பக்கங்கள்

வெள்ளி, 1 அக்டோபர், 2021

பொன்மான்












 

நேற்றைக்கு முன் தினம். செல்லத் தூறல் விழுந்து கொண்டிருந்தது. ஆனி ஆடியில் பொழிந்திருக்க வேண்டிய சாரல் மழை தாமதமாக வந்து சேர்ந்திருந்தது. மாடியறை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஜன்னலுக்கு அப்பால் தெரியும் மின் கம்பிகளில் நீர் மணிகள் திரண்டு தொங்கின. சில துளிகள் உதிர்ந்தபோது பார்வையை நகர்த்தினேன். நீல நிறப் பறவை கம்பியில் அமர்ந்திருந்தது. முதலில் முகத்தை காட்டி உட்கார்ந்திருந்த பறவை சட்டென்று திரும்பி வாலைக்காட்டி அமர்ந்தது. ட்ரூவ் என்று ஒலியெழுப்பினேன். கேட்காத பாவனையில் மழையில் நனைந்து கொண்டிருந்தது. இன்னொரு ட்ரூவுக்குத் தலையை மட்டும் திருப்பி அலட்சியமாகக் கண்களை உருட்டிவிட்டுத் திரும்பவும் மழையில் நனைந்து கொண்டிருந்தது. கைபேசியை ஜன்னலுக்கு வெளியில் நீட்டிப் பிடித்து நாலைந்து படங்கள் எடுக்கும்வரை நீல வாலையும் சிறகையும் காட்டிப் போஸ் கொடுத்தது. மறுபடியும் ஒருதடவை ட்ரூவ் என்று சத்தம் கொடுத்தேன். உனக்கு வேறு வேலை இல்லை என்று வாலைக் குலுக்கிக் கம்பியிலிருந்து எவ்விப் பறந்தது. அதற்குள் மழையும் வலுத்தது. ஜன்னலை அடைத்து விட்டு நகர்ந்தேன்.
அது எங்கள் குடியிருப்புப் பகுதியில் அவ்வப்போது பார்க்கக் கிடைக்கும் பறவைதான். மீன்கொத்தி. முன்பு விளைமண்ணாகக் கிடந்த நிலம் இப்போது குடியிருப்பாக மாற்றப்பட்டிருக்கிறது. எனினும் அங்குமிங்குமாக நீரோட்டம் உள்ள பூமி. அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை திருவனந்தபுரத்துக்கும் கொல்லத்துக்கும் நீர்வழிப் போக்குவரத்து நடந்த பார்வதி புத்தனாறு கால்வாய் அருகில் இருக்கிறது. நீர் ஊறும் சதுப்பு. மழை நீரில் சிப்பிகளும் நத்தைகளும் பொடி மீன்களும் நீந்தும். அவற்றை இரை கொள்ள வரும் பறவைகளில் ஒன்றுதான் இந்த மீன்கொத்தி வகையறா.

எடுத்த படங்களை எந்த உத்தேசமும் இல்லாமல்தான் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தேன். நண்பர்கள் அம்பை, சேரன், தியடோர் பாஸ்கரன் மூவரும் பின்னூட்டம் இட்டார்கள். சேரன் அது குக்குறுவான் என்றார். பாஸ்கரன் மீன்கொத்தி என்றார். இரண்டையும் பார்த்ததில் பெயர்க் குழப்பம் ஏற்பட்டது. கேரளத்தின் புகழ் பெற்ற பறவையிலாளரான இந்து சூடனின் ‘ கேரளத்தில் பறவைகள்’, மற்றொரு பறவையியலாளரான சி.ரஹீமின் ‘ தென்னிந்தியப் பறவைகள்’ ஆகிய நூல்கள் சேகரிப்பில் இருக்கின்றன. அவற்றை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். அது மீன் கொத்திதான் என்று உறுதியானது. சிறகும் வாலும் நீல நிறம், வயிற்றுப் பகுதி காவி, மார்புப் பகுதியில் வெள்ளை, காதோரம் செம்பட்டையும் தவிட்டு நிறமும். ஆக நான் பார்த்தது மீன் கொத்தியைத்தான்.

பறவையை இனங்கண்ட மகிழ்ச்சியை விட அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது அதற்குக் கேரளத்தில் வழங்கும் விளிப்பெயர். அந்தப் பெயரைப் பல்லவியில் கொண்ட புகழ்பெற்ற திரைப்பாடலும் நினைவுக்கு வந்தது. வயலார் ராமவர்மா எழுதி சலீல் சௌதுரி இசையமைத்து யேசுதாஸும் மாதுரியும் பாடிய ‘நெல்லு’ படத்தின் பாடல். அதைக் கேட்கும் போதெல்லாம் பாட்டு முன்னிலைப் படுத்துவது இருகால் பறவையையா நாலுகால் விலங்கையா என்று தடுமாற்றம் ஏற்பட்டதுண்டு. ‘ நீலப் பொன்மானே, என்டெ நீலப் பொன்மானே’ என்று பாடலில் குறிப்பிடப்படுவது எது என்று குழம்பியதும் உண்டு. பல்லவியின் வரி அதைத் தெளிவாக்கும். ‘ வெயில் நெய்த புடைவை தருவாயா? என்று நாலு கால் மானிடம் கேட்க முடியாது. ஆகாயத்தில் உலவும் பறவையிடம் கேட்கலாம். ஏனெனில் மலையாளத்தில் மீன்கொத்திக்கு வழங்கும் சாதாரணப் பெயர் ‘பொன்மான்’.

இவையெல்லாம் இரண்டு நாட்களுக்கு முந்தைய சமாச்சாரங்களும் யோசனைகளும். இன்று காலை அறைக்குள் வந்து அமர்ந்தேன். ட்வீக் என்றொரு சத்தம். ஜன்னல் பக்கமாகப் பார்த்தேன். மார்பு வெள்ளை முந்தித் தெரிய நீல வாலைக் குடைந்து கொண்டு திட்டில் உட்கார்ந்திருந்தது ஒரு மீன்கொத்தி. முன்பு பிணக்கத்துடன் வாலைக் காட்டிய பறவை முக தரிசனம் அருளிக் கொண்டு உட்கார்ந்திருந்தது. ‘பொன் மானே’ என்று அழைத்ததும் தலையைக் குலுக்கியது. ‘பார்த்து விட்டாயா, போகட்டுமா?’ என்பதுபோல சின்ன உடலை அசைத்தது. ‘நீலப் பொன்மானே’ என்றதும் சரி என்று பறந்தது. பறந்துபோன பின்புதான் அதைப் படமெடுக்க மறந்தது உணர்வில் தட்டியது.


இன்று வந்தது பழைய பறவையா, இல்லை, புதிய பறவையா? தெரிய வில்லை. அன்று வந்த பறவைதான் இன்றும் வந்தி்ருக்க வேண்டும். அந்தப் பொன்மானுக்குத்தானே என்னை முன்னமே தெரியும்?






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக