வெள்ளி, 8 டிசம்பர், 2017

ஒரு தேவதைக் கதை














ரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கல்கத்தா சென்றிருந்தேன். தொழில் நிமித்தமான பயணம். ஆனால் அதற்கு மறைமுகமாக கலை நோக்கம் ஒன்றும் இருந்தது. என் அபிமானத்துக்குரிய இருவரைச் சந்திப்பதையும் பயணத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டிருந்தேன். ஒருவர் சத்யஜித் ராய். மற்றவர் மாதவி முகர்ஜி.

கோவையில் நாங்கள் நடத்திவந்த திரைப்படச் சங்கத்தில் நான்காவதாகத் திரையிட்ட படம் ராயின் சாருலதாமிகுந்த பணமுடையில் தங்கையின் நகையை அடகுவைத்துக் காசு   சேகரித்துத் திரையிட்டோம்.அந்தச் செயல் தந்த குற்ற உணர்வைப் படம் தீர்த்தது. இதுபோன்ற படத்தைப் பார்ப்பதற் காகவும் காண்பிப்பதற்காகவும் வங்கியைக் கொள்ளையடித்தால் கூடத் தப்பில்லை என்று மனம் வாதாடியது. படச் சுருள்கள் அடங்கிய பெரிய பெட்டியை  ஊட்டி, திருப்பூர், ஈரோடு ஆகிய ஊர்களில் செயல்பட்டு வந்த திரைப்படச் சங்கங்களில் திரையிடுவதற்காகச் சுமந்துகொண்டு போனேன். அந்தச் சாக்கில் மறுபடியும் படத்தை மீண்டும் பார்க்க முடிந்தது. படத்தின் ஒவ்வொரு சட்டகமும் ஒவ்வொரு ஒலித் துணுக்கும் நினைவில் தங்கின. இன்றும் அவற்றுக்கு மங்கல் ஏற்பட்டு விடவில்லை.

சாருலதா படம் வலுவாக ஈர்த்ததற்குக் காரணம் அதன் கலை அழகு. செய் நேர்த்தி. சத்யஜித் ராயின் மேதைமை. கூடவே சாருவாக நடித்த மாதவி முகர்ஜி. இருபத்தி மூன்று இருபத்தி நாலு வயதில் அவர் மீது தோன்றிய மானசீகக் காதல் நாளடைவில் கூடிக் கொண்டே போனது. சாருவின் மேலான கிறக்கம் மாதவி முகர்ஜி நடித்த பிற படங்களைத் தேடிப் பார்க்கச் செய்தது.ராயின் மகாநகரில் ஆர்த்தியாக காபுருஷில் கருணாவாக , ரித்விக் கட்டக்கின் சுபர்ணரேகாவில் சீதாவாகப் பார்த்ததில் கிறக்கம் அதிகரித்தது. கல்கத்தாவில் அவரைப் பார்த்தே தீருவது என்று உறுதி கொண்டேன். சத்யஜித் ராய் உலகப் புகழ் பெற்றவர். அவரைச் சந்திப்பது அவ்வளவு எளிதாக இராது. ஆனால் மாதவி முகர்ஜியையைப் பார்த்துவிட முடியும் என்று அசட்டுத்தனமாக நினைத்தேன். நினைப்புக்கு மாறாக ராயைச் சந்திக்க முடிந்தது. வெகு பாடுபட்டும் மாதவி முகர்ஜியின் வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை.ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினேன்.

சாருலதாவின் மீது கொண்ட ஈடுபாட்டை  மாதவி முகர்ஜியின் மீதான ரகசிய ஆராதனையாகப் பாதுகாத்தேன். அந்த மோகக் கிறுக்கில் திருமணம் ஆகிப் பெண் குழந்தை பெற்றுக் கொள்வேன். அதற்கு எனக்குப் பிடித்த ராகமான மத்தியமாவதி என்ற பெயரைத்தான் சூட்டுவேன்; செல்லமாக மாதவி என்று அழைப்பேன் என்று கனவு கண்டு கொண்டிருந்தேன். திருமணத்துக்குப் பின்னர் பிள்ளைப் பேறு வேண்டாம் என்று முடிவெடுத்தபோது அந்த முடிவு தந்த வேதனையை விட இந்த இரண்டு மகத்தான பெயர்களை இழந்ததுதான் துக்கம் தந்தது.

பின்னாட்களில் சாருலதா, மகாநகர் ஆகிய திரைப்படங்களைப் பலமுறை மீண்டும் மீண்டும் பாத்திருக்கிறேன். மாதவி முகர்ஜி மீதான ஈர்ப்பு ஒரு போதும் குறையவில்லை. 1995 இல் அவருடைய தன் வரலாறு 'ஆமி மாதவி' வெளிவந்தது. நண்பரும் வங்காளக் கவிஞருமான அஞ்சன் சென்னிடம் அதை வாசித்துக் காட்டும்படி  தொந்தரவு செய்து புத்தகத்தின் சுவாரசியமான பக்கங்களை அவசரத் தமிழாக்கம் செய்து எழுதி வைத்துக் கொண்டேன். தனக்கும் சத்யஜித் ராய்க்கும் இடையே நிலவிய காதலைப் பற்றி மாதவி முகர்ஜி எழுதியிருந்த பக்கங்களை நூறு முறையாவது வாசித்துப் பெருமூச்சு விட்டிருப்பேன். பின்னர் அந்த நூல் ஆங்கிலத்தில் 
' என் வாழ்க்கை என் காதல்’ ( My Life My Love )  என்று வெளியானது. ஆனால் அதில் அந்தப் பக்கங்கள் இடம் பெறவில்லை. வருத்தமாக இருந்தது. ஆனால் ’ஃபூலி ஃபீலு தூலி தூலி’ என்று பாடிக் கொண்டே சாருலதா ஊஞ்சலாடிக் கொண்டிருந்தாள். இல்லை, மாதவி முகர்ஜி ஊஞ்சலாடிக் கொண்டிருந்தார். 2004 இல் வங்காள இயக்குநர் ரிதுபர்ண கோஷுடன் சிறிய அளவிலான நட்பு ஏற்பட்டது. அவரது படங்களைத் தேடிப்பார்க்கும் ஆர்வம் முண்டியது. அதில் ஒரு படத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது என் சொப்பன ஊஞ்சல்  அறுந்து விழுந்தது. ரிதுபர்ண கோஷின் 'உத்சப்' படத்தில் நான்கு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார் மாதவி முகர்ஜி. ஊஞ்சல் ஆடிய தேவதை அந்தரத்தில் மறைந்து போனார்.

ரிதுபர்ணகோஷின் 2010 ஆம் ஆண்டு திரைப்படம் 'அபோமன்' பார்க்கும் போதுதான் மீண்டும் மாதவி முகர்ஜி நினைவுக்கு வந்தார். படத்தின் கதை ஒரு கலைப்பட இயக்குநருக்கும் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நாயகிக் குமான காதலைப் பற்றியது. மரணமடைந்த இயக்குநருக்கு இறுதி அஞ்சலி செலுத்த நாயகி வருவதிலுள்ள சிக்கலைப் பற்றியது. மறைமுகமாகச் சொல்லப்படும் பாவனையில் ரிதுபர்ணோ சித்தரித்திருந்தது ராய்க்கும் மாதவிமுகர்ஜிக்கும் இடையிலிருந்த காதலைத்தான். ராயின் 'துரோகத்தை' நினைக்காமலும் மாதவி முகர்ஜிக்காகப் பரிதாபப்படாமலும் 'அபோமனை'ப் பார்க்க முடியவில்லை. கண்கலங்காமலும். ரிதுபர்ணோவின் திரைப் பாத்திரமான ஷிக்கா, மாதவி முகர்ஜிதான் என்பதில் எனக்கு சந்தேகமே எழவில்லை. அபோமன்னில் நடித்த அனன்யா சட்டர்ஜியின்  உடல் மொழியும் சலனங்களும் மாதவி முகர்ஜியின் சாருலதாவை ஒற்றியெடுத்திருந்தது சந்தேகத்தைப் போக்கியது. மீண்டும் மாதவி முகர்ஜியின் மீதான ஈர்ப்பு தலைநீட்டியது. இப்போது அது இருபத்து நாலு வயசின் மோகக் கிறக்கமாக அல்ல; முற்றிய மனதின் மரியாதையாக இருந்தது. சத்யஜித் ராயையும் மனைவி பிஜயா ராயையும் நேரில் பார்த்திருக்கிறேன். மாதவி முகர்ஜியையும் பார்த்து விட வேண்டும் என்று உள்ளூர ஆசைப்பட்டிருந்தேன். திருவனந்தபுரத்தில் நடைபெறும் உலகத் திரைப்பட விழாவை இந்த ஆண்டு தொடங்கி வைப்பவர் மாதவி முகர்ஜி என்று தெரிந்ததும் மனம் உற்சாகக் கூத்தாடியது.

இன்று மாலை படவிழாவின் தொடக்க வைபவம். சிறப்பு அழைப்பாளர்கள் ஒவ்வொருவராக வரவர பதற்றம் கூடியது. மாதவி முகர்ஜியைத் தேடினேன். காணவில்லை. விழா மேடைக்கு ஒவ்வொருவராக அழைக்கப்பட்டார்கள். மாதவி முகர்ஜியின் பெயர் அழைக்கப்பட்டது. கையில்லாத ரவிக்கை அணிந்த, பருத்த சரீரம் கொண்ட ஒரு மூதாட்டி கைத்தடியை ஊன்றி மெல்ல மேடை மீது ஜாக்கிரதையாக எட்டு வைத்து நடந்து கொண்டிருந்தார். 'தேவதைகளுக்கு வயதாகக் கூடாது. வயதான தேவதைகள் ஆராதகர் முன்னால் தோன்றக் கூடாது'  என்று தொண்டை அடைக்கச் சொல்லிக்  கொண்டேன்.








புதன், 6 டிசம்பர், 2017

Water scooped in my hand


Water scooped in my hand


Water
That I scooped
In the pit of my palm
Became alien to river
It  has become static
The sky waves in it

Then
I let flow it into the river,
Now in the flowing river 
Which is my water?

@

Translated from Tamil by 
A  PUTHOLI