சனி, 15 அக்டோபர், 2016

புலி ஆட்டம்





ன் செல்லப் பிராணி
பரம சாது என்றால்
நம்ப ஏனோ மறுக்கிறீர்கள்

சிரிக்கும்போதும் சினந்து எரியும் கண்கள்
அப்போதுதான்
திரித்து முறுக்கிய நார்வட வால்
கணக்காகப் பார்த்து
தாறுமாறாகக் கீறிய ரோமக் கோடுகள்
பாலை வெய்யிலின் உக்கிர சருமம்
நெளியும் உயிரைக் கவ்வும் வளைஎயிறுகள்
நிலம் கிழிக்கும் கொன்றை உகிர்ப் பாதங்கள்

எல்லாம் இருப்பதால்
அஞ்சி மிரண்டு நடக்கிறீர்கள்

என் செல்லப் பிராணி
சாகபட்சணி என்றால்
ஒப்புக்கொள்ள ஏனோ  தயங்குகிறீர்கள்

பசித்தால்
பசும் புல்லைத்தான் மேய்கிறது
தாகித்தால்
துளசி தீர்த்தமே அருந்துகிறது

பாருங்களேன்
புஜிபுஜி என்று அழைத்தால்
ஒரு பூனையைவிட
எவ்வளவு ஒய்யாரமாக
ஓடிவந்து காலடியில் ஒண்டிக்கொள்கிறது

உண்கலத்தில் பரிமாறிய வாதுமைக் கொட்டைகளை
ஒரு அணிலைவிட
எவ்வளவு பக்குவமாகப் பிளந்து கொறிக்கிறது

உண்ட களைப்பில்
ஒரு தியானியைவிட
எவ்வளவு சாந்தமாக சுகாசனத்தில் அமர்கிறது

பாருங்களேன்
அன்பு மீதூற அனிச்சையாக
சூச்சூ என்று ஒலி எழுப்பியதும்
முதல் மழைத்துளியில் சிலிர்க்கும் அரசந்தளிர்போல
எவ்வளவு பரவசத்துடன் முதுகைச் சிலிர்க்கிறது.

பரமசாது என் செல்லம் என்பதை
எவ்வளவு சொன்னாலும் ஏற்க மறுக்கிறீர்கள்.

என் அருமைப் பிராணி
வன் விலங்கு என்று
உங்களைப் போலவே எனக்கும் தெரியும்
எனக்குத் தெரியும் என்பது
என் செல்லத்துக்குத் தெரியாது.


செவ்வாய், 4 அக்டோபர், 2016

நடிகையும் பாதிரியாரும்






                            எர்னெஸ்டோ கார்டினல்


பழைய குறிப்பேடுகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன். எழுதத் தொடங்கி பாதியில் நின்று போன கவிதைகள். தலைப்பு மட்டும் எழுதி இன்று நினைவுக்கே வர மறுக்கும் கவிதைகள், கால், அரை, முக்கால்வாசியில் கைவிட்டவையும்  முழுதாகச் செய்து செம்மைப்படுத்தாமல் விட்டனவுமான பிற மொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்புகள் என்று பலவும் பழுப்பேறிய பக்கங்களில் இருந்தன. அவற்றில் ஒன்று லத்தீன் அமெரிக்கக் கவிஞரான எர்னெஸ்டோ கார்டினலின் கவிதை. ஏறத்தாழ முழுமையாக மொழிபெயர்த்து முடித்த கவிதை. 1986  ஆரம்பத்தில்  கொல்லிப் பாவை இதழில் வெளியிட ராஜமார்த்தாண்டனுக்கு அனுப்பி வைத்தது நினைவிருக்கிறது. இந்தக் கவிதையுடன் அனுப்பிய சொந்தக் கவிதைகள் இரண்டும் பாப்லோ நெரூதாவின் இரு கவிதைகளும் வெளிவந்தன. கார்டினலின் கவிதை வெளியாகவில்லை. அச்சகத்தில் பிரதியைக் காணாமற் போக்கிவிட்டார்கள் என்று மார்த்தாண்டன் பின்னர் தெரிவித்தார். மீண்டும் நகலெடுத்து அனுப்பச் சொல்லியும் ஏனோ செய்ய வில்லை. 

இன்று பழைய நோட்டுப் புத்தகத்தில் இந்தக் கவிதையைப் பார்த்ததும் எல்லாம் நினைவில் புரண்டன.

நிகராகுவாவைச் சேர்ந்த எர்னெஸ்டோ கார்டினல் கவிஞர். அரசியல்வாதி. சேசு சபைப் பாதிரியார். விடுதலை இறையியல் என்ற கருத்தாக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்.நிகராகுவாவின் பண்பாட்டுத்துறை அமைச்சராக பதிற்றாண்டுக் காலம் இருந்தார். நெரூதாவின் சமகாலத்தவர். 2005 ஆம் ஆண்டு நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் ஹரால்ட் பின்டர் பரிசு பெற்றார்.  கார்டினலுக்கு இப்போது 91 வயது.


                மர்லின் மன்றோவுக்கான பிரார்த்தனை






ர்த்தரே,
உலகெங்கும் மர்லின் மன்றோ என்று அறியப்பட்ட
இந்த இளம் பெண்ணை ஏற்றுக் கொள்ளும்
அது அவளுடைய இயற்பெயர் அல்ல எனினும்
( உமக்கு அவளுடைய இயற்பெயர்,  
ஆறு வயதில் வன்கலவிக்குள்ளான அநாதையும்
பதினாறு வயதில் தற்கொலைக்குத் துணிந்த
அங்காடிச் சிறுமியுமானவளின் பெயர் தெரியும் )
அவள் இப்போது எந்த ஒப்பனையுமின்றி உம் முன்னால் வருகிறாள்
தனது பத்திரிகைத் தொடர்பாளர் இல்லாமல்
புகைப்படக்காரர்கள் இல்லாமல்
ஆட்டோகிராப் வேட்டைக்காரர்களும் இல்லாமல்
அண்டவெளியில் இரவை எதிர்கொள்ளும் விண்வெளி வீரனைப்போலத்
தனியாக உம் முன்னே  வருகிறாள்


சிறுமியாக இருந்தபோது தேவாலயத்துக்குள்
தலைதாழ்த்தி வணங்கிக் கொண்டிருந்த மக்கள் திரள் முன்னால்
நிர்வாணமாக நடப்பதாகக் கனவு கண்டாள்
( டைம் இதழ் தெரிவித்தபடி )
அவர்களின் தலைகள் தரையில் படிந்திருந்ததால்
தலைகளில் மிதித்து விடாமல் கெந்தி நடக்க வேண்டியிருந்ததாம்.

உளவியலாளர்களை விடவும் நீர் எங்கள் கனவுகளை நன்றாக அறிவீர் 
தேவாலயம், வீடு, குகை , சகலமும் கருப்பையின் பாதுகாப்புப் பிரதிநிதிகளே.
ஆனால் அதை விடவும் வேறு ஏதோவும் கூட.
அந்தத் தலைகள் அவளுடைய விசிறிகள், அது நிச்சயம்
( ஒளிக்கற்றையின் கீழே இருளில் தலைகளின் பிரார்த்தனை )
ஆனால், தேவாலயம் 20 செஞ்சுரி ஃபாக்ஸின் ஸ்டூடியோ அல்ல
பளிங்கும் பொன்னும் இழைத்த ஆலயம்
அவளுடைய உடலின் ஆலயம்.
அங்கிருந்து மனித குமாரன் கையில் சவுக்குடன்
உமது வீட்டைக் கள்வர் குகையாக்கிய
20 செஞ்சுரி ஃபாக்ஸ் ஸ்டூடியோ முதலாளிகளை
விரட்டித் துரத்திக் கொண்டிருந்தார்.

கர்த்தரே
பாவங்களாலும்கதிர் வீச்சாலும் மாசடைந்த இந்த உலகில்
நட்சத்திரமாகக்  கனவு கண்ட 
வேறு எந்த அங்காடிச் சிறுமியையும் போலவே
இந்த அங்காடிச் சிறுமி மீதும்
நீர் பழி சுமத்தாது இரும்

அவள் கனவு இப்போதுதான் உண்மையாகியிருக்கிறது
( ஆனால் ஒரு டெக்னிக் கலர் உண்மை )
நாங்கள் கொடுத்த திரைக் கதைக்கு ஏற்பவே அவள் நடித்தாள்
எங்கள் சொந்த வாழ்க்கைக் கதை, ஆனால் அது அபத்தமானதாக இருந்தது
அவளை மன்னிப்பீராக, கர்த்தரே,
நாங்கள் எல்லாரும் பணிபுரிந்த
இந்த மகத்தான பிரம்மாண்ட தயாரிப்புக்காக
20 செஞ்சுரிக்காக எம்மையும் மன்னிப்பீராக.

அவள் காதலுக்காகப் பசித்திருந்தாள்; நாங்கள் அவளுக்கு 
மயக்க மருந்துகளின் சலுகையளித்தோம்
நாங்கள் புனிதர்களல்லர் என்பதால்
அவளுடைய விரக்திக்கு
உளப்பகுப்பாய்வு பரிந்துரைக்கப்பட்டது.
காமிராபற்றிய அவளுடைய அதிகரிக்கும் அச்சத்தையும்
ஒவ்வொரு காட்சிக்கும் புதிதாகக் கோரும்
ஒப்பனை மீதான் அவளுடைய வெறுப்பையும்
அந்த அச்சுறுத்தல் அவளுக்குள் எப்படி உயர்ந்தது என்பதையும்
அதுவே ஸ்டூடியோவுக்குச் செல்ல 
அவளைத் தாமதமாக்கியது என்பதையும்
நினைத்துப் பார்க்கிறோம், கர்த்தரே.

வேறு எந்த அங்காடிச் சிறுமியைப் போலவே
அவளும் நட்சத்திரமாகக் கனவு கண்டாள்
ஆனால் அவள் வாழ்க்கை எதார்த்தமில்லாதது
மனநல் மருத்துவர் விளக்கிக் சொல்லிக் கோப்புக்களில் சேர்க்கும்
கனவைப்போல எதார்த்தமில்லாதது.
அவளுடைய சரசங்கள் 
கண்களை மூடிக்கொண்டு இடும் முத்தம் போன்றது
கண்களைத் திறந்ததும்
ஒளிவிளக்குகளைக் கொல்லும் ஒளியில்
இருப்பதை உணர்கிறாள்.
படமாக்கப்பட வேண்டிய ஷாட்டுக்கான
திரைக்கதைப் பிரதியை இயக்குநர் விட்டுச் செல்லும்
அறையின் இரு சுவர்களுக்கு இடையே ( அது ஒரு சினிமா செட் )
அந்தக் கண்கள் அவளைக் கொண்டு செல்கின்றன.

ஒரு படகின் மீது ஏற்றப்பட்ட கப்பல்
சிங்கப்பூரில் ஒரு முத்தம்
ரியோவில் நடனம்
விண்ட்சர் பிரபுக்குல மாளிகையின் வரவேற்பறை
எல்லாமும் எளிய வசிப்பிடத்தின் இடுங்கிய அறைக்குள்ளேயே
பார்க்கப்படுகின்றன.
கடைசி முத்தமில்லாமலேயே திரைப்படம் முடிவடைகிறது.

தொலைபேசியைக் கையில்  பிடித்துக்கொண்டே
தனது படுக்கையில் மரித்துக் கிடந்தவளாகக் காணப்பட்டாள்
அவள் யாரை அழைக்கவிருந்தாள் என்பதை
துப்பறிவாளர்கள் ஒருபோதும் துலக்கவில்லை
தோழமையான குரலின் எண்ணுக்கு மட்டுமே அழைத்த
எவரையும் போலவே அவள் இருந்தாள்.
'ராங் நம்பர் ' என்ற பதிவு செய்யப்பட்ட குரலை மட்டுமே கேட்டாள்.
அல்லது தொடர்பு துண்டிக்கப்பட்ட தொலைபேசியை அடையும் முன்பே
பொறுக்கிகளால் தாக்கப்பட்ட எவரையும்போலவே இருந்தாள்


கர்த்தரே,
அவள் அழைக்கவிருந்ததும் அழைக்காமல் விட்டதும்
( ஒருவேளை யாரோ அல்லது
லாஸ் ஏஞ்சல்ஸ் தொலைபேசிப் புத்தகத்தில் பெயரில்லாத எவரோ )
எவர் வேண்டுமானாலும் ஆகட்டும் ,
அந்த அழைப்புக்கு நீரே பதில் சொல்லும்.