திங்கள், 7 டிசம்பர், 2009

நதியின் நீளம்

பூமியில் எழும்பி நின்ற
கருணையின் மூடுபனியைக்
கைப்பிடிக்குள் தேக்கினேன்
ஆதி நதியாயிற்று
அது.

பிடிக்குள் தளும்பிய நீரை
ஐந்துவிரல்களின் இடையில் கசியவிட்டேன்
அது
நான்கு ஆறுகளாகப் பெருகியோடியது.

முதலாவது ஆறு
உங்கள் வேட்கையின் கரையில் பாய்ந்தது
அதை
அதிகாரம் தழைப்பதற்காக ஒப்புக்கொடுத்தீர்கள்

இப்போது
நாவறண்டு திரிகிறீர்கள்.

இரண்டாவது ஆற்றை
உங்கள் ஆன்மாவின் துறைக்குள் ஓடவிட்டேன்
அதை
கனவுகள் வாங்க விற்றீர்கள்

இப்போது
உடல்சுமந்து அலைகிறீர்கள்

மூன்றாவது ஆற்றை
உங்கள் உறவுகளின் முடிச்சாக்கினேன்
அதை
பணயம்வைத்துத் தோற்றீர்கள்

இப்போது
சபிக்கப்பட்டுத் திரிகிறீர்கள்

நான்காவது ஆற்றை
உங்கள் பசிக்குணவாக்கினேன்
அதை
பனிப்பாளமாக்கிப் பதுக்கினீர்கள்

இப்போது
யாசித்துத் தடுமாறுகிறீர்கள்


நதியை நீங்கள்
நீளவாக்கில் அளந்தது பிழை

இரு கரைக்கும் இடையிலுள்ள தூரம்
இரு கரைக்கும் இடையிலுள்ள சஞ்சாரம்
இரண்டின் பெருக்கமே நதியின் நீளம்.

நீங்கள்
நிர்மாணித்த பாலங்களுக்குக் கீழே
ஆதியில் உற்பத்தியான நதிகளில்
பெருக்கெடுத்தோடுகிறது உதிரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக