புதிய கவிதைத் தொகுப்புக்கு வந்த முதல் எதிர்வினை இது. நண்பர் சிவராஜ் பாரதிக்கு மிக்க நன்றி.
அளவு என்பது எண்களால் தீர்மானிக்கப்படுவது
அல்ல. அளவு என்ற வரையறை விரிவானது, ஆழமானது. கவிஞர் சுகுமாரனின் எழுத்துகளுக்கும் இது பொருந்தும். கவிதை என்பது
உணர்வல்ல,
அது ஒரு அனுபவம். படைப்புகள் உருவாவதில்லை, அவை வெளிப்படுகின்றன. கவிஞனின்
மொழியாளுமையையும் கற்பனாவாதத்தையும் கருவியாகக் கொண்டு படைப்பு தன்னைத் தானே
வெளிப்படுத்திக் கொள்கிறது. அதில் கவிஞனுக்கான இருப்பையும் பெருந்தன்மையோடு
விட்டுக்கொடுக்கிறது. அப்படியொரு கவிதானுபவம் தான் "செவ்வாய்க்கு மறுநாள்
ஆனால் புதன்கிழமை அல்ல".
அன்பிற்கும் மதிப்பிற்கும் மட்டுமல்ல
கவிதைக்குமுரிய கவிஞர். சுகுமாரனின் ஏழாவது கவிதைத் தொகுப்பு இது. 46 கவிதைகளின் அரூப கணங்களைச் சுமக்கின்ற சிற்றுரு நூல். "ஜியார்ஜியா ஓ' கீஃபி"யின் ஓவியம் கொண்ட அட்டை
வடிவமைப்பே முழுமையான கவிதானுபவத்திற்கு வரவேற்பாய் அமைகிறது. நூல் முழுதும்
கவிஞரின் கவிதாதிகாரம் தான்! ' சொற்கள் சுடர்க!' எனும் முன்னுரைக் கரையிலிருந்து கைப்பிடித்து
அழைத்துச் சென்று 'கவிதை'க்குள் கால்நனைத்து,
மெல்ல கடலுக்குள் இறக்கி, மூழ்கவைத்து நம்மை தனியே விட்டுவிட்டு அவர்
மாயமாய் மறைந்துவிட்ட உணர்வு. நல்ல கவிதைக்கு தொடக்கம் இருக்கலாம், முடிவு இருக்கிறதா என்று தெரியவில்லை.
சுகுமாரனின் கவிதைகள் முடிவதில்லை, அது மௌனமாய் (அ) '
செவி துளைக்கும் ஈனப்புலம்பலாய்' நமக்குள் பயணித்துக் கொண்டே இருக்கிறது.
"செவ்வாய்க்கு மறுநாள் ஆனால் புதன்கிழமை
அல்ல" என்ற தலைப்பே என்னை பெரும் வியப்பில் ஆழ்த்தியது. முதன்முதலில் தலைப்பை
படித்ததும்,
இதன்மூலம் என்ன சொல்ல வருகிறார் கவிஞர் என்று
சிந்தித்துக் கொண்டிருந்தேன். கிழமைகளுக்கு நாம் அந்த பெயர் வைத்துவிட்டோம்
என்பதனாலேயே அதை அந்தப் பெயரைக் கொண்டுதான் அழைக்கத் தேவையில்லை என்று சொல்ல வருகிறாரா? அல்லது செவ்'வாய்' என்பதைக் குறிக்கிறாரா என்று குமைந்து கொண்டிருந்தேன். கவிதையை படித்ததும்
வேறு விதமாக புரிந்து கொண்டேன். மனிதனின் மரணத்துக்குப் பிறகு அவன் சூட்டிய
கிழமைகளின் பெயர் என்னவாக இருக்கும் என்று நம்மை சிந்திக்க வைக்கிறார் கவிஞர்
என்று தோன்றியது. இது சரியான புரிதலா என்றுகூட தெரியவில்லை. சுகுமாரனின் மொழி
என்னை ஏளனமாகப் பார்க்கிறது. உன் அறிவுக்கெல்லாம் என் பொருள் எட்டிவிடும் என்று நீ நினைக்கும் அளவுக்கு
நிலைமை வந்துவிட்டதா என்று புலம்புவது என் காதில் விழுகிறது.
தாமஸ் டிரான்ஸ்டோமரின் கவிதையை மேற்கோளாக
காட்டி தன்னை விளக்க முற்படுகிறார் கவிஞர் சுகுமாரன். ஆனால் சுகுமாரனின் கவிதைகள்
அவரை ஒதுக்கவோ வெளியே தள்ளவோ முயலவில்லை. அது அவருக்குள்ளேயே விதைந்து, முளைத்து, நெறித்து,
தெறித்து விழுகிறது. வெளியே 'நிகழ்கால' கவிதையாய் விழாமல் உள்ளேயே 'வருங்கால' கவிதைக்கான விதையாய் விழுந்தது தான் அதிகம்
என்று தோன்றுகிறது. 'கவிஞர் இசைக்கு' என்ற குறிப்புடன் அவர் எழுதியிருக்கும்
கவிதையில்,
மகாகவி இசை நடைபெயர்ச்சி செய்கிறார், அவரோடு காற்றும் ஒளியும், புல்லும் புழுவும், புள்ளும் நாயும் பூனையும், மனிதர்களும் நடைப்பயிற்சி செல்கின்றன.
அவ்வப்போது பிசாசும் கடவுளும் மகாகவி இசையுடன் நடைப்பயிற்சி செல்வதாக எழுதுகிறார்.
"......
வீடு திரும்பும்போது
கூட வந்தது பிசாசென்றால்
மகாகவி கவிதை எழுதுகிறார்
தெய்வமென்றால்
இசை சண்டை போடுகிறார்."
என்று முடிக்கிறார். நான் இதை இப்படியும்
புரிந்து கொள்கிறேன். புனைவு என்பது பிசாசின் செயல், நேரடியான விவாதம் (சண்டை) என்பது கடவுளின் செயல். ஒரு கேள்வியும் எழுகிறது.
பிசாசும் கடவுளும் அல்லாமல் பூனையுடனோ நாயுடனோ திரும்பி வந்தால், மகாகவி இசை என்ன செய்திருப்பார்? கவிஞர் சுகுமாரனுக்கே வெளிச்சம்!
"ஹைக்கூ"வின் அழகியலை ஆச்சரியத்தை
சுகுமாரன் தான் கட்டமைக்கும் அனைத்து வடிவமைப்புக்குள்ளும் கச்சிதமாக
பொருத்துகிறார். அவருடைய கவிதைகள் முடிவதேயில்லை. ஒன்று அது எல்லையற்ற வெளிக்குள்
நம்மை உலவவிடும் அல்லது மீண்டும் தொடக்கத்துக்கே அழைத்துவந்து அந்தாதி விளையாட்டு
ஆடும். கவிதைகளின் இறுதி வரிகள் இத்தகைய அனுபவத்தைத் தான் தரும். 'ஒரு சொல் இருந்தால்' என்ற கவிதையை,
".....
ஆனால்
அந்த சொல் இருக்கிறதே
கரைக்குக் கடல் தூரத்தில்..."
என்று முடித்திருக்கிறார். அந்தக் கரைக்கும்
கடலுக்குமான தூரத்தில் நான் நெடுநேரம் தத்தளித்துக் கொண்டிருந்தேன். அதேபோல்
"ஆழல்" என்ற கவிதையை ' அடையாக்
கண்களுடன் ஆழலாம்'
என்று முடித்திருப்பார். மொழி இவரது செல்லக்
குழந்தையாகி,
மிக அழகாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. 'ஆழல்' என்ற சொல்லுக்காகவே சுகுமாரனைக் கொண்டாடலாம்.
படைப்பு தன்னை சாதாரணமாய் வெளிப்படுத்த
முனைந்தாலும்,
சுகுமாரனின் அசாதாரணம் விட்டுவிடவில்லை.
"எனினும்" கவிதை எளிமையாக சாதாரணமாக தொடங்குகிற போதே, இப்படி தான் முடியும் என்பதும் ஊகிக்க
முடிகிறது. ஆனால் இறுதிவரிக்கு முந்தைய வரியில் வெளிப்படுகிறது சுகுமாரனின்
அசாதாரணம். முன்னுரையின் இடையிலும், பின்னட்டைக் குறிப்பின் கடையிலும் வரும் வரிகளோடு, "எனினும்" கவிதையின் இறுதிப்பகுதியை
ஒப்பிட்டுப் பார்த்த நொடியில் சுகுமாரனின் அசாதாரண ஒளி பளிச்சிட்டது.
கவிஞரின் மீமெய்மையில் நம்முடைய பல
கோட்பாடுகள்,
புரிதல்கள் எல்லாம் கட்டுடைகின்றன. எல்லா
காலத்துக்குமான உண்மை என்ற ஒன்று இருக்கிறதா எனத் தெரியவில்லை. "வேதாந்திகளின் கைக்குச்
சிக்காத கடவுள் போல" உண்மை நம் அறிவுக்கு சிக்காமல் காலத்துக்கேற்ற வடிவத்தை
மாற்றிக் கொண்டு அலைகிறது. இதை புரியாதவர்கள் தேங்கிவிடுகிறார்கள், புரிந்தவர்கள் தொடர்ந்து பயணிக்கிறார்கள்.
"கடக்க முடியாமல் உறைந்தது நான்காம் காலம்", "நாளையை மறந்துவிட்ட நேற்றைய நேற்று", "செவிக்குத்தலின் அரை வெண்மை", "குடலிறக்கத்தின் வெளிர் மஞ்சள்", "திரைக்கடலாகும் குமிழ்", "பாயுமொளியாகும் வான்சுடர்" என பல்வேறு
உண்மைகளைத் தேடி தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார் சுகுமாரன்.
எல்லா கவிதைகளையும் பற்றிச் சொல்வது
நியாயமல்ல. ஒவ்வொருவருக்குமான உண்மைகளை, என் ஒருவனால் கண்டடைய முடியாது. அவரவர் உண்மைகள் அவரவருக்குத் தான்
புலப்படும். கவிதை என்பது நேரடி உரையாடல் அல்ல, மனதுக்குப் பிடித்த எதிர்பாலினத்தவரை மறைமுகமாக ரசிக்கும் கலையே கவிதை (என்பது
என் கருத்து).
".........
முந்தானைக் குடைநிழலும் தணிக்காத
வெயிலில் துவண்ட இடுப்புச் சிசு..." வை நான் ரசித்தது போன்று வேறு யாரும்
மறைமுகமாக ரசித்தார்களா என்பது எனக்குத்
தெரியாது,
மேலும் 'ஜகன்மோகினி'
என்ற கவிதை காதலும் காமமுமாக வெளிப்படுவதும்
எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை! இத்தனைக்கும் அது ராகத்தைப் பற்றிய கவிதை
என்ற குறிப்பும் தந்திருக்கிறார் கவிஞர். இப்படி ஒவ்வொருவரும் கவிஞர் சுகுமாரனின்
படைப்புலகுக்குள் மூழ்கி திளைக்கும் தருணங்கள் பல உண்டு.
காதல், தத்துவம்,
தனிமை, பொறுப்பு,
தன்னிலை என உணர்வுகளுக்குள் நீந்தவிடும்
கவிஞருக்கு என் சொற்களும் என் மொழியும் தக்க மரியாதையைச் செய்துவிடுமா என்றுத்
தெரியவில்லை. என்னைவிட சிறந்த மொழியில் பாராட்டுகளும் மதிப்புரைகளும்
விமர்சனங்களும் நிறைய அவர் நினைவுப் பைக்குள் நிறைந்திருக்கும், ஆனால் என் மொழியில் இதுவரை வந்திருக்காது
என்பது உறுதி! (சமாதானம் செய்து கொள்கிறேன்)
"வாழ்க நீ" என்று கவிஞர், காந்தியைக் கொண்டாடும் போது மெலிதாக எழும்
எதிர்நிலைக் குரல்,
"மரியாளின்
சுவிசேஷ'த்தில் சற்று ஆறுதல் அடைகிறது (சபரிமலை
சர்ச்சையையும் தொடர்புப்படுத்திக் கொண்டேன்). அவருடைய வரிகளை சற்று மாற்றி இந்த
உரையை(!) நிறைவு செய்யலாம் என்று நினைக்கிறேன்,
"சுகுமாரன்
ஒன்றும் செய்வதில்லை
சரி
சுகுமாரனையும்
ஒன்றும் செய்வதற்கில்லை!"
சிவராஜ் பாரதி
சிவராஜ் பாரதி