புதன், 20 ஏப்ரல், 2016

இமையத்தின் ' எங் கதெ'




மையத்தின் 'எங் கதெ' நாவல் விமர்சன அரங்கில் கலந்து கொள்வது  மகிழ்ச்சியளிக்கிறது. வாசகனாகவும் இலக்கிய ஆர்வலனாகவும் இந்த மகிழ்ச்சிக்குப்  பல காரணங்கள் இருக்கின்றன.

அண்மையில் வெளிவந்த நூல்களில் மிக அதிகமாகப் படிக்கப்பட்டதும் பேசப்பட்டதும் இந்த நாவல்தான் என்று நினைக்கிறேன். உடன்பாடாகவும் எதிர்மறையாகவும் இந்த நாவல் விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு புத்தகம் வெளிவந்து குறுகிய காலத்துக்குள் பரவலாக விவாதிக்கப்  பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது. சரியாகச் சொன்னால் இமையத்தின் படைப்புகளில் பரவலான கவனத்துக்கு வந்திருப்பதும் இந்த நாவல் தான். அவருடைய படைப்பு ஒன்றுக்கு தனியாக கூட்டம் நடப்பதும் இதுதான் முதல் முறை.
இத்தனைக்கும்  இமையம் இருபது வருடங்களுக்கு மேலாக எழுதி வருபவர். மூன்று நாவல்களையும் நான்கு தொகுப்புகளாக வெளி வந்திருக்கும் சுமார் ஐம்பது சிறுகதைகளையும்  எழுதியிருக்கிறார். இவையெல்லாம் முக்கியமான படைப்புகள் என்ற மதிப்பைப் பெற்றவை; எழுதிய எழுத்தாளர் இலக்கியத்தில் குறிப்பிடத் தகுந்தவர் என்ற  கணிப்புக்கும் ஆளானவர்.ஆனால் இந்த மதிப்பும் கணிப்பும் இமையத்தின் பங்களிப்புக்குக் குறைவான அங்கீகாரம் என்றே  நினைக்கிறேன். அதை ஒரு குறையாகவே எடுத்துக் கொள்கிறேன்.

புதிய நாவல் இந்தக் குறையைப் போக்கியிருக்கிறது. வாசகர்கள் பலரும் பேசும்  நாவலாகவும் இலக்கிய வட்டங்களில் கொஞ்சம் பொறாமையுடன் விவாதிக்கப் படும் படைப்பாகவும் 'எங் கதெ' அமைந்திருக்கிறது. அதுவும் மகிழ்ச்சியளிப்பது. எனக்கும் இமையம் மிக முக்கியமான எழுத்தாளர் என்ற எண்ணமே இருந்தது.  இமையத்தின் எல்லா நாவல்களையும் பெரும் பான்மை யான கதைகளையும் வாசித்திருந்தும் அவருடைய பங்களிப்புத் தவிர்க்கக் கூடாதது என்ற கருத்தெல்லாம்  இருக்கவில்லை. 'நம் மண்ணைக் கண் திறந்து பார்க்க அன்போடு கேட்டுக் கொள்ளும் நாவல் இது' என்ற சுந்தர ராமசாமியின் வற்புறுத்தல் இல்லாமலிருந்தால் 'கோவேறு கழுதைகள்' வாசிப்பு, கொஞ்சம் பிந்திப் போயிருக்கலாம். அதையொட்டி  இமையம் என்ற படைப்பாளியின் உலகத்துடன் கொள்ளும் உறவும் தாமதமாகியிருக்கலாம்.

நல்லவேளை அப்படியெல்லாம் நிகழவில்லை. இமையத்தின் அநேகமாக எல்லாப் படைப்புகளையும் அவை வெளியான சுருக்கிலேயே வாசித்தும்  இருக்கிறேன். இருந்தும் அவரது பங்களிப்புப் பற்றி ஒரு முழுமையான கருத்துக்கு வரமுடியாமலேயே இருந்தது. இவர் மிக முக்கியமான எழுத்தாளர்  தான்; ஆனால் அந்த முக்கியத்துவம் எதனால் என்று திட்டவட்டமாகச் சொல்லத் தெரியாத ஒரு மனமூட்டம் இருந்தது. அந்த மூட்டத்தை நண்பர் அரவிந்தன் கலைத்தார். இமையத்தின் புதிய சிறுகதைத் தொகுதியான ' சாவு சோறு' பற்றி எழுதும்படி அவர் கேட்டுக் கொண்டதுதான் ஒரு தெளிவு நிலையைக் கொடுத்தது. இமையம் ஒரு  எதார்த்தவாத எழுத்தாளர். ஆனால் எதார்த்தமான நிகழ்வையொட்டி தனது விமர்சனமாகவோ குறுக்கீடாகவோ படைப்பை உருவாக்குவதில்லை. தனக்கு வாய்த்திருக்கும் மொழி மூலம் அந்த எதார்த்தம்  வாசகனின் மனதில் நிகழ்வதாகவே காட்டுகிறார்.  அவரது படைப்புகளின் ஆதாரமான இயல்பு இது. சொல்லி  முடிந்த கதையை அல்ல; நாம் வாசிக்கத் தொடங்கியதும் நிகழத் தொடங்குகிற கதையையே  முன் வைக்கிறார். அவரது சிறுகதைகளை வாசித்தபோது ஏற்பட்ட  இந்தத் தெளிவு மகிழ்ச்சியை அளித்தது. இந்தத் தெளிவான மனநிலையில்தான் 'எங் கதெ' வாசிக்கக் கிடைத்தது. அந்த வாசிப்பு மகிழ்ச்சியை இரு மடங்காக்கியது. மூட்டம் விலகிய மனதுடன் ஒரு படைப்பாளியைப் புரிந்து கொண்ட மகிழ்ச்சி அது.

இரண்டு அம்சங்கள் எங் கதெ’ -  நாவலை வாசிப்புக்கு நெருக்கமானதாக ஆக்கியிருக்கின்றன.

ஒன்று: நாவலில் கையாளப்பட்டிருக்கும் கதை மொழி. கிட்டத்தட்ட நூறு பக்கங்களைக் கொண்ட  புத்தகத்தை எடுத்தால் வாசித்து முடிக்காமல் மூட முடியாது. அந்த அளவுக்கு இயல்பான மொழி, சரளமான போக்கு, ஓட்டமான நடை.  இதை மிக இயல்பாக நாவலில் இமையம் கையாண்டிருக்கிறார்.

இரண்டாவது அம்சம்: இந்த நாவல் வாசிக்கிற நபரிடம் ஏற்படுத்துகிற மன நெருக்கம்.  நாவலை  வாசிக்கிற யாரும் இதன் பாத்திரங்களாகத் தங்களைக் கற்பனை செய்து கொள்வதையும், அந்தப் பாத்திரங்களின் இடத்தில் தங்களை வைத்துப் பார்ப்பதையும்  தவிர்க்க முடியாது என்று எண்ணுகிறேன். இது இமையத்தின் பிற படைப்புகளில் இதுவரை பார்க்க முடியாத இயல்பு. கோவேறு கழுதைகளை வாசிக்கும் போது  ஆரோக்கியத்தையும் ஆறுமுகம் வாசிக்கும்போது ஆறுமுகத்தையும் செடல் வாசிப்பில் செடலையும் பாத்திரங்களாகவே இனங்காணுகிறார்கள். அவர்களுடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆரோக்கியமாகவோ ஆறுமுகமாகவோ செடலாகவோ தங்களைக் கற்பனை செய்து கொள்வதில்லை. அல்லது அப்படிக்  கற்பனை செய்து கொள்ளும் அளவுக்கு ஆசிரியரும் கதையில் நெருக்கத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதில்லை.

ஆனால் 'எங் கதெ' வாசிக்கும் ஒவ்வொருவரையும் விநாயகமாகவோ கமலாகவோ கற்பனை செய்து பார்த்துக் கொள்ளச் செய்கிறது. இந்த நாவலின் பலம் இதுதான் என்று நினைக்கிறேன். முன் தீர்மானம் இல்லாமல்  நாவலை வாசிக்கிற யாரும் இதில் தங்களைப் பார்த்து விட முடியும் . இந்த ஒருமை தான் நாவலை உத்வேகத்துடன் பாராட்டவும் தீவிரமாக எதிர்க்கவும் காரணங்கள்.

'எங் கதெ'யில் சொல்லப்படும் கதை புதியது அல்ல. காலங்காலமாகச் சொல்லப்படும் ஆண் - பெண் உறவின் சிக்கல்தான் இதன் கதையோட்டம்.. 'எங் கதெ' ஆணின் வாய் மொழியாகக்கதையைச்  சொல்கிறது. விநாயகம் அடுக்குவது கமலாவைப் பர்றிய குற்றச் சாட்டுகளைத்தான். ஆனால் அதன் வழியாகவே நாம் விநாயகத்தின் பலவீனங்களை கயமையை சுயநலத்தை, ஆளுமைக் குறைவைப்  புரிந்து கொள்கிறோம். அவற்றுக்கு எதிர்நிலையாக கமலாவின் திடத்தை, சாதுர்யத்தைஆளுமையை விளங்கிக் கொள்கிறோம். இமையத்தின் எங் கதெயை புதிய படைப்பாக மாற்றுவது இந்த தள மாற்றம்தான். இதுதான் இந்த நாவலைப் புதுமையான ஒன்றாக நிறுவுகிறது.

'எங் கதெ' என்று விநாயகம் சொல்வது உண்மையில் கமலாவின் கதையை யும்தான். அவளது துயரங்களையும்தான். விநாயகத் துக்கு நாவலின் உச்சகட்டத்தில்தான் தான் கமலா மீது கருணை பிறக்கிறது; ஆனால் வாசிப்பவனுக்கு அதற்கு முன்பே அவள் மீது பரிவும் இரக்கமும் தோன்றி விடுகிறது. அவளுடைய துரோகம் என்று விநாயகம் குறிப்பிடும் ஒவ்வொரு செயலும் அவள் அதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? என்ற பச்சாத்தாபமாக மாறிவிடுகிறது.

விநாயகம் தன்னுடைய பத்து வருடக் கதையைச் சொல்லுவதுதான் நாவலின் கதையோட்டம். முப்பத்து மூன்று வயதில் கமலாவைக் காதலிக்கத் தொடங்கி நாற்பத்தி மூன்றாம் வயதில் அவளைக் கொலை செய்ய ஆவேசக் கொள்வது தான் கதை. பத்து வருசத்துக் கண்ணீர். பத்து வருசத்து ரத்தம் அவன் கதை. தன்னுடைய  வாழ்க்கையே ஒரு பெண்ணால் நாசமாகிப் போச்சு என்ற புலம்பலில், இனி மீளவே முடியாத சீரழிவில் அகப்பட்டுப் போச்சு என்ற கழிவிரக்கத்தின் உச்சத்தில் அவன் செய்யத் தீர்மானிக்கும் கொலையைச் செய்ய விடாமல் அவனைப் பின் வாங்கச் செய்வது அந்தப் பத்து வருடத்துக் காதல் அல்லது காமம் அல்லது  உறவு.  அந்தப் பின் வாங்கும் செய்கை அவன் அந்த உறவுக்குச் செய்யும் அதிகபட்ச மரியாதை என்றுதான் தோன்றுகிறது.

ஒருவகையில் நாம் எதிர்கொள்ளும் நடைமுறையின் திருப்பிப் போட்ட மனநிலையை நாவல் சொல்லுகிறது. ஆண் பெண் உறவை அல்லது  காதலை ஆண் பார்ப்பதற்கும் பெண் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. பெண்ணைப் பொறுத்தவரை காதல் அவளது வாழ்க்கை. ஆனால் ஆணுக்கு அது வாழ்க்கையின் ஒரு பருவம். இந்தப் பொது நிலையை 'இமையம் தலைகீழாக மாற்றுகிறார் இந்த நாவலில். கமலாவுக்கு விநாயகத்தின் மீதான காதல் வாழ்க்கையின் ஒரு பகுதிதான்.அவனுடன் காதலில் இருக்கும்போதே அவளால் தன்னை விலக்கி நிறுத்தி, தன்னுடைய இருப்புக்கானகாரியங்களைச் செய்து கொள்ள முடிகிறது. இரட்டைப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறாள். தனது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்கிறாள். வசதிகளை  உருவாக்கிக் கொள்கிறாள்.தன்னுடைய உயர்வுக்கு உதவக் கூடும் என்றால் சி இ ஓவுடன் உறவு வைத்துக் கொள்வதிலும் நியாயம் காண்கிறாள். இந்த நியாயங்கள்தான், விலக்குகளைப் பொருட்படுத்தாமல் அவள் மேற்கொள்ளும்  சுதந்திரம்தான் விநாயகத்தைப்  புலம்ப வைக்கிறது. தன்னை ஏமாற்றி விட்டாள் என்று பழி சொல்லத் தூண்டுகிறது. அவளைக் கொல்லும் மூர்க்கத் தனத்தை ஏற்படுத்துகிறது. ஒரு மனிதனாகஅவன் வேறு எதுவுமில்லை. கமலாவின்மேல் வேட்கை கொண்டவன் என்பதைத் தவிர. வீட்டுக்கு உதவு கிறவனாக இல்லை. அம்மாவின் கையை நம்பியே  செலவு செய்கிறான். தங்கைகளுக்கும் கேலிப் பாத்திரமாகிறான். நண்பர்கள் மத்தியில் பரிகசிக்கப் படுகிறான். வெறும் காதலானாக மட்டுமே இருக்கிறான். வெறும்  காமுகனாக மட்டுமே இருக்கிறான். காதல் மட்டுமே அவனுடைய வாழ்க்கையாக இருக்கிறது. அவனிடமிருக்கும் காதலை அல்லது வேட்கை யைக் கழித்தால்  அவன் வெறும் சூனியம். பத்துவருடக் காதலின் இறுதியில் அவன் அடைவது எதுவுமே இல்லை. 'இங்கிருந்து ஊரு எம்பது தொண்ணூறு மைலு இருக்கும். நடந்தே போவணும்னு தோணிச்சு. முன்னால் இருட்டுக் கொட்டிக் கிடந்துச்சு' என்று முடியும் வரிகள் அதைத்தான் அழுத்தமாகச் சொல்லுகின்றன.


கமலா மீது விநாயகத்துக்கு ஏற்படும் ஈர்ப்பு பொதுவான நடைமுறையை மீறியது என்று தோன்றுகிறது. விதவை, இரண்டு சின்னக் குழந்தைகளின் தாய். அந்நிய  ஊரில் வந்து குடியேறியவள். விநாயகத்தின் வீட்டுப் பழக்கங்களுக்கு அந்நியமானவள். இத்தனை மீறல்களைத் தாண்டித்தான் அந்த ஈர்ப்பு உருவாகிறது. அதுவும் ஆபத்தான ஈர்ப்பு . அதை முதலிலேயே அவன் உணர்ந்து கொள்கிறான். அவளுடைய முதல் வருகையை விநாயகம் சொல்லும் வார்த்தைகளிலேயே இந்த உறவின் குணம் தெரிந்து விடுகிறது. 'நல்ல பாம்பு வர்ற மாரி சரசரன்னு வந்தா'. ஆபத்துடன் மனிதன் கொள்ளும் விசித்திர உணர்வு, விநோதமான சாகசம்தான் தன்னுடைய  காதல் என்று அவனுக்குப் புரிகிறது. அதுவே அவனைத் துன்புறுத்துகிறது. பிறர் பார்வை யிலிருந்து ஒளிந்து கொள்ளச் செய்கிறது. முப்பது மூன்று வயதான ஒரு  ஆணாக அவனால் இந்த உறவை வெளிப்படையான ஒன்றாக ஒருபோதும் முன்வைக்க முடிவதேயில்லை. 'நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாச் சேச்ந்து ஒரு ஊருக்குப் போனதில்ல. கோயில் குளம் போனதில்ல.ஒரு சினிமாவுக்குக் கூடப் போனதில்லே.' என்கிறான். 'புள்ளைங்கள உட்டுட்டு எங்க போறது?' என்று அதற்குச்  சமாதானமும் சொல்லிக் கொள்கிறான். ஆனால் கமலாவுக்கு இந்த மனத் தடைகள் அதிகமில்லை. தனது குழந்தைகள் இருக்கும்போதே அவனை வீட்டில் அனுமதிக்க முடிகிறது. ' பக்கத்து அறையில வயசுக்கு வந்த ரெண்டு படுத்திருக்கு. நான் அவங்க அப்பனில்ல. அவங்களுக்குச் சம்பந்த்மில்லாத ஒரு ஆளு அவங்க அம்மாகூடப் படுத்திருக்கான் அதெ அந்தப் புள்ளைங்க தாங்கலெ' என்று விநாயகமே சொல்லும் இடத்தில் வெளிப்படுவது கமலாவின் வெளிப்படையான இயல்புதான்.

'எங் கதெ' யை சமகாலப் பொருத்தப்பாடு கொண்டதாகவும் காலத்தை மிஞ்சிய நிரந்தரப் பிரச்சனையைப் பேசுகிற படைப்பாகவும் ஆக்குகிற ஒரு இயல்பு நாவலில் இருக்கிறது. அது ஆண் - பெண் உறவின் அடிப்படை இயல்பைச் சொல்கிறது. சமநிலை, பரஸ்பரத் தேவை, சக வாழ்வு என்றெல்லா நற்குணங்களைச்  சொல்லிப் பேணினாலும் இந்த உறவில் கண்ணுக்குப் புலப்படாத , முடிவற்ற போட்டி நிலவுகிறது. யாரை யார் வென்றெடுப்பது என்ற போட்டி. இந்தப் போட்டிதான் காலங்காலமாக இரு பாலைச் சேர்ந்தவர் களை பரஸ்பரம் வசீகரிக்கிறது. ஒருவரை அதிகாரம் செய்து தனக்குக் கீழ்ப் படிதலுள்ளவனாக/ உள்ளவளாக மாற்றத் தொடர்ந்து முயற்சி செய்கிறது. இந்த நாவலில் உயிர்ப்பான தன்மை இந்த முடிவற்ற போட்டியை நுட்பமாகச் சித்தரிப்பதில் இருக்கிறது. கமலா மீது விநாயகம்  சுமத்தும் குற்றச் சாட்டுகள் இந்தப் போட்டியின் விளைவுதான். தனக்கு மட்டுமே உரியவளாக இருக்க வற்புறுத்தும் ஆண்நிலையை பெண் மூர்க்கமான மௌனத்தால் எதிர்க்கிறாள். கமலாவை முள் முனையில் நிறுத்தும் விநாயகத்தின் எல்லாப் புகார் களையும் மறுக்கும் நியாயங்கள் அவளிடம் இருக்கின்றன. விநாயகம் வாளை வீசினால் கமலா கேடயத்தால் அதைத் தடுத்து விடுகிறாள். அந்தத் தற்காப்பை விநாயகத்தால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அதனாலேயே  அவளது செயல்களைத் துரோகங்களாகப் பார்க்கிறான்.

கமலாவைப் பொறுத்த வரை அவளுடைய செயல்கள் நியாயமானவை. எனவே இந்த உறவில் அவள் எந்த  விதமான குற்ற உணர்வுக்கும் உள்ளாவதில்லை. உண்மையில் கமலாவுக்கு துணை விநாயகம் அல்ல; விநாயகத்துக்குத்தான் கமலா தேவையாக இருக்கிறாள். விநாயகம் இல்லாமலும் கமலாவின் வாழ்க்கை சாத்தியம். கமலா இல்லாமல் விநாயகத்துக்கு வாழ்க்கையே இல்லை. இதை நாவலில் நுட்பமாக எல்லா இடத்திலும் வெளிப்படையாகப் பல சந்தர்ப்பங்க ளிலும் பார்க்கலாம். விநாயகத்தால் கமலாவுக்குப் பொருள் சார்ந்து உதவ முடியாது. அவளுடன் பகிரங்கமாக நடமாட  முடியாது. அவளுக்குச் சிக்கல் வரும்போது துணை நிற்க முடியாது. சி இ ஓ வின் மனைவியும் மக்களும் அவளை அவமதிக்கும் கட்டத்தில் கூட விநாயகம் ஒரு பொய்யான உறவைச் சொல்லித்தான் அந்தச் சூழலில் குறுக்கிடுகிறான். இப்படியான ஒரு உதவாக் கரையுடன் கமலா கொள்ளும் உறவு வெறும் உடல் சார்ந்ததுதானா? ஆமாம். அதன் மூலம் அவள் தனது அதிகாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்கிறாள். அந்த அதிகாரத்தைப் பொருளாதார அதிகாரமாகவும், பாலியல் அதிகாரமாகவும், சாதி சார்ந்த அதிகாரமாகவும் கூட விரிவாக்கிக் கொள்கிறாள். இந்த மையம்தான் நாவலை சம காலத்தன்மை கொண்டதாக மாற்றுகிறது. விநாயகம் சாகசக் கதாநாயகன் அல்ல; கமலாவும் தியாக தேவதை அல்ல. நாம் பார்க்கும் எதார்த்தமான மனிதர்கள். ஒருவேளை நாம்தான் அவர்கள். இந்த ஒற்றுமை நாவலை நிகழ்காலப் பொருத்தம் கொண்டதாக ஆக்குகிறது.

ஓர் ஆணின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கும் கதை இது. விநாயகத்தின் பார்வையிலும் செயல்களிலும் கருத்துகளிலுமாகவே கதை நிகழ்கிறது. அவன் மூலமாகவே நாம் கமலாவின் உருவத்தையும் செயலையும் இயல்பையும் புரிந்து கொள்கிறோம். நாவலில் கமலா பேசும் இடங்கள் குறைவு. எனினும் அவளுடைய  மௌனங்கள் அவள் பேசியிருக்கக் கூடிய வார்த்தைகளை விட உரக்க ஒலிக்கின்றன. ஒரு படைப்பாளியாக இமையம் தன்னை வலுவாக வெளிப்படுத்தும் தருணம் இது என்று கருதுகிறேன். நாவலை இரண்டாம் முறையாக வாசித்தபோது ஒரு உத்தியைச் செய்து பார்த்தேன். விநாயகத்தின் கோணத்திலிருந்து விலகி கமலாவின் சார்பாக இந்த நாவலை வாசித்தேன். மனிதர்கள் எவ்வளவு அற்பமானவர்கள் என்று புரிந்தது. குறிப்பாக ஆண்கள்.

இதுவரையான தனது படைப்புகளிலிருந்து இமையம் இந்த நாவலில் வேறு பட்டுத் தெரிகிறார். இமையம் தான் இதை எழுதினாரா என்று சந்தேகப்படும் அளவுக்கான வேறுபாடு. காரணம் அவரது படைப்புகள் பொதுவாக நடை முறை சார்ந்தவை. எதார்த்தமான சித்தரிப்புகளைக் கொண்டவை. புற உலகச் செயல்பாடுகள் இடம் பெறும் அளவுக்கு உளவியல் சார்ந்த சிக்கல்கள் அவற்றில் முக்கியமானவையாக இருந்ததில்லை. அவரது கதை சொல்லும் முறை பெரும்பாலும் தற்சார்பற்றது. வலிந்து உரக்கப் பேசாதவை. சமூகம் சார்ந்த பிரச்சனைகளைக் கூட ஆசிரியர் கூற்றாக இல்லாமல் பாத்திர உரையாடல்களாகவே முன்வைப்பது அவரது  இயல்பு. 'மணலூரின் கதை' போன்ற சில கதைகளைத்  தவிர்த்தால் அதிகம் அரட்டை அடிக்காதவை அவரது கதைகள். இந்தப் பொது இயல்புகள் எல்லாவற்றையும்  இந்த நாவல் மீறியிருக்கிறது. மிக இயல்பான மொழியில் மிகச் சிக்கலான ஒரு படைப்பை முன்வைத்திருக்கிறார். அவர் கவிதைகள் எழுதியிருக்கிறாரா என்று தெரிய வில்லை. இந்த நாவலில் கவிதையை நெருங்கும் தீவிரமான மொழியைப் பார்க்க முடிகிறது. கவித்துவமில்லாத வார்த்தைகள் மூலம் கவிதையின் செறிவை எட்டுகிற ஒரு மொழி. அது இந்தக் கதையை இன்னும் ஆவேசமானதாக ஆக்கியிருக்கிறது.

மிக அதிகமான உணர்வுத் தளங்களும் , மிக அதிகமான உட்பிரதிகளும் கொண்ட நாவலாக இதைச் சொல்ல விரும்புகிறேன். இதை இமையத்தின் மிகச் சிறந்த படைப்பு என்று சொல்வேனா என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய உண்மையான படைப்பு என்று தயக்கமில்லாமல் சொல்ல முடியும்.

( சென்னையில்  4 ஆகஸ்ட் 2015 அன்று நடைபெற்ற 'எங் கதெ' நாவல் விமர்சன அரங்கில் ஆற்றிய உரை )
.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக