பக்கங்கள்

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

தி.ஜானகிராமன் கட்டுரைகள் - ஒரு வேண்டுகோள்

 

காலச்சுவடு பதிப்பகம் 2014  ஆம் ஆண்டு தி.ஜானகிராமன் சிறுகதைகளின் முழுத் தொகுப்பை வெளியிட்டது. இந்த நூலைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோதுதான் அச்சில் வெளிவந்தும் தொகுப்புகளில் இடம் பெறாத கதைகள் பற்றிய விவரங்கள் தெரியவந்தன. இலக்கிய ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், நண்பர்கள், ஜானகிராமன் மீது பற்றுக்கொண்டவர்கள் எனப் பலரது துணையுடன் கதைகள் திரட்டப்பட்டன. அவை ‘கச்சேரி’ என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்றன.   

 

தி.ஜானகிராமன் சிறுகதைகள் – முழுத் தொகுப்பு, கச்சேரி – தொகுக்கப்படாத சிறுகதை – ஆகிய இரண்டு நூல்களுக்கான பணிதந்த உற்சாகமும் நிறைவும் தி.ஜானகிராமன் கட்டுரைகளைத் தொகுக்கும் எண்ணத்தை அளித்தன. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுரைகளைத் தேடித் திரட்டும் வேலையில் ஈடுபட்டேன். ஜானகிராமனின் நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள், பயணக் கதைகள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டால் கட்டுரைகளின் எண்ணிக்கை குறைவே. அவற்றில் சில ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்ட தி.ஜானகி ராமன் படைப்புகள் – தொகுதி 2 இல் சேர்க்கப்பட்டுள்ளன. இவை தவிரவும் சில கட்டுரைகளை இந்த முயற்சியில் கண்டடைந்தேன். சிறுகதைகளுக்கு உதவியதுபோலவே முன் குறிப்பிட்டவர்கள் கட்டுரைகளைத் தேடவும் துணை புரிந்தார்கள். அரிய சில கட்டுரைகளைக் கண்டெடுத்துக் கொடுத்தார்கள். இவையனைத்தும் தொகுக்கப்பட்டு தி.ஜானகிராமன் கட்டுரைகள் என்ற நூலாக விரைவில் வெளியாக உள்ளது.

 

ஐந்து நூல்களுக்கு தி.ஜானகிராமன் முன்னுரை எழுதியுள்ளார். அவரது வாசிப்பு அனுபவத்தையும் இலக்கியக் கருத்தையும் சொல்பவை என்ற நிலையில் இந்த முன்னுரைகளும் கட்டுரைத் தொகுப்பில் சேர்க்கத் தகுதி பெற்றவை. சேர்க்கப்பட்டும் உள்ளன. எம்.வி. வெங்கட்ராமின் நித்ய கன்னி, ஆர்வியின் செங்கமலவல்லி, இந்திரா பார்த்தசாரதியின் ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன, ஆதவனின் இரவுக்கு முன்புவருவது மாலை, மாலனின் கல்லிற்குக் கீழும் பூக்கள் ஆகிய நூல்களுக்கு தி.ஜானகிராமன் முன்னுரை வழங்கியிருக்கிறார். இலக்கிய சிந்தனை அமைப்பின் சார்பில் வானதி பதிப்பகம் வெளியிட்ட 1978 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பான பசியிலும் அவரது முன்னுரை இடம் பெற்றிருக்கிறது. மாதத்தின் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 கதைகளை மதிப்பிட்டு அவர் வாசித்த விமர்சனக் கட்டுரையே முன்னுரையாக வெளியிடப் பட்டிருக்கிறது.

 

மேற்சொன்ன முன்னுரைகளில் ஐந்து தி.ஜானகிராமன் கட்டுரைகள் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆர்வியின் ‘செங்கமலவல்லி’ நாவலுக்கு தி.ஜானகிராமன் எழுதிய முன்னுரை கிடைக்கவில்லை. வானதி பதிப்பகம் வெளியிட்ட இந்த நாவலின் மூன்றாம் பதிப்பை மட்டுமே பார்வையிட முடிந்தது. அதில் தி.ஜானகிராமன் முன்னுரை இடம் பெறவில்லை. பதிலாக ஆர்வியே முன்னுரை எழுதியிருக்கிறார். நாவலின் முதல் பதிப்பு கலைமகள் காரியாலயம் வெளியீடாக வந்திருக்கலாம். பின்னர் வெளியான வானதி பதிப்புகளில் ஜானகிராமன் முன்னுரை நீக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க வாய்ப்புள்ளது.  

 

தி.ஜானகிராமனின் ‘செங்கமலவல்லி’ முன்னுரை குறித்து அறிந்தவர்கள் தகவல் அளிக்கும்படியும் முன்னுரையுடன் கூடிய நூலின் முதல் பதிப்பை வைத்திருப்பவர்கள் நூலையோ அல்லது முன்னுரையின் நகல் வடிவத்தையோ தந்து உதவுமாறும் அன்புடன் வேண்டுகிறேன். ஜானகிராமன் எழுதிய முன்னுரைகளில் ஒன்று மட்டும் இடம்பெறவில்லை என்ற விட்ட குறையைக் களைய உங்கள் ஒத்துழைப்பு துணைபுரியும்.

 

தி.ஜானகிராமன் எழுதிய கட்டுரைகள் வெளியான இதழ்கள், நூல்களை அளித்தும், அவை பற்றிய விவரங்களைப் பகிர்ந்தும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நூற்றாண்டு காணும் மகத்தான படைப்பாளியை மேலும் அணுக்கமாக உணர இந்த உதவி இன்றியமையாதது. நவீனத் தமிழின் எழுத்துக் கலைஞர்களில் ஒருவரைக் கொண்டாடுவதில் எல்லாருக்கும் பங்கு உண்டு.

 

நன்றி.

 

அன்புடன்

சுகுமாரன்

 

தொடர்புக்கான மின் அஞ்சல்: editor@kalachuvadu.com                       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக