பக்கங்கள்

புதன், 9 ஜனவரி, 2019

ஒ ரு மு ன் னு ரை




நண்பர் ரவிகுமார் மலையாளத்தில் எழுதியுள்ள  எம்.டி.ராமநாதன் என்ற நீள் கவிதையின் தமிழாக்கம் நூல்வடிவில் வெளியாகிறது. மொழியாக்கம் மா. தக்ஷிணாமூர்த்தி. கேரளத்தின் புகழ்பெற்ற ஓவியரான நம்பூதிரியின் கோட்டோவியங்களும் நவீன ஓவியரான ஷிபு நடேசனின் தைல்வண்ண ஓவியமும் கவிதைத் தருணங்களை மேலும் துலங்கச் செய்பவை. முகப்பு வடிவமைப்பு பி. ஆர். ராஜன்.

நூலுக்கு எழுதிய முன்னுரையை இங்கே பகிர்கிறேன்.







                         சங்கீதம் ராமநாதம்

ர்நாடக இசையுலகில்  தான்தோன்றிக் கலைஞர்கள் சிலர் உண்டு. அவர்களில் ஒருவர் எம்.டி.ராமநாதன். தோற்றத்திலும் பழக்கவழக்கங்களில் வைதீகச்சாயல் கொண்டிருந்தவர். ஆனால் அவரது இசை எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காதது. தனித்த வழியில் உருவானது. அவரது குரல் செவிக்கினியது அல்ல. அவரது பாடல்முறை ஜனரஞ்சகமானது அல்ல. சங்கீதத்தால் வாழ்ந்தவர் அல்லர். சங்கீதத்துக்காக வாழ்ந்தவர். இந்த இயல்புகள்தாம் அவரைப் பாடகர்கள், கலைஞர்கள் நிறைந்த இசையுலகில் மேதையாக உயர்த்தியது.


வாழ்ந்த காலத்தில் ராமநாதன் போற்றப்பட்டதைக் காட்டிலும் விமர்சிக்கப் பட்டதே அதிகம். சங்கீதத்தால் வாழ்ந்தவராக மட்டுமேயிருந்தால் ஒருவேளை அவர் இந்த விமர்சனங்களுக்குச்  செவிசாய்த்திருக்கக் கூடும். சங்கீதத்துக்காக வாழ்ந்தவர்.எனவே விமர்சனங்களை, சரியாகச் சொன்னால் ஏளனங்களை, அவர் ஒருபோதும் பொருட்படுத்தவில்லை. தன்னுடைய கலை என்று நம்பிய ஒன்றை அடைவதற்கான நீண்ட பயணத்திலேயே அவரது சிந்தனையும் செயலும் ஆழ்ந்திருந்தன. பழைமைப் பிசுக்கேறிய சொற்கள் என்று தவிர்க்காமல் சொல்வதானால், அவரது வாழ்க்கை நாத யோகம். அவர் நாத யோகி.


பெரும் இடர்ப்பாடுகளைக் கடந்தே இந்த யோக வாழ்க்கையை ராமநாதன் அடைந்தார். அவரது அசுரக் குரல் இசைக்குப் பொருத்தமில்லாதது என்று இகழப் பட்டது. ' எதுக்குதேவேசா குழந்தையைப் போட்டுக் கஷ்டப் படுத்துறே?  ராமநாதனுக்குச் சாரீரமே வராது' என்று இந்த நீள்கவிதையில் ஓர் இடத்தில் வரும் வரிகள் ராமநாதன் இளமைக் காலத்தில் கேட்டவை. அவை அவரது இறுதிக் காலம்வரையும் பின் தொடர்ந்தன. அவரது முதல் கச்சேரியே 'பாதாளக் குரல்' காரணமாகத் தோல்வி அடைந்தது. 'எந்தக் குரலை இவர்கள் சங்கீத த்துக்கு ஒவ்வாதது என்று சொல்கிறார்களோ அதே குரலின் சங்கீதத்தை ரசிக்கும் காலம் வரும்' என்று தீவிரம் கொண்டதுதான் அவரது சங்கீத வாழ்க்கை. வெறும் மினுமினுப்பான  குரல் அல்ல இசை; அதற்கும் அப்பாற்பட்ட ஒன்றை வெளிக்கொணர்வது என்ற கலையின் மர்மத்தை அவரது இசை நிறுவியது. ராமநாதன் வெறும் பாடகராகவோ கலைஞராகவோ நிலைத்து விடாமல் நாத மேதையாக இன்று கருதப்படுகிறார். இசைத் தீவிரவாதிகளான ஒரு சாராரால் வழிபாட்டுக்குரிய பிம்பமாக (Cult figure ) போற்றப்படுகிறார். இந்தப் போற்றுதலில் ஓரளவுக்கு தன்னை உயர்ந்த ரசிகனாகக் காட்டிக்கொள்ளும் பாவனைக்கு இடமிருக்கிறது.எனினும் ராமநாதனின் மெய்யான ரசிகர்களுக்கு அவர் நிகரற்ற கலைஞர்.  தனித்துவம் மிக்க மேதை. ஒருவகையில் இந்த ரசிகர்களின் ஒருங்குணர்வுதான் இன்று எம்.டி. ராமநாதன் தொடர்ந்து நினைக்கப்படவும் அவரது இசை முன் எப்போதையும் விட இன்று  பரவலாகக் கேட்கப்படவும் சில கலைஞர்களால் பின்தொடரப்படவும் காரணங்கள் எனலாம். ராமநாதனின் இசை ஜனரஞ்சகமானது அல்ல; அவரும்  பெரும் புகழ் தேடியவரல்லர்; விருதுகளை வாங்கிக் குவித்தவரும் அல்லர். எனினும், ஆழங்களைத் தேடும் இசை ரசிகனுக்கு தான் பெற்ற அனுபவத்தை அளிக்கும் என்று அவர் விடாப் பிடியாகக் கொண்டிருந்த நன்னம்பிக்கைதான் அவரது வழிபாட்டுத் தகுதிக்கும் பரவலான ரசிக எண்ணிக்கைக்கும் ஆதாரம். இப்படிச் சொல்லலாம்; ராமநாதனின் இசை காலத்துடன் ஒட்ட ஒழுகியதல்ல; அதை முந்திச் சென்ற ஒன்று. துரதிர்ஷ்டவசமாக அவரது காலத்தில் அது இனங்காணப்படவில்லை.


எம். டி.ராமநாதனின் இசைக்குத் தமிழகத்தில் கிடைத்திருப்பதைவிட அதிக வரவேற்பு கேரளத்தில்தான். கேரளத்தில் பிறந்தவர் என்பதனால் இந்த வரவேற்போ என்று சந்தேகப் பட்டதுண்டு. ஆனால் கேரளக் கலைஞர் களால் அரிதாகவே பாராட்டப் பட்டிருக்கிறார். சில கச்சேரிகளில் அவருக்கு மிருதங்கம் வாசித்தவரான பாலக்காடு  மணி அய்யர் அவரது பாடும்முறையை  கடுமையாக விமர்சித்திருப்பதை இசை விமர்சகர் இந்திரா மேனோன் மேற்கோள் காட்டுகிறார் ( எப்படிப் பாடினாரோ?  பக்கம் 215 ).  இசையில் தோய்ந்தவர்களின் கருத்து இதுவென்றால் இசையைப் பிய்த்து அலசும் விமர்சகர்களின் எண்ணம் என்னவாக இருக்கும் என்பது எளிதில் ஊகிக்கக் கூடியதுதானேஒருவேளை முன் தலைமுறையின் உதாசீனத்தை உணர்ந்து கொண்ட கேரளத்தின் புதிய ரசிகத் தலைமுறை அவரைக் கொண்டாடுகிறதோ என்னவோ? இன்று பழைய நாட்களைச் சேர்ந்த வேறு எந்த இசைக் கலைஞரும் நினைவுகூரப்படுவதை விட அதிகமாக ராமநாதன் நினைவு கூரப்படுகிறார். அன்றைய நட்சத்திரக் கலைஞர்களுக்கு இருப்பதை விட இந்த துருவ நட்சத்திரத்துக்கு இன்று ஒளி அதிகம்.


இலக்கியச் சூழலில் பரவலாகப் பேசப்பட்ட கலைஞர் ராமநாதன் என்பதை வியப்புடன் உணர முடிகிறது. இசை ரசிகனாகவும் இலக்கிய வாசகனாகவும் என்னை மகிழ்வித்த  செயல் இது. 'ராமநாதன் பாடுகிறார்' என்ற சச்சிதானந்தனின் கவிதை, 'கேதாரம்' என்ற கிருஷ்ணமூர்த்தியின் நாவல், எம்.டி. ஆர். என்ற டாக்டர். மது வாசுதேவனின் தொகுப்புஅதன் ஆங்கில வடிவம். இவையெல்லாம் அவரை இலக்கியத்தில் நிறுவியிருப்பவை. அவற்றின் நீட்சியாகவும் அவற்றைக் கடந்த ஒன்றாகவும் உருவானதுதான் பி. ரவிகுமாரின் 'எம்.டி.ராமநாதன் ' நீள் கவிதை. நான் அறிந்த அளவில் ஓர் இசைக் கலைஞரை மையமாக்கி எழுதப்பட்ட கவிதை இதுவாகவே இருக்கலாம். அசோக் வாஜ்பாயின் நீண்ட கவிதை ஒன்றின் பகுதியில் ஹிந்து ஸ்தானி இசைக்கலைஞர் குமார் கந்தர்வாவைப் பற்றிய பகுதி உள்ளது என்பதும் நினைவுக்கு வருகிறது. சௌதாமினி இயக்கிய பித்ருசாயா - முன்னொடிகளின் நிழல்கள்' என்ற ஆவணப்படமும் நினைவில் புரள்கிறது. இந்த அளவுக்குப் பிற துறைகளை ஈர்த்த இன்னொரு இசைக் கலைஞர் ஏறத்தாழ இல்லை என்றே தோன்றுகிறது. இன்னொரு வியப்பையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். எம்.டி.ராமநாதனின்  தீவிர ரசிகர்களில் பலரும் இடதுசாரிச் சிந்தனையைப் பின்பற்றுபவர்கள். அவர்களை ஈர்ப்பது அந்த இசையின் எந்தக் கூறுஒருவேளை இசை சென்று முடியுமிடத்தில் எஞ்சுவது மானுட இணக்கம் என்ற தெய்வீக குணமாக இருக்குமோ?


ரவிகுமார் பத்திரிகையாளர். கவிஞர். நுட்பமான வாசகர். இவையெல்லா வற்றையும் விட முதன்மையானது தேர்ந்த இசை ரசிகர். அதை விட முதன்மையானது எம்.டி. ராமநாதனின் தீவிர ரசிகர். ரவிகுமாரின் இந்த ராமநாதப் பற்றுத்தான் என்னை அவருக்கு நெருக்கமாக்கியது. எம். டி. ராமநாதனைப் பற்றி  நான் எழுதிய கட்டுரை ஒன்றுதான் ரவிகுமார் என்னைப் பொருட்படுத்தக் காரணம். அதுதான் தோழமை யாகவும் இந்த நூலுக்கு முன்னுரை எழுதுவதற்கான தகுதியாகவும் மாறியிருக்கிறது. ராமநாதனின் இசை ரசிகனாக இல்லாமலிருந்தால் இந்த நட்பு ஏற்பட்டிருக்காது என்று உறுதியாகவே நம்புகிறேன். கூடவே எங்களை இணைத்தவர் எம்.டி. ஆர் என்றும் பெருமைகொள்ள விரும்புகிறேன்.


எம்.டி.ராமநாதன் வாழ்க்கைச் சம்பவங்களை மையப் பொருளாகக் கொண்ட இந்த நீள் கவிதை 'கலாகௌமுதி' வார இதழில் தொடராக வெளிவந்தது. கவிதையொன்று தொடராக வார இதழில் வெளிவருவதும் அதை வாசகர்கள் வரவேற்பதும் தமிழ் வாசகனாக எனக்கு அரியதாக மட்டுமல்ல; அதிர்ச்சியளிக்கும் நிகழ்வாகவே தென்பட்டது. பின்னர் அதுவே நூல் வடிவில் வெளியானது அதிர்ச்சியின் அளவைக் கூட்டியது. நிலநடுக்கம் போன்ற அபூர்வ நிகழ்வு என்று ஒதுக்கி விடமுடியாமல் அடுத்தடுத்து வந்த இந்தி , ஆங்கில மொழிபெயர்ப்புகள் திகைப்பை ஏற்படுத்தின. திகைப்பிலிருந்து மீள நான் கண்ட வழி இதன் தமிழாக்கத்தை மேற்கொள்வது என்பதுதான். ஆனால் என்னை விட அதிர்ஷ்டசாலியான மா. தக்ஷிணாமூர்த்தி ஒரே இருப்பில் தமிழாக்கத்தைச் செய்து முடித்தார். அவரே ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்தார்.  'எழுத்து' இதழில் வெளியான கவிதைகள் மூலம் அறிமுகமானவர் மா. தக்ஷிணாமூர்த்தி. அவரது வெளிவந்த ஒரே தொகுப்பான 'திவ்ய தர்சனம்' தமிழின் முதல் அகத்திணைக் கவிதைகள் என்றும் எண்ணுகிறேன். இந்த மொழியாக்கம் மீண்டும் அவர் தமிழ்க் கவிதைக்குள் பேசப்படுவதற்கான வாய்ப்பு.  


மலையாளத்தில் எழுதப்பட்ட கவிதை. இதற்கு உள்ளேயும் வெளியேயும் புலப்படும் தமிழ்த் தொடர்புகள் குறிப்பிடத் தகுந்தவை. ராமநாதன் வாழ்க்கையின் பெரும்பகுதி சென்னையிலும் தமிழ்ச் சூழலிலும் கழிந்தவை. அவரது வீட்டு மொழி தமிழ். வடமொழியிலும் தெலுங்கிலும் கீர்த்தனைகளையும் சங்கீத உருப்படிகளையும் எழுதியிருக்கிறார். எனினும் அவற்றின் உள்ளோட்டத்தில் தமிழ்ப் பாடல்களின் மரபையும் இலக்கணத்தையும் காணமுடியும். 'ஹரியும் ஹரனும் ஒன்றே என்று அறியாதாரும் உளரோ?' என்ற அடாணா ராக சொந்த சாகித்தியத்தில் தமிழ்ப் பாடல்களின் தொடர்ச்சியையும் ' வருகலாமோ அய்யா' என்ற மாஞ்சி ராக நந்தன் சரித்திரக் கீர்த்தனையைப் பாடும் விதத்தில் தமிழின் நெகிழ்வையும் எளிதில் உணரலாம்.


ரவிகுமார் நவீன தமிழ்ப் படைப்பாளிகளை வாசித்து அறிந்திருப்பவர்.  அதற்கு முகாந்திரமாக இருந்தது சக திருவனந்தபுரவாசியான நகுலனின் தொடர்பு என்பது என் அனுமானம். இந்த நீள் கவிதையிலும் நகுலனின் சாயலைக் காண முடியும். தமிழில் எதிர்க் கவிதையை முன்னெடுத்தவர் நகுலன் என்பது என் எண்ணம். கவிதைக்கான சொற்களோ , கவிதையைத் துலக்கிக் காட்டும் அணிகளோ இல்லாமல் எளிய உரைநடையில் கவிதையின் சாத்தியத்தைக் கொண்டுவர முயன்றவர் அவர். 'மழை மரம் காற்று ' என்ற நகுலனின் நீண்ட கவிதையை எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். ரவிகுமாரின் கவிதையில் அதன் லேசான பாதிப்பைக் காணமுடிகிறது. இதில் எந்தச் சொல்லும் கவித்துவத்தில் ஊறவைத்து எடுத்தவையல்ல.மறைபொருள் கொண்டவையல்ல. இயல்பான உரையாடலில் புழங்குபவைதாம் கவிதையைக் கட்டமைக்கின்றன. சொற்களைக் கடந்த ஒன்றைக் கவிதைக்குள் தொனிக்கச் செய்கின்றன. ஒருவகையில் ராமநாதனின் இசையைப் போன்றதுதான் இந்தக் கவிதையின் உயிர்க்கூறும். வெறும் ஸ்வர நிரவல்கள் அல்ல; அவற்றின் உள் ஓசைதாம் சங்கீதம் என்பதுபோல. சொற்களின் சேர்க்கையல்ல; அவற்றின் பொருள்முயக்கம்தான் இங்கே கவிதையாகிறது.


இந்த நூலின் மொழியாக்கப் பிரதி ஏறத்தாழப் பத்து ஆண்டுகளாக என் கைசமே இருந்தது. மொழிபெயர்ப்பு முடிந்த கையோடு நூலாக வெளியிட முயற்சித்தேன்.எனினும் வெவ்வேறு காரணங்களால் காரியம் கைகூட வில்லை. இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்து வாசிக்கப்பட்ட பிரதியை தமிழ் வாசகர்கள் முன் வைக்காமலிருப்பது முறையல்ல என்ற ஆதங்கத்தை காலச்சுவடு இப்போது தீர்த்து வைத்திருக்கிறது. அதற்காகக் கண்ணனுக்கு மனமார்ந்த நன்றிகள். கேரளத்தின் புகழ் பெற்ற ஓவியரான நம்பூதிரியின் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. முகப்பை பி.ஆர். ராஜன் வடிவமைத்துள்ளார். இரு ஓவியர்களுக்கும் நூலுருவாக்கத்தில் உதவிய கலா முருகன், ஹெமிலா இருவருக்கும் மனமார்ந்த நன்றி.


திருவனந்தபுரம்                                                        சுகுமாரன்
25 டிசம்பர் 2018

ஓவியம் : நம்பூதிரி




                            ஓவியம்: ஷிபு நடேசன்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக