எம்.டி.யின்
காலம்
நவீன மலையாள இலக்கியத்தில் எம்.டி.
வாசுதேவன் நாயருக்குக் கிடைத்த முதன்மையும் புகழும் வாசக அங்கீகாரமும் கேரளத்தில் வேறு
எந்த எழுத்தாளருக்கும் வாய்க்கவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். 1950 களில் தொடங்கி
2000 வரையிலான நீண்ட அவருடைய எழுத்து வாழ்க்கையில் அனேகமாகப் பின்னடைவு ஏற்பட்டதில்லை.
அவருடைய கடைசிச் சிறுகதைத் தொகுப்பு 1998 இலும் கடைசி நாவல் 2002 இலும் வெளிவந்தன.
அதன் பின்னர் அவருடைய படைப்பாக எதுவும் வெளியாகவில்லை. ஆனால் எம்டியின் அதுவரையான படைப்புகளில் மனம் தோய்ந்திருந்த வாசகர்கள்
அவரிடமிருந்து எதோ ஒன்றுக்காகக் காத்திருந்தார்கள். அப்படி அவர்கள் காத்திருக்கும்
மனநிலையை ஒரு படைப்பாளியாக எம்டி உருவாக்கி வைத்திருந்தார். அவருடைய ஏறத்தாழக் கடைசி
எழுத்தாக நான் வாசிக்கக் கிடைத்தது ஒரு சிறு பத்தி. மலையாள மொழி வாரத்துக்காக அவர்
எழுதிய மொழிப் பிரகடனம். மலையாள மொழியின் சிறப்புகளை வரிசைப்படுத்தி சொல்லி விட்டு
இறுதியாக 'என் மொழியே நான் நானே என் மொழி' என்று அந்தப் பிரகடனத்தை முடித்திருந்தார்.
அது பொதுவான பிரகடனமல்ல; தன்னைப் பற்றிய எம்டியின் பிரகடனமும் கூட என்றே தோன்றியது.
எழுத்தாளன் காலத்தின் கையில் ஒப்படைத்துச் செல்வது தன்னுடைய மொழியைத்தான்.
எம்டியை ஒரு காலகட்டத்தின் பிரதிநிதி என்றும் காலகட்டத்தை உருவாக்கிய முன்னோடியென்றும்
கருதுகிறேன். அவர் எழுத வந்தது முற்போக்கு இலக்கியத்தின் செல்வாக்கு மங்கத் தொடங்கிய
காலத்தில். வைக்கம் முகம்மது பஷீர், தகழி சிவசங்கரப் பிள்ளை, பொன்குன்னம் வர்க்கி,
பி.கேசவதேவ், செறுகாடு போன்ற எழுத்தாளர்கள் மனிதர்களின் சமூக வாழ்க்கையை எதார்த்தமாகச்
சித்தரிக்கும் படைப்புகளை உருவாக்கியிருந்தார்கள். இதற்கு இணையாகவே எஸ்.கே.பொற்றேகாடு
உரூப் ஆகியவர்கள் கற்பனைவாதப் புனைவுப் போக்கைக் கடைப்பிடித்தார்கள். மனித அகங்களை
முன்னிருத்திய படைப்புகளை எழுதினார்கள். இந்த இரண்டு வகையான எழுத்து முறைகள் சாதனைகளை
முன்வைத்தது போலவே போதாமையையும் கொண்டிருந்தன.
மனித மனத்தின் உட்கிடைக்கைகளை அவை இயல்பாக வெளிப்படுத்தவில்லை என்பதே அந்தப் போதாமை.
அந்தப் போதாமையை இல்லாமற் செய்த எழுத்துகள்
எம்டியுடையவை. மனிதர்களின் அகச் சிக்கல்களை மிகையுணர்ச்சி
சாராமல் இயல்பாக வெளிப்படுத்தும் படைப்புகளை எம்டி வழங்கினார். தனி நபர்களே அவற்றில்
முதன்மை பெற்றார்கள். அவருடைய சம காலத்தவர்களான மாதவிக் குட்டியும் டி.பத்மனாபனும்
இதே போக்கிலான படைப்புகளை எழுதினார்கள். ஆனால் இந்தப் போக்கின் வலுவான பிரதிநிதியாக
எம்டியைத்தான் குறிப்பிட விரும்புகிறேன். அழுத்தமானது அதே சமயம் மென்மையானது, மிதமானது
அதேசமயம் அமைதியானது உணர்ச்சிகரமானது அதேசமயம் அசட்டுருக்கம் இல்லாதது என்று எம்டியின்
எழுத்தைச் சொல்வேன்.
சமூக எதார்த்தத்தை மையமாகக் கொண்ட படைப்புகளும் அக உணர்வுகளைச் சித்தரித்த செவ்வியல்
நோக்கிலான ஆக்கங்களும் தேக்கம் காணத் தொடங்கிய கால அளவில் மலையாள இலக்கியத்தில் நவீனத்துவம்
அறிமுகமானது. புழக்கத்திலிருந்த எழுத்து முறைகளை நவீனத்துவம் கேள்விக்குட்படுத்தியது.
படைப்பின் உள்ளும் புறமும் மாறின. எதார்த்தமான படைப்பாக்கத்தில் ஈடுபட்டிருந்த முக்கியமான
எழுத்தாளர்கள்
நவீனத்துவத்துக்கு மாறினார்கள். அதுவரை தன்னுடையதான எதார்த்தவாதப் போக்கில் கதைகள்
எழுதி வந்த ஓவி விஜயன் நவீனத்துவத்துக்கு மாறியதை உதாரணமாகச் சொல்லலாம். நவீனத்துவத்தின்
அலை வீச்சு அந்த அளவுக்கு வீரியமானதாகவும் பரவலானதாகவும் இருந்தது.
ஆனால் நவீனத்துவப் போக்கைப்
பற்றி அறிந்திருந்த எம்டி இந்தப் அலை வீச்சுக்கு ஈடுகொடுத்தார். தானாகக் கண்டடைந்த
எழுத்துமுறையிலேயே காலூன்றி நின்றார். அதையே தொடர்ந்தார். ஆனால் ஓர் இலக்கியவாதியாக
நவீனத்துவ எழுத்தை ஊக்குவித்தார். இன்று நவீனத்துவ எழுத்தாளர்களாகக் கொண்டாடப்படும்
சக்கரியா, என்.எஸ்.மாதவன், சேது, ஓவி விஜயன் ஆகியோரது படைப்புகள் அவர் ஆசிரியராக இருந்த
மாத்ருபூமியில் வெளியாயின. அமெரிக்க நவீனத்துவ எழுத்தின் முன்னவர்களில் ஒருவராகக் கருதப்படும்
ஹெமிங்வேயைப் பற்றி விரிவான அறிமுக நூலையும் (ஹெமிங்வே -ஒரு முகவுரை ) அவர்தான் எழுதினார்.
இவையெல்லாம் ஒரு காலகட்டத்தை உருவாக்கிய பிரதிநிதியாக அவரை அடையாளம் காட்டுபவை.
குறிப்பிட்ட சூழலில் மனிதர்கள்
எப்படி நடந்து கொள்கிறாள் என்பதற்கு இணையாகவே எப்படி நினைக்கிறார்கள், எப்படிச் சிந்திக்கிறார்கள்
என்பதை எம்டி தன்னுடைய படைப்புகளில் ஆராய்ந்தார். இந்த ஆராய்ச்சியே அவரது படைப்புகளில்
இடம் பெறும் பாத்திரங்களின் செயல்கள் அந்தப் பாத்திரங்களின் கதையாக மட்டுமல்ல அவர்கள்
வாழும் சமூகத்தின் கதையாகவும் குடும்பங்களின் கதையாகவும் உறவுகளின் கதையாகவும் மாற
உதவுகின்றன.
மலையாளிகளின் சமூக வாழ்க்கையின் ஒரு குறிப்பிடத் தகுந்த காலப் பகுதியை எம்டி தன்னுடைய
படைப்புகளில் சித்தரித்தார். மருமக்கள் தாய முறையிலிருந்து மக்கள் தாய முறைக்குக் கேரளத்தின்
சமூகம் மாறிக்கொண்டிருந்த காலம். அதன் விளைவாக எழுந்த சிக்கல்களையே எம்டியின் கணிசமான
படைப்புகளும் பேசுகின்றன. தாய்வழிச் சமூக மரபில் தாய் மாமனே ( தாய் மாமனே ) ஒரு குடும்பத்தின்
காரணவர் (தலைவர்). அவரது அதிகாரமே ஓங்கி நின்ற நாட்கள் அவை. ஆனால் கல்வியும்
உலகியல் அறிவும் கைவரப் பெற்ற புதிய தலைமுறை அந்த அதிகாரத்தின்கீழ் மூச்சுத் திணறியது.
அதிலிருந்து விடுபடத் தவித்தது. அந்த அதிகாரத்தை எதிர்த்தது. இந்த சிக்கலான காலத்தின்
மனிதர்கள் படும் அவலங்களையே எம்டி தன் எழுத்தில் வெளிப்படுத்தினார். குறிப்பாக இளம்
தலைமுறையின் மௌனக் கோபத்தை அவரது படைப்புகள், பெரும்பான்மையும் அவரது முக்கியமான நாவல்கள்,
வெளிப்படுத்தின. தறவாட்டு அமைப்பில் தாங்கள் இழந்துபோன சுயத்தை மீட்டெடுக்கும் சீற்றம்
அது. கேரள சமூகத்திலும் இந்தக் கோபம் நிலவியது. அந்த எதார்த்தத்தை எம்டி எழுத்தில்
காட்டினார் என்பதும் எம்டி எழுத்தில் காட்டிய எதார்த்தம் நடைமுறை வாழ்க்கையில் பிரதிபலித்தது
என்பதும் உண்மை. இலக்கியமும் வாழ்க்கையும் இணையும் அந்தப் புள்ளியை எம்டி சுட்டிக்
காட்டினார். அறுபதுகளின் இறுதியிலும் எழுபதுகளிலும் மலையாளத்தில் எழுதப்பட்ட பல நாவல்களும்
கோபக்காரர்களை முதன்மைப் பாத்திரங்களாகக் கொண்டிருந்தன என்பது நினைவுக்கு வருகிறது.
எம்டியின் முதல் நாவல் 'நாலுகெட்டு'. 1958 இல் வெளிவந்தது. தொடராக இல்லாமல் நாவலாகவே
வெளிவந்த படைப்பு இது. தலைப்பு எடுத்துக் காட்டுவதுபோல நாலுகெட்டுத் தறவாட்டின் அங்கமான
அப்புண்ணியின் அனுபவங்கள்தாம் கதையாடல். வாழ்க்கையால், அதை நிர்ணயிக்கும் மனிதர்களால்
பட்ட அவமானங்களுக்குப் பழி தீர்க்கத் துடிப்பவன். அந்தச் சிக்கல்களையே நாவல் பேசுகிறது.
குற்றவுணர்வும் துணிவும் வன்மமும் கழிவிரக்கமும் சாகசமும் இணைந்த ஆளுமையாக அவனைச் சித்தரிக்கிறார் எம்டி. இந்த குணச்சித்திரம்
அவரது மற்ற நாவல்களான காலம், அசுரவித்து ஆகியவற்றின் ஆக்கத்திலும் காண முடிகிறது.
'காலம்' (1969) நாவலின் மையப்பாத்திரமான
சேது தறவாட்டிலிருந்து வெளியேறத் தவிக்கிறான். படிப்பை முடித்து தொழில் செய்து முதலாளியாகிறான்.
தன்னுடைய சுய நலத்துக்காகத் தன்னை நேசிக்கும் பெண்களைச் சரணடையச் செய்கிறான். இறுதியில்
இதுவரை தான் அடைந்த எதுவும் நிரந்தரமில்லை என்று உணர்கிறான்.
'அசுரவித்து' ( 1962 ) நாவலின்
பாத்திரமான கோவிந்த குட்டியுடன் சமூகம் முரண்படுகிறது. இந்து முஸ்லிம் விரோதம் கிராமத்தையே
உலுக்குகிறது. இஸ்லாமைத் தழுவி அப்துல்லாவாக மாறுகிறான்.
கெட்டி தட்டிப் போன அமைப்புக்களுக்கெதிராக மனிதர்கள் மேற்கொள்ளும் போராட்டத்தையே இந்த
நாவல்கள் ஆராய்கின்றன. தங்களது அகப் போராட்டங்களின் இறுதியில் இந்தக் கதை மாந்தர்கள்
அடையும் பக்குவம் அல்லது படிப்பினைகள்தாம் முக்கியமானவை. நாலுகெட்டு நாவலின் பாத்திரமான
அப்புண்ணியின் எண்ணம் தன்னுடைய தந்தையைக் கொன்ற செய்தாலியைப் பழிவாங்குவது. ஆனால் அவன்
பெறும் அனுபவங்கள் இறுதியில் அவனை செய்தாலியின் பாதுகாவலனாக மாற்றுகின்றன. பழி வாங்குவதற்கான
தகுதியை வளர்த்துக் கொண்டால் போதும் பழி வாங்க வேண்டுமென்று அவசியமில்லை என்பதை உணர்த்துகின்றன தன்னுடைய வாழ்க்கையை அவலத்துக்குள்ளாக்கிய
கிராமத்தினரை அப்துல்லா என்ற கோவிந்தன் குட்டி கருணையின் மூலமாக வஞ்சம் தீர்த்துக்
கொள்கிறான். காலராவால் மரித்தவர்களை அடக்கம் செய்ய முன்வந்து அன்பால் பகையை வீழ்த்துகிறான்.
காலம் நாவலின் மையப் பாத்திரமான சேதுவை வீழ்த்துவதும் பழி தீர்த்துக் கொள்வதும் மனிதர்களல்ல;
காலம்தான்.
எம்.டியின் படைப்புகள் மீதான விமர்சனங்களில் ஒன்று அவை ஆண் உலகை மையமாகக் கொண்டவை என்பது.
அதை அவரது படைப்புகளின் மீதான விமர்சனமாக இல்லாமல் அந்தக் காலத்தின் மீதான குற்றச்சாட்டாகவே
காண விரும்புகிறேன். பெண்களுக்கு முதன்மையில்லாத கூட்டுக் குடும்ப அமைப்பில்,
ஆணுக்கு மட்டுமே அதிகாரமுள்ள அமைப்பில் இது பொருத்தமானது. தவிர்க்கவியலாதது என்றே படுகிறது. ஆணின் பிடிக்குள்
நெரிபடும் பெண்களையும் இதே படைப்புகளில் சித்தரித்திருக்கிறார் என்றும் பதிலாகச் சொல்ல
முடியும். அதை நிவர்த்தி செய்யும் விதத்தில் எம்டி எழுதிய நாவல் மஞ்ஞு (1964). எம்.டியின்
நாவல்களில் பெண்ணை மையமாகக் கொண்ட ஒரே நாவல் இதுதான். விமலா என்ற தனியள் காத்திருக்கிறாள்.
தன்னைக் காதலித்து விட்டுப் போன உத்தரவாதமில்லாத காதலன் திரும்ப வருவான் என்று காத்திருக்கிறாள்.
அவளுடன் சேர்ந்து ஒரு ஆண் காத்திருக்கிறார். முகமறியாத அன்னிய தேசத்துத் தகப்பனுக்காக
ஒரு சிறுவன் காத்திருக்கிறான். ஆணின் காத்திருப்பை விடப் பெண்ணின் காத்திருப்பு முடிவற்றது
என்கிறது நாவல்.
எம்டி படைப்புகள் மீதான இன்னொரு விமர்சனம் அவை குடும்பக் கதைகள் என்பது. குடும்பம்
என்ற அமைப்பை சமூகம் என்ற பெரிய கட்டுமானத்தின் நுண்வடிவமாகக் காண்கிறார் என்று இதற்கு
பதிலளிக்க முடியும். குடும்பம் என்ற சின்ன வடிவத்தைச் சமூகம் என்ற பெரிய வடிவமாகச்
சித்தரித்தது போலவே பிரம்மாண்டமானது என்று கற்பிக்கப்பட்ட இதிகாச வடிவத்தையும் எம்டி
கையளவு உலகமாக மிக நேர்த்தியாக 'இரண்டாம் ஊழ' (1984) த்தில் காட்டுகிறார். எம்டி படைப்புகளின்
ஆதார இயல்புகள் ஒன்று திரண்ட நாவலாக இதைக் குறிப்பிடலாம். இதன் மையப்பாத்திரம் பீமன்.
சமூக நாவல்களில் நாம் பார்த்த ஆண் பாத்திரங்களின் இதிகாச வடிவம். அவனும் கைவிடப்பட்டவன்.
சகோதரர்கள் ஐவரில் பலசாலி. அதிகாரத்தில் தருமனுக்குப் பிறகுதான் அவனுக்குப் பங்கு.
காதலில் அர்ஜுனனுக்குப் பின்னர்தான் அவனுக்கு இன்பம். எல்லாச் சூழ்நிலையிலும் அவனுக்கு
விதிக்கப்பட்டது இரண்டாவது இடம். பீமனின் இந்தக் குமுறலிலிருந்தே மகா பாரதக் கதை விரிகிறது.
பீமனுக்குச் சமூகம் தன்னைப் புறக்கணிக்கிறது என்ற கோபம் இருக்கிறது. இரண்டாம் இடத்தில்
இருப்பதன் காரணமாக எழும் கொந்தளிப்பே கதையின் மையமாகிறது. நாவல் வெளியானபோது மாபெரும்
இதிகாசத்தை எம்டி தறவாட்டுக் கதையாகச் சுருக்கி விட்டார் என்று சொல்லப்பட்டது. இப்போது
வாசிக்கும்போது அந்தக் குற்றச் சாட்டு பொருத்தமற்றது என்று தோன்றுகிறது. உண்மையில்
மகா பாரதம் சித்தரிப்பது குடும்பப் பகையைத்தான். உறவினர்களே ஒருவருக்கொருவர் எதிரியாகி
மோதிக் கொள்வதைத்தான். தெய்வீகக் கதை என்று பாராட்டப்படும் ஒன்றை மானுடக் கதையாக எம்டி
மாற்றியிருக்கிறார். இதில் அமானுஷ்யமான சம்பவங்களோ, அசாதாரண
மனிதர்களோ இல்லாமல் சித்தரித்திருப்பதை அவரது படைப்பாற்றலின் வெற்றியாகவே பார்க்கிறேன்.
அவரது படைப்பியல் சார்பு அவதாரப் பெருமையையோ அல்லது இதிகாச மகிமையையோ சார்ந்தது அல்ல.
மானுட துக்கத்தின் ஊற்றுக் கண்ணை அடையாளம் காண்பது.
எம்டி யின் அக்கறை மனிதர்களை
மனிதர்களாக இல்லாமல் செய்யும் அவலத்தை எடுத்துக் காட்டுவது என்று வரையறுக்கலாம். சமூகப்
படைப்புகளில் மட்டுமல்ல தொன்மக் கதைகளிலும் இந்த அக்கறையைக் காண முடியும். இரண்டாம்
இடத்திலிருந்தே உதாரணத்தைக் காட்டவும் முடியும். அர்ஜுனனின் மகன் அபிமன்யு போர்க்களத்தில்
பலியாகிறான். அந்த மரணத்துக்கு பாண்டவ குலம் முழுவதும் கண்ணீர் சிந்துகிறது. அதே களத்தில்
பீமனின் புதல்வன் கடோத்கஜனும் கொல்லப்படுகிறான். ஆனால் அந்த மரணம்
சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.கிருஷ்ணனும் ' இதில் துக்கப்பட ஒன்றுமில்லை.
கடோத்கஜன் கொல்லப்பட்டதால் அர்ஜூனன் உயிர் தப்பியது. அதற்காக மகிழ்ச்சியல்லவா
அடையவேண்டும்' என்று உபதேசம் செய்கிறான். இந்த முரண்நிலை வரலாறு முழுவதும் தொடர்வதையே
எம்டி குறிப்பாகக் காட்டுகிறார். இந்தக் கண்ணோட்டமே எம்டியை செவ்வியல் கலைஞராகவும் அதேசமயம் நவீன மனத்தினராகவும்
காட்டுகிறது.
மகத்தான நாவல்களை எழுதியவர். எனினும் மேலும் மகத்தானவராக நான் உணர்வது அவரது சிறுகதைகளில்தான். மறுமலர்ச்சிக் காலக் கதைகளுக்கும்
நவீனத்துவக் கதைகளுக்கும் பின் நவீனத்துவக் கதைகளுக்கும் ஈடு நிற்கக் கூடிய கதைகள்
அவருடையவை. இயல்பிலேயே செவ்வியல்தன்மை கொண்டவை. இந்த மதிப்பீட்டில் அவரை தி.ஜானகிராமனுடன்
ஒப்பிட விரும்புகிறேன். வடிவிலும் பொருளிலும் செவ்வியல்தன்மை குன்றாத கதைகளை எழுதியவர்கள்
இவர்கள். மாத்ருபூமி வார இதழ் நடத்திய சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற வளர்த்து மிருகங்கள்
கதை எம்டியை மலையாளத்தின் முக்கியமான சிறுகதையாளர்களில்
ஒருவராக அடையாளம் காட்டியது. முன்பே சிறுகதைகளை எழுதியிருந்தாலும் வளர்ப்பு மிருகங்கள்
கதையே அவருக்குப் பெயர் ஈட்டித்தந்தது. இன்று வாசித்தாலும் புதுமை குன்றாத கதையாக மிளிர்கிறது.
புதுமை, உத்தி என்று மெனக்கெடாமல் தனது மரபிலான கதைகளையே எழுதினார். ஆனால் அவை காலத்தைக்
கடந்தவையாக நிலைபெற்றிருக்கின்றன. தன்னுடைய கிராமமான கூடல்லூரையும் அங்கே ஓடுகிற நிளா
நதியையும் அங்கு வாழ்கிற எளிய மனிதர்களையுமே எம்டியின் கதைகள் சித்தரித்தன. இன்று கூடல்லூர்
ஓர் இலக்கியத் தலம். எம்டியின் கதைகள் அந்தத் தலத்தின் புராணங்கள்.
இரண்டு முக்கியமான சந்தர்ப்பங்களில் எம்டி பேசியவற்றை மேற்கோள் காட்டி இந்தப் பேச்சை நிறைவு செய்ய விரும்புகிறேன். முதலாவது, சாலியார் நதி மாசுபடுத்தப்படுவதை எதிர்த்து கோழிக்கோட்டில் நடந்த மக்கள் பேரணியைத் தொடங்கி வைத்து எம்டி ஆற்றிய உரை.
தாஸ்தயேவ்ஸ்கியின் ஒரு கதை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது.
கதையின் பெயர் முதலை. யாரும் பார்த்திராத ஒரு நாட்டுப் புறத்துக்கு ஒரு முதலையைக் கண்காட்சியாகக்
கொண்டு வருகிறார்கள். ஒரு பெரிய முதலை. முதலையைப் பார்க்க வந்த ஒரு ஆள் தவறுதலாக முதலையின்
வாய்க்குள் விழுந்து விடுகிறான். அவனைக் காப்பாற்றச் சிலர் முயல்கிறார்கள். வாதங்களும்
பிரதிவாதங்களும் நடக்கின்றன. கடைசியில் முதலையின் வாயில் அந்த ஆள் விழுந்ததுதான் தவறு
என்று சொல்லப்படுகிறது. இப்போது முதலையைக் காப்பாற்றுவதுதான் முக்கியம் என்றாகிறது.
முதலை காப்பாற்றப்பட்டு விடுகிறது. இந்தக் கதையில் வரும் முதலையின் வாயில் சிக்கிய
மனிதனின் நிலைதான் சாலியார் மக்களின் நிலைமை. முதலையைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம்
நமக்கில்லை. நான் காப்பாற்ற வேண்டியது மனிதனைத்தான். பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கான
இந்த அறப் போராட்டத்தில் என்னுடைய சொற்களாலும் செயலாலும் பலவீனமான இந்த உடலாலும் செய்யக்
கூடிய எல்லா உதவிகளையும் அளிக்கிறேன்.
இரண்டாவது மேற்கோள் ஞானபீடப் பரிசு பெற்றபோது பேசியது.
மானுட இயல்பின் கால மாற்றங்கள் எப்போதும் என்னை ஈர்த்து வந்திருக்கின்றன. மனித நிலைமையின்
சிக்கல்கள் என்னை ஈர்க்கின்றன. மிகக் கொடியவன் என்று சொல்லப்பட்ட ஒருவன் ஒருமுறையாவஹ்டு
தன்னுடைய மென்மையான மனதைத் திறந்து காட்டுகிறான். நன்மைகளின் நிறைகுடம் என்று புகழப்பட்டவன்
எதிர்பாராத விதத்தில் தன்னுடைய கொடிய கோரைப் பற்களைக் காட்டுகிறான். மனிதன் என்ற நித்திய
விந்தையைப் பற்றி நான் சிந்தித்து நிம்மதியிழக்கிறோம்.
இந்த இரண்டு மேற்கோள்களில் ஒலிக்கும்
மானுடத் தவிப்புதான் எம்டி என்ற எழுத்தாளனிலூடே காலம் பகிரங்கப்படுத்திய செய்தி என்று
நம்புகிறேன்.