வெள்ளி, 29 மே, 2015

தீராக் கடன்





வ்வொரு ஆண்டும் சாகித்திய அக்காதெமி இந்திய மொழிப்படைப்புகளத் தேர்ந்தெடுத்து விருதுகளை  வழங்கி வருகிறது. படைப்புகளை முன் வைத்து வழங்கப்படும் விருதுகள்  என்று சொல்லப்பட்டாலும் அவை வழங்கப்படுவது அந்தந்த மொழியில் சிறந்த படைப்புகளைத் தந்த படைப்பாளிகளுக்குத்தான்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகளுக்கு உரிய பெயர்கள் அறிவிக்கப் படும் போதும் ஒரு கதை எனக்கு நினைவுக்கு வரும் .கி.ராஜநாராயணன் தொகுத்த தமிழக நாட்டுப்புறக் கதைகளில் ஒன்று.

ஒரு ராஜா இருந்தான். கவிஞர்கள் இவனைப் புகழ்ந்து கவிதை எழுதிக் கொண்டு வருவார்கள். ராஜாவுக்கோ அதைப் படித்துப் பார்த்துத் தரத்துக்கு ஏற்ற சன்மானம் கொடுக்கத் தெரியாது. அதனால் அப்படிக் கவிதை எழுதிக் கொண்டு வந்த ஏட்டை ஒரு தட்டிலும் அதற்குச் சமமான பொன்னை இன்னொரு தட்டிலும் வைத்து நிறுத்துக் கொடுத்து அனுப்பி விடுவான். கவிதைகளின் தரத்தை அனுபவித்து அறிந்து பரிசு வழங்காமல் சகட்டு மேனிக்கு நல்ல கவிதைக்கும் மட்டமான கவிதைக்கும் ஒரே மாதிரியாகப் பரிசை நிறுத்துக் கொடுப்பதைக் கண்டு கவிஞர்கள் கலங்கினார்கள். ஒருநாள், ஒருவன் ராஜாவிடம்  கவிதை எழுதிக் கொண்டு வந்திருப்ப தாகத் தெரிவித்தான். ராஜா மந்திரியைக் கூப்பிட்டு அதன் எடைக்குச் சமமான பொன்னைக் கொடுத்து கவிஞனை அனுப்பிவைக்கும்படிச் சொன்னான். மந்திரி வந்தவனைப் பார்த்து 'அதைக் கொண்டு வாப்பா' என்றான். 'அதை என்  ஒருவனால் மட்டும் தூக்கிக் கொண்டு வரமுடியாது. வெளியில் வைத்தி ருக்கிறேன் வந்து பார்த்துக் கொள்ளுங்கள் ' என்றான். வெளியில் வந்து பார்த்தால் ஒரு வண்டி. அதில் ஒரு பாறைக் கல். பாறை மேல் நாலு வரிகள் எதுகை மோனையோடு உளியால் செதுக்கி வைத்தி ருந்தது. எத்தனையோ படை வீரர்கள், பயில்வான்கள் சேர்ந்து அதைப் புரட்டிக் கொண்டு வந்து ஒரு பெரிய தராசில் வைத்தார்கள். ராஜாவின் பொக்கிஷத்திலுள்ள அத்தனை தங்கத்தையும் போட்டும் பாறாங்கள் அசையவில்லை. ராஜாவும் மந்திரியும் என்ன செய்வது என்று தோன்றாமல் முழித்தார்கள். அதிலிருந்து  ராஜா எடைபோட்டுப் பரிசு வழங்குவதை நிறுத்தினான். அப்புறந்தான்  கவிஞர்களுக்கு உயிர் வந்தது.

சாகித்திய அக்காதெமி கிட்டத்தட்ட ஐம்பத்து நான்கு வருடங்களாக இலக்கியப் படைப்புகளுக்கு விருது வழங்கி வருகிறது. இதில்
கணிசமானவை கதையில் வரும் ராஜா எடை பார்த்துக் கொடுத்தது போன்றவை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஓலை எடையுள்ளவையும் பாறாங்கல் எடையுள்ளவையும்தான் பரிசுக் குரியவையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றன. அபூர்வமான சில சந்தர்ப்பங்களில் தரமான படைப்பு களைத் தந்த படைப்பாளிகள் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படிக் கௌரவிக்கப்பட வேண்டுமானால் ஒன்று அந்தப் படைப்பாளி அமரராகி இருக்க வேண்டும். அல்லது படைப்புப் பணியிலிருந்தே ஓய்வு
பெற்றிருக்க வேண்டும். சாகித்திய அக்காதெமி விருது இழப்பீடு அல்லது ஓய்வூதியம். தமிழில் பெரும் இலக்கிய ஆளுமைகளான பாரதிதாசனுக்கும் அழகிரிசாமிக்கும் சி.சு.செல்லப்பாவுக்கும் அளிக்கப்பட்ட விருதுகள் இழப்பீடுகள். தங்களுடைய படைப்புகள் மூலம் இந்த மொழியில் சாதனைகளை நிகழ்த்திய தி.ஜானகி ராமன்,  நீல பத்மநாபன் போன்ற படைப்பாளிகள் அவர்களது எழுச்சி மிக்க காலத்துக்குப் பின்னர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஓய்வூதியச் சலுகை. 

இலக்கியத்தைப் போற்றிப் பரிசளிக்கும் தனியார் அமைப்புகள் உள்ளன. அவை வழங்கும் விருதுகள் பற்றிப் பெரும் விவாதங்கள் முன்வைக்கப் படுவதில்லை. ஏனெனில் அவற்றின் தேர்வு முறை குறிப்பிட்ட நோக்கங்களையும் விருப்பங்களையும் கொண்டவை.சாகித்திய அக்காதெமி விருது அவற்றிலிலிருந்து மாறுபட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசால் மக்களுக்கு உரிமையான பணத்திலிருந்து வழங்கப்படுவது. ஒரு மொழியில் செயல்படும் படைப்பாளியைத் தரத்தின் அடிப்படையில் நிர்ணயித்து அந்த மொழிக்காக அவர் வழங்கிய பங்களிப்பை முன்னிருத்தி வழங்கப்படுவது. அந்த விருதின் மூலம் பிற மொழிகளின் மத்தியில் நமது மொழியின் இலக்கியச் செழுமையை அறிமுகப்படுத்துவது. சாகித்திய அக்காதெமி விருதளிப்பின் பின்னால் இந்த நோக்கங்கள்தாம் உள்ளன. எல்லா ஜனநாயக அமைப்பிலும் கோளாறு இருப்பதைபோலவே இதிலும் ஓட்டைகள் இருக்கின்றன. அந்த ஓட்டைகள் வழியாக சிபாரிசுகளையும் செல்வாக்கையும் அரசியல் தேவையையும் கணக்கிட்டு விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அப்படி எந்தக் குறுக்கீடும் இல்லாமல் சரியான படைப்பாளிகளுக்கு அபூர்வமாக விருதுகள் வழங்கப்பட்டும் இருக்கின்றன. அப்படியான அபூர்வ சம்பவங்களில் ஒன்று இந்த ஆண்டின் விருது.

நாஞ்சில்நாடன் இன்றும் இலக்கியக் களத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சரியாகச் சொன்னால் அவரது மிக முக்கியமான படைப்புகள் உருவான காலப் பகுதியில் எந்தத் தீவிரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்தாரோ அதை விடவும் வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். முன்னை விடவும் அதிக எண்ணிக்கையுள்ள வாசகர்களைப் பெற்றவராக இருக்கிறார். ஆரோக்கியவானாகவும் இருக்கிறார். சாகித்திய அக்காதெமி விருதுக்குரிய பின்வாசல் விதிகளை மீறி அவர் விருது பெற்றிருப்பதை அபூர்வமானது என்றே நினைக்கிறேன். இது ஓர் இலக்கிய வாசகனுக்கும் சக படைப்பாளிகளுக்கும் உற்சாகம் அளிக்கும் நிகழ்வு. இதுவரை அக்காதெமி விருது பெற்ற எந்த எழுத்தாளருக்கும் இல்லாத வகையில் நாஞ்சில்நாடனுக்கு அளிக்கப்பட்ட விருது பாராட்டப்படுவதன் காரணம் இதுதான் என்றும் தோன்றுகிறது. அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. 'இன்னும் ஆறு மாசத்துக்கு டேட் கிடையாது. கால்ஷீட் ஃபுல்'.

ஜீ. சுப்ரமணியம் இந்துக் கல்லூரி மாணவராகப் படித்துப் பட்டம் பெற்று நாற்பது வருடங்கள் கழிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.இங்கே படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவர் நாஞ்சில்நாடனாக அவதாரம் எடுத்திருப்ப தற்கான வாய்ப்பு இல்லை என்றும் எண்ணுகிறேன். தனது முன்னாள் மாணவரை அவரது இலக்கியம் சார்ந்த பெருமைக்காக ஒரு கல்லூரி அழைத்துப் பாராட்டுவதும் அபூர்வமான நிகழ்வுதான். ஒரு கல்லூரி அதன் மாணவனால் உயர்வடைகிறது. மாணவரும் அந்தக் கல்லூரியால் உயர்வடைகிறார். நாஞ்சில்நாடன் என்ற ஜீ.சுப்ரமணியத்தால் இந்துக் கல்லூரியின் பெருமைகளில் ஒரு மாற்றுக் கூடுகிறது. இந்துக் கல்லூரியால் பாராட்டப்படுவதன் மூலம் நாஞ்சில்நாடனின் புகழுக்கு இன்னும் மெருகு கூடுகிறது. வேறு அர்த்தத்தில் இலக்கியத்திலும் இதுதான் நடக்கிறது. படைப்பாளி வாசகனை உயர்த்துவதும் வாசகனால் படைப்பாளி உயர்வு பெறுவதுமான ஓர் அம்சம் இலக்கியத்தில் இருக்கிறது என்று நம்புகிறேன். சமகால எழுத்தாளர்களில் இந்த அம்சத்தை நான் அதிகம் காண்பது இருவரிடம் ஒருவர்- தமிழ்நாடு அரசின் கலைமாமணி நாஞ்சில்நாடன். மற்றொருவர் புதுவை அரசின் கலைமாமணி பிரபஞ்சன்.

தன்னுடைய படைப்புகள் மூலமாக மட்டுமல்லாமல் புனைவல்லாத கட்டுரைகள் மூலமாகவும் நாஞ்சில் நாடன் இதைச் செய்கிறார். வாசித்திருக்கும் அவரது மூன்று கட்டுரை நூல்களை வைத்து - நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று,நதியின் பிழையன்று நறும்புனலின்மை, தீதும் நன்றும் - இதைச் சொல்ல விரும்புகிறேன். படைப்புகளை மீறிய தொடர் உரையாடலை படைப்பாளி வாசகர்களிடம் இந்தக் கட்டுரைகளில் நிகழ்த்துகிறார். தான் வாழும் காலத்தின் சிக்கல்களையும் அதற்கான காரணங் களையும் சக மனிதனிடம் பொருமித் தள்ளுகிற ஆற்றாமையை இந்தக் கட்டுரைகளில் காணலாம். நாஞ்சில் நாடனின் எழுத்து களின் பொதுவான இயல்பே இந்த ஆற்றாமையும்  பொருமலும் தான் என்றும் படுகிறது. அவரது படைப்புகளைப் பொறுத்தவரை மனிதனின் பசியும் ருசியும்தான்  ஆற்றாமையையும்  பொருமலையும் உருவாக்குபவை. பசி - இயற்கையான உணர்வு. ருசி - தேவை மூலம்  எழும் உணர்வு. அவருடைய இரண்டு கதைகளை ஒப்பிட்டால் இது விளங்கும்.

'விரதம்' என்ற கதையில் வரும் சின்னத்தம்பியா பிள்ளை எப்போதும் இரண்டு மணிக்குத்தான் 'தேரேகாலில் குளிப்பார். சாப்பாட்டுக்கு மூன்று மணி ஆகிவிடும். கதை நடக்கிற தினத்தன்று மனிதர் பதினோரு மணிக்கே குளித்துத் தொலைக்கிறார். அன்றைக்கு அமாவாசை. ஜலக்கிரீடை செய்ததன் பலன்.வயிறு பசியால் எரிகிறது. வீட்டில் மனைவிக்கு உடம்பு சரியில்லை. அதனால் அவளுக்குக் கஞ்சி. பழையது பானை நிறையக் கிடக்கிறது. அமாவாசை நாளில் 'பழையதை எப்படி சாப்பிடுகது? 'என்பது அவருடைய பிரச்சனை. ஆறு பர்லாங்கு தூரத்தில் இருக்கும் மகள் வீட்டுக்குப் போகிறார். 'இந்த வேணா வெயில்ல எதுக்கு ஓடி வாறே? சாப்பிட்டாச்சுன்னா படுத்து ஒறக்கம் போடுகது' என்று கடிந்து கொள்கிறாள். அவளிடம் தன்னுடைய பசியைச் சொல்லக் கூச்சப்பட்டு இளைய மகள் வீட்டுக்குப் போகிறாள்.தான் போய்ச் சேர்வதற்குள் அங்கே எல்லாரும் சாப்பிட்டு விட்டால் என்ன செய்வது என்று பதற்றப் படுகிறார். போய்ச் சேர்ந்த வேளையில்தான் அங்கே இலை போடப்படுகிறது. 'அக்கா வீட்டுல சாப்பிட்டுட்டு இங்கே வாரே?' என்று சின்ன மகள் செல்லமாக அதட்டுகிறாள். இங்கேயும் வயிற்றுக்காக கௌரவத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் ஒன்றரை மணி வெயிலில் இறங்கி நடக்கிறார். வீட்டுக்கு வந்து பானையிலிருந்த பழையதைப் பிழிந்துபோட்டு ஊறுகாய்
பரணியைத் தேடுகிறார்.சின்னத்தம்பியாப் பிள்ளையை ஏமாற்றியது அவருடைய ஐம்பதாண்டுப் பழக்கம். குளித்து விட்டுத் திருநீறுஅணிந்து விட்டுத்தான் சாப்பிடுவார். நெற்றியில் நீறு துலங்கினால் பிள்ளைவாள் சாப்பிட்டாகி விட்டது என்று அர்த்தம்.

இந்தக் கதையில் வரும் இக்கட்டைத்தான் 'கனகக் குன்று கொட்டாரத்தில் கல்யாணம் ' கதையில் வரும் பண்டாரம் பிள்ளையும் அனுபவிக்கிறார். ஒன்று விட்ட அக்காள் மகள் கல்யாணத்துக்காக திருவனந்தபுரம் கனகக் குன்று கொட்டாரத்துக்குப் போகிறார்.அவரை அங்கே யாரும் எதிர் பார்த்திருக்கவில்லை.ஒன்று விட்ட தாய் மாமனுக்கு அவ்வளவு தானே மதிப்பு.வெறும் வயிற்றுடன் வந்த பண்டாரம் பிள்ளைக்கு அது ஆற்றாமையை ஏற்படுத்துகிறது. விறுவிறுவென வெளியேறுகிறார். 'நாஞ்சி நாட்டுக்கு வரட்டு... காட்டித் தாறேன்' என்று பொருமிக் கொண்டே திரும்புகிறார்.

இந்தக் கதைகளில் கையாளப்படும் ஆற்றாமையும் பொருமலும் பசியை யையும் ருசியையும் மையமாகக் கொண்டவை. இவையே அதிகாரத்துக் கான பசியாகவும் இருக்கிறோம் என்பதை அடையாளம் காட்டும் ருசியாக வும் அவரது பிற படைப்புகளில் விரவிக் கிடப்பதாகத் தோன்றுகிறது. 

நாஞ்சில்நாடனுடன் எனக்கு நெருக்கமான தொடர்பில்லை.ஆனால் இங்கே சொன்ன பசியையும் ருசியையும் சார்ந்து அவரை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அந்தரங்கக் கடன் எனக்கு இருக்கிறது. எண்பத்தி ஐந்தாம் ஆண்டு வாக்கில் பல நாட்கள் நாஞ்சில்நாடன் உபயத்தால் என்னுடைய பசியைப் போக்கிக்கொண்டிருந்திருக்கிறேன். அப்போது ஒரு சிறு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். சம்பளமும் சொற்பம். மூன்று வேளை தவறாமல் சாப்பிட்டு விட்டால்
மாதச் சம்பளம் பத்தாம் தேதியோடு கரைந்து போய்விடக் கூடிய சம்பளம். அந்தச் சந்தர்ப்பத்தில் தொலைக்காட்சியில் சீரியல் களுக்கு கதை தேடிக் கொண்டிருந்தார்கள். நண்பர்கள் பலர் அதற்காக முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள். அடையாறு திரைப்படக் கல்லூரியில் படித்துத் தேறிய அழகேசன் என்ற நண்பர் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தார். தமிழ்த் தொடர் களுக்குத்தான் எல்லாரும் மோதுகிறார்கள். அவர் மலையாள சீரியலுக்காக முயற்சி செய்தார். அவருக்கு அனுமதியும் கிடைத்தது. ஒரு தமிழ் நாவலை மலையாளத்தில் தொடராக சமர்ப்பிக்கத் தீர்மானித்தார். இன்னொரு எழுத்தாள நண்பரான விமலாதித்த மாமல்லன் வாயிலாக அதை மலையாளத்தில் திரைக்கதையாக்கும் வேலை எனக்குக் கிடைத்தது. தொலைக்காட்சி நிலையத்துக்கு தொடரின் முதல் நான்கு எபிசோடுகளைப் படமாக்கிக் கொடுக்க வேண்டும்.  நான்கு பகுதிகளையும் மலையாளத்தில் திரைக்கதை வடிவில் எழுதினேன். ஒரு பகுதிக்கு இத்தனை என்று கூலி பேசி எழுதிக் கொடுத்தேன். அதற்குக் கிடைத்த தொகையில் இரண்டு மாதம் மூன்று வேளையும் ருசியுடன் பசியாற முடிந்தது. உதர நிமித்தம் அன்று கட்டிய அந்த வேடத்துக்குக் காரணமாக இருந்தவர் நாஞ்சில்நாடன். அதை இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் இந்த மேடையில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். எனது பசியைப் போக்கிய அந்த நாவல் அவர் எழுதியது. தலைப்பு 'மிதவை'.

( நாஞ்சில்நாடன் சாகித்திய அக்காதெமி விருது பெற்றதை யொட்டி நாகர்கோவில் இந்துக் கல்லூரி 2011 மார்ச் 3 ஆம் தேதி நடத்திய பாராட்டு விழாவில் ஆற்றிய உரை. )  















செவ்வாய், 26 மே, 2015

அண்ணாச்சி விக்ரமாதித்யன்



விக்ரமாதித்யன் என் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர்.  என் நண்பர். என் அண்ணாச்சி.

இந்த வரிசையைக் கவனமாக யோசித்தே சொல்கிறேன். கவிஞர் என்ற நிலையில் தான் முதன் முதலாக விக்ரமாதித்யனைத் தெரிந்து வைத்தி ருந்தேன். அந்த அறிமுகத்தின் அடிப்படையில்தான் நண்பர் ஆனார். அதுதான் பின்னர் அவரை அண்ணாச்சி என்ற இடத்துக்குக் கொண்டு போய் வைத்தது. இந்த நட்புக்கு இப்போது முப்பத்திச் சொச்சம் வயதாகிறது என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வளவுக்கும் நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறவர் களோ அட்டவணை போட்டு அன்றாடம் பேசிக் கொள்கிறவர்களோ அல்ல. தற்செயலாக அமைகிற சந்திப்புகளில் நலம் விசாரித்துக் கொள்வதும் வாய்ப்பிருந்தால் பேசிக் கொள்வதுமாகவே இந்த நட்பைப் பராமரித் திருக்கிறோம். நான் பேசியதை விட அவர் பேசக் கேட்டதே அதிகம். அதுவும் இலக்கியம் பற்றி  மட்டுமே. அதன் மூலம் நுட்பமான பலன்களை நான் அடைந்திருக்கிறேன்.


கவிதைகள் எழுதி அவை வெளியாகியும் வந்த காலத்தில் விக்ரமாதித்யன் என்ற பெயரைத் தெரிந்து கொண்டேன். குறிப்பாக ஒரு கவிதை மூலம். இந்துமதி ஆசிரியராக இருந்து நடத்திய 'அஸ்வினி'  இதழில் அந்தப் பெயரை முதலில் பார்த்தேன்.  அந்தி வெளிச்சத்தில் எடுத்த புகைப் படத்துடன் கறுப்புப் பக்கத்தில் வெள்ளை எழுத்துகளில் அச்சிடப்பட்டிருந்த கவிதை. 'ஆகாசம் நீல நிறம்' . 'திசை முடிவுக்குத் தெரிவதெல்லாம் ஆகாசம் நீல நிறம்' என்று முடியும் அந்தக் கவிதை மனதில் பதிந்தது. சில மாதங்களுக்குப் பின்னர் 'கணையாழி' இதழில் ஒரு கவிதையை வாசித்தேன். 'எழுதாத கலைஞன்'. ஆனால், அதை எழுதியவரின் பெயர் பாணபட்டன் என்று இருந்தது. அந்தக் கவிதையின் விட்டேற்றித்தனமான தொனி, வரிகளின் அமைப்பு, அதிலிருந்த திறந்த தன்மை -இவையெல்லாம் அது விக்ரமாதித்யனின் கவிதையாக இருக்கலாம் என்று ஊகிக்கச்செய்தன. என் ஊகத்தை அன்றைய சக தோழரான விஸ்வநாதனிடம்,  இன்றைய பாதசாரியிடம் சொன்னேன். 'இது விக்ரமாதித்யனாத் தெரியலேப்பா' என்று விஸ்வநாதன் பதில் சொன்னார்.


இருந்தும் அந்த ஊகத்தை என்னால் கைவிட முடியவில்லை. அதன் பின்னர் விக்ரமாதித்யன் என்ற பெயரில் பல கவிதைகளை வாசித்த போதும் அந்த ஊகம் மனதுக்குள்ளேயே இருந்தது.


1982 இல் அன்னம் நவ கவிதை வரிசையில் விக்ரமாதித்யனின் முதல் தொகுப்பு 'ஆகாசம் நீல நிற நிறம்' வந்த பிறகே அந்த ஊகம் கலைந்தது. விக்ரமாதித்யனின் இன்னொரு அவதாரம்தான் பாணபட்டன் என்று தெரிந்து கொண்ட அந்த நொடியின் சந்தோஷம் இப்போதும் சிரிப்பைத் தருகிறது. அதன் பின்னர் 'பூர்ணன், விக்கி, பிரேம், அமர்' என்று அவ்வப்போது அவர் எடுத்த அவதார ரகசியங்களை மிக எளிதில் கண்டு பிடிக்க முடிந்தது.


விக்ரமாதித்யன் என்னுடைய சில முதல் முயற்சிகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறார். கோடைகாலக் குறிப்புகள் என்னுடையமுதல் தொகுப்பு. அன்றைய மரபுப்படிசொந்தக் காசில் வெளியிட்ட தொகுப்பு. கவிதைகளின் பிரதியையும் காசையும் கொடுத்ததைத் தவிர அந்தத் தொகுப்புக்கு என்னுடைய பங்களிப்பு வேறு எதுவுமில்லை. நண்பர் விமலாதித்த மாமல்லனின் உழைப்பில்தான் புத்தகம் வெளிவந்தது. புத்தகம் வெளிவந்த சில நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு வந்து மாமல்லனைச் சந்தித்தபோது புத்தகத் தயாரிப்புச் செலவுக் கணக்கு எழுதிய ஒரு தாளை நீட்டினார். காகித விலை, அச்சுக் கூலி, பைண்டிங்க் கட்டணம் , ஆட்டோ வாடகை, பார்சல் செலவு எல்லாம்  எழுதப்பட்டிருந்தது. கூடவே இதர செலவுகள் என்றும் எழுதப் பட்டிருந்தது. அதில் புரூப் ரீடிங் - நம்பிராஜன் - என்று ஒரு தொகையும் இருந்தது. மிகவும் சொற்பமான தொகை அது. சந்தேகத்துடன் மாமல்லனிடம் புரூப் ரீடிங்குக்கு இவ்வளவுதான் ஆகுமா? என்று கேட்டேன். 'ஒரு குவார்ட்டருக்கு  அதுக்கு மேலே ஆவாதுப்பா' என்று பதில் வந்தது.

அன்றைய இரவே முதல் முதலாக விக்ரமாதித்யனைச் சந்தித்தேன். அவர் வீட்டில். அன்று அவர் பெற்றோருடன் மாம்பலம் மேட்லி சாலையருகில் குடியிருந்தார் என்று நினைவு. மாமல்லனின் ஸ்போர்ட்ஸ் சைக்கிளில் அவர் வீட்டுக்குப் போனோம். விக்ரமாதித்யனை விட அடர்த்தியான மீசை வைத்திருந்த அவர் தந்தை வரவேற்று வீட்டுக்குள்ளே பார்த்து 'நம்பி' என்று  குரல் கொடுத்தார். உள்ளே இருந்து சட்டையை அணிந்தபடியே வெளியே வந்த மனிதர் 'அட, வாங்கய்யா' என்றார். 'வணக்கம்  அண்ணாச்சி' என்றேன். நம்பிராஜன் என்ற விக்ரமாதித்யன் என் அண்ணாச்சி ஆனார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் வழக்கமாக எல்லாரையும் சொல்லுவது போல 'சார்' என்று சொல்லாமல் ஏன் அண்ணாச்சி என்று சொன்னேன் என்று இன்றுவரை புரியவில்லை. கிட்டத்தட்ட அதே கால கட்டத்தில்தான் ராஜமார்த்தாண்டனும் அறிமுகமானார். ஆரம்ப நாட்களில் அவரை 'மார்த்தாண்டன்' என்றே அழைத்து வந்திருக்கிறேன். மிகவும் நெருக்கம் ஏற்பட்ட பிறகுதான் அண்ணாச்சி என்று சொல்ல முடிந்தது. ஆனால் நம்பியை முதல் சந்திப்பிலேயே அண்ணாச்சி என்று அழைத்தது அவருடைய தோற்றம் காரணமாக இருக்கலாம்.


அன்றைக்கிருந்த அடர்கருந்தாடி இன்று வெண் தாடியாக மாறியிருக்கிறது என்பதைத் தவிர அவர் தோற்றத்தில் மாற்றமில்லை. என்னுடைய முதல் தொகுப்பு வெளிவரப்  பங்காற்றினார் என்பது இன்றும் மகிழ்வளிக்கும் செய்தியாகவே இருக்கிறது.


சென்ற ஆண்டு கோடைகாலக் குறிப்புகளின் புதிய பதிப்பு வெளியானது. முதல் பதிப்பில் இடம்பெற்றதுபோலவே இந்தப் பதிப்பிலும் விக்ரமாதித்யன் பெயர் இருக்க வேண்டும் என்று விரும்பியது அந்த நட்பைப் பாராட்டிக் கொள்ளத்தான்.


கவிதையாக்கம் அல்லது விமர்சனம் என்று நான் எழுதத் தொடங்கியதும் விக்ரமாதித்யனை முன்வைத்துத்தான். 1988  இல் வெளிவந்த அவரது மூன்றாவது தொகுப்பான 'உள்வாங்கும் உலகம்' பற்றி எழுதிய கட்டுரை தான் நான் கவிதை இயல் சார்ந்து எழுதிய முதல் கட்டுரை. தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடந்த புத்தக வெளியீட்டில் அதை வாசித்தது தான் கவிதை விமர்சகனாக நான் பங்கேற்ற முதல்  நிகழ்ச்சி. அந்தக் கட்டுரையை அல்லது பேச்சை ' கவனமாப் படிச்சிட்டுத்தான் சொல்றீங்க' என்று அண்ணாச்சி  சொன்னதுதான் தொடர்ந்து எழுத ஊக்கமூட்டிய காரணங்களில் ஒன்று. அவரே எழுதிய பல கவிதையியல் கட்டுரைகளில் நான் பின்னர் எழுதிய வரிகளை மேற்கோளாகப்  பயன்படுத்தியிருக்கிறார். இவனும் ஏதோ சரியாகத்தான் சொல்கிறான் ' என்று மறைமுகமாக அவர் அளித்த அங்கீகாரம் அது என்றே எண்ணுகிறேன். அந்த அங்கீகாரத்தின் உச்சம் அவருடைய ஒரு தொகுப்புக்கு என்னை முன்னுரை எழுதச் செய்தது. விக்ரமாதித்யன் கவிதைகள் பற்றிய அடிப்படையான கருத்து களைத் தொகுத்துக் கொள்ள அந்த வாய்ப்பு உதவியது. அதில் சொல்லப் பட்ட கருத்துகளிலிருந்து மாறவோ பின் வாங்கவோ தேவையில்லாத தடத்தில்தான் விக்ரமாதித்யனின் கவிதைப் பயணம் இப்போதும் தொடர்கிறது என்று நினைக்கிறேன்; பதினேழு தொகுப்பு களைக் கடந்த பின்னும்.


விக்ரமாதித்யனின் கவிதைகளைப் பகுத்தும் வகைப்படுத்தியும் பேசுவதை விட நவீன கவிதையில் அவரது பங்களிப்பு என்ன என்பதைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன். அவரது பங்களிப்பை மூன்று நிலைகளில் பார்க்கலாம். கவிஞராக, கவிதையியலாளராக,கவிதைச் சூழலை நிர்ணயிப்பவராக.


விக்ரமாதித்யன் எழுத வந்த கால அளவில் நடைமுறையிலிருந்த கவிதை வேறு. எழுத்து மரபிலிருந்து தொடர்ந்து வந்த சில குணங்கள் கவிதையில் பின்பற்றப்பட்டு வந்தன.


கவிதை இறுக்கமானதாக இருக்க வேண்டும். சிக்கலானதாக இருக்க வேண்டும். கொஞ்சம் இருண்மையுடன் இருந்தால் சிலாக்கியம். கவிதையின் மையப் பொருள் வாசகனுக்கு எளிதில் பிடிபட்டு விடாததாக இருப்பது அவசியம். படிமச் செறிவு கொண்டதாக இருக்க வேண்டும். அன்று வெளியான பெரும்பான்மைக் கவிதைகள் அவ்வாறுதான் இருந்தன.அது தேவையாகவும் இருந்தது. வெறும் முழக்கங்களும் ஆர்ப்பாட்டக் கூச்சல்களும் நிரம்பிய மரபையே கவிதை என்று பாராட்டிக் கொண்டிருந்த பண்டித காலக் கவித்துவத்துக்கு  எதிராகவே மௌன வாசிப்புக்குரியதாகவும் கச்சிதமானதாகவும் கவிதை முன்வைக்கப்பட்டது. அது காலத்தின் வற்புறுத்தலாகவும் இருந்தது. அதே சமயம் வெறும் வார்த்தை ஜாலங்களும் கவிதைகளாக வெகுஜனப் பரப்பில் கொண்டாடப் பட்டன. இந்தத் திசை மாற்றப் புள்ளியில்தான் விக்ரமாதித்யனின் கவிதை அறிமுகமானது.


எளிமை. நேரடித்தன்மை.திறந்ததன்மை. படிமச் செறிவோ இருண்மையோ இல்லாமல் அனுபவத்தின் மையத்துக்கு நெருங்கும் கவிதையாக்க முறையையே விக்ரமாதித்யன்  முன்வைத்தார். அதுவரை புதுக்கவிதை என்று அறிமுகமானவை பெரும்பான்மையும் மேற்கத்தியக் கவிதை யியலின் பாதிப்பைக் கொண்டிருந்தன. அதற்கு மாறாக தமிழ்க் கவிதையின் தெளிவு நிலையை விக்ரமாதித்யன் முன்னிருத்தினார். மரபு ஒரு சுமையாகவும் தீண்டத் தகாததாகவும் கருதப்பட்ட சூழலில் மரபின் சாரமான கூறுகளை நவீன உணர்வுடன் கவிதையாக்கத்தில் கொண்டு வந்தார் அவர். சங்க இலக்கியக் கவிதைகளின் இம்மையியல்பையும் பக்தி இலக்கியத்தின் உணர்வுப் பெருக்கையும் கவிதைகளில் புகுத்தினார். அதை மரபின் மீதுள்ள முரட்டுப் பற்றாக அல்லாமல் அதன் மீதான நவீன அணுகுமுறையாகவே அவரால் சாத்தியப்படுத்த முடிந்தது. ஒரு கவிஞராக அவரை நான் மதிப்பிடும் இடம் இது.


மரபின் கூறுகளுடன் எழுதும்போதும் நிகழ் காலத்துடன் உறவு கொண்டவராகவே தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத் தகுந்தது. அவரது கவிதைகளில் இறந்த காலத்தின் பெருமை இல்லை. எதிர்காலம் பற்றிய பகல் கனவும் இல்லை. நிகழ்கால ஸ்திதியைப் பற்றியே அவரது கவிதைகள் பேசுகின்றன. அந்த வகையில் அவர் பாரதியின்  வழிமுறைக்காரர். பாரதியின் அநேகமாக, எல்லாக் கவிதைகளும் நிகழ் காலத்தின் குரலாகவே எழுதப்பட்டவை.

ஆனால் தனி வாழ்வில் அண்ணாச்சி எதிர்கொண்ட நிகழ்காலம் நம்பிக்கை தர லாயக்கில்லாதது. புலம்பவைப்பது. அதுவே அவரது கவிதைகளில் பெரும் பாலானவற்றுக்குக் கழிவிரக்கத் தொனியைக் கொடுத்தது என்று எண்ணுகிறேன். தனது துக்கத்தைப் பொதுவயப்படுத்திப் பேசும் கவிதைகளில் மிகப் பெரும் அனுபவத்தை அவரால்அளிக்க முடிகிறது. விக்ரமாதித்யனின் புகழ் பெற்ற கவிதை வரிகள் அந்த வகையிலானவை.

கரடி சைக்கிள் விடும்போது
நம்மால் வாழ்க்கையை
அர்த்தப்படுத்த முடியாதா'’ என்பதும்
நெஞ்சு படபடக்கிறது
யாராவது
அருவியை நீர் வீழ்ச்சி என்று
சொல்லி விட்டால்..'
என்பதும் எல்லாம் அந்த அனுபவத்தை அளிப்பவை.


சம காலத்தில் எந்த வரிகள் அதிகம் உச்சரிக்கப்படுகின்றனவோ அதை எழுதியவன் கவிஞனாக மதிக்கப்படுவான் என்று பாப்லோ நெரூடா தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். எல்லா இலக்கிய விதிகளும் தமிழில் விலக்காகவதுபோலவே இந்த வரிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இங்கே சினிமா வசனமும் பாடல் வரிகளும் காமெடித் துணுக்குகளும் தான் பொதுப் புத்தியில் மண்டிக் கிடக்கின்றன. எனினும் சிலரது சில வரிகள் வாழ்க்கையின் தருணங்களில் நினைவூட்டப் படுகின்றன. அண்மையில் இணையத்தில் பார்க்கக் கிடைத்த  ஒரு சச்சரவில் இடம் பெற்ற ஒரு வரி அந்தச் சண்டையையே நிறுத்தியது. 'நக்கவும்  துழாவவும் நாக்கை வைத்திருந்தால் போதும்' என்பது அந்த வரி. எழுதியவர் விக்ரமாதித்யன். இந்த இடத்தில் நான் அடிக்கடி நினைத்துக் கொள்ளும் விக்ரமாதித்ய வரியையும் சொல்லி விடுகிறேன்.

' சௌந்தர்யக் கூச்சம்
சாப்பாட்டுக்குத் தரித்திரம்'.

நவீன கவிதையில் அதிகம் நகலெடுக்கப்பட்ட கவிதை வடிவங்களில் விக்ரமாதித்யனுடையவையும் அதிகம் இருக்கும். மிக அண்மையில் வாசித்த ஒரு தொகுதியின் கவிதை இது.

'உன் மனது எத்தனை பெரிய மலர்
உன் மனது எத்தனை பெரிய அகல்
உன் மனது எத்தனை பெரிய கோட்டை
உன் மனது எத்தனை பெரிய வனம்
புதிரெல்லாம் சொல்கிறது
நீயிடும் மாக்கோலம்

இந்தக் கவிதை தனியாகப் பத்திரிகையில் வந்திருந்தால் விக்ரமாதித்யன் கவிதை என்றே நினைத்திருப்பேன். வந்திருப்பது மகுடேசுவரனின் சமீபத்திய தொகுப்பான ‘நிறைசூலியில் இதை ஆரோக்கியமான பாதிப்பாகவே நினைக்கிறேன். விக்ரமாதித்யனின் பாதிப்பை இதற்கு முன்பும் பலரது கவிதைகளில் பார்க்க முடிந்திருக்கிறது. சிலரை அவரே ஊக்குவித்துமிருக்கிறார். அவர்கள் காணாமற் போய் விட்டார்கள். வந்து நின்று கொண்டே இருக்கிறார் விக்ரமாதித்யன்.

இவையெல்லாம் கவிஞராக அவரிடம் நான் காணும் நிலை.

சம காலத்தில் கவிதைஇயல் பற்றி அதிகம் எழுதியவர் விக்ரமாதித்யன் மட்டுமே. அவரது கவிதை ரசனை, கவி மூலம், தற்காலச் சிறந்த கவிதைகள் ஆகிய நூல்கள் அதற்கு உதாரணங்கள். அவரது கவிதையியல் கோட்பாடுகளைச் சார்ந்ததல்ல. ரசனை சார்ந்தது. அனுபவத்தையும் உணர்வையும்  எந்தக் கவிதைகள் வெளிப்படுத்துகின்றனவோ அவற்றையே நல்ல கவிதைகள் என்று ஏற்கும் எளிய வரையறையைக் கொண்டது. அதனால்தான் அவரால் எல்லாக் கவிதைகளையும் சிலாகிக்க முடிகிறது. குறிப்பிடத் தகுந்த ஒரு கவிதை  எழுதிய கவிஞனைக் கூடப் பாராட்டிப் பேச முடிகிறது. கவிதை ரசனை, தற்கால சிறந்த கவிதைகள் இரண்டு நூல்களிலுமாக 54 பேரின் கவிதைகளைப் பற்றி எழுதியிருக் கிறார். இந்தப் பெருந் தன்மை அல்லது பெரும்போக்கு தமிழில் அரிது. இப்படி ஒரு பெருந்தன்மை யான மனம் எனக்கில்லை என்ற ஒப்புதலை விக்ரமாதித்யனுக்குப் பாராட்டாகவே தெரிவிக்கிறேன். இந்தப் பெருந் தன்மையே அவரை நவீனக் கவிதையின் சூழலை நிர்ணயிப்பவராகவும் ஆக்கியிருக்கிறது. முன் தலைமுறை. சமகாலத் தலைமுறை, புதிய தலைமுறை என்று எல்லாரிடமும் அவரால் இலக்கிய உரையாடலில் ஈடுபட முடிகிறது. குறிப்பாக, புதிய இளைஞர்களுடன். திருமேனி, லட்சுமி மணிவண்ணன், சங்கரராம சுப்ரமணியன்,கைலாஷ் சிவன், பாலை நிலைவன் என்று பலரையும் முன்னிலைப்படுத்தியவர் அவர்தான். அந்த வகையில் கவிதையில் புதிய சூழலுக்கான வாய்ப்பை உருவாக்கியவர்.


இங்கே ஒரு குறையையும்  சுட்டிக் காட்ட விரும்புகிறேன். 54  கவிஞர்களை முன்வைத்துப் பேசும் இரு நூல்களிலும் ஒரு பெண் கவிஞர் கூடக் குறிப்பிடப் படவில்லை. அவர் கவிதை வரியையே இங்கே சொல்ல விரும்புகிறேன்.

'பெண்ணாலே வாழ்கிறவன்
பெண்ணுக்கு எப்படி எதிரியாக?'

ண்ணாச்சியாக காட்டிய அன்புக்குக் கொஞ்சமும் குறையாதது அவர் கொடுத்த அவஸ்தைகள். படுத்திய பாடுகள். அதைப் பற்றி ஒருபோதும் பேசக்கூடாது என்பது என் எண்ணமாக இருந்தது.ஆனால் சேகர் சைக்கிள் ஷாப் என்ற தொகுதிக்கு எழுதிய கவிவாக்கில் அவரே ஒப்புதல்செய்திருக் கிறார். எனவே அதைச் சலுகையாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். 


நான் பணியாற்றிக் கொண்டிருந்த பத்திரிகை அலுவலகத்துக்கு தன்னை மறந்த நிலையில் வந்ததையும் நான்  கவனித்துக் கொண்டதையும் விவரிக்கிறார். அதெல்லாம் சரி. என் தரப்பில் நான் பட்ட துயரத்தை என்ன சொல்ல? அவர் வந்து என்னைப் படுத்திக் கொண்டிருந்தபோது வளாகத்தின் தலைவர் வந்து சேர்ந்தார். காரை விட்டு இறங்கும்போதே அண்ணாச்சியின் லீலையைக் கவனித்திருந்தார் என்று பிறகு அறைக்கு அழைத்தபோதுதான் தெரிந்தது. யார் அது? ஏன் இப்படி ஆட்டம் போடுகிறார்? ஏன் அவரை இங்கே அனுமதித்தாய்? என்று கேள்விகளால் துளைத்தார்.அவர் கேட்ட தோரணையில் இன்றோடு என் வேலை காலி என்றே நினைத்தேன் 'அவர் என் நண்பர். என்னைப் பார்க்க வந்திருக்கிறார்? தமிழில் முக்கியமான கவிஞர்' என்று பதில் சொன்னேன். தன்னை விட  முக்கியமான கவிஞரா என்று தலைவர் நிமிர்ந்து பார்த்தார். எங்கே , அவரு எழுதின கவிதை வரியைச் சொல்லு பார்ப்போம். நீ நண்பன் தானே , கவிதை வரியெல்லாம் தெரிஞ்சிருக்குமில்ல?' என்றார். ஒரு நிமிடம் தயங்கினேன். ஞாபகத்திலிருந்து சொன்னேன்.


பிரம்மாண்டமானவன் பிருகதீஸ்வரன்
பிரம்மாண்டமானவள் பெரியநாயகி
வழிமறித்துக் கலவரப்படுத்தும் பெரும் நந்தி
எங்கே போகும் எளிய உயிர்கள்

கேட்டதும் புன்னகைத்தார். 'நம்ம ஆளா?'  என்று கேட்டார். அவர் கேட்டது தஞ்சாவூரைச் சேர்ந்தவரா என்று? கவிஞர்கள் எல்லாம் ஒரே இனம்தானே என்று தப்பாகப் புரிந்து கொண்டு ‘ஆமாம்என்றேன். ‘தஞ்சாவூர்ல எங்கே? என்று அவர் மீண்டும் கேட்டபோதுதான் தவறு புரிந்த்து. இல்லை, திரு நெல்வேலிக்காரர்என்று சொன்னேன். நெல்லைக்காரருக்குத் தஞ்சை புரிஞ்சிருக்குஎன்றார். ‘நல்ல வேளை, கவிதை என் வேலையைக் காப்பாற்றியது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.


சேகர் சைக்கிள் ஷாப் என்ற விக்ரமாதித்யனின் தொகுப்புக்கு நான் முன்னுரை எழுதியிருப்பதை முன்பே சொன்னேன். அதில் அவருக்கு உடன்பாடு இருந்தாலும் சின்ன மனத்தாங்கள் இருந்தது. அதை  வெளிப் படையாகவே சொல்லவும் செய்தார். ‘கவிஞர்களை இன்னும் தாராளமாவே பாராட்டலாம்யா”. இன்று இத்தனைப் பிரபலங்களும் மூத்த கவிஞரும் வாசகர்களும் கூடியிருக்கும் அரங்கில் விக்ரமாதித்யனுக்கு சாரல் விருது வழங்கபட்டிருக்கிறது. அது மிகத் தாராளமான பாராட்டு என்று நினைக்கிறேன். அந்த தாராளப் பாராட்டில் என் பங்கையும் சேர்க்கிறேன். இவ்வளவு தாராளமாகப் பாராட்டும் வாய்ப்பை உருவாக்கிய ராபர்ட் -ஆரோக்கியம் அறக்கட்டளையின் நண்பர் ஜேடிக்கும் ஜெர்ரிக்கும் வாழ்த்துகள். உங்கள் அனைவருக்கும் நன்றி.


(25.01.2013 அன்று சென்னை புக் பாயிண்ட் அரங்கில் ராபர்ட் – ஆரோக்கியம் அறக் கட்டளை யின் சாரல் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்பட்ட விழாவில் ஆற்றிய உரை)






வியாழன், 21 மே, 2015

மூன்று கவிதைகள் பற்றி ஒரு குறிப்பு



ண்பர் அஞ்சென் சென்  வங்காளத்தின் உத்தர் ஆதுனிக் ( பின் நவீனத்துவம் ) போக்கின் முக்கியமான கவிஞர். சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தால் பழங்குடியினரின் கவிதைகளைத் தொகுப்பதில் ஈடுபட்டிருந்தார். சில கவிதைகளை ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்திருந்தார். ஆங்கில மொழியாக்கத்தின் பிரதியொன்று என்னிடம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதிலிருந்து சில கவிதைகளை தமிழில் ஆக்கவும் முயன்றிருந்தேன். அதில் ஒரு கவிதை இங்கே இடம் பெறுகிறது.

சங்கீதம் கேட்டுக் கொண்டிருந்த முடிவற்ற இரவொன்றில் இந்தக் கவிதை தொடர்பே இல்லாமல் நினைவுக்கு வந்தது. அப்போது எம்.எஸ். சுப்பு லட்சுமியின் குரலில் தியாகராஜரின் பிரசித்தமான கீர்த்தனையான 'சோபில்லு சப்தஸ்வர' வைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.  அனுபல்லவியை எம்.எஸ். பாடிக் கொண்டிருந்தபோது தன்னிச்சையாக ஒரு கவிதையின் பொறி தட்டியது. அதை எழுதி முடித்தேன். இங்கே இடம் பெறும் இரண்டாவது கவிதை அதுதான். சந்தால் கவிதையின் வரிகளும் தியாகய்யர் கீர்த்தனையின்  அனுபல்லவியும் - நாபி ஹ்ருத் கண்ட ரசன நாஸாதுலு அந்து  ( நாபி, இதயம், தொண்டை, நாக்கு, நாசி முதலான உடலின் இடங்களிலிருந்துதே ஏழு ஸ்வரங்களும் பொலிந்து வருகின்றன ) - இந்தக் கவிதையைத் தூண்டியிருக்கின்றன. உண்மையில் நான் கவிதையில் எழுத விரும்பியது நான் பலமுறை கேட்டும் அலுக்காத புதிதாகக் கேட்பதுபோலத் தொனிக்கும் அந்த ராகத்தைப் பற்றித்தான். ஆனால் உள்ளுக்குள் இருந்த பழங்குடி உணர்வு அதை வேறு ஒன்றாக மாற்றி விட்டது. ஆனாலும் கவிதையைத் தூண்டி விட்ட அந்த ராகத்துக்கு நன்றி தெரிவிப்பதற்காக அதையே தலைப்பாக்கினேன். ‘ஜகன்மோகினி’.

மே 2008 இல் எழுதிய கவிதையை அச்சுக்குக் கொடுக்கவில்லை. சங்கோஜம். 2011 இல் 'நீருக்குக் கதவுகள் இல்லை' தொகுப்பில்  சேர்த்து விட்டு அதே கூச்சம் காரணமாக உடனேயே விலக்கிக் கொண்டேன்.

க.மோகனரங்கனின் புதிய  தொகுப்பு 'மீகாம'த்தை வாசித்துக் கொண்டிருந்த போது அதில் இடம் பெற்றிருக்கும் 'யவனராணி' கவிதை மேற்சொன்ன இரண்டு கவிதைகளையும் மறுபடியும் நினைத்துப் பார்க்கச் செய்தது; இரண்டாம் முறையாக. மோகனரங்கனின் தொகுப்புப் பற்றிப் பேசிய தருணத்தில் நண்பர் இசை இந்தக் கவிதையைப் பற்றிச் சொன்னது முதல் முறை. நான் வேகமாக 'இது என்னோட கவிதையாச்சே?'  என்றேன். இந்த அந்தரங்கத் தகவலை இசை மோகனரங்கனின் நூல் மதிப்புரைக் கூட்டத்தில் எழுத்து வடிவிலும் குரல் வடிவிலும் பதிவு செய்திருக்கிறார். ஏங்க இப்படிப் பண்ணினீங்க? என்றால் 'பேரைச் சொல்லலியே? அது    மட்டுமில்லே என் பேருக்குப் பொருத்தமாக இருக்கவேண்டாமா? என்கிறார். இசை என்பார் சத்தியமூர்த்தி என்பதை வாசகர்கள் அறிவார்கள்தானே?

மூன்று கவிதைகளும் இங்கே.மூன்றுக்கும் ஏதாவது தொடர்புஇருக்கிறதா?

கவிதை 1                                            மர்மம் 


டைகளில்லாத உன்னைப் பார்த்திருக்கிறேன்
அட, என்ன அழகு?

ஆடைகள் புனைந்த உன்னைப் பார்த்திருக்கிறேன்
அட, என்ன அழகு?

வெள்ளி மூக்குவளையம் அணிந்தவளே,

ஆடைகளில்லாமல் கண்டதெல்லாம்
ஆடைஉடுத்ததும் மர்மமாவது எவ்விதம்?

அட,
தழையாடை உடுத்தவனிலிருந்து
இழையாடை உடுத்தவன்வரை
எத்தனை காலமாகத் தேடுகிறோம் இந்த ரகசியத்தை?

- சந்தால் பழங்குடிப் பாடல்

                                                                சந்தால் பழங்குடிப் பெண்





கவிதை  2                                   ஜகன்மோகினி

றைக்கப்படாத உன் இடங்களை எல்லாம்
பகல் ஒளியின் உண்மைபோலத்
பார்த்த  எனக்கு
ஆடையின் இருளில் அதே  இடங்கள்
அறியாமையின் திகைப்பாய்த்
திணறவைப்பதேன்?

தெளிந்த ரகசியம் எந்தப் பொழுதில்
தெரியாப் புதிராகிறது ஜகன் மோகினி

( ஜகன்மோகினி: 15 ஆவது மேளகர்த்தா ராகமான மாயாமாளவகௌளையின் ஜன்ய ராகம்) .



- சுகுமாரன் 

@

கவிதை 3                யவனராணி


ளைந்த பின்
தேடி
ஏமாறுகிறேன்.
உடுத்தி
நீ
நடக்கையில்
பிறப்பித்து
உலவவிட்ட
இரகசியங்கள்

ஒவ்வொன்றையும்.

- க.மோகனரங்கன் ( மீகாமம் )