பள்ளிப் பருவம். பாடங்களை விடவும் பிற புத்தகங்களைத் தேடித் தேடி வாசித்த காலம். வாசிப்பு
பித்தாக முற்றியிருந்த நாட்கள்.
ஆனந்த விகடன், கல்கி இதழ்களில் வெளியாகியிருந்த தீபாவளி மலர் விளம்பரங்களைப் பார்த்து வாங்கி வாசித்தே ஆகவேண்டும் என்ற ஆவல் முட்டிக் கொண்டிருந்தது. அம்மாவை நச்சரித்துக் காசு வாங்கிக்கொண்டு பள்ளிக்குப் போனேன். உணவு இடைவேளையின் போது சாப்பிடாமல் வெரைட்டிஹால் ரோட்டிலிருந்த விகடன் ஏஜெண்ட் அலுவலகத்துக்கும் ஐந்து முக்கிலிருந்த பாயின் பேப்பர் கடைக்கும் ஓடி 'மலர்கள் வந்தாச்சா?' என்று விசாரித்தேன்.
‘இன்னைக்கு வரலை. நாளைக்குத்தான் வரும்’
என்று பதில் கிடைத்தது. மறுநாள் நண்பகலிலும் பள்ளி விட்டதும் மாலையிலுமாக விசாரணையைத்
தொடர்ந்தேன். அன்றும் வரவில்லை. நாளைக்கு வரும் என்ற அதே பதில் கிடைத்தது. மூன்றாம்
நாளும் பகலிலும் மாலையிலும் அதே விசாரிப்பு. அதே பதில். அடுத்த நாள் மத்தியான்னம் போனபோதும்
அப்படியே.
இதையெல்லாம் கவனித்துக்
கொண்டிருந்த ஏஜெண்ட் அவர் மேஜைக்கு அருகில் அழைத்து விவரம் கேட்டார். சொன்னேன்.
‘’இன்னும் நம்ம ஊருக்கு வரல்லே.வந்தா இங்க வெச்சிருப்போம். முக்கியமான கடைகளுக்குக் குடுப்போம். அங்கேர்ந்து வாங்கு. கெடக்கலேன்னா
இங்க வா. இதுக்குன்னு ஸ்கூல்லேர்ந்து ஓடி ஓடி வராதே.என்னா?’’ என்றார்.
தலைகுனிந்து கேட்டுக்
கொண்டிருந்தேன். பிறகு நிமிர்ந்து ‘’ நாளைக்கு வந்துடுமா?’’ என்றேன்.
ஏஜெண்ட் வாய்விட்டுச்
சிரித்து விட்டார். ‘’ வந்துடும். வந்துடும். வந்ததும் உனக்குக் கிடைக்க ஏற்பாடு பண்றேன்.
இந்த உஷாரைப் படிக்கறதுலயும் காட்டறி்யோ என்னவோ?’’ என்று புத்தியில் தட்டினார்.
அந்தத் தட்டு உறைக்கவில்லை.
இவர் எப்படி புத்தகம் கிடைக்க ஏற்பாடு செய்வார் என்ற சந்தேகமே அரித்துக்கொண்டிருந்தது.
திரும்பி வந்தேன். அன்று மாலை அந்த அலுவலகத்துக்குப் போகவில்லை. யாரோ ஒருவர் சொல்லும்
புத்திமதியைக் கேட்க எனக்கென்ன தலையெழுத்து?
மறுநாளும் அந்தப்
பக்கம் போகவில்லை. பாய்கடையிலோ மோகன் புக் ஸ்டாலிலோ கிடைக்கும்.அப்போது வாங்கிக்
கொள்ளலாம் என்று அடக்கமாக இருந்தேன். அத்தியாவசியச் செலவுகள் வந்தும் மலர்களுக்காக
வாங்கிய ரூபாயைப் பத்திரமாக இறுக்கி வைத்திருந்தேன்.
முதல் இரண்டு பீரியட்கள்
முடிந்து ரீசஸ் விட்டதும் வெளியில் வந்தேன். பள்ளி அலுவலகத்துக்கு முன்னால் விகடன் ஏஜெண்டின் மொபெட்
நிற்பதைப் பார்த்தேன். அழைப்பதுபோலக் கையை உயர்த்துவதையும் பார்த்தேன். என்னையா அழைக்கிறார்? சந்தேகம் தெளிவதற்குள் அவரே சைகை காட்டிக்
கூப்பிட்டார். சக மாணவன் ரங்கராஜனைத் ( ரங்காவின் பெரியப்பா பிரபல எழுத்தாளர். பெயர்
- சாண்டில்யன் ) துணைக்கு அழைத்துக்கொண்டு
மொபெட்டை நெருங்கினேன். அதன் கேரியரில் அந்த வாரத்து ஆனந்த விகடன் இதழ்கள் அடுக்கடுக்காக
வைத்துக் கட்டப் பட்டிருந்தன. அன்று வெள்ளிக்கிழமை என்பதும் அப்போது நினைவுக்கு வந்தது.
மொபெட்டின் ஹாண்டில் பாரில் மாட்டியிருந்த கித்தான் பையிலிருந்து ஆனந்த விகடன் தீபாவளி மலரை எடுத்துக் கொடுத்தார் ஏஜெண்ட். டிரவுசர் பையில் பத்திரப்படுத்தியிருந்த பத்து ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தேன். மீதி ஐந்து ரூபாயைக் கொடுத்துவிட்டு ‘’ நீயா ஓடி வர வேண்டாம்னுதான் எடுத்துண்டு வந்தேன். பத்திரிகை படிக்கறதெல்லாம் நல்லதுதான். படிப்புல கோட்டை விட்டுடாமப் பாத்துக்கோ’’ என்றார்.
மறுபடியும் புத்திமதியா? என்று அலுவலக வாசலில் குதிரைமேல் ஈட்டியுடன் வீற்றிருந்த மிக்கேல் சம்மனசைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பதிலாக ரங்கா பதில் சொன்னான். ‘’ அதெல்லாம் நன்னாப்
படிப்பான் மாமா. மொத அஞ்சு ரேங்க்குள்ள வாங்கிடுவோம். இவன் கவிதையெல்லாம் நன்னா எழுதுவான்”. நான் பார்வையைத் திருப்பினேன்.
‘’அப்போ அடுத்த
தீவாளி மலர்ல ஒன்னோட கவிதையும் வரட்டும்’’ என்று முகம் முழுவதுமாகப் பூத்த சிரிப்புடன்
ஏஜெண்ட் மொபெட்டை முடுக்கி ஸ்டாண்டிலிருந்து விடுவித்து ஏறிப் பறந்தார்.
மிச்ச ஐந்து ரூபாயில்
அன்று மாலையே ஐந்துமுக்கு பாய் கடையில் கல்கி தீபாவளி மலரும் கிடைத்தது. அப்போது நான்
புதிதாகத் தெரிந்து கொண்ட எழுத்தாளர் ஒருவரின் கதைகள் இரண்டு மலர்களிலும் இருந்தன.விகடனில் ‘விளையாட்டுப் பொம்மை’ என்ற கதை. கல்கியில் ‘கடைசி மணி’ என்ற கதை. எழுதியவர்
– தி.ஜானகிராமன்.
கைக்கு வந்த ஆனந்த விகடன் தீபாவளி மலர் 2021ஐப் புரட்டிக் கொண்டிருந்தபோது இந்தப் பழைய நினைவுகளும் புரண்டு வந்தன.
கடந்த நான்கு ஆண்டுகளாக
ஆனந்த விகடன் தீபாவளி மலர்களில் என்னுடைய கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. 2018 இல்
மதுரை சோமுவைப் பற்றிய கட்டுரை ‘ மனோ தர்மர்’. 2019 இல் கொரியாவிலுள்ள எழுத்தாளர் உறைவிட
முகாம் ‘தோஜி மையத்தில் கழித்த நாட்களைப் பற்றிய அனுபவம் ‘தோஜி’. 2020 இல் தி.ஜானகிராமன்
நூற்றாண்டை ஒட்டி எழுதிய ‘காலத்தைப் படைத்த ஆளுமை’ என்ற கட்டுரை. இந்த 2021 இல் திருவனந்தபுரத்தின்
நவீனத் தொன்மக் கதையான ‘ மகாராஜாவின் காதலி’.
விகடன் தீபாவளி
மலர் ஆசிரியரான கா.பாலமுருகனின் தூண்டுதல் இல்லாமலிருந்தால் இந்தக் கட்டுரைகளை எழுதியிருக்க
மாட்டேன். வீயெஸ்வி, லலிதாராம், வெ. நீலகண்டன் ஆகியோரது பாராட்டுகள் கிடைக்காமலிருந்தால்
தொடர்ந்து எழுதியிருக்கவும் முடியாது. இவர்களுக்கு மிக்க நன்றி.
இவர்களுக்கெல்லாம் நன்றி பாராட்டும் அதேசமயம் ‘’ அடுத்த தீவாளி மலர்ல ஒன்னோட கவிதையும் வரட்டும்’’ என்று சொன்ன விகடன் ஏஜெண்டுக்கும் மானசீக நன்றி. அந்த வாக்குப் பலிக்க நாற்பத்து எட்டு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அதனால் என்ன, மெய்யான சொல் என்றாவது வெல்லும் தானே? அவர் இன்று இல்லை என்றே அறிகிறேன். ஆனால் ஆதரவுக் குரல் எழுப்பிய ரங்கா நீ எங்கே?
@
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்கு