பக்கங்கள்

திங்கள், 13 ஜனவரி, 2020

பாப்லோ நெரூதா கவிதைகள் --- இரண்டாம் பதிப்பின் முன்னுரை



பாப்லோ நெரூதாவின் மறைவுக்கு பின்பு எழுதிய நினைவுக் குறிப்பில் கவிஞரும் நெரூதாவின் மாணவரும் நண்பரும் அண்டை வீட்டவருமான நிக்கனார் பாரா இவ்வாறு எழுதினார்: ‘ நான் நெரூதாவின் திடீர் வாசகன் அல்லன். பகுத்தறியக் கற்றுக்கொண்டது முதலே நெரூதா என்னை ஈர்த்திருந்தார். ஒருமுறையாவது அவரைப் பற்றிச் சிந்திக்காமல் ஒருநாளும் கடந்து சென்றதில்லை’.



பாராவின் தகுதியோ நெரூதாவுடன் அவருக்கிருந்த அணுக்கமோ எனக்கு இல்லை. எனினும் மேற்கோள் வாசகங்களை என்னுடையவையாகவும் சொல்லிக் கொள்ளும் உரிமை இருப்பதாக நம்புகிறேன். இந்த நூலின் முதல் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் ‘கவிஞனாக எனது ஆதார அக்கறைகளைப் பக்குவப்படுத்தியதிலும் மனிதனாக எனது தார்மீக உணர்வுகளைக் கூர்மைப்படுத்தியதிலும் செல்வாக்குச் செலுத்திய ஆளுமைகளில் நெரூதாவும் ஒருவர்’ என்று உரிமை பாராட்டிக் கொண்டதும் அந்த நமபிக்கையில்தான். பாராவைப்போல ஒரு நாளைக்கு ஒருமுறை நினைக்கிறேனோ இல்லையோ கவிதையெழுத்தின் தருணங்களிலும் கவிதை பற்றிச் சிந்திக்கும் வேளைகளிலும் கவிதை மீதான உரையாடல் பொழுதுகளிலும் நெரூதா நினைவு எழாமல் இருந்ததில்லை.



இந்த நூலின் முதல் பதிப்பு 2005 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதுவரை நெரூதா மீதும் அவர் கவிதைகள் மீதும் கொண்டிருந்த மோகம் மொழியாக்கப் பணிக்குப் பின்னர் முன்னை விடவும் அதிகமாயிற்று. எப்போதும் தொடர்ந்து வாசிக்கும் ஆசைக்குரிய கவிஞராக  நிலைபெற்றார். இது என் தனியனுபவம் மட்டுமல்ல. உலகெங்குமுள்ள கவிதை வாசகர்களின் பொது அனுபவம்.



2004 இல் நெரூதாவின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டது. அதையொட்டி அவரது பெயர் இலக்கிய முக்கியத்துவம் பெற்றது. அவரது கவிதைகள் புதிய பதிப்புகளைக் கண்டன. புதிய மொழிபெயர்ப்புகளும் மேற்கொள்ளப்பட்டன. மறைவுக்குப் பின்னான கவிதைகள் தொகுக்கப்பட்டன. அதுவரை வெளியாகியிராத கவிதைகள் கண்டுபிடிக்கப் பட்டன. நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் அவரது வாழ்க்கை வரலாறு ‘பாப்லோ நெரூதா – வாழ்வுக்கான வாஞ்சை’  ஆடம் ஃபெயின்ஸ்டீனால் எழுதி வெளியிடப்பட்டது. நெரூதாவின் மனைவி மெட்டில்டே உருஷியா எழுதிய ‘பாப்லோ நெரூதாவுடன் என் வாழ்க்கை’ என்ற தன் வரலாற்று நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளிவந்தது. நெரூதாவின் மரணத்தைத் துப்பறியும் கதையோட்டமாக விவரிக்கும் ராபர்ட்டோ அம்புயேரோவின் நாவல் – ‘தி நெரூதா கேஸ்’ – வெளியிடப் பட்டது. 2004 - 2019 ஆண்டுகளின் இடைவெளியில் எனக்கு வாசிக்கக் கிடைத்தவை இந்த நூல்கள். இவற்றின் உள்ளடக்கங்கள் நெரூதா மீதான என் பித்தை முற்றச் செய்தன.



மானுடப் பெருவாழ்வின் ஒவ்வொரு அணுவையும் உயிர்ப்புடன் சித்தரித்த, முடிவற்ற காலத்தின் ஒவ்வொரு நொடியையும் கவிதையின் ஓயாத் துடிப்பாக்கிய, பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவையும் தனது அசைவாக மாற்றிக் காட்டிய பேராளுமையின் பிடிக்குள் சிக்குண்டு கிடப்பது பேறல்லவா? அந்தப் பேறு வாழ்நாள் முழுவதும் தொடரவேண்டும் என்பதே என் பேராசை. இந்த இரண்டாம் பதிப்புக்கான தூண்டுதல் அந்தப் பேராசையே.



‘எந்த மொழியாக இருந்தாலும் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான கவிஞர்’ என்று பாப்லோ நெரூதாவை மதிப்பிட்டார் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ். இருபதாம் நூற்றாண்டில் மட்டுமல்ல;  இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் அவரே மகத்தான கவிஞர். நெரூதா மறைந்து ஏறத்தாழ அரை நூற்றாண்டு ஆகிறது. இந்தக் கால அளவில் அவர் அளவுக்கு உலகளாவிய செல்வாக்குப் பெற்ற ஒரு கவிஞரின் பெயரைக் கேள்விப்படவில்லை. அவரை விடவும் தேர்ந்த மொழியிலும் நுண்ணிய தளங்களிலும் புதுமை நோக்கிலும் எழுதிய  கவிஞர்களும் எழுதும் கவிஞர்களும்  வெவ்வேறு மொழிகளில் இருக்கிறார்கள். ஆனால் உலகம் முழுவதும் கொண்டாடும் கவிஞராக ஒருவரும் இல்லை. இது அவரைக் காலத்தின் கொடையாகப் போற்றச் செய்கிறது.

பைபிள் தொகுப்பாசிரியர்களுக்குப் பின்னர் மிக அதிகமான மொழிகளிலும் மிக அதிகமான முறையும் மொழிபெயர்க்கப்பட்ட படைப்பாளி நெருதாவாகத்தான் இருக்க முடியும். இன்று கிடைக்கும் ஆங்கில மொழிபெயர்ப்புகளை மேலோட்டமாகப் பார்த்தாலேயே இது விளங்கும். குறைந்தது நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் நெரூதாவின் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்கள். இலான் ஸ்டாவன்ஸ் தொகுத்துப் பதிப்பித்திருக்கும் ‘பாப்லோ நெரூதாவின் கவிதை’ பெருந்திரட்டில் முப்பத்தேழு மொழிபெயர்ப்பாளர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்களில் தொண்ணூற் றொன்பது வீதமானவர்களும் கவிஞர்கள். கவிஞர்கள் என்ற தகுதியால் புகழ்பெற்றவர் கள். கவிஞர்களால் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட கவிஞர் பாப்லோ நெரூதாவாக  இருக்கலாம். இது அவரது கவியிருப்புக்கு மதிப்பைக் கூட்டுகிறது. கூடவே கவிதை களுக்குப் பல வண்ணங்களையும் அளிக்கிறது. தனது கவிதைகளுக்குப் பலருடையதும் பலவகையுமான  மொழியாக்கங்கள் வருவதை நெரூதாவும் மனமுவந்து அனுமதித்திருக்கிறார். சில கவிதைகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆங்கில ஆக்கங்கள் உருவாகியுள்ளன. அவை ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டிருப்பதும் கவனத்துக்குரியது.



‘நான் சில விஷயங்களை விளக்குகிறேன்’ என்ற நெரூதாவின் பரந்த கவனம் பெற்ற கவிதையை ஓர் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். ஸ்பானிய உள்நாட்டுப் போரின் கொடூர விளைவைச் சித்தரிக்கும் இந்தக் கவிதையை அவர் 1947 இல் எழுதினார். அதே ஆண்டு மூல மொழியில் வெளியான ‘மூன்றாவது வசிப்பிடம்’ ( டெர்ஸெரா ரெசிடென்சியா ) தொகுப்பில் இடம் பெற்றது. இதன் முதலாவது ஆங்கில மொழியாக்கம் நதானியேல் தார்னால் மேற்கொள்ளப்பட்டது. நெரூதாவின் சரிபார்ப்புக்குப் பின்னர் 1970 இல் வெளிவந்த பென்குவின் கவிதை வரிசை – ‘பாப்லோ நெரூதா கவிதைகள்’ நூலில் சேர்க்கப்பட்டது. ‘நான் சில விஷயங்களை விளக்குகிறேன்’  ( I am explaining a few things ) என்று தலைப்பிட்ட கவிதையின் தொடக்க வரிகள் இவ்வாறு:

‘நீங்கள் கேட்கப் போகிறீர்கள்
எங்கே போயின லைலாக் மலர்கள்?
எங்கே பாப்பி மலரின் இதழ்கள் கொண்ட ஆன்மீகம்?
எங்கே மீண்டும் மீண்டும் சொற்களைச் சிதறடித்து
அவற்றில் துளையிட்ட மழை?
எங்கே பறவைகள்?

பாப்லோ நெரூதா அறக்கட்டளையுடன் இணைந்து, 2004 ஆம் ஆண்டு, மார்க் எய்ஸ்னெர் வெளியிட்ட தேர்ந்தெடுத்த கவிதைகள் தொகுப்பிலும் இதே கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் மொழிபெயர்ப்பு புதிது. தலைப்பும்  ‘நான் சிலவற்றை விளக்குகிறேன்’ ( I explain some things ) என்று மாற்றம் கண்டது. முன்னர் குறிப்பிட்ட அதே வரிகள் புதிய மொழிபெயர்ப்பில் பின்வருமாறு அமைந்திருக்கின்றன.


நீங்கள் கேட்பீர்கள்: லைலாக் மலர்கள் எங்கே?
பாப்பி மலர்களால் நகாசு செய்யப்பட்ட ஆன்மீகம் எங்கே?
எப்போதும் வீசியடிக்கும் மழை
துளைகளாலும் பறவைகளாலும் நிரப்பும்
அவனது சொற்கள் எங்கே?

இந்த எடுத்துக்காட்டு ஒரே கவிதைக்கு வாய்த்திருக்கும் இரண்டு மொழியாக்கங்களைச் சுட்டிக்காட்டுகிறது. இரண்டு மொழிபெயர்ப்பாளர்களும் ஒரே ஸ்பானிய மூலத்திலிருந்து ஆங்கிலத்துக்குப் பெயர்த்தபோதும் கவிதை ஒன்றுக்கொன்று மாறுபட்டதாக அமைந்தி ருப்பதை அலசிப் பார்ப்பது சுவாரசியமாக இருந்தது.



இந்த அலசல் சில சிந்தனைகளைத் தூண்டின. எந்த மொழிபெயர்ப்பும் இறுதியானது அல்ல; மூலப் பிரதிக்கு ஈடுநிற்பதும் அல்ல. நெரூதாவின் மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான அலெய்ஸ்டர் ரெய்ட் குறிப்பிடுவதுபோல ‘மொழிபெயர்ப்பு மூலப் படைப்பை நெருங்குவதற்கான நடைமுறை; ஒருபோதும் மூலத்தை நெருங்கிவிட முடியாது என்று தெரிந்தே மேற்கொள்ளப்படும் நடைமுறை’ என்பதை நெரூதா மொழிபெயர்ப்பு எனக்குக் கற்றுக் கொடுத்தது. கூடவே இத்தனை மொழிபெயர்ப்பு களுக்குப் பின்னரும் அடியும் முடியும் துலக்கமாகக் காட்டாத கவிதையின் புதிரான அழகை வியக்கவைத்தது. ஒவ்வொரு மொழியாக்கமும் இன்னொரு தனிப் படைப்பாக மாறும் உயிர்வினையைப் புரிந்துகொள்ளச் செய்தது. ஒவ்வொரு கவிஞரின் மொழியாக்கத்திலும், கண்ணாடிப் பேழை மீது அதைப் பற்றியிருக்கும் விரல்களின் ரேகை பதிவதுபோல, அந்தக் கவிஞரின் அடையாளம் பதியும் விந்தை இயல்பை உணர்த்தியது.



எனது மொழியாக்க நூல் – பாப்லோ நெரூதா கவிதைகள் – வெளிவந்த வேளையில் சிறிதும் பெரிதுமாகப் பலரது மொழிபெயர்ப்புகளும் வெளிவந்தன. அவற்றுடன் ஒப்பிட்டு எனது மொழிபெயர்ப்பும் பேசப்பட்டது. கணிசமாக விமர்சிக்கப்பட்டது. அதே சமயம் வெகுவான பாராட்டுக்கும் வரவேற்புக்கும் உள்ளானது. நான் தொழில்முறை மொழிபெயர்ப்பாளன் அல்லன். என்னைக் கவர்ந்த படைப்பை மேலதிகமாகப் புரிந்துகொள்ள முயல்கிறேன். அதன் இலக்கிய மேன்மை காரணமாக  சக வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முற்படுகிறேன். சுயநலம் நிறைந்த பொதுச் செயல்பாடு இது.  எனவே முன்சொன்ன விமர்சனங்களுக்கும் பாராட்டுகளுக்கும் சுணங்கவோ பூரிக்கவோ இல்லை. ஆனால் உறுதியான ஆசை இந்த மொழியாக்கத்தில் எனக்கு இருந்தது. அழுக்குப் படிந்ததோ சீரற்றதோ ஆக இருந்தாலும் என்னுடைய விரலடையாளமும் அந்தக் கண்ணாடிப் பேழையில் பதிய வேண்டும் என்ற வேட்கை இருந்தது. அதற்குக் காரணம் பாப்லோ நெரூதா மீதான எனது குறையாக் காதல்.



நூலின் முதல் பதிப்பை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டது.மனுஷ்யபுத்திரன் அளித்த உற்சாகமும் ஊக்கமுமே நெரூதா கவிதைகள் மொழிபெயர்ப்பு நூல் வடிவம் பெற உதவியவை. அவரது தூண்டுதல் இல்லாமலிருந்தால் இவை என் தனி வாசிப்புக்கான கைப்பிரதியாகவே எஞ்சியிருக்கும். முதல் பதிப்புக்கு மெய்ப்புப் பார்த்துச் செம்மையாக்கம் செய்தவர் நண்பர் யுவன் சந்திரசேகர். மொழியாக்க வேளையில் கடலுக்கு அப்பாலிருந்து இருவர் உதவினார்கள். முதலாமவர் - ‘ தி எசென்ஷியல் நெரூதா: செலக்டட் போயம்ஸ்’ நூலைத் தொகுத்துப் பதிப்பித்த மார்க் எய்ஸ்னெர். அந்த நூலை இந்தியாவுக்கு அனுப்பபடும் முதல் பிரதி என்று குறிப்பிட்டு அனுப்பினார். சில சந்தேகங்களுக்கு மின் அஞ்சல் வழியாக உடனுக்குடன் பதில் அளித்தார். பாப்லோ நெரூதா நினைவாகத் தொடங்கிய ரெட் பாப்பி ஆர்ட் ஹௌஸின் சுற்றிதழில் தமிழ் மொழிபெயர்ப்புப் பற்றிக் குறிப்பையும் வெளியிட்டார். இரண்டாமவர் – பிரசீலைச் சேர்ந்த ஜாஸ் இசையமைப்பாளரும் பாடகியுமான லூசியானா சோஸா. நெரூதா கவிதைகளுக்கு இசையமைத்துப் பாடியிருப்பவர். அவர் அனுப்பி உதவிய ஒலிவட்டு கவிதையின் புதிர் அமைப்பை விளங்கிக் கொள்ள உதவியது. இரண்டாம் பதிப்பு வெளிவரும் தருணத்தில் இவர்கள் அனைவரையும் மிக்க நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.






முதல் பதிப்பு வெளிவந்து பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. அச்சில் இல்லாமலும் ஏறத்தாழ அதே அளவு காலம் ஆகியிருக்க வேண்டும். தொடர்ந்து பலரும் நூல் கிடைக்கவில்லை என்று குறையாகவும் கிடைக்குமா என்று சந்தேகத்துடனும் விசாரித்து வந்தார்கள். இரண்டாம் பதிப்புக்காகப் புதிய பதிப்பாளரை அணுகவும் தயக்கமாக இருந்தது. குறையைத் தீர்க்கவும் சந்தேகத்தைப் போக்கவும் தாமாக முன்வந்தவர் பரிசல் செந்தில்நாதன். புத்தகங்களின் அருங்காதலரான அவரை விட இந்தப் பதிப்பை வெளியிடத் தகுதியானவர் இல்லை. என்னிடமே இல்லாமற் போன நூலை ‘மீட்டெடுத்து’ வெளியிடுகிறார். மெய்ப்புப் பார்த்து உதவியவர்கள் தி. பரமேசுவரியும் கிருஷ்ண பிரபுவும். அண்மைக் காலமாக எனது புத்தகங்கள் அனைத்தையும் மேற்பார்வையிட்டுச் பிழை நீக்கி அளிப்பவர் செல்வராஜ் ஜெகதீசன். இந்த நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

திருவனந்தபுரம்
31 டிசம்பர் 2019                                                    சுகுமாரன்



மேற்கோள் நூல்கள்:
1.        Pablo Neruda – A Passion for Life, Adam Feinstein,  Bloosbury, Great Britain, 2004
2.        My Life with Pablo Neruda – Matlde Urrutia ( Alexandra Giardino Tr ), Stansford University Press, California, 2004
3.        The Neruda Case – Roberto Ampuero, Riverbend Books, New York, 2012
4.        Pablo Neruda: Selected Poems – Nathaniel Tarn Ed., Penguin Books, Great Britain, 1975
The Essential Neruda – Mark Eisner Ed., City Lights Books, San Francisco, 2005

1 கருத்து:

  1. நல்ல மொழிபெயர்ப்பு. சுகுமாரனின் வேறு ஏதேனும் கவிதை மொழிபெயர்ப்பு நூல் வெளியாகியுள்ளதா..?

    பதிலளிநீக்கு