பக்கங்கள்

வியாழன், 1 ஏப்ரல், 2021

ராமனின் வாக்குகள்

 


ன்றைய  மலையாளக் கவிஞர்களில் குறிப்பிடத் தகுந்தவரும் நண்பருமான பி.ராமன் ‘வித்யாரங்கம்’ மாத இதழில் வெளியாகும் ‘கவிநிழல் மாலை’ என்ற தன்னுடைய பத்தியில் என் கவிதைகளைப் பற்றிக் கவனத்துக்குரிய வகையில் எழுதியிருக்கிறார்.

கேரள மாநிலப் பொதுக் கல்வி இயக்ககத்தால் கடந்த நாற்பத்தி ஏழு ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வரும் கலாச்சார மாத இதழ் ‘வித்யாரங்கம்’. துறைசார்ந்த இதழாக மட்டுமில்லாமல் தேர்ந்த உள்ளடக்கம், சிறப்பான வடிவமைப்பு, தரமான அச்சு என்று சீரிய முறையில் கலை இலக்கியத்துக்கு முதன்மையளிக்கும் இதழாகவே வெளிவந்து கொண்டிருக்கிறது. பொதுக் கல்வித்துறை இயக்குநரை ஆசிரியராகக் கொண்ட குழுவில் மலையாளத்தின் முக்கிய எழுத்தாளர்களான  எம்.முகுந்தன், அசோகன் சருவில், விமர்சகர் கே.எஸ். ரவிகுமார் ஆகியோரும் கல்வியாளர்களும் பங்கேற்றிருக்கிறார்கள். ஆசிரியர் குழுவில் கவிஞர் பி. ராமனும் ஒருவர்.


                                                                             பி.ராமன் 

‘கதவுகள் இல்லாத நீர்’ என்ற தலைப்பிலான பி.ராமனின் கட்டுரை மலையாளச் சூழலில் தமிழ்க் கவிஞனாக எனக்கு இதுவரை  கிடைத்த அங்கீகாரங்களில் முக்கியமானது. இதற்கு முன்னரும் வெவ்வேறு தருணங்களில் தமிழ்க் கவிஞனாகவும் இலக்கியவாதியாகவும் தமிழ் இலக்கிய, அரசியல் ஆளுமை களை அறிமுகப்படுத்துபவனாகவும் ஓரளவு கவனம் பெற்றிருக்கிறேன். இவையெல்லாம் மகிழ்ச்சி அளித்தவை. ஆனாலும் மனதின் மூலையில் சின்ன ஏக்கம் அவ்வப்போது எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. இதுவரை எழுதப் பட்டவை அனைத்தும் கவிதையைப் பற்றிய பொது அறிமுகமாகவே இருந்தன. கவிஞனாக எனக்குள்ள தனித்துவத்தைச் சுட்டிக் காட்டுபவை அல்லவே என்ற ஏக்கம் இருந்தது. ராமனின் கட்டுரை அந்தக் குறையைப் போக்கி இருக்கிறது. அதுமட்டுமன்றி என் கவிதையாக்கத்தின் கூறுகளில் நானறியாத ரகசியத்தை எனக்கே வெளிப்படுத்துகிறது.

 

ஆரம்ப காலக் கவிதைகளில் வெளிப்பட்ட அவநம்பிக்கையும் சீற்றமும் ஆத்திரமும் கசப்பும் கழிவிரக்கமும் குரூரமும் ததும்பிய தத்தளிப்பு மன நிலையின் ஊற்றுக் கண் எதுவென்று எனக்கே விளங்காமல் இருந்தது. அன்றைய தனி, சமூக வாழ்க்கையின் தாக்கம் என்று மட்டுமே புரிந்து வைத்திருந்தேன். அன்று தோயத்தோய வாசித்த கவிதைகளின் பாதிப்பு என்று எடுத்துக் கொண்டிருந்தேன். குறிப்பாக, பாரதியும் பெரூ நாட்டுக் கவிஞர் செஸார் வயேஹோவும் சிலி நாட்டுக் கவிஞர் பாப்லோ நெரூதாவும் பீடித்திருந்ததின் விளைவு. சொல்லின் நுட்பத்தைப் பாரதியும் தனி மனித அனுபவமும் சமூக அனுபவமும் இரண்டறக் கலந்தவை என்பதை வயெஹோவும் மனித இணக்கத்தை நெரூதாவும் வழங்கியிருந்தார்கள். இன்றும் என்னால் கடக்கவியலாத பாதிப்பு இவர்களுடையது.

 

இவர்களைத் தவிர வேறு கவியாளுமைகளும் செல்வாக்குச் செலுத்தி யிருந்தாலும் அவை என் கவிதையாக்க முறையில் வலுவான கூறாக இருக்கவில்லை. எடுத்துக்காட்டாக அன்று தீவிரமாக வாசித்த மலையாளக் கவிதைகள் என்னைப் பாதித்து விடக் கூடாது என்பதில் பிரக்ஞை பூர்வமாகவே இருந்தேன். ஆனால் அவை என்னைக் கணிசமான அளவில் பாதித்திருக்கின்றன என்பதை ராமனின் கட்டுரை கண்டுபிடித்துச் சொல்கிறது. மலையாள பாதிப்புகள் என்னுடைய கவிதையில் எங்கே இருக்கின்றன என்றும் அவை எப்படித் தமிழ்த் தன்மை பெறுகின்றன என்றும் ராமன் விவரிக்கும் விதம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. மகிழ்ச்சியளித்தது. பிரக்ஞைபூர்வமான எச்சரிக்கையை மீறியே அந்தப் பாதிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. கவிதையை பிரக்ஞைபூர்வமானதாக இருக்கும்போதே பிரக்ஞையை மீறிய ஒன்று என்ற அறிவை இது அளிக்கிறது.

 

கவிதைவளர் பருவத்தில் நான் தீவிரமாக வாசித்த மலையாளக் கவிஞர்கள் அய்யப்பப் பணிக்கர், சச்சிதானந்தன், கே.ஜி. சங்கரப் பிள்ளை, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு ஆகியோர். வாசிப்பவனிடம் வெகு எளிதில் பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடிய கவிஞர்களான இவர்களைத் தொடரக் கூடாது என்ற முன்னுணர்வு இருந்தது. மாறாகப் பின் செல்லக் கொஞ்சமாவது விரும்பியது ஆற்றூர் ரவிவர்மாவைத்தான். ஆனால் அவருடைய கவிதை ஆழத்தை எட்டத் தேவையான நிபுணத்துவமும் மரபு வளமும் என்னிடமில்லை. நீண்ட வரிகளை இசைமையுடன் எழுதவும் நீண்ட கவிதைகளைச் செறிவாக எழுதவும் சச்சிதானந்தனின் மெல்லிய பாதிப்பு உதவியது. நான் அறிந்த பாதிப்புகள் இவையே. இவற்றை மீறியும் ஒற்றுமைகளைக் காண்கிறது ராமனின் கட்டுரை. அது ஒரு கண்டுபிடிப்பின் நூதன உணர்வைக் கொடுக்கிறது. அந்த உணர்வின் தொடர்ச்சியாக யோசித்த போது சில ஒற்றுமைகள் வெளிப்பட்டன. பின் வருவது ஓர் உதாரணம்.

 

பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் புகழ் பெற்ற கவிதையின் வரிகள் இவை.

ஜோசப், உனக்குத் தெரியாது என் ஜாதகம்

தற்கொலைக்கும் கொலைக்கும் இடையில்

சோக நாதமாகப் பாய்கின்ற வாழ்க்கை.

( கவிதை -  மாப்பு சாட்சி )

 

என் கவிதை ஒன்றின் வரிகள் இவை:

தற்கொலைக்கும் துப்பாக்கி முனைக்கும் நடுவில்

நமது வாழ்க்கை

இரண்டு குரோதப் பற்சக்கரங்களுக்கு இடையில்

நமது காலம்

நாம் எதிர்பாத்திருக்கிறோம்

அணுகுண்டின் கடைசி வெடிப்புகாய்

( கவிதை – வெளியில் ஒருவன் )

 

ராமனின் கட்டுரையை வாசித்துக் கொண்டிருக்கும்போது இந்த வரிகளின் ஒற்றுமை நினைவில் வந்தது. சுள்ளிக்காடின் கவிதை 1978 இல் வெளியானது.

நான் அந்த வரிகளை எழுதியது 77 இல். நக்சலைட் தொடர்பு இருப்பதாகக் காவல்துறை விசாரணைக்குக் கூட்டிச் சென்று ஆணையர் அறையில் தனித்து விட்டபோது கல்லூரி நோட்டுப் புத்தகத்தில் அவசரமாக எழுதி மறைத்து வைத்த வரிகள். பின்னர் கவிதையின் ஒரு பகுதியாக மாறியது. கவிதையை முழுதாக வெளியிட்டால் பிடிபட்டு விடுவோம் என்ற வீண் பயத்தில் இதழ்கள் எதிலும் வெளியிடாமல் 1985 இல் கோடைகாலக் குறிப்புகள் தொகுப்பில் நேரடியாக இடம்பெற்றது.

சுள்ளிக்காடின் கவிதையும் ஏறத்தாழ அதேபோன்ற சந்தர்ப்பத்தைச் சித்தரிப்பது. ஒரு அரசியல் கைதிக்கு எழுதிய ஒப்புதல் வாக்கு மூலமாக எழுதப்பட்டது.

பாலச்சந்திரன் சுள்ளிக்காடுக்கு இருந்த துணிச்சல் எனக்கு அன்று இல்லாமல் போனது பற்றிய சுய நிந்தை இப்போதும் உறுத்துகிறது. அது ஒருபுறம் இருக்கட்டும். கவிதை நிகழ்வின் இந்தத் தற்செயல் விளைவு சிந்திக்கத் தூண்டுகிறது. கவிதையாக்கத்தின் பூடகம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. இரண்டு மொழிகளில் எழுதப்பட்ட கவிதைகளின் இடையே ஒற்றுமை வந்தது எப்படி? இரண்டு வேறுபட்ட சூழலில் ஒரேபோன்ற மனநிலை சாத்தியமானது எந்த வகையில்? எழுபதுகளிலும் எண்பதுகளிலும் எல்லா மொழிகளிலும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் ஒன்றுபோலத்தான் சிந்தித்தார்களா? வாழ்க்கை நெருக்கடிகள் எங்கும் ஒன்றாகத்தான் இருந்தனவா? துயரமோ கொண்டாட்டமோ எந்த உணர்வும் பொதுவானவையா? அந்தப் பொதுமையைத்தான் கவிதை தனித்தனி மொழிப் பாத்திரத்தில் அள்ளித் தனதாக்கிக் கொள்கிறதா?

 

ராமனின் கட்டுரை எழுப்பும் இந்தக் கேள்விகளை முக்கியமானவையாகக் கருதுகிறேன். என் கவிதையைப் பற்றிய கட்டுரையாக இருந்தபோதும் வாசிப்பில் இத்தனை கேள்விகளுக்கு இடமளிக்கிறது என்பதாலேயே கட்டுரையை மிக முக்கியமானதாக மதிக்கிறேன். அந்த வகையில் ராமன் எனக்கு அளித்திருப்பது மகத்தான அங்கீகாரம். அதற்காக மிக்க நன்றி.

 

கட்டுரையைப் பகிர்வதில் எனக்குச் சிறிய மனத்தடை இருந்தது. என்னைப் பற்றிய கட்டுரையை நானே மொழிபெயர்ப்பது என்ற எண்ணமே கூச்சத்தைக் கொடுத்தது. நண்பர் நிர்மால்யாவிடம் தயக்கத்துடன் கேட்டேன். பெரிய மனதுடன் தமிழாக்கம் செய்து கொடுத்தார். அவருக்கு நன்றி.

                                                                          நிர்மால்யா 

நீளம் கருதி பி.ராமனின் கட்டுரை தனிப் பதிவாக பகிரப்படுகிறது.







 


 


வித்யாரங்கம் பிப்ரவரி 2021




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக