்தக் கேள்விக்கு மூன்று நிலைகளிலிருந்து பதில் காணலாம். இசையை ஒரே சமயத்தில்
காட்சியின் துணையாகவும் காட்சியிலிருந்து விலகிய தனித்துவமாகவும் மாற்றினார்.
சத்தியன் மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கிய படம் ' அச்சுவின்டெ அம்ம'. இசை இளையராஜா. படத்தின் திருப்புமுனைக் காட்சியை இளைய ராஜாவின் இசையே
தீர்மானிக்கிறது. தன்னைத் தாயாக நினைத்து வளர்ந்த அச்சு ஒரு இக்கட்டான
சூழ்நிலையில் அம்மா வனஜாவிடம் தனது தகப்பனைப் பற்றிக் கேட்கிறாள். அவள் ஒரு அநாதை
என்பதையும் தான் அவளை எடுத்து வளர்த்த கதையையும் அச்சுவின் காதலனிடம்
வனஜா சொல்கிறாள். அநாதையான வனஜா பாலியல் வன்முறைக்குத் தப்புவதையும் அங்கே சின்னச்சிறு குழந்தையாக நடமாடிய அச்சுவை மீட்டதையும்
சொல்லும் காட்சிகள் பெரும்பாலும் உரையாடலின் துணையின்றியே நகர்கின்றன. முதலில்
சோகமும் பின்னர் பதற்றமும் அதன் பிறகு ஆசுவாசமுமாக இழையும் இசையே அந்தக் காட்சிகளை
உணர்வுபூர்வமாக்குகின்றன. அந்த இசையை சும்மா இருக்கும்போது கேட்டாலும் அந்தப் பதற்றமும் சோகமும் ஆசுவாசமும்
மனதுக்குள் திரள்கின்றன. தளபதி படத்தில் வரும் ரயில் கூவலும் இசையும் இதே வகையிலானதுதான்.
இசையைக் காட்சிப்படிமமாக நிலைநிறுத்துகிறது. இது இளையராஜாவின் பங்களிப்பு. அவரது 'ஹௌ டு நேம் இட்' ஆல்பத்தின் அதே பெயரிலான இசைத்தடம் பாலு மகேந்திராவின் 'வீடு' படத்தின் தீம்
மியூசிக் ஆகவே உருமாறுகிறது.
மைய இசை(தீம் மியூசிக்) என்ற கருத்தை
தமிழ்த் திரையிசையில் வலுவாக நிறுவியவர் இளையராஜா. அதுவரை பாடலின் ஏதோ மெட்டையும்
வாத்திய இசையையும் பொத்தாம் பொதுவாகப் பயன் படுத்திய தமிழ் சினிமாவில் மைய
இசைக்கான முக்கியத்துவத்தை அவரது இசையே வலிய்றுத்தியது. ’சின்னத்தாயவள்’ என்ற பாடலின் இசைக் கோலமே கல்யாணிக்கும் அவளால் கைவிடப்பட்ட
சூரியாவுக்கும் அவளுடைய மகன் அர்ஜுனுக்குமான இசையாக அமைகிறது. ஆனால்
ஒவ்வொரு வருக்கும் வெவ்வேறு பின்னணியில் இசைக்கப்பட்டு அவர்களுடைய அக உணர்வுகளை
வெளிக்காட்டுவதாக மிக இயல்பாக அமைகிறது. குயிலின் கூவலாக ஒலிக்கும் குழலிசை ’முதல் மரியாதை’ படத்தின்
எல்லாக் காட்சிக¨ளையும் ஒன்று
சேர்க்கிறது.'உதிரிப் பூக்கள் 'படத்தின் அழகிய கண்ணே பாடலில் வரும் ரெக்கார்டரின் ஓசை படம்
முழுக்க வியாபிக்கிறது.
இளையராஜாவின் இசை, துணைப்பிரதிகள் - சப் டெக்ஸ்ட் - நிறைந்தது.
பாடல்களிலும் பின்னணி இசைக் கோர்ப்பிலும் இதைப் பார்க்கலாம். ஒரு அடுக்கின் கீழ்
நுட்பமான வேறு பல அடுக்குகள் கொண்ட இசையை லாவகமாகக் கையாள்கிறார் இளையராஜா. 'ராக்கம்மா கையத் தட்டு' தளபதி படப்பாடல், இசையில் தொடங்குதம்மா ' ஹே ராம் படப்
பாடல், குரு என்ற மலையாளப்
படத்தில் வரும் பாடல்கள், பழசிராஜா
படத்தில் இடம் பெறும் ஆதி உஷஸ் சந்திய பூத்தது இவிடெ,நந்தலாலா படத்தின் பின்னணி இசையின் பாகங்கள். இவையெல்லாம்
சப்டெக்ஸ்டுகள்கொண்ட இசை.
ஒசத்தி, கம்மி என்ற ஒப்பீடில்லாமல் இளையராஜாவின் 'எனக்குப் பிடித்த
பாட ' (ஜூலி கணபதி ) லையும்
ரஹ்மானின் ' ஒரு தெய்வம் தந்த பூவே (கன்னத்தில் முத்தமிட்டால் )
பாடலையும் பார்க்கலாம். இரண்டும் நீளமான பல்லவி கொண்டவை. மேலோட்டமான பார்வைக்கு
சுலபமாகப் பாடி விடலாம் என்று தோன்றுபவை. ஆனால் இரண்டும் அடுக்கடுக்கான துணைப்
பிரதிகளைக் கொண்டிருப்பவை. ஒரே வித்தியாசம். ஜூலிகணபதி பாடல் ஒரே ரிதமைப் பின்
தொடர்கிறது. கன்னத்தில் முத்தமிட்டால் பாடல் தொடக்கத்தில் ஒரு தாளக் கட்டிலும் சில
நொடிகளிலேயே விரிவான வேறு ரிதத்திலும் தொடர்கிறது. இளையராஜா ஒரு பாடலை அதன்
தொடக்கம் முதல் முடிவுவரை மொத்தமாகக் கற்பனை
செய்கிறார். ரஹ்மான் படிப்படியாகக் கற்பனை செய்கிறார்.
நத்திங் பட் விண்ட்
ஆல்பத்தில் புல்லாங்குழல் வாசித்திருப்பவர் இசை மேதை ஹரிப்ரசாத் சௌராஸ்யா. அந்த
இசைத் தொகுப்பில் பணியாற்றியது பற்றிக் குறிப்பிட்டபோது சொன்னவை இவை: ' அவரே கம்போஸ் செய்கிறார். இசைக் கருவிகளை ஒருங்கமைக்கிறார்.
ஆர்க்கெஸ்ட்ரேஷனைச் செய்கிறார்.நிகழ்ச்சியை நெறியாள்கைசெய்கிறார். இதையெல்லாம்
உதவியாளர்கள் இல்லாமலும் நிறுத்துக் கடிகாரம் இல்லாமலும் செய்கிறார். ஆச்சரியம்'.
இதை வாசித்தபோது பண்டிட்ஜி மிகையாகச் சொல்கிறார் என்றே தோன்றியது.இளையராஜாவின்
ஒலிப் பதிவு ஒன்றைப் பார்க்கும்வரை.
மலையாளப் படமான ’ஒரு யாத்ரா மொழி’யின் ஒலிப்பதிவு அது. படத்தின் கடைசிரீல் திரையில் ஓடி மறைந்தது. ஒலிப்பதிவுக் கூடத்தின் விளக்குகள் ஒளிர்ந்தன. அதுவரை படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த இளையராஜா இசைக் குறிப்புத்தாளில் வேகமாக எழுதத் தொடங்கினார். சில நிமிடங் களில் எழுதி முடித்தார். ஒவ்வொரு இசைக்கலைஞரும் தங்களுகான இசைக் குறிப்புகளை நகல் செய்து எடுத்துச் சென்றார்கள். சிறிய இடை வேளைக்குப் பிறகு இளைய ராஜா ' டேக் போலாமா ? 'என்றார். டேக் ஆரம்பமானது. எல்லா இசைக் கருவிகளும் ஒலித்தன. கண்ணாடி அறைக்குள் ஒலிப்பதிவுக் கருவி அருகிலிருந்து இளையராஜாவின் குரல் குறுக்கிட்டது. 'கட், நாலு வயலின்ல ஒரு வயலின் ஒரு பார் கம்மியாக இருக்கு' என்றது. பத்திரிகைப் பேட்டிக்காக இளையராஜாவைச் சந்திக்கப் போய் ஒலிப்பதிவுக் கூடத்தில் காத்து நின்ற எனக்கு உடல் சிலிர்த்தது. நாலு வயலினில் ஒன்று குறைவான இடத்தில் வாசிக்கப்பட்டதைக் கண்டுபிடிக்கும் மனிதர், ஒரு காட்சிக்கான இசையை அதை வழங்கும் கருவிகளைப் பாராமலேயே மனதுக்குள் முழுமையாகக் கற்பனைசெய்யும் மனிதர்,அந்தக் கற்பனையை எளிதாக உருவாக்கும் மனிதர், மேதையாகத் தானே இருக்கமுடியும் என்று அந்த அசாதாரணச் சிலிர்ப்பில் தோன்றியது. பண்டிட் ஹரிப்ரசாத் சௌராஸ்யாவும் அடூர் கோபாலகிருஷ்ணனும் சொன்னவை மிகையல்ல என்று தோன்றியது; இன்றும் தோன்றுகிறது.
@
இளையராஜா ஆயிரம் படங்களை நிறைவு செய்ததைச் சிறப்பிக்கும் வகையில் இந்தியா டுடே இதழ் ஒரு மலரைக் கொண்டு வருகிறது. நீங்கள் ஒரு கட்டுரை எழுத முடியுமா? என்று கவிஞரும் பத்திரிகையாளருமான கவின்மலர் கேட்டார். அதற்காக எழுதிய கட்டுரை இது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எழுதப்பட்டது. எழுத வைத்த கவின்மலருக்கு மிக்க நன்றி.
மெய் சிலிர்த்துப்போனேன் ! இளையராஜாவை இசை சித்தர் என சொல்லலாம் போலிருக்கிறது. மிக அற்புதமான பதிவு, சுகுமாரன் ஐயா .
பதிலளிநீக்குஉங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குசின்னத் தம்பி படத்தில் தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே என்ற தாலாட்டுப் பாடலையும் லை ஆஃப் பை படத்தின் டைட்டில் தாலாட்டையும் கேட்டுப் பாருங்கள். இளையராஜாவின் இடம் புரியும். அவருடைய இன்னொரு பெரிய குறை ரா-வான தமிழ் நாட்டுப்புறக் குரல்களை அவர் வெகு சொற்பமாகவே பயன்படுத்தியிருக்கிறார். மிக நல்ல மெல்லிசைக் கலைஞர் மட்டுமே. மெய்யான இசை மேதைமை வேறு தளங்களில் சஞ்சரிக்கக்கூடியது.
பதிலளிநீக்கு