நண்பர் அஞ்சென் சென் வங்காளத்தின்
உத்தர் ஆதுனிக் ( பின் நவீனத்துவம் ) போக்கின் முக்கியமான கவிஞர். சில
ஆண்டுகளுக்கு முன்பு சந்தால் பழங்குடியினரின் கவிதைகளைத் தொகுப்பதில்
ஈடுபட்டிருந்தார். சில கவிதைகளை ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்திருந்தார்.
ஆங்கில மொழியாக்கத்தின் பிரதியொன்று என்னிடம் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
அதிலிருந்து சில கவிதைகளை தமிழில் ஆக்கவும் முயன்றிருந்தேன். அதில் ஒரு கவிதை
இங்கே இடம் பெறுகிறது.
சங்கீதம் கேட்டுக் கொண்டிருந்த முடிவற்ற இரவொன்றில் இந்தக் கவிதை தொடர்பே
இல்லாமல் நினைவுக்கு வந்தது. அப்போது எம்.எஸ். சுப்பு லட்சுமியின் குரலில் தியாகராஜரின் பிரசித்தமான கீர்த்தனையான 'சோபில்லு சப்தஸ்வர'
வைக் கேட்டுக்
கொண்டிருந்தேன். அனுபல்லவியை எம்.எஸ்.
பாடிக் கொண்டிருந்தபோது தன்னிச்சையாக ஒரு கவிதையின் பொறி தட்டியது. அதை எழுதி
முடித்தேன். இங்கே இடம் பெறும் இரண்டாவது கவிதை அதுதான். சந்தால் கவிதையின் வரிகளும் தியாகய்யர் கீர்த்தனையின் அனுபல்லவியும் - நாபி ஹ்ருத் கண்ட ரசன நாஸாதுலு
அந்து ( நாபி, இதயம், தொண்டை, நாக்கு, நாசி முதலான உடலின்
இடங்களிலிருந்துதே ஏழு ஸ்வரங்களும் பொலிந்து வருகின்றன ) - இந்தக் கவிதையைத்
தூண்டியிருக்கின்றன. உண்மையில் நான் கவிதையில் எழுத விரும்பியது நான் பலமுறை கேட்டும் அலுக்காத புதிதாகக் கேட்பதுபோலத் தொனிக்கும் அந்த ராகத்தைப் பற்றித்தான். ஆனால் உள்ளுக்குள் இருந்த பழங்குடி உணர்வு அதை வேறு ஒன்றாக மாற்றி விட்டது. ஆனாலும் கவிதையைத் தூண்டி விட்ட அந்த ராகத்துக்கு நன்றி தெரிவிப்பதற்காக அதையே தலைப்பாக்கினேன். ‘ஜகன்மோகினி’.
மே 2008 இல் எழுதிய கவிதையை அச்சுக்குக் கொடுக்கவில்லை. சங்கோஜம். 2011 இல் 'நீருக்குக் கதவுகள் இல்லை'
தொகுப்பில் சேர்த்து விட்டு அதே கூச்சம் காரணமாக உடனேயே விலக்கிக்
கொண்டேன்.
க.மோகனரங்கனின் புதிய தொகுப்பு 'மீகாம'த்தை வாசித்துக் கொண்டிருந்த
போது அதில் இடம் பெற்றிருக்கும் 'யவனராணி' கவிதை மேற்சொன்ன இரண்டு கவிதைகளையும் மறுபடியும் நினைத்துப்
பார்க்கச் செய்தது; இரண்டாம் முறையாக. மோகனரங்கனின் தொகுப்புப் பற்றிப் பேசிய தருணத்தில் நண்பர்
இசை இந்தக் கவிதையைப் பற்றிச் சொன்னது முதல் முறை. நான் வேகமாக 'இது என்னோட கவிதையாச்சே?' என்றேன். இந்த அந்தரங்கத் தகவலை இசை மோகனரங்கனின் நூல்
மதிப்புரைக் கூட்டத்தில் எழுத்து வடிவிலும் குரல் வடிவிலும் பதிவு
செய்திருக்கிறார். ’ஏங்க இப்படிப் பண்ணினீங்க?
என்றால் 'பேரைச் சொல்லலியே?
அது மட்டுமில்லே என் பேருக்குப்
பொருத்தமாக இருக்கவேண்டாமா? என்கிறார். இசை என்பார் சத்தியமூர்த்தி என்பதை வாசகர்கள்
அறிவார்கள்தானே?
மூன்று கவிதைகளும் இங்கே.மூன்றுக்கும் ஏதாவது தொடர்புஇருக்கிறதா?
கவிதை 1 மர்மம்
ஆடைகளில்லாத உன்னைப் பார்த்திருக்கிறேன்
அட, என்ன
அழகு?
ஆடைகள் புனைந்த உன்னைப் பார்த்திருக்கிறேன்
அட, என்ன
அழகு?
வெள்ளி மூக்குவளையம் அணிந்தவளே,
ஆடைகளில்லாமல் கண்டதெல்லாம்
ஆடைஉடுத்ததும் மர்மமாவது எவ்விதம்?
அட,
தழையாடை உடுத்தவனிலிருந்து
இழையாடை உடுத்தவன்வரை
எத்தனை காலமாகத் தேடுகிறோம் இந்த ரகசியத்தை?
- சந்தால் பழங்குடிப் பாடல்
சந்தால் பழங்குடிப் பெண்
கவிதை 2 ஜகன்மோகினி
மறைக்கப்படாத உன் இடங்களை எல்லாம்
பகல் ஒளியின் உண்மைபோலத்
பார்த்த எனக்கு
ஆடையின் இருளில் அதே இடங்கள்
அறியாமையின் திகைப்பாய்த்
திணறவைப்பதேன்?
தெளிந்த ரகசியம் எந்தப் பொழுதில்
தெரியாப் புதிராகிறது ஜகன் மோகினி?
( ஜகன்மோகினி: 15 ஆவது மேளகர்த்தா ராகமான மாயாமாளவகௌளையின் ஜன்ய ராகம்) .
- சுகுமாரன்
@
கவிதை 3 யவனராணி
களைந்த பின்
தேடி
ஏமாறுகிறேன்.
உடுத்தி
நீ
நடக்கையில்
பிறப்பித்து
உலவவிட்ட
இரகசியங்கள்
ஒவ்வொன்றையும்.
- க.மோகனரங்கன் ( மீகாமம் )
Arumai sir
பதிலளிநீக்கு