புதன், 9 டிசம்பர், 2009

எங்கோ ...யாரோ...யாருக்காகவோ?


@


நண்பரும் கன்னடத்தில் புகழ்பெற்ற நாடகாசிரியரும் கவிஞருமான எச். எஸ். சிவபிரகாஷ் பன்மொழிக் கவிஞர்களின் சந்திப்புக்கு அழைத்திருந்தார். 2003 ஜனவரியில் கர்நாடக மாநிலம் பெல்காமில் கவியரங்கு நடந்தது.பெல்லாரியில் உள்ள லோகியாபிரகாசன் என்ற பதிப்பகத்தின் ஆண்டு விழாவையும் பதிப்பகம் வெளியிடும் புதிய நூல்களின் வெளியீட்டையும் ஒட்டி நடந்த இரண்டு நாள் பண்பாட்டு நிகழ்ச்சிகளின் பகுதியாகப் பன்மொழிக் கவியரங்கம் இருந்தது.

பெல்காம் மாவட்டமே பல்மொழிகள் பேசிகிற மாவட்டமாக இருந்தது. கோவா, மராட்டிய மாநிலங்களின் எல்லையில் அமைந்த மாவட்டம். அதனால்தான் பன்மொழிக் கவியரங்கமாக இருக்கட்டும் என்று தீர்மானம் செய்ததாக விளக்கம் சொன்னார் சிவா.தமிழ்க் கவிதை வாசிக்க நானும் மலையாளக் கவிதைக்காக சாவித்திரி ராஜீவனும் சென்றிருந்தோம். பத்தொன்பதாம் தேதிதான் எங்கள் கவிதை வாசிப்பு. ஆனால் அதற்கு முன்னும் பின்னுமாக இரண்டு நாட்கள் பெல்காமில் செலவிட நேர்ந்தது. கன்னடக் கவிஞர் சந்திர சேகர கம்பார் தலைமையில் கவியரங்கம்.அதில் பங்கேற்பது தவிர எனக்கு வேறு வேலையிருக்கவில்லை.மொழிபுரியாமல் கவிதைகளையோ சொற்பொழிவுகளையோ கேட்பது நரக நிர்ப்பந்தம். எனவே ஊர்சுற்றக் கிளம்பினேன். சிவா சில இடங்களைக் குறிப்பிட்டு அங்கெல்லாம் போய்வரலாம் என்றார்.

பெல்காம் கோட்டை, மகாத்மா காந்தி நினைவில்லம் என்று அலைந்தேன். கோட்டைக் குள்ளிருக்கும் சிறையில் காந்தி வைக்கப்பட்டிருந்தார் என்பதும் அதே பெல்காமில் காங்கிரஸ் சம்மேளனத்தில் பங்கெடுத்தார் என்பதும் அங்கே வைத்திருந்த குறிப்புகளிலிருந்து தெரிந்து கொண்ட தகவல்கள். கர்னாடகத்தில் நடத்தப்பட்ட ஒரே காங்கிரஸ் சம்மேளனம் அதுதான் என்பது அந்த நகரத்துக்கு முக்கியத்துவம் கற்பித்திருந்தது.

பழைமையை பின்னுக்குத் தள்ளிவிட்டு புதுமையைக் கைவசப்படுத்த எல்லா நகரங்களையும் போலத்தான் பெல்காம் இருந்தது.ஆனால் நகர மையத்தைக் கடந்தால் தென்படும் பல ஊர்கள் புதுமையின் சுவடே இல்லாமல் காலத்தின் அசைவின்மையில் உறைந்து கிடப்பவைபோலத் தோன்றின. சிவா சொன்ன ஒரு ஊர் சவுண்டட்டி. பெல்காம் நகரத்திலிருந்து இரண்டரை மணி நேரப் பயணத்தில் இருக்கிறது. 'போய்ப் பாருங்க, ஒருவேளை நீங்க திரும்பி வர விரும்பாமலும் இருக்கலாம்' என்று சொல்லிவிட்டுக் கண்களைச் சிமிட்டிச் சிரித்தார். அங்கே இருக்கிற எல்லம்மா கோவில் விசேஷம் என்றார். அதற்கு எதற்காகக் கேலியாகக் கண் சிமிட்டினார் என்று புரியவில்லை.துணைக்கு என்று பதிப்பக உரிமையாளர் அனுப்பியிருந்த கன்னட இளைஞரும் அதேபோலச் சிரித்தார்.இரு புறம் பெரிய ஆலமரங்கள் நின்றிருக்கும் சாலைகளைத் தாண்டி சவுண்டட்டி பேருந்து நிலையத்தில் காலூன்றியதும் சிவப்பிரகாஷ் ஏன் சிரித்தார் என்று புரிந்தது.பேருந்து நிலையத்தில் அங்குமிங்குமாக ஒப்பனை முகங்களுடன் பெண்கள் திரிந்துகொண்டிருந்தார்கள். பத்திரிகையாளனாக ஆந்திர மாநிலம் பெத்தாபுரம் , தமிழகத்தின் கூவாகம் போன்ற இடங்களில் அதுபோன்ற முகங்களை பார்த்திருந்த முன்அனுபவம் புரிதலை சுலபமாக்கியது.(இது தொடர்பான கட்டுரைகள் அன்னம் வெளியீடான 'திசைகளும் தடங்களும்' தொகுப்பில் உள்ளன).

குன்றின் மீது எல்லம்மாவின் கோவில் . ஜமதக்னி முனிவரால் சபிக்கப்பட்ட அவரது பத்தினி ரேணுகா தேவிதான் எல்லம்மா. கண்முன்னால் நடமாடுகிற இந்தப் பெண்கள் எல்லாரும் எல்லம்மாவின் புதல்விகள். தேவதாசிகள். அவர்கள்'கடவுளின் சேவகர்கள்; ஆனால் எல்லாருக்கும் மனைவிகள்' என்று மராட்டியில் ஒரு வாசகம் இருப்பதாக நண்பர் சொன்னார். நாங்கள் போனது சதாரணமான ஒரு நாள்.அதனால் கூட்டம் அதிகமில்லை.கோவிலுக்குள்ளும் கடைத்தெருவிலுமாக தேவதாசிகளும் திருநங்கைகளும் உலாவிக் கொண்டிருந்தார்கள். 'தேவதாசி முறைக்கு அரசாங்கம் தடை விதித்திருக்கிறது. ஆனால் பலனில்லை. இது மதச் சடங்காக மாற்றப்பட்டுவிட்டது. அதனால் எந்த அரசாங்கத்துக்கும் சட்டத்தை அமல்படுத்த தைரியம் வருவதில்லை' என்றார் நண்பர். அன்று மாலைவரை
அந்த மலைக்கோவிலுக்குள் அலைந்து கொண்டிருந்தோம்.அந்த அனுபவம் தனிக் கட்டுரைக்கான பொருள். இந்தக் குறிப்புக்குள் சேர்க்கக் கூடிய சம்பவம் ஒரு பாடலில் இருந்தது. ஆலயப் பிரகாரத்தில் அமர்ந்திருந்த தேவதாசிப் பெண்மணி இன்னொரு பெண்ணுக்குப் பாடிக் காண்பித்துக் கொண்டிருந்தார். கொஞ்சம் கரகரப்புள்ள இனிமையான சாரீரம் அந்தப் பெண்மணிக்கு.மொழி தெலுங்கு என்று புரிந்தது. கர்நாடகத்தில் தெலுங்கு ஒலிப்பது ஆச்சரியம் என்றேன். எல்லாம் பழைய விஜயநகர சாம்ராஜ்ஜியம் தானே? தெலுங்கு மொழி ஒலிப்பதில் வியப்பில்லை என்றார் நண்பர். தெலுங்குச் சொற்கள் அரைகுறையாகத்தான் புரிந்தன. அதில் கவிதையின் கூறுகள் இருப்பதுபோலப்பட நண்பரிடம் மொழிபெயர்த்துச் சொல்லும் படிக் கேட்டேன். அது பாடலல்ல. கவிதைதான். அவர் உடைந்த
ஆங்கிலத்தில் சொன்னவற்றை ஒரு தாளில் குறித்துக் கொண்டேன். அந்தத் தாள் விழாவில் வெளியிடப்பட்ட சிவப்பிரகாஷின் கன்னடக் கவிதைத் தொகுப்பின் பக்கங்களுக்குள் வெகுகாலம் ஒளிந்திருந்தது. நட்பு கருதி வாங்கிய புத்தகம். மொழிதெரியாததால் படிக்கப் படாமல் அலமாரியில் உறங்கிக் கிடந்த புத்தகம்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் புத்தகத்தை எடுத்து அந்தத் தாளை மீண்டும் படிக்கச் செய்தவர் வில்லியம் டால்ரிம்பிள். இந்திய வரலாற்று சம்பவங்களை அடிப்படையாக வைத்து நூல்களை எழுதும் டால்ரிம்பிளின் அண்மைக் காலக் கட்டுரை ஒன்றில் அந்தக் கவிதையின் வரிகள் இருந்தன. எல்லம்மா ஆலயத்துக்கு நேர்ந்து விடப்பட்ட தேவதாசிகளைப் பற்றிய கட்டுரை அது. (செக்ஸ் அண்ட் காடெஸ்ஸஸ் - தி நியூயார்க்கர் ஆகஸ்ட் 4 ,2008). நான் கேட்ட அதே பாடலை கட்டுரையில் அவரும் மேற்கோள் காட்டியிருந்தார். 'கையில் காசில்லாதவன் கடவுளானாலும் கதவைச் சாத்தடி' என்ற தமிழ்ப்பாடலின் அதே பொருளில் அதே பின்னணியில் வரும் தெலுங்குப் பாடல்.டால்ரிம்பிளின் கட்டுரையில் கிடைத்த புதிய தகவல் இந்தப் பாடல்களெல்லாம் செப்புப்பட்டயத்தில் பதித்து காலங் காலமாக திருப்பதி தேவஸ்தானப் பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பது.கவிதை பொக்கிஷம் தான்.

@

நான் குறித்து வைத்த கவிதை பின்வருமாறு:


நான் மற்றவர்களைப்போன்றவளல்ல
என் இல்லத்துக்கு நீ எப்போதும் வரலாம்
ஆனால் கையில் காசிருந்தால் மட்டுமே.

நான் கேட்கிற அளவு காசில்லை என்றாலும்
கொஞ்சமிருந்தால் போதும்.
ஆனால் பிரபு கொங்கணேஸ்வரா,
ஒன்றுமில்லாமல் வந்தால் அனுமதிக்க மாட்டேன்

என் இல்லத்தின் பிரதான வாசலை மிதிக்க வேண்டுமென்றால்
நூறு பொன் வராகன் இருக்க வேண்டும் உன்னிடம்
பட்டு மெத்தை விரித்த
என் படுக்கையறையைப் பார்ப்பதென்றால்
இரு நூறு பொன் வராகன் இருக்கவேண்டும் உன்னிடம்.

என் இல்லத்துக்கு நீ எப்போதும் வரலாம்
ஆனால் கையில் காசிருந்தால் மட்டுமே.

என் அருகில் அமர்ந்து என் சேலையை
உன் கைகளால் களைவதென்றால்
பதினாயிரம்பொன் வராகன் இருக்கவேண்டும் உன்னிடம்.

என் முழுவட்ட மார்பகங்களைத் தொடவேண்டுமென்றால்
எழுபதினாயிரம் பொன் வராகன் இருக்கவேண்டும் உன்னிடம்.

என் இல்லத்துக்கு நீ எப்போதும் வரலாம்
ஆனால் கையில் காசிருந்தால் மட்டுமே.

உன் வாயை என் வாயருகே கொண்டுவரவேண்டுமென்றால்
உன் உதடுகளாம் என் உதடுகளைத் தொடவேண்டுமென்றால்
மூன்று கோடி ப் பொன்வராகன் இருக்கவேண்டும் உன்னிடம்.

என்னை இறுகத் தழுவவேண்டுமென்றால்
எனது காதல் மையத்தை ஸ்பரிசிக்க வேண்டுமென்றால்
எனக்குள்ளே மூழ்க வேண்டுமென்றால்,
கவனி,
பொன்மழையால் என்னைக் குளிப்பாட்ட வேண்டியிருக்கும்.

@

மலைக் கோவில் பிரகாரத்தில் இருள் நுழைந்து பரவிக் கொண்டிருந்தது. அந்தப் பெண் மேற்சொன்ன பாடலைமுடித்துவிட்டு வேறு பாட்டைப் பாட ஆரம்பித்தார்.பெல்காம் நகருக்குத் திரும்ப இரண்டு மணி நேரப் பயணம். நாங்களும் நடையைக் கட்டினோம். பேருந்து நிலையத்தில் பஸ்ஸுக்காக நீண்ட நேரம் காத்திருந்தோம். இரவு ஆரம்பமாகியிருந்தது. காத்திருப்பு சலிப்பாகத் தொடங்கியபோது சவுண்டட்டி பெல்காம் பேருந்து வந்தது.முண்டியடித்து
சீட்டைப் பிடித்தோம். சட்டென்று நிரம்பி விட்ட பஸ் நகரத் தொடங்கியது.ஜன்னல் வழியாகப் பார்த்தபோது கோவில் பிரகாரத்தில் கவிதை சொல்லிக் கொண்டிருந்த பெண் இன்னும் கூடுதலான ஒப்பனையுடன் பேருந்து நிலையத்துள்ளிருந்த கடையில் சாயா குடித்துக் கொண்டிருந்தார். அவர் கண்கள் மட்டும் அலைபாய்ந்து கொண்டிருந்தன.

அண்மையில் அந்தக் கவிதையை மீண்டும் புரட்டியபோது மறுபடியும் எல்லம்மாவின் புதல்வியின் முகம் நினைவில் தெளிவாக ஒளிர்ந்தது.

@

தலைப்பு ஜெயகாந்தன் கதையொன்றிலிருந்து எடுக்கப்பட்டது.

@
கட்டுரை ‘வார்த்தை’ இதழில் வெளியானது.

1 கருத்து:

  1. சில வருடங்களுக்கு முன் பெல்காம் போனபோது சவுண்டட்டி பற்றி நண்பர் சொன்னதும் போக விருப்பம் இருந்தும் குடும்பத்தினருடன் இருந்ததால் போக முடியாமல் போனதும் ஞாபகம் வந்தது. பாடல் வரிகளில் ஒரு லேசான சோகம் தொக்கி நிற்பதையும் காணமுடிகிறது.

    பதிலளிநீக்கு