சேரன் கவிதைகள் - மலையாளத்தில்
2017 இல் மறைந்த கவிஞர் ஓ என்
வி குரூப்பின் பெயரில் துபாய் மலையாளிகள் கவிதைக்கான சர்வதேச விருது ஒன்றை ஏற்படுத்தியிருந்தார்கள்.
முதல் விருது பெறும் கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நண்பர் சேரன். அதையொட்டி விழாவில்
வாசிக்கவும் அறிமுகக் குறி்ப்பில் இடம் பெறவும் எனச் சேரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க
அவருடைய கவிதைகள் சிலவற்றை மலையாளத்தில் மொழிபெயர்க்கும்
முயற்சியில் ஈடுபட்டேன். நான்கோ ஐந்தோ கவிதைகளை மொழியாக்கம் செய்தேன். அவற்றுள் விருது
விழா மேடையில் வாசிக்கப்பட்ட கேள்வி என்ற கவிதைக்கான மொழிபெயர்ப்பு
எல்லார் கவனத்தையும் ஈர்த்தது. அதைக் கருத்தில் கொண்டு மேலும் சில கவிதைகளை மொழிபெயர்த்து
மலையாளத்தில் ஒரு தொகுப்புக் கொண்டுவருவது சாத்தியமா என்று சேரன் கேட்டிருந்தார். அன்றைய மனநிலையில் சாத்தியம் என்று ஒப்புக்கொண்டேன்.
ஆனால் அது நடைமுறையில் எளிதாக இருக்கவில்லை. முன்பே ஏற்றுக்
கொண்டிருந்த பணிகள், ‘பெருவலி’ நாவலுக்கான தரவுச் சேகரிப்பு, களப்பயணம், கொரியாவில் எழுத்தாளர் உறைவிட வாசம், நாவல் எழுத்து என்று தொடர்ந்த வேலைகளால்
மலையாள மொழியாக்கம் பின்னுக்குச் சென்றது.
இது தொடர்பாகச் சேரன் விசாரித்த சந்தர்ப்பங்களிலெல்லாம் குற்ற உணர்வு மேலிட்டது.
அதை மறைத்துக் கொண்டு இந்த மாத இறுதிக்குள் முடித்து விடலாம்,. இந்த ஆண்டு முடிவதற்குள்
முடித்து விடலாம் என்று சாக்குச் சொல்லிக்கொண்டிருந்தேன். எனினும் திட்டம் ஓர் அங்குலம்
கூட முன்னேறவில்லை. சேரன், அம்புலிமாமாக் கதையில் வரும் விக்கிரமாதித்தியனைப்போல மனம்
தளராமல் காத்திருந்தார்.
இதற்கிடையில் கோழிக்கோடு கடற்கரையில் நடைபெற்ற கேரள இலக்கிய
விழாவில் பங்கேற்க வந்து நட்புவலை வீசிக் கணிசமான மலையாளக் கவிஞர்களைப் பிடித்து வைத்திருந்தார்
சேரன். அனிதா தம்பி, ஓ பி சுரேஷ், டி அனில்குமார் போன்ற கவித் தோழர்களின் ஒத்துழைப்புடன்
சில கவிதைகளுக்கு மலையாள உருமாற்றம் பெற்றிருந்தார். அவை உதிரி எண்ணிக்கையிலானவை; ஒரு
தொகுப்பாகத் தேறும் அளவு இல்லாதவை. எனவே மீண்டும் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட நேர்ந்தது.
இந்த முறை அனிதா தம்பி துணைக்கு வந்தார். ‘கவிதைகளை ஒருவரே மொழியாக்கம் செய்வது விரைவான
பலனைத் தராது. தோழமைக் கவிஞர்கள் சிலரைத் துணைக்கு அழைப்போம். கவிதைகளைப் பங்கிட்டு
அளிப்போம். மலையாள மொழிபெயர்ப்புக் கைக்குக் கிடைத்ததும் இருவரும் மேற்பார்வை யிட்டுச்
செம்மைப்படுத்தி இறுதி வடிவத்தை உருவாக்கலாம்’. இப்படித் திட்டமிட்டதும் காரியம் சீக்கிரம்
கைகூடி விடும் என்று தோன்றியது. அனிதா தம்பி ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் தலைமைப் பதவியில்
இருப்பவர். பிற கவிஞர்களும் அவரவர் நிலையில் பணி நெருக்கடி மிகுந்தவர்கள். திட்டம்
மீண்டும் சண்டிக் குதிரையானது. இரண்டு ஆண்டுகள் பாய்ந்து ஓடின. பதிப்பாளரான டி சி புக்ஸிடம் தொகுப்பைத் தருவதாக
வாக்குக் கொடுத்திருந்த சேரன் இருதலைக் கொள்ளி எறும்பானார்.
ஆனாலும் இருவருக்குமான தொலைபேசி உரையாடல்களில்
‘சுகு, அவசரமொண்டும் இல்லை. எப்போ முடியுமோ அப்போ வரட்டும்.ரவி டி சி, சச்சிதானந்தன்
ரெண்டு பேரிடையும் நான் சொல்லிக் கொள்ளுகிறேன்’ என்று சொல்வது குற்ற உணர்ச்சியைக் கிளப்பும்;
சேரனின் ராஜதந்திரமும் விளங்கும். ஒரு தேசத்தின் ராஜ தந்திர நிபுணர் ஆக இருக்க வேண்டியவர்
பேராசிரியராக இருக்கும் துரதிர்ஷ்டத்தை யோசித்து
வருத்தமும் ஏற்படும். இதை முடித்து விட்டுத்தான் அடுத்த ஜோலி என்று சபதம் மேற்கொள்ளத்
தூண்டும். அதுவும் எதிர்பார்த்த விளைவைத் தரவில்லை. எனக்கு வேலைப்பளு இல்லாதபோது அனிதா
அகப்பட மாட்டார். அவர் தேடும்போது நான் சிக்க மாட்டேன். இந்த இழுபறி நிலையை இருவரும்
சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சந்தித்துப்
பேசி முடிவுக்குக் கொண்டு வந்தோம். முன்பே மொழியாக்கம் செய்யச் சொல்லிக் கேட்டிருந்த
கவிஞர்களிடமும் புதிதாகச் சிலரிடமும் பொறுப்பை ஒப்படைத்தோம். விளைவு உற்சாகம்
அளிப்பதாக
அமைந்தது. ஒரு மாதத்துக்குள்ளாக ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் மலையாள வடிவம் பெற்றன.
ஒரு தொகுப்புக்கு ஐம்பது கவிதை தாராளம் என்று எண்ணியிருந்த நிலையில்
மேலும் கவிதைகள் மொழியாக்கம் பெற்றன. பி.ராமனும் வி என் கிரிஜாவும் அன்வர் அலியும்
அபார வேகத்தில் புதிய மொழியாக்கங்களை அளித்தனர். ஏறத்தாழ எழுபத்தைந்து கவிதைகள் மலையாளத்தில்
பெயர்க்கப்பட்டன. அது தொகுப்புப் பணியை மேலும் சிக்கலாக்கியது. ஒருவர் தேர்ந்தெடுத்திருந்த
கவிதையையே ஒன்றுக்கு மேற்பட்டவர்களும் மொழியாக்கம் செய்திருந்தார்கள். யாருடைய மொழிபெயர்ப்பைச் சேர்ப்பது, யாருடையதை நீக்குவது?
கவிஞர்களின் சாபத்துக்கு ஆளாகாமல் எப்படி இதைச் சமாளிப்பது? எண்ணிக்கையை எப்படிச் சீராக்குவது? இந்தக் கேள்விகள் குழப்பத்துக்குள்ளாக்கின? மூத்த
கவிஞர்களான ஆற்றூர் ரவிவர்மாவும் சச்சிதானந்தனும் ஏற்கனவே சேரனின் கவிதைகளை மலையாளத்தில்
மொழியாக்கம் செய்து வெளியிட்டிருந்தார்கள். தமிழ்க் கவிதைகளின் மொழிமாற்றத் தொகுப்பான
புது
நானூறுக்காக சேரனின் நான்கு கவிதைகளை ஆற்றூர் மலையாளப் படுத்தியிருந்தார்.’
பல
லோக கவிதை’ திரட்டில் சச்சிதானந்தன் 22 கவிதைகளை மொழிபெயர்த்திருந்தார். இந்தக்
கவிதைகளைத் தொகுப்பில் சேர்க்க வேண்டுமா? என்ற யோசனை முளைத்தது.
ஆற்றூரும் சச்சி மாஷும் மூத்த கவிஞர்கள். மற்றவர்கள் அனைவரும்
அவர்களுக்குப் பின்வந்த இரண்டு தலைமுறையைச் சேர்ந்தவர்கள். சச்சிமாஷின் கவிதையில் சம்ஸ்கிருதச்
சொற்களின் ஆதிக்கம் இருந்தது. ஆற்றூரின் கவிதையில் தமிழுக்கு இணையான மலையாளச் சொற்கள்
இருந்தன. சச்சிதானந்தன் மொழியாக்கத்தில் சேரன் பறக்கவிட்ட வண்ணத்துப் பூச்சி ‘சித்ர
சலப’மாக வளைய வந்தபோது ஆற்றூர் ரவிவர்மாவின் மொழிமாற்றத்தில் அது ‘பூம்பாற்ற’யாகச் சிறகடித்தது.
இவற்றில் மொழிச் சீர்மையைக் கொண்டு வருவது இயலுமா? என்ற சந்தேகமும் எழுந்தது.
எனினும் ஆற்றூர் ரவிவர்மா, சச்சிதானந்தன் இருவரின் மலையாள மொழிபெயர்ப்புகள்
இல்லாமல் சேரன் தொகுப்பைக் கொண்டு வருதல் கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டோம்.சேரனை
மலையாள வாசகர்களிடம் முதலில் அறிமுகப்படுத்தியவர் ஆற்றூர் ரவிவர்மா. அவரைச் சர்வதேசக்
கவிஞராக முன்வைத்தவர் சச்சி மாஷ். அவர்களது பங்களிப்பு அவசியம் சேர்க்கப்பட வேண்டும்
என்ற முடிவுக்கு அனிதாவும் நானும் வந்தோம். இதிலும் சிக்கல் இருந்தது. மாத்ருபூமி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சச்சிதானந்தனின் பல லோக கவிதை தொகுப்பில் இருபத்திரண்டு கவிதைகள் உள்ளன. அவற்றில் இரண்டு
கவிதைகள் வெவ்வேறு தலைப்புகளில் வெவ்வேறாகவே மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. அதாவது
இரண்டு கவிதைகளுக்கு நான்கு மொழிபெயர்ப்பு வடிவங்கள். அவற்றில் இரண்டை மட்டும் தேர்ந்தெடுத்தோம்.
சச்சிதானந்தன் சில கவிதைகளைச் சேரனுடன் கலந்து பேசியும் சிலவற்றை ஆங்கிலத்திலிருந்து
அப்படியேயும் மொழிபெயர்த்திருந்தார். அவற்றைத் தமிழ் மூலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது
பொருட் பேதங்கள் தெரியவந்தன. அதை அவரிடம் சொல்லத் தயக்கமாக இருந்தது. மொழிபெயர்ப்பின்
சீரமைப்புக்கு அதை எடுத்துச் சொல்வது தவிர்க்க இயலாததாகவும் இருந்தது. நேர்ச் சந்திப்பில்
இதைச் சுட்டிக் காட்டியதும் சச்சி மாஷ் வெளிப்படுத்திய பெருந்தன்மை நெகிழச் செய்தது.
தமிழ் மூலத்தை வாசித்துக் காட்டச் செய்தார். பொருளை உள் வாங்கினார். ஆங்கிலம் வழி மேற்கொண்டதால்
புகுந்து விட்டிருந்த மொழிக்குறைகளைத் திருத்திக் கொடுத்தார். அவ்வாறு ஒன்பது கவிதைகள்
இறுதி வடிவம் பெற்றன. இந்த மொழியாக்கப் பணியின்போது அனிதாவுக்கு எனக்கும் கிடைத்த மறக்க
முடியாத அனுபவம் சச்சி மாஷின் இந்த வாத்சல்யம் நிறைந்த ஒத்துழைப்பு.
சச்சிதானந்தனின் செயல், மொழியாக்கத்தின் சீரமைப்புக்குத் துணை
செய்தது. ஆற்றூர் ரவிவர்மா தமிழ் மூலத்திலிருந்தே சேரன் கவிதைகளை மலையாளத்துக்கு மாற்றியிருக்கிறார்.
இப்போது சச்சிதானந்தனின் திருத்தப்பட்ட மொழியாக்கங்களும் தமிழ் மூலத்தை ஒட்டியே மாற்றப்பட்டிருக்கின்றன.
எனவே சேரனின் இதர கவிதைகளையும் தமிழ் மூலத்தை ஒட்டியே சீரமைப்பது என்று முடிவு செய்தோம்.
மலையாளக் கவிஞர்களான அன்வர் அலி, பி.ராமன், வி.எம், கிரிஜா, பி.பி.ராமச்சந்திரன் ஆகியோருடன்
தொடர்ந்து நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களும் மின் அஞ்சல், வாட்ஸ் ஆப் பரிமாற்றங்களும்
கவிதைகளைச் செம்மைப் படுத்த உதவின. இந்தக் கவிஞர்களின் ஆர்வத்தையும் வேகத்தையும் பார்த்தபோது
அடுத்த கவிதையைத் தமிழில் எழுதுவார்களோ என்று எனக்குச் சந்தேகம் வந்தது.
ஏற்கனவே மலையாளத்தில் மொழிபெயர்த்து வைத்திருந்த ஐந்து கவிதைகளில்
நான்கை என்னால் மீட்க முடியவில்லை. முன்சொன்ன கேள்வி என்ற கவிதை மட்டும் கணினிச் சேமிப்பில்
கிடந்தது. அத்துடன் அனிதாவுடன் அமர்ந்து உரையாடி இருவருமாகச் சேர்ந்து 8 கவிதைகளை மலையாளத்துக்கு
மாற்றினோம். இதில் பெரும் பங்கு அனிதாவுடையது. இருவரும் ஏழெட்டு முறைகளுக்கு மேல் பல
மணி நேரங்கள் ஒன்றாக அமர்ந்து பேசி 63 கவிதைகளைத் தேர்ந்தேடுத்துத் தொகுத்தோம். அவற்றை
மொழிபெயர்ப்பாளர்களின் மொழி நடை சிதையாமல் செம்மைப் படுத்தினோம். அவற்றின் இறுதிப்
படியைப் பார்வையிட்ட சச்சிதானந்தன் ‘ பலர் மொழிபெயர்த்தவை என்று சொல்ல முடியாதவகையில்
மலையாள மொழியாக்கம் அமைந்திருக்கிறது’ என்று மின் அஞ்சலில் பாராட்டியது மகிழ்ச்சி அளித்தது.
சேரன் கவிதைகள் மலையாளத் தொகுப்புப் பணி, மொழிபெயர்ப்ப தொடர்பாகச்
சில அம்சங்களை, மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் கவனத்துக்குக் கொண்டு வந்தன. மொழியாக்கம்,
மொழிபெயர்ப்பு என்பவறை விடவும் மொழிமாற்றம் என்ற வினைப்பெயரே பொருத்தமாகப் பட்டது.
தமிழிலும் மலையாளத்திலும் இன்றும் புழக்கத்திலிருக்கும் சொற்களை அப்படியே வைத்துக்
கொண்டோம். மலையாளத்தில் வாசித்தாலும் தமிழ் வாசிப்பின் பொருளைத் தரும் சொற்களைத் தமிழாகவே
பயன்படுத்தினோம். சம்ஸ்கிருத வார்த்தைகளைக் கூடுமானவரை தவிர்த்தோம். கவிதை வரிகளையும்
தமிழில் உள்ளவைபோலவே எடுத்தாண்டோம். இந்தச் செயல்கள் மூலத்திலிருந்து அதிகம் விலகி
விடாத மொழியாக்கப் பிரதியை அளித்தன.
தமிழ் மலையாள மொழிபெயர்ப்பில் இந்த முயற்சியை முன்னெடுத்தவர்
ஆற்றூர் ரவிவர்மா. மொழியாக்கம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றுக்குப் பதிலாக மொழிமாற்றம்
என்பதை முன் மொழிந்தவரும் அவரே. எனவே அவருக்கு மறைமுகமான அஞ்சலியாகவும் இந்த முயற்சி
அமைந்தது. இந்நூலுக்கு சச்சிதானந்தன் எழுதிய முன்னுரைக் குறிப்பு ஆற்றூரின் கவிதை
– மறுவிளி – உடன் தொடங்குகிறது. அந்தத் தற்செயல் ஒற்றுமை மகிழ்ச்சியளித்தது. அந்த மகிழ்ச்சியின்
விளைவாகவே நூலுக்கான தலைப்பையும் சேரன் கவிதை
ஒன்றுக்கு அளித்த மொழிமாற்றத்திலிருந்து எடுத்துக் கொண்டோம். ‘காற்றில் எழுதல் ( காற்றில்
எழுதுதல் ). இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக அமைந்தது நண்பர் சேரனின் சமர்ப்பணம். தனது
கவிதைகளின் மலையாள மொழியாக்கத் தொகுப்பை அவர் ஆற்றூர் ரவிவர்மாவின் நினைவுக்கே காணிக்கையாக்கியிருக்கிறார். அது மிகவும்
பொருத்தமானது. ஈழத்தின் மானுட அவலம் பற்றி மலையாளத்தில் எழுதிய முதல் கவிஞர் ஆற்றூர்
ரவிவர்மா. அந்த வகையில் இது ஒரு கைம்மாறு காட்டலும்தான்.
ஆற்றூர் ரவிவர்மா, சச்சிதானந்தன், சி.எஸ்.வெங்கிடேசுவரன், வி.எம்.கிரிஜா,
அன்வர் அலி, பி.பி.ராமச்சந்திரன், பி.ராமன், அனிதா தம்பி, ஓ.பி.சுரேஷ், டி.அனில்குமார்,
சுகுமாரன் ஆகிய பதினொரு மொழிபெயர்ப்பாளர்களின் உற்சாகக் கூட்டுறவுடன் சேரனின் அறுபத்து
நான்கு கவிதைகள் ‘காற்றில் எழுதல்’ மலையாளத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. தமிழ் மூலத்தை
அடிப்படையாகக் கொண்டே இந்த மலையாள ஆக்கங்கள் உருவாயின. இந்த நூலாக்கத்தில் ஒவ்வொருவருடைய
பங்கும் முக்கியமானது. நூலை டி சி புக்ஸ் வெளியிடுகிறது. தமிழ்க் கவிஞர் ஒருவர் மலையாளத்தில்
இத்தனை இயல்பாகவும் மதிப்புடனும் வரவேற்கப்படுவது இது முதன்முறை என்று எண்ணுகிறேன்.
மொழியைக் கடந்தது கவிதை என்பதற்கு இது அசலான எடுத்துக் காட்டு.
@