புதன், 3 ஜனவரி, 2018

பேக்கல் கோட்டை




கோட்டை
வரலாற்றிலிருந்து விண்டு எடுத்து
அந்தரத்தில் ஊன்றிய ஞாபகம்
அங்கே
காலம் மூன்றல்ல; நான்கு
கடக்க முடியாமல் உறைந்தது
நான்காம் காலம்.

கோட்டை வாசலைக் கடந்து
நீங்கள் நுழைவது
இன்றிலிருந்து நேற்றைக்கு அல்ல;
நாளையை மறந்து வைத்த
நேற்றைய நேற்றைக்கு.

புலனாகாக் கடிகைக்குள்
காலம் சொட்டி விழுவது
டிக் டிக் என்றல்ல;
திக் திக் என்றோ
தொம் தொம் என்றோ தான்.

இரண்டு ஒலிச் சொட்டுகளுக்கு இடையில்
தேருளைப் புரவிகளின் கனைப்போ
வாரணத் தொகுதியின் பிளிறலோ
சவுக்குப் பிய்த்த சதையின் அலறலோ
கபந்த நர்த்தன ஜதியோ
அரியணை கவிழும் பேரொலியோ
முறிக்கப்பட்ட காதலின் கேவலோ
எதிரொலிப்பதை நீங்கள் கேட்கக் கூடும்.

கோட்டைக்குள் புகுந்ததும்
உங்களுக்கு நீங்களே அன்னியராகிறீர்கள்
அதற்கு முன்பிருந்த உங்களை
பிறவிப் பிழையாக நீங்களே உணர்கிறீர்கள்
உங்கள் உதிரத்தில்
கோட்டை அதிபதியின் அணு உண்டா என்று
சுயபரிசோதனை செய்கிறீர்கள்

சக சுற்றுலாப் பயணிகளை
அத்துமீறி வந்தவர்களாகக் கண்காணிக்கிறீர்கள்
அவர்கள் கேள்விகளுக்கு
ஆணவக் குரலில் பதில் சொல்கிறீர்கள்
கோட்டையின் இண்டு இடுக்குகளில் உலாவி
பூர்வ ஜென்மப் பூரிப்புடன் பெருமூச்சு விடுகிறீர்கள்

'யாரங்கே?' என்று கைகொட்டியழைத்து
சேவகன் சிவிகை தேர் வரக் காத்திருக்கிறீர்கள்
உங்கள் ஆணைக்குப் பணிந்து
ஆகாயத்திலிருந்து இறங்கி வருகிறது இருளின் திரை
கடிகைக்குள் தொம் தொம் என்று சொட்டி விடுகிறது காலம்

கோட்டை வாசலைத் தாண்டி வெளியேறும்போது

போன நீங்கள்தானா திரும்பும் நீங்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக