பக்கங்கள்

வெள்ளி, 3 ஜூலை, 2020

இரு மேதைகளுக்கு நூற்றாண்டு










என் ரசனையில், வாழ்வில், எழுத்தில் குறிப்பிடத் தகுந்த பாதிப்புகளை ஏற்படுத்திய இரண்டு ஆளுமைகளின் நூற்றாண்டு இது. அவர்கள் தி.ஜானகிராமனும் சத்யஜித் ராயும். இருவரும் ஒரே ஆண்டுடில் அடுத்தடுத்த மாதங்களில் பிறந்தவர்கள். மாணிக்தா 1921 மே மாதத்தில். தி.ஜா. 1921 ஜூனில்.

இலக்கியம், கலை பற்றிய அடிப்படையான தெளிவு உருவாகி வந்த பருவத்தில் வாசித்தும் பார்த்தும் அவர்கள்மேல் ஏற்பட்ட ஆராதனை உணர்வு இன்றும் கலையாமலேயே இருக்கிறது. இத்தனை ஆண்டுகளில் ஒவ்வொரு முறை அவர்களது படைப்புகளை எதிர்கொள்ளும்போதும் அவர்கள் மீதான மதிப்புக்கு மாற்றுக் கூடிக்கொண்டே போகிறது. ஆராதனை உணர்வும் அதிகரித்தவாறே இருக்கிறது.

எனக்கு வாய்த்த நல்லாசிரியர்களின் உபயத்தால் உயர்நிலைப் பள்ளிப் பருவத்திலேயே நவீன இலக்கியப் படைப்புகளுடன் உறவு ஏற்பட்டது. சோம சுந்தரம் என்ற சோமுசாரால் ஜெயகாந்தன் கதைகள் அறிமுகமாயின. என் இலக்கிய வாசிப்பின் குவிமையம் அதுதான். அதிலிருந்தே நவீன இலக்கியத்தின் முன்னோடிகளையும் அன்றைய சமகால ஆளுமை களையும் கண்டடைந்தேன். அவர்களில் மிகவும் வசீகரித்தவர்களில் ஒருவராக இடம் பிடித்தார் தி.ஜானகிராமன். 1970 ‘கல்கி’ தீபாவளி மலரில் வெளியாகி இருந்த அவருடைய ‘கடைசி மணி’ என்ற கதைதான் அவரது உலகத்துக்குள் நுழைய ஒலித்த முதல் மணி. பதின்மூன்று வயதுப் பையனாக அந்தக் கதையில் பெற்ற வாசிப்பனுபவம் அறுபதைக் கடந்த இந்த வயதிலும் தொடர்கிறது. அந்தச் சிறுகதை தி.ஜானகிராமனின் மொத்த உலகத்துக்கும் இட்டுச் சென்றது.

அன்று சுவாரசியமும் இன்பமும் அளிப்பவையாக வாசித்த படைப்புகள் வயது ஏறஏற நுட்பங்கள் கொண்டவையாகவும் அனுபவம் திரளத்திரள வாழ்வின் தருணங்களைக் கற்பிப்பவையாகவும் மாறின. இன்று வாசிக்கும் போது இதுவரை புலனாகாத பலவற்றையும் அவை வெளிப்படுத்துகின்றன. புதிய கண்டுபிடிப்பு மனநிலைக்குக் கொண்டு செல்கின்றன. ‘உயிர்த்தேன்’ நாவலை முதலில் வாசித்தபோது, தி.ஜானகிராமனின் சிறந்த நாவல் அல்ல என்ற எண்ணமே மேலோங்கியது. அறுபதுகளில் நடைமுறையிலிருந்த இலட்சிய வாத நாவல்களைப் போல இவர் ஏன் எழுதினார்? என்ற ஏமாற்றமே எழுந்தது. பலமுறை, பல தருணங்களில் உயிர்த்தேனை வாசித்தும் ஆரம்பக் கருத்து மாறவில்லை. ஓர் இடைவெளிக்குப் பின்னர் அண்மையில் மீண்டும் வாசித்தபோது இதுவரை பார்க்காத பல கூறுகளை வியப்புடன் காண முடிந்தது.

திரை அரங்கின் இருளில் ஓடிய ஆவணப்படம். தமிழ் நாடு அரசு செய்தித் துறையின் படம். படத்தின் தலைப்பு ‘பாலா’. வெள்ளித் திரையில் எழுத்து, குரல், இயக்கம் என்ற ஒற்றை வரிக்குக் கீழே பார்த்த பெயர் சத்யஜித் ராய். மகத்துவம் தெரியாமல் கவனத்துக்கு வந்த பெயர் மனதில் பதிந்தது.

பின்னர் மாற்றுச் சினிமா மீது ரசனை திரும்பியபோது அவரது படங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த வாய்ப்பு அவரை ஆகச் சிறந்த திரைக் கலைஞராக ஏற்கச் செய்தது. ராயின் படங்களைத் தேடித் தேடிப் பார்ப்பதும் அவற்றைப் பற்றியும் அவரைப் பற்றியுமான விஷயங்களை வெளியிட்ட இதழ்களையும் நூல்களையும் சேகரிப்பதும் இயல்பானது. காலப்போக்கில் எல்லாப் படங்களின் பிரதிகளையும் வாங்கிப் பாதுகாக்கவும் தொடங்கினேன். ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அதுவரை காணாத கோணமும் பொருளும் புதிதாக மேலெழுந்து வரும் அனுபவத்தை உணர்கிறேன்.

உணர்ச்சி பொங்கி வழிகிற வார்த்தைகளில் உயர்வுநவிற்சியாக எழுதுவதிலும் பேசுவதிலும் எனக்கு உடன்பாடில்லை. சில சந்தர்ப்பங்கள் உடன்பாட்டை மீறச் செய்திருக்கின்றன. தி.ஜானகிராமனையும் சத்யஜித் ராயையும் நேரில் சந்தித்துப் பேசிய தருணங்களை, வாழ்நாளில் கிடைத்த பேறு என்று உயர்வு நவிற்சியாகத்தான் சொல்ல முடிகிறது. அவர்களது படைப்புகளில் தோய்ந்து பெற்ற அனுபவமே அவர்களை ஆராதனைக்கு இலக்காக்கி இருந்தன. எனினும் முதல் சந்திப்பில் காட்டிய வாஞ்சையும் இணக்கமும் பெருந்தன்மையும் அவர்கள் ஆராதனைக்கு உரியவர்கள் என்பதை அழுத்தமாகத் தெரிவித்தன. அந்தச் சந்திப்புகள் நினைவில் இன்னும் பசுமை குன்றாமல் மிளிர்கின்றன. அன்று தோன்றிய மதிப்பு இம்மியளவும் குறையாமல் நிலைத்திருக்கிறது.

இருவரையும் சந்தித்த இடமும் நாளும் பொழுதும் இப்போதும் புத்தியில் துல்லியமாகப் பதிந்திருப்பது அந்த மதிப்பின் காரணமாகத்தான். கிடைத்தற்கரிய தருணங்களை மனம் அவ்வளவு எளிதாக மறந்து விடாது அல்லவா?

1982 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி சென்னை, திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் இருந்த கணையாழி அலுவலகத்தில் தி.ஜானகிராமனைச் சந்தித்தேன். சந்தித்தோம் என்பதுதான் சரி. சிறு பத்திரிகைகளின் கூட்டமைப்பான இலக்கு அமைப்பின் கூட்டம் சென்னை வில்லிவாக்கத்தில் ஜனவரி 2, 3 தேதிகளில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காகக் கோவையிலிருந்து நண்பர் ஆறுமுகம், கோவைவாணன் என்ற துரை ஆகியோருடன் சென்னை சென்றிருந்தேன். நாங்கள் தங்கியிருந்தது கணையாழி அலுவலகத்துக்கு நான்கு கட்டடங்களுக்கு அப்பால் இருந்த ஆசிரியர்கள் சங்கக் கட்டடத்தில். காலை உணவுக்குப் பிறகு ‘பக்கத்தில்தான் கணையாழி அலுவலகம். ஜானகிராமன் தானே இப்போது பத்திரிகை ஆசிரியர். போனால் அவரைப் பார்க்கலாம், இல்லையா?’ என்று அகத் துள்ளல் வெளியில் தெரிந்து விடாதபடி சாதாரணமாகச் சொல்வதுபோலச் சொன்னேன். நண்பர்களும் இலக்கிய ஆர்வலர்கள். எனவே இசைவு தெரிவித்தார்கள். பத்து மணி அளவில் அலுவலகம் சென்று விசாரித்துக் கொண்டிருக்கும் போதே தி.ஜானகிராமன் உள்ளே வந்தார். அறிமுகங்களுக்குப் பின்பு அலுவலகத்திலேயே அமர்ந்து பேசினோம். சற்றுக் கழித்துக் காப்பி சாப்பிட அழைத்ததும் தயக்கமில்லாமல் உடன் வந்தார். தெருவின் மறுகோடியிலிருந்த முரளி கபேயில் இரண்டாவது சுற்றுக் காப்பி அருந்தும் வரையிலான இரண்டு மணி நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். அன்று அவர் அலுவலகப் பணியைத் தொடங்கியது பன்னிரண்டு மணிக்குத்தான். விடைபெற்றுக் கொண்டபோதுதான் இலக்கு கூட்டம் பற்றி விசாரித்தார். விவரங்களைச் சொன்னோம். காலையிலேயே ஆரம்பமாகி விட்ட கூட்டத்துக்கு உணவு இடைவேளையின்போதுதான் எங்களால் போய்ச் சேரமுடிந்தது. இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நிகழ்ச்சிகள் தொடர்ந்தபோது நுழைவாயிலில் தி.ஜானகிராமன் நிற்பதைப் பார்த்தேன். ஓடிப் போய் அவர் கைகளைப் பற்றி – காலையிருந்து அவர்தான் மிகவும் நெருக்கமாகி விட்டாரே – உள்ளே அழைத்து வந்து அமரவைத்தேன். பழகிய, புதிய இலக்கியவாதிகளுடன் அவர் பேசுவதைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தேநீர் இடைவேளையில் கல்லூரி நண்பன் சீனிவாசன் என்னைப் பார்க்க வந்தான். அவனும் ஜானகிராமன் வாசகன்; இசைப் பித்தன். ‘காலையில் ஜானகிராமனைப் பார்த்தேன்’ என்றதும் அவன் கண்களில் சின்னப் பொறாமை மின்னியது. ‘இங்கே வந்திருக்கிறார்’ என்று அவரைச் சுட்டிக் காட்டினேன். பொறாமைக் கனல் அப்போது பரிவுச் சுடராகக் கண்களில் பளபளத்தது. தேநீருக்காகக் கூட்டம் கலைந்ததும் தி.ஜானகிராமனும் எழுந்தார். வாசலை ஒட்டி நின்றிருந்த என்னையும் சீனியையும் நெருங்கினார். ‘நான் புறப்படறேன். திருவான்மியூர் போகணும். இப்பப் போனால்தான் இருட்டுவதற்குள் வீடு சேர முடியும்’ என்றார். சீனிவாசனை அவருக்கு அறிமுகப்படுத்தினேன். அதுவரை என்னை ஒட்டி நின்றிருந்த சீனிவாசன் முன்னால் போனான். தி.ஜானகிராமன் எதிரில் நின்று ‘அபிவாதயே’ என்று தொடங்கி முணுமுணுத்து விட்டு நெடுஞ்சாண் கிடையாகக் கால்களில் விழுந்து வணங்கி எழுந்தான். அவன் தலையில் இரு கைகளாலும் வருடி விட்டு வரட்டுமா?’ என்று புன்னகையுடன் படியிறங்கினார் தி.ஜானகிராமன். அதி நவீனர்களும் கருத்துப் போராளிகளுமான இலக்கியவாதிகளும் வாசகர்களும் குழுமியிருக்கும் இடத்தில் சீனிவாசன் அப்படிச் செய்தது என்னைக் கூச்சத்தில் நெளிய வைத்தது. கூடவே அந்த படவாப் பயலுக்கு கிடைத்த ஏதோ ஒன்று எனக்கு வாய்க்காமல் போன ஏக்கமும் கவ்வியது.

சத்யஜித் ராயுடனான சந்திப்பு ஜானகிராமனைச் சந்தித்ததுபோல எளிதாகக் கைகூட வில்லை. தொழில் நிமித்தமாகக் கல்கத்தாவுக்குப் போவது என்ற முடிவின் பின்னணியில் ராயைப் பார்க்கும் மறைமுகத் திட்டமும் இருந்தது. ஆனால் அது அவ்வளவு எளிதில் நடக்கவில்லை. கல்கத்தாவில் இருந்த ஒரு வாரக் காலத்தில் பலமுறை முயன்றும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. கடைசியில் ஊர் திரும்பும் நாளுக்கு முன் தினம் சந்திப்புக்கான நேரம் கொடுக்கப்பட்டது. மாலை நான்கு மணி.

அன்று 1988 நவம்பர் 20. கல்கத்தா லாஸோ ராய் சாலையிலிருந்த அவரது வீட்டில் சந்தித்தேன். ‘சென்னையிலிருந்து ஒருவன் மாணிக்தாவைப் பார்க்க இத்தனை தூரம் வந்திருக்கிறான்’ என்ற பச்சாத்தாப அடிப்படையில் அனுமதிக்கப்பட்டேன். புகைப்படங்களில் பார்த்துப் பழகியிருந்த விசாலமான அறையில், சாய்வு நாற்காலியில் அமர்ந்து மடியில் ஓர் எழுது பலகையை வைத்து அதன் மீது வங்காள மொழியில் அச்சிட்ட பிரதிகளைத் திருத்திக் கொண்டிருந்தார். முன்னால் நாற்காலியின் விளிம்பில் உட்கார்ந்து அறிமுகப் படுத்திக் கொண்டு கால், அரை வார்த்தைகளில் பேசினேன். அவரும் ஒற்றை, இரட்டை வார்த்தைகளில்தான் பதில் சொன்னார். பத்து நிமிடங்களுக்குப் பிறகு இடமும் மனிதரும் பழகி விட்ட தெம்பில் கொஞ்சம் நீளமாகப் பேச முடிந்தது.

‘அவருக்கு உடல் நலம் சரியில்லை. விருந்தினர்கள் யாரையும் சந்திக்க அனுமதிப்பது இல்லை. வெகு தூரத்திலிருந்து வந்திருக்கிறீர்கள். நான்கைந்து நாட்களாகக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதால் அனுமதிக்கிறோம். பத்தே பத்து நிமிடங்கள்தான்’ என்ற நிபந்தனையின் பேரில்தான் சந்திக்க முடிந்தது. அரை மணி நேரத்துக்குப் பின்னர்தான் அந்த நிபந்தனை நினைவுக்கு வந்தது. எழுந்து கொண்டேன். கைகளைக் குவித்து விடைபெற முன்னால் நின்றேன். சத்யஜித் ராய் எழுதுபலகையை கொஞ்சமாக முன்னால் நகர்த்தி உட்கார்ந்த நிலையிலேயே அவரது இரு கைகளையும் நீட்டி என்னுடைய புறங்கைகள் இரண்டையும் தொட்டார். அவர் கைகளை விலக்கியதும் ஒரு கணம் யோசித்தேன். யாருடைய கால்களிலும் விழுந்து வணங்குவது கூடாது என்ற பகுத்தறிவுப் பிடிவாதம் மனதில் இருந்தது. அவர் என் கைகளைத் தொட்ட நொடியில் அந்தப் பிடிவாதம் காணாமற் போனது. குனிந்து சாய்வு நாற்காலியைத் தாண்டி நீட்டியிருந்த அவரது பாதங்களைத் தொட்டு நிமிர்ந்தேன். அந்த வீட்டிலிருந்து வெளியே வந்து தெருவில் நடந்தபோது மனது விம்முவதை உணர்ந்தேன்.

சத்யஜித் ராயைச் சந்தித்தபோது இருந்த மனநிலை தி.ஜானகிராமனைச் சந்தித்தபோது ஏன் இல்லாமல் போனது? என்று பிந்தைய ஆண்டுகளில் பலமுறை யோசித்திருக்கிறேன். அன்றைய கூச்சமும் பிடிவாதமும் சரியானவைதானா என்று எனக்குள்ளேயே கேட்டிருக்கிறேன். நண்பன் சீனிவாசனுக்குக் கிடைத்த ஜானகிராமப் பரிவு என் தலைமீது ஏன் சொரியவில்லை என்று குமைந்திருக்கிறேன். தி.ஜானகிராமனின் இரு நாவல்களுக்கு முன்னுரை எழுதவும் மொத்தக் கதைகளைத் தொகுக்கவும் இதுவரை தொகுக்கப்படாத கதைகளைத் தேடித் திரட்டித் தொகுக்கவும் கட்டுரைகளைத் திரட்டவுமான பணிகள் என்னிடம் கொடுக்கப்பட்டபோது இந்தக் குமைச்சல் விடைபெற்றது. அவரது பாதங்களைத் தொட்டு வணங்கும் மன நிலைதான் இந்தப் பணிகளுக்கு உந்துதல் என்பது புலனாகிறது.

தி.ஜானகிராமன், சத்யஜித் ராய் ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசியது ஒரு சில மணி நேரங்கள்தாம்.அந்தக் குறுகிய பொழுதுகள் வாழ்நாள் முழுவதும் பேணிக் கொண்டிருக்கும் அளவு மகத்தானவை. ஒரு குடம் அமுதம் மட்டுமா, ஒரு சொட்டு அமுதமும் ஆயுளுக்கும் நீடித்திருக்கும்.

தி.ஜானகிராமன் ஓவியம் : நன்றி - சுந்தரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக