செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

ஹெல்மா சாண்டர்ஸ் ப்ராம்ஸ்





1986 அல்லது 87 ஆம் ஆண்டில் ஹெல்மா சாண்டர்ஸ் ப்ராம்ஸ் என்ற இயக்குநரின் படங்களைப் பார்க்கும் வாய்ப்பும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. சென்னை மாக்ஸ்முல்லர் பவன் அரங்கில் அவரது படங்கள் திரையிடப்பட்டன. மாக்ஸ்முல்லர் பவன் அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் வளாகத்தில் - இன்றைய எக்ஸ்பிரஸ் அவென்யூ - இருந்தது. இயக்குநர் படங்களின் மீள் பார்வை ( Director's Retrospective ) என்ற முறையில் ஹெல்மாவின் நான்கோ ஐந்தோ படங்கள் திரையிடப்பட்டன. ஒரு படம் மட்டும் மயிலாப்பூர் ஆலிவர் சாலையிலிருக்கும் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கில் திரையிடப் பட்டது. அன்று படம் பார்க்க வந்திருந்தவர்களில் கோமல் சுவாமிநாதனும் அனந்துவும் இருந்தார்கள் என்பது இப்போதும் நினைவிலிருக்கிறது. கோமலுக்கு அடுத்த இருக்கையில் , அனந்துவுக்கு நேர் பின்னிருக்கையில் உட்கார்ந்திருந்தேன்.

எண்பதுகளில்  உலக சினிமாவின் மையமாக இருந்தது ஜெர்மனிதான். கூடவே ஹங்கேரியப் படங்களும் கவனத்தை ஈர்த்தன. மாக்ஸ் முல்லர் பவனிலும் திரைப்படச் சங்கங்களிலும்  பார்த்த ஜெர்மன் இயக்குநர்களான பாஸ் பைண்டர், விம் வென்டர்ஸ், பஸோலினி ஆகியோரின் படங்கள்  மூச்சுத் திணறும் ஆச்சரியத்தைத் தந்தன. எட்கர் ரெய்ட்ஸின் 'ஹெய்மத்' படம் பார்ப்பதற்காக மட்டுமே கோவையிலிருந்து நண்பர் விஸ்வநாதனுடன் சென்னைக்கு வந்தது மறக்க விரும்பாத அனுபவம்.  மார்க்கரெட் வான் டிரவோட்டாவின் படங்கள் ஒரு பெண்ணால் இப்படிச் சினிமா எடுக்க முடியுமா? என்று முட்டாள்தனமாக வாயைப் பிளக்க வைத்தன. தனிப்பட்ட முறையில் இன்னும் அகலமாக வாயைப் பிளக்க வைத்தவை ஹெல்மாவின் படங்கள். தில்லி, பம்பாய், பெங்களூர் என்று தனது படங்களின் திரையிடலில் பங்கேற்று சென்னை வந்து சேர்ந்திருந்தார் ஹெல்மா. படங்களின் திரையிடலுடன் அவரது நேர்காணல்களும் நடைபெற்றன.



அன்று பார்த்த ஹெல்மா சாண்டர்ஸ் ப்ராம்ஸின் நான்கு படங்களில் என்னை உலுக்கிய காட்சிகள்  இப்போதும் கண்ணை மூடினால் நினைவில் ஓடத் தொடங்கும். ஜெர்மனி - மை பேல் மதர் ,( Germany My Pale Mother )நோ மெர்சி நோ ஃப்யூச்சர், ( No Mercy No Future ), தி ஃப்யூச்சர் ஆஃப் எமிலி, ( The future of Emily ) ஹென்றிச் ( Henrich )ஆகிய படங்கள்  என்னைக் கவர்ந்தன. அந்தத் திரையிடலின் போது வழங்கப்பட்ட சிறு பிரசுரம் இன்னும் கைவசமிருக்கிறது.  நான் கேட்டதற்கு இணங்கி அதில் ஹெல்மா கையெழுத்தும் போட்டுக் கொடுத்தார். ஒரு சினிமாக் கலைஞரிடம் நான் வாங்கிய முதல் கையெழுத்து அது.

ஹெல்மாவின் படங்களில் என்னை மிகவும் பாதித்த படங்கள் நோ மெர்சி நோ ஃப்யூச்சரும் ஹென்றிச்சும். பூர்ஷுவாப் பெற்றோர்களால் அசிரத்தையாக வளர்க்கப்பட்ட வெரோனிகா மனச்ச் இதைவுக்கு ஆளாகிறாள். மனநல விடுதியில் சேர்க்கப்படுகிறாள். விடுதியிலிருந்து திரும்பி வந்த பின்னர் அவள் யாருக்கும் வேண்டாதவளாக வெளியேற்றப் படுகிறாள். நாடு கடத்தப் பட்டவர்களின் கூட்டத்தில் போய்ச் சேர்கிறாள். இதுதான் கதையின் ஒற்றை வரி என்பது இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அதில் வரும் ஒரு காட்சியின் கொடூரம் இன்னும் சிவப்பாக நினைவில் இருக்கிறது. 


                    நோ மெர்சி நோ ஃப்யூச்சர் - போஸ்டர்


மாத விலக்கான வெரோனிகாவை முகம் தெரியாத ஒருவன் வன்மையாகப் புணரும் காட்சியில் எனது தொடைகள் நடுங்கியதும் வாய் உலர்ந்து  நாக்கு ஒட்டிக் கொண்ட்தும் நினைவிருக்கிறது. நேர் காணலுக்குப் பிறகு ஹெல்மாவிடம் தயக்கமான ஆங்கிலத்தில் 'இவ்வளவு வன்முறை ஏன்?' என்று கேட்டது நினைவிருக்கிறது. ' இதை விடவும் குரூரமான வன்முறைகள் வாழ்க்கையில் இல்லையா?' என்று அவர் பதில் கேள்வி கேட்டார். அந்தப் படத்தில் நடித்த பெண்ணுக்கும் அந்தக் காட்சி காரணமாக மனப் பிறற்வு ஏற்பட்டதைச் சொன்னபோது அவர் முகம் இறுகி இருந்ததும் நினைவிருக்கிறது.



'ஹென்ரிச்' என்ற படமும் மனச் சிதைவுக்கு ஆளான கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டதுதான். வேதனைகளுடனும் வலிகளுடனும் அமைதியற்று வாழ்ந்த ஜெர்மானியக் கவிஞரும் எழுத்தாளருமான ஹென்றிச் வான் க்ளீஸ்ட்டின் வாழ்க்கை அந்தப் படம். வேதனைகளால் துரத்தப்பட்ட ஹென்றிச்சின் தற்கொலையிலிருந்துதான் படம் தொடங்குகிறது என்று ஞாபகம்.


                                ஹென்ரிச்


இரண்டாம் உலகப் போரின் தீவினைகளும் நாஜி வதை முகாமின் கொடுமைகளும் எல்லா ஜெர்மானிய இயக்குநர்களையும் போல ஹெல்மாவுக்கும் கதைப் பொருளாக இருந்தன. அதை அவர் பெண்ணின் பார்வையில் சித்தரித்தார். அதிலிருந்த திரையை மீறிய உண்மை உணர்வு வெகு காலம் மனதுக்குள் அலைமோதிக் கொண்டிருந்தது. பின்னர் அவரது படங்களைப் பார்க்க வாய்க்கவில்லை. அவரைப் பற்றி அறியவும்  முடிய வில்லை. ஆனால் அவரது படங்களைப் பற்றிய ஞாபகங்களும்  அவரது முகமும் ஒருபோதும் மறக்கவில்லை. அவரது படங்களைப் பற்றி எப்போதாவது எழுதி விட வேண்டும் என்று மனதுக்குள் உருவாக்கி வைத்திருக்கும் திட்டமும் மறக்கவில்லை.

சென்ற மாதம் தமிழகத்துக்கு வந்திருந்த நண்பர் பிரசாந்தி சேகரிடம் பேசிக் கொண்டிருந்தபோது ஹெல்மா சாண்டர்ஸ் ப்ராம்ஸைப் பற்றி விசாரித்தேன். அவருக்கும் அது கேள்விப் பட்ட பெயராக இருந்ததே தவிர வேறு தகவல்களைச் சொல்ல முடியவில்லை. ஹெல்மாவின் படங்களின் டிவிடியையோ அவரைப் பற்றிய தகவல் அடங்கிய புத்தகங்களையோ எனக்காகத் தேடும்படிக் கேட்டுக் கொண்டேன். செய்வதாக ஒப்புக் கொண்டார். இன்று ஃபேஸ்புக்கின் சாட்டில் பிரசாந்தி போட்டிருந்த தகவலைப் பார்த்ததும் சற்று நேரம் அதிர்ச்சி கலையாமல் உட்கார்ந்திருந்தேன். அவ்வப்போது இணையத்தில் உலாவியும் இந்தத் தகவலை எப்படித் தவற விட்டேன் என்று நொந்து கொண்டேன்.


ஹெல்மா சாண்டர்ஸ் ப்ராம்ஸ் , இந்த மே மாதம்தான் காலமாகி யிருக்கிறார். 'துரதிர்ஷ்டவசமாக சில மாதங்களுக்கு முன்புதான் அவர் மறைந்திருக்கிறார்' என்று போட்டிருக்கிறார் பிரசாந்தி. என்னுடைய துரதிர்ஷ்டம் என்று நினைக்கத் தோன்றுகிறது.