சனி, 15 அக்டோபர், 2016

புலி ஆட்டம்

ன் செல்லப் பிராணி
பரம சாது என்றால்
நம்ப ஏனோ மறுக்கிறீர்கள்

சிரிக்கும்போதும் சினந்து எரியும் கண்கள்
அப்போதுதான்
திரித்து முறுக்கிய நார்வட வால்
கணக்காகப் பார்த்து
தாறுமாறாகக் கீறிய ரோமக் கோடுகள்
பாலை வெய்யிலின் உக்கிர சருமம்
நெளியும் உயிரைக் கவ்வும் வளைஎயிறுகள்
நிலம் கிழிக்கும் கொன்றை உகிர்ப் பாதங்கள்

எல்லாம் இருப்பதால்
அஞ்சி மிரண்டு நடக்கிறீர்கள்

என் செல்லப் பிராணி
சாகபட்சணி என்றால்
ஒப்புக்கொள்ள ஏனோ  தயங்குகிறீர்கள்

பசித்தால்
பசும் புல்லைத்தான் மேய்கிறது
தாகித்தால்
துளசி தீர்த்தமே அருந்துகிறது

பாருங்களேன்
புஜிபுஜி என்று அழைத்தால்
ஒரு பூனையைவிட
எவ்வளவு ஒய்யாரமாக
ஓடிவந்து காலடியில் ஒண்டிக்கொள்கிறது

உண்கலத்தில் பரிமாறிய வாதுமைக் கொட்டைகளை
ஒரு அணிலைவிட
எவ்வளவு பக்குவமாகப் பிளந்து கொறிக்கிறது

உண்ட களைப்பில்
ஒரு தியானியைவிட
எவ்வளவு சாந்தமாக சுகாசனத்தில் அமர்கிறது

பாருங்களேன்
அன்பு மீதூற அனிச்சையாக
சூச்சூ என்று ஒலி எழுப்பியதும்
முதல் மழைத்துளியில் சிலிர்க்கும் அரசந்தளிர்போல
எவ்வளவு பரவசத்துடன் முதுகைச் சிலிர்க்கிறது.

பரமசாது என் செல்லம் என்பதை
எவ்வளவு சொன்னாலும் ஏற்க மறுக்கிறீர்கள்.

என் அருமைப் பிராணி
வன் விலங்கு என்று
உங்களைப் போலவே எனக்கும் தெரியும்
எனக்குத் தெரியும் என்பது
என் செல்லத்துக்குத் தெரியாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக